விருப்பும் வெறுப்பும்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 31 in the series 2 டிசம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

கொஞ்ச நாட்களாகவே இந்த வாசுவின் தொல்லை தாங்க முடியாத வகையில் போய்க் கொண்டிருக்கிறது. சாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறானாம். அதுவும் நான் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் அவனைப் பிழைக்க வைத்திருக்கிறாராம். ஒரே பிதற்றல்தான். அவன் கொடுக்கும் தொல்லையால் தினசரி எனக்கு ஆபீஸ் போய் வருவதே பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த விஷயத்தை ராகவனிடம் சொன்னேன். அவனும் வாசுவைக் கூப்பிட்டு கண்டித்தான். ஆனாலும் வாசு அடங்கவில்லை.

திண்ணை இணைய வார இதழில் செப்டம்பர் 16, 2012 அன்று வெளியான ‘நம்பிக்கைகள் பலவிதம்’ என்ற கதையை வாசித்திருப்பவர்களுக்கு வாசு யார், வனிதா யார், ராகவன் யார் என்பது புரிந்திருக்கும். இது அந்தக் கதையின் தொடர்ச்சிதான் என்பதை புரிந்து கொள்ள முடியும், வாசு குடித்து விட்டு பைக்கில் சென்று விபத்தில் சிக்கியதால் தலையில் அடிபட்டு மருத்துவர்களின் திறமையான சிகிச்சையில் மறுபிறவி எடுத்தது போல் உயிர் பிழைத்து வந்திருக்கிறான். அவனுடைய நண்பன் பிரவீன், வனிதாதான் இதற்கெல்லாம் காரணம் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

நான்தான் அந்த வனிதா. என்னைப் பற்றி தவறாக அவன் சொல்லி வருவதால் என் தரப்பு நியாயத்தை நான் சொல்லுவது அவசியமாகிறது. நானும் வாசு வேலை செய்யும் அதே மென்பொருள் நிறுவனத்தில்தான் வேலை செய்கிறேன். என்னுடன் வேலை செய்யும் ராகவனும் நானும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். வாசு, ஆரம்பத்தில் என்னிடம் வலிய வலிய வந்து பேசுவான். ஒரே கம்பெனியில் வேலை செய்பவன் என்பதால் நானும் சகஜமாகப் பேசுவேன். திடீரென்று ஒரு நாள் என்னை காதலிப்பதாகச் சொன்னான்.

ஆனால் அந்த சமயம் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதனால் உடனடியாக அதற்குப் பதில் சொல்ல முடியாது என்று அவனிடம் சொன்னேன். ஆனால் அதற்குப் பிறகும் அவனுடன் சகஜமாகவே பழகி வந்தேன். அதனால் அவனுடைய காதலை நான் ஏற்றுக் கொண்டதாக நினைத்து கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனிடம் அதைச் சொல்லாமல் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அதற்குப் பிறகுதான் ராகவன் என் மனதைக் கவர்ந்தான்.

ஆனால் ராகவனிடம் நான் பேசுவது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் இனிமேல் அவனிடம் பேசக்கூடாது என்றும் வாசு சொன்னதால், எனக்கு அதற்கு மேல் அவனிடம் சகஜமாகப் பேசுவது தவறு என்று தோன்றியது. அதனால் அவனிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டேன். நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் போவதுதானே சரி. ஆனால் அது அவன் மனதைப் பாதித்து விட்டதாம். அதனால் கவலையை மறக்க குடித்தானாம். குடித்து விட்டு பைக்கில் வீட்டுக்குப் போகும்போது விபத்து ஏற்பட்டு விட்டதாம். பிறகு ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி இப்போது பிழைத்து வந்திருக்கிறானாம். அந்த விபத்துக்கே நான்தான் காரணம் என்று அவனுடைய நண்பன் பிரவீன் அடிக்கடி சொல்கிறான். அவனுக்கு ஏற்பட்ட விபத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

ஆனால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்காகவே அவன் பிழைத்து வந்திருப்பதாகச் சொல்லி வாசு டார்ச்சர் பண்ணுகிறான். நான் ராகவனை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவதாகச் சொல்லியும் அவனுடைய தொல்லை தொடரத்தான் செய்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னுடைய அப்பாவிடமும் இந்த விஷயத்தைச் சொல்லி விட்டேன். அவர் வாசுவுடைய அப்பாவிடம் போய் சொல்லி அவனைக் கண்டிக்கும்படி அறிவுறுத்தி விட்டு வந்தார். ஆனால் அவன் யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.

தினமும் ஏற்படும் இத்தகைய தொந்திரவினால், வர வர எனக்கு நிம்மதியே போய் விட்டது. ராகவனிடம் சொல்லி ஆபீசில் மேலதிகாரிகளிடம் முறையிட்டாகி விட்டது. ஆனால் ஆபீசில் எந்தப் பிரச்சினையும் வாசு பண்ணாததால் இது அவனுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் தங்களால் தலையிட முடியாது என்றும் சொல்லி விட்டார்கள். ஆபீசில் வேலை நேரத்தில் மட்டும்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். மற்றபடி வெளியே சென்றால் அவன் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பான்.

நேற்றுக்கூட அப்படித்தான், பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். என் பின்னாடியே வந்து, “வனிதா, உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். சொல்லு வனிதா, என்ன செய்ய வேண்டும்” என்று நச்சரித்தபடியே பின்தொடர்ந்தான்.

எனக்குக் கோபம் வந்து நன்றாகத் திட்டி விட்டேன். சுற்றி இருந்தவர்கள், “ஏம்பா, அந்தப் பொண்ணு அப்படித் திட்டுதே, உனக்கு ரோசம் வரல்லே? இன்னும் ஏன் தொந்திரவு செய்றே” என்று கேட்டார்கள். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?

“என்னைத் திட்டவா செஞ்சா, அவ சொன்னது என் காதில் தேன் போலல்லவா பாய்ந்தது” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான். காதல் பித்து வந்து விட்டால் சொரணை கூடவா போய்விடும்? தலையில் அடித்துக் கொண்டேன். அன்று ஆபீசில் ராகவனிடம் சொல்லி அழுதேன். அவன் எனக்கு ஆறுதல் சொல்லி, “கவலைப் படாதே, நான் இதற்கு ஏதாவது ஒரு வழி பண்ணுகிறேன்” என்றான்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு வாசுவின் தொல்லை தொடரத்தான் செய்தது. அதற்கு அடுத்த நாள், “இன்று சாயந்தரம் நாம் ஒருவரை பார்க்கப் போகிறோம்” என்றான் ராகவன்.

“யாரைப் பார்க்கப் போகிறோம்? போலீஸில் எதுவும் புகார் செய்து இருக்கிறாயா?” என்று கேட்டேன்.

“இல்லை, சிவசங்கரன் என்று ஒருவர் இருக்கிறார். ஆன்மீகத்தைப் பற்றியும், நமது மனத்தின் செயல்பாடுகள் பற்றியும் சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். அவரிடம் இந்தப் பிரச்சினையை சொன்னால் அதற்கு சரியான தீர்வு சொல்வார்” என்றான்.

“ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துபவர் எப்படி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்வார்?” என்று கேட்டேன்.

“அவரிடம் பேசினால் நீயே புரிந்து கொள்வாய்” என்றான்.

அன்று சாயந்தரம் ஆபீஸ் முடிந்ததும் நானும் ராகவனும் சிவசங்கரனைப் பார்க்க கிளம்பினோம். வெள்ளை நிறத்தில் ஒரு பங்களா போன்ற தோற்றத்தில் அமைதியான சூழலில் இருந்தது அந்த கட்டடம். உள்ளே நுழைந்தால் ரிசப்ஷன் போன்ற ஒரு அறையில் வெள்ளை நிற சீருடையில் ஒரு பெண் மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தாள். தன் பெயரையும் சிவசங்கரனைப் பார்க்க வந்திருக்கும் விஷயத்தையும் ராகவன் சொன்னான்.

“இங்கு அமருங்கள். சிறிது நேரத்தில் உங்களை உள்ளே கூப்பிடுவார்கள்” என்றாள் அந்தப் பெண்.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்கள். ரொம்பவும் அமைதியாகவும் மனதிற்கு சந்தோஷம் கொடுக்கக் கூடியதாகவும் அந்த சூழல் இருந்தது. வெள்ளை நிற சுவர்களில் விதவிதமான பெயின்டிங்குகள் தொங்க விடப் பட்டிருந்தன. எதிரே ஒரு பெரிய சைஸில் ஒரு மனிதரின் உருவப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவர்தான் சிவசங்கரனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

“உள்ளே வாருங்கள்” என்று குரல் வந்த திசையை நோக்கினேன். பக்கத்தில் ஒரு அறையின் கதவைத் திறந்து, அதன் நடுவில் நின்றபடி வெள்ளை நிற சீருடையில் இருந்த ஒரு பெண் அழைத்தாள். நானும் ராகவனும் அந்த அறைக்குள் நுழைந்தோம். நன்றாக அலங்கரிக்கப் பட்ட காற்றோட்டமான பெரிய அறை. அதன் ஒரு ஓரத்தில் தரையில் வெள்ளை நிற விரிப்பு. அது ஒரு மெத்தையின் மீது விரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் நடுவில் சம்மணங்கால் இட்டு ஒருவர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். வெளியே அந்த படத்தில் பார்த்த அதே மனிதர்.

உள்ளே அழைத்து வந்த பெண், அந்த விரிப்பின் முன்னால் இருந்த ஒரு பாய் விரிப்பில் அமரச்சொல்லி சைகை காட்டினாள். நானும், ராகவனும் அதில் அமர்ந்தோம். அந்தப் பெண் கதவை மூடி விட்டு வெளியே சென்று விட்டாள். அந்த மனிதரைப் பார்த்தேன். அவர் இன்னும் கண்களைத் திறக்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. ராகவனைப் பார்த்தேன். அவன் அமைதியாக அந்த மனிதரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு ஐந்து நிமிடம் கழித்து கண்களை விழித்து எங்கள் இருவரையும் பார்த்து புன்முறுவல் பூத்தார் சிவசங்கரன்.

“ஐயா, வணக்கம், நான் ராகவன், இது வனிதா” என்று அறிமுகம் செய்தான் ராகவன்.

“வணக்கம்” என்று கைகூப்பியபடி என்னைப் பார்த்தார் சிவசங்கரன்.

“சொல்லுங்க” என்றார்.

“அது வந்து…. எங்க ஆபீஸில் வேலை செய்யும் ஒருவன் என்னை ரொம்பவும் தொந்திரவு செய்கிறான். என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்” என்றேன். அவர் என்னைப் பார்த்து மெல்ல சிரித்தபடி தலையை அசைத்தார்.

“சரி! அழகாக இருந்தாலே இது போன்ற பிரச்சினைகள் வரத்தான் செய்யும்” என்றார்.

இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறாரே! என்று கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும் அவருடைய குரலில் ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது. அவர் சொல்வதை எந்தவித தடையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு உந்துதல் ஏற்பட்டது.

“அவன் இனிமேல் தொந்திரவு செய்யக் கூடாது அல்லவா?” என்றார் என்னைப் பார்த்தபடி.

“ஆமாம், ஐயா! அதற்குத்தான் உங்களைத் தேடி வந்தோம்” என்றான் ராகவன்.

“வனிதா, அவனை உன் மனதில் இருந்து எடுத்து விடு” என்றார். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. ராகவன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“ஐயா, அவன் என் மனதில் இல்லை” என்றேன் அவசரமாக. அதைக் கேட்டு அவர் சிரித்தார். கொஞ்ச நேரம் மௌனம்.

“அவன் உன் மனதில் இருப்பதால்தான், உன்னைத் தொந்திரவு செய்கிறான். அதனால் அவனை உன் மனதில் இருந்து எடுத்து விடு” என்றார் மறுபடியும். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஐயா, நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றான் ராகவன். அவனுக்கு குழப்பமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

“விருப்பும் வெறுப்பும் ஒரே மாதிரியான உணர்ச்சிதான். அதாவது ஒரே உணர்ச்சியின் வேறு வேறு வடிவங்கள்தான். உன் மனதில் உனக்கு விருப்பமானவனாக அவன் இல்லை. ஆனால் உன் வெறுப்புக்கு ஆளானவனாக உன் மனதில் இருக்கிறான். விருப்பம் சில சமயம் வெறுப்பாக மாறும். வெறுப்பும் கூட சில சமயம் விருப்பமாக மாறும். அவன் மேல் உனக்குள்ள வெறுப்பை விட்டு விட்டால் அவன் உன் மனதில் இருந்து அகன்று விடுவான்” என்றார். இப்போது அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது.

“ஐயா, நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன்” என்றேன்.

“நல்லது, இனிமேல் அவன் உன்னைத் தொந்திரவு செய்ய மாட்டான்” என்று புன்னகைத்தார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம். வெளியே இருந்த பெண், “அந்த பெட்டியில் உங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தலாம்” என்று ஒரு பெட்டியைக் காட்டினாள். ராகவன் அதில் இருநூறு ரூபாயை போட்டுவிட்டு வந்தான். போகும் வழியில் ராகவன் என்னிடம், “வெறுப்புக் கூட விருப்பமாக மாறும் என்று இவர் சொல்கிறாரே! அதனால் நீ இனிமேல் அவனைப் பற்றி கொஞ்சமும் நினைக்கவே கூடாது” என்று சொன்னான். அன்று வீட்டுக்குப் போய் நிம்மதியாகத் தூங்கினேன்.

அன்றிலிருந்து வாசுவை என் மனதில் இருந்து அகற்றி விட்டேன். எனக்கே மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு அந்த வாசுவால் எந்த தொந்திரவும் ஏற்படவில்லை. உண்மையிலேயே அந்த சிவசங்கரன் பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிதாக புரிய வைத்து விட்டார். நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நம் மனதில் நிறைந்து இருந்தால் அந்த மாதிரி விஷயங்களையே மேலும் மேலும் நம்மை நோக்கி ஈர்க்கிறோம். அதற்குப் பதிலாக வேறு நல்ல விஷயங்களை நிரப்பி விட்டால் தேவையில்லாத விஷயங்கள் நம்மை விட்டு அகன்று விடும் என்று புரியவைத்த அவர் எனக்கு ஒரு அற்புத மனிதராகத் தெரிந்தார்.

இப்போதெல்லாம் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. தினமும் ஆபீசிற்கு சென்று வருகிறேன். வாசுவும் ஆபீசிற்கு வருகிறான். ஆனால் அவன் எந்தத் தொந்திரவும் செய்வதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் அவனைக் கவனிப்பதே இல்லை. ஒருவேளை அவனே திருந்தி விட்டானோ என்னவோ? அய்யோ, அவனைப் பற்றி நினைக்கவே கூடாது. அவனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. தேவையில்லாமல் நாமே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

இரண்டு வாரம் கழித்து, என்னுடன் வேலை பார்க்கும் ரேவதிக்கு, மாம்பலத்தில் ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடப்பதாக இருந்தது. ஆபீசில் வேலை பார்க்கும் எல்லோரும் காலையில் கல்யாணத்துக்குப் போய்விட்டு, மதியம் ஆபீசுக்கு வரலாம் என்று தீர்மானித்தோம். மாம்பலத்துக்கு மின்சார இரயிலில் போவதுதான் சுலபமானது என்பதால் நான் வீட்டிலிருந்து இரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பினேன். டிக்கெட் எடுக்க க்யூவில் நின்ற போது ஜானகியைப் பார்த்தேன். அவளும் கல்யாணத்துக்குத்தான் வருகிறாள் போலும்.

இரண்டு பேரும் ஒன்றாக இரயிலில் ஏறி அமர்ந்தோம். ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேச்சு வந்தது. திடீரென, “ஏன்டி வனிதா, அந்த வாசு இப்போதெல்லாம் உன்னைத் தொந்திரவு செய்வதில்லையே?” என்றாள் ஜானகி.

“இல்லை, இப்போது அவனுடைய தொந்திரவு எதுவும் இல்லை” என்றேன். இந்தப் பேச்சை இத்தோடு விட்டு விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஜானகி மறுபடி அவனைப் பற்றி பேச்சைச் தொடர்ந்தாள்.

“அவனுக்கு வீடு இந்தப் பக்கம்தான் இருக்கிறது. ஒரு வேளை அவனும் கல்யாணத்துக்கு இந்த இரயிலில் வந்து தொலைக்கப் போகிறான்” என்றாள்.

“சே! சே! அவன் பைக்கில்தானே எங்கேயும் போவான். இரயிலில் எப்படி வருவான்?” என்றேன். ஆனால் மனதிற்குள், ‘ஒருவேளை, இந்த இரயிலில் கூட வருவானோ’ என்ற எண்ணம் ஏனோ தோன்றியது. பயத்துடனே இரயிலுக்குள் திரும்பிப் பார்த்தேன். அய்யோ! மனதில் ஒரு நடுக்கம் உண்டானது. பின்னால் இரண்டு இருக்கை தள்ளி வாசு உட்கார்ந்திருந்தான். நான் பார்ப்பதைக் கவனித்ததும் என்னைப் பார்த்து சிரித்தான். எனக்கு தலை சுற்றல் வந்தது போல் ஆகி விட்டது.

மனம் முழுக்க ஒரு பயம் பரவியது. அவன் வந்து ஏதாவது தொந்திரவு செய்வானோ? அப்படி அவன் செய்தால் என்ன செய்வது? நல்லவேளை, ஜானகியும் கூட இருக்கிறாள். அதனால் கொஞ்சம் தைரியம் வந்தது. பார்த்து விடலாம். அப்படி அவன் ஏதாவது செய்தால் செருப்பைக் கழட்டி அடித்து விட வேண்டியதுதான். மனதின் ஒரு ஓரத்தில் லேசான பயம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

மாம்பலத்தில் இரயிலிலிருந்து இறங்கும் வரை எதுவும் நடக்கவில்லை. அவனிடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக நடந்தேன். கூடவே நடந்து வந்த ஜானகி, “அதோ ராகவன் வந்திருக்கிறான்டி வனிதா” என்று கையைக் காட்டினாள். அங்கே பார்த்த போது ராகவன் நின்று கொண்டிருந்தான். ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. வேகமாக அவனை நோக்கி சென்றேன். ஆனால் அவன் என்னைப் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை.

“நல்லவேளை, நீ வந்தே ராகவன்! அவனிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது” என்றேன்.

“சும்மா நடிக்காதே! இன்னும் நீ அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால்தான் அவனுடன் ஒரே இரயிலில் ஒன்றாக வருகிறாய்” என்றான் ராகவன். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. ராகவனா இப்படி பேசுகிறான்? என்னை சந்தேகப் படுகிறானோ?

“ராகவன், ஏன் இப்படிப் பேசுகிறாய்? இதோ நானும் ஜானகியும் ஒன்றாகத்தான் இரயிலில் வந்தோம். அவன் இந்த இரயிலில் வருவதே எங்களுக்குத் தெரியாது. திடீரென்றுதான் அவனைப் பார்த்தோம்” என்று அவனை சமாதானம் பண்ண முயற்சித்தேன். ஆனால் அவன் திடீரென்று கோபத்தில் கத்தினான்.

“ஓஹோ! இதற்கு அவளும் சப்போர்ட்டா? உன்னை நம்ப முடியவில்லை. நீ மனதில் நினைக்காமல் அவன் எப்படி உன்கூட வருவான். என்னை ஏமாற்ற முடியாது. இனி என் முகத்தில் விழிக்காதே! இனிமேல் நீ யாரோ, நான் யாரோ!” என்று சொல்லி விட்டு கிளம்பி போய் விட்டான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கல்யாணத்துக்கு போகலாமா, வேண்டாமா? என்று ஒரே குழப்பமாக இருந்தது. ஜானகிதான் ஏதேதோ சமாதானம் சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போனாள். இதையெல்லாம் தூரத்திலிருந்து வாசு பார்த்துக் கொண்டிருந்தான். ‘ராகவன் நல்லவனில்லை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே’ என்று அவன் கேட்பது போலிருந்தது.

யாரை நம்புவது? வாசு, ராகவன் இவர்களில் யார் நல்லவன்? எனக்கு அப்போது அதைத் தீர்மானிக்க முடியவில்லை. மனம் சரியில்லாததால் அடுத்த நாள் ஆபிசுக்கு ஒரு வாரம் லீவு போட்டு பெங்களுருவுக்கு பெரியப்பா வீட்டிற்கு சென்று விட்டேன். ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று புரியவில்லை. ஒருவேளை வாசு சொன்னது போல ராகவன் கெட்டவனோ?

மூன்று நாள் பெங்களூரில் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தேன். நான்காவது நாள் ஜானகி போன் பண்ணி என்னோடு பேசினாள். அவள் சொன்ன பிறகுதான் வாசு அமைதியாக மாறியதற்கும், ராகவன் அன்று அப்படி நடந்து கொண்டதற்கும் காரணம் எனக்குப் புரிந்தது.

ராகவனுடன் நான் சிவசங்கரனை பார்க்க போனதற்கு இரண்டு நாள் கழித்து அவனுக்கு வீட்டில் பெண் பார்த்திருக்கிறார்கள். வசதியான பெண் என்பதாலும், ரொம்பவும் அழகான பெண் என்பதாலும் ராகவன் சம்மதம் தெரிவித்து விட்டானாம். ஆனால் என்னை எப்படி தவிர்ப்பது என்று புரியாமல் யோசித்திருக்கிறான். வாசுவுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுமாம்..

வாசு என்மேல் உயிராக இருப்பது அவனுக்குத் தெரியும் என்பதால், அவனே வாசுவைப் பார்த்துப் பேசி இருக்கிறான். அவன் அமைதியானவனாக நடந்து கொண்டால் எனக்கு அவனைப் பிடித்து விடும் என்று சொல்லியிருக்கிறான். அதன் பிறகு நான் மனம் மாறி அவனை ஏற்றுக் கொள்வேன் என்று அவனை நம்ப வைத்திருக்கிறான். பிறகு என்னை விட்டுப் பிரிந்து போக சரியான நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருக்கிறான்.

இரயிலில் வாசுவும் எங்களோடு வந்ததை ஒரு காரணமாக வைத்து சண்டை போட்டு பிரிந்து போய் விட்டான். ஆனால் பாவம் வாசு, என் மீது உள்ள காதலால், அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வரவேண்டுமென்பதற்காக அமைதியானவனாகவே மாறி விட்டான். இப்போது குடிப்பதைக் கூட விட்டு விட்டானாம். உண்மையில் அவன்தான் நல்லவனா? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!

Series Navigationநதியும் நானும்நம்பிக்கை ஒளி! (9)
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *