சுட்டும்… சுடாத மனப் புண்கள்…!

This entry is part 15 of 31 in the series 16 டிசம்பர் 2012
 
 டிசம்பர் மாதக் குளிரும் , பனிக் காற்றும்  மூடிய கண்ணாடி ஜன்னலை தட்டிப் பார்த்து தோற்றது. இருந்தும்  இடுக்கு வழியாக  நுழைந்து கட்டிலில் சுருண்டு படுத்திருந்த வேதவல்லியை குளிர் ஒரு உலுக்கு உலுக்கியது.. நடுங்கியவாறே  வேதவல்லி ….ஷ்….ஆ….என்று கட்டிலில் தேடி விலகிக் கிடந்த கம்பளியை இழுத்துப் போர்த்தியபடி கண்ணை மூடிக் கொண்டாள்.  அறையின் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி மூடிய  கண்களுக்குள்ளும் புகுந்து  எழுப்பி …. “நீ தூங்கினது போதும்”ன்னு  கண்ணுக்குள்ளே காவல் நின்றது. உள்ளம் பளிச்சென்று விழித்து நிமிர்ந்தது..

இப்படித்தான் விடியற்காலை மூணு மணிக்கே வேதவல்லிக்குத்  தலைக்குள் அலார மணி  அடித்து எழுப்பும்.. மனம் அதற்குப் பிடித்த புத்தகப் பக்கங்களைத் திருப்பிப்  படிப்பது போல தானும்  கடந்த காலங்களை  நினைவு படுத்திக் கொண்டே படுத்திருப்பாள் . பதினைந்து வருஷங்கள் முன்னால தன்  மாமியார் இதே இடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்போது இவள்  இருந்த இடத்தில் இப்போது மாலதி, மருமகளாக.

வம்சாவளியும் வாரிசும்  ஒரே வீட்டில் காட்சியை மாற்றி மாற்றி காண்பித்துக் கொண்டிருந்தது. காலம் தான் அசுர வேகத்தில் நகர்ந்து போயிடுத்து. நான் அப்படியே இருக்கப் போறேன்னு அப்போ  நினைச்சேன். இப்ப…மாலதியும் அதையே தானே நினைச்சுண்ட்ருக்கா . மாலதி மேல்  மாமியார் வேதவல்லிக்கு  உதயத்திற்கும் முன்னாடியே உதயமாகிவிடும் கோபமும் எரிச்சலும்.

மாலதி செய்யும் எந்த நல்லதும் மனசுக்குள் ஏறாமல் அவளிடம்  ஏதாவது குத்தம் கண்டு பிடிச்சுண்டே  அவளைத் திட்டி ஒத்திகைப் பார்க்க  உகந்த நேரமாக இந்தக் காலைப் பொழுது  தான்  சுகமாயிருக்கும். வேதவல்லிக்கு. நிஜத்தில் வேதவல்லி ஏதாவது  திட்டினாலும் மாலதி அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ள மாட்டாள். இது வேதவல்லியை இன்னும் ஆத்திரப்படுத்தும்..

இது நித்தம் நடக்கும் திருபள்ளியெழுச்சி  தான். ஒன்றும் புதிது இல்லை. இன்றும்..மங்கிய விளக்கொளியில் சுவற்றில் தன்  மாமியார், மாமனார் , தன்  கணவர் என்று கருப்பு வெள்ளைப் படங்கள் இவளையே கோபத்துடன் முறைத்துப் பார்த்து பயமுறுத்துவது போலிருந்தது வேதவல்லிக்கு… இவர்களோட சேர்ந்து நாற்பது வருஷங்கள் குப்பை கொட்டியது போறாதுன்னு இப்போ அவா போய்ச் சேர்ந்த பின்னாடியும் என் கண் முன்னாடியே படங்களாக மாட்டி வெச்சு தினமும் அவங்க முகத்திலேயே  முழிக்க வைக்கறா மாலதி. என்ன வேண்டியிருக்கு..? நேக்கில்லாத்த கரிசனம்  அவளுக்கு? நான் கேட்டேனா?

எத்தனையோ தடவை மாலதிகிட்ட சொல்லியாச்சு ….இந்தப் படங்களை இங்கேர்ந்து எடுத்துட்டு முருகன் படத்தை மாட்டுன்னு…அவள் கேட்டால் தானே…வாஸ்து படி இங்க இவா படங்கள் தான் இருக்கணும்னு நறுக்குன்னு சொல்லிட்டு ஒரு முழம் பூவை நாலாக் கிள்ளி  படத்தில் சொருகி விட்டு . கூடவே ஊதுபத்தி வேற..காட்டிட்டு போறாள் .பார்த்துக்  கொண்டே இருந்த வேதவல்லிக்கு  பத்திக் கொண்டு வந்தது….”நாளைக்கு நீங்களும் இப்படிப் படமாத் தான் தொங்கப் போறேள்ன்னு  தினம் சொல்லாம சொல்றா மாதிரின்னா இருக்கு”” இவ பண்ணற காரியம்.. நான் சொன்னேனா…இவாளுக்கு பூ வை  பத்தியைக் காட்டுன்னு..அகராதி பிடிச்சவ…படிச்சிருக்கோம்னு உடம்பெல்லாம் திமிர்….வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கறோம்னு கர்வம்.. ஒரு பேச்சு நான் சொன்னாக் கேட்க மாட்டாள். எல்லாம் அவளுக்கே தெரியும்னு ஒரு நினைப்பு…நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு. மனசுக்குள் பொருமித் தீர்க்கிறாள் வேதவல்லி.
.
நான் மட்டும் என்ன சும்மாவா..இருக்கேன் .? அவரோட  ரயில்வே பென்ஷனாக்கும்  மாசம் பொறந்தா  சுளையா பத்தாயிரம் ரூபாய் டாண்ணு  வரது. சொந்த வீட்டிலயே பென்ஷன் இருக்கறதாலத் தான் நிம்மதியா இருக்க முடியறது.  .இல்லாட்டா  எப்பவோ கொண்டு போய் முதியோர் இல்லத்துக்கு தள்ளிருப்பாள் இவள். மூர்த்தியும் அவ சொல்றதுக்கெல்லாம் பூம் பூம் மாடு மாத்ரி தலையாட்டுவான்…ஒரு நாலாவது ஒரு சண்டை சச்சரவு அவாளுக்குள்ளே வரதில்லை அவ என்ன சொல்றாளோ அதே வேதவாக்கா எடுத்துண்டா பிரச்சனை எங்கேர்ந்து வரும்?.அப்படி என்ன தான் மாய மந்திரம் செய்து சொக்குப் பொடி  போட்டு வெச்சிருக்காளோ…மனசுக்குள் பொருமுவாள் வேதவல்லி.

பக்கத்தாத்து பார்வதியை கொஞ்ச நாளா காணறதே இல்லையே…என்னாச்சு அவளுக்குன்னு நேத்திக்கு மாலதியை கேட்டப்போ…அதுவாம்மா……

அவங்களை ஆத்துல பார்த்துக்க யாரும் ஆளில்லைன்னு கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்காளாம் .ரமா..தான் சொன்னாள் ..அவளும் இப்ப வேலைக்கு கிளம்பறாள் …அதான்…..என்று  சர்வ சாதாரணமாக மாலதி சொன்னதைக் கேட்டதும்,

இவ பேசற தொனிலயே தெரிஞ்சது…”நானா  இருக்கக் கொண்டு நீங்க இன்னும் இங்க இருக்கேள்னு ..” சொல்றா மாதிரி.

அட ராமா..! இப்படிப் பண்ணுவாளோ? பார்வதிக்கு  பென்ஷனாவது ஒண்ணாவது ..அதான்…ரமா கடங்காரி வெளிய தள்ளிட்டா..என்று புலம்பிய வேதவல்லியைப்  பார்த்து

“சித்த சும்மா இருக்கேளா..? தெரியாமல் யாரைப் பத்தியும் எதையும் பேசாதேங்கோ….பாவம்..சேரும்..” என்று  சொன்னது தான் தாமதம்.

வேதவல்லி  அழுது ஆகாத்தியம் பண்ணி மூர்த்தி வந்ததும் பாவ புண்ணியத்தைப் பத்தி இவள் எனக்கு என்ன சொல்லித் தரவேண்டி இருக்குங்கறேன்…..வயசு வித்தியாசமில்லையா? ன்னு குதி குதின்னு குதிச்சு .”என்னையும் கொண்டு போய் முதியோர் இல்லத்துல  சேருடா”ன்னு வீட்டை ரெண்டு பண்ணினாள் வேதவல்லி.

நான் மனசுல ஒண்ணையும் வெச்சுண்டு  பேசலை…இதுக்கெல்லாம் நேக்கெங்கே  நேரம்…..? மூர்த்தி ,உங்க அம்மா நேக்கும் அம்மா தான்..அதை புரிஞ்சுக்கோங்கோ நீங்க  என்று ஒரே வார்த்தையில் கணவனின் வாயை அடைத்து விட்டாள்  மாலதி. ஆஃ பீஸ் விட்டுவீட்டுக்கு  வந்தால் நம்ம  அருணுக்கு கணக்குச் சொல்லித் தரவே நேக்கு நேரம் சரியாய் இருக்கு. இதுல வம்புக்கு நிக்க ஏது நேரம்…? ..என்றாள்  மாலதி..

அம்மா…விடேன்….அவள் உன்னை ஒண்ணும் சொல்லியிருக்க  மாட்டாள். எல்லாம் நேக்குத் தெரியும்…ன்னு மூர்த்தி சொல்ல வந்தான்.

மாலதி சொன்னது  தெரியாமல் வேதவல்லி ..தன் .மகனை “பொண்டாட்டியை அடக்க யோக்யதை இல்லை…நீ இப்படி தாசானு தாசனா இருப்பாய்னு நான் கனவுலயும்  நினைக்கலையே…..அடக்குவான்னு பார்த்தால் இப்படி பிள்ளைப் பூச்சியா அடங்கிக் கெடக்கானே…” என்று வருத்தப் பட்டாள் . இப்படியா அவளைத் தலைல தூக்கி வெச்சுண்டு கரகாட்டம் ஆடுவான்…ஆச்சரியமான்னா இருக்கு…! என்று அலுத்துக் கொண்டாள் .

இதே மாதிரி முப்பது வருஷம் முன்னம் தன்  மாமியார் தன பிள்ளையிடம் ஏதோ வேதவல்லியைப் பற்றி சொல்லிக் கொடுக்கப் போய் ….அடுத்த நிமிஷமே….அவர், ஏய்..வேதா இங்க வாடின்னு கத்தியபடி  தலை முடியைக் கொத்தாப் பிடிச்சு ” அப்படியாத் துடுக்காப் பேசின எங்கம்மாவைப்  பார்த்து…உங்காத்துக்குப் போய்த் தொலை…இனிமேல் நீ இங்க இருக்க லாயக்கில்லைன்னு ” கூப்பாடு போட்டவர் …!
அவருக்குப் பிறந்ததைப் பாரு….பெத்தத் தாய் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லாமல்…இப்படி…ஒண்ணா…. ரெண்டா….தொட்டதுக்கெல்லாம் இதே சச்சரவு  தான்.அம்மா….சொல்லச் சொல்ல இங்கே இவர் என்னை அடி உதைன்னு…கொஞ்ச நஞ்ச கஷ்டமாப் பட்டுருக்கேன்..அவருக்கு  அப்பா அம்மான்னா அவ்வளவு மரியாதை . இவன் யாரைக் கொண்டு பொறந்திருக்கான்னே  தெரியலையே..?

நான் அத்தனை கஷ்டத்தையும் தாங்கீண்டு  பிள்ளையை வளர்ந்து இவள் கையில் கொடுப்பேனாம்…இவள் என்னடான்னா எங்கிட்டயே மட்டு மரியாதை இல்லாமல் நடந்துப்பாளா?. நன்னாருக்கு. நான் பட்டதுல ஒரு கால்வாசியாவது இவளுக்கும் தெரிய  வேண்டாமா?  அந்தக் காலம் மாதிரியா இருக்கு..இப்போ…இதே வீடு தான்..இதே அடுக்களை தான்….இத்தனை பெரிய வீட்டைப் பெருக்கி மெழுகி…கோலம் போட்டவள் நான் தானே. இவ நேத்திக்கு வந்தவ….ஒரு பிள்ளையைப்  பெத்துட்டா ,மட்டும் போதுமா….வீட்டுக்கே உரிமை கொண்டாட?  அந்தக் காலம் மாதிரி விறகு அடுப்பும்…ஸ்டவுமா இப்போ இருக்கு. தொட்டதுக்கெல்லாம்  மெஷின்…மகா ராணியாட்டமா சொகுசா  இருக்கா. நான் பட்டா மாதிரி கஷ ஜீவனமா என்ன?.

நானெல்லாம் புருஷன் போனப் பின்னாடியும் மாமியார் கொடுமையைத் தாங்கினேனே . கஷ்டப் பட்டு மூர்த்திக்கு ‘அவரோட’ ரயில்வே வேலையை வாங்கிக் கொடுத்து, அப்பா இல்லாத பொண்ணாச்சே..கஷ்டப்படற  குடும்பம்னு அவன் சொன்னானேன்னு ஒத்தப் பைசா கூட வரதட்சணை வாங்காத இவளைக்  கல்யாணமும் செஞ்சு வெச்சேன். எதுக்காக?  என்னைக்  கடைசி காலத்துல  நன்னா பார்த்துக்குவாள்னு நெனைச்சுத்தானே.? இவ என்னடான்னா வீட்டுக்குள்ள வந்து பத்து வருஷம் கூட முழுசா முடியலை…அதுக்குள்ள  புருஷனைக் கைக்குள்ள போட்டுண்டு…படுத்தற பாடு இருக்கே..நல்ல வேளையா நேக்கு கையும் காலும் நடமாடீண்டு  இருக்கு. வீட்டுக்குள்ளே நடக்க முடியறது …இல்லாட்டா இவ தவிச்ச வாய்க்கு தண்ணி கூடத்  தரமாட்டாள் .

ஆரம்பத்துல நன்னாத் தான் இருந்தாள் .திடீர்னு என்ன  நினைச்சாளோ  என்னமோ… எப்பவும் எனக்கும் திக்கா… காப்பி, நான் கேட்டதும்  டிபன் ,வித விதமா சாப்பாடுன்னு செய்து கொடுத்திண்டு இருந்தவள்….அவ அம்மா தவறிப் போன பிறகு  பிறகு தான் இப்படியெல்லாம் ….அக்க வெள்ளமா ஒரு காப்பி….எப்பப் பாரு ஓட்ஸ் கஞ்சி, கோதுமை கஞ்சின்னு   ஜெயில் கைதி சாப்பாடு போட்டுக் கொல்றா. என்னமோ நான் தான் உயிருக்குப் போராடற மாதிரி கையில் மாத்திரையை கொண்டு வந்து நீட்டீண்டு…நாக்குக்கு ருசியா ஒரு வாய் பச்சைத் தண்ணி கூட குடிக்க விடாமல் ..வெந்நீரை குடுத்து. இதெல்லாம் ஏன் ன்னு அவளைக் கேட்க ஆளில்லை.

அதான் அப்படியே என் பென்ஷன் பணம் முழுதும் விள்ளாமல்  எடுத்துக்கறாளே… வாய்க்கு ருசியா சாப்பாடாவது போடக் கூடாதா? இன்னைக்கு அவன் வரட்டும் கேட்கிறேன்…என்னைக்  கொண்டு போய்  பணம் கட்டி சேர்க்கற முதியோர்  இல்லத்தில்  விடுடான்னு …அவாளாவது நன்னாப் பார்த்துப்பா…இப்படி வாய்க்கும் வயத்துக்கும் வஞ்சனை செய்ய மாட்டான்னு…அவனுக்கு உரைக்கறா மாதிரி சொல்றேன்.

எப்பப் பாரு போனும் கையுமா நிக்கத் தான் இவள் லாயக்கு. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும்? .வேலைக்குப் போனா இவ்வளவு அலங்காரமும், அகங்காரமுமாவா இருக்கணும். இரு…இரு…இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு …பார்க்கறேன்… மனசுக்குள் எங்கேர்ந்தோ ஒரு சந்தோசம் எட்டிப் பார்த்து வேதவல்லிக்கு.

சூரியன் எழுந்திருக்கும் போதே வீட்டில் பிரச்சனையை எழுப்ப ஒத்திகை பார்த்தாள் வேதவல்லி..

இதெல்லாம் படுக்கையில் கிடக்கும் வரையில் தான். மூர்த்தியைப் பார்த்து விட்டால்..போதும்…..இவளது பேச்சு வேறு விதமாக இருக்கும். அவனுக்கே…” நம்ப அம்மாவைப் போல ஒரு நல்ல மாமியார் யாருக்கும் கிடைக்க மாட்டாள்…மாலதி கொடுத்து வெச்சவள் ன்னு நினைப்பான். அந்த அளவுக்குத் தேனொழுகப் பேசுவாள். தன் உள்ளத்துக்குள் இருக்கும் கள்ளம் அவளுக்கு சிறிதும் வெளியே காட்டிக்  கொள்ள மாட்டாள்.
இதெல்லாம் அந்தக் கால ட்ரைனிங்..

அம்மாவுக்கு இன்னைக்காவது லைஃப் சர்டிபிகேட்டு வாங்கணும் அப்போ தான் இந்த மாசம்  பென்ஷன் பணம் தருவாளாம் . சொல்லிக் கொண்டே அடுப்பை ஏற்றி அதில் பாலை வைத்தாள்  மாலதி.. உள்ளிருந்து இருமல் சத்தம் கேட்டதும்….அம்மாவுக்கும் நான் சொன்னது காதில் விழுந்திருக்கும். கொஞ்சம் கிளம்பச் சொல்லுங்கோ. நானே அழைச்சுண்டு போறேன் என்றவள் அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள்.

மாலு …நானும் உங்க கூட வரேனே..நீ மட்டும் தனியாப போய்  என்ன பண்ணுவே பாவம்…மூணு பேருமே போகலாம் .என்றவன் “அம்மா…அம்மா என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் அறைக்குள் சென்றான் மூர்த்தி..

டிசம்பர் குளிருக்கு இதமாக கம்பளிக்குள் புகுந்து நடுங்கிக் கொண்டு இருந்தாள் அம்மா . இதக் குளிரில் கையைக் காலை அசைக்கக் கூட முடியாத  நிலை. எழுபது வயதைக் கடந்த உருவம். மெலிந்து  கிடந்த அம்மாவைப் பார்த்த மூர்த்தி,..அம்மா..வா டாக்டர்ட்ட போயிட்டு வந்துடலாம்…ஒரு லைஃப் சர்டிபிகேட்  வேணுமாம் உன்னோட பென்ஷன் பணம் வாங்க…என்று சொன்னான்.சீக்கிரமாப் போனால் சீக்கிரமா வந்துடலாம்…என்றான்.

டாக்டரை ஆத்துக்கு வரச் சொல்லேன் மூர்த்தி….எனக்கு தள்ளலை …மாலதி ஏந்துண்டு … காப்பி போட்டாச்சோ..? இன்னைக்கு அவளுக்கு வேலைக்குப் போகணமே ..குழந்தை அருணுக்கு  ஒரே ஜலதோஷம்னு  நேத்து சொன்னாளே.. , இப்ப எப்படி இருக்கு..?..தேவலையா? அம்மாவின்  பாசமான குரல் கேட்டதும் , அம்மாவைப் பார்க்கவே பாவமாக இருந்தது மூர்த்திக்கு.

நீ ஏன் இதைப் பத்தியெல்லாம்  கவலைப்படறே… ? .நீ பாட்டுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே… என்று சொல்லிக் கொண்டே காப்பியை ஆற்றி இந்தாம்மா காப்பி…மெல்ல எழுந்திரு…என்று சொன்னவன்.ஒரு மக்கில் தண்ணீரோடு நின்றான்…இந்தா,  வெந்நீர், லேசா வாயை கொப்பளிச்சுக்கோ போதும்..ஒரே குளிரா இருக்கு இல்லையா? .என்று கொடுத்தவனை அம்மா…வாஞ்சையோடு பார்க்கிறாள்.

ஆறிய காப்பியை வாங்கி உறிஞ்சியவள், என்னடா மூர்த்தி… காப்பி கஷாயம் மாதிரி ..ஒரே அக்கவெள்ளம்….நீயே பாரு என்று டம்ப்ளரைத் நீட்டினாள் குரலில் எகத்தாளம் இருந்தது.

அம்மா…..தினம் இதைத் தானே குடிக்கறே இன்னைக்கு என்ன வந்தது…? ஒரு வேளை  உனக்கு நாக்கு சரியில்லையோ என்னமோ..? இதையும் டாக்டர்ட்ட சொல்லலாம்….என்ற மூர்த்தி.. அங்கிருந்து நகர்கிறான்.

ஆமாம்…..நான் ஒண்ணு  சொன்னால் நீ வேற சொல்லு…என்று ஏமாற்றத்தில் வேதவல்லி மகனிடம் எரிந்து விழுந்தாள் .

வர வர உனக்கு எதுக்கெடுத்தாலும் கோபமும், எரிச்சல்லும் தான் வரது…என்று சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்த தன மகனை எழுப்ப அடுத்த அறைக்குள் நுழைந்து கொண்டான் மூர்த்தி. அங்கு அருண்  அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து . இவனை எழுப்பவே அரை மணிநேரமாகும்.என்றபடி மெல்லத் தட்டவும் …..அருண் கண்ணைத திறந்து பார்த்துவிட்டு..”அப்பா. ..இன்னிக்கு ஸ்கூல் வேண்டாம்பா…” என்று வழக்கமா சொல்லும் அதே வார்த்தையை சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.  மூர்த்தியும் மகனை ரசித்தபடி அருணைக் கட்டிக் கொண்டு அவனருகில்  தானும் படுத்துக் கொண்டான்.

நன்னாயிருக்கு மூர்த்தி நீங்க பண்றது…எழுப்பச் சொன்னா  நீங்களும் வந்து படுத்துண்டா எப்படி…? அவன் ஸ்கூலுக்குப் போகணும்…இந்தாங்கோ என்று கையில் காப்பியோடு அறைக்கு வந்த மாலதி…”  அவனுக்கு வயசு எட்டாயாச்சு….இன்னும் நீங்க அவனை எல்.கே.ஜி…யாவே ட்ரீட் பண்றேள்…என்று  சொல்லிவிட்டுப் காப்பி டம்ளரை கையில் திணித்து விட்டுப்  போனாள்  மாலதி.

அம்மா…அம்மா…ரொம்பக் குளிரா இருக்கா..? இந்த ஸ்வெட்டரைப் போட்டுக்கோங்கோ. இன்னிக்கு நீங்களும் வரேள்  பென்ஷன் வாங்க..அப்பறம் அங்கேர்ந்து உங்களை உங்க பழைய ஃப்ரென்ட்  வாசுகி அம்மாவையும் பார்த்துட்டு வந்துடலாம். இல்லாட்டா  அப்படியே ஏதாவது கோயிலுக்குப் போயிட்டு வரலாம். நேக்கு இன்னைக்கு வீக்லி ஆஃப்  தான். லீவு நாள். என்று நிஜமான அன்பாகத் தான் சொன்னாள் மாலதி.

லீவாம்..லீவு..எல்லாம் பொய். பென்ஷன் வாங்கணும்னு லீவு போட்ருப்பா…என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட வேதவல்லி …இதோ நான் ஒண்ணும் எங்கியும் வரலை….ராத்திரி நான் சரியாவே தூங்கலை ….இப்போ தான் தூங்கப் போறேன். என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள் .

அப்போ உங்க ஃ ப்ரெண்டு….வாசுகிம்மா…? என்று ஆசையைக் கிளப்பினாள்  மாலதி.

யாரையும் நேக்குப் பார்க்க வேண்டாம்..என்று ஸ்ட்ரைக் செய்தாள்.

அடம் பிடிக்கும் குழந்தையை சமாதானம் செய்தவது போல கொஞ்சிக் கெஞ்சி ஒருவழியா வேதவல்லியை  அழைத்துக் கொண்டு போய்  நிறுத்தி பென்ஷனை வாங்கியாச்சு.மூர்த்தி கையில் கொடுத்த மூன்று மாத பென்ஷன் பணம்  முப்பதாயிரத்தை மறக்காமல் மாலதி மூர்த்தி அங்கேர்ந்து நேராக ஆஃபீஸ் போகும் முன்பே  கேட்டு வாங்கி தன்  கைப்பைக்குள் போட்டுக் கொண்டதை  பார்த்து விட்டு. கடைத் தேங்காயோ வழிப் பிள்ளயாரோன்னு தான் இருக்கு. எல்லாத்தையும் அவள் கையில் ஒப்படைக்காட்டா என்ன இவனுக்கு. சமத்தே பத்தாது…என்று நினைத்துக் கொள்கிறாள்.

.மாலதியைப் பார்த்ததும் அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது .ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது , மாலதி..நீ நேக்கு தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸ்ல காட்டன் புடவை தானே வாங்கினே..இப்போ இந்தப் பணத்துல ஒரு பட்டுப் புடவை வாங்கிக்கறேன். என்று சந்தடி சாக்கில் சொல்கிறாள் என்றாள் .

இப்பப் போய் யாராவது பட்டுலக் காசைப் போடுவாளோம்மா …?  வேணா இன்னும் ரெண்டு காட்டன் புடவை வாங்கிக்கோங்கோ  அது போதும் என்றாள்  மாலதி.

வேதவல்லி  எந்த பதிலும் சொல்லாமல் மனம் வெதும்பி மௌனம் காத்தாள் . அதில் ஒளிந்திருக்கும் கோபம் தெரிந்தது.

வீட்டு வாசலில் நின்ற ஆட்டோவிலிருந்து மெல்ல இறங்கி நுழையப் போகிறாள் வேதவல்லி…..இந்தக் கட்டைக்கு காட்டன் போதும்னு சொல்றா..பாரேன் திமிரை…என்று நினைத்த படியே நடந்தவள்  அப்படியே கால் தடுக்கி கீழே சறுக்கி  நேராக அங்கிருந்த தலை “ணங்  கென்று கல் தூணில்  இடித்து வாசல் படியில் மயங்கி கண்கள் இருண்டு… வீடே தட்டா மாலையாடுவது போலிருக்க கீழே விழுகிறாள். வேதவல்லி.

ஆட்டோவுக்கு கொடுக்க பணம் எடுத்துக் கொண்டிருந்த மாலதி திடுக்கிட்டு…என்ன சத்தம் என்று பதறிய படியே  வேதவல்லி விழுந்து கிடப்பதைப் பார்த்து, அச்சச்சோ….அம்மா விழுந்துட்டேளா …? எப்படி..? என்று ஓடிச் சென்று  முகத்தில் தண்ணீரைத் தெளித்துப பார்த்து அதிலும் மயக்கம் தெளியாமல் கிடந்தததைப்  பார்த்து பயந்து..பகவானே  என்றபடியே  உடனே அதே ஆட்டோவில்  அப்படியே வேதவல்லியை அலாக்காக  தூக்கி
உட்காரவைத்தபடியே  வேகமா அப்பல்லோ ஹாஸ்பிடலுக்குப்  போப்பா ….. என்றவள் வேகமாக மூர்த்திக்கும் விஷயத்தை  ஃபோனில் சொல்கிறாள்.

இப்படியாகும்னு யார் கண்டா..? இருந்தாலும் இதுக்கும் தயாராத் தான் காஷ்லெஸ் மெடிக்கல் இன்சுரன்ஸ் போட்டுருக்கேன்….ரயில்வே ஹாஸ்பிடல்லாம்  வேண்டாம்…..பேசாம .நீங்க அப்பல்லோக்கு  வந்துடுங்கோ…! கவலையோடு அம்மா..அம்மா….என்று அழைத்துப்  பார்க்கிறாள்.

அடுத்த  கால்மணி நேரத்தில் அவசரப் பிரிவில் வேதவல்லி  அட்மிட் செய்யப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. தலையில் பலத்த அடி…! சி.டி ஸ்கேன் செய்ய  வேண்டும்..என்றெலாம் பேசிக் கொண்டார்கள்..இன்னும் 24 மணி நேரம் சென்றால் தான் நிலைமை என்ன என்று சொல்ல முடியும், என்று டாக்டர் சொன்னதும் மாலதி திடுக்கிட்டாள்  . பாவம் ஆசையாப் பட்டுப் புடவை வேணும்னு கேட்டா….சரின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..என்று நினைத்துக் கொண்டாள் . இன்னும் என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டால். சமயபுரத்து மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு காசு முடிந்து வைத்தாள் .

அதற்குள் மூர்த்தியும் அருணை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து…என்னாச்சு மாலதி…இப்ப அம்மா எப்படி இருக்கா? எப்படி விழுந்தா..என்ற கேள்வியோடு   கவலை தோய்ந்த முகத்துடன் ஒவ்வொரு டாக்டரிடமும் அம்மாக்கு சரியாகுமா? என்று கேட்கவும்…மாலதி அழுது விட்டாள் ..

அருண்..பாட்டிக்கு என்னாச்சுப்பா..? என்று அவனும் அழ ஆரம்பித்தான்.

டாக்டர்  வேதவல்லியை  பரிசோதனை செய்யும் போது ….நல்ல வேளையா இவங்களுக்கு இரத்த அழுத்தமோ சக்கரையோ இல்லை. விழுந்த அதிர்ச்சி தான்…நாட் ஈவன் ப்ளட் கிளாட்..ஒன்னும் கவலையில்லை… …நல்ல ஹெல்தியாத் தான் இருக்காங்க  உங்க வொய்ஃப் சரியான  சமயத்துல ரொம்ப டிலே  பண்ணாமல்  கொண்டு வந்து சேர்த்தாங்க…அவங்களுக்கு ரெஸ்ட் வேணும் என்றபடி  இன்ஜெக்ஷன்  கொடுத்துக் கொண்டே  மூர்த்தியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அரை மயக்கத்தில் டாக்டர் சொல்வதைக்  கேட்ட வேதவல்லிக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பவும்  கண்ணைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் . மனசுக்குள் இப்போ நான் எங்கே இருக்கேன்…நேக்கு என்னாச்சு..? என்று நினைவுகள் சுழன்று கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் வாசனை மனத்துள் ஒரு வித அச்சத்தை வரவழைத்தது. மெல்லிய புகை மண்டலத்தில் மங்கலாக  மூர்த்தியும், மாலதியும்..டாக்டரும் நிழலாகத் தெரிந்தனர்.

எதற்கும் இரண்டு நாட்கள் இங்கேயே இருக்கட்டும்…என்று டாக்டர் சொல்லிவிட்டுப் போகிறார்.வேதவல்லிக்கு  தனி அறையில் சலைன் ஏறிய வண்ணம் இருந்தது.

அம்மா  உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து மூர்த்தியும் மாலதியும்  பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாலதி தான் பேசினாள் ….ஆமாம் மூர்த்தி….டாக்டர் சொன்னது நிஜம் தான். நல்ல சமயத்துக்கு இங்க கொண்டு வந்தோம். இங்க தான் உடனடியா நன்னா ட்ரீட்மென்ட் பண்ணுவா.அம்மா அதிக கனமில்லாமல் இருந்ததால் உடனே யாரையும் எதிர் பார்க்காமல் என்னாலயே  தூக்க முடிஞ்சது.

நேக்கு நம்ம அம்மாவின் உடம்பை முக்கியமா உணவு விஷயத்தில்  கட்டுப் பாடா வைக்க நினைச்சு வெறும் கஞ்சி தான் கொடுக்கறேன்…காப்பி கூட தண்ணியாத் தான் தருவேன். இத்தனை வருஷம் நல்ல திக்கா காப்பி சாப்பிடாச்சு இப்போ உள்ளே ஜீரண உறுப்புக்கு ரெஸ்ட் கொடுத்தால் தான் நல்லது. அம்மாவுக்குப் இதெல்லாம் பிடிக்கலை  தான்.அதுக்காகவெல்லாம் நம்ம ரிஸ்க் எடுக்க முடியுமா?  இவங்க  ஆரோக்கியத்தை நாம கவனமா பார்த்துண்டா  இன்னும் சில வருஷமாவது  நம்மோட இருப்பாங்க இல்லையா?

அதான்….எதுக்கும் இருக்கட்டும்னு மாசா மாசம்  அம்மாவோட பென்ஷன் பணத்தில்  இந்த இன்சூரன்ஸ் கட்டீண்டு  வரேன். இன்னும் தனியா ஒரு தொகை சேர்ந்திருக்கு. நாம ரெண்டு பேர் சம்பளத்தில் பெரிசா என்ன பண்ண முடியும்…? உங்கம்மா இருந்தப்போ கட்டின வீடு…இன்னும் வீட்டை கொஞ்சம் புதுப்பிக்கலாம்னு நினைச்சேன். அதான் தீபாவளிக்கு கூட நல்ல புடவையா வாங்காமல் காட்டன் புடவை வாங்கினேன் பாவம் அம்மாவுக்கு அதுவே ஒரு குறை போல…பட்டுப் புடவை வேணும்னு கேட்டாள்.இப்பத் தோணறது….பட்டுப் புடவை அம்மாவுக்கு ரொம்ப இஷ்டம்,அதையே வாங்கியிருக்கலாம்.

இப்போ டிஸ்சார்ஜ்  ஆகி ஆத்துக்கு போனதும் ஒரு பட்டுப் புடவை  வாங்கிடலாம்…நல்லவேளையா பகவான் புண்ணியத்தில் ஒண்ணுமாகலை . அம்மாவை இனிமேல்  நாம தான் ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்.

நீ இப்படி நன்னாத் தான் யோசிக்கறே..ஆனால் அம்மாக்குத் தான் உன் மேல ஒரு பிரியமே இல்லையோன்னு எனக்குத் தோணறது..  அது எனக்கும் வருத்தம் தான். என்ன செய்ய? நீயாவது புரிஞ்சுக்கோ.

தேன் பாட்டில் மேல விஷம்’னு  எழுதி வெச்சுண்டு குழம்பினா என்னவாகும்…? அது போலத் தான் இதுவும்..எதற்கும் ஒரு காலம் வரும், அது வரைக்கும் பொறுமையாத் தான் காத்திருக்கணும். எப்படியும் ஒரு நாள் புரியாமல் போகாது.

உண்மையான அன்பு இருக்கற இடத்தில் தான் உரிமையும், கோபமும்  இருக்கும் அம்மா அந்த உரிமையில் தான் சொல்றா. நானும் அதே உரிமையில் தான் எடுத்துக்கறேன்…சம்  டைம்ஸ் நான் கூட அதே உரிமையோட எதிர்த்துப் பேசறேன்…என் அம்மாகிட்ட எப்படி இருப்பேனோ அது போலத் தான் உங்க அம்மாவும். நாங்க கஷ்டப் பட்ட நேரத்தில் என்னை ஒண்ணுமே  டிமாண்ட் பண்ணாமல் கல்யாணம் பண்ணி வைக்கலையா.அந்த விஸ்வாசம் எனக்கு  இருக்கும்.  இப்ப ஏதோ ஒரு பாதுகாப்பின்மை..அதனாலத் தான் நானும் யோசிக்கறேன்…இனிமேல் வேலையை ரிசைன் பண்ணிட்டு அம்மாவையும் அருணையும் பார்த்துண்டு இருக்கலாம்னு. சரி தானே…நீங்க என்ன சொல்றேள்..? என்கிறாள் மாலதி..

நல்ல ஐடியா மாலு…..அப்படியே செய்….அப்பறம்   அம்மா ரூமிலிருந்து அந்தப் படங்களை எல்லாம் எடுத்து வேற ரூமுல மாட்டேன்….அம்மா தான் சொல்லச் சொன்னா. ஏதோ செண்டிமெண்ட் போல.

ஓ ….அதுவா…என்கிட்டயும் சொல்லிருக்கா…நம்மோட சேர்ந்து ஒண்ணா வாழ்ந்த ஒருத்தர் இல்லாட்டாலும் அவாளுக்கு நாம அதே மரியாதையைத் தரணும்  இல்லையா..? நம்மள விட உங்கம்மா தான் அவாளோட  ரொம்ப வருஷங்கள் இருந்திருக்கா அதான் அவாளைப் பார்த்துண்டு இருக்கட்டுமேன்னு மாட்டி வெச்சேன். சரி எடுத்துடலாம். அம்மாவும் எனக்கு சொல்லியிருக்கா….உங்க பாட்டி செய்த கொடுமைகளை எல்லாம்….பாவம் அம்மா.

இப்போ இருக்கற தலைமுறை இடைவெளியில் மாமியார் கொடுமை கொஞ்சம் கொஞ்சமா மறைந்சுண்டு வரது …இதுக்கெல்லாம்  யாருக்கு நேரமிருக்கு? இப்போ எல்லாருமே யோகா, மெடிட்டேஷன்  எல்லாம் செய்து அவா அவா மனதை ஆரோக்கியமா வெச்சுக்க பழகறாங்க.. மாமியார் பாங்குல மானேஜரா வேலை பார்ப்பா, மருமகள் பெரிய போஸ்ட்ல வேலை பார்ப்பாள்….இவர்களுக்குள்  எந்த அடிமை படுத்தும் தனம் இருக்காது. ஆரோக்கியமான இடைவெளியோடு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்டு குடும்பத்தை கொண்டு செலுத்துவா இப்போல்லாம் இப்படித் தான் மாறியிருக்கு. இது எல்லா தரப்பிலும்  பரவலா நடந்துண்டு வர விஷயம் தானே…? ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு குறிக்கோளோட வாழறா. இது தான் இப்போதைய ஆரோக்கியமான சமூக முன்னேற்றம்.

ஆனால் மாமியார் கொடுமையை  இன்னும் டிவி சீரியல் மட்டும் தான் கெட்டியாப் பிடிச்சுண்டு  அதை மறக்க விடாமல் ஞாபகப் படுத்தீண்டே இருக்கு…இல்லையா?

வாழப் போற குறிப்பிட்ட கால வாழ்க்கையில் சொந்தம்னு சொல்லிக்க நமக்குன்னு உறவு  வட்டத்துக்குள் ரொம்ப கொஞ்ச பேர் தான் இருப்பா இல்லையா?  அந்த  உறவுகளை சரியாப் புரிஞ்சுக்காம வீட்டை குருக்ஷேத்ரமா பண்ணினால் வேற எங்க போய்  நாம நிம்மதியா வாழ்ந்திட முடியும்.?
வயசுக்கேத்த விவேகம் வேணும்….அவ்ளோதான். .நான் தான் கஷ்டப் பட்டுட்டேன்…ஆனால் நீ கஷ்டப் பட்டுடக் கூடாதுன்னு அன்போட காப்பவள் தான் அம்மா. அந்த விவேகம் வந்துட்டா போதும்… இந்த உலகத்தில் அம்மாட்ட மட்டும் தான் உண்மையான பாசத்தையும் அன்பையும் பார்க்க முடியும்.

என்னோட இந்த வாழ்க்கைல எனக்கு  உறவுன்னு சொல்லிக்க  நீங்க மூணு பேரும் தானே இருக்கேள். உங்களுக்கு அம்மான்னா அவங்க எனக்கும் அம்மா தானே மூர்த்தி. நம்ம அருணுக்கு  பாட்டி ங்கற உறவு இன்னும் நீண்ட காலம் வரை இருக்கணும்னு தான் என்னோட ஆசை. இப்படி பேசிக் கொண்டே நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்தாள்  மாலதி.

படுக்கையில் ஒருக்களித்து படுத்திருந்த .வேதவல்லி……உறங்குவது போல பாவனை செய்தபடியே மாலதி பேசுவதைக்  கேட்டுக் கொண்டிருந்தவளின் மாமியாரின்  மனசாட்சி  குற்றவுணர்வில் கண்ணீரால்  கண்களை மறைக்க..இத்தனை வருஷங்கள் “தேனை விஷமாகவே பார்த்துண்டு  இருந்திருக்கேன்…” அன்னப் பறவை மாதிரி  நல்ல விஷயங்களை மட்டும் கிரஹிச்சுண்டு வாழும் விவேகம் இனிமேல் உன்னிடமிருந்து எனக்கும்…வரவேண்டும் .நினைத்தபடியே மாலதியின் முகத்தைப்  பாசத்தோடு திரும்பிப் பார்க்கிறாள்.

மாலதியின் இதயம் அன்புக் கேடயமாக இருந்ததால் தான் சொல்லம்புகளால் என்றுமே துளைக்க முடியவில்லை என்பதை  உணர்ந்து கொண்டாள்  வேதவல்லி.
———–

Series Navigationபுதிய வருகைமொழிவது சுகம் டிசம்பர் -15-2012 -பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *