முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammed Ajmal Amir Kasab) பம்பாயின் 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதி. அவன் உரிய நீதி மன்ற விசாரணைக்குப் பின் , கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின் தூக்கிலிடப்பட்டு விட்டான். கடைசி வரை இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது அவன் துக்கிலிடப்பட்டது. அதைப் பற்றியும், அவன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடாத இருண்மையும் மற்றும் அவனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்டத்தின் மேலான ஒரு நீதிமறு ஆய்வு(judicial review) வாய்ப்பினைத் தாராத நீதிக் குறைவினையும் நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் அலசக் காண்கிறோம். இவற்றோடு, மரண தண்டனை இன்னும் தேவையா’ என்ற விவாதமும் மறுபடியும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி மறுபடியும் மறுபடியும் இந்தியாவில் முன்வைக்கப்படுவது அடிப்படை மனிதம் செத்து விடாது என்பதற்கான ஆறுதலாய் இருக்கிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மரண தண்டனையின் தேவை பற்றிய விவாதம் தீவிரப்பட வேண்டியதின் அவசியம் கசாப்பின் தூக்கின் பின் எழுந்துள்ள பெருவாரியான வரவேற்பால்- புரிந்து கொள்ளப்பட வேண்டியதானாலும்- தொய்வடைய வேண்டியதில்லை. கசாப் நிகழ்த்திய உயிர் அழிவுகள்- மனிதர்கள் மட்டுமல்ல, புறாக்கள், நாய்கள் கூட- படு பயங்கரமானவை. குலை நடுங்க வைப்பவை;மறக்க முடியாதவை. சட்டத்தின் வரைவில் மரண தண்டனைக்கு உரியவை. அதே சமயத்தில் அவனது தூக்கினைக் கொண்டாடுவது என்பது இன்னொரு விதமான திரிபுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. கசாப், தான் செய்த படுகொலைகளுக்கு உரிய தண்டனையாய்த் தான் மரணதண்டனை தரப்பட்டது என்ற சட்ட நியாயத்தை விட ‘ கண்ணுக்குக் கண் ;பழிக்குப் பழி’ என்ற வன்மையைக் கொண்டாடுவது போன்றதான நிலை கசாப்பின் தூக்கினைக் கொண்டாடுவதில் முன்படுத்தப்படுவது போல் இருக்கிறது. இதனால், ‘பழிக்குப் பழி’ என்பது சமூகப் பிரக்ஞையிலும் நியாயமென்று உள்வயமாக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. 26/11 –பயங்கரவாதத் தாக்குதலில் தன் மகனை இழந்த கே.உன்னிகிருஷ்ணன்(K.Unnikrishnan) என்பவருடைய கருத்து இங்கு உன்னற்குரியது: ”நான் கசாப்பினையுடைய தூக்கினைக் கொண்டாடவில்லை. அது ஒரு சட்டத்தின் தேவை”(The Hindu,November,22,2012). தனிமனிதத்தின் உன்னதம் இதில் வெளிப்படும் போது, சட்டத்தில் தூக்கு தண்டனையின் தேவையையும் அது அடிக்கோடிடுகிறது. சட்டத்தில் மரண தண்டனையின் தேவை முக்கியமானதா?
மரண தண்டனை தேவை தானா? இந்தக் கட்டத்தில் மரணதண்டனை குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இவையெல்லாம் தெரிந்த கேள்விகள்.
-
மரண தண்டனைக்கு ‘அச்சுறுத்தும் சக்தி’(deterrent force) இருக்கிறதா?
-
மரண தண்டனைக்கு மாற்றுக்கள் (alternative options) இல்லையா?
-
மரண தண்டனை நிர்ணயம் முழுக்க முழுக்க நடுவு நிலைமையிலானதா? பிழையின் நீங்கியதா?
-
மரண தண்டனை நியாயமானதா?
மரண தண்டனை கொடூரமான குற்றஙகளுக்கு எதிரான அச்சுறுத்தும் சக்தி என்றால், மரண தண்டனையால் கொடூரமான பயங்கரவாதங்களும், குற்றங்களும் நின்று விட்டனவா? அல்லது குறைந்து விட்டனவா? ஆம் என்று யாரும் உறுதியாய் பதில் சொல்லி விட முடியாது. பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்னையாகி விட்டது. உலகமயமாக்கலின் பல வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று. உலகளாவிய பயங்கரவாதத்தைத் தடுப்பதும், களைவதும் உலகளாவிய கூட்டு முயற்சியால் தான் முடியும். பயங்கரவாத எதிர்ப்பில் ‘கசாப்பின் தூக்கு’ போன்ற சட்டத்தின் பணி எவ்வளவு தூரம் இனி பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாய் இருக்கும் என்பது ஊகமாகவே இருக்கும். கசாப் பயங்கரவாதி என்று நிறுவப்பட்டதற்கு மாறாய், அவன் தூக்கிற்குப் பின் கசாப் ‘வீர தியாகி’(martyr) என்று பயங்கரவாதக் குழுக்களால் உயர்த்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை நாளிதழ்களும், ஊடகங்களும் எடுத்துரைக்கின்றன. உலகளாவிய பயங்கரவாதத்தின் தடுப்பில் மரண தண்டனையின் பணி முக்கியமானதென்று ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிரான்ஸ், பிரிட்டன போன்ற நாடுகளில், இந்த தண்டனை இல்லாமல் இருப்பதிலிருந்தும் தெரிகிறது. வறுமையின் பின்னணியும், தவறான தூண்டுதலும், கூடிய கசாப்பின் பயங்கரவாதச் செயல்பாட்டில், மரண தண்டனையின் ’அச்சுறுத்தும் சக்தி’ என்ன? கசாப் தான் செய்யும் படுகொலைகள் பற்றி தெரியாதவனா? தான் பிடிபட்டும் விடலாம் என்று அறியாதவனா? பயங்கரவாதிகளுக்கு மிகையான தன்முனைப்பில்(highly self motivated), பிடிபட்டால் மரணதண்டனை என்பது எதிர்மறைப் பயன்பாடு( negative utility/pay-off) என்று பார்க்கப்படாமல், ‘ஒரு புனிதப் பணியில் வீர மரணம்’ (martyrdom) என்று நேர்மறைப் பயன்பாடாக( positive utility/pay-off) பார்க்கப்படுவதில் இருக்கும் விபரீதம் தான் அபாயகரமாயிருக்கிறது. இதில் தான், மரண தண்டனையின் ‘அச்சுறுத்தும் சக்தி’ செயலிழந்து போகிறது. ஆனால், இந்த வாதத்தையே திருப்பிப் போடலாம். மரண தண்டனை இல்லையென்றால், குறைந்தபட்ச அச்சமும் இல்லாமல் பயங்கரவாதம் தலை விரித்தாடும் என்று. ஆனால், இந்தக் குறைந்தபட்ச அச்சமும் நாம் நோக்குவதில் தான் உள்ளதே தவிர , பயங்கரவாதிகள் உணர்வதில் அல்ல.( it lies not in what we perceive but in what the terrorists feel) . அப்படியென்றால், மரணதண்டனையின் ‘அச்சுறுத்தும் சக்தி’ கேள்விக்குரியதல்லதென்று அல்ல. பயங்கரவாதத்தை விட்டு விட்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய நிலையிலான ஏனைக் கொடூரங்களும், குற்றங்களும் முற்றிலும் இல்லையென்று சொல்லி விட முடியுமா? இந்தியாவில் இன்னும் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தூக்குக்குக் காத்திருக்கின்றனர்.( The Hindu, November 22,2012).
மரண தண்டனைக்கு மாற்றுக்கள் இல்லையா? ஆயுள் தண்டனை போன்ற கடுந் தண்டனைகள் மாற்றுக்களாய் இல்லாமல் இல்லை. முக்கியமாக பயங்கரவாதச் செயலில், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான உள் பாதுகாப்புக் கட்டமைப்பின் செம்மையும், துரித செயல்பாடுகளும் தான் முக்கியம். பம்பாய் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து நான்காண்டுகள் ஆகியும், இன்னும் சி.சி.டி.வி காமெராக்கள் (CCTV Cameras) பம்பாய் நகரில் பரவலாக நிறுவுவதில் இருக்கும் தாமதத்தையும், உயர்நிலை அதிரடிப் படை( elite combat squad) இன்னும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பதையும், காவல் துறைக்கும், கடற்படைத் துறைக்கும் இன்னும் இருக்க வேண்டிய கூட்டு செயல்பாட்டு அவசியத்தையும் குறித்து செய்திகள் வெளியாகின்றன.(The Hindu, November 25,2012). செம்மையான துரித கதி உள் பாதுகாப்புக் கட்டமைப்போடு, ஆயுள் தண்டனை போன்ற சட்ட வழிகள், செம்மையில்லாத உள் பதுகாப்புக் கட்டமைப்போடு மரண தண்டனை உள்ளடக்கிய சட்டவழிகளைக் காட்டிலும் திறனுள்ளதாயும், வலுவுள்ளதாயும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மிக முக்கியமாக, மரண தண்டனை நிர்ணயம் முழுக்க முழுக்க நடுவுநிலையிலானதா(objective)? இந்த நடுவு நிலைப் பண்பு பல்வித கோணங்களை உடையது.
-
முதலில் மரண தண்டனைக்குரிய குற்றங்கள் என்பவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ( Wikipedia). ஆனால் எந்த வித முறையிலாவது விதிக்கப்படும் மரணதண்டனையில் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கு வெவ்வேறு அளவு கோல்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்க முடியாது.
-
மரண தண்டனை சூழல்கள், சாட்சியங்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. சாட்சியங்கள், கசாப் வழக்கில் போன்று, முழுமையானவை, நிச்சயமானவை என்று எல்லாக் குற்றங்களிலும் நூல் வைத்து சொல்லி விட முடியாது. அப்படியாக, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் புதிய சாட்சியங்களில் அது தவறாகப் போகும் சாத்தியத்தில் , ஒரு நிரபராதியின் உயிர் பறிக்கப்படுகிறது. இது நீதியின் பிறழ்வு.(miscarriage of justice).இது கற்பனையல்ல. எப்படி ஒரு நிராபராதியின் மரண தண்டனை (Timothy Evans case(1950)), ஒரு வகையில் பிரிட்டனில் மரண தண்டனையை தடை செய்ய வழிவகுத்தது என்பதற்கும், அமெரிக்காவில் இந்த மாதிரியான நீதியின் பிறழ்வுகள் நிகழ்ந்திருப்பதைப் பற்றியும், மரபணுச் (DNA) சோதனையின் அடிப்படையில் நிலுவையிலிருந்த பல மரண தண்டனைகள் நிறுத்தப்பட்டதையும் பற்றிய பதிவுகள் இருக்கின்றன.( Wikipedia). ஆக நீதியின் பிறழ்வில், உயிர் பறிக்கப்பட்ட பின்னால் , தவறுணர்ந்து பறிக்கப்பட்ட உயிரை மீட்டெடுத்து விட முடியுமா? இங்கு தான் மரண தண்டனையின் குரூரம் கருநிழலிடுகிறது. சிலம்பில் கோவலனைக் கொலைக்களப் படுத்தியது தவறென்றுணர்ந்த தேரா மன்னன் தன்னுயிர் மாய்த்துக் கொண்டான். அரசியல் பிழைத்தோனுக்கு அறம் கூற்றானது. ஆனாலும் அது கோவலன் உயிரை மீட்க உதவவில்லை. மேற்சொன்ன நீதிப் பிறழ்வுகள் மிக அபூர்வம் என்று வாதிடலாம். இந்தக் கட்டத்தில் 12-வது நூற்றாண்டைச் சேர்ந்த யூத சட்ட நிபுணரான மெய்மெனாய்டு என்பவரின் கருத்து கவனத்திற்குரியது: “ஆயிரம் குற்றவாளிகளை விட்டுவிடுவது ஒரு நிராபராதியைச் சாகடிப்பதை விட மேலானதும் மிகவும் நிறைவானதுமாகும்” (It is better and more satisfactory to acquit a thousand guilty persons than to put a single innocent one to death(Maimonides))
-
மேற்சொன்ன வாதத்தின் தொடர்ச்சியாய் வருவது, மரண தண்டனை நிர்ணயத்தில் உள்ளடங்கியுள்ள திட்டவட்டமின்மை(arbitrariness). இதைப் பின் வரும் மெய்மெனாய்டின் கருத்தில் புரிந்து கொள்ள முடியும்.” முழுக்க முழுக்க நிச்சயத்திலில்லா வேறெந்த அடிப்படையிலும் ஒரு குற்றவாளியை மரண தண்டனைக்கு உள்ளாக்குவது என்ற நிலையில், சான்றுகளின் தேவையின் குறைவுபட்ட சரிவுக்கு நம்மை அழைத்துச் சென்று, நீதிபதியின் ’நினைப்பின்’படியே மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டியவர்களாய் இருப்போம்.”( executing a defendant on anything less than absolute certainty would lead to a slippery slope of decreasing burdens of proof, until we would be convicting merely “according to the judge’s caprice.”)
கடைசியில் மரண தண்டனை நியாயமானதா?( Is death sentence just?) என்ற கேள்வி. இதற்கான பதிலை முற்சொன்ன கேள்விகளின் அலசல்கள், பதில்களிலிருந்து ஒருவாறு ஊகிக்கலாம்.மரண தண்டனையின்- தூக்கு போன்றதின்- குரூரம் அது நிறைவேற்றப்படும் முறையில் மட்டுமல்ல. குற்றவயப்பட்ட தனி மனிதனின் மீட்சிக்கான வாய்ப்பினை அது முற்றிலும் நிராகரிப்பதில் தான். அதே சமயத்தில், ஒரு வேளை நீதிப் பிறழ்வு ஏற்பட்டால் அது பொறுப்பேற்காதது தான். பொறுப்பேற்க தயாராயிருந்தாலும் அதில் எந்தப் பின்விளைவும் இல்லை(inconsequential) என்பது தான். மரண தண்டனையில் இருக்கும் நியாய அனுமானம், பாதிக்கப்பட்டவர்களே மரண தண்டனையை மனத்தில் ஓராமையான் பின்னடவாகிறது. மேதைமை வாய்ந்த முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர்(Justice V.R.Krishna Iyer) எப்படி சோனியா காந்தி அம்மையார் அவரது கணவர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளின் தூக்கிற்கு எதிராக அப்போதைய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணனுக்குக்(K.R.Narayanan) கடிதம் எழுதினார் என்பதைப் பதிவு செய்கிறார்.(The Hindu, November 25,2012) . மேலும், பம்பாய் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலையில், பலியானோர் குடும்பத்தைச் சேர்ந்தோர் கசாப்பின் தூக்கினைக் கொண்டாடுவதின் அர்த்தமின்மையை விட, வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை உறுதிப்படுத்துவதின் உண்மையை நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்ற செய்திகள் பதிவாகின்றன.(The Hindu,November 25,2012) இங்கு சட்டம் வழங்கிய ‘கசாப்புக்கு தூக்கு’ என்ற நீதியை விட, நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தாத வாழ்வாதாரம் என்ற நீதி அடிப்படையாயும் நேரடியாயும் தேவைப்படுகிறது. மரண தண்டனையின் நியாயமின்மையும், தேவையின்மையும், அது நிறைவேற்றப்படும் கால தாமதத்திலும் உள்ளடங்கியுள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்ட பலர், அது நிறைவேற்றப்படும் முன்னரே பல்லாண்டுகள் சிறையில் இருக்கின்றனர். அத்தகைய சூழலில் மரண தண்டனையை விதிப்பதில், தண்டனை மேல் தண்டனை என்ற மரண தண்டனைக்கெதிரான குற்றச்சாட்டு கூர் கொள்கிறது.
அம்னெஸ்டி இண்டர்நேஷனல்(Amnesty International) என்ற அமைப்பின் கருத்துப் படி மரணதண்டனை மனித உரிமைகளின் முடிபான மறுத்தல் (ultimate denial of human rights). மரண தண்டனை ஒவ்வொரு மனிதனின் உள்ளுறைந்திருக்கும் மனிதத்தை நிராகரிப்பது. அந்த உள்ளுறைந்திருக்கும் மனிதம் உன்னதமானது . மதங்களைக் கடந்தது. கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும், மரணதண்டனைக்கு எதிரான உறுதிப்பாடான, உள்முரணில்லா நிலையில்லை.(see religion and capital punishment(Wikipedia)).கொல்லாமையை உயர்த்தும் புத்தம் தழுவிய ஜப்பான், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் மரண தண்டனை நிலவுவது கோட்பாட்டுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை வெளிச்சமிடுகிறது. ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்று சொல்லும் வள்ளுவரும், ‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்’ என்று சொல்கிறார். ஏமாற்றமாய்த் தான் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் மரண தண்டனையைத் தடை செய்வதற்கான வரைவு தீர்மானத்தை ஆதரித்த 110 நாடுகளில் இந்தியா இல்லை( The Hindu, November 22, 2012) என்பது இன்னும் ஏமாற்றமாய் இருக்கிறது. மரண தண்டனை தடை செய்யப்படாது சட்டச் செயல்பாட்டில் இருக்கும் வரை, நீதியின் கரு நிழல் நீங்காது தொடரும்.
தூக்குக் கயிற்றை
இறுக்காதே.
அவிழ்த்து விடு.
மனிதம்
மூச்சு விடட்டும்.
கு.அழகர்சாமி
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.
- இலக்கு
- தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
- மரண தண்டனை- நீதியின் கருநிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !
- பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
- நாம்…நமது…
- மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்
- நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.
- தளபதி .. ! என் தளபதி ..!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
- நினைவுகளின் சுவட்டில்(104)
- நதியும் நானும்
- விருப்பும் வெறுப்பும்
- நம்பிக்கை ஒளி! (9)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5
- அக்னிப்பிரவேசம்-12
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
- அடங்கி விடுதல்
- ஆமைகள் புகாத உள்ளம் …!
- நம்பிக்கை என்னும் ஆணிவேர்
- சன் ஆப் சர்தார் ( இந்தி )
- கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
- குரு
- என்னைப் போல் ஒருவன்
- பிஞ்சு மனம் சாட்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
- நன்னயம் – பின்னூட்டம்
- மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’