தீர்வு

This entry is part 12 of 32 in the series 3 பிப்ரவரி 2013

எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இல்லையில்லை, அப்படியொன்று இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள். நானாகத்தான் அந்தப் பிரச்சினை க்குத் தீர்வு காண முடியும் என்கிறார்கள். சிலர் தீர்வு கண்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். சிலபேர் அழுது ஆகாத்தியம் செய்கிறார்கள். எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதில் இவர்கள் ஏன் இவ்வளவு குறியாக இருக்கிறார்கள்?
‘தீர்வுக்குக் கண்டிப்பாகச் செலவாகும். பணம் அனுப்புகிறோம்’ என்கிறார்கள். ‘வேண்டாம், வேண்டாம்’ என்று அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கிறது. அப்படியும் சிலர் ரொம்ப சாமர்த்தியமாக என்னைப் பார்த்துவிட்டுப் போக வந்த மாதிரி வந்துவிட்டு எனக்குத் தெரியாமலேயே சட்டென்று கண்ணில் படாத, ஆனால் நிச்சயம் பட்டே தீரக்கூடிய இடத்தில் அவர்கள் சக்திக்கு ஏற்ப ஒரு சிறு தொகையை வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்!
வேறு யாராவது வந்து பார்த்துவிட்டு, இதென்ன, பணத்தை இப்படிப் போட்டு வைத்திருக்கிறீகள் என்று லேசாகக் கடிந்துகொண்டு அதை எடுத்துப் படியில் பத்திரப்படுத்திவிட்டுப் போகிறார்கள். அப்படி வைக்கிற போதே அவர்களும் தங்கள் பங்கிற்குக் கொஞ்சம் வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள் போலும்! பொல்லாதவர்கள்தான்! படியில் வைக்கப் படுகிற பணம் குட்டி போட்டுக் குட்டி போட்டுப் பெருத்துக் கொண்டே போகிறதே!
இந்தக் கண்ணா மூச்சி ஆட்டத்தை எவ்வளவு காலந்தான் பொறுத்துக் கொண்டிருப்பது? பணத்தை வைத்துவிட்டுப் போகிறவர்கள் யார் என்று தெரிந்தாலாவது வலுக் கட்டாயமாகத் திருப்பிக் கொடுக்கலாம். ‘தயவு செய்து யாரும் பணத்தை வைத்துவிட்டுப் போகாதீர்கள்’ என்று வீட்டு வாசலில் எழுதிப் போடவா முடியும்?  அப்படி எழுதிப் போட்டால் சும்மா பார்த்துவிட்டுப் போக வருகிறவர்களும், ‘ஓஹோ, இவன் தன் தேவையைச் சொல்லாமல் சொல்லிக் கேட்கிறான் போலிருக்கிறது’ என அவர்களாகவே முடிவு செய்துகொண்டு தாமும் எதாவது தொகையை வைத்துவிட்டுப் போகிற விபரீதமும் நிகழ ஆரம்பித்துவிடலாம்!
சலித்துப் போய், சரி, இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடலாம் என்று ஒருநாள் மாலை தீராதே என அற்புத ராஜிடம் போனேன்.
“வாங்க, வாங்க, இதென்ன இங்க வந்துட்டீங்க? வழக்கமா நாம சந்திச்சுக்கற இடம் இது இல்லயே?” என்று ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியாகவும் வரவேற்றார், அற்புதராஜ்.
அவர் தனது பக்க வாட்டில் போட்டு வைத்திருக்கிற ஆசனத்தில் மெளனமாகப் புன்னகைத்தவாறு உட்கார்ந்தேன். மற்றவர்களால் எனக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிற, பிரச்சினையை அவருக்குக் காண்பித்தேன்.
“அடடே,” என்று பதட்டப்பட்டார், அற்புதராஜ். “என்ன இப்படிப் பண்ணி வெச்சிருக்கீங்க?” என்று குரலில் கொஞ்சம் கடுமை தோன்றக் கேட்டார்.
‘வில்லை நா ஒடிக்கலே டீச்சர்’ என்று சொல்கிற மாதிரி, “நானா எதுவும் பண்ணலை டாக்டர்” என்று பரிதாபமாகச் சொன்னேன்.
“ஆரம்பத்திலேயே பார்த்திருக்க வேணாமா? எத்தனை நாளா இருக்குது இது? ரொம்ப நாளாவே இருந்துக்கிட்டு இருக்கும் போலிருக்கே? எங்கிட்ட சொல்லவே இல்லையே?” என்று மேலும் கடிந்து கொண்டார், அற்புத ராஜ்.
நானும் அற்புத ராஜும் காலை வேளையில் கடற்கரைச் சாலையில் நடை பழகும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வப்போது ஓய்வுகொள்ளச் சாலை ஓர பெஞ்சுகளில் உட்கார்ந்து சில நிமிடங்கள் பொழுது போக அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசிக்கொள்வோம். அப்படிப் பேசிப் பழக்கமானவர் அற்புத ராஜ். பழக்கம் நெருக்கமாகி நல்ல நட்பாகவும் முதிர்ந்துவிட்டிருந்தது.
அற்புத ராஜ் ஒரு டாக்டர். ஆனால் நான் அவருடைய பேஷன்ட் அல்ல. யாருக்குமே நான் பேஷன்ட் அல்ல, ஆனால் நான் பேஷன்ட் ஆகித் தீர வேண்டும் என்று மற்றவர்கள் வற்புறுத்துகிறார்கள். கொஞ்ச நாளாகவே என்மீது இந்த மற்றவர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. இதை எதிர்த்துக் கிளம்புவது சாத்தியமாக இல்லை. ஏனென்றால் நான் பேஷன்ட் அல்ல என்று எனக்குத் தெரிந்திருந்தாலும் எனக்குப் பேஷன்ஸ் அளவுக்கு மீறியே இருப்பதும் கூடவே கம்பேஷனும் இருப்பதும் புலப்படுகிறது.
அற்புத ராஜ் ஒரு மருத்துவர்தான். ஆனால் எந்தவொரு குறிப்பிட்ட உடல் உறுப்பிற்குமான மருத்துவ நிபுணர் அல்ல. பொது மருத்துவர்.
“சரி, என்ன ஆச்சு? எத்தனை நாளா இப்படி வளர்த்து வெச்சிருக்கீங்க?” என்றார் அற்புத ராஜ்.
“ஆறு மாசம் இருக்கும். சின்னதா ஒரு வட்டம் மாதிரி இடது பாதத்துக்கு மேலே இது வந்தது. ஒரு நா காலம்பற எழுந்ததும் யதேற்சையாப் பார்க்கறேன், இது என்னடான்னா, இங்க வந்து கம்மும்னு உட்கார்ந்திருக்கு! முதல்ல கவனத்துக்கே வராததா வலி எதுவும் இல்லாம சருமத்திலே விழுந்த ஒரு சிறு பள்ளம் போலத்தான் இருந்தது. அப்புறம் கிடுகிடுன்னு புண்ணாகி வட்டமும் பெரிசாகிட்டே வந்தது. நா அது என்னதான் பண்ணுதுன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பறம் இதுவே ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காயிடிச்சு. ஆனா என்னைப் பார்க்க வருகிறவர்களில் ஒருத்தர் அதையும் பார்த்துப் பதறிப்போய்  ஒரு களிம்பைக் கொண்டு வந்து கொடுத்து இதைப் போடுங்கள். உடனே குணமாயிடும்னு சொல்லிட்டுப் போனார்.
“நீங்களே பாருங்களேன். அதிலே சீழ் பிடிக்கவோ அதிலேருந்து நிணம் வடியவோ இல்லே. வறண்டு செம்புண்ணா சிவப்பா மட்டுந்தான் இருக்கு. எதுவும் அவசியமா தோணலே. ஆனாலும், அவர் மனம் புண்படக் கூடாதே ன்னு என் உடம்புப் புண்ணுக்கு அந்தக் களிம்பைத் தடவத் தொடங்கினேன். சில தினங்கள்ல அது ஆறிடிச்சு. ஆனா அதை ஒட்டியே சின்னதா இன்னொரு புண்ணு தலைகாட்டிச்சு. களிம்பைப் பூசினதிலே அதுவும் மறைய, அது மறையும் போதே இன்னொரு சிறுபுண் தோன்றி, அதுவும் வளர்ந்துச்சு. நானும் விடாம களிம்பு பூசி அதைத் துரத்தலானேன். இப்படியே எனக்கும் புண்ணுக்குமான உறவு வளர்ந்து இப்ப அது இணை பிரியா நட்பா மலர்ந்துடிச்சு டாக்டர்.”
“நட்பா? புண்ணுகூட உங்களுக்கு சினேகமா? என்ன சொல்லறீங்க? அப்ப உங்களுக்கு வலிக்கலியா?”
“வலியா? அமோகமா இருக்கு டாக்டர். இருபத்து நாலு மணி நேரமும் அது வலிக்கிறதாலதானே அது கூட இணை பிரியாத நட்பு மலர்ந்துடிச்சுன்னு சொல்லறேன்? சில சமயம் வலி எல்லை மீறிப் போயி, யம்மா, யப்பாங் கறேன். ரொம்பப் பொல்லாத்தனந்தான் ஒனக்குன்னு அதைக் கொஞ்சறேன். வலி அதிகமாகிறதை எங்ளுக்குள்ள நட்பு இன்னும் இறுகுதுன்னு புரிஞ்சுக் கறேன். ஆறு மாசப் பழக்கமாச்சே டாக்டர், எனக்கும் அதுக்கும்.”
“அடக் கஷ்டமே! உங்களை அனுப்ப வேண்டியது டயபட்டீஸ் சென்டருக்கா மென்டல் ஹாஸ்பிடலுக்கானு இப்ப யோசிக்க வேண்டியிருக்கு!”
“மென்டல் வேணாம் டாக்டர். அங்க ரொம்பப் படுத்தி எடுத்துடுவாங்க” என்றேன், அவசரமாக.
“பின்னே? வலிக்குதுங்கறீங்க. ஆனா வலியோட சினேகிதம் ஏற்பட்டுப் போச்சுங்கறீங்க! உங்களைத் துன்புறுத்தற அதுகூட உங்களுக்கு வர வேண்டியது விரோதம்தானே? அப்பத்தானே அதை ஒரேயடியா விரட்டணும்னு முயற்சி எடுப்பீங்க?”
“எதுக்கு விரட்ட முயற்சி எடுக்கணும்? நானா கூப்பிடாமத் தானா வந்தது. ‘போதும் இருந்தது’ன்னு சலிப்பு ஏற்பட்டதும் அதாவே போயிடாதா?”
“என்னங்க இப்படிச் சொல்லறீங்க? சில சமயம் தாங்க முடியாம வலிக் குதுன்னும் சொல்லறீங்க! அப்படி வலியை எதுக்குப் பொறுத்துக்கிட்டு இருக்கணும்?”
“வலி அன்ன மய கோசத்துக்கு மட்டுந்தானே, டாக்டர்! அது வெறும் மேலோடுதானே! அடுக்கடுக்கா உள்ள இன்னும் நிறைய இருக்கே!”
“என்னது, கேசமா?” என்றார், டாக்டர். அகத்தின் குழப்பம் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது..
“கேசமில்லே டாக்டர்! கோசம். அன்ன மய கோசம். அதுக்குப் பின்னால பிராண மய கோசம். அப்புறம் மனோ மய கோசம். அடுத்தபடியா விஞ்ஞான மய கோசம். கடைசியா ஆனந்த மய கோசம். உள்ளுக்குள்ள  இத்தனை இருக்கு டாக்டர்! புண் பாவம், எல்லாத்துக்கும் வெளியே அன்ன மய கோசத்திலேதானே இருக்கு. அதைத் தாண்டி உள்ளே எல்லாம் போகலே. அப்பறம் எதுக்கு விரட்டணும்? உள்ள போக வழியில்லேனு புரிஞ்சுக் கிட்டு அது தானாவே போயிடாதா?”
டாக்டர் மணியை அடித்தார்.
“வெளியே பேஷன்ட் யாருமில்லே டாக்டர். நாந்தான் கடைசி. எல்லாரும் போகவிட்டு வரலாம்னு நானாதான் கடைசி ஆளா காத்திருந்து கடைசியா வந்தேன்.”
வெளியே உட்கார்ந்து நோயாளிகளுக்கு டோக்கன் கொடுக்கிற சிப்பந்தி உள்ளே வந்து, “ரெண்டு மெடிகல் ரெப்ரசன்டேடிவ்கள் மட்டுந்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று அறிவித்தான்.
”அவங்களை நாளைக்கு வரச் சொல்லிடு. நீயும் வேணா போகலாம். எங்கிட்டதான் ஒரு சாவி இருக்கே, இண்ணைக்கி நானே பூட்டிக்கிறேன், க்ளினிக்கை” என்று அவனை அனுப்பி வைத்தார், டாகடர்.
”இப்பச் சொல்லுங்கய்யா, கோசம் கீசம்னு என்னல்லாமோ சொன்னீங்களே! என்ன அதெல்லாம்? நிறையவே நேரமிருக்கு. நிதானமாவே புறப்படலாம்.”
“முதல்ல அன்ன மய கோசம். அது முக்கியமா நாம உண்கிற உணவா லேயே உருவாகுது, வளருது, வாழுது. உண்ணுகிற உணவாலேயே தன் ஆயுளையும் முடிச்சுக்குது. உயிர் இனங்கள் எல்லாத்துக்கும் உள்ளதுதான் இது. அப்புறம் பிராண மய கோசம். இதுலே சுவாசிக்கிற காற்று மட்டு மில்லே, உடம்புக்குள்ள மத்த சில வாயுக்களும் இருக்கு. எல்லாமே அவசியந்தான். ஆனா அளவோட இருக்கணும். மீறினாலும் பிரச்னை, குறைஞ்சாலும் பிரச்னைதான். அடுத்தபடியா மனோ மய கோசம். மேம்போக்கான எண்ணப் போக்குன்னு ஒண்ணு இருக்கு இல்லயா, அதுதான் இது. சில சமயம் வழி தவறிப் போகவும் நம்மளைத் தூண்டும். வேண்டாததுக்கெல்லாம் ஆசை காட்டும். கெடுதல்னு தெரிஞ்சாலும் ருசி பார்க்கத் தூண்டும். சொல்லப் போனா ரொம்பவே பலவீனமானதுதான் இது. ஆனா இதுதான் அன்ன மய கோசத்தையும், பிராண மய கோசத்தையும் அடக்கி ஆளுது. இந்த மனோமய கோசம் ஐந்தறிவுப் பிராணிகளுக்கு ரொம்ப மங்கலாவும் ஆறறிவுப் பிராணிகளான நமக்குத் தெளிவாவும் இருக்கும். ஆனா நம்மை வேண்டாததையெல்லாம் செய்யத் தூண்டும். ஐந்தறிவுப் பிராணிகளை அது இப்படி அதிகாரம் பண்ணறதில்லே. அதுங்க என்ன செய்யணுமோ அதை மட்டும் செய்யத் தூண்டறதோட கம்முனு கிடக்கும்!”
“இன்டரெஸ்டிங்!”
“அப்படி மனோ மய கோசம் தகாத செயலுக்குத் தூண்டறப்பக் குறுக்கே விழுந்து வேணாம், அது சரியில்லேன்னு தடுக்கிறதுதான் விஞ்ஞான மய கோசம். அதுதான் எதையும் ஆராய்ஞ்சு பார்த்து, இது நல்லது, இது வேண்டாததுன்னும் முடிவு செய்யத் தூண்டற முழுமையான பகுத்தறிவு. இப்படிச் சரியான வழிகாட்டற கடமை அதோடது. அதனாலதான் அது விஞ்ஞான மய கோசம்!”
“சொல்லுங்க!”
“இறுதியா இருக்கிறதுதான் ஆனந்த மய கோசம்! நியாயப்படி நாம எப்பவும் இருக்கிற நிலை! இருக்க வேண்டிய நிலை! இருக்கும்படித் தூண்டறது விஞ்ஞான மய கோசத்தோட வேலை. ஆனா நாம ஒண்ணு, அது தூண்டறதைப் புரிஞ்சுக்கறதில்லே. இல்லாட்டி அதைத் தூண்டவே விடறதில்லே. மனோ மய கோசத்தோடயே நம்ம ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு போயிடுது!”
“கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கடைசியாச் சொன்ன ஆனந்த மய கோசம்தான் கொஞ்சம் இடிக்குது. அதோட வேலை என்னன்னு சொல்லவே இல்லயே நீங்க!”
“அதுதான் ஆன்மாவோட வாழ்விடம் டாக்டர்! நிஜமா நாம இருந்துக்கிட்டு இருக்கவேண்டிய நிலை. அங்க அது எப்பவும் தனக்கு எதிலேயும் சம்பந்த மில்லேங்கற பிரக்ஞையிலேயே ஆனந்தமா இருந்துக்கிட்டு இருக்கணும். மத்த கோசங்களையெல்லாம் அதுங்க பாட்டுக்கு அதுகளோட கடமையைச் செய்துக்கிட்டு இருக்கும்படி விட்டுட்டுத்தான் எதிலேயும் சம்பந்தப்படாத உணர்வோட சதா சர்வதா பேரானந்தமா இருந்துக்கிட்டு இருக்கணும். மத்த கோசங்கள் பண்ணறதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கணும்.”
“அப்படி இருக்கறது சாத்தியமா?”
“சாத்தியமில்லேதான். ஆனா சாத்தியம் ஆகணும். ஆக முயற்சியாவது எடுக்கணும். நாம நிஜமா இருக்க வேண்டிய ஸ்திதி ஆனந்த மய கோசத்திலேதான் என்கிற பிரக்ஞை எப்பவும் உள்ள ஓடிக்கிட்டேயிருந்தா போதும். எண்ணைக்காவது ஒருநாள் மின்னலடிக்கிற மாதிரி மின்னி, ஆனா மறைஞ்சு போயிடாம அதுவே நிரந்தரமான நிலையாயிடும்!”
“நீங்க அப்படி இருக்கிறதாலதான் இந்த வலியைப் பத்திக் கவலைப்படாம இருக்கீங்களா?”
“இதுக்கு பதில் சொன்னா அதிகப் பிரசங்கித்தனமாயிடும்!”
“புரியுது!”
“நிஜத்தைச் சொல்லறதானா சரீரம்னு ஒண்ணு இருக்குன்னு எப்பவும் ஞாபகப் படுத்திக்கிட்டு, இந்த சரீரத்தை வெச்சுக்கிட்டுத்தான் செய்ய வேண்டியதையெல்லாம் செய்ய முடியும்னு எடுத்துச் சொல்லிக்கிட்டு இருக்கிறதும் இந்த வலிதான் டாக்டர். இதை நா நேசிக்காம விரோதியா பாவிச்சு விரட்டறது சரிங்கறீங்களா?”
டாக்டர் அற்புத ராஜ் பதில் சொல்ல வில்லை. தொடக்கத்தில் அவர் ஏதோ எழுதி வைத்திருந்த காகிதத்தை நாலாகக் கிழித்துக் காலடியில் வைத்திருந்த குப்பைக் கூடையில் போட்டார்.
“என்ன டாக்டர் அது? சட்டுனு கிழிச்சுப் போட்டுட்டீங்களே, ஏதோ முடிவு பண்ணிட்ட மாதிரி!”
“ஒண்ணுமில்லே, உங்களுக்காக நா எழுதின ஆயின்ட்மென்ட், ஆன்டி பயாடிக் மாத்திரை பிரிஸ்கிரிப்ஷன். கூடவே நீங்க பார்க்க வேண்டிய ஸ்பெஷலிஸ்ட்டுகள் பேர்களையும் அதிலே எழுதியிருந்தேன்.”
எனக்குச் சிரிப்பு வந்தது. “அப்ப நா வரட்டா” என்றபடி எழுந்துகொண்டேன்.
டாக்டர் வெறுமே தலையசைத்தார்.
நான் கதவைத் திறந்து கொண்டு வெளியேற முற்படுகையில், “ஸார்… ஒரு விஷயம்…” என்று பின்னாலிருந்து அழைத்தார், டாக்டர்.
“சொல்லுங்க” என்று திரும்பினேன்.
“உங்க விஞ்ஞான மய கோசத்தைக் கொஞ்சம் பேச விடுங்க. உங்க அன்ன மயம் பிராண மயம், மனோமயம் எல்லாம் ஒழுங்கா வேலை செய்துக் கிட்டு இருக்கணும்னா இப்போ நீங்க தயவு தாட்சண்யம் பார்க்காம சினேகம் கொண்டாடறதோட நிரந்தரமா டூ விடணும்னு அது கண்டிப்பாச் சொல்லும். அதைப் பேச விடறதுதான் உங்களுக்கு சிகிச்சை. நீங்களாவே உங்களுக்குச் செய்து கொள்ளற சிகிச்சை!”
எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது.
நன்றி: அமுதசுரபி மாத இதழ் ஃபிப்ரவரி 2013

+++++

Series Navigationசுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.
author

மலர்மன்னன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    V. Srinivasan says:

    மரியாதைக்குரிய, மலர் மன்னன் அவர்கள், இறையடி சேர்ந்த இந்த தை மாத நாளில், இதை மீண்டும் படிக்கும்போது அறியவொண்ண உணர்ச்சிகள், என்னை கடந்து செல்கிறது .
    அவர், எவ்வோளவு யதார்த்தமாக உத்சாஹமாக வாழ்கையை எட்ட நின்று கவனித்து வந்துள்ளார் என்பதற்கு இந்த ” தீர்வு ” ஒரு முத்தான உதாரணம்

    திண்ணை மூலம் அவரை நான் அறிந்து + தெரிந்து கொண்டேன் .
    அவரது எழுத்துக்கள் அபாராமான மன விசாலத்தின் தொகுப்புகள் .
    திண்ணையிலே அவர் எழுதின சங்கதிகளை, பத்திரப்படுத்தி வைத்தாக வேண்டும் .
    எல்லோரும் படித்து, தெளிய வேண்டும்,
    சாந்தி அடையும் அவரது உன்னத ஆத்மா, நம்மை நல்வழியில் நெறிப் படுத்தும் .
    என் வணக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து, ப்ர்ரர்த்தனைகளை முன் வைக்கிறேன் .
    அன்புடன்
    ஸ்ரீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *