ஜோதிர்லதா கிரிஜா
‘காதல்’ என்பது இன்றைய இளைஞர்களிடம் – பெண்களும் அடக்கம் – மிகப் பரவலாய்த் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஊடகங்களின் பங்களிப்பே என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதில் உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் இதுவே முழு உண்மையன்று. தொலைக்காட்சி, ஏடுகள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவை வருவதற்கும் முன்பிருந்தே காதல் இருந்துதானே வருகிறது! பட்டி, தொட்டிகளில் கூடக் காதால் இருந்திருக்கிறது. கிராமத்துக் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரைகள், தெருக்கள், கடைகள், சந்தைப்பேட்டைகள் இங்கேயெல்லாம் காதல் மலர்ந்துதான் வந்திருக்கிறது. எனினும், ஆண்-பெண்கள் மிக அதிக அளவில் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்ட இந்நாளில் அது மிகவும் பெருகிவிட்டது என்பதே உண்மை.
காதல் எவ்வாறு தோன்றுகிறது? ஒத்த மன அலைவுகள் உள்ள ஆண்-பெண்களிடையே தோன்றும் மனக்கவர்ச்சியே இதன் அடித்தளம் என்று கூறலாம். இது தவிர, புறத் தோற்றமும் சில காதல் உறவுகளில் பெரும் பங்கு வகிக்கவே செய்கிறது. வேறு சிலவற்றில் புறத் தோற்றம் மட்டுமே காதலின் அடிப்படையாகிறது. ஆக, பொதுவாக எந்தக் காதலாக இருந்தாலும், உள்ளம் சார்ந்த ஈர்ப்பு, உடல்சார்ந்த ஈர்ப்பு ஆகிய இரண்டின் கலவையே காதலாய்க் கனிகிறது. பின்னதன் பாதிப்பால் மட்டுமே – அதாவது புறத் தோற்றக் கவர்ச்சியின் விளைவாகவே – இளைஞர்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள். இத்துடன், மனம் சார்ந்த ஈர்ப்புகளும் இருக்குமாயின், அந்தக் காதல் உன்னதம் பெறுகிறது.
அதிலும், இப்போதெல்லாம், மிகப் பெரிய அளவில் வேற்று சாதியினரிடையே காதல் மலர்ந்து விடுகிறது. ஒருவன் அல்லது ஒருத்தி இன்ன சாதி என்று கண்டுபிடித்த பிறகு நேசிக்கத் தீர்மானிப்பது இயல்பான காதல் ஆகாதுதானே! ஒருவர் பற்றி ஏதும் அறியாத நிலையிலும் சிலர் விஷயத்தில் ‘கண்டதும் காதல்’ ஏற்பட்டுவிடுகிறது. மனஅதிர்வுகளின் உடனடியான இந்த ஈர்ப்பை நாம் குறைத்து மதிப்பிடவோ கேலி செய்யவோ தேவையில்லை.
காதல் என்று சொல்லப்படும் உணர்வுதான் என்ன? ஒருவன் அல்லது ஒருத்தியைத் தவிர வேறு எவரையும் தொடுவதையோ அல்லது அந்த நபராலன்றி வேறு எவராலும் தொடப்படுவதையோ விரும்பாத மனநிலையே காதல் என்று எளிய விளக்கம் தரலாம். இந்த உணர்வைப் புரிந்துகொண்டு அதைக் கவுரவிப்பதற்குப் பதில் நம் நாட்டுப் பெரியவர்கள் என்ன செய்கிகிறார்கள்? அதைக் காலடியில் போட்டு மிதித்து, நசுக்கிக் காதலர்களின் உள்ளங்களை ரணகளப்படுத்தி விடுகிறார்கள். இப்படி இவர்கள் இதயமற்று நடந்து கொள்ளுவது சாதி வேறுபாடும் அந்தஸ்து வேறுபாடும் இருக்கும்போது மட்டும்தான். அல்லது இவற்றைப் பொருட்படுத்தாத பெற்றோர் கூட, காதலிக்கப்படும் நபர் உதவாக்கரையாகவோ, கெட்ட நடத்தை உள்ளாராகவோ உறுதியாய்த் தெரிய வரும்போது தங்கள் மக்களின் வருங்கால நலன் கருதி எதிர்ப்பார்கள்தான். பின்னதில், பெரியவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை.
ஆனால், காதலிக்கப்படும் ஆண் அல்லது பெண் வேறு சாதியாக இருந்தால் – பிற நற்தன்மைகளும் தகுதியும் இருந்தாலும் – அந்நபரைப் புறக்கணிக்கப் பெற்றோர் தம் மக்களைக் கட்டாயப்படுத்துவது சாதிவெறி அல்லது தேவையற்ற சாதிப்பற்றால் மட்டும்தானே? ‘மெத்தப்படித்த மூஞ்சூறு’களும் இந்தப் போக்குக்கு விதைவிலக்காக இருப்பதில்லை. கல்விக்கும் சாதி வெறியினின்று விடுபடுவதற்கும் துளியும் தொடர்பே இல்லை என்பதே பெருமளவில் உண்மையாகும்.
கலப்புமணத்தைக் காதலரின் பெற்றோர் எதிர்ப்பதற்குக் காரணம் சாதிவெறியாக மட்டுமே இருக்கும் நிலையிலும், ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்பதே தங்கள் கருத்து என்பதாய் இவர்கள் (தற்காலச் சூழ்நிலை, நாகரிகம் கருதிப் பொய்யாக) ஒப்புக்கொண்டாலும், வேற்று சாதியில் மணம் புரிவதால் மாறுபடும் பழக்க வழக்கங்களின் விளைவாகப் பின்னாளில் சிக்கல்கள் எழும் என்பதாலேயே அதை ஏற்க மறுப்பதாய்ச் சொல்லுவது பச்சைப் பொய்! இது ஒரு நொண்டிச்சாக்கே ஒழிய உண்மையன்று.
சாதி உணர்வை வெல்ல முடியாவிட்டாலும், சாதி வெறியையேனும் மனிதர்கள் – படித்த மனிதர்களேனும் – வெல்ல வேண்டுமல்லவா! நம் நாட்டில் – அதன் அனைத்துப் பகுதிகளிலும் – இரண்டுமே இல்லை என்பது வெட்கக்கேடான உண்மை. சாதிகளை முற்றாக ஒழிப்பது இயலாத ஒன்றுதான். இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் ஆகலாம். ஆனால், சாதிவெறியையும், ‘நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன்’ என்கிற உணர்வையயும், சாதிப்பற்றையும் வெல்லக்கூடிய அறிவேனும் நமக்கு இருக்க வேண்டாமா?
இதில் இன்னொரு வெட்கக்கேடு என்னவெனில், பெற்றோரை எதிர்த்து வேற்று சாதிப் பெண்ணை மணந்து வெளியேறும் இளைஞனின் தங்கைகளுக்குத் திருமணம் ஆவதில் அவ்வளவாய்ச் சிக்கல் இருப்பதில்லை. ஆனால், பெற்றோரை எதிர்த்து இவ்வாறு செய்யும் ஒரு பெண்ணின் தங்கைகளுக்கு இலேசில் திருமணம் ஆவதில்லை. கலப்புமணம் புரிந்துகொள்ளும் பெண்களின் தங்கைகளுக்கென்று தனியாக ஒரு தராசு வைத்திருக்கிறார்கள்! இது என்ன இழவோ, புரியவில்லை!
வேறு சாதி என்பதால் தயக்கம் இருப்பின், அந்நபரைப்பற்றி அலசி, ஆராய்ந்து, தீர விசாரித்த பின் ஆட்சேபணைக்குரியவை இல்லாதிருப்பின் பெற்றோர்கள் கலப்புமணத்துக்குச் சம்மதிக்கலாமே! தாங்களாக ஏற்பாடு செய்கிற திருமணத்தில் விசாரிப்பது போல் இவர்கள் தங்களின் மக்கள் பாலுள்ள கவலையால் விசாரிப்பதை யார் வேண்டாம் என்கிறார்கள்?
தகுதியின்மை வெளிப்பட்டாலல்லாது, ‘காதல்’ என்று சொன்னாலே கையில் கட்டையை எடுத்துக் கொள்ளுவது என்ன நியாயம்? அதிலும், பெண்ணின் பெற்றோர் எனில், அவர்கள் இந்தக் கேள்விக்குச் சொல்லும் பதில், பெரும்பாலும். ‘அவன் இவளோடு ஒழுங்காக வாழ்வான் / நன்றாக வைத்துக்கொள்ளுவான் என்பது என்ன நிச்சயம்?’ என்பதுதான்.
பெற்றோர்களே! நீங்கள் தேடிப் பார்த்துச் செய்து வைக்கிற திருமணம் மட்டும் என்ன வாழ்ந்தது ?
அண்மையில், ஒரு நாளிதழ் மணமுறிவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய ஒரு பெரியவர், ‘மொத்த மணவிலக்குகளில் 39% காதல் திருமணங்கள் தோற்றுப் போவதால் விளைவதாய்ப் போட்டிருக்கிறதே! காதலாவது, கத்திரிக்காயாஅது!’ என்று வாதிட்டார்.
‘சரி. காதல் திருமணத்தோல்வியால் விளையும் மணமுறிவுகள் 39% தானே? மீதமுள்ள 61% பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கிற திருமணங்களின் தோல்வியல்லவா? அந்தக் கணக்கைப் பார்க்க எப்படித் தவறினீர்கள்?’ எனும் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கிற திருமணமாயினும் சரி, காதல் திருமணமாயினும் சரி, திருமணம் என்பதே ஒரு சூதாட்டம்தான்! ஏனெனில், ஆணும் சரி, பெண்ணும் சரி, தொடக்கத்தில் தங்கள் உண்மையான தன்மைகளை மறைத்துப் பழகுகிறவர்களே. கொஞ்ச நாள் கழித்தே அவர்களது உண்மையான உருவம் வெளிப்பட, அது காதல்மணமே யானாலும், தோற்றுப் போகிறது. இது பெற்றோர் செய்துவைக்கிற திருமணத்துக்கும் பொருந்தும் தானே!
காதல் தோல்வியால், மனம் சிதைந்து, கட்டாயத் திருமணத்தை ஏற்க மனமின்றித் தங்கள் பொன்னான உயிரைச் சிலர் மாய்த்துக்கொண்டுவிடுகிறார்கள். இது முட்டாள்தனம்தான். ஆனால், பிடிக்காத நபருடன் மனம் ஒட்டாத நிலையில் கடனுக்கு உயிர் வாழ்வதை விட, அந்த உயிரையே விட்டுவிட நினைக்கிற அளவுக்குச் சில காதலர்கள் மனமுடைந்து போகிறார்கள் என்றால், எத்தகைய ஆழமும் தீவிரமும் நிறைந்த உணர்வுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும் பெற்றோர்கள் என்ன பெற்றோர்கள்! உண்மையில் இவர்கள் அன்பான பெற்றோர்கள்தானா?
இவர்கள் பார்த்துச் செய்துவைக்கிற திருமணங்கள் யாவும் வெற்றி யடைவதாகவும், பெற்றோரை எதிர்த்து மணம்புரிந்துகொள்ளும் காதலர்களின் திருமணங்கள் யாவும் தோல்வியடைவதாகவும் இருந்தால் மட்டுமன்றோ பெரியவர்கள் தங்கள் மக்களின் காதலை எதிர்க்க வேண்டும்? வேறு நியாயமான காரணம் ஏதுமின்றி, சாதி வேறுபாட்டின் அடிப்படையில் மட்டும், காதலை எதிர்த்தல் “காட்டுமிராண்டித்தனம்” அல்லாது வேறென்ன?
jothigirija@live.com
- சீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்
- தலைநகரக் குற்றம்
- திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- இரு கவரிமான்கள் – 2
- குழந்தை நட்சத்திரம் … ! .
- சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”
- சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)
- எழுத்துலக வேந்தர் இளம்பாரதி
- நெத்திலி மீன்களும் சுறாக்களும்
- தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்
- Dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil
- நிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -8
- கோசின்ரா கவிதைகள்
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்
- காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்
- சீக்கிரமே போயிருவேன்
- கணித மேதை ராமானுஜன் (1887-1920)
- குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘
- அறுவடை
- வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -40
- தாயுமானவன்
- அக்னிப்பிரவேசம் – 15
- வாழ்க்கை பற்றிய படம்
- டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.