திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

This entry is part 24 of 30 in the series 20 ஜனவரி 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன்.

மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் ஒரு பதிவுடன் தொடரை முடிக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 60 களில் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆசை இருக்கும் விகடனில் எழுத வேண்டும் என்று. இணைய இதழ்களில் திண்ணையில் எழுத வேண்டும் என்று ஆசை வரும். “சில சந்திப்புகளூம் சில நிகழ்வுகளும் “ இது ஓர் அரசியல் தொடர். குமுதம் பால்யூ முதல் அண்ணா கண்ணன் வரை என்னை வலியுறுத்தினா ர்கள். ஏனோ அதை எழுத மனம் தயாராகவில்லை ஆனால் சமுதாயத்தில் ஒவ்வொன்றையும் மாற்றிச் சொல்லி மக்களை மாக்களாகிவிட்டனரே. அந்த வரலாறு எழுதப்பட வேண்டும். வர்ணாச்ரம் முதல் எல்லாம் அலசப் பட வேண்டும். சாதி, மதம் காரணமாக எத்தனை பிரிவினைகள். அவைகளின் வரலாறு எழுதப்பட வேண்டும். பிராமணன் மேல் காழ்ப்புணர்ச்சிக்கு முதன் முதலில் வித்தூன்றியவன் தமிழனல்ல. ஆதாரம் இருக்கின்றது. இவைகள் பதியப்பட வேண்டும். சித்தர்கள் பெரிய விஞ்ஞானிகள். அவர்கள் கண்டு பிடித்துவைகளை விஞ்ஞானப் பூர்வமாக்க் கூற வேண்டும். தனிமனித ஒழுக்கம் பாதுகாக்க ஒவ்வொருவனும் தன் ஆழ்மன சக்தியை உணர வேண்டும். அதற்கு வழிவகைகள் எளிய முறையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இத்தனையும் திண்ணையில் எழுத விரும்பினேன். அனால் நான் வயதானவள். நோயாளி. மனத்தை வருத்தும் வார்த்தைகளைத் தாங்கும் வலு எனக்கில்லை. அதனால் வருத்த்துடன் அடுத்த இதழுடன் முடிக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திண்ணை வளர வேண்டும். தலை சிறந்து இருக்க வேண்டும். திண்ணை நிர்வாகத்திற்கு எல்லாம்வல்ல இறைவன் சக்தி கொடுக்கட்டும்

சீதாலட்சுமி

Series Navigationஅக்னிப்பிரவேசம்-19வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2
author

சீதாலட்சுமி

Similar Posts

7 Comments

 1. Avatar
  punaipeyaril says:

  பின்னூட்டங்களை புறந்தள்ளி நீங்கள் எழுதலாமே..? எனது பின்னூட்டம் பற்றிய விளக்கமும் தந்து விட்டேன்.. அதில் உங்களை எந்தவிதத்திலும் புண்படுத்தும் எண்ணமும் இல்லை.. கோரிக்கை ஏற்கப்படுமா எனத் தெரியவில்லை இருப்பினும் எடிட்டருக்கு ஒரு வேண்டுகோள் -> பின்னூட்டங்களை இவரது தொடருக்கு மட்டும் “டிஸேபில்” -தமிழ் வார்த்தை தெரியவில்லை – செய்துவிடலாமே… நிச்சயம் எழுதுங்கள்… உள்ளமதில் உள்ளவரை வரலாற்று பதிவு செய்யுங்கள்… உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது… எழுதுங்கள்.. பாரதி சக்தி கொடு… நான் கண்டிப்பாக திண்ணையில் உங்கள் தொடருக்கு பின்னூட்டம் இடமாட்டேன் என்று பாரதி மேல் ஆணை…

 2. Avatar
  தேமொழி says:

  வருத்தம் மிகுகிறது அம்மா.

  கலைஞரோ, மக்கள் திலகமோ, கர்மவீரரோ, பேறிஞரோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்…இவர்கள் வாழ்க்கையை எழுதப் போகிறேன் என்று சொல்லும் வரலாற்று ஆசிரியரின் கடமை அவர்கள் வாழ்வின் குறை, நிறை என இருபக்கத்தையும் பிறழாது நடுநிலையுடன் காட்டுவது.

  நீங்கள் எழுதி ஆவணப் படுத்துவது ஒரு சமூக சேவகியின் தன்வரலாறு; ஒரு சமூக சேவகிக்கு …அவரது கடமைக்கு உறுதுணையாக நின்ற அரசு இயந்திரத்தின் பிரதிநிதிகள் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூரும் கட்டுரை உங்களுடையது. அந்த உதவிகளால் சமூகமும் மக்களும் அடைந்த பயனைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது உங்கள் எழுத்து.

  ஒரு பெண்ணே தாயாகவும் மாமியாராகவும் வேறு வேறு குணங்களைக் காட்டக் கூடும். உங்கள் பார்வையில் தாயை ஒத்த குணத்துடன் தமிழக அமைச்சர்கள் உங்கள் பணிக்கு உதவி செய்த நிகழ்சிகளை ஆவணப் படுத்துகிறீர்கள்.

  அவர் அப்படிபட்டவராம், மோசமான நடத்தை உள்ளவராம், இவ்வாறெல்லாம் நான் கேள்விப் பட்டேன் என நீங்கள் சொன்னால்தான் நான் அதிர்ச்சி அடைவேன்.

  அது போன்று கேள்விப் பட்ட வதந்திகளை எழுதுவது ஒரு மூன்றாம்தர பத்திரிக்கை ஆசிரியரின் வேலை. அது போல நீங்கள் நேரில் எதிர்கொள்ளாத செய்திகளை எழுதி புறம் கூறி புகழ் சேர்க்கும் நிலையில் நீங்கள் இல்லை என்பதை நானறிவேன். நக்கீரர் போல அஞ்சா நெஞ்சுடன் கருத்துரைக்கும் புனைப்பெயர் அவர்களும் இதனை நிச்சயம் ஒப்புக் கொள்வார்.

  நீங்கள் சமூகப் பணியாற்றிய காலகட்டத்தில் சமூகத்தில் மக்களின் நிலை என்ன? மக்கள் நிலையை உயர்த்த அரசு என்ன முயற்சி செய்தது? அரசின் திட்டங்களை அமல்படுத்தும் அரசு அதிகாரிகள் என்னென்ன இடர்களை எதிர் கொண்டார்கள்? சமூகத்திற்கு பலகாலம் அருந்தொண்டாற்றிய, பழுத்த அனுபவம் உள்ள நீங்கள் உங்கள் பார்வையின் வாயிலாக கூறும் ஆலோசனைகள் என்ன? இத்தலைமுறையினர் உங்கள் அனுபவத்தின் வாயிலாக என்ன அறிந்து கொள்ள வேண்டும்? தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  உங்கள் களப்பணி முடிந்திருக்கலாம், ஆனால் பெற்ற அனுபங்கள் கூறும் படிப்பினையை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரை உங்கள் பணி முடியவில்லை. அது எழுத்துப் பணியாக மாறியுள்ளது அவ்வளவுதான்.

  சென்ற வார விவாதங்கள் உங்கள் மனதினை மிகவும் நோகச் செய்து விட்டதாகத் தோன்றுகிறது. எதையும், யாரையும் துணிவுடன் எதிர்கொள்ளும் சலசலப்புக்கு அஞ்சாத சீதம்மா அவர்கள் சிறிது அயர்ச்சி அடைவது உடல் நிலை கொடுக்கும் வருத்ததினால்தான் என்பதும் தெளிவாகப் புரிகிறது. ஓய்விற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள், உங்கள் கட்டுரைகளைப் படிக்கக் காத்திருக்கும் என்போன்ற வாசகர்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் தொடர்ந்து கட்டுரையை எழுத வேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடம் என் சார்பாகவும், என் போன்ற கருத்துள்ளவர்கள் சார்பாகவும் உங்கள் முன் வைக்கிறேன். தயவு செய்து உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் அம்மா.

  நன்றி.

  ….. தேமொழி

 3. Avatar
  Venkat Swaminathan says:

  அன்புள்ள சீதா லட்சுமி அம்மையார் அவர்களுக்கு,

  உங்கள் முடிவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. நீண்ட வேறுபட்ட அனுபவங்கள் உங்களுக்கு. உங்களுக்கு நல்லதாக பட்டவற்றையும், உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு நல்லது செய்தவர்களின் நல்லதுகளை மாத்திரமே எழுதினாலும், அந்த வரையில் அது உண்மை, நல்லது நேர்ந்திருக்கிறது என்ற அளவில் அது பதிவு பெறவேண்டும். நீங்கள் பதிவு செய்வதில் தவறில்லை. அவர்களில் பலர் 95சதவிகிதம் தீய சக்திகளே. நாட்டைக் கெடுத்திருக்கிறார்கள். தம் காலத்தில் சுற்றியிருந்த மக்களைக் கெடுத்திருக்கிறார்கள். அதிகார பலத்தால், தம்மைப் பற்றிய தமது நல்ல வேஷங்களையே விளம்பரப்படுத்தி நம்ப வைத்திருக்கிறார்கள். ராவணன் சாம வேதத்தில் தேர்ந்தவன். சிவ பக்தி உள்ளவன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஈருலகையும் தந்து தன்னையும் அழித்துக்கொண்டான் மகாபலி. நாசமடைந்திருந்த ஜெர்மன் நாட்டை பத்து வருடங்கலில் ஒரு பெரிய வல்லரசாக்கிக் காட்டினான் ஹிட்லர்.ஒரு கார்பொரலிலிருந்து ஃப்யூரர் ஆனான் இபபடிப் பல சிறப்புக்களை தமிழ் நாட்டிலும் இவ்வளவில் சொல்லமுடியாவிட்டாலும் கொஞ்சமாவது சொல்ல தகுந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். இருந்தார்கள். ஆனால் அதுவே அவர்கள் முழுமையல்ல. முழுமை மகா கோரமானது. இருந்தாலும், உங்கள் அனுபவத்துக்கும், உங்கள் சாது சுபாவத்துக்கும், முதுமையில் நினைவு கொண்டு எழுத முடிவதற்கும் ஏற்ப உண்மையை எழுதுகிறீர்கள். எழுதுங்கள். எழுதாவிட்டால் அது ஒரு இழப்பு

  ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் நல்லதே சொல்லும் ஒரு தலைவர், பண்பும் நாகரீகமும் ஆன பேச்சுக்களே அனுமதிக்கப்படும் ஒரு சபையில், மைக்கைக் கையால் பொத்திக்கொண்டு மிக ஆபாசமாகப் பேசியதாக ஒரு தகவல் எனக்குவந்தது. நம்பகமான இடத்திலிருந்து. நான் இதை நம்புகிறேன். ஆனால் இதை அந்த நம்பகமான இடம் தான் பேசவேண்டுமே தவிர நான் இல்லை. இப்படி நிறைய உண்டு. சில பத்திரிகைகளில் புகைப்படத்தோடு வெளிவந்தவை இவற்றையெல்லாம் ஒதுக்கி விட முடியாது. காந்தியையும் கண்ணதாசனையும் போல நடந்ததையெல்லாம் தயக்கமில்லது எழுதுவார்கள். சிலர் உலகம் அறிந்ததைக்கூட முற்றுமாக மூடி மறைத்து தம்மைப் பற்றி பெருமையாக அலங்கார வார்த்தைகளில் சொல்லிக்கொள்வார்கள்.

  ஆனால் நீங்கள் உங்களால் முடிந்ததைத் தான், உங்கள் அனுபவத்தைத் தான் எழுதுவீர்கள். உங்களுக்கு உண்மையாக இருந்தால் போதுமே. அதுவே ஒரு பொக்கிஷம் தான். நீங்கள் உங்களைத் தான் எழுத முடியும். நீங்கள் அல்லாததை எப்படி எழுத யாரும் நிர்ப்பந்திக்க முடியும்?

  தயவு செய்து தொடருங்கள். அவரவர் பொறுப்பு அவ்வளவே.

 4. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் சீதாம்மா,

  உங்களது கடிதம் படித்து மனது வருந்தியது. சிலந்தி வலைகள் கை விலங்காகுமா ? வேண்டாம்மா…எந்த சின்ன வார்த்தையும் உங்கள் இதயக் கோட்டையைத் துளைக்க முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த என்னை இந்தக் கடிதம் யோசிக்க வைக்கிறது. உங்கள் அனுபவங்கள் தான் உங்கள் எழுத்துக் கண்ணாடி …உயிருக்கு உரம். ஒரு நல்ல விவசாயி களைகளுக்கு பயப்பட மாட்டார். பாராட்டியோ, சீராட்டியோ, எதிர்த்தோ, எழுதி இருந்தாலும் கூட திரு.புனைபெயரில் அவர்கள் சொல்லியிருப்பது போல பின்னூட்டங்களை களைகளாக புறந்தள்ளி விடுங்கள்.

  உங்களைப் பாராட்டுவது என்பது தேனோடு தேன் கலப்பது போலத் தான். ! உங்கள் அனுபவ முத்துக்களை உங்கள் நரை.. திரை போட வேண்டாம். அலங்காரம் செய்து திண்ணைக்கு அணியாக்கட்டும்.

  எழுதாமல் விடாதீர்கள் . உங்களுக்கும், எங்களுக்கும் அது தான் ‘யூரியா’..

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்

 5. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள சீதாலட்சுமி அவர்களுக்கு,

  வணக்கம். தங்களின் கடிதம் கண்டு அதிர்ச்சியுற்றேன். இதுவே நம் எழுத்துலகின் சாபக்கேடு! நல்ல எழுத்தை நம் மக்கள் பாராட்டமாட்டார்கள். ஆனால் குறை கூறுவதில் நாம் எப்போதுமே குபேரர்கள்! இது நம்மிடையே ஊறியுள்ள நண்டு குணம்.நம்மால் முடியாவிட்டாலும் அடுத்தவன் உயரம்போவதை நாம் விடாமல் பிடித்து கீழே இறக்கிவிடவேண்டும். இதில்தான் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

  நம் தமிழ்ச் சமுதாயம் மதம், சாதி, அரசியல் கட்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்று இன்று பிளவுபட்டு பரிதாப நிலையில் உள்ளதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது. இதை எந்த எழுத்தாளனும் எழுதி மக்களின் மனநிலையை மாற்றவும் இயலாது. எழுத்துக்கும் சமுதாய அவலத்துக்கும் தொடர்பே இல்லாத நிலைதான் நிலவிவருகிறது. படித்து பட்டம் பெறவது எல்லாம் சுயநலத்துக்கும் சுய முன்னேற்றதிற்குமட்டுமே! இந்த ஏட்டு சுரைக்காய்கள் கறிக்கு உதவமாட்டார்கள். இதனால்தான் சமுதாய நலன் சீர்கெட்ட நிலையிலேயே இன்னும் உள்ளது.

  இத்தனை ஆண்டகளாக எத்தனை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், லட்சோபலட்சம் தமிழ்ப் பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன் கண்டுள்ளது தமிழகம்? மனிதனை மனிதனாக ஏற்க மறுக்கும் சாதி வேற்றுமை பார்க்கும் மிருகங்களை இந்த பட்டமும் படிப்பும் மாற்ற இயலவில்லையே? பின்பு இது என்ன கல்வி?

  இதுபோன்ற சூன்யமிக்கச் சூழலில் பொதுநலத் தொண்டிலும் சமூகச் சேவையிலும் பழுத்த அனுபவம் கொண்ட சீதாலட்சுமி அவர்கள் பல்வேறு இன்னல்களின் மத்தியில் சமுதாயத்திற்கு பயன்மிக்க வகையில் இந்தத் தொடரை எழுதிவருவதை நாம் முழுமனதுடன் வரவேற்க வேண்டும். அதற்கு மாறாக அவரின் மனம் புண்படும் வகையில் நாம் எழுதுவது முறையன்று. நமக்கு வேண்டாதவர்களைப்பற்றி தாறுமாறாக எழுதவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் முறையாகும்?

  தமிழ்ச் சமுதாய நலன் கருதி நிறைய சொல்லவந்துள்ள சீதாலட்சுமி அவர்கள் புதிய ஊக்கத்துடன் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்!….டாக்டர் ஜி.ஜான்சன்.

 6. Avatar
  மலர்மன்னன் says:

  ஸ்ரீமதி ஸீதா லட்சுமி அம்மாவுக்கு நான் தனிப்பட்டமுறையில் மின்னஞ்சல் எழுதினேன். அவர் போக்கில் அவர் எவற்றை எழுதக் கருதுகிறாரோ அவற்றைத் தொடர்ந்து எழுதுமாறு வேண்டினேன். முதுமைக்குரிய பல்வேறு உபாதைகளுடன் தப்பும் தவறுமாக வலிகளைப் பொறுத்துக் கொண்டு எழுதி வருவதாகவும், கணினியின் நுட்பங்களை அறியாத போதிலும் தாம் முக்கியமானவை, அவசியமானவை எனக் கருதுவனவற்றைப் பதிவு செய்வதாகவும் வேறு சில தலைப்புகளில் எழுதும் எண்ணம் இருப்பதாகவும் ஆனால் மனம் சலித்துப் போவதாகவும் கூறினார். உயர் பதவியினை வகிக்கும் அரசு அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரசியல்வாதிகளின் நிறைகளோடு குறைகளையும் அறியும் வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள் ஆதலால் அவற்றையும் குறிப்பிடுவது பதிவுகளை முழுமை செய்வதாக இருக்கும் என்ற நல்லெண்ணம் காரணமாகவே எனது அவ்வாறான கருத்தை வெளியிட்டதாகவும் அதனை ஏற்பதும் ஏற்காததும் அவரது உரிமை அதையொட்டித் தாம் தெரிவிக்க விரும்புவதைத் தொடர்ந்து பதிவு செய்து பயன் அளிப்பதைவிட்டு எழுதுவதையே நிறுத்திக்கொள்ளத் தீர்மானம் செய்வது சரியல்ல என்றும் கூறினேன். அதை அவர் அப்போது ஏற்றுக்கொண்டார் என்றே இப்போதும் கருதுகிறேன். ஏனெனில் எனது மின்னஞ்சலைப் படித்துவிட்டு மிகுந்த உற்சாகத்துடன் நீண்ட நேரம் தொலைபேசி வழியே உரையாடிக்கொண்டிருந்தார். நாங்கள் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்திருக்கிறோம் என்பதை இருவருமே உணர்ந்தோம். எழுதுவதில் அவருக்குச் சலிப்பு ஏற்பட நானும் காராணமாகிவிட்டிருப்பின் அதற்காக வருந்துவதாகக் குறிப்பிட்டு அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து எழுதுமாறு வேண்டிக்கொண்டேன். நானும் பல்வேறு உபாதைளுடன்தான் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதேபோல் அவரும் சமுதாய நலன் கருதி தமது அனுபவங்களைப் பதிவு செய்வதைத் தொடருமாறும் அப்போது விடுத்த வேண்டுகோளை இங்கும் உறுதி செய்கிறேன். சகோதரி ஸீதா, நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பையும் மதிப்பையும் உறுதி செய்யவாவது உங்கள் பதிவுகளைத் தொடருங்கள்.
  -மலர்மன்னன்

 7. Avatar
  seethaalakshmi says:

  திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு நான் எழுதிய தனி மடல் பொது மேடைக்கு வந்துவிடும் என்று நினைக்கவில்லை. என் மதிப்பிற்குரியவர்களுக்கு சங்கடம் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.
  விமரசனம் என்றால் முதலில் கல்கி நினைவிற்கு வந்து கொண்டிருந்தார். சுப்புடுவும் கச்சேரி மேடைகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தார். மனிதர்களை மயக்கும் திரை உலகை தன் விமர்சனங்களால் ஆட்டிப் படைப்பவர் நம் வே.சா அவர்கள். அதுமட்டுமல்ல அவரது நினைவலைகள்பார்த்துதான் எனக்கும் நினைவலைகள் எழுதும் ஆசை தோன்றியது. மயிலைப் பார்த்து வான்கோழியும் ஆடுவதைப் போல் இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
  மலர் மன்னனுடன் பழகாவிட்டாலும் அவர் எழுத்தைப் படிக்கவும் பலரிடம் அவரைப்பற்றி விசாரித்தேன். அவருடன் பேச வெண்டும் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். சமீபத்தில் என் ஆசை நிறைவேறியது.அவரிடம் பணிவுடன் சொல்லிக் கொள்வது ஒன்று. அரசில் அதிகார மையத்தில் பணி புரிந்தவர்கள் ஓய்வு பெற்றாலும் தங்கள் அனுபவங்களை வெளிப்படையாக எழுத முடியும். அன்றும் சரி இன்றும் சரி எங்கள் பெண்களுக்கு சோதனை வரும் பொழுது நாங்கள் அணுக வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள்.எங்களால் யாரையும் பகைத்துக் கொள்ள முடியாது. எங்கள் நிலை அப்படி. பணியை விட்டு விலகினாலும் இப்பொழுதும் ஒரு சிலருக்காவது இயன்ற உதவிகள் செய்கின்றேன். அதனால்தான் வெளிப்படையாக எவர் பெயர்களையும் எழுத வில்லை. ஆனாலும் சில கசப்பான செய்திகளை மறைமுகமாக எழுதியிருக்கின்றேன். பயிற்சி கொடுக்க எண்ணுபவர்கள் பல பகுதிகளை நீக்குகின்றார்கள். இது அவர்களுக்குத் தேவையில்லை
  நாமும் என்ன செய்கின்றோம். பிடிக்காதவர்களூக்கு ஓட்டு போடுவதில்லை. அத்துடன் நம் குடும்பத்தில், நமக்குத் தெரிந்தவ்ர்களீடத்தில் நம் எண்ணங்களைக் கூறூகின்றோம். அப்படியும் மற்றவர்களை முழுமையாக மாற்ற முடிவதில்லை .எழுதும் பொழுது கோபத்தைக் காட்டுகின்றோம். குற்றம் புரிகின்றவர்கள் பயப்பபடவில்லை அவர்களைப் பார்ப்பவர்கள், அவர்கள் பேச்சைக் கேட்பவர்களுக்குத்தான் அச்சமும் வெறுப்பும் வருகின்றது
  முற்றும் விட்டவனுக்கு முக்காடு எதுக்கு?. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான் வேதனை. ஊழலை வெறுத்து எழும்பிய இயக்கத்தின் வேகம் இப்பொழுது எந்த நிலையில் உள்ளது? பாலியல் கொடுமை, கொலையைப் பார்த்துக் கொதித்து எழுந்தவர்களீன் வேகம் குறைந்துவிட்டதே? ஒரு நாள் யுகப் புரட்சி வரும் . பொறுமைக்கும் எல்லையுண்டு. என்னால் இதற்கு மேல் விளக்கமாக எழுத முடியவில்லையே
  தேமொழி நிரம்பப் படித்தவர்கள்> திண்ணையால் எனக்கு கிடைத்த இன்னொரு மகள். டாக்டர் ஜான்சன் ஆரம்பத்திலிருந்து உடன் வரும் துணை. ஜெயாவும் என் மகளே
  திரு புனைப் பெயர் அவர்களிடமும் ஓர் வேண்டுகோள். என்னைப் புறக்கணிக்க வேண்டாம். உங்கள் கொதிப்பு, ஆத்திரம், எல்லாம் உணர்வேன். வார்த்தைகள் பிரயோகம் மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளூம்படி வேண்டிக் கொள்கின்றேன். பாரதத்தில் பீஷ்மரும் துரோணாச்சரியர் போன்றவர்கள்போல் திண்ணையில் பல அறிஞர்கள் இருக்கின்றனர். பாஞ்சாலி ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டாள். சொல் கணைகளால் நான் பாதிக்கப் பட்டேன். முதுமையால் ஏற்பட்ட பலஹீனம் என்னைப் புலம்ப வைத்துவிட்டது. இருவரும் நடந்ததை மறப்போம். நீங்கள் அவசியம் என் தொடரைப் படிக்க வேண்டும். தொடரைத் தொடர்வேன் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  இப்பிரச்சனையைக் கையாண்ட விதத்தில் தின்ணையின் பெருமை, அதன் தனித் தன்மை பாராட்டுதற்குரியது
  என் தொடர் தொடர்ந்துவரும் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்
  சீதாலட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *