1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு
பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும், கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும் ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை. பூமணியின் தேர்வைத் தமிழ்ப் படைப்புலகம் ஒருமனதாக ஆதரிக்குமென நினைக்கிறேன். பிரான்சைத் தவிர்த்த பிறநாடுகளுக்கான பிரெஞ்சுமொழி படைப்புக்குரிய பரிசு ஹைத்தி எழுத்தாளர் ‘Lyonel Trouillot ‘ எழுதியுள்ள ‘La Belle amour humaine’ என்ற நாவலுக்குக் கிடைத்திருக்கிறது.
2. மனித நேயம் (La Belle Amour Humaine) லியொனெல் ட்ரூயோ (Lyonel Trouillot) – தருமபுரி – மாதவ் சவாண்.
‘La Belle amour humaine’ நாவலுக்கு கீதாஞ்சலி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 2011ம் ஆண்டு பிரான்சுநாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசெனக் கருதப்படுகிற கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்று பின்னர் வெற்றிவாய்ப்பை இழந்த படைப்பு. நூலாசிரியர் பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர். ‘La Belle Amour Humaine’ என்ற நூலின் பெயரை ‘மனித நேயம்’ என பொருள்கொள்ளலாம். பெரும் மழைக்குப்பிறகு வெள்ளத்தில் மூழ்கியும் மூழ்காமலுமிருக்கிற விளைச்சல் நிலத்தை பார்க்கும் விவசாயிபோல நூலாசிரியர் மானுட வாழ்க்கையைக் துண்டு காட்சிகளாக கதைக்குள் கதையாக விவரித்து செல்கிறார். இந்த உலகத்திற்கு நம்மால் செய்யக்கூடியதென்ன? என்ற கேள்வி இலைமறைகாயாக புனைவெங்கும் கண்பொத்தி விளையாடுகிறது. எல்லா மனிதருக்குள்ளும் இது பற்றிய பிரக்ஞையிருப்பின் பாவ புண்ணியங்கள் பொருளிழந்திருக்கக்கூடும். கடவுள்களுக்கும் அவசியமில்லை.
ஆஸ் -அ- ·பொலெர் ஒரு கடற்கரை குப்பம், மீனவர்கள் அதிகம் வாழும் ஊர். அவ்வூரில் இரண்டு பேர் காட்டுதர்பார் நடத்துகிறார்கள். ஒருவர் பியர் ஆந்தரே- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி- முன்னாள் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ராணுவ அகாதமியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவையெல்லாம் கொழுப்புகளாக உடலில் தங்கியிருக்கின்றன. தரித்த ராணுவ சீருடையும், வகித்த பதவிகளும் ‘தான் சாதாரணன் அல்ல’ என்கிற மனப்பாங்கை அவரிடத்தில் வளர்த்தெடுந்திருந்தது. தனது பிறப்பும் வாழ்க்கையும் பிறரை அடக்கி ஆள, தண்டிக்க, வதைசெய்ய என நினைக்கும் ஆசாமி. இரண்டாவது நபர் ஒரு பயண முகவர், சில நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிற நிழலான ஆசாமி. கடத்தல் தொழிலும், கலப்படத் தொழிலும் அவருக்குப் பணத்தைக் குவிக்க உதவுகின்றன. பார்க்க சாது, ஆனால் பரம அய்யோக்கியன். அகத்தில் பேதமற்ற இரண்டு மனிதர்கள் இருவகையில் செயல்படுகிறவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். ஒருநாள் இரவு நடந்த தீ விபத்தில் இருவரின் வில்லாக்களும் உடமைகளும் தீக்கிரையாக, சாம்பல் பட்டுமே மிஞ்சுகிறது. தொழிலதிபரின் பேர்த்தி அனெஸ் என்பவள் தீவிபத்திற்குப் பிறகு காண்மாற்போன தனது தாத்தாவைத் தேடி அக்கடற்கரை ஊருக்கு வருகிறாள். கதைசொல்லியான தாமஸ் அவளை வரவேற்கிறான், இருக்க இடத்தையும் கொடுத்து, சிறுகச் சிறுக அப்பெண்ணை கிராம மனிதர்களிடை நடத்திச் செல்கிறான். சொற்பிரவாகமெடுத்து கதை நீள, அனெஸ்ஸ¤டன் கதைமணலில் நாமும் புதைகிறோம். “இங்கே அதிகாலையியில் கண் விழிக்கிறபோதே யுத்தத்திற்கு எங்களை தயார்செய்து கொள்ளவேண்டிய கட்டாயம், தவறினால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமல்ல’; “எங்கள் தீவில் பறவை வேட்டைபோன்றதே ரொட்டிக்கான வேட்டையும், எல்லோருக்கும் கிடைக்கச் சாத்தியமில்லாததால், குறிதப்பிய ரொட்டிக்காக போடும் கூச்சலே எங்கள் நம்பிக்கை” போன்றவரிகளிலிருக்கும் சத்தியம் இந்தியாவிற்கும் பொருந்தகூடியது. ஆஸ் -அ- ·பொலெர் சபிக்கப்பட்டதா? கதை சொல்லி மறுக்கிறான். அதற்கான காரனத்தையும் சொல்கிறான். நாவலுக்குப் பரிசளித்ததை நியாயப்படுத்தும் பகுதிகள் இதற்குப்பின்னேதான் வருகின்றன. ‘தாமஸ்’ நாவலாசிரியன், ‘அனெஸ்’ வேறுயாருமல்ல நூலை வாசிக்கிற நாம். அல்லது தன்னைத் தவிர்த்து பிறரை குற்றவாளியாக விமர்சித்துப் பழகிய மனிதர்கள். மனிதர்கள் கறுப்போ வெள்ளையோ, அதிகார கூட்டமோ தரித்திரர்களோ, மேற்கத்திய நாடுகளோ மூன்றாம் உலக நாடுகளோ எவராயினும் ஒருவர் மற்றவக்கு அந்நியர். எனக்கு எதிரே உள்ளவன் விரோதி, கடித்துக் குதற காத்திருக்கிறோம், காரணம் தேடுகிறோம்.
ஊழலுக்கு ஒழுங்கின்மைக்கும், உலக நாடுகளுக்குச் சவால் விடும் இந்தியாவின் குணங்களை உறுதிபடுத்துவதுபோல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் செய்திகளை வாசித்து அலுப்புறும் நம்மைச் சமாதானமெய்வதுபோன்று அண்மையில் செய்தியொன்றைப் பிரெஞ்சு தினசரியொன்றில்( Le Monde) வாசித்தேன். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர்வரை தன்னலமற்று உழைக்கிற மனிதர்கள் இல்லாமலில்லை. மனிதர் நெருக்கடியில் பிதுங்கும் மும்பையில் இயங்குகிறது மாதவ் சவாணுடைய தொண்டு நிறுவனம். கிட்டத்தட்ட 80000 பரந்த உள்ளங்கொண்ட தொண்டர்கள் அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றுகிறார்களாம். ‘தற்குறிகளுக்கு எழுதப் படிக்க கற்றுதருவதன்மூலம் மார்க்சியத்திற்கு ஈடானப் புரட்சியை நடத்திக் காட்ட முடியுமென உறுதியளிக்கிறார். மாதவ் சவாண் குடும்பம் இடதுசாரி சிந்தனையைச் சுவாசித்து வந்த குடும்பம். தந்தையும் அவரது தோழர்களும் நாள்முழுக்க பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரையாடலை மாதவ் சவாண் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். இளம் வயதில், இந்தித் திரைப்பட பாடல்களின் மெட்டில் புரட்சிகீதங்களை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். பொதுவுடமைக் கருத்தியத்தில் நாட்டம் கொண்டிருந்த சவாண் வேதி இயலில் உயர்கல்வி படிப்பதற்குத் தேர்வு செய்த நாடு அமெரிக்கா. ‘மார்க்ஸ் மூலதன நூலை எழுத இங்கிலாந்து காரணமானதைப்போல எனது பொதுவுடமைச் சித்தாந்தத்தை வலுப்படுத்த அமெரிக்க சூழல் உதவுமென நம்பினேன்’, என வேடிக்கையாகக்கூறுகிறார். இந்தியா திரும்பியதும் லெனினுடைய அறிவு மெய்மையியலில் (Epistémologie) காதலுற்றதன் பலனாக அமெரிக்க வேதியியல் கசக்கிறது. “தவறான வழிமுறை சிக்கல்களிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களைத் தேடுவதற்கு நேரத்தைச் செலவிடுவதினும் பார்க்க, மாற்று வழிமுறைகளைத் தேடுவதில் நன்மையுண்டு’ என்ற லெலினுடையக் கருத்து அவரை யோசிக்கவைத்தது. அதன் விளைவாக ‘பிரதாம்’ என்ற அமைப்பு பிறக்கிறது. மதாவ் சவானின் தொண்டர்கள் நகரத்தின் ஒதுக்குப்புறமான, கவனிப்பாரற்ற மக்களைத் தேடி ஒவ்வொரு நாளும் செல்கிறார்கள்; அவர்களுக்கான கல்வித்தேவையை மதிப்பிடுகிறார்கள். அதனடிப்படையில் தனிப்போதனை வகுப்புகள் உருவாகின்றன. மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், சமுதாயக்கூடங்களிலும் மாணவர்களுக்கன்றி தேவைப்படின் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பது தங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி என்கிறார் .சவாணின் தொண்டுநிறுவனத்தில் கல்விபெற்ற ஏழைமாணவர்கள், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மாதவ சவாணுடைய அமைப்பை முன்மாதரியாகக்கொண்டு இன்று ஆப்ரிக்க நாடுகளிலும் ஏழைமாணவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனவாம்.
Strasbourg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஒருமணிநேரத்திற்குமேல் விவாதித்து, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்திருக்கிறது. காந்தி பிறந்த நாட்டில் பெரியார் முழக்கமிட்ட தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் வெட்கக்கேடானவை என்பது உண்மை. தலித்மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த பிறருக்குத் தலித் மக்கள்மீது அப்படியென்ன வன்மம்? தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும். Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது? இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா? La Belle Amour Humaine (மனிதநேயம்) நாவலின் ஆசிரியர் வற்புறுத்துவதுபோல மனிதர்கள் கைகோர்க்கவேண்டும், மனதில் பிறப்பிலிருந்து தொடரும் அந்நியர்மீதான கசப்புகள் வேருடன் பிடுங்கப்படவேண்டும். புன்னகைக்கவும்வேண்டும் பிறரை புரிந்து கொள்ளவும்வேண்டும். ராமதாஸ் திருமாவளவன்கள் நமக்குவேண்டாம் இந்திய மண்ணுக்கு தற்போதைய தேவை மாதவ் சவாண் போன்ற ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள்.
—————————————
- பழங்கால திருமண வழக்கங்களிலிருந்து விடைபெற விரும்பும் ஆப்கானிஸ்தான்.
- சாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால்
- ஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்
- மாறும் வாழ்க்கை – செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது சிங்கம்
- ஓய்ந்த அலைகள்
- எல்லைக்கோடு
- வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை
- வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -7
- நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது
- ஜெய்கிந்த் செண்பகராமன்
- புரிதல்
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2
- புதிய வருகை
- சுட்டும்… சுடாத மனப் புண்கள்…!
- மொழிவது சுகம் டிசம்பர் -15-2012 -பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்
- அக்னிப்பிரவேசம்-14
- கனவுகண்டேன் மனோன்மணியே…
- 101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )
- தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு
- பொறுப்பு
- சுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’
- திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் : கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 நாள்களில்
- இரு கவரிமான்கள் – 1
- இணைய தளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா
- வாழ்வே தவமாய்!
- முனகிக் கிடக்கும் வீடு
- புத்தாக்கம்
- ஓ! அழக்கொண்ட எல்லாம்?