நிஜமான கனவு

This entry is part 9 of 31 in the series 10 பெப்ருவரி 2013
 (போலந்து கதை)
சித்ரா சிவகுமார்
ஹாங்காங்
ஒரு காலத்தில், போலந்து நாட்டின் கிரகாவ் நகரில், ரபி என்பவன் வாழ்ந்து வந்தான்.  அவன் தன்னுடைய மனைவியுடனும் குழந்தைகளுடனும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான்.  எவ்வளவு தான் சிரமங்கள் வந்த போதும், தன்னுடைய குடும்பத்தை நல்முறையில் பார்த்துக் கொள்ள உண்மையாகவும் கடினமாகவும் உழைத்து வந்தான்.  நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் இரவு அவன் ஒரு கனவு கண்டான்.  அந்தக் கனவு கடவுள் தனக்குக் கொடுத்த வரம் எனறு அதிகமாக நம்பினான்.  அவன் கனவில் ஒரு தங்கப் பெட்டி. பிரேக் நகர அரண்மனை வளாகத்தில் இருக்கும் ஒரு பாலத்திற்குக் கீழே மறைந்திருப்பதைக் கண்டான்.
முதலில், தன்னுடைய கனவினை நம்பலாமா என்று எண்ணினான்.  ஆனால் அதே கனவு இரண்டாவது முறை அதே போன்று வந்தது. அப்போதும் நம்பலாமா என்ற எண்ணமே ஏற்பட்டது.  ஆனால் அதே கனவு மூன்றாம் முறை வந்த போது, அதற்கு மேலும் அதை நம்பலாமா என்ற கேள்வியை விடுத்து, பிரேக் நகரை நோக்கிப் பயணப்படலாம் என்று முடிவெடுத்தான்.
குடும்பத்தினருக்கு வேண்டியவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து, ஒரு நாள் பிரேக் நகரை நோக்கி தன் நெடிய பயணத்தை ஆரம்பித்தான்.
அவன் பிரேக் நகரின் அரண்மனை வளாகத்தை பல நாட்கள் கழிந்து வந்தடைந்தான். அவன் கண்ட பாலம் அங்கே இருப்பதைக் கண்டு, தன் கனவின் மீது முழு நம்பிக்கை கொண்டான்.  ஆனால் பாலத்திற்கு அருகே பலத்த காவல் இருந்தது.  அதனால் பாலத்தின் கீழ் குழி பறிக்க முடியாமல் தவித்தான்.  இருந்தாலும் பல நாட்கள் தினம் காலையிலும் மாலையிலும், நற்சமயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்படியும் அப்படியுமாக பாலத்தின் அருகே நடந்த வண்ணம் இருந்தான்.
அவனது நடமாட்டத்தைக் கண்டு சந்தேகப்பட்ட முக்கிய காவலர், அவன் அருகே வந்து விசாரித்தார்.
காவலர் ரபியிடம் வந்து, மிகவும் இயல்பாக, “என்னப்பா.. இங்கே எதையாவது தேடி வந்தாயா? அல்லது யாரையாவது பார்க்க பேண்டுமா?” என்று கேட்டார்.
ரபிக்கு ஏனோ தான் வந்த உண்மையான காரணத்தை அவரிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.  அதனால், கிரகாவ் நகரிலிருந்து தான் பிரேக் நகருக்கு ஒரு கனவின் காரணமாக வந்ததைச் சொன்னான்.
உடனே, காவலர் நகைத்து, “அடடா.. முட்டாளே.. சரியான பாத அணியும், உடையும் கூட இல்லாத ஏழையே.. நீ ஒரு கனவிற்காகவா இவ்வளவு தூரம் பாடுபட்டு வந்திருக்கிறாய்? கனவை நம்பும் முட்டாளே.. கனவை நம்பலாம் என்று எண்ணினால், நானும் இந்தச் சாலையிலே போயிருக்க வேண்டும்.  எனக்கு பல முறை ஒரே கனவு வந்திருக்கிறது.  என் கனவிலும் கிரகோவ்விற்குச் சென்று, ஏழ்மை நிறைந்த மாவட்டத்தில், ரபி என்பவனின் வீட்டில் புதையல் இருக்கிறதென்று. நான் அந்த வீட்டின் அடுப்பிற்கு அருகில் புதையல் மறைந்துள்ளதைக் கனவில் கண்டேன்.  நான் ஒரு நகரத்திற்குப் புதையலைத் தேடி, நூற்றுக்கணக்கான ரபிகள் இருக்கும் இடத்தில், சென்று தேடுவதை எண்ணியும் பார்க்க முடியுமா?” என்று சொல்லி ஏளனமாகப் பார்த்தார்.
ரபி மிகவும் பணிவுடன் கும்பிட்டு, தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி வீடு திரும்ப விழைந்தான்.  தன் வீட்டிலேயே இருக்கும் எண்ணியும் இராத புதையலை, பிரேக் நகருக்குச் சென்று அறியுமாறு பணித்த கனவின் மேல் மேலும் நம்பிக்கை கொண்டு விரைவில் வீடு திரும்ப விரும்பினான்.
மறுபடியும் நெடுந்தூரப் பயணத்திற்குப் பிறகு, வீட்டை வந்தடைந்து, புதையலை எடுத்து, தன் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான்.
Series Navigationசிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடுவால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3 (Song of Myself)
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *