அக்னிப்பிரவேசம் -9

This entry is part 33 of 33 in the series 11 நவம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

“அம்மா! யாரோ வந்திருக்காங்க.” சொன்னான் சிம்மாசலம். படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா. நேரம் இரவு ஒன்பது மணி அடிக்கவிருந்தது.

“இப்பொழுதா? அய்யா இல்லை என்று சொல்லு.”

“சொன்னேன் அம்மா. உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்” என்றான். நிர்மலா சலிப்புடன் எழுந்து வெளியே வந்தாள். சோபாவில் உட்கார்ந்திருந்த அவனை எங்கேயோ பார்த்த நினைவு.

“நான்தான் பரமஹம்சா. என்னைத் தெயரியவில்லையா?” கேட்டான் அவன் சிரித்துக் கொண்டே.

நிர்மலாவுக்கு நினைவு வந்து விட்டது. சந்திரனின் கிளாஸ்மேட். அவனைத் திருமணத்தின் போது பார்த்திருக்கிறாள் அவ்வளவுதான்.

“வணக்கம்.” வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்  சங்கடத்துடன்.

“எங்கே இவன்? எத்தனை முறை போன் பண்ணினாலும் கிடைக்கிறதே இல்லை. இந்த நேரத்தில் எப்படியும் வீட்டுக்கு வந்து விடுவான் என்றும்,  நேராகவே கேட்டு உலுக்கி எடுத்து விடலாம் என்றும் வந்தேன்.”

“இன்னும் வீட்டுக்கு வரவில்லை” என்றால் நிர்மலா சுருக்கமாய்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“வரும் வரைக்கும் உட்கார்ந்து இருக்கிறேன். நாளைக்குத் திரும்பிப் போய்விடப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?” என்றான் சிரித்துக் கொண்டே.

தொலைவில் எங்கேயோ ஆந்தை ஒன்று விகாரமாய் கத்திக் கொண்டே போயிற்று.

“ஆட்சேபணை எதற்கு? உட்காருங்கள். சாப்பிட்டீங்களா? சாப்பிடறீங்களா?”

“சாப்பாடு ஆகிவிட்டது. ஒரு கப் தேநீர் கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.”

“அதற்கென்ன வந்தது?” நிர்மலா சிம்மாச்சலதைக் கூப்பிட்டுச் சொன்னாள்.

“உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாய்க் கேள்விப்பட்டேன். எங்கே?” கேட்டான்  அவன்.

“உள்ளே இருக்கிறாள். அழைத்துக் கொண்டு வருகிறேன்.” போனாள் நிர்மலா.

பிரமஹம்சாவைப் பார்த்ததுமே யாருக்குமே மரியாதை ஏற்பட்டுவிடும். அவன் ரொம்ப ஏழை என்றும், கஷ்டப்பட்டுப் படித்து முன்னுக்கு வந்தவன் என்றும் மாமா சொல்லி கேள்விப் பட்டிருக்கிறாள். அவர்தான் அவன் படிப்பிற்கு உதவியும் செய்து இருக்கிறார். அந்த நன்றி அவனிடம் இன்னும்கூட இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் நிர்மலா.

பமீலாவைத் தூக்கிக் கொண்டு வந்தாள் சாஹிதி.

“வாம்மா பேபி. உன் பெயர் என்ன?” அருகில் இழுத்துக் கொண்டான் அவன்.

“சாஹிதி. என் சிநேகிதியின் பெயர் பமீலா. வணக்கம் அங்கிள்.” பொம்மையின் இரு கைகளையும் ஒன்று சேர்த்துச் சொன்னாள் சாஹிதி.

‘வெரிகுட்! உனக்காகச் சின்ன பரிசு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். இந்த அங்கிள் ரொம்ப ஏழை” என்று ஜெபியிலிருந்து சிறிய பக்கெட் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.

“இது என்ன அங்கிள்?”

“மினி பியானோ! பட்டனை அழுத்தினால் பாட்டு வரும்.” செய்து காட்டினான்.

“நல்லாயிருக்கு அங்கிள். தாங்க்யூ.. பமீலாவின் பிறந்தநாள் வருகிறது. அன்றைக்கு வாசிக்கிறேன் இதை.”

பிரமஹம்சா அந்தச் சிறுமியைப் பரிவோடு பார்த்தான். அவன் கண்கள் எப்போதும் அன்பைப் பொழிந்து கொண்டிருக்கும்.

“ஆகட்டும். நீ போய்ப் படுத்துக்கொள்.” அனுப்பி வைத்தாள் நிர்மலா. அதற்குள் தேநீர் வந்தது.

“குழந்தைகளைக் கண்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” தேநீர் குடித்துக் கொண்டே சொன்னான் அவன்.

“உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். குழந்தைகள் இல்லையா?”

“இருக்காங்க. இரண்டுமே ஆண் குழந்தைகள். ஆனால் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாய் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லை” என்றான் அவன் வருத்தம் கலந்த குரலில்

அவனுடைய கண்களில் ஜொலிப்பு குறைவு. எந்த உணர்வையும் வேதாந்த ரீதியில்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவை.

“ஏன் அப்படி?” வியப்புடன் கேட்டாள் அவள்.

“அது அப்படித்தான். என்னைப் போன்ற வாழ்க்கை பகையாளிக்கும் வேண்டாம். என் மனைவிக்கு எப்போ பார்த்தாலும் நோய் தான். பிறந்த வீட்டிலேயே இருப்பாள்.”

“ஓஹோ! அப்படியா.” வெறு என்ன  பேசுவதென்று அவளுக்குப் புரியவில்லை.

“இவன் ஏன் இன்னும் வரவில்லை? எப்போதுமே இப்படித்தானா?” கேட்டான்.

“அவ்வப்பொழுது சீக்கிரமும் வருவார்” என்றாள் நிர்மலா. அவன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். பத்துமணி ஆகிவிட்டதாய் கடியாரத்தின் இசை ஒலித்தது.

“மனித வாழ்க்கை ரொம்ப விநோதமானது மிசெஸ் நிர்மலா! தேவையானது கிடைக்காது. கிடைத்ததை அனுபவிக்க முடியாது. எட்டாத கணிக்காகத் தவித்துப் போவோம்.” யோசனையிலிருந்து மீண்டவனாய் சொன்னான் பரமஹம்சா.

நிர்மலா பதில் பேசவில்லை. தன் முகத்தில் இருக்கும் உணர்வுகளைப் படித்தறிந்து விடாமல் இருக்கத் தலையைக் குனிந்து கொண்டாள். அப்படி தலையைக் குனிந்த போது அவள் பார்வை அவளை அறியாமலேயே மார்பின் சேலை மீது படிந்தது. அவள் நல்ல தேகவாகு கொண்டவள். சட்டென்று தலைப்பை சரி செய்து கொண்டாள்.

“இவன் இன்னும் தாரிணியை மறக்கவில்லை போலும். உங்களைப் போன்ற உத்தமியைப் பண்ணிக்கொண்டும் தானும் சுகப்படாமல் உங்களுக்கும் சுகம் இல்லாமல் செய்கிறான். வரட்டும், கேட்கிறேன்.”

“வேண்டாம் விடுங்கள். நான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்று நினைத்துக் கொள்வார். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். உங்க மனைவிக்கு என்ன உடம்பு?”

இரக்கத்திற்கு பதில் இரக்கம் காட்டி விட வேண்டும் என்ற துடிப்பில் கேட்டாள்.

“அகம்பாவம் என்ற நோய். நான் ஒன்றும் இல்லாதவன் என்று முன்பே தெரியும். ஆனால மனைவி, குழந்தைகளைப் போஷிக்க  வழியில்லாத ஏழை மட்டும் இல்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழனும் என்பேன் நான். பிறந்தவீட்டு சொத்து முழுவதும் எனக்குத் தானே. அவர்களுடன் சேர்ந்து இருந்து அனுபவிப்போம் என்பாள் அவள். இருவரின் எண்ணங்களும் வெறு வெறு என்று தெரிந்துவிட்டது. என்னுடைய வருமானத்தில் நான் திருப்தியாக வாழ்கிறேன். அவர்களுடைய சொத்தை அனுபவித்துக் கொண்டு அவள் அங்கே சந்தோஷமாக இருக்கிறாள். பிரச்சினைத் தீர்ந்தது” என்று சிரித்தான்.

‘கவலையை மனதிலேயே அடக்கி வைத்துக் கொண்டு வெளியே நிம்மதியாக சிரிப்பது தெய்வீகம் ஆகும்’ நினைத்துக் கொண்டாள் நிர்மலா. அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. தன்னைப் போலவே வேதனையில் இருக்கிறான் என்பதால் நெருங்கியவனாய் தோன்றியது. பரமஹம்சாவின் முகத்தில் ஒருவிதமான் தேஜஸ் தென்பட்டது. வேதனையை உள்ளே அடக்கி வைத்திருப்பதால் ஏற்பட்ட வேதாந்தமாய் இருக்கலாம்.

வெளியே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. சிம்மாசலம் ஓடினான்.

“உங்க நண்பர் வந்துவிட்டார். நான் போகிறேன்” எழுந்து படுக்கை அறைக்குள் போய்விட்டாள் நிர்மலா.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்த நண்பனை அன்போடு அணைத்துக்கொண்டு “வாடா.. உள்ளே போய் உட்கார்ந்து கொள்வோம்” என்று தன்னுடைய படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள் சந்திரன்.

பிரமஹம்சாவுக்கு அந்த வீட்டின் நிலைமை நன்றாகப் புரிந்துவிட்டது.

********

சாஹிதி காரை விட்டிறங்கி தலை குனிதவாறு பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தால். பத்து வருடங்களாக அந்தப் பள்ளியில் படித்து வந்தாலும் ஒவ்வொரு நாளும் பயந்துகொண்டேதான் அடியெடுத்து வைப்பாள். கும்பல் கும்பலாய் உட்கார்ந்து கொண்டு உற்சாகமாய் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் மாணவிகளைப் பார்த்தால் அவளுக்குப் பயம். அக்கம் பக்கம் பார்க்காமல் நேராகப் போய் வகுப்பில் தன் இடத்தில் உட்கார்ந்துவிட்டால் பிறகு நகரவே மாட்டாள்.

வயதுடன் அறிவும் வளர்ந்த பிறகு பல்வேறுபட்ட மனிதர்களின் குயுக்திகளை கண்டு வெறுப்படைந்து, யாருடனும் கலந்து பழக முடியாமல் தனிமையை விரும்புவார்கள் சிலர். பத்து பேருடன் ஒன்றாகப் பிறந்து அந்த சச்சரவுகளைத் தாங்க முடியாமல் தனிமையை இஷ்டப்படுபவர்கள் சிலர். குடும்பத்தில் சரியான அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டிய சமயத்தில் கிடைக்காமல் அவர்களாகவே தனிமைக்குப் பழக்கப்பட்டுப் போய், வயது கூடிய போதிலும் நாலு பேருடன் கலந்து பழக முடியாமல் வருந்துபவர்கள் சிலர்.

சாஹிதி மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவள். பதினாறு வயதிலேயே பற்று இல்லாமல் போவது பெரிய நோய்.

சாஹிதி வகுப்பறையில் உட்கார்ந்து இருந்த அதே சமயத்தில் கொஞ்சம் தூரத்தில் இருந்த ஸ்டாஃப் ரூமில் அவளைப் பற்றித்தான் உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பரீட்சைப் பேப்பர்களைத்  திருத்திக் கொண்டிருந்த தமிழ் டீச்சர் சொன்னாள்.

“இந்தப் பெண்ணைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். பரீட்சை பேப்பர்களை நன்றாக எழுதுவாள். ஆனால் வகுப்பில் மட்டும் வாயை திறக்கவே மாட்டாள். உற்சாகமாய் தென்பட மாட்டாள். ஓரல் பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாள்.”

“அப்படி எழுதுவதற்குக் கூட மூட் இருக்கணும் போலிருக்கு. சில சமயம் நன்றாக எழுதுவாள். வெறு சில சமயம் வேற்றுத்தாளைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். வகுப்பில் கணக்கைப் போடச் சொன்னாள் எல்லோரும் முதலில் பண்ணிக் காட்ட வேண்டும் என்று துடித்தால் இவள் மட்டும் எல்லோருக்கும் முன்னால் பண்ணிவிட்டாலும் கூட சொல்ல மாட்டாள். காட்டவும் மாட்டாள். ஜடத்தைப் போல் நடந்து கொள்வாள்” என்றாள் கணக்கு டீச்சர்.

‘நான் அந்தப் பெண்ணைக் கவனித்து இருக்கிறேன். ரொம்பவும் தாழ்வு மனப்பான்மை இருக்கு. ஒருக்கால் வகுப்பில் எல்லோரையும் விட ஏழைப் பெண் என்பதாலோ என்னவோ?” என்றாள் இங்கிலீஷ் டீச்சர். அவள் நிறைய சைக்காலஜி புத்தகங்களைப் படித்திருப்பதாய் சொல்லிகொள்வாள்.

“அவர்கள் ஏழை ஒன்றும் இல்லை. சாஹிதி ஸ்கூலுக்கு காரில்தான் வருகிறாள். அவர்கள் வீடு பெரிய அரண்மனையைப் போல் இருக்கும்” என்றாள் கணக்கு டீச்சர்.

“அப்படிச் சொல்லுங்க. ரொம்பப் பணக்கார்களுக்கு வரும் சிக்கல் இதுதான். பெற்றோருக்கு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள நேரமே இருக்காது. ஆயாக்களிடம் விட்டு விடுவார்கள். கிளப்புகளைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கும் தாய் தந்தைக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது.” தன் சைக்காலஜி அறிவால் தவறை உடனே பூசி மேழுகிவிட்டாள்.

“உங்கள் கருத்தை என்னால் ஏற்றிக்கொள்ள முடியாது. இந்தக் காலத்தில் பணக்காரர்களின் போக்குகூட மாறி வருகிறது. தம் குழந்தைகள் நகரத்திலேயே சிறந்த பள்ளியில் சேர்ந்து படிக்கணும். எல்லாவற்றிலும் முதலாவதாய் வரணும். விளையாட்டு, பாட்டு, கலை எப்படி எல்லாவற்றிலும் நல்ல பெயர் எடுக்கணும் என்று நினைக்கிறார்கள். அதுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இனி சாஹிதி விஷயத்திற்கு வந்தால் அவர்கள் இருக்கும் தெருவில் தான் எங்கள் வீடும் இருக்கு. அவளுடைய அம்மா வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாள். மாலை வேளையில் மகளுடன் தோட்டத்திலேயே உட்கார்ந்து இருப்பாள். அப்பாவைப் பற்றிக்கூட நான் தவறாய் எதுவும் கேள்விப்பட்டதில்லை” என்றாள் இன்னொரு டீச்சர்.

இவர்களின் உரையாடலை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் சயின்ஸ் டீச்சர் கோமளா. அவளுக்கு சாஹிதியிடம் ஏதோ தெரியாத அபிமானம்.

மணி அடித்ததால் அவர்கள் உரையாடல் நின்றுவிட்டது. ஆனால் கோமளாவின் மனதை மட்டும் அந்த யோசனைகளை நீங்கவே இல்லை. அவள் சாஹிதியிடம் பேசுவதற்கு தீர்மானித்துக் கொண்டாள்.

*******

சாஹிதி கண்களைத் திறந்தாள். எங்கும் இருட்டு. ரேடியம் டயல் கடியாரம் மணி ஒன்றைத் தாண்டிவிட்டதை அறிவித்தது. அவள் கண்கள் யாருக்காவோ தேடின. ஊஹும், யாருமே இல்லை.

சுமார் பத்து ஆண்டுகளாய் அவளுக்கு இதுபோல் தூக்கத்திலிருந்து திடீரென்று விழிப்பு ஏற்படுவது பழக்கம் ஆகியிருந்தது. தந்தைக்காக தேடுவாள். அன்று இரவு தந்தை தன் அறைக்கு வந்தது, அன்பாய் பேசியது மறக்க முடியாத அனுபவம்.

‘ஏன் டாடீ! எல்லோருடைய அப்பாக்களைப் போல் வீட்டில் இருக்க மாட்டேன் என்கிறாய்? என்னை அருகில் இழுத்து வைத்துக் கொண்டு பேசுவதே இல்லையே? அம்மாவை நன்றாக நடத்துவது இல்லையே? ஏன்?’ என்று கேட்க வேண்டுபோல் இருந்தது.

அவர்  மட்டும் அப்படிப்பட்ட வாய்ப்பை தந்ததே இல்லை. மம்மியுடன் தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கும் போதோ, டீச்சரிடம் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதோ வருவார். விசாரிப்பார். எது வேண்டுமானாலும் உடனே வாங்கி அனுப்பி வைப்பார். தானே சுயமாக கையில் கொடுக்க மாட்டார்.

சாஹிதி படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள்.  தந்தையின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. லேசாக பேச்சுக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது. கதவுக்கு அருகில் போய் எட்டிப் பார்த்தாள். உள்ளே அம்மாவும் கூட இருந்தாள்.

“போதும் நிறுத்திக்கொள்ளுங்கள். ராத்திரி முழுவதும் இப்படியே குடித்துக் கொண்டு இருக்கப் போறீங்களா? டாக்டர் கூட சொல்லி இருக்கிறார். ஏன் இப்படி உடம்பைப் பாழாக்கிக் கொள்றீங்க?” என்றாள் நிர்மலா.

“போனால் போகட்டும். என்னால் இந்த டெண்ஷனைத் தாங்க முடியவில்லை. குடியில் மறப்போம் என்றால் உன்னுடைய ரகளை வேறு. போய் படுத்துக்கொள். என்னை தொந்தரவு செய்யாதே.” பாட்டிலிலிருந்து மேலும் கொஞ்சம் ஊற்றிக்கொண்டான். அவனுக்கு வியாபாரத்தில் ஐம்பது லட்சம் வரை நஷ்டம் வந்துவிட்டது. அந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லவில்லை.

“உங்களை குடிக்க விட மாட்டேன்.” போய் டம்ளரைப் பிடுங்க முயன்றாள். வேகமாய் அவளைப் பிடித்துத் தள்ளினான் சந்திரன்.

“நான் குடித்தால் என் உடம்பு பாழாகி விடுமே என்று பயமா? அல்லது வியாபாரத்தில் நஷ்டம் வர வழைக்கிறேன் என்ற வருத்தமா? பயப்படாதே சொத்து நிறைய இருக்கு. பத்து லட்சம் இன்ஷூரென்ஸ் வரும்.”

தாயின் விசும்பல் சத்தம் கேட்டது. நிசப்தமாய் சாஹிதி தன் அறைக்கு வந்துவிட்டாள்  ஏனோ தெரியவில்லை, அவளுக்கு டீச்சரின் நினைவு வந்தது.

மறுநாள் காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்கு முன்னால் ரோஜா தோட்டத்திற்கு அருகில் நின்றாள். வித விதமான நிறங்களில் பூக்கள் இதழ் விரித்திருந்தன. ஒன்றைப் பறித்துக் கொண்டு போய் டீச்சரிடம் தந்தால்? ஊஹும்.. அவ்வளவு தைரியம் இல்லை.

போய் காரில் உட்கார்ந்து கொண்டாள். துக்கம் பொங்கிக் கொண்டு வெளியே வந்தது. தன்னைவிட சிறியவர்கள் சுவாதீனமாய் நாலுபேருடன் சேர்ந்து டீச்சரை விஷ் பண்ணிவிட்டு வரும் போது தனக்கு மட்டும் ஏன் இந்த பயம் என்று நினைத்துக் கொண்டாள்.

‘diffendability’ என்ற விஷ விருட்சம் தன்னுள் முளைவிட்டு மெதுவாய் துளிர்த்துப் பரவிக் கொண்டே இருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது.  எந்த சைக்காலஜிஸ்ட் அவளைப் பார்த்ததும் உடனே ‘I am not o.k. You are o.k’  என்ற ;நிலையில் அவள் இருப்பதை சொல்லி விடுவார்கள்.

“விஜயா.. முப்பத்தைந்து.. வெரி புவர். வகுப்பில் பாடத்தைக் கவனிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் மார்க்ஸ் இப்படித்தான் வரும். விமலா… நாற்பத்தி இரண்டு… பாஸ் மார்க்ஸ் வந்தால் போதாது. இன்னும் கஷ்டப்படணும். வந்தனா.. அறுபத்தி  ஒன்று, பரவாயில்லை. ஆனால் இன்னும் நல்ல மார்க்ஸ் வாங்கணும்.”

கோமளா டீச்சர் ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு மதிப்பெண்களை சொல்லிவிட்டு பேப்பரை தந்து கொண்டிருந்தாள். சாஹிதியின் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. தனியாய் போய் பேப்பரை வாங்கணும். ஒருக்கால் பெயில் ஆகி இருந்தால்? டீச்சர் எல்லோருக்கும் முன்னால் திட்டிவிட்டால் என்ன செய்வது? அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இதயத்தின் துடிப்பு காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“சாஹிதி!” டீச்சரின் குரல் கேட்டதுமே தன்னை அறியாமல் எழுந்து நின்றாள். முகத்தில் இருந்த ரத்தமெல்லாம் வற்றிவிட்டது போல் வெளிறிவிட்டது.

“எண்பத்தொன்பது முதல் மதிப்பெண்!” வகுப்பில் எல்லோரும் கை தட்டினார்கள். நடுங்கியவாறே பேப்பரை வாங்கிக் கொண்டாள். உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

“வெரிகுட்! கீப் இட் அப்!” சிரித்துக்கொண்டே  மேலும் ஏதோ சொல்லப் போன  கோமளா நிறுத்திக் கொண்டாள். “என்ன ஆச்சு சாஹிதி? உடம்பு சரியாய் இல்லையா?” தோளில் கையைப் பதித்துப் பரிவோடு கேட்டாள்.

“ஒன்றும் இல்லை டீச்சர். நன்றாகத்தான் இருக்கிறேன்.” லேசாக நடுங்கினாள்.

‘ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறாய். கையெழுத்து கூட அழகாய் இருக்கு. போ.. போய் இடத்தில் உட்காரு.”

சீட்டில் உட்கார்ந்து கொண்ட பிறகுகூட சாஹிதியின் கைகள் ரொம்ப நேரம் நடுங்கிக் கொண்டே இருந்தன. டீச்சர் பாடத்தைத் தொடங்கினாள். அதொன்றும் சாஹிதியின் செவிகளில் விழவே இல்லை. டீச்சர் அவளைப் பாராட்டினாள். முக்கியமாய் அவள் டீச்சரின் கவனைதைக் கவர்ந்து விட்டாள். அதுபோதும்!

“சாஹிதி! எல்லோரிடமிருந்தும் ஹோம்வர்க் நோட்டு புத்தகங்ககளை கலெக்ட் பண்ணு.” டீச்சர் சொன்னதுமே எழுந்து நின்றாள். கிளாஸ் லீடருடையது அந்த வேலை. அவள் இன்று வரவில்லை.

ஒன்பதாம் வகுப்பிற்கு வரும் வரையிலும் பண்ணியிராத அந்த வேலையை அன்றைக்குச் செய்தாள்.

பீரியட் முடிந்து விட்டதாய் மணி அடித்தார்கள். “என்னோடு ஸ்டாஃப் ரூம் வரைக்கும் எடுத்துக்கொண்டு வாம்மா.” சொன்னாள் கோமளா.

புத்தகங்களை ஏந்திக் கொண்டு ஆவலுடன் நடந்து கொண்டிருக்கும் போது ஏதோ இனம் புரியாத பயம், உத்வேகம். ஸ்டாஃப் ரூமில் வேறு யாரும் இல்லாதது அதிர்ஷ்டம்தான். புத்தகங்ககளைப் பெற்றுக் கொண்டு தாங்க்ஸ் சொன்னாள் டீச்சர். “பாரும்மா. அரை பரீட்சை வரப் போகிறது. முதல் இடம் வரணும் என்று எல்லோருமே போட்டிப் போட்டுக் கொண்டு படிப்பார்கள். உனக்குப் போட்டி அதிகமாய் இருக்கும். இப்படியே கஷ்டப்பட்டுப் படி. திரும்பவும் முதல் இடம் உனக்குத்தான் கிடைக்கணும். ஓ.கே.?”

“எஸ் டீச்சர்! முயற்சி செய்கிறேன்.”  அரும்பாடுபட்டு எப்படியோ வாயைத் திறந்து சொன்னாள்.

“சாஹிதி!” அந்த அழைப்பில்தான் எத்தனை கனிவு! “உங்க வீட்டில் வித விதமான நிறங்களில் ரோஜாச் செடிகள் இருக்கிறதாமே. எனக்குக் கொஞ்சம் கட்டிங்க்ஸ் கொண்டு வந்து தருவாயா?”

“கண்டிப்பாய் டீச்சர்! நாளைக்கே கொண்டு வருகிறேன்.” உற்சாகமாய் பதில் சொன்னாள்.

அன்று முழுவதும் அவளை அறியாமலேயே இதழில் குறுநகை படர்ந்து கொண்டே இருந்தது. வீட்டிற்குப் போனதுமே பமீலாவுக்கு அழுத்தமாய் முத்தம் கொடுத்தாள். பிறகு தன் புத்தகங்களை எடுத்து சீரியசாய் படிக்கத் தொடங்கினாள்.

டீச்சரின் பிரபாவம் பிள்ளைகள் மீது எவ்வளவு தூரம் இருக்கும் என்பதற்கு அதுவே ஒரு உதாரணம். அரைப் பரீட்சையில் மட்டுமே அல்ல, முழுப் பரீட்சையிலும் கூட சாஹிதி முதல் இடம் பெற்றாள். கோமளா டீச்சர் தனியாய் அழைத்து வாழ்த்துக்கள் சொன்ன போது பூரித்துப் போய்விட்டாள்.

அதற்குப் பிறகு சாஹிதி படிப்பில் முதல் வகுப்பிலிருந்து கீழே இறங்கவே இல்லை.

(தொடரும்)

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *