உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன். “சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!”
சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் கழிவறைக்குமாக, தனது பென்னாம் பெரிய வயிற்றையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். செல்வாவிற்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது.
சாந்தினி வெளிக்கிடுவதற்கு அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்தவாறே ரெலிவிஷனிற்கு முன்னால் அமர்ந்தான் செல்வா. நேற்றைய தினம் ‘சிற்றியில்’ நடந்த ஊர்வலமொன்று செய்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தது. புதிதாக நாட்டினுள் வருபவர்களுக்கு எதிராக, சுலோகங்களைத் தாங்கியவாறு மெளரி இன மக்களும் வெள்ளையினத்தவர்களுமாகப் போய்க் கொண்டிருந்தனர்.
அடுத்த ‘யுனிட்’டில் வசிக்கும் மாட்ரா கதவைத் தட்டினாள். நிலமையை விசாரித்தாள். சாந்தினியின் வயிற்றை மெதுவாகத் தடவி விட்டு சின்னக் குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளின் கனிவான பேச்சு சாந்தினிக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது. தாங்கள் ‘ஹமில்டன்’ போவதாகவும் டேவிட்டின் மகளின் வீட்டில் இரண்டொரு நாள்கள் தங்கிவிட்டு வருவதாகவும் கூறிச் சென்றாள். டேவிட்டும் அவனது மனைவி மாட்ராவும் எப்போதாவது இப்படிப் போய் தங்கிவிட்டு வருவார்கள். நியுசிலாந்தில் ஹமில்டன் ஆக்லாந்திலிருந்து ஒன்றரை மணித்தியாலம் கார் ஓடும் தூரத்திலுள்ளது.
இவர்களின் வீடு பிரதான சாலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் சிறு பாதையில் இருக்கின்றது. ஒருபுறத்தே மூன்று யுனிட்டுகள் இருந்தன. அதில் முதலாவதில் இவர்களும், அடுத்ததில் டேவிட்டும், மற்றதில் அடிக்கடி மாறிச் செல்லும் மனிதர்களுமாக இருந்தார்கள்.
சிறு பாதையின் எதிர்ப்புறத்தில் இருந்த வீட்டிலிருந்து கிறேஷ் இவர்களின் வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவளது கையில் இருந்த அன்றைய தினசரிப் பேப்பரான ‘நியுசிலாண்ட் ஹெரால்ட்’ இவர்களின் திசை நோக்கிப் படபடத்தது. ஏதாவது இலங்கை சம்பந்தமான தகவல்கள் வந்தால் கொண்டு வந்து காட்டுவாள். அடிக்கடி வருவது நாட்டுப் பிரச்சினைதான். எழுபத்தெட்டு வயதைத் தாண்டிவிட்ட அவள் இன்னமும் துடிப்புடனே காணப்படுகின்றாள். இவர்களுக்குக் கரைச்சல் கொடுக்கக் கூடாது என நினைத்தாளோ தெரியவில்லை, மாட்ராவுடன் கதைத்துவிட்டுத் திரும்பிப் போய் விட்டாள்.
சாந்தினி இரண்டு நாள்களுக்கு முன்பும் ஒருதடவை ‘கிறீன்லேன்’ ஹொஸ்பிட்டல் போய் திரும்பியிருந்தாள். பத்துப்பதினைந்து நிமிட இடைவெளியில் வலி – வந்து வந்து போனால் உடனே வைத்தியசாலைக்கு வரும்படி ஆலோசனை சொல்லியிருந்தார்கள்.
மூன்று மாதமளவில் ‘ஸ்கானிங்’ செய்தபோது என்ன குழந்தை என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றதென்று டாக்டர் சொன்னார். ஸ்கானிங்கில் ‘தெரியவில்லை’ என்று ஆசிய நாட்டவர்களுக்குச் சொன்னால், பெரும்பாலும் பெண் குழந்தைதான். கள்ளிப்பாலின் மகத்துவம் மேற்குநாடுகள்வரை பரவிவிட்டது. கிறேஷ் கூட சாந்தினிக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று அவளின் வயிற்றைப் பார்த்துச் சொன்னாள். குழந்தை எதுவென்றாலும் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். குழந்தை இல்லாமல் ஏங்குபவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்.
“இஞ்சாருங்கோ, நனாவைக் கொஞ்ச நாளாக் காணேல்லை. ஒருக்கா என்னண்டு எட்டிப் பாருங்கோ”
“கிழவி இப்பதான் உதிலை வெளிக்கிட்டபடி ஒரு பேப்பரோடை நிண்டதப்பா. வந்தா எங்கடை நேரத்தைத்தான் கொண்டு போகும்.”
இரண்டு மூன்று நாட்களாக கிழவியின் ஆரவாரம் இல்லைத்தான். இல்லாவிடில் பூங்கன்றுகளுக்கு நீர் வார்ப்பாள் அல்லது வளவிற்குள் அங்குமிங்குமாக நடந்து தான் நாட்டி வைத்திருந்த பூங்கன்றுகளை ரசித்துக் கொண்டிருப்பாள்.
செல்வாவும் சாந்தினியும் இந்த நாட்டிற்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்திலிருந்தே இதே தெருவில்தான் இருக்கின்றார்கள். முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட யுனிட்டில் இருந்தார்கள். வசதி மிகவும் குறைந்த மலிவான வாடகை வீடு. இப்ப அழகான மிகவும் வசதி வாய்ந்த ‘கராஜ்’ கொண்ட யுனிட். இதுவும் வாடகை வீடுதான். அப்போதெல்லாம் வேலை கிடைக்காத காலங்களில் இந்த வீதியால் கடைகளுக்கு நடந்து போய் வந்திருக்கின்றான். ‘இந்த வீடுகளில் இருப்பதற்கு எங்களுக்கும் ஒரு காலம் வராதா?’ என்று மனம் ஏங்கும். அப்படிப்பட்ட வீடொன்றில் இருந்து, இந்தக் கிறேஷ் இரண்டு மூன்று வயது வந்தவர்களையும் போட்டுக் கொண்டு லாவகமாகக் கார் ஓட்டுவாள். வீட்டிற்குள்ளாலேயே கராஜ்ஜிற்குப் போய், ‘றிமோற் கொன்ரோலினால்’ கராஜின் கதவைத் திறந்து கொண்டு காரை எடுத்து வருவாள். அவள் காரில் வரும் அழகை எத்தனையோ தடவைகள் பாதை மருங்கில் நின்று பார்த்திருக்கின்றான்.
கிறேஷ் தன்னை நனா என்று கூப்பிடும்படி முதற்சந்திப்பிலேயே இவர்களிடம் கூறியிருந்தாள். முதற்சந்திப்பு! அது நடந்து ஒரு இரண்டரை வருடங்கள் இருக்கும். இப்பொழுது சற்று முன் நின்றாளே, கையில் பேப்பருடன் இவர்களின் வீட்டை நோக்கியபடி, அப்பிடித்தான் அன்றும் நின்றாள்.
நனாவின் சினேகிதி ஒருத்தி இவர்கள் இருக்கும் வீட்டில் முன்பு இருந்தாள். இப்பொழுது அவள் வயது முதிர்ந்தவர்கள் தங்கும் இடத்தில் இருக்கின்றாள். அவள் அங்கு போக இவர்களுக்கு இந்த வீடு கிடைத்துக் கொண்டது. தினமும், அந்தப் பழைய நினைப்பில்தான் இவர்களின் வீட்டை நோக்கியபடி நனா நிற்கின்றாளா?
நனா தனது வீட்டில் முப்பது வருடங்களாக இருக்கின்றாள். அவளுக்கு நான்கு பிள்ளைகள். நான்கு பேரும் நான்கு வெவ்வேறு திக்குகளில் இருக்கின்றார்கள். இங்குள்ளவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோர்களின் தயவில் தங்கியிருப்பதில்லை. அவர்களுக்கு அரசு பணம் கொடுக்கிறது அல்லது சுயமாகச் சம்பாதிக்கின்றார்கள். ஒருவரும் இன்னொருவர்மீது தங்கியிருக்கத் தேவையில்லை. அது இவர்களின் வாழ்க்கை முறை. அதுவே இந்த நாட்டிலிருக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே நெருக்கம் இல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
“என்ர புருஷன் என்னை விட்டுப் போய் முப்பது வருடங்களாகி விட்டன. அதுக்குப் பிறகு நான் என்ரை பிள்ளைகளை வளர்க்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் போனன். இப்ப அவங்க நாலு பேரும் குடும்பமா நல்ல சந்தோஷமாக இருக்கினம். எப்பவாவது ஈஸ்டர், பிறந்தநாள், மதர்ஸ் டே, கிறிஸ்மஸ் எண்டு வந்து போவினம். அதிலை ஒண்டும் தப்பில்லை” நனா உதடுகள் நடுங்க மெல்லிய குரலில் சொன்னாள். கணவர் இறந்த பின்னும், பிள்ளைகள் வெவேறு இடங்களுக்குப் போன பின்னும் கிழவி யாருக்கும் தலை குனியாமல் ராசாத்தி போல வாழ்கின்றாள். அதற்கு இந்த நாடு உத்தரவாதம் அளிக்கிறது.
“எங்கட நாட்டிலை பெற்றோரைப் பிள்ளைகள் தெய்வமாகத்தான் நினைப்பினம்” என்று சாந்தினி கிழவியை இடைமறித்தாள்.
“உண்மைதான். தேசத்துக்கும் காலத்துக்கும் ஏற்றபடிதானே வாழவேண்டும். எந்தப் பெற்றோரும் எந்த நாளுமே இளமையா இருக்க முடியுமா? முதுமை வரத்தானே செய்யும்! அப்போது எங்கடை வாழ்க்கை முறை சிலவேளை அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்குமல்லவா?”
அவளின் தனிமை பூச்செடிகளும் புத்தகங்களும் கம்பளி உடுப்புகள் பின்னுவதும் இன்னும் பிற சுகமான நினைவுகளுமாகக் கழிகின்றன. இப்பொழுதெல்லாம் நனாவினால் கார் ஓட்ட முடிவதில்லை. காரையும் விற்றுவிட்டாள். கடைகளிற்கும் வைத்தியசாலைக்கும் வாடகைக் காரில் போய் வந்தாள். இடையில் ஒருநாள் – நடு இரவில் அம்புலன்ஸ் ஒன்று அலறிக் கொண்டு வந்து நனாவை ஏற்றிச் சென்றது. இரண்டுநாள்கள் கழித்து திரும்பவும் வீட்டிற்கு வந்த அவள் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டாள். முதுமையை அவள் ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. அவள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி விடுவாள். காலையில் தினசரி பேப்பர் படிப்பாள். இரவில் புத்தகம் படிப்பதும் கம்பளி உடுப்புகள் பின்னுவதையும் வழமையாக வைத்திருந்தாள். இரவு பன்னிரண்டு மணிக்குள் உறங்கவே மாட்டாள். அவளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.
செல்வா வேலைக்குப் போகும் பகல் நேரங்களிலெல்லாம் சாந்தினியின் பொழுதுகள் நனாவுடன்தான். அப்பொழுதெல்லாம் சாந்தினிக்கு நனாவுடன் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கதைக்காவிட்டால் சரிவராது. முதலில் ‘ஹலோ, சீ யூ, பாய் பாய்’ என்று சொல்லித் திரிந்த சாந்தினி, நனாவைச் சந்தித்துப் பழகியதில் ‘ஹவ் ஆ யூ’ போன்ற தொடர் வசனங்களையும் பேசப் பழகிக் கொண்டாள். தினமும் நனா வீட்டிற்குள்ளிருந்து தள்ளாடி வாசலிற்கு வந்து, அங்கிருந்தபடி சாந்தினியை நோக்கி ஒரு “·ப்ளையிங் கிஸ்” விடுவாள். அதைப் பக்குவமாக ஏந்தி இங்கிருந்தபடியே சாந்தினி திரும்பவும் விடுவாள். பொழுது விடிந்து நனா வெளியே வந்தால், ஓடோடிச் சென்று அவளை விழுத்தி விடுமாப் போல் கட்டிப் பிடிப்பாள் சாந்தினி. ஊரிலிருக்கும் தனது அம்மாவைத் தான் கவனிக்கவில்லையே என்ற ஏக்கம், கிழவியில் தணியும்.
இவர்களின் வருகையின் பிற்பாடு நனாவின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. செல்வாவும் சாந்தினியும் விழுந்து விழுந்து நனாவிற்கு உதவி செய்தார்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு தாங்கள் உதவி செய்வதைப் பெருமையாக எண்ணினார்கள். நனாவைக் காரின் முன்சீற்றில் இருத்தி, தானே காரை ஓட்டிச் செல்வதில் சாந்தினிக்கு அலாதிப் பிரியம். ஆரம்பத்தில் இவர்களின் உதவியை நனா எதிர்த்தாள். அவளிற்குத் தானே தன் சொந்தக் காலில் நிற்பதற்குத்தான் பிரியம். சொந்தக் காலில் நிற்பதற்குத்தான் இந்த நாடு சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கின்றது. அந்தப் பாரம்பரியத்தை முறியடித்து இவர்கள் வெற்றி கொண்டார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அவளைக் கடைகளுக்குக் கூட்டிச் சென்றார்கள். “பாத்தியளே, ஒரு வெள்ளையை எங்கட பக்கம் திருப்பி விட்டோமே!” என்றாள் வீறாப்பாக சாந்தினி. நனாவுடன் பழகுவதால் நுனி நாக்கில் ‘இங்கிலிஸ்’ தவழுகின்றது என்றாள். நனாவிற்குக் காலில் புண் என்றால் இவர்களுக்குக் கழுத்திலே நெறி போட்டது போல. “·ப்ளையிங் கிஸ்”கள் வீட்டிற்கு வீடு பறந்தன.
சாந்தினி கர்ப்பமானாள். அதன் பின்பு சாந்தினியும் நனாவும் தினமும் கொஞ்சத்தூரம் நடை பழகினார்கள். இப்போது இரண்டு பேரினதும் நடை ஒரே மாதிரித்தான். தள்ளாத வயதில் கிழவியும், வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்கும் சாந்தினியையும் ஒரு சேரப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வாசலில் வந்து, இடுப்பை ஒரு புறமாகச் சரித்துக் கொண்டு “நான் ரெடி” என்றாள் சாந்தினி. வீட்டை விட்டு வெளிக்கிடுகையில் ரெலிபோன் அடித்தது. ஆராவது நண்பர்கள் அல்லது மாமாவாக இருக்கலாம் என்றாள் சாந்தினி. சற்று நேரம் தாமதித்துப் போகலாம் என்று நின்று கொண்டார்கள். ரெலிபோன் மீண்டும் அடித்தது. றிசீவரைத் தூக்கும்போது ‘படக்’ என்று மறுமுனையில் அடித்து வைக்கப்பட்டது.
“உது அவங்கடை வேலைதான்” என்றாள் சாந்தினி. கொஞ்ச நாட்களாக நாட்டில் கள்வர்களின் திருவிளையாடல்கள் அதிகரித்துவிட்டன. போனகிழமை தியேட்டரில் நல்ல ‘த்ரில்’ படம் ஓடியது. தமிழில் ‘த்ரில்’ படம். படம் பார்த்துவிட்டு குலை நடுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தவர்களில் பலருக்கு கள்வர்கள் ‘த்ரில்’ காட்டியிருந்தார்கள். தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றம் நாட்டில் வெகுவாகத்தான் முன்னேறிவிட்டது.
செல்வா நாட்டிற்கு வந்த புதிதில் பஸ்சினில் ‘கிளின் இனிங்ஸ்’ போய் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி வருவான். பஸ்சிற்கு போக வர இரண்டு டொலர் போதும். வீடு வந்தவுடன் பஸ்சினிலிருந்து பொருள்களை இறக்கி, வரிசையாக நிற்கும் ‘போஸ்ற் பொக்ஸ்’ அருகில் வைத்துவிட்டு, ஒவ்வொன்றாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுவான். பிரதான வீதியிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் சிறுபாதை வழியாக நேராக நடந்து போனால் வீடு வரும். சிலவேளைகளில் கொஞ்சப் பொருள்களை எடுத்துக் கொண்டுபோய் வீட்டினில் வைத்துவிட்டு, களைப்பாறி தேநீர் குடித்துவிட்டு மீண்டும் போய் மிகுதிப் பொருள்களை எடுத்து வந்திருக்கின்றான். அவ்வளவிற்கு அப்போதெல்லாம் பயம் இருக்கவில்லை. இப்போது ஒரு குடையை வைத்துவிட்டு வந்தாலும் அந்த இடத்தில் பத்திரமாக இருக்காது.
“என்ன உதுக்குப்போய் கடுமையா யோசிக்கிறியள். நனா வீட்டை வடிவாப் பாத்துக் கொள்ளுவா. எதுக்கும் அவவிட்டை ஒருக்காச் சொல்லிப் போட்டுப் போனால் நல்லது” என்றாள் சாந்தினி.
செல்வா நனாவின் வீட்டிற்கு ஓடினான். அப்பொழுது நனா பேசி தனது நேரத்தை வீண்டித்துவிடுவாள் என்ற எண்ணம் தோன்றவில்லை. தேவை என்ற ஒன்று வரும்போது மனம் ஓடத்தான் செய்கின்றது. நனா வீட்டில் இருக்கவில்லை.
“கிழவி பூசி மினுக்கிக் கொண்டு எங்கையோ போயிட்டுது” ஏமாறத்துடன் செல்வா சொன்னான்.
“இப்ப என்ன லட்சமா எங்கடை வீட்டிலை கொட்டிக் கிடக்கு. வாங்க போவம்” என்று இழுத்தாள் சாந்தினி.
சொன்னா என்ன, சொல்லாட்டி என்ன நனா வீட்டைப் பார்த்துக் கொள்ளுவாள் என்ற தைரியத்தில் வீட்டைப் பூட்டிக் கொண்டு காரை தெருவிற்குள் செலுத்தினான் செல்வா.
*** *** ***
வைத்தியசாலையில் ஒன்றும் குழந்தை சுகமாகப் பிறந்து விடவில்லை. சாந்தினிக்கு முதலில் ஏதோ களிம்பு பூசினார்கள். பின் முள்ளந்தண்டில் ஊசி ஏற்றினார்கள். அதற்கும் சரிவராவிடில் ‘சிசேரியன்’ என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்த அறையில் இருந்த ‘மெளரி’ இனப்பெண்ணிற்கு குழந்தை பிறந்திருக்க வேண்டும். அவர்களின் அறை ஒரே ஆரவாரமாக இருந்தது. திபுக்குத் திபுக்கு என்று பெரிய உருவங்களில் அவளின் உறவினர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருந்தார்கள்.
என்னதான் இருந்தாலும் குழந்தை பிறக்கும் போது, அந்தக் குழந்தையின் தந்தை ‘டெலிவரி றூமிற்குள்’ உடன் இருந்தாக வேண்டும் என்பதும் தொப்புள் கொடியை அவனே வெட்ட வேண்டும் என்பதும் செல்வாவின் மனதை நெருடத்தான் செய்தது.
மதியம் வந்தவர்களுக்கு, இரவு ஏழு மணியளவில் குழந்தை கிடைத்தது. சுகப் பிரசவம். பெண் குழந்தை. செல்வா உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ரெலிபோன் செய்தான். நனாவையும் டேவிட்டையும் ரெலிபோனில் பிடிக்க முடியவில்லை. நேரம் இருட்டி விட்டபடியால் மாமாவின் குடும்பம் மாத்திரம் அடித்துப் பிடித்துக் கொண்டு எட்டு மணிக்குள் வந்து சேர்ந்தார்கள். மாமி குடு குடுவென்று நடந்து வந்து, கொண்டு வந்த பொக்கிசத்தை சாந்தியின் கண் பார்வைக்குக் கிட்ட வைத்தாள்.
செல்வா வந்தவர்களுக்கு ‘சொக்லேற்’ கொடுத்தான். மாமாவிற்கு ஏழு வயதில் ஒரு பெண்ணும் ஐந்து வயதில் ஒரு ஆணும் இருந்தார்கள். அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக ஓடித் திரிந்தார்கள். பெண் ‘சொக்லேற்றைச்’ சாப்பிட்டுவிட்டு பேப்பரை தவறுதலாக வாசலில் போட்டு விட்டாள். இதை அவதானித்துக் கொண்டிருந்த மெளரி மனிதன் ஒருவன் அதை எடுத்து குப்பைத் தொட்டியினுள் போடும்படி அவளிடம் சொன்னான்.
“தாங்கள் படு குப்பை. அடுத்தவருக்கு சுத்தத்தைப் பற்றிச் சொல்லித் தர வந்திட்டினம்” என்று கோபத்துடன் புறுபுறுத்தான் செல்வா.
“அவையள் தங்கட வீட்டைக் குப்பையா வைச்சிருந்தாலும், நாட்டை நல்ல வடிவாகத் தான் வைச்சிருக்கினம்” மகள் செய்ததுதான் பிழை என ஒத்துக் கொண்டார் மாமா.
“தம்பி செல்வா! இண்டைக்குப் பேப்பர் பாத்தனீரோ?”
“இல்லை மாமா. எங்கை எனக்கு நேரம். ஏன் என்ன புதினம்?”
“புதிசா நாட்டுக்கை வாற ‘ஏசியன்ஸ்’ பற்றி ஏதோவெல்லாம் உளறித் தள்ளியிருக்கிறார்” எங்கடை பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்.
“துவங்கிவிட்டினம் அரசியல். உதுகளைப் போட்டிட்டு இஞ்சை வந்து குழந்தையைப் பாருங்கோ” என்று மாமி கத்தினாள். மாமா தொட்டிலைச் சுற்றிச் சுற்றி வந்து குழந்தையைப் பார்த்தார்.
“காது கொஞ்சம் கறுப்பாக் கிடக்கு. இக்கணம் கறுப்பிச்சியா வருவாளோ?” என்று சமசியப்பட்டார்.
“ஏழெட்டு வருஷமாப் பிள்ளையில்லாமல் தவமாய்த் தவமிருந்து பெத்திருக்குதுகள். இவருக்குக் கறுப்பும் சிவப்பும்.”
“எனக்குத் தெரிஞ்சு, பிள்ளையில்லாமல் வந்த கனபேருக்கு இஞ்சை பிள்ளை பிறந்திருக்கு. அதுக்கு நியூசிலாந்துச் சுவாத்தியமும் ஒரு காரணம் எண்டு நினைக்கிறன்” என்று மேலும் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார் மாமா.
சற்று முன் குதூகலித்த அறை இப்பொழுது வெறிச்சோடிப் போயிருந்தது. சாந்தினியும் குழந்தையும் களைப்பு மிகுதியினால் உறங்கிப் போயிருந்தனர். செல்வா இரவு அங்கேயே தங்குவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
இளைப்பாறும் அறைக்குள் ரி.வி, செய்தித்தாள் பார்ப்பதும், மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதுமாக அவன் பொழுதுகள் கரைந்தன. அடுத்த அறைக்குரிய மெளரி மனிதன் இளைப்பாறும் அறைக்குள் இருந்து அன்றைய தினசரியை விடுத்து விடுத்துப் பார்த்துவிட்டு செல்வாவிடம் நீட்டினான்.
“முற்றிலும் வேறுபட்ட மொழி மற்றும் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் அளவுக்கு மீறி, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போவதானது அந்த நாட்டில் பாரிய தாக்கங்களை ஏற்படு த்துகின்றது. இதனால் சமூக கலாசார ரீதிகளில் நியூசிலாந்தவர்கள் இன்று, வந்தேறு குடிகளைக் கண்டு பயப்படுகின்றார்கள்” என்று கூறியிருந்தார் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்.
“நியூசிலாந்தவர்களில் அதிக தொகையினரால் ஆசிய மக்களை சகிக்க முடியவில்லை. இதற்கு எதிராக இனத்துவ இணக்கத்தைப் பரப்பும் செய்திகளை மனித உரிமைகள் ஆணையம் எடுத்து வரு கின்றது. மேலும் வயோதிபர்களே அதிகம் வாழும் எமது நாட்டில் தொழில் செய்யக்கூடியவர்கள் தொகை குறைந்து வருகின்றது. போதுமான வருமானம் வேண்டும். இங்கு வருவோரின் வாழ்வை வளமாக்குவதில் நாம் முன்னிற்க வேண்டும்” என்கின்றனர் இனங்களுக்கிடையே சமூகநிலை பற்றி ஆராய்ந்தவர்கள்.
செல்வா மேலோட்டமாக அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு அந்த மனிதனை நிமிர்ந்து நோக்கினான்.
“உங்களுக்குக் குழந்தை பிறந்ததில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். அந்தக் கேள்வி மெளரி மனிதனை விசனத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும்.
“இது என்னுடைய மூன்றாவது குழந்தை. எனது மனைவிக்கு ஏகப்பட்ட வருத்தங்கள். என்றாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன். எவருக்கும் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியைத்தான் குடுக்கும்.” என்றான் கோபத்துடன்.
“அப்படியெண்டால் இந்த நாட்டிற்குப் புதிதாக வரும் மனிதர்களை ஏன் நீங்கள் வெறுக்கின்றீர்கள்?”
“அது வேறை, இது வேறை!”
“எப்படி வேறாகும்?”
“குழந்தைகள் எல்லா விஷயத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு பிறப்பதில்லையே!” பெரிதாக ஏதோ தத்துவத்தைச் சொன்னவன் போல முகத்தைத் தடவிக் கொண்டான் அவன்.
“இஞ்சை பாருங்கள். உங்களுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். உண்மையில் இந்த நாடு எங்களுடையது. ‘வைற் பீப்பிள்’ இந்த நாட்டைப் பிடித்தவுடன் நாங்கள் இரண்டாம்தரப் பிரஜைகள் ஆகி விட்டோம்.”
“அப்பிடித்தான் எங்களுக்கும் நடந்தது. நாங்களும் எமது நாட்டினில் இப்பொழுது இரண்டாம்தரப் பிரஜைகள்தான்”
“இப்பொழுது தெரிகின்றதல்லவா புதியவர்களின் வருகையை நாம் ஏன் எதிர்க்கின்றோம் என்று. எங்கடை மக்களுக்கே இஞ்சை வேலையில்லாமல் இருக்கு. புதிதாக வருபவர்களும் இங்கு வந்து சுரண்டுகின்றார்கள்.”
இளைப்பாறும் அறை வாசல்வரை சாந்தினி மெதுவாக நடந்து வந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்.
“நான் வீட்டிற்குப் போக வேண்டும். போய் வருகின்றேன்” என்று விடைபெற்றுக் கொண்டான் அந்த மெளரி மனிதன்.
“ஆரப்பா உந்த மனிசன்? பாக்கப் பயமாக் கிடக்கு” என்று சாந்தினி கேட்டு வாய் மூடுவதற்குள், அந்த மெளரி மனிதன் திரும்பி வந்து செல்வாவின் தோளினில் கை பதித்தான்.
“இங்கு குடியேறுபவர்கள் நியூசிலாந்தவரை புரிந்து அறிந்து நடக்க வேண்டும். அதே போல நியூசிலாந்தவரும் புதிதாய் வருவோர்மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்” என்று சொல்லிவிட்டு தன் பாட்டில் நடந்து போனான்.
*** *** ***
இரு நாட்களின் பின்பு ஒரு மதியம் வீடு திரும்பியிருந்தார்கள். எல்லா வேலைகளையும் முடித்து ஓய்ந்து போயிருந்த வேளையில் ‘இஞ்சாருங்கோ’ என இராகமிழுத்தாள் சாந்தினி.
“இஞ்சாருங்கோ, நனா இன்னும் வந்து எங்கடை பிள்ளையைப் பாக்கேல்ல. ஏதேனும் எங்களோடை கோபமோ?”
“நனாவுக்கு நாங்கள் வந்தது இன்னமும் தெரியாமல் இருக்கலாம். ஒருக்கால் சொன்னால் நல்லது.”
“அச்சாப் பிள்ளையல்லே! ஓடிப்போய் ஒருக்கா சொல்லிப்போட்டு வாங்கோ”
செல்வா நனாவின் வீட்டிற்கு ஜெற் போல ஓடினான். பெல்’லை அழுத்தினான். வீடு பயங்கர அமைதியில் சூழ்ந்திருந்தது. உள்ளே எந்தவித சலனமும் இல்லை. ஒருவேளை உள்ளே கிழவி இல்லையோ? கதவைக் கைகளினால் பலமாகத் தட்டினான். இவனது செய்கையை அவதானித்த டேவிட் தானும் கிழவியின் வீட்டிற்கு வந்தான்.
“காலமை நானும் பாத்தனான். கிறேஷைக் காணேல்ல. எங்கேனும் தூரத்திற்குப் போயிருப்பாளோ?” என்று சொல்லிக் கொண்டே வீட்டைச் சுற்றி ஒருமுறை பார்த்தான் டேவிட். ஜன்னல் ஒன்று சிறிது நீக்கியிருந்தது. அதற்குள் முகத்தைப் புதைத்து உள்ளே நோட்டமிட்டான். ஏதோ சந்தேகம் கொண்டவனாக தனது வீட்டிற்கு விறுவிறெண்டு அடியெடுத்து வைத்தான்.
“பொலிசைக் கூப்பிடுவம்!”
பொலிஸ் வந்தது. தனது திறப்புக் கோர்வையினால் கதவின் துவாரத்தை நோண்டினார்கள். கதவு திறந்து கொண்டது.
கிழவி அழகாக அன்றலர்ந்த தாமரை போலக் கதிரையில் இருந்தாள். அவளிற்குப் பக்கத்தில் இருந்த ‘ஹொவி ரேபிள்’ என்னும் கோப்பி மேசையில் குடித்து முடிக்கப்பட்ட தேநீர்க் கோப்பை ஒன்று கிடந்தது. தேநீரின் மயக்கத்தில் விழுந்து இறந்து போய்விட்ட ஒரு பூச்சியை எறும்புக்கூட்டமொன்று இழுத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் ‘நியுசிலாண்ட் ஹெரால்ட்’ பேப்பர் விரித்தபடி, புதியவர்களின் வரவினால் நாட்டினில் ஏற்படும் அவலத்தைக் காட்டியபடி கிடந்தது. அதற்கும் மேலே பின்னிமுடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் குளிர் உடுப்பு ஒன்று இருந்தது. செல்வா அந்தக் குளிர் உடுப்பைத் தூக்கிப் பார்த்தான். அதற்குள்ளிருந்து ஒரு ‘காட்’ கீழே விழுந்தது.
“ஒன்றையும் தொடாதீர்கள்” என்று வந்த பொலிஸ்காரர்களில் ஒருவன் சத்தமிட்டான்.
ஆனாலும் அந்த விழுந்து கிடந்த அந்த அட்டையில், அழகாகச் சிரித்தபடி இருக்கும் பெண் குழந்தையின் படத்தையும் ‘For new born baby’ என்று எழுதிக் கிடந்ததையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது.
———————–
- பழங்கால திருமண வழக்கங்களிலிருந்து விடைபெற விரும்பும் ஆப்கானிஸ்தான்.
- சாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால்
- ஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்
- மாறும் வாழ்க்கை – செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது சிங்கம்
- ஓய்ந்த அலைகள்
- எல்லைக்கோடு
- வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை
- வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -7
- நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது
- ஜெய்கிந்த் செண்பகராமன்
- புரிதல்
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2
- புதிய வருகை
- சுட்டும்… சுடாத மனப் புண்கள்…!
- மொழிவது சுகம் டிசம்பர் -15-2012 -பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்
- அக்னிப்பிரவேசம்-14
- கனவுகண்டேன் மனோன்மணியே…
- 101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )
- தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு
- பொறுப்பு
- சுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’
- திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் : கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 நாள்களில்
- இரு கவரிமான்கள் – 1
- இணைய தளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா
- வாழ்வே தவமாய்!
- முனகிக் கிடக்கும் வீடு
- புத்தாக்கம்
- ஓ! அழக்கொண்ட எல்லாம்?