ஜோதிர்லதா கிரிஜா
தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போதெல்லாம் நிறையவே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அனைத்துக் கலைகளிலும், மனிதர்களையும் _ ஏன்? விலங்குகளையும் கூடத்தான் – கட்டிப்போட்டு மெய்ம் மறக்கச்செய்யும் இசைக்கலையே மிகச் சிறந்ததென்று தோன்றுகிறது.
அண்மையில் முடிவுற்ற விஜய் டி.வி. யும் ஏர்டெல் நிறுவனமும் இணைந்து நடத்திய இளநிலை இசைத் திறமையாளர்களுக்கான – Super singer among junior artistes – முதலிடம் உண்மையான இசை நுகர்வாளர்கள் செய்து வைத்திருந்த முடிவைத் தவறாக்கிப் பிறிதொரு போட்டியாளருக்குத் தரப்பட்டது. காரணம், அரங்கில் கூடியிருந்த மக்கள் தங்கள் கைப்பேசிகளிலிருந்து குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பிய வாக்குகள்தான். ஒருவரே எத்தனை குறுஞ்செய்திகள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது. அரசியல் சார்ந்த பொதுத் தேர்தலில் ஒருவர் எத்தனை வாக்குகளை வேண்டுமாயினும் பதிக்கலாம் என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? இந்த விதி நேர்மைக்குப் புறம்பானதல்லவா? வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் நோக்குடன் ஏர்டெல் நிறுவனம் செய்த தவறான செயல் அல்லவா இது?
மேலும், இசை வல்லுநர்களாகிய புகழ்பெற்ற பாடகர்கள் அனைத்துச் சிறுவர்-சிறுமியரின் இசையைக் கேட்டுத் தீர்ப்பு அளித்த பிறகும், பொது மக்கள் முன்பு அவர்களைப் பாட வைத்து SMS அனுப்பித் தீர்ப்பு அளிக்கச் செய்தது அபத்தமாகப் படுகிறது. ஏனெனில், நம் பொதுமக்கள் இசையை ரசிக்கத் தெரிந்தவரகளே ஒழிய, அதன் நுணுக்கங்களையோ, சரியான இசையின் விதிமுறைகளையோ அறியாதவர்கள். நல்ல குரல் வளம் ஒருவருக்கு இருந்தாலே போதும் அவர்களுக்கு. இசையின் தரம் பற்றி யெல்லாம் கவலைப்படடாமல் ரசிக்கக் கூடியவர்கள். கைகளைத் தட்டியும் கால்களைக் கொட்டியும், இருப்பை வெட்டியும் குரங்கு ஆட்டம் ஆட வைக்கும் பாடல்களைப் பாடுபவரைச் சிறந்த பாடகன் என்று தேர்ந்தெடுத்து விடுபவர்கள். மேலும் இத்தகைய பாடல்களைப் பாடத் தனித் திறமை எதுவும் தேவையில்லை. இவை, எவருமே எளிதாய்ப் பாடக்கூடிய மிகச் சாதாரணமான டப்பாங்க்குத்துப் பாடல்கள். தங்களால் பாட முடிகிற பாடல்கள் எனும் அதிகப்படியான விஷயத்தாலும் உயர்ந்த ரசனை இல்லாத இந்த மக்கள். அவற்றுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கக் கூடியவர்கள் கடினமான பாடல்கள் – அவற்றுக்குத் தாளக் கட்டு இருந்தாலும் – இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான – திறமையே அற்றவர்களும் பாடிவிட முடிகிற – டப்பாங்குத்துத் திரைப்படப் பாடல்கள் அதிகக் கைதட்டல்களை அள்ளி விடுகின்றன.
மகாகவி பாரதியாரின் சில பாடல்கள் – அவருடைய கும்மிப் பாட்டுகள் போன்றவை – மிக நல்ல தாளக்கட்டு உடையவை. ஆனால், டமால் டுமீல் பக்க இசைக் கருவிகள் இல்லாமல் அவற்றைப் பாடினால், அவற்றைப் புறந்தள்ளி, அமர்க்களமான பக்க வாத்தியங்களுடன் பாடப்படும் மட்டமான டப்பாங்குத்துப் பாடல்களுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து விடுவார்கள். விஷய ஞானமே இல்லாத, மட்டமான ரசனைபடைத்த திரைப்படப் பாடல் ரசிகர்களை வாக்களிக்கச் செய்தால், கடினமான, உயர்ந்த இசைப்பாடலை நிராகரித்து, காதைச் செவிடாக்கும் பக்க வாத்தியங்களுடன் பாடப்படும் சர்வ சாதாரணமான குத்துப்பாட்டுக்கே அதிக வாக்குகள் விழும்!
அடுத்ததாக, ஏற்கெனவே சொன்னபடி ஏர்டெல் நிறுவனம் தங்கள் வரும்படியைக் கருத்தில் கொண்டு ஒருவரே எத்தனை வாக்குகள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என்று விதித்தது நாணயமற்ற செயலாகும். இசையில் தேர்ந்த கலைஞர்கள் தீர்ப்பு வழங்கியதன் பிறகு, உயர்ந்த ரசனையற்ற டப்பாங்குத்துப் பாட்டு ரசிகப் பெருமக்களை மேலும் ஒரு நடுவராக்கி வாக்களிக்க வைத்து, அவர்கள் அளிக்கும் மதிப்பெண்களையும் இசை வல்லுநர்கள் ஏற்கெனவே அளித்த மதிப்பெண்களோடு கூட்டி, முதல் இடக் கலைஞரை முடிவு செய்வது என்பது அந்த இசை வல்லுநர்களை அவமதிப்பதுதானே?
அடுத்து வரும் போட்டிகளிலேனும் அநீதியான் இந்த ஏற்பாட்டை விஜய் டி.வி – ஏர்டெல் குழுமம் கைவிடுமா?
பொதுமக்களின் தீர்ப்பையும் தெரிந்துகொள்ள வேண்டு மென்றால், அதற்கு வேறு வழி இருக்கிறது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களுக்குக் கீழே இருக்கும் – இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகாத – வேறு ஐந்து போட்டியாளர்களை மக்கள் முன் பாட வைத்து அவர்கள் வாயிலாக முதல் இடம் பெறும் கலைஞரைத் தேர்ந்தெடுக்கலாமே? அறுபது லட்சம் பெறுமான வீடு தராவிட்டாலும், வேறு வகையான பரிசுகளை இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகாத இவர்களுக்குத் தரலாம் அல்லவா? இவ்வாறு செய்தால், நடுவர்களாய்ப் பணி புரிந்த இசைக்கலைஞர்களைப் பெருமைப் படுத்துவதாக இருக்குமே.
செய்வரர்காளா?
நல்ல வேளை! பரத நாட்டியப்போட்டி வைத்து, நாட்டியக் கலைஞர்கள் நடுவர்களாக இருந்து தீர்ப்பு வழங்கிய பிறகு, பார்வையாளர்களின் வாக்குகளையும் சேர்த்து, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி பெற்றவரை அறிவிக்கிற அளவுக்கு அபத்தமாக இவர்கள் போட்டியை நடத்தாமல் இருந்தால் சரி!
பிரகதி குருப்பிரசாத் எனும் மிகச்சிறந்த இசைக்கலைஞர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப் பட்டதைத் தாளாமல் எழுதப் படும் கட்டுரை இது.
jothigirija@live.com
- இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்
- மனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்
- இப்படியிருந்தா பரவாயில்ல
- சந்திராஷ்டமம்!
- குடை
- பொய்மை
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.
- ரணம்
- விஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35
- மச்சம்
- அக்னிப்பிரவேசம் – 8
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -1
- திண்ணை இதழில் பிரசுரமான ‘தாய்மை’ எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது
- வீழ்தலின் நிழல்
- மணலும் நுரையும்-2
- நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.
- நினைவுகளின் சுவட்டில் (103)
- அருந்தும் கலை
- மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012
- நம்பிக்கை ஒளி! (5)
- சார் .. தந்தி..
- “சபாஷ், பூக்குட்டி…!”
- உல(தி)ராத காயங்கள்
- நிம்மதி தேடி
- வாழ நினைத்தால்… வீழலாம்…!
- தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !
- ஒரு வைர விழா !
- தடங்கலுக்கு வருந்துகிறோம்