சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4

This entry is part 10 of 30 in the series 20 ஜனவரி 2013

மன்னர் சுப்பபுத்தர் மகாராணி பமீதாவிடம் ” யசோதராவின் முகம் களையாகவே இல்லை. பார்ப்பதற்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை பதிதேவரே. பிள்ளைப் பேற்றுக்குப்பின் இருக்கும் இயல்பான சோர்வே. கைக்குழந்தைக்குப் பால் கொடுப்பதால் வழக்கமான ஆடை அணிகலன்களை அணிய இயலாது. ராகுலனுக்கு பெயர் சூட்டும் விழாவில் பாருங்கள். நம் மகள் பழைய பொலிவோடு வருவாள்”

“இன்னும் இரண்டு நாட்களில் அந்த வைபவம் நடக்க இருக்கிறது. பல நாட்டு மன்னரும் அமைச்சர்களும் கூட வந்து விட்டார்கள். ஆனால் தன் மகனுக்குப் பெயர் சூட்டும் விழாவில் மருமகன் சித்தார்த்தன் இருப்பாரா என்று தெரியவில்லை.”

” நம்பிக்கை இழக்காதீர்கள் மாமன்னரே. சித்தார்த்தன் சமீப காலமாகத்தான் வெளி உலகில் கலந்து பழகி வருகிறார். பட்டாவிஷேகம் செய்யும் வயதும் அவருக்கு வந்து விட்டது”

“யசோதராவின் அம்மா. நீ விவரங்களை அறியவில்லை. ரோஹினி ஆற்றைத் தாண்டிய சித்தார்த்தன் அருகிலுள்ள வனத்தில் இருந்திருக்கிறார். அங்கே ஒரு குகையில் தன் பெற்ற தாய் மாயாவின் சித்திரத்தையும் எழுதி, வனராஜா சிம்ஹரூப்புக்கு நன்றி கூறும் வாசகங்களையும் எழுதிப் பின் வனவாசிகளின் உதவியுடன் கங்கைக் கரையையும் கடந்து விட்டார். ஜனன கால கிரக நிலைகளை வைத்து ஜாதகம் கணித்த ஜோதிடர்கள் 29 வயதுக்குப் பிறகு அவர் மாமன்னராகப் பட்டம் சூட்டிக் கொள்வார் அல்லது துறவு பூண்டு உலகுக்கு வழி காட்டுவார் என்றார்கள். இந்த சோதனை நிகழக் கூடாது என்று தான் நான் யசோதராவை எவ்வளவோ தடுத்தேன்”

“ஸ்வாமி. தங்களது விருப்பத்தை எதிர்த்து அவள் சித்தார்த்தனின் மணமகள் தேர்வு விழாவுக்குச் செல்லவில்லை. குழந்தைத்தனமான ஆர்வத்துடனேயே போனாள். ஆனால் அவளின் அழகைப் பிற ராஜகுமாரிகளுடன் ஒப்பிடும் தருணம் வந்த போது மருமகன் சித்தார்த்தன் யசோதராவே தன் மனைவி என்னும் முடிவை எடுத்தார். பின்னர் நீங்கள் நிர்ணயித்த படி ஷத்திரியர்களுக்கான வில், வாள், மல்யுத்தம் என அனைத்து விர சாகஸங்களிலும் பிற இளவரசர்களை வென்று சாக்கிய வம்சத்து வீரத்தை நிலைநாட்டி அவளைக் கரம் பிடித்தார்”

“உங்கள் வம்சப் பெருமை பேசும் நேரமா இது பமீதா?”

“பெருமை பேசவில்லை பிராண நாதரே. வீரம், கலை, விவேகம் யாவும் ஒன்று சேர்ந்த அற்புதம் சித்தார்த்தன். துறவில் அவர் நிலைக்க வாய்ப்பில்லை.”

“பமீதா சித்தார்த்தன் உன் அண்ணன் மகன் என்று மழுப்பிப் பேசுகிறாயா? நம் மகள் யசோதராவின், பேரன் ராகுலனின் வருங்காலம் பற்றிய கேள்வி பெரிதாக வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறது. இது எனக்குத் தெரிகிறது. உனக்கு ஏன் தெரியவில்லை?”

“இந்தப் பதிமூன்று வருட மணவாழ்க்கையில் மருமகன் நம் மகளின் மீது அன்பைப் பொழிந்திருக்கிறார். இதில் ஐயமேயில்லை. மகளின் மீது தாங்களும், சித்தார்த்தன் மீது என் அண்ணனும் காடும் அதே பாசம் நம் மருமகனைப் பிணைத்து இழுத்து விரைவிலேயே இங்கே கொண்டு வந்து விடும்”

ராணி பஜாபதியின் மடியில் ராகுலன் உறங்கிக் கொண்டிருந்தான். “இந்நேரம் கபிலவாஸ்துவிலிருந்து இளவரசர் எவ்வளவு தொலைவிருப்பார் அத்தை ?” என்றாள் யசோதரா.

“மகளே ஒரு நாள் குதிரைப்பயணத் தொலைவில்தான் இருப்பான் சித்தார்த்தன். உன்னையும் ராகுலனையும் காண விரைந்து வந்து விடுவான். ”

” என் அப்பா மிகவும் கவலையாயிருக்கிறார். இளவரசர் பண்டிதர்கள கணித்த படி துறவு பூண்டு விடுவார் என அவர் எண்ணுகிறார். அம்மா எத்தனையோ எடுத்துக் கூறியும் அவர் மனம் ஆறவில்லை.”

“யசோதரா, சித்தார்த்தனின் சித்தப்பா மகன் தேவதத்தனும் அவனும் சிறுவயதில் ஒரு வழக்கை மன்னர் முன் வைத்தார்கள். உனக்கு நினைவிருக்கிறதா?”

“பாலப்பிராயத்தில் நான் எங்கள் கோலி நாட்டில் இருந்தேன் அத்தை”

“அது என்ன எங்கள் கோலி நாடு? நானும் அந்த நாட்டிலிருந்து இங்கே மருமகளாக வந்தவளே”

“உண்மை தான் அத்தை. அது என்ன வழக்கு? ஆவலாயிருக்கிறது. கூறுங்கள்”

“சொல்கிறேன் அம்மா. தேவதத்தன் எய்த ஒரு அம்பால் ஒரு புறா அடிபட்டுக் கீழே விழுந்தது. நந்தவனத்தில் இருந்த சித்தார்த்தன் காலடியில் குற்றுயிராய் வந்து விழுந்தது. அதைக் கையிலெடுத்த சித்தார்த்தன் தனது உத்தரியத்தால் அதைச் சுற்றி சேவகரை அழைத்து மருத்துவரிடம் எடுத்துப் போய் அதைக் காப்பாற்றச் சொன்னான்.”

“பிறகு என்ன வழக்கு அத்தை?”

“பொறுமையாகக் கேள் யசோதரா. சற்று நேரத்தில் புறா காயத்துக்குக் கட்டுப் போடப்பட்டு சித்தார்த்தனிடம் வந்தது. தன் வேட்டையைத் தேடி வந்த தேவதத்தன் அந்தப் புறா சித்தார்த்தன் கையில் இருப்பதைப் பார்த்து இது தனது அம்புக்கு இரையானது. தன்னிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டான்.

“இளவரசர் சம்மதிக்கவில்லையா?”

“சித்தார்த்தன் இந்தப் புறா என் பொறுப்பில் உள்ளது. இதை குணமாக்கிப் பறக்கவிடப் போகிறேன்” என்றான்.

“தேவதத்தன் ஒப்பவில்லையா?”

“எளிதாகக் கேட்டுவிட்டாய் யசோதரா. அவன் வாளையே உருவி விட்டான். சித்தார்த்தன் பின் வாங்கவில்லை. வாளைச் சுழற்றியபடி இரண்டடி முன் வைத்து விட்டான்”

“ஐயோ.. பிறகு?”

“எனக்கு செய்தி வர நான் அங்கே விரைந்தேன்.”

“பறவை யாருக்கு எனத் தாங்கள் முடிவு செய்தீர்கள்?

“நான் முடிவு செய்வதா? தேவத்தன் என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை”

“பிறகு?”

“மாமன்னரிடம் இதைக் கொண்டு செல்வோம் எனப் பரிந்துரைத்தேன்”

“மாமன்னர் என்ன தீர்ப்புக் கூறினார்?”

“சொல்கிறேன். அதற்கு முன் வழக்கு என்ன என்பதை நீ எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்று கூறு”

“அத்தை, வழக்கு இதுதான். தேவதத்தன் வேட்டைக்காரராகவும் இளவரசர் காப்பாளராகவும் இரண்டு வாதங்களை முன் வைக்கிறார்கள்”

“யார் பக்கம் நியாயம்?”

“இளவரசர் பக்கம் தான் ”

“எப்படி?”

“காப்பதற்கல்லவா முடிவெடுத்தார்?”

“தேவதத்தன் என்னும் ஷத்திரியன் வேட்டையாடுவதும், அவர் வீழ்த்திய பறவைக்கு உரிமை கோருவதும் தவறா யசோதரா?”

யசோதரா மௌனமானாள்.

“கலங்காதே. இந்த இரண்டு தரப்புமே மாமன்னரால்தான் எனக்கும் புரிந்தது.”

“மகாராஜா என்ன தீர்ப்பளித்தார்?”

“முதலில் இரண்டு ஷத்திரியர்களுக்கிடையே வந்த இந்த வழக்கு ஷத்திரிய தர்மத்தின் அடிப்படையிலான வாதப் பிரதிவாதம்”

“ஒரே தர்மத்தின் மீது வாதமும் பிரதிவாதமுமா?”

“ஆமாம். வேட்டையாடுவதும் குறி வைக்கப் பட்ட இரையைக் காக்க முடிவெடுத்ததும்”

“மாமன்னர் என்ன முடிவெடுத்தார்?”

“முதலில் தேவத்ததன் சித்தார்த்தன் இருவரையுமே தம் தரப்பில் என்ன தீர்வு என்று கூறும்படி பணித்தார்”

“தேவதத்தன் என்ன விரும்பினார்?”

“தேவதத்தன் இது சவால் என்றும் வாட்போரில் வெல்பவர் பக்கம் தீர்ப்பளிக்கலாம்” என்றார்.

“இளவரசர் சித்தார்த்தர்?”

“அவன் தன்னிடம் சரணடைந்த ஒரு உயிருக்காகத் தன்னுயிரை ஈந்தேனும் காப்பதே ஒரு ஷத்திரியனின் தர்மம் என்று வாதிட்டான்”

“எப்படி தீர்ப்பானது?”

“மன்னர் சபையோரிடம் கருத்துக் கேட்க அவர்கள் ரகுவம்சம், இஷ்வாகு வம்ச உதாரணங்களின் படி சித்தார்த்தனின் கருத்துக்கு உடன்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்”

“புறாவுக்கு என்ன ஆனது. அதை சேவகர்கள் தம் பாதுகாப்பில் எடுத்துச் செல்லும் வரை உருவிய வாளை சித்தார்த்தன் உறையில் போடவே இல்லை. அந்தப் புறா குணமாகிப் பறந்து சென்றது”

“இப்போது சொல்லுங்கள் அத்தை, இளவரசரின் இந்த வழக்கைத் தாங்கள் இப்போது நினைவு கூறக் காரணம்?”

“ஒரு சிறு பறவைக்காகத் தன் உயிரையும் பணயம் வைக்குமளவு மனமிரங்கிய சித்தார்த்தன் உன்னையும் ராகுலனையும் எங்களையும் கைவிடுவானா யசோதரா?”

“நன்றி அத்தை. மிக்க நன்றி.” என பஜாபதி தோளில் சாய்ந்து அழுதாள் யசோதரா.

“மகாராணிக்கு வணக்கம். மாமன்னரும் கோலி நாட்டு மன்னரும் நீராழி மண்டபத்தில் இசை நிகழ்ச்சி துவங்க உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றாள் ஒரு பணிப்பெண். அவள் கையில் ராகுலனைக் கொடுத்து விட்டு யசோதராவும் பஜாபதியும் கிளம்பத் தயாரானார்கள்.

***********

“கங்கையில் முதலைகள் நிறைய உண்டு. ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நீராட வேண்டாம்” என சிம்ஹரூப் எச்சரிக்கை நினைவுக்கு வர சித்தார்த்தன் குளிக்க இருந்த இடத்தை விட்டு மேலே நடந்தான். சில இடங்களில் மௌனியாகவும், பாறைகள் நடுவே இசையாகவும், நீர்வீழ்ச்சியில் கர்ஜனையாகவும் கங்கைமாதா பல வடிவம் காட்டினாள்.

கொக்குகள், நாரைகள், கருடன், கழுகு, மைனா, குயில், வாத்துக்கள், கிளிகள், குருவிகள் எனப் பறவைகளின் துணையில் தனிமை தோன்றவில்லை.

சிறிய மலை ஒன்று எதிர்ப்பட்டது. காட்டுப் பாதைகள் சரிந்து கீழிறங்கின. கங்கை மலையின் பக்கவாட்டில் ஆழ்ந்த பள்ளத்தாக்கில் திடீரெனப் புதுப்பாதையில் போய்விட்டது.

எந்தப் பக்கம் போவது? சித்தார்த்தனால் முடிவெடுக்க இயலவில்லை. உண்மையில் நான் எங்கே தான் போய்க் கொண்டிருக்கிறேன்?

சில நொடிகள் தயங்கி நின்ற பிறகு மலையின் மேலே ஏறத் துவங்கினான். புதர்களும் முட்களும் தாண்டி ஆடை கிழியாது நடக்க மிகவும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. மூச்சிரைத்து வியர்வை வழிந்தோடியது.

மேலே ஏறிச் செல்லச் செல்ல தளர்ச்சியும் வெப்பத்தால் மிகுந்த தாகமும் மேலோங்கின. நீர்ச்சுனையைக் கண்கள் தேடின. சிறு பறவைகள், மற்றும் பல இனப் பறவைகள் ஒரே இடத்தில் வட்டமிட்டால் அங்கே சுனையோ, காட்டாறோ இருக்குமென்று யூகிக்கலாம் என்று சிம்ஹரூப் குறிப்பிட்டிருந்தான்.

மலையேற்றத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு சுனையை – சிறு பறவைகளின் சிறகடிப்பைத் தேடினான் சித்தார்த்தன். தும்பிகளும், தேனீக்களும், பட்டாம் பூச்சிகளும் முதலில் தென்பட்டன. சிறிய சரிவு ஒன்றில் இறங்கும் போது நீரோட்டத்தின் மெல்லிய ஒலி கேட்டது.

சித்தார்த்தனின் காலடி ஒலி கேட்டு பறவைகள் மேலெழும்பி மறைந்தன. மெல்லிய ஓடை ஒன்று தென்பட்டது. நெருங்கினால் இரு சுனைகளுக்கு இடைப்பட்டு நீர் சன்னமாக இறங்கி ஓடிக் கொண்டிருந்தது. சுனைகளில் சூரியன் தகதகத்துப் பிரதிபலித்தான். சித்தார்த்தன் கைகளால் நீரை அள்ளிப் பருகியும் போதவில்லை. முதுகில் நீண்ட காவி வேட்டி முடிவில் முடிச்சாக இருந்த கப்பரையில் நீரை நிறைத்துக் குடித்த போது சிம்ஹரூப்பின் கள்ளங்கபடமற்ற அன்பு நினைவுக்கு வந்தது. புதிய தென்புடன் அந்த சிறுமலையின் உச்சியிலிருந்து பார்த்த போது தூரத்தில் ஒரு நகரம் கங்கைக் கரையில் தென்பட்டது.

நகரத்தை நெருங்கும் முன் கங்கை நதிக்கரையில் ஒரு சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்த பிணம் தென்பட்டது. அதனருகே ஆள் நடமாட்டம் தென்பட்டதால் அங்கே நீராடலாம் என முடிவெடுத்தான்.

நீராட எண்ணி நதியில் ஆடை களைந்து கௌபீனத்துடன் நதியில் இறங்கக் கால்களை நக்ர்த்திய போது ஷவரக்கத்தியை ஒரு நாவிதர் கழுவுவதைக் கண்டான். “பெரியவரே. என் சிகையை எடுக்க இயலுமா?”

“என்ன என்னையா பெரியவரே என்று அழைத்தீர்கள்? ”

“ஆமாம் ஐயா. தவறா?”

“நீங்கள் உயர் குலத்தவர். ஷத்திரியர் போலத் தெரிகிறீர்கள். என்னைப் பன்மையில் அழைப்பது அச்சமூட்டுகிறது”

“ஐயா.. இதை எடுத்து உதவுங்கள். நான் ஒரு நாடோடி”

“தாங்கள் ஒரு ராஜ குடும்பத்தவர் போலத் தெரிகிறீர்கள். உங்கள் தந்தையின் கோபத்துக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள்”

பதிலேதும் சொல்லாமல் சித்தார்த்தன் கையெடுத்துக் கும்பிட “ஐயா.. என்ன இது? என் சேவை உங்களுக்கில்லாமலா?” என்று நாவிதர் தம் பணியைத் துவங்கினார்.

———–

Series Navigationஒரு ஆன்மாவின் அழுகுரல்..பொம்மலாட்டம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *