குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

This entry is part 24 of 33 in the series 11 நவம்பர் 2012

 

இந்தத் திருத்தலத்தில் இன்னொரு பெருமையும் உண்டு. எல்லா வைபவ விஷேஷங்களும் போக கார்த்திகை மாத முதல் சோமவாரம்தான் அது. அதை கொண்டாட நகரத்தார் பெருமக்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடிவிடுவார்கள்.

 

சைவ நெறிச் செல்வர்களான அவர்கள் அந்தக் காலத்தில் ”ஆண்டிக்கு வடித்தல் ” என கார்த்திகை முதல் சோம வாரத்தில் வண்டி கட்டிக் கொண்டு இங்கே  சமையல் பொருட்களை எடுத்து வந்து  ஆள் வைத்து சமைத்து  7 கறி, கெட்டிக் குழம்பு, சாம்பார், ரசம், வடை, பாயாசம் , அப்பளத்தோடு சம்பாவை முருகனுக்குப் படைத்து முதலில் குன்றக்குடியில் கோயிலிலே வசிக்கும் ஆண்டிகளுக்கு உணவிட்டு பின் தங்கள்  உறவினர்கள் ஊரார் ஆகியோருக்கும் உணவிடுவர்.ஊரோடு வந்தவர் அனைவருக்கும் சாப்பாடு உண்டு.

 

இங்கே நகரத்தார் சத்திரமும், கீழப்பாடசாலை, மேலப்பாடசாலை எல்லாமும் உண்டு. கீழப்பாடசாலை என் தாய் வழிப் பாட்டையா காலத்துக்கு முற்பட்டது. அந்தப் பாடசாலை அங்கே வேதம் ஓதவும் வேதம் பயிற்றுவுக்கவும்  நிறுவப்பட்டது. அந்தப் பாடசாலையில் கிருஷ்ண மூர்த்தி கனபாடிகள்  தந்தையார் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. மேலூரில் சில நிலங்களையும் அதன் வரும்படிக்காக  கொடுத்திருக்கிறார்கள். அந்த விளைச்சலின் பயன் இங்கே பாடசாலை நடத்தும் செலவுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

 

அது மயிலாடும் பாறைக்கும்  போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடுவில் அமைந்துள்ளது. எதிரே மலைமேல் இருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். தற்போது  கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் இறந்து விட அவர் மகன்கள் நால்வர் அங்கே இருக்கிறார்கள். இந்தப் பாடசாலையில் தினமும் முருகனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறும். பழநி செல்லும் பாத யாத்திரிகர்கள் தங்கிச் செல்வார்கள்.

 

கார்த்திகை முதல் சோமவாரத்தன்று வருடா வருடம் பூஜைப் பொருட்கள் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மலை மேல் இருக்கும் சிவன், பார்வதி, முருகன் ஆகியோருக்கு அபிஷேகம் , ஆராதனை, அர்ச்சனை செய்யப்படுகிறது. அதன்பின்  பாடசாலையில் உணவு படைக்கப்பட்டு ஊரோடு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்னை பங்குச் சந்தையின் இயக்குநர் திரு நாகப்பன் புகழேந்தி ( நாணயம் விகடன் புகழ் ) அவருடைய வருடமாக இந்த வருடம் ஏற்றுச் செய்யப்படுவதால் செல்லும் அனைவருக்கும் உணவுண்டு.

 

”தெய்வம் மனுஷ்ய ரூபேன “ என்றபடி  ஆண்டிக் கோலத்தில் இருக்கும் தண்டாயுத பாணி நம்மோடு உணவு உண்ண வருவார். எனவே எல்லா ஆண்டிகளுக்கும், மனிதர்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்படுத்தபட்டது இந்த நிகழ்வு.

 

வள்ளலார் அனைவருக்கும் உணவிட்டு மகிழ்ந்ததைப் போல உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்ற சொல்லுக்கு ஏற்ப இறைவன்  நமக்குக் கொடுத்த உணவைப் பிறரோடும் பங்கிட்டு வாழும் நிகழ்வு இது என்பதால் முக்கியத்துவம் பெருகுகிறது. வாழ்க மயில்மேல் அமர்ந்து அருள் பாலிக்கும் சண்முகநாதனின் புகழ்.

 

“ சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி

கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி

தண்மலர்க் கடம்ப மாலை தாங்கிய தோளா போற்றி

விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி.

Series Navigationநுகராத வாசனை…………தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    Rangiem Annamalai N says:

    நல்ல செய்திக்கு நன்றி .இந்த விவரங்கள் வெளியில் அதிகம் தெரியாது.பதிவிற்கு நன்றி .இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அனைத்து கோவில்களிலும் நகரத்தார் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.அதை பற்றி தங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் பதிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *