குழந்தை நட்சத்திரம் … ! .

This entry is part 5 of 27 in the series 23 டிசம்பர் 2012

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர்.சிதம்பரம்.

வானில் அரை நிலவு ஒளிகுன்றி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அங்கங்கே நட்சத்திரங்கள் தம் அழகைக் காட்டி, விட்டுவிட்டு மினுக்கிக் கொண்டிருந்தன. குளிர்ந்த பனிக்காற்று வாசல் பந்தலின் ஜாதிப் பூக்களின் சுகந்தத்தை களவாடிக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

வாசல் படியில் அமர்ந்து கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே தனக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் நித்யா. அவள் மனதில் குழப்பம். கண்களில் பயம். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்றாக கெட்டியாக இணைத்துக் கொண்டு முகத்தில் முட்டுக் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தாள் .

வீட்டின் உள்ளே….அப்பா…அம்மா…தாத்தா..பாட்டி அண்ணா அக்கா அனைவரும் தொலைக்காட்சி முன்பு கூடி உட்கார்ந்தபடி என்றுமில்லாத திருநாளாக சன் நியூஸை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்குமே கவலை, இறுக்கம், சோகம் படர்ந்த முகங்கள்….”இப்படி பண்ணிட்டாரே”…சின்னப் பொண்ணு…பாவம்..” எவ்வளவு நன்னாப் பாடுவா…” இவளுக்கா இப்படியாகணும்…?

போயும் போயும் இப்படியா விழணும்…?

மனசில் விரிசல் இருந்திருந்தால் பிரிந்து வாழலாமே…!

ஆளுக்கொரு அபிப்ராயத்தொடு அந்தப் பாடகியின் கணவர் தற்கொலை என்ற செய்தியை அறியும் ஆவலில்…தொலைக் காட்சியோடு ஐக்கியமாகி விட்டார்கள்.

அக்கா அகிலா உள்ளிருந்து சொல்கிறாள்…இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணிருக்கலாம்…எப்படியும் உலகம் நாளை அழியப் போறது…இதுல தனியா தற்கொலை எதுக்கு செஞ்சுக்கணும்… எல்லாரும் தான் சாகப் போகிறோம் ! .ஒரு நாள் கூட உயிர் வாழறதில் யாருக்கு என்ன பாரம்?

அண்ணா சிவா அதற்குப் பதிலாக….நீ ஒண்ணு …இப்பக் கிடைக்கிற பப்ளிசிட்டி உலகம் அழிஞ்சாக் கிடைக்காதுடீ…மண்டு….நாளைக்கு நாம இப்படியா உட்கார்ந்து டிவி பார்க்க முடியும். அவருக்குத் தெரிஞ்சிருக்கு. நமக்குத் தெரியலை. என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

இளவயது, மேலோட்டமான தர்க்கம்…..இருந்தாலும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணை.

அம்மா கத்துகிறாள்….”நியூஸ் வந்தாச்சு…கொஞ்சம் உங்க திருவாயை மூடிக் கொண்டு இருங்கள்…என்ன சொல்றான்னு கேட்கணும்….”ரொம்ப உன்னிப்பாக கவனிக்கிறாள்…இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் டிவி பெட்டிக்குள்ளவே சென்று விடலாம்…என்னும் நெருக்கம்.

சித்த நாழி முன்னாடி தான் பாட்டியும் அம்மாவும்..அடுக்களைக்குள் சண்டை போட்டுண்டு இருந்தா….தோசை மாவில் உப்பு அதிகம் போட்டதற்கு…இப்போ ரெண்டு பெரும் ஒத்துமையா நின்னு பார்க்கும்போது

“பரவாயில்லை..உங்களுக்குன்னு தினம் ஏதோ ஒரு அதிர்ச்சி நியூஸ் வந்துடறது…டிவி யில் …இல்லாவிட்டால் நீங்க ரெண்டு பேரும் அடிச்சுண்டு, யாரோ ஒருத்தர் கட்டுப் போட்டு ஹாஸ்பிடலில் இருக்கறா மாதிரி நம்ம நியூஸ் டிவி யில் வரும்…என்று ஜோக் அடித்தான்…சிவா.

இந்தக் கடங்காரனுக்கு கொழுப்பப் பாரு…எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான்…படிக்க துப்பில்ல…எப்பப் பாரு பெரியவாளப் பார்த்து கிண்டலும் , கேலியும்…..முதுகுல ஒண்ணு வெச்சாத் தெரியும்..என்று கையை ஓங்கிக் கொண்டு வருகிறாள் அம்முலு பாட்டி.

நாளைக்கு நியூஸ் பேப்பர் வாங்குடா, மறந்துடாதே…..என்று தாத்தா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆமா…விவரமா தினத்தந்தில காரசாரமா போடுவான். அப்போ பார்க்கலாம்…. இப்போ டிவி யை நிறுத்து…குழந்தைகளுக்கு பரிச்சை….நடக்கறது. நாளைக்குத் தான் கடைசி…டேய்…சிவா, அகிலா…போய் படிங்கோ…நியூஸ் எல்லாம் ஆயிடுத்து.

அம்மா மனசுக்கு என்னமோ பண்றது….இப்போ என்னால சப்பாத்தி பண்ணவே மனசு வரலை. பாவம் நித்யஸ்ரீ…ரெண்டு நாலா அவள் புரோக்ராம் தான் விஜய் டிவில போட்டான். என்ன அழகு. பாடும்போது கம்பீரம். அவளுக்கு இப்படி ஒரு அவல நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டாம்…இது அம்மா.

இப்ப அவளுக்கென்ன ஆச்சு…? .அவள் நன்னாத் தான் இருக்கா..இருப்பா… இத்தனை வசதிகள் இருந்தும்…நல்ல ஸ்டேட்ஸ் இருந்தும் அவருக்கு கண்ணை மறைச்சிருக்கு பாரேன்…சொல்லுவாளே…தற்கொலை செய்து கொள்வது என்பது தற்காலிகப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுன்னு. இது அப்பா.

உள்ளே இருக்கும் பெரியவர்கள் யாவருக்கும் நித்யா எங்கே என்று சிறிது நேரம் மறந்தே போனது.

நித்யா ஒன்பது வயது மகள்…மூன்றாம் வகுப்பு தான் படிக்கிறாள். படு சுட்டி. தனது பெயரில் ஒரு ஸ்ரீயை சேர்த்தபடி இவர்கள் நித்யஸ்ரீ என்று பேசிக் கொள்வது முதலில் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை தான்…ஆனால்…சிறிது சிறிதாக பார்க்க ஆரம்பித்த போது ஏதோ புரிய ஆரம்பித்தது. இருந்தாலும் அதில் நாட்டம் இல்லாததால் வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

இன்று அவள் ஸ்கூல் விட்டு வரும் போதே..அப்பாவிடம் நட்சத்திரம் வேண்டும் என்று கேட்கணும்னு நினைத்துக் கொண்டே தான் வந்தாள் .

ஆனால் இவள் கேட்டாலும் இவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் அங்கு ஒருவரின் மனநிலையும் இல்லை. குடும்பமே ஒட்டு மொத்தமாகக் அதே செய்தி மேல் கண்ணையும் காதையும் கழட்டி வைத்து விட்டு இருந்தது.

ரொம்ப நேரம் சென்றதும் தான் அம்மா…நித்யா..தூங்கிட்டாளா பாரேன்… குழந்தை ஒன்னுமே சாப்பிடலை..என்று நினைவுக்கு வந்தவளாக சொல்வது வாசல் வரைக்கும் வந்து நித்யாவுக்கும் கேட்டது.

அம்மா…நான் ஒண்ணும் இன்னும் தூங்கலை…இங்கதான் இருக்கேன்….என்று இவளும் வெளியிலிருந்தே குரல் கொடுத்தாள் . அவள் கண்கள் எதிரே பளிச் பளிச் சென்று மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரத்தின் மேல் இருந்தது. இவளுக்கும் ஆசையாக இருந்தது…”எனக்கும் நட்சத்திரம் வேண்டும்” மறுபடியும் மனதில் சொல்லிக் கொண்டாள்.

வாசலுக்கு வந்து நின்ற அம்மா….நித்யா குட்டி…என்ன இங்க செய்யரே…. அம்மா மேல கோபமா..?

அம்மா…எனக்கு நட்சத்திரம் ஒண்ணு வேணும்..சின்னதா இருந்தாலும் போதும்…வாங்கித் தரியா? இப்பவே…என்று கேட்கவும்.

மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா…இந்தா..இது தான் நட்சத்திரம்…வாசனை நட்சத்திரம்..என்று பந்தலில் இருந்த ஒரு ஜாதிப் பூவைப் பறித்து மகளின் கையில் கொடுத்து…எப்படி அம்மாவின் ஐடியா….?

கேவலமா இருக்கு…இது ஒண்ணும் நட்சத்திரமில்லை….இதை நானே பறிச்சுப்பேனே..என்று வீசி எறிகிறாள் நித்யா.

இந்த கேவலம்…இந்த வார்த்தையை யூஸ் பண்ணாதேன்னு சொல்லிருக்கேன் இல்லையா..? அதென்னமோ தெரியலை இந்த வார்த்தை இப்போல்லாம் குழந்தைகள்….ஏன்…பெரியவர்கள் மத்தியில் கூட ரொம்ப சர்வ சாதாரணமாக வந்து விழுகிறது…எல்லாம் பள்ளிக் கூடத்திலிருந்து கத்துண்டு வருது.

சரி வா மார்கழிப் பனியில் நிற்காதே..ஜுரம் வரும்..பிறகு ஸ்கூல் போக முடியாது…! ஹாஃப் இயர்லி நடக்கிறது..நாளைக்கு ஹிந்தி தானே… கொஞ்சம் சாப்டுட்டு படிச்சுட்டு படுத்துக்கோ…என்ன. என்று நித்யாவை அணைத்தபடி உள்ளே செல்கிறாள் அம்மா.

அப்பா.. நட்சத்திரம் வாங்கித் தரியா..? கடைக்குப் போவோம்…இப்பவே..என்று கேட்ட நித்யாவைப் பார்த்து வா மொட்டை மாடிக்கு போகலாம்…கை எட்டினாப் வானத்தில் இருந்து பறிச்சுத் தரேன்….வெச்சுக்கோ…என்ன..என் பட்டுக்குட்டி நித்யாவுக்கு இல்லாத நட்சத்திரம் வானத்தில் ஒண்ணு கூட இருக்கக் கூடாது..என்று சொல்லிக் கொண்டே அவளைத் தூக்கிக் கொள்கிறார்.

ஏன்னா….சாப்பிட வாங்கோ…பனியில் மாடிக்கு போக வேண்டாம்…அவளுக்கு என்ன தெரியும் ..குழந்தை…கேட்டைப் பூட்டிட்டு உள்ள வாங்கோ..என்று வித்யாவின் குரல் உள்ளிருந்து அழைத்தது.

கதவுகள் பூட்டப் பட்டு…வாசல் விளக்குகள் அணைக்கப்பட்டு இரவின் அமைதியை வீடு வரவேற்றது.

தாத்தா இருமிக் கொண்டே நித்யா நீ இன்னுமா தூங்கலை…போய்ப் படும்மா கோந்தே… என்று சொல்லிக் கொண்டே அவரது அறைக்குள் சென்றுவிட்டார்.

அரை மணி நேரம் முன்பு இருந்த கல கலப்பு சிறிதும் இல்லாமல் வீடே நிசப்தத்தில்.

நித்யாவுக்கு தன வீட்டிலும் சோகம் நிகழுமோ என்று உள்ளூர பயம் வந்து விட்டது. இன்று தன வகுப்பில் தன் தோழி கிளாரா சொன்னது நினைவுக்கு வந்தது.

எங்களுக்கு கிறிஸ்மஸ் வருது…அதுக்கு இந்த வாட்டி நல்ல ஃ ப்ராக் வாங்கியிருக்காங்க எங்கப்பா. அதைப் போட்டுக்கிட்டு தான் சர்ச்சுக்குப் போவேன்..மிட் நைட்ல. ஆனால் ஒரே கவலையா இருக்குடி நித்யா.

என்ன கவலை….உனக்கு அதான் புது டிரஸ் இருக்கே .

இந்த உலகம் அழியப் போகுதாம். நாமெல்லாரமே செத்துப் போய் விடுவோமாம்…உனக்குத் தெரியாதா..?

டீச்சர் சொல்லலியே…..!

நமக்கு தெரிய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க..தெரிஞ்சா பயப்படுவோமில்ல..

அதுக்கு நாம என்ன செய்யலாம்.? உலகத்தை அழிக்கும் அந்த பெரிய ரப்பரை திருடிட்டு வந்து ஒளிச்சு வெச்சிடலாமா?

அந்த ரப்பர் உங்க சாமி சிவன் கிட்டத் தான் இருக்கு..அது தெரியுமா உனக்கு..? சிவன் தான் அழிப்பாராம்.

அப்போ உங்க சாமி காப்பாத்துவாரா…? நீ வேணா சொல்லிப் பாரேன்…நீ சொன்னால் இயேசு கேட்பாரா?

ஆமா…அதுக்குத்தான் எங்க வீட்டுல இந்த வாட்டி ரெண்டு நட்சத்திரம் வாங்கி கட்டியிருக்கோம். ஒண்ணு இயேசு பிறந்த நாளுக்கு. இன்னொன்னு உலகத்தை அழிக்காமல் இருக்க ஜெபம் பண்ணி கட்டினாரு என் அப்பா.

அப்பா சொன்னார்..இந்த நட்சத்திரம் இருந்தால் எந்த சாமியும் நம்ம உலகத்தை அழிக்காதுன்னு. எங்க ரயில்வே காலனில வந்து பாரேன்… வீட்டுக்கு வீடு நட்சத்திரம் கட்டியிருப்போம்.

நீயும் உடனே ஒரு நட்சத்திரம் வாங்கி உங்க வீட்டிலயும் இன்னிக்கே கட்டிடு…அப்போ தான் உங்க வீடும் அழியாது..சரியா…

சரிடி…ரொம்ப தேங்க்ஸ் டீ கிளாரா…இன்னிக்கு எப்டியும் சின்ன நட்சத்திரமாவது வாங்கி வீட்ல கட்டிறேன்…..என்று தோழியிடம் சொல்லிவிட்டு வந்தவள் அதே வேகத்தோடும் ஆவலோடும் தான் வீட்டுக்குள் நுழைந்தாள் நித்யா.

வீட்டில் தான் நிலைமை வேறாக இருந்தது.. எல்லாம் யாரோ ஒருத்தர் செத்துப் போனாராமே…அவரால் வந்தது…என்று மனதுக்குள் அந்த யாரோ ஒருத்தரை இவள் திட்டிக் கொண்டிருந்தாள்.

அனைவரும் படுத்து உறங்கி விட்டார்கள். ஆனால் நித்யாவுக்கு மட்டும் உறக்கம் சிறிதும் வரவில்லை.

இரவின் அமைதி…..மனதுக்குள் பயம்…..அம்மாவின் கையை மெல்ல எடுத்து விட்டு படுக்கையை விட்டு இறங்குகிறாள் நித்யா.

அப்பாவின் குறட்டை சத்தம் நிதயாவுக்கு தைரியத்தைத் தருகிறது..மெதுவாக ஹாலுக்கு வந்து விளக்கைப் போட்டு விட்டு…துணைக்கு டிவியை போட்டுக் கொண்டு அதில் இருந்த சப்தத்தைக் மட்டும் அமுக்கி வைக்கிறாள் .

மெல்ல தன பள்ளிகூடப் பையை எடுத்து ஒரு வெள்ளைத் தாளில்…..பெரிய நட்சத்திரம் வரைந்து ஸ்கெட்ச் பேனாவால் வண்ணம் போட்டு அழகாக வெட்டி “குளு ” தடவி கஷ்டப் பட்டு ஜன்னல் வழியாக கதவில் எட்டி எட்டி ஒட்டி விட்டு…..ஜீசுஸ்….. எங்க வீட்டிலும் நட்சத்திரம் ஒட்டியாச்சு…எங்க வீட்டையும் சிவன் அழிக்காமல் காப்பாத்துங்க….. எங்க தெருவே அழியக் கூடாது….என்று கைகூப்பி வேண்டிக் கொண்டாள் .நிம்மதியோடு விளக்கெல்லாம் அணைத்து விட்டு நிம்மதியோடு சென்று அப்பாவின் அருகில் படுத்துக் கொள்கிறாள்.

ஆழ்ந்த உறக்கத்திலும் “நாளைக்கு நட்சத்திரம் பறிச்சுத் தரேன்…இப்போத தூங்கு என்று அப்பா சொல்வதைக் கேட்டு…
அப்பா நானே நட்சத்திரம் செய்து ஒட்டிட்டேன்…உலகம் அழியாது…என்று பதில் சொன்ன நித்யாவை அரை மயக்கத்தில்…….”குழந்தை பயந்திருக்காள் .. நாளைக்காவது அவளை தர்காவுக்கு அழைச்சிட்டு போயி மந்திரிச்சுக் கயிறு கட்டணும் .அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டே நித்யாவை அணைத்துக் கொள்கிறாள்..

படுக்கையிலிருந்த மீண்டும் எழுந்து வந்த நித்யா ஜன்னல் வழியாக காகித ஸ்டாரை ஓரக் கண்களால் பார்த்துப் புன்னகை புரிகிறாள். ” உலகம் அழிஞ்சாலும் நம்ம வீடு அழியாது.”

===========================================================

Series Navigationஇரு கவரிமான்கள் – 2சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  குழந்தை நட்சத்திரம் எனும் தலைப்பில் ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியுள்ள சிறுகதை இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏற்றவகையில் அமைந்துள்ளது. அதிலும் நித்யா எனும் ஒன்பது வயது சிறுமியின் கள்ளங்கபடமில்லா உள்ளத்தை சிறப்பாக சித்தரிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது மேலும் சிறப்பூட்டுகிறது கிறிஸ்துமஸ் நட்சத்திரத்துடன் உலகம் அழியாமல் இருக்க இன்னொரு நட்சத்திரமும் தங்கள் வீட்டில் கட்டியுள்ளதாகக் கூறி நித்யாவையும் . அவளுடைய வீட்டில் ஒரு நட்சத்திரம் வைக்கச் சொல்லும் கிளராவும், அதை நம்பிய நித்யா எவ்வாறு அதை தானே செய்து சுவற்றில் ஒட்டி உலகம் அழியாமல் உள்ளதா என்பதை விழித்திருந்து பார்க்கிறாள் என்பது சுவையாகவும் தத்ரூபமாகவும் எழுதப்பட்டுள்ளது. உலகம் அழியப்போகிறது என்ற புளுகுமூட்டையை உலகெங்கும் பரப்பிய வதந்தியையும் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் சேர்த்து அழகான நடையில், தனக்கே உரிய தமிழில் இச் சிறுகதையை எழுதியுள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு எனது இனிய பாராட்டுகள்! அதோடு திண்ணை வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!…டாக்டர் ஜி. ஜான்சன்.,

 2. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர். says:

  அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  தங்களின் அழகான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
  எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *