லூப்பர் ( ஆங்கிலம் )

This entry is part 27 of 34 in the series 28அக்டோபர் 2012

ஸ்பீல்பெர்க்கின்  பேக் டு பியூச்சரையும் ஆர்னால்டின் டெர்மினேட்டரையும் கலந்து கட்டி அடித்த சயின்ஸ் பிக்ஷன் கதை.

கிபி 2074ல் கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அரசாங்கம் தடை செய்த அதைக் கொண்டு, ரெயின் மேக்கர், வயதானவர்களை, 2044க்கு அனுப்பி,  அழிக்கிறான். அதைச் செய்து முடிக்கும் கொலைகாரப் படைக்கு லூப்பர்கள் என்று பெயர். அவர்கள் கிபி 2044ல் வாழும் இளைஞர்கள். கொன்றால், பரிசு, செத்தவன் முதுகில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளிக் கட்டிகள். ஒரு லூப்பர் 2074ல் இருந்து வரும், வயதான தன்னையே கொன்றால், லூப் நிறைவு பெற்று, தங்கக் கட்டிகளுடன் அவன் விடுவிக்கப்படுவான்.

இளைஞன் ஜோ சைமன்ஸ் ( ஜோசப் கார்டன் லெவிட் ) காலயந்திரத்தில் திருப்பி அனுப்பப்படும், அவனேயான கிழ ஜோ( ப்ரூஸ் வில்லிஸ் ) வைக் கொல்ல வேண்டும். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. ஆனால், இளைஞன் ஜோ, 30 வருடம் கழித்து கிழ ஜோவாக மாறும்போது, ரெயின் மேக்கரால் அவன் மனைவி ( ஸ¥ க்யிங் ) கொல்லப்படுகிறாள். மரணம் விதிக்கப்பட்டு, 2044க்கு அனுப்பப்படும் ஜோ, தப்பி, பத்து வயது சிறுவனாக, சாரா ( எமிலி ப்ளண்ட் ) விடம் வளரும், பின்னாளில் ரெயின் மேக்கராக மாறப்போகும், சிட் (பியர்ஸ் கேக்னான்)டைக் கொன்று, மனைவியின் மரணத்திற்கு பழி தீர்க்க, திட்டம் போடுகிறான். சிட் பார்வையாலும், வெறி பிடித்த அலறலாலும், பொருட்களை அதி வேகத்தில் பறக்கச் செய்யும் திறமை படைத்தவன். சாரா அவனை மாற்றி, நல்லவனாக வளர்க்க பாடுபடுகிறாள். அது முடியும் என்று நம்பும் இளைஞன் ஜோ, தன்னையே அழித்துக் கொண்டு, கிழ ஜோவையும் இல்லாமல் ஆக்கி விடுகிறான்.

கொஞ்சம் தலை சுற்றல் கதைதான். இறப்பு தெரிந்து விட்டால், இருப்பு நரகம் என்கிற ஒரு வரிதான் கதை. அதை ஹாலிவுட் ஜாலங்களோடு சொல்ல நினைத்து, குரங்காய் முடிந்து விட்டது. லெவிட்டும் வில்லிஸ¤ம் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். எமிலி ப்ளண்ட், மிருகத்தைப் பெற்ற தாயின் பாத்திரத்தில், வெளுத்து வாங்குகிறார். விதியை திருப்பி எழுத நினைப்பது, பெரும் விபரீதத்தை உண்டாக்கும் என்று, ஒரு அமெரிக்க சோசியர் சொன்ன, அருள் வாக்கின் பிரம்மாண்ட சொரூபம் படம்.

கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல ஒளிப்பதிவு ( ஸ்டீவ் யெடின் ), பயமுறுத்தும் இசை ( நாதன் ஜான்சன் ), அசத்தலான க்ராபிக்ஸ் என எல்லாம் இருந்தும், தெளிவான திரைக்கதை அமைக்காமல் குழப்பி விட்டார் இயக்குனர் ரியான் ஜான்சன். நம்ம ஊர் ஷங்கரைக் கேட்டிருந்தால் கொஞ்சம் தெளிவு படுத்தியிருப்பார்.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த, ரேவதி புருஷன் சுரேஷ் மேனன் இயக்கி நடித்த, ‘புதிய முகம்’ பற்றி ஜான்சனுக்கு தெரியாது போல.. அதிலும் ஒரே ஆள், இரண்டு நடிகர்கள். கால யந்திரம் எல்லாம் கிடையாது. ஒன்லி பிளாஸ்டிக் சர்ஜரி.

0

அங்காடி திரை : ஹாலிவுட் பீலா.

0

ரசிகன் குரல் : பாதி படத்தில எஸ்கேப் ஆனவங்க பாக்கியவானுங்க..

0

Series Navigationஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.பேரரசுவின் திருத்தணி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *