சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2

This entry is part 3 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இப்போது இரண்டு தலைமுறைக்காலம் கடந்த பிறகும் கூட நினைத்துப் பார்க்கும்போது, மிக வேதனையாகத் தான் இருக்கிறது.  இன்று அது பற்றிப் படித்து அறிந்து கொள்கிறவர்களுக்கு அது புரியப் போவதில்லை. பண்டிதர்கள் போகட்டும். பிரபலமாகிவிட்ட வெகுஜன எழுத்தாளர்கள் போகட்டும். அவர்களுக்கு  இருக்கக் கூடும் எரிச்சலும் பகைமை உணர்வும் இருக்கும் தான். எதிர்பார்க்க வேண்டியதும் கூடத் தான்.  இருக்காது  என்று  நினைப்பது அறியாமை.  ஆனால் யார் யார்  எல்லாம் செல்லப்பாவுடன் தோளோடு தோள் உரசி நிற்கக் கூடும் என்று நாம்  எதிர்பார்ப்போமோ அந்த  மணிக்கொடிக் கால சகாக்களும்,  தம்மை நவீன சிந்தனையும் புதுமை நோக்கும் கொண்ட  தலைமுறை யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் கூட புரிந்து கொள்ள மறுத்தனர். கேலி செய்தனர்.

ஒரு  பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில்,  “ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பாவகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா” என்றார்.  அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர். அவர் யாப்பிலக்கணம் படித்திருப்பார். பல்கலைக் கழகத்தில் வகுப்பும் எடுப்பார் தானே. சங்க கால அகவல் தொடங்கி புரட்சிக் கவி என்று புகழப்படும் பாரதி தாசனின் எண் சீர் விருத்தம் வரை மாற்றங்கள் வருமானால் அதை அவர் கேள்வி இல்லாது ஏற்றுக் கொள்வாரானால், இன்று ஏன் இன்னொரு மாற்றம் பாவகையில் நிகழக் கூடாது என்று எந்த தமிழ் பேராசிரியரும் யோசிக்கவில்லை. இப்போது இந்தப் பேராசிரியர்கள் எல்லாம்  செல்லப்பாவுக்கு அஞ்சலி செலுத்து வதென்றால் அவர்கள் சொரியும் புகழுரைகள் சொல்லி மாளாது. செல்லப்பா என்றால்  ஒரு இளப்ப உணர்வு  அன்று இவர்களிடமெலலாம் காணப்பட்டது.  இதை யெல்லாம் கண்டு கொள்ளாது தன் காரியமே கண்ணாகயிருந்தார் செல்லப்பா என்றும் சொல்ல முடியாது.  அன்று செல்லப்பா  இவர்களையெல்லாம் பொருட்படுத்தி சத்தம் போடுவார். சண்டைக்கு வருவார். வாதம் செய்வார்.  அனேகமாக தினந்தோறும் அந்நாட்களில் நடந்து வந்த இந்தக் காட்சிகளில் சிலவற்றை,  நான்  விடுமுறையில் சென்னை வரும்போது நேரில் கண்டிருக்கிறேன். அவரைச் சுற்றி இருந்தவர்கள் ஒரு சில இளைஞர்களே. பின் பிச்சமூர்த்தி தந்த தார்மீக ஆதரவும் அவர் கவிதையும். அதற்கு அவர் அளித்த விளக்கங்களும். மூங்கில் காட்டினூடே பாய்ந்து ஓயும் ஒலி” என்று புதுக்கவிதையின் சொல்லப்படாத சந்தம் எந்த தமிழ்ப் பண்டிதருக்குப் புரியும்? சூத்திரங்களாக ஆக்கி, புலவர் வகுப்புக்கு பாடமாக வைத்தால் புரியலாம். . “ஓடாதீர் உலகத்தீரே” என்று புதுமைப் பித்தன் எழுதினால் அதற்கு நீண்ட விளக்கம் தரும் சிதம்பர ரகுநாதன். அது புதுக்கவிதைக்கும் பொருந்தும் என்பதை அவர் உணரவில்லையா?, மறுத்தாரே?  இவர்கள் எல்லோரிடமும் இரட்டை நாக்கு பேசியது.

பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, முன்னர் மறந்திருந்த பிச்ச மூர்த்தியின் பங்கீட்டுக் கடை பற்றிய கவிதை, புதுமைப் பித்தனின் கேலியையே, தன்னைச் சுற்றியிருந்த வாழ்க்கையின், மனிதர்களின் மீதான கேலியையே மரபாக்கியது. அதுவே பிச்சமூர்த்தியின் கவிதை காட்டிய வழியில் தொடர்ந்த வைதீஸ்வரன், சுந்தர ராமசாமி, தி.சோ. வேணுகோபாலன், ஏன், என் ஞாபகத்தில் கஸ்தூரி ரங்கன் கூட தம்மையறியாதோ அல்லது அவர்களுக்கும் கவிதையில் இயல்பாகவோ, வந்தது கேலியாகத்தான் இருந்தது. கவிதையோ, தமிழோ முறையாகப் படிக்காத சுந்தர ராமசாமியின் முதல் கவிதையே “நகத்தை வெட்டியெறி, அழுக்குச் சேறும்” என்று தான் அது காறும் கேட்காத, குரலில், அறிந்திராத வடிவில் வெளி  வந்தது. இன்னமும் ஒரு நகை முரண், தன் பரிகாசத்துக்கே தெரியவந்த செல்லப்பாவின் நெருங்கிய நண்பர் சிட்டிக்குக் கூட, இந்தக் கேலியை parody செய்யத் தான் தோன்றியது. அவர் எழுதிய, “சிந்தி எறி, மூக்கைச் சிந்தி எறி”, என்று தொடங்கிய கவிதையை செல்லப்பா, பிரசுரம் செய்ய மறுத்து விட்டார். சிட்டி தன் நீண்ட கால நண்பராக இருந்த போதிலும். கடைசியில் இன்றும் வாழ்ந்திருப்பது சுந்தர ராமசாமியின் கவிதை தான். சுந்தர ராம சாமியின கேலி, வெற்றுக் கேலி அல்ல.  தார்மீகமும் கோபமும் கொண்ட கேலி. சிட்டியினது தார்மீகத்தைக் காண மறுத்த, அல்லது அறியாத வெற்றுப் பகடி. Parody-க்கு ஏதும் தார்மீக பண்போ, இலக்கிய பரிமாணமோ இருப்பதில்லை. அது Parody-யாகவே நின்று சிறுத்து விடும். இலக்கியம் எந்த வடிவம் பெற்றாலும் எந்த நிகழ் கால நடைமுறையை எதிர்த்தாலும் அது தார்மீக பரிமாணம் கொண்டதாகவே இருக்கும். க.நா.சு. செல்லப்பா தொடங்கிய விமர்சனம் எத்தனை கேலிக்கும் சீற்றத்துக்கும் சாபங்களுக்கும் ஆனாலும் எவ்வளவு பலமற்றதாக அன்று காணப்பட்ட போதிலும் இன்று அது தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ள தென்றால், அது தன்னுள் கொண்டிருந்த தார்மீகம் தான் அதற்கு வாழ்வு தந்துள்ளது.

இவை ஆரம்ப காலங்கள்.  இந்தக் கேலியும் எதிர்ப்பும் மிகப் பரவலானவை. அவரைக் கொட்டிக் கொட்டி குளவியாக்கிய க.நா.சு. வே ”ஆறு மாதங்களில் எழுத்து தன் உயிர்த் துடிப்பிழந்து போயிற்று” என்று எழுதினார். அவருடைய குரு, ஆசான், செல்லப்பாவை இலக்கிய உலகுக்கு இழுத்து வந்து மணிக்கொடியில் அங்கீகாரம் கொடுத்த  பி.எஸ். ராமையா, “எழுத்துவின் ஆசிரியரைத் தெரியுமோ, எழுத்துவின்” என்று சொல்லிச் சிரிப்பார். அந்த ராமையாவுக்கு பின் வந்த வருடம் ஒன்றில் வத்தலக்குண்டுவில் மணிவிழா கொண்டாடினார் செல்லப்பா அந்த சந்தர்ப்பத்தில் ராமையாவுக்கு சிறப்பு மலர் ஒன்றும் எழுத்து வெளியிட்டது. அந்த சிறப்பு மலரில் ராமையாவின் மார்பளவு சிற்பம் ஒன்றின் புகைப்படம் , சிற்பியின்  பெயர் ராஜகோபால் என்று நினைவு, எழுத்துவில் வந்தது. தன் புதிய முயற்சியைக் கிண்டல் செய்த தன் ஆசானுக்கு செல்லப்பா செய்த மரியாதை வேறு யாருக்கும் எந்த தனி மனிதராவது செய்துள்ளனரா என்பது தெரியாது எனக்கு. க. நா.சு வைப் போலவே செல்லப்பாவும் இப்போது எழுத்து பத்திரிகைக்காகவும் விமரிசன மரபு ஒன்றை நவீன தமிழ் இலக்கியத்தில் க.நா.சு விடமிருந்து முன்னெடுத்துச் சென்றதுக்காகவுமே நினைவு கூறப்படுவது வேடிக்கை தான்.

இதையெல்லாம் நான் இன்று சொல்கிறேன். ஆனால் அன்று 1959-ன் ஆரம்ப மாதங்களில் அது எனக்கு பிடித்துவிட்ட, எனக்கு மிகுந்த உற்சாகம் தந்த குரலாக இருந்தது. உடன் எனக்கு ஜம்முவுக்கு மாற்றலாயிற்று. அங்கு என்னைத் தொடர்ந்த பத்திரிகைகள் சுதேசமித்திரனும் எழுத்துவும் தான். தி. ஜானகி ராமனின் மலர்மஞ்சம் சுதேச மித்திரன் வாரப் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்தது என்று நினைவு. அப்படி உற்சாகம் தந்த எழுத்து பத்திரிகையில், நல்ல சிறுகதை எப்படி இருக்கும் என்று விரிவாகச் சொன்ன செல்லப்பா தன் பத்திரிகையில் ஒரு சாதாரண வெகு சாதாரணம் என்று எனக்கே பட்ட ஒரு கதையை வெளியிட்டிருந்தது மிகுந்த ஏமாற்றத்தையும் கோபத்தையும் தந்தது. என் ஏமாற்றத்தை கொஞ்சம் விரிவாகவே செல்லப்பா வுக்கு எழுதினேன். என் ஆதங்கத்தை அவருக்குச் சொல்ல வேண்டும். அவ்வளவே. அதற்கு மேல் என் எதிர்பார்ப்பு இருக்கவில்லை.  ஆனால் அதை செல்லப்பா எழுத்துவில் வெளியிட்டுவிட்டார். இதை அடுத்து சிதம்பர ரகுநாதனின் கட்டுரை ஒன்று எழுத்துவில் வெளியாகியது. அந்த ரகுநாதன் புதுமைப் பித்தன் தன் சிஷ்யனாகக் கண்ட ரகுநாதன் இல்லை. அவர் மறைவிற்குப் பிறகு தன்னை கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றாட கொள்கைகளுக்குப் பிரசாரகனாக்கிக் கொண்ட ரகுநாதன். சாந்தி பத்திரிகை நடத்தி வந்த ரகுநாதனிலிருந்து வெகு தூரம் விலகி வந்துவிட்ட ரகுநாதன். அவர் எழுதியதில் ஒரு வரி கூட எனக்கு உவப்பாக இருக்கவில்லை. அதற்குச் சற்று முன் தான் அம்ரித்ஸரஸ் நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாநாடு ஒன்று நடந்து முடிந்திருந்தது. ரகுநாதனுக்கு நான் எழுதிய மறுப்பில், ரகுநாதனின் அடுத்த நாவல் அம்ரித்ஸரஸ் மகாநாட்டின் தீர்மானங்களை வைத்து பின்னப்பட்ட கதையாக இருந்தால் அது பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, பாட்டாளி வர்க்கத்திற்கு உணர்வூட்ட ரகுநாதன் தரும் எழுத்துப் பங்களிப்பாக இருக்கும் என்று எழுதினேன். முதலில் ஒரு கதை பற்றி எழுதியது நான் எதிர்பாராது பிரசுரமானதும் இது பிரசுரமாகும் ரகுநாதன் படிப்பார் என்று எதிர்பார்த்து எழுதியது. செல்லப்பா அதையும் வெளியிட்டார். ரகுநாதன், “இதில் என்ன இருக்கு? ஏன் வெளியிட்டீர்கள் என்று கேட்டாராம். செல்லப்பா சொன்னார். “இப்படி ஒரு கருத்து இருக்கு. வரட்டுமே என்று தான் பிரசுரித்தேன் என்று பதிலளித்தாராம். அதன் பிறகு ரகுநாதன் எழுதியது எதுவும் எழுத்து பத்திரிகையில் வெளிவரவில்லை. இதையெல்லாம் தூக்கி அடிப்பது ந. சிதம்பர சுப்பிரமணியனின் நாகமணி நாவலைத் தாக்கி நான் எழுதியதையும் செல்லப்பா பிரசுரித்தது. சிதம்பர சுப்பிரமணியன் செல்லப்பா மிகவும் மதிக்கும் எழுத்தாளர், நண்பர். ஒருவருக்கொருவர் நெருக்கம் மிக அதிகம். எழுத்து பத்திரிகையில் ஒரு தொடர் கட்டுரை வேறு எழுதிவந்தார். சிதம்பர சுப்பிரமணியன். மேலும், க.நா.சு. வெற்றி பெற்ற மூன்றே மூன்று நாவலாசிரியர்களில் இதயத் தாகம் எழுதிய சிதம்பர சுப்பிரமணியமும் ஒருவர் எனச் சொல்லி யிருந்தார். அந்த சிதம்பர சுப்பிரமணியத்தின் நாகமணி நாவல் தான் சொல்ல வந்த நீதி போதனைகளுக்காக சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்ட ஒன்று, இதயத் தாகம் எழுதிய கைகள் தானா இதையும் எழுதியது என்று எழுதியிருந்தேன். செல்லப்பாவுக்கு வேண்டிய ஒருவரைத் தாக்கியதே என்று செல்லப்பா தயங்கவில்லை. இப்படி ஒருவர் இருப்பாரா என்று இப்போது நான் வியக்கிறேனே ஒழிய அன்று இது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை. ஏதோ எனக்குப் பட்டதை எழுதினேன். அதை செல்லப்பா பிரசுரித்தார் என்பதற்கு மேல் நான் எதுவும் சிந்திக்கவில்லை.

செல்லப்பாவிடமிருந்து எனக்கு ஒரு கார்டு வந்தது. அந்தக் கார்டை இப்போது தேடிப் பார்த்தேன். உடன் கிடைக்கவில்லை. தொலைந்து தான் போயிற்றோ இல்லை எங்கோ புதைந்து கிடக்கிறதோ, தெரியவில்லை. ரகுநாதன், செல்லப்பா சிதம்பர சுப்பிரமணியன் எல்லாம் எனக்குப் பெரியவர்கள். தமிழ் இலக்கிய உலகில் வெகு காலமாக தடம் பதித்தவர்கள். அவர்களுக்கு எதிராக, ரகுநாதனின் கட்சிக் கொள்கைகளை இலக்கியப் பார்வையாகத் தரும் பார்வையை, செல்லப்பாவின் விமர்சனப் பத்திரிகையில் வரும் கதைத் தேர்வை மறுத்து எழுதும் யாரோ ஒருவனை எழுத்து பத்திரிகைக்கு எழுதச் சொல்லி உற்சாகம் தந்தது எழுத்து பத்திரிகையும் செல்லப்பாவும் விருப்பத்தோடு படிப்பது மட்டுமல்ல, நானும் அவரோடு உடன் செல்ல விடுத்த அழைப்பு, என் கருத்துக்கள் வெளி உலகில் வைக்கத் தகுந்தவை, அதற்கு ஒரு மேடை உண்டு என்று எண்ண வைத்தது, என் வாழ்க்கைப் பயணத்தில் வந்த ஒரு புதிய திருப்பம்

அது வரை என் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள், அது வரை நான் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தவை, எல்லாம் முதல் தடவையாக எழுத்து வடிவம் பெற்றன. எல்லாமே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டவை அல்ல. சில தான் நண்பர்களின் அனுபவ வட்டத்துக்குள் வருபவை. சில சொல்லப்படாமல் மனதில் புகைந்து கொண்டிருந்தவை. சில, பகிர்ந்து கொள்ளப்பட்டவை சில நண்பர்களின் ஒப்புதலையும், அனுதாபத்தையும் பெற்றவை. சில நண்பர்களின் “என்னமோ சொல்றான்” என்ற எதிர் வினையைத் தந்தவை. எல்லாம் அன்று ஒரு கட்டுரையில் கொட்டப் பட்டன. வடிவம் தரப்பட்டவை என்று சொல்ல முடியாது. எழுத்துக்களாகக் கொட்டப்பட்டன என்று தான் சொல்ல வேண்டும். பாலையும் வாழையும் என்று தலைப்பிட்டு செல்லப்பாவுக்கு அனுப்பி வைத்தேன்.

ஹிராகுட் அணைக்கட்டைவிட்டு வந்து வருடங்கள் பல கழிந்து விட்டன. மிக நெருக்கமாக, அன்றாட விஷயங்கள் போக, கொஞ்சம் வித்தியாசமான கேள்விகள், சிந்தனைகள், பரிமாற்றங்கள் என்று இரண்டு பேரிடம் நான் கொண்டதுண்டு. ஒன்று சீனிவாசன். என் அறை நண்பன். இரண்டாமவன், என் அலுவலக நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தி. நிறைய சண்டைகளும் கட்டியணைத்தல்களும் எங்களிடையே தொடர்ந்து மாறி மாறி நடக்கும். அவனிடையே ஒரு நாள் நடந்த  பேச்சில் அவன் உதிர்த்த ஒரு வார்த்தை “that only means the absence of creative genius in Tamil society” என்றான். பொட்டில் அறைந்த மாதிரித்தான். ஆனால் அவன் சொன்னது உண்மை எனத் தெரிந்தது. அதை எனக்குப் பட்ட நியாயங்களுடன் முன்வைப்போமே என்ற நினைப்பில் மனத்தில் இருந்ததையெல்லாம் வாரிஎடுத்துக் கொட்டிவைத்தேன்.  இது மாதிரி பரிமாறல்கள் சமீப கால தமிழ் எழுத்தில் நடந்ததாக எனக்கு நினைப்பில்லை. செல்லப்பா இதை எப்படி எடுத்துக்கொள்வார் எனபது பற்றியும் நான் யோசிக்க வில்லை. எழுத்து பத்திரிகையின் எல்லை வரம்பிற்குள் இது அடங்குமா என்றும் யோசனை இல்லை. செல்லப்பாவின் கதைத் தேர்வை தவறு என்று சொல்லி எழுதினேன். அவருடைய எழுத்தாள நண்பர்களின் எழுத்துக்களைக் கேலி செய்தேன். எல்லாவற்றிற்கும் அவர் பத்திரிகையில் இடம் கொடுக்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு அவர் என்னை எழுதச் சொல்கிறார். இதையெல்லாம் யோசித்தேன் என்று சொல்வதற்கில்லை. அவர் எழுதச் சொல்கிறார். எனக்குத் தெரிந்ததை நான் எழுதினேன் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அலசல் எல்லாம் அன்று நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. இன்று தான் அது பற்றி இப்போது எழுதும் போது, பல புதிய தடங்களைத் தடம் இல்லாத பிரதேசத்தில் உருவாக்கியவர், இதையும் ஏற்றுக் கொண்டார் என்று இப்போது சமாதானம் கொள்ளத் தோன்றுகிறது. எழுத்து போன்ற ஒரு பத்திரிகை, விமர்சனம், புதுக்கவிதை எல்லாம் தடம் பதிக்கும் போது, இலக்கியம் சினிமா நாடகம் என்று தெரிந்த தடங்களில் புதிய தடம் பதிக்க அவருக்கு அப்போது தடை ஏதும் இருக்கவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அதுவும் புதுக் கவிதை என்றால் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கவிஞனிடத்தில் புது வடிவம் பெற்றது. புதிய தொனி ஏற்றது. புதிய அனுபவத்தைப் புதிய சொல் முறையில், வடிவில் சொன்னது. தருமு சிவராமுவின் கவிதை மட்டுமல்ல, அவரது சொல்லும் நடையும் கட்டுரையின்  புதிய பார்வையும் புதிய குரலுமே புதிது தான். பிச்சமூர்த்தியின் கவிதை திடீரென்று தமிழ்க்கவிதையை விடுவித்த தளைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இனி தமிழ்க் கவிதை பழைய கட்டுக்குள் சிறைபடப் போவதில்லை. அதிகம் பேசுவானேன். முரசொலியில் கவிதை என்று எண்ணிக் கருணாநிதி எழுதுவதைப் பார்த்தாலே போதும். பின்னர் குமுதம் கூட  பிரசுரம் செய்யத்தொடங்கியது புதுக்கவிதை என்று நாமகரணம் செய்த துணுக்குகளை. Life buoy soap-க்கு வரவேற்பு இருப்பது தெரிந்தால் அதே கலரில், அதே போன்ற wrapper-ஓடு அதே அளவில் Light boy soap என்று போலிகள் வரத்தொடங்க வில்லையா?

பாலையும் வாழையும் எழுத்து 18 அல்லது 19வது இதழில் பிரசுரமானது. இரண்டு இதழ்களில். அதை தமிழ் நாட்டை விட இலங்கையில் அதிகம் பேரால் கவனிக்கப்பட்டது. என்று பின்னர் எனக்குத் தெரிந்தது. பத்திரிகை வாங்குவோரை வைத்து வாசகர் எண்ணிக்கையைக் கணக்கிடக் கூடாது என்பதை எழுத்து உறுதிப் படுத்தியது.

அதன் பாதிப்பு என்ன என்று எனக்குத் தெரியவில்லை.  ஆனாலும் அதைத் தொடர்ந்து சில கட்டுரைகள் எழுதினேன். விஞ்ஞான விமர்சனம், வடிவமும் பொருளும், வாசக வேட்டை, காலதேவன் சரித்திர நாவல், நாகமணி, இலக்கியம் எனது பார்வை என்று. இவையெல்லாம் ஜம்முவில் எழுதிய நினைவு இருக்கிறது. பொருளும் வடிவமும் என்ற எதிர்வினை, இலங்கையில் தன்னை இலக்கிய நாட்டாமைக் காரராக உருவாக்கிக்கொண்டிருந்த கலாநிதி கைலாசபதி அவர்கள் எழுதியதை எழுத்து பிரசுரம் செய்திருந்தது. அதில் கலாநிதி கைலாசபதி அவர்கள் வழக்கமான கம்யூனிஸ்ட் கோஷமான இலக்கியத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பதே முக்கியம். எப்படி சொல்லப்படுகிறது என்ற உருவம் செய்தியைச் சுமக்கும் வாகனம் தானே என்று எழுதியிருந்தார். அதை மறுத்து நான் எழுதியது எழுத்தில் பிரசுரமானது. இந்த அபத்தத்திற்கும் மேல் அவர் இதற்கு அரசியல் சாயம் வேறு பூசியிருந்தார்.

இதுவும் இலங்கையிலிருந்து தேனருவி என்ற ஒரு பத்திரிகை என்னை எழுத அழைத்தது. இவற்றிலிருந்து எழுத்து பத்திரிகையின் பாதிப்பும் வாசகப் பரப்பும் தமிழகத்தை விட இலங்கையில் அதிகம் என்று தெரிந்தது. இது பின் வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் சிலவும் அவற்றின் பாதிப்பிலிருந்தும் தெரிந்தது.

இதன் பின் ஜம்முவிலிருந்து நான் விடுமுறையில் என் கிராமம் உடையாளூர் சென்றேன். வழியில் சென்னையில் ஒன்றிரண்டு நாட்கள் தங்கும் பழக்கம் உண்டு. முதன் முறையாக சென்னையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் அதுவும் எனக்கு பிடித்த, நிகழ் கால இலக்கியத்தில் ஒரு புதிய பாதையில் கால்வைத்து, தோற்றத்தில் எளிய புரட்சி செய்து கொண்டிருக்கும், அதில் என்னையும் அழைத்துச் சேர்த்துக்கொண்ட ஒரு எழுத்தாளரைச் சந்திப்பது என்றால்….. மிக உற்சாகமும் புதிய அனுபவுமாக இருந்தது.

அவர் வீட்டை அடைந்து நீண்ட குறுகிய நடைபாதையைக் கடந்து உள்ளே ஒரு பெரிய கூடத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். யாருடனோ பேசிக்கொண்டு. உள்ளே நுழைந்து,  ”நான் ஜம்முவிலிருந்து சாமிநாதன்” என்று சொல்லிக்கொண்டே வந்தேன். “அடேடே வாங்கோ, வாங்கோ, என்ன ஆச்சரியம் பாருங்கோ, இதோ திரிகோணமலையிலேர்ந்து தருமு சிவராமுவும் வந்திருக்கார்” எப்படி எல்லாம் நேர்றது பாருங்கோ” என்று சொல்லிக்கொண்டே கீழே உட்கார்ந்திருந்த சிவராமுவை நோக்கி கை காட்டினார். தருமு சிவராமூ ஒரு மந்தஹாஸப் புன்னகையுடன் உட்கார்ந்தவாறே ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். சந்தோஷமாக இருந்தது. உட்கார்ந்ததும், சிவராமூ “அங்கே உங்க எழுத்தைப் பற்றி எல்லாரும் பேசறாங்க” என்றார்.

Series Navigationகற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’கல் மனிதர்கள்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    எழுத்து என்பது ஒரு பத்திரிகையின் பெயர். அதனால் எழுத்துவில் என்று எழுதினாலதான் அது எழுத்து பத்திரிகையைக் குறிக்கும். எழுத்தில் என்று எழுதினால் அது பொருளற்றதாகும் என்று செல்லப்பா பண்டிதர்களுக்குச் சரியான இலக்கணம் கற்பித்தார். வெ.சா.வை தமிழுக்குத் தந்த எழுத்துவையும் செல்லப்பாவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். திருவல்லிக்கேணியில் நான் வாழ்ந்த காலத்தில் மாதந்தோறும் இரண்டு கைகளிலும் பைகள் நிறைய அந்த மாதத்து எழுத்துவும் வெளியீடுகளும் சுமந்தவாறு கடும் வெய்யிலில் வியர்க்க விறுவிறுக்க வந்து எழுத்து பிரதியைக் கொடுப்பார். சிறிது இளைப்பாறிவிட்டுப் போகலாமே, கொஞ்சம் மோர் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே (செல்லப்பா காபி சாப்பிட மாட்டார்) என்று எவ்வளவு சொன்னாலும் வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டுப் போவார்.
    – மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *