கவிதைகள்

This entry is part 18 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியே…

இதோ மற்றொரு விடியல்

அலுப்பில்லாமல் காலையில்

எழ முடிகிறதா

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்

பெருமாளுக்குத் தான் தேவை

சுப்ரபாதம்

அமிர்தம் உண்டவர்கள்

ஏன் கவலைப்பட வேண்டும்

அணை வற்றியதற்காக

சபிக்கப்பட்ட மன்மதன் தான்

சகலத்தையும் ஆள்கிறான்

காவி அணிந்து விட்டாலே

மோட்சம் கிடைத்துவிடுமா

எவர் போடும் கையெழுத்தோ

மக்களின் தலையெழுத்தாவது தான்

ஜனநாயகமா

போராட்டங்களுக்கு பதிலடி

தோட்டாக்களாய் இருந்தால்

அஹிம்சையை கைவிட்டு

அவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்தால்

கல்லடிபட்ட கண்ணாடியாய்

இந்தியா விரிசலடைந்துவிடும் நாள்

வெகுதொலைவில் இல்லை.

பரதேசி

 

சிறிதும் லஜ்ஜை இன்றி

வார்த்தைகளாலே

ஆடை அவிழ்ப்பான்

கவிதையை விற்று

வயிற்றை நிரப்பும் கவிஞன்

தனது கவிதைகளை

அச்சில் பார்க்காமலேயே

இறந்து போனார்கள்

எண்ணற்ற மகாகவிகள்

வார்த்தை ஜாலங்களாலே

உள்ளத்தை சுண்டி இழுப்பவருக்கு

வலியச் சென்று

மகுடம் சூட்டுகிறது

பாமர பொதுஜனம்

அடைமொழிக்குள் பதுங்கிக் கொண்டால்

காகிதத்தில் என்ன கிறுக்கினாலும்

கவியாகப்படும்

தாலியை விற்று

போட்ட புத்தகம் தான்

கையில் வாங்கிய எவனாவது

காசு கொடுத்தீர்களா

கற்பனையை சிறை வைக்காதவரை

கவிஞர்களின் வார்த்தைகளுக்கு

பஞ்சமில்லை

பரதேசிகளுக்கு ஏன் திருவோடு.

பட்டதாரி

 

ஆயிரம் முறை

கங்கையில் முங்கி எழுந்தாலும்

குழந்தையின் புன்சிரிப்பு போலாகுமா

எத்தனை பொம்மைகளை

வாங்கிக் குவித்தாலும்

குழந்தை மழையில்

நனைவதை விட்டுவிடுமா

சேலையிலிருந்து வரும்

அம்மாவின் வாசத்துக்காகத்தானே

தொட்டிலில்

உறங்குகின்றன குழந்தைகள்

முயன்று முயன்று

நடக்கப் பழகியவுடன்

கேட்பாரற்று

எங்கோ ஓர் மூலையில் கிடக்கும்

நடைவண்டி

தாத்தாவின் முதுகில்

அம்பாரி ஏறியவை

மிதிவண்டி வந்தவுடன்

அந்த விளையாட்டையே மறந்திடும்

தும்பிகளை அருவருப்பின்றி

கையில் பிடிப்பதும்

குட்டையில் நீந்தும்

மீன்களை பிடித்து

கிணற்றில் விடுவதும்

பட்டம் விடுபவர்கள் எல்லாம்

பட்டம் வாங்குவதில்லை என்று

கணித்துச் சொல்பவர்கள்

எவருமில்லை அப்போது.

mathi2134@gmail.com

Series Navigationதானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
author

ப மதியழகன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஏ.தேவராஜன் says:

    கவிதையில் கனம் தெரிகிறது. கவித்துவம் மேலும் மிளிரட்டும்! தொடருங்கள் நண்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *