சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி:
தீன் முகமது என்கிற ஷேக் அப்துல்லா ஒரு ரயில் பயணியின் பணப்பையைத் திருடிய குற்றத்துக்காக முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தப்பட்டபோது, அதிக பட்சமாக அவனுக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனைதான் கிடைத்திருக் கும். ஆனால் நல்ல வேளையாக அவனது கை ரேகைகள் முன்னதாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததால் ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கைவரிசை யைக் காட்டுவதில் அவன் பழம் பெருச்சாளி என்பதைப் போலீசாரால் நிரூபிக்க முடிந்தது. ரயில் திருட்டுகளுக்காக ஏற்கனவே மூன்று முறை சிறைவாசம் செய்திருந்த அவனுக்கு மாஜிஸ்திரேட் பதினெட்டு மாதச் சிறை தண்டனை விதித்தார்.
‘ரயில் திருடர்கள் வரலாறு’ என்ற தமது நூலில் இத்தகவலைத் தருகிறார், கடந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் சென்னை ராஜதானி ரயில்வே காவல் பிரிவில் பணியாற்றிய பாப்பாராவ் நாயுடு என்ற அதிகாரி (Rai Bahadur M. Pauparao Naidu: The History of Railway Thieves, with Illustrations and Hints on Detection, 4th ed. (Madras: Higginbothams Limited, 1915).
வேறொரு குற்றவாளி பதிமூன்று முறை வெவ்வேறு பெயர்களில் குற்றம் செய்து ஆறு முறை சிறை சென்றவன் என்பது கைரேகைகள் பதிவுக் காப்பகத்திலிருந்து பெறப் பட்ட அவனது கைரேகைகளிலிருந்து தெரிய வந்ததாக மேலும் எழுதுகிறார், பாப்பாராவ் நாயுடு. அவனுக்கு இரண்டு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டதாம்.
சென்னை காவல் துறையில் 1888 ஆம் ஆண்டு சேர்ந்த பாப்பாராவ் நாயுடு, தமது திறமை, புத்திக் கூர்மையால் மட்டுமின்றி ‘அப்பழுக்கற்ற’ ராஜ விசுவாசத்தாலும் வேலையில் மளமளவென முன்னேறி விரைவில் அதிகாரி நிலைக்கு உயர்ந்து விட்டார். சிறப்பாகப் பணியாற்றியமைக்காக 1909-ல் போலீஸ் தங்க மெடல் விருது அளித்து கெளரவிக்கப்பட்ட பாப்பாராவ், 1914-ல் ராவ் பகதூர் பட்டமும் பெற்றார்.
தொடக்கத்தில் காவல் துறையில் கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்கென்றே இருந்த தனிப் பிரிவில் பணியாற்றிய பாப்பாராவ், அது குற்றப் புலனாய்வுப் பிரிவாக மாற்றம் பெற்றபோது அதில் பணியைத் தொடர்ந்து, பின்னர் ரயில்வே காவல் பிரிவுக்கு மாற்ற லானார். அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்தான் ரயில் திருடர்கள் வரலாறுபற்றி நூல் எழுதியிருக்கிறார், இவர்.
தண்டனைக் காலம் முடிந்து, சிறையிலிருந்து வெளியே வரும் தொழில்முறைக் குற்றவாளிகள் தங்கள் ஊரையும் பெயரையும் மாற்றிக்கொண்டு திரும்பவும் அதே குற்றங்களைச் செய்து பிடிபடும்போது அவர்கள் பழைய குற்றவாளிகளா புதியவர்களா என்பதைக் கண்டறிவதில் முன்பெல்லாம் போலீசார் மிகவும் சிரமப்பட வேண்டி யிருந்தது. ஏனென்றால் மாட்டிக் கொள்ளும் எந்தக் குற்றவாளியும் தனக்கு அதுதான் முதல் தடவை என்று தலையில் அடித்து சத்தியம் செய்வான்! அப்போதெல்லாம் ‘பிடிபட்டவன் குற்றபரம்பரையைச் சேர்ந்தவன், ஆகவே இவன்தான் குற்றவாளி’ என்று வாதிடுவார்களாம்!
முன்பெல்லாம் பரம்பரை, பரம்பரையாகக் குற்றம் செய்வதே தொழிலாகக் கொண்டவர்கள் எனச் சில வகுப்பாருக்கு முத்திரையிட்டு, பிடிபடும் குற்றவாளி குறிப்பிட்ட குற்ற பரம்பரையைச் சேர்ந்தவன் எனத் தெரிவித்துக் குற்றத்தை நிரூபிக்கும் வழக்கத்தை பிரிட்டிஷ் ஆட்சியின் காவல் துறை மேற்கொண்டு வந்தது. வழக்குகளை விசாரித்த சில ஆங்கிலேய நீதிபதிகளேகூடப் பிறப்பின் அடிப்படையில் ஒருவனைக் குற்றவாளி என்று சாதிப்பது தவறு என்று இந்த வழக்கத்தைக் கண்டித் திருக்கிறார்கள்.
1872-ல் இயற்றப்பட்ட இந்தியச் சாட்சியங்கள் சட்டத்தில் கைரேகையை ஒரு சாட்சியாக ஏற்கலாம் என அனுமதிக்கும் பிரிவு 1899-ல்தான் இடம் பெற்றது. ஆனால் அதற்கு முன்பே 1895 முதல் கைரேகைகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் நடைமுறை சென்னை ராஜதானியின் காவல் துறையில் மேற்கொள்ளப்பட்டுவிட்டிருந்தது! அதற்குப் பிறகுதான் 1897 ஜூன் 12 – ம் நாள் பிரிட்டிஷ் இந்திய அரசு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள காவல் துறைகளுக்கு ஆணை பிறப்பித்தது.
இந்திய சாட்சியங்கள் சட்டம் அங்கீகரித்ததற்கும் முன்பே, இந்தியக் காவல் துறை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டதற்கும் பிறகு, 1901-லிருந்துதான் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைகூட கைரேகைகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் முறையைப் பின்பற்றத் தொடங்கியது. உண்மையைச் சொல்வதானால் இந்தியக் காவல்துறையிடமிருந்துதான் இந்த உத்தியை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு கற்றுக் கொண்டது!
பாப்பாராவ் நாயுடு கைரேகைப் பதிவு முறையை மிகவும் சிலாகித்து எழுதிய போதிலும், இந்த நடைமுறையின் தோற்றுவாய், அதன் வளர்ச்சி ஆகியவற்றை எல்லாம் ஆராயவோ விவரிக்கவோ முற்படவில்லை. பழைய பெருச்சாளிகளைத் தாமதமின்றி அடையாளங் காண்பதற்கு அது எவ்வளவு வசதியாக உள்ளது என்பதை மட்டுமே அவர் விளக்குகிறார். இப்படி விளக்குவதாலேயே குற்றவியலில் கைரேகைப் பதிவு எப்போது தொடங்கியது என்று தேடும் ஆர்வத்தை அவர் தூண்டிவிடுகிறார்.
கைரேகைகளைப் பதிவு செய்து ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்பதை அறிவியல் ஆய்வுப் பூர்வமாக 1890 வாக்கில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் வங்காளக் காவல் துறையைச் சேர்ந்த அஸீஸுல் ஹக், ஹேம சந்திர போஸ் என்ற இரு இந்தியர்கள்தான். ஆனால் அந்த சாதனை யைத் தனதாக்கிக்கொண்டு புகழ் சம்பாதித்தவர், அவர்களின் மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் ஜெனரல் எட்வர்டு ஹென்றி (Edward Henry) என்ற ஆங்கிலேயர்!
1857-58 முதல் சுதந்திரப் போரின்போதே வங்காளத்தில் ஜங்கிப்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த வில்லியம் ஹெர்ஷல் (Willium Herschel) ஒருவரை அடையாளம் காண்பதில் கைரேகை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணரத் தொடங்கி விட்டார். 1860-ல் அவர் நடியா மாவட்டத்திற்கு மாற்றப்பட்டபோது, அங்கு இண்டிகோ சாய வர்த்தகம் வீழ்ச்சி அடைந்ததால் வேலை இல்லாத் திண்டாட்டம் மலிந்து குற்றங்கள் அதிகரிப்பதைப்பதைக் கண்டு கைரேகைப் பதிவு முறை ஆய்வில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். 1877-78-ல் ஹூக்ளி மாவட்ட கலெக்டராகவும் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றல் ஆன போது அங்கு குற்றவியல் நீதிமன்றங்களிலும் சிறைகளிலும் கைரேகைப் பதிவை அறிமுகம் செய்தார். அதன் பிறகு ஹெர்ஷல் இங்கிலாந்து திரும்பி விட்டார். அவர் சென்ற பிறகும் இந்தியாவில் இந்த வழக்கம் தொடர்ந்தது.
ஹெர்ஷலுக்குப்பின் இந்த ஆய்வில் ஆர்வம் காட்டியவர் எட்வர்டு ஹென்றி. அவர் வலியுறுத்தியதற்கு இணங்க, கைரேகைப் பதிவுமுறையில் உள்ள சாதக பாதகங்களை விசாரித்து அறிக்கை அளிக்க இந்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. தமது இந்திய உதவியாளர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பல பரிசோதனைகள் செய்து, தாமே கைரேகைகளைப் பதிவு செய்து, அவற்றைப் பாதுகாக்கும் முறையினால் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்ததாக இக்குழு வின் முன் சாட்சியம் அளித்தார், ஹென்றி. குழுவின் தலைவர் லார்டு பெல்பர் (Lord Belper) “இது உங்களுடைய கண்டுபிடிப்பா” என்று கேட்டபோது, அதற்கு “ஆம்” என்று பதில் சொன்னார், ஹென்றி. அதன் பேரில் வாடிக்கையான குற்றவாளி களை அடையாளம் காண அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்யும் முறை மிகவும் நம்பகமானது என்று ஆய்வுக் குழு அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆய்வுக் குழுவிடம் கைரேகைப் பதிவுமுறையைத் தமது கண்டுபிடிப்பு என்று ஹென்றி சொன்ன போதிலும், பின்னர் அஸீஸுல் ஹக், ஹேமசந்திர போஸ் இருவரின் பங்களிப்பை அரசுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு சன்மானம் கிடைக்கச் செய்தார். இந்த ஹேம சந்திர போஸ்தான் தந்தி அடிப்பதில் ஒற்றைக் குறியீடு முறையையும் கண்டுபிடித்து, கை ரேகை பற்றிய தகவலை காப்பகத்திலிருந்து உடனுக்குடன் வெளியிடங்களுக்குத் தெரிவிக்க அதனைப் பயன்படுத்தும் முறையையும் கண்டுபிடித்தவர்!
எட்வர்டு ஹென்றி 1901-ல் இங்கிலாந்து திரும்பி லண்டன் மாநகரக் காவல் துறை துணை ஆணையராகப் பதவி ஏற்றதும், கைரேகைப் பதிவுமுறையை அங்கும் அறிமுகம் செய்தார். அப்போது அவருக்குக் கீழே பணியாற்றியவர்கள் ‘கைரேகை முட்டாள்’ என்று அவருக்கு சங்கேதப் பெயர் சூட்டினார்களாம்! ஒரு நீதிபதி, கைரேகைப் பதிவை சாட்சியாக ஏற்க மறுத்து, “ஒரு மனிதனுடைய சரும அமைப்பின் பதிவையெல்லாம் சாட்சியமாக ஏற்றால் ஐரோப்பாவே கை கொட்டிச் சிரிக்கும்” என்றாராம்!
இவ்வாறெல்லாம் கேலிக்கு உள்ளான பிறகுதான் கைரேகைப் பதிவுமுறை ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. போயும் போயும் தமக்கு அடிமைப்பட்ட பிரஜைகளால் கண்டுபிடிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படும் முறையாயிற்றே என்ற அலட்சியமும் தயக்கமும்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும்!
{பாப்பாராவ் நாயுடு எழுதிய நூலின் மறுபதிப்பு 1995-ல் வெளிவந்தது (Vintage Press, Gurgaon). இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய ஆய்வாளர் விநய் லால், கைரேகைப் பதிவுமுறை பற்றிய மேலதிகத் தகவல்களை அதில் தெரிவித்துள்ளார்}
நன்றி: ஆழம் மாத இதழ் ஃபிப்ரவரி, 2013 (கிழக்கு பதிப்பக வெளியீடு)
+++++
- மணலும் (வாலிகையும்) நுரையும் (10)
- கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2
- கல் மனிதர்கள்
- மன்னிப்பு
- வானிலை அறிவிப்பு
- எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43
- நிழற்படங்கள்
- முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்
- சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்
- தீர்வு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.
- ஜெயாவின் விஸ்வரூபம்…
- கைரேகையும் குற்றவாளியும்
- 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை
- செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்
- விஸ்பரூபம் : புரியத்தான் இல்லை
- ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4
- ரணங்கள்
- மகாத்மா காந்தியின் மரணம்
- அதிர்ஷ்டம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
- வால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)
- விழுது
- அக்னிப்பிரவேசம்-21
- மதுரையில் மக்கள் கலை விழா
- அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
- இலக்கிய மாநாடு , அழைப்பிதழ்
- தாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு