போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7

This entry is part 7 of 31 in the series 10 பெப்ருவரி 2013

வெகு நேரம் அழுது கொண்டிருந்த ராகுலன் நீண்ட உடல்வாகு. நிச்சயமாய் அப்பாவைப் போலவே உயரமாக வளருவான். பணிப்பெண் ஒருத்தி சந்தடி செய்யாமல் மிக அருகில் “நாட்டியம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மகாராணி கோதமி அவர்கள் தங்களை அழைத்தார்கள்” என்றாள் மிக மெல்லிய குரலில். யசோதரா தொட்டிலை நோக்கி விரலை அசைத்ததும் குழந்தையைப் பூப்போலக் கையிலேந்தி தொட்டிலுக்கு மாற்றினாள். யசோதரா அவள் எடுத்து வந்த பட்டு மேலங்கியைத் தோளைச் சுற்றி போர்த்துக் கொண்டு நடைகளைத் தாண்டி நீராழி மண்டபத்தை நோக்கி நடந்தாள். பணிப் பெண்கள் தலை தாழ்த்தி வந்தனம் செய்தனர். கோதமிக்கு அருகிலிருந்த சுத்தோதனரின் ஆசனம் காலியாயிருந்தது. சித்தார்த்தனின் இருக்கை பல நாட்களாகவே வெறிச்சென்றிருந்தது. மகாராணி பஜாபதி கோதமியின் பாதந்தொட்டு வணங்கித் தன் இருக்கையில் அமர்ந்தாள் யசோதரா.

யசோதரா அமரும் வரை நிறுத்தப்பட்டிருந்த நாட்டியம் மீண்டும் தொடங்கியது. கழுத்தில் கயிறு கட்டி மாட்டியிருந்த சிறிய மேளத்தைத் தட்டியபடியே மேடையைச் சுற்றி சுற்றி ஆடியபடியே பாடினான் கட்டியக்காரன்

அழகிய வனத்தில் அமைந்த குடிலில்
கிளிகள் கொஞ்சினவே
கிளிகள் கொஞ்சினவே

மேடையின் மேற்புறத்திலிருந்து பச்சைநிற, சிவப்புநிறத் துணிகளால் செய்யப் பட்ட கிளிகள் கயிறுகளில் அசைந்து இங்கும் அங்கும் பறப்பது போல சிறகு விரிந்த நிலையில் நகர்ந்தன. பின் மறைந்தன.

“கிளிகளும் மயில்களும் வியக்கும்
அழகிய அப்ஸரஸுகளால்
பர்ணகசாலை இந்திர லோகம்
ஆனதுவே ” என்று அவன் சுற்றி ஆட அவனைத் தொடர்ந்து நன்கு அலங்கரித்த ஆறு ஏழு பெண்கள் கைகளைக் கோர்த்து வட்டமாகவும் பின் கைகளை விடுவித்துக் கொண்டு வரிசையாகவும் ஆடினர்.

“மேனகையின் அழகின் வாரிசு
சகுந்தலை என்னும் மகளாய்
வந்து உதித்தாளே” என்று கட்டியக்காரன் மீண்டும் வட்டமிட்டு ஆடிய போது அப்ஸரஸுகளாய் ஆடிய நடனமாதர் ஆடியபடியே மேடையிலிருந்து அகன்றனர். சகுந்தலை துணியால் செய்த சிசுவின் பொம்மை வடிவைக் கையில் ஏந்தி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குழந்தை பொம்மயைத் தாலாட்டும் விதமாக அசைத்தபடி மேடையின் மையமாய் நின்று கொண்டாள்.

வனதேவதையும் வானும் பூமியும்
வியந்து மகிழ்ந்தனரே அழகை
வணங்கி நின்றனரே

மீண்டும் நடன மாதர் கைகளில் இலை தழைகளை ஏந்தி வந்து மேனகையைச் சுற்றி வந்து முன்புறம் குனிந்தும் பின்புறம் கவிந்தும் வட்டமாக ஆடியபடியே மேடையை விட்டு நீங்கினர்.

பிரம்ம ரிஷியாம் காந்தருவர்
துணைவனாம் விசுவாமித்திரரே
அவர் எங்கே எங்கே மேனகை தவித்தனளே

மேனகை எழுந்து ஒரு கையால் குழந்தை பொம்மையைத் தாங்கி மறு கையை கண்களுக்கு மேலே நெற்றியில் வைத்து மேடையின் ஒவ்வொரு மூலை வரை சென்று பார்த்து விட்டு மறுபடி மையத்துக்கு வந்து ஒரு கையால் கன்னத்தைத் தாங்கி பொம்மையை மடியிலிட்டு அமர்ந்தாள்.

கானகமெல்லாம் கடுந்தவ முனிவனைத்
தேடி அலைந்தனளே மேனகை
தேடி அலைந்தனளே என்று மத்தளம் இசைத்தபடியே கட்டியக்காரன் மேடையைச் சுற்றி வர அவனைத் தொடர்ந்து இலை தழைகளைக் கையிலேந்தி வந்த சக நடனமாதர் நல்ல இடைவெளி விட்டு இரு இணை வரிசையாக நின்றனர்.

மேனகை குழந்தையைக் கையில் ஏந்தியபடி அவர்களுக்குள்ளே நுழைந்து ஒவ்வொருவரையும் சுற்றிப் பின் முதல் வரிசை, அதைத் தொடர்ந்து இரண்டாம் வரிசையையும் சுற்றி ஒரு பெண்ணின் தோள் மீது சாய்ந்து நின்றாள்.

இலைகள் அசையும் மலர்கள் அசையும்
இமைகள் அசையாது மேருமலையாய்
வீற்றிருந்தாரே விசுவாமித்திரர் வீற்றிருந்தாரே

இலைதழைகளுடன் சம்மணமிட்டு மண்டியிட்டு நின்று ஒரு மரத்தின் தோற்றத்தில் வெற்று நடை பயின்று வந்த ஒரு ஆண் ஒரு புலித் தோலின் மீது அமர்ந்து பத்மாசனமிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

கணவன் தரிசனம் கண்ட பொழுதில்
தன்னை மறந்தனளே மேனகை
காதலாய் அவரை வணங்கி நின்றனளே

மேனகை விசுவாமித்திரரின் முன் குழந்தை பொம்மையை வைத்துக் கீழே விழுந்து வணங்கினாள். மேடையைச் சுற்றிச் சுற்றி வந்து முதன் முறையாக உடலை வளைத்து ஆடி மறுபடி விசுவாமித்திரர் முன் நின்றாள்.

உங்கள் அம்சமாய் நம் மகள்
வந்து உதித்தனளே நீங்கள்
வாழ்த்தி ஏற்பீரே

கட்டியக்காரன் மேடையின் ஒரு மூலையில் நின்றபடி தொடர்ந்து பாடினான்.

என் தாய்மையின் பேற்றை
தாங்கள் ஏற்று மகிழ்வீரே
சகுந்தலை என்னும் வரத்தைத் தந்த மாமுனிவரே

பாடல் நின்றது. அரங்கம் மௌனமாய் நோக்கியது. மேனகை மெல்ல எழுந்து கைகளை விரித்தாள். விசுவாமித்திரரரைச் சுற்றி வந்து தாரைதாரையாய்க் கண்ணீர் வடித்துக் கதறி அழுதாள். பின்னர் தரையில் அமர்ந்து விசுவாமித்திரரையே வெறித்தாள்.

மீண்டும் பாடல் துவங்கியது.

கடுந்தவம் கலைந்து கற்சிலை அசைந்து
கண்கள் விழித்து முனிவன் எழுந்தாரே
மேனகை முகம் கண்டு முனிந்தாரே

இப்போது விசுவாமித்திரர் எழுந்து நின்று “போ” என்னும் விதமாய்க் கையை அசைத்தபடி மேடையின் குறுக்கே நடந்தார்.

தேவர்கள் வியக்கும் மேனகை
கணவன் பாதம் பற்றினளே
மகளை ஏற்றிட வேண்டினளே

மேனகை விசுவாமித்திரரின் பாதம் பற்ற அவர் அதை வேகமாய் உதற மேனகை கீழே விழுந்து உருண்டு கதறிக் கதறி அழுதபடி கிடக்க அரங்கத்தில் வெளித் தெரியாப் பதட்டம் நிறைந்தது.

கபட இந்திரனின் ஏவலாய் வந்த
விஷப் பெண்மகளே
நீ விரைந்து மறைவாயே

மீண்டும் மேடையில் குறுக்கு நெடுக்காக விரைப்பாய் நடந்தார் விசுவாமித்திரர்.

நாடகமாடி நற்தவம் போக்கிக்
கூடி மகிழ்ந்தவளே இது உன்
குற்றத்தின் பரிசே

இப்போது மேனகை எழுந்து அவர் நடக்க நடக்க அவரது கவனத்தைக் கவருபவளாய் அவர் பின்னே நடந்தாள். நடன நளினமின்றிப் பையச் சென்றாள்.

தேவரும் வணங்கும் மாமுனிவர்
நன்கு அறிவீரே உம் வாரிசு
இப்பூச் சிசு ஏதும் அறியாதே

இப்போது விசுவாமித்திரர் நின்று கையிலெடுத்து மறு கையை ஓங்கித் தலைக்கு மேல் நீட்டி நின்றார்.

சாபம் பெற்றுப் பூமியில் கல்லாய்
ஆகும் முன்னாலே நீயும் உன்
மகளும் நீங்கிச் செல்வீரே

இப்போது வேகமாக மத்தளத்துக்கு இசையூட்டியபடி கட்டியக்காரன் அவர்கள் இருவரையும் சுற்றிச் சுற்றி ஆடினான்.

திடீரென யசோதரா எழுந்தாள். கண்ணீருடன் அவள் வேகமாகத் தனது இருக்கையை விட்டு நீங்கி, மகாராணியிடம் ஆசி கூடப் பெறாமல், தனது இருப்பிடத்துக்கு நகர்ந்து சென்றது சபைக்கு அதிர்ச்சியாயிருந்தது. கட்டியக்காரன் கையை நிறுத்தி நிற்க, மற்ற இருவரும் கையைக் கட்டி நின்றனர். தொடருங்கள் என்பதாக ராணி கோதமி கையசைக்க நாட்டியம் தொடர்ந்தது.

******

குகையை விட்டு வெளியே வந்த சித்தார்த்தனின் தோற்றம் தோல் போர்த்திய எலும்புக்கூட்டைப் போல இருந்தது. எதையோ நினைவு படுத்திக் கொள்வது போல், தேடுவது போல் சுற்றும் முற்றும் பார்த்தவன் பாறைகள் மீது அபார சுறுசுறுப்புடன் ஏறி ஒரு மரத்தின் அடையாளம் கண்டது போல் நின்று அதை ஒட்டிய பாறை மீது ஏறி மெதுவாக சுனைக்குள் இறங்கினான்.

நீர்த்தாவரங்களை நீக்கி நீரை அள்ளிப் பருகினான். திரும்ப வந்த வழியில் இறங்கி நடந்தவன் குகையைத் தாண்டி சரிவில் கவனமாக ஆனால் பழக்கப்பட்ட விரைவுடன் இறங்கினான்.

வேப்பமர வாடை தென்பட்டதும் அதன் தளிர்களாகத் தேர்ந்தெடுத்துக் கையில் பற்றியபடி மேலே நடந்தான். பழக்கப்பட்டவன் போல ஒரு பலா மரம் தென்பட்டதும் அதன் எதிரே சரிவில் நடந்து அருவியை அடைந்தான்.

கையில் கொண்டு வந்திருந்த வேப்பிலைத் தளிர்களை ஒரு கல்லின் கீழ் பத்திரமாக வைத்து உடை நீக்கி கௌபீனத்துடன் அருவியில் நீராடினான். குளித்து முடித்து வெய்யிலில் வந்து நின்ற போது உடலில் பல இடங்களிலும் பூச்சிக் கடியால் தடித்திருந்தது. வலது காலில் ரத்தம் வடிந்து முழங்காலுக்குக் கீழே ஆழ்ந்த ரணம் தெரிந்தது. வேப்பிலைத் தளிர்களைக் கல்லில் நசுக்கி அந்தப் புண்களின் மீது பிழிந்தான். பின் அந்த சக்கையை அதன் மீது வைத்து கோரைப் புற்களால் கட்டுப் போட்டான்.

திரும்பி மலை ஏறும் போது ஓரிடத்தில் திட்டுத்திட்டாக ரத்தம் கற்களின் மீது கொட்டி இறுகிக் கொண்டிருந்தது. அதன் மீது கால் படாமல் பக்கவாட்டமாக ஏறி மேற் செல்கையில் ஒரு எருதை வேட்டையாடிய புலி அதைக் கடித்து உண்டு கொண்டிருந்தது. அப்படியே அசையாமல் நின்றான். ஓரிரு நிமிடங்களில் புலி எருதைக் கவ்வி இழுத்தபடியே அவனைத் தாண்டி நகர்ந்து சென்றது. குகையின் வாசலை அடைந்தவுடன் தட்டியான பாறையின் மீது படுத்தான். சற்று முன் வரை வெய்யில் காய்ந்திருந்ததால் அது சூடாக இருந்த்தது. வானம் தெள்ளிய நீலமாயிருந்தது. வெண் மேகத் திட்டுக்கள் தெரிந்தன. உயரத்தில் கழுகுகள் பறக்கின்றனவா அல்லது நிலையாயிருக்கின்றனவா என்று பிரித்தரிய முடியாத படி தென்பட்டன.

பட்டாம் பூச்சி ஓரிரு நாட்களில் வாழ்ந்து மடிகிறது. இந்த எருது பல வருடம் வளர்ந்து புலிக்கு இறையானது. இவற்றின் வாழ்வும் மரணமும் இயல்பாகத் தென்படுகின்றன. ஒன்றாய்த் திரியும் யானைகளோ மான்களோ பாய்ந்து வேட்டையாடும் புலியின் விரைவோ இயல்பாய்த் தென்படுகின்றன. மனித வாழ்வில் அவன் மகிழ்வதும் வருந்துவதும் கொண்டாடிக் கொள்பவையும் துரதிஷ்டமாகக் கருதுபவையும் திரும்பத் திரும்ப ஏதோ ஒரு விதையின் புதையுண்ட விதையின் நீண்டகாலத்துக்குப் பின்னான முட்செடியாய் அல்லது பூச்செடியாய் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நீட்சியைக் கொண்டு பார்க்கும் போது முற்பிறவிகளில் தொக்கி நின்ற இடத்திலிருந்து தொடர்ந்து செல்வதாகத் தான் தோன்றுகிறது. இந்தத் தொடர்ச்சியில் பெரிய ஒரு பிடிமானமும் பற்றும் அது மீளாத் தொடரான பல பிறவிகளில் அவனைப் பிணைத்துப் போடுகிறதோ?

இந்த முடிவுறாச் சங்கிலியின் எந்தக் கண்ணியில் எப்போது பொருந்தினாலும் மரணம் என்பது ஒரு இடைவெளியாகிறது. பின் மீண்டும் ஜனனம். முன்பிறவி பற்றி சரியான நினைவுகள் இல்லை என்றால் என்ன?
காமமோ, செல்வம் குவிக்கும் ஆசையோ, பதவியோ, சுகமோ, நிலமோ ஒரே மாதிரி மூர்க்கப் பிடிப்புகள். மறுபிறவிதானே?

இந்தப் பற்றுக்களிலிருந்து, கட்டுக்களிலிருந்து விடுதலை இருந்தால் அந்தப் பிறவியுடன் இன்னொரு கண்ணியாய் சங்கிலியில் சேராமல், சங்கிலியை விட்டுத் தெறித்து வெளியேறும் அற்புதம் நிகழும். ஆனால் அந்த நிலைக்கு எது அடையாளம்?

இதைத் தேடும் திசை எனது வழியானது என் பேறு. காட்டில் இலை, காய், கனி எனத் தின்று உயிர் வாழும் போது புலன்கள் அடங்கி உடல் முதன் முறையாகச் சுமையாக இல்லாமல் இருக்கிறது. ஆனால் ஐயம் என்னும் இருள் – இது உள்ளே அப்படியே தான் இருக்கிறது. விடை என்னும் ஞான ஒளி எப்போது தென்படும்?

Series Navigationகுறும்பட மேதேய் ! அங்காடி தெருவின் குறும்படபோட்டிசிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *