வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2

This entry is part 25 of 30 in the series 20 ஜனவரி 2013

 Cover image -1

வேதாளத்தின் மாணாக்கன்

(The Devil’s Disciple)

அங்கம் -1 பாகம் -2

மூன்று அங்க நாடகம்

[முதற் காட்சி]

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார். அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

 

The Execution of Peter Dudgeon

 

 

Peter Dudgeon Execution
நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra), காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

Fig 1 Father is dead

 

 

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம். இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது. இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது . பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது. அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது. அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது. அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில் எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது. அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர். அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள் உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக் [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாராகிறான். இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுகிறார். அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

நாடக உறுப்பினர்

1. ரிச்செர்டு டச்சியான் [35 வயது] (Richard Dudgeon)

2. கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன் (Christy Dudgeon)

3. கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன் [வயது 50]

(Rev. Anthony Anderson)

4. ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி [30 வயது] (Wife : Julia Anderson)

5. ஜெனெரல் பர்காயின் [50 வயது] (British General Burgoyne)

6. மேஜர் சுவின்டன் [55 வயது] (Major Swindon)

7. ஸார்ஜன்ட் (Sergeant)

8. வழக்கறிஞர் ஹாக்கின்ஸ் (Lawyer Hawkins)

9. மிஸிஸ். டிமதி டச்சியான் : [வயது 60] [Mrs Timothy Dudgeon : Mother of Richard Dudgeon)

10. சாப்பிளின் புரூட்நெல் (Chaplin Mr Brudenell)

11. சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா டைட்டஸ் டச்சியான் & மனைவி (Uncle Titus Dudgeon & Wife)

13 இளம் மங்கை : எஸ்தர் [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

Fig 2 Have you told her

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -1 பாகம் -2

மூன்று அங்க நாடகம்

[முதற் காட்சி]

இடம்: அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர். [Websterbridge, New Hamshire, U.S.A..]

நடந்த ஆண்டு : 1777 (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது : ஒரு நாள் இலையுதிர் காலத்து இருண்ட மாலை நேரம். ஆறு மணி இருக்கலாம்.

அரங்க அமைப்பு: ஓர் எளிய குடியானவரின் பழைய வீடு. வயதான மூதாட்டி மிஸிஸ் டச்சியான் சமையல் அறையில் நாற்காலில் அமர்ந்து சாய்ந்துள்ளார். இரவு பூராவும் விழித்திருந்ததால் அவள் தளர்ச்சி அடைந்துள்ளது முகத்தில் தெரிகிறது. பிரிஸ்பிட்டீரியன் கிறித்து ஆலயத்துக்கு ஞாயிறு தோறும் தவறாது செல்லும் மத நேய அபிமானி அவள். சோபா, நாற்காலி, மேஜை யாவும் அழுக்கடைந்து உள்ளன. அடுத்து அந்த அறையில் 16 அல்லது 17 வயதிருக்கும் ஓரிள மங்கை படுத்திருக்கிறாள். பயந்த சுபாவப் பெண். கருத்த கூந்தல், பழுப்பு நிறத்தவள். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. மூன்றாவது தட்டலில் முதிய வயது மாது விழித்தெழுகிறாள். கதவைத் திறந்ததும் முதிய மாதின் சின்ன மகன் கிரிஸ்டி நுழைந்து தன் தந்தை மரித்ததை அறிவிக்கிறான். அந்த அதிர்ச்சியை மிகையாக்க அவனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் கிறித்துவப் பாதிரி அந்தோனி ஆண்டர்சன் வருகிறார்.

 

+++++++++++++++++

Fig 3 The Lord has laid his hand

நாடக முதற்காட்சி

 

கிரிஸ்டி: ஆமாம் அம்மா ! ஆனால் அது என் தவறல்ல. நாங்கள் நெவின்ஸ்டவுன் [Nevinstown] சென்ற போது, தந்தை நோய்வாய்ப் பட்டு படுக்கையில் கிடந்ததைப் பார்த்தோம். முதலில் அவருக்கு எங்களைத் தெரிய வில்லை. பாதிரியார் அவர் பக்கத்தில் அமர்ந்து, என்னை அனுப்பி விட்டார். அன்றிரவு அவர் காலமானார் அம்மா !

முதிய மாது : [ஆவேசமாய் வெடித்துக் கண்ணீருடன்] என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. என் மேல் பாரம் கனத்து விழுந்து விட்டது. உன் தந்தையின் சகோதரன் பீட்டர் வாழ்க்கை பூராவும் நமக்கு அவமானம் உண்டாக்கினான். புரட்சிக்காரன் போல் நடுத் தெருவில் பொதுத் தூக்குக் கம்பத்தில் தூக்கில் இடப் பட்டான். உன் தந்தை வீட்டுக்குள் முடங்கிக் குடும்பத்துக்கு ஆதரவாய் இருக்காமல், பீட்டர் பின்னால் சென்று மரித்தார். இப்போது பொறுப்பு யாவும் என் முதுகில் ஏறிவிட்டது. அத்தோடு பீட்டரின் மகள் இந்த இளங் குமரியையும் யாருமின்றி என் வீட்டுக்குள் வந்து கிடக்கிறாள். அது மாபெரும் பாபம். அடிப்படைப் பாபச் செயல் !

கிரிஸ்டி: இருந்தாலும் அம்மா ! இன்றைய காலைப் பொழுது இனிதாக இருக்கப் போகிறது.

மிஸிஸ் டிமதி டச்சியான்: யாருக்கு இனிதாக இருக்கப் போகுது ? உனக்கா, எனக்கா, ஊர் உலகுக்கா ? உன் தந்தை மரித்திருக்கிறார் ! இனிய காலை என்று உளறுகிறாயே ! உன் பந்தம், பரிவு, பாசம் எல்லாம் எங்கே போச்சு சின்ன மகனே !

கிரிஸ்டி: நான் உனக்கு ஒன்றும் தொல்லை தர இங்கு வரவில்லை. எனது தந்தையார் இறந்தாலும் நல்ல நாள் இது என்று சொல்வதில் தவறில்லை அம்மா !

மிஸிஸ் டச்சியான்: [வெறுப்புடன்] அட கடவுளே ! என் இரண்டு பிள்ளைகளும் இப்படிப் பிறக்க வேண்டுமா ? ஒரு மகன் மூடன் ! அடுத்த மகன் ஒரு பாபி ! முன்கோபி ! தெருச் சுற்றி ! வீட்டுக்கு வருவதே இல்லை! வெளியே மூர்க்கர், முரடர், கயவர், ஊதாரிப் பயல்களோடு சூதாடி வருபவன் ! இவனெல்லாம் அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கப் போகிறான் ! இந்த அயோக்கன் பீட்டர் பின்னால் சுற்றுகிறான் !

 

Fig 4 It is his will I suppose.

 

 

[யாரே கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது.]

கிரிஸ்டி: [இடத்தை விட்டு நகலாது] அது நமது கிறித்துவக் கோயில் பாதிரியாராக இருக்கும் !

மிஸிஸ் டச்சியான்: [சட்டென] மரம் போல நிற்கிறாயே ! போய்க் கதவைத் திற ! மிஸ்டர் ஆண்டர்சன் உள்ளே வரட்டும் !

[மிஸிஸ் டச்சியான் முகத்தை மூடிக் கவலையுடன் திரும்பியுள்ளார். கிரிஸ்டி கதவைத் திறந்ததும் பிரிஸ்பிட்டீரிய ஆலயப் பாதிரி அந்தோனி ஆண்டர்சன் உள்ளே நிமிர்ந்த நடையில் மெதுவாக நுழைகிறார். வயது 50 இருக்கலாம். உறுதியான உடலும், உடல் நலமும், உத்தியோக மிடுக்கும் தெரிகிறது.]

ஆண்டர்சன்: [உள் நுழையும் போது கவலையுடன் இருக்கும் முதிய மாதைப் பார்த்து, கிரிஸ்டியிடம்] உன் அம்மாவிடம் அதைச் சொல்லி விட்டாயா ?

கிரிஸ்டி: அம்மாவே என்னைச் சொல்ல வைத்து விட்டாள் !

ஆண்டர்சன்: [மேல் கோட்டைக் கழற்றி ஆணியில் தொங்க விட்டு நேராக மிஸிஸ். டச்சியானைப் பார்க்க வருகிறார்] சகோதரி ! கடவுள் உன் மீது பெரும் பாரத்தை மிகையாக வைத்து விட்டார்.

மிஸிஸ் டச்சியான்: அது அவன் விருப்பம். விதி என்று தெரியுது எனக்கு. நான் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனாலும் அவன் வைக்கும் பளு எனக்கு அதிகமே. என் கணவர் டிமதி ஏன் ஸ்பிரிங்டவுன் [Springtown] போய், தூக்கில் தொங்கப் போகும் ஒருத்தனுக்குத் தானவன் சொந்தக்காரன் என எல்லாருக்கும் சொல்ல வேண்டும் ? தவறு செய்த அந்த பீட்டருக்கு அந்தக் கொலை தண்டனை ஏற்றதே !

ஆண்டர்சன்: பீட்டரும், டிமதியும் சகோதரர் இல்லையா மிஸிஸ் டச்சியான் ?

மிஸிஸ் டச்சியான்: பீட்டரைத் தன் தனயனாக என் கணவர் ஒரு போது கருதியதில்லை, எங்கள் திருமணத்துக்குப் பிறகு ! அவனைச் சகோதரன் என்று காட்டி என்னை அவமானப் படுத்த என் கணவர் விரும்ப வில்லை. இப்படி 30 மைல் சென்று பீட்டர் பார்ப்பானா என் கணவர் தூக்கில் தொங்கு வதற்கு முன்பாக ! 300 அடி கூட நடந்து வரமாட்டான் ! நான்தான் எனது சிலுவையை எத்தனை எளிதாய்ச் சுமக்க வேண்டுமோ அவ்விதம் தூக்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்டர்சன்: [வருத்தமுடன்] பீட்டரைத் தூக்கிலிடும் போது உன் மூத்த மகனும் இருந்தான் அந்தக் காட்சியைக் காணக் கூட்டத்திலே, மிஸிஸ் டச்சியான் !

மிஸிஸ் டச்சியான்: [மிக்க வியப்புடன்] என்ன என் மகன் ரிச்செர்டா ?

 

Fig 5 Let it be a warning

 

 

 

ஆண்டர்சன்: ஆமாம் சகோதரி !

மிஸிஸ் டச்சியான்: [ஆத்திரமோடு] என் மகனுக்கு அது ஓர் எச்சரிக்கையாய் இருக்கட்டும் ! அவனொரு கயவன், காட்டான், கடவுளை நம்பாதவன் ! அவனும் ஒரு நாள் அப்படித் தூக்கில் தொங்கப் போகிறான், பாருங்கள் !

ஆண்டர்சன்: அப்படி அவனைச் சபிக்க வேண்டாம் சகோதரி !

மிஸிஸ் டச்சயான்: என் கணவர் டிமதி ரிச்செர்டைப் பார்த்தாரா ?

ஆண்டர்சன்: ஆமாம் சகோதரி ! பீட்டர் தூக்கு மரத்தில் தொங்கவிடப் பட்ட அந்த கோரக் காட்சியை டிமதியும், ரிச்சர்டும் பார்த்தனர் !

 

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1. Penguin Plays : The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2. http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3. http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple” – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs [You Tube : The Devil’s Disciple Drama]

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 18, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதிண்ணை ஆசிரியர் அவர்களுக்குவால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *