பாசச்சுமைகள்

This entry is part 9 of 33 in the series 3 மார்ச் 2013

பவள சங்கரி

 

காலை நேர பரபரப்பு ஏதுமில்லாமல் ஒரு மயான அமைதி..  சரியான இடைவெளியில் டொக்.. டொக்.. என்று செக்யூரிட்டி சிஸ்டத்தின் சத்தம் மட்டும் பலமாக ஒலிப்பது போல இருந்தது.  வீடு முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம். புகை வரும் திசை நோக்கிச் சென்ற கால்கள் பூஜை அறையில் ஜெகஜோதியாக விளக்குகளும், புத்தம் புது மலர்களின் மென்மணத்துடன் பளபளவென துடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியிலான விக்கிரகங்கள். வரவேற்பறையில் அலங்காரமாக வீற்றிருக்கும் புத்தர் மற்றும், நடராசர் சிலைகளும்கூட குறைவில்லாமல் இருந்தது. சமயலறையில் சமையல் செய்வதற்குத் தோதாக அனைத்தும்  தயார் நிலையில் இருந்தது.

 

கனகலட்சுமி, மஞ்சள் பூசிய முகத்துடன், கருகருவென்ற தன் நீண்ட கூந்தலை, காதுகளின் இரு புறமும் ஒரு சிறு கற்றை முடியை எடுத்து தண்ணீர் சடை  போட்டு, நுனியில் சின்ன முடிச்சாக இட்டு, அதன்மீது சிறு மல்லிகைச் சரமும் சூடிக்கொண்டு நேரே பூஜையறைக்குள் சென்றவள், அன்றாட வழிபாட்டை முடித்து வந்தாள். இந்த 30 நாட்களாக வீடு நிசப்தமாக இருக்கிறது. மாமியார் இறந்து சடங்குகளெல்லாம் முடிந்து, உறவினர்கள் அனைவரும் திரும்பிச் சென்றாகிவிட்ட நிலையில் வேலையாட்களின் நடமாட்டம் மட்டுமே ஆறுதலளித்தது. ஒரே செல்ல மகளின் திருமணம் பேசி முடியப்போகும் வேளையில் மாமியாரின் மரணமும், அதைவிட கணவனின் திடீரென்ற புத்தி பேதலிப்பும் அவளை ரொம்பவும் வாட்டிவிட்டது. சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறிக் கொண்டு, ஒழுங்கான சாப்பாடும், தூக்கமும் இல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு, அவ்வப்போது “அம்மா.. போயிட்டியா… ஏன் இப்படி பண்ணினே…..” என்று மட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கணவனை நினைத்து அதைவிட வேதனையாக இருந்தது. 75 வயதில் தாயை பறி கொடுக்கும்போதும் கூட இந்த அளவிற்கு சோகம் தாக்குமா என்று அனைவருக்கும் ஆச்சரியம்தான்.

 

தியாகராஜன் வியாபாரத்தில் பெரும்புள்ளி. இவர்களுடைய தீபா ஃபுட் புராடக்ட்ஸ்தான் மாநிலத்திலேயே நம்பர் ஒன் என்று பெயர் பெற்றது. தெய்வ பக்தியும், தொழில் பக்தியும், அன்பான குணமும் கொண்ட தியாகராஜனுக்கு ஊரில் மிக நல்ல பெயர்தான். தன் மகளின் பெயரில் சாதாரணமாக ஆரம்பித்த கம்பெனி இன்று ஆலமரமாய் தழைத்து பல இடங்களில் விழுதாய் பரவியும் உள்ளதற்கு இவருடைய கடுமையான உழைப்பு மட்டுமே காரணம்.

 

சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்து, தாய்க்குத் தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து தம்மை வளர்த்த தாயின்மீது அதிகமான பாசம் கொண்டிருந்ததும் இயற்கைதான். ஆனாலும் தாயின் இழப்பு இந்த அளவிற்கு பாதிக்குமா என்பது மருத்துவர்களுக்கு சந்தேகமாகவே இருந்தது. மன்நல  மருத்துவர்கள் பல விதங்களில் சோதனை செய்து கொண்டிருந்தனர். எந்தவித முன்னேற்றமும் இல்லை. மகளின் திருமணமும், தொழிலும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் நிற்பது பெரும் வேதனையாக இருந்தது.

 

 

 

‘அம்மா.. அம்மா… என்னம்மா அப்படி பாக்கறே… ஏன் அப்படி செய்தயாம்…” ஐயோ.. அந்த பார்வை என்னை துரத்திட்டே இருக்கே… திரும்பிய பக்கமெல்லாம் உறுத்துப் பார்த்து துளைத்து எடுக்குதே… ஏன்… அப்படி பாக்கறே….. கட்டிலுக்கடியில் ஒடுங்கி, குந்தவைத்து உட்கார்ந்திருக்கும் கணவனைப் பார்க்க சகிக்க முடியவில்லை கனகலட்சுமிக்கு. எத்துனை கம்பீரமான மனிதர். இப்படி ஆகிவிட்டாரே என்று துடித்துப்போனாள். தூக்க மாத்திரை கூட முழுமையான தூக்கம் வரவழைக்கவில்லை. அமைதியற்ற தூக்கம். மெதுவாக எழுப்பி அணைத்து, பயம் தெளியவைத்து, குளியலறைப் பக்கம் கூட்டிச்சென்று பல் துலக்கி, முகம் அலம்பச் செய்து கொண்டுவந்து உட்கார வைத்துவிட்டு காப்பி எடுத்துவரச் சென்றாள்.

 

லக்கிடி, (வயநாடு), இயற்கை அழகு உள்ளம் கொள்ளை கொள்ளும் நகரம். தாமராசேரி மலைப்பாதையின் மகுடமாக, அதன் அடிவாரத்திலிருந்து ஒன்பதாவது ஊசிமுனை வளைவில், அதாவது கடல் அளவைக்காட்டிலும் 2296 அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புதமான வனப்பகுதி. மலையேற்றம் செய்பவர்களுக்கு, இதன் பள்ளத்தாக்கிலும், பக்கவாட்டிலும் பசுமையின் அழகு  சூழ்ந்த சொர்க்க பூமியாகவே இருக்கும். தியாகராஜனுக்கும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் இங்கு மலையேற்றம் செய்வதில் அப்படி ஒரு மகிழ்ச்சி….

 

காப்பியை போட்டு எடுத்துக்கொண்டு தியாகராஜனின் அறையில் நுழைந்தவள் ஒரு கணம் அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றுவிட்டாள். பால்கனி கதவைத் திறந்து கணவன் வெளியில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை அவள்.

 

‘ ”ஆ..  காலங்காத்தால சில்லுனு காத்து எப்படி அடிக்குது..  அட வானம்கூட பளிச்சினு இருக்கே…. கீழே மட்டும் எங்கே பச்சப்பசேல்னு இருக்குற அந்த காட்சியக் காணோமே… ஒரு வேளை எனக்குத்தான் கண்ணு சரியா தெரியலியோ…. நல்லா குனிஞ்சு உத்து பாத்தாலும் தெரியலியே… சரி.. சரி.. ஜாக்கிரதையா நடக்கணும். இவ்ளோ பெரிய பள்ளத்துல உழுந்தா எலும்புகூட சிக்காது…  அம்மாவோட எலும்பு என்னாயிருக்கும்…. உடனே சிரிப்புதான் வந்தது.. அட அதைத்தான் கரண்ட்டுல சுட்டு கொஞ்சமா சாம்பலா குடுத்தாங்களே….  ஆனாலும் அங்கே இரண்டு கண்ணு உத்து பார்த்துட்டே இருக்கே.. சரி.. சரி.. மெதுவா.. மெதுவா நட… ஸ்…ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ..ஆ இது என்ன குறுக்க செவுரு இருக்கு.. டங்குனு மண்டையில இடிச்சுடுச்சோ.. பிசுபிசுங்குதே…. ரத்தம் வருதோ…. அப்புடியே திரும்பி நட.. ஜாக்கிரதை… ஆமா. சரிம்மா.. சரிம்மா.. பாத்துதான் வறேன்.. இரு வறேன்…. ‘.. ‘

 

தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சுய நினைவில்லாமல் 40 அடி உயரத்தில் அரைக்கல்  கைப்பிடிச்சுவரில் நடந்து கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தால் ஈரக்குலையெல்லாம் நடுங்காமல் என்ன செய்யும்..  நல்ல வேளையாக வாட்ச்மேனும் கீழேயிருந்து கவனித்துவிட உடனடியாக மற்ற ஆட்களையும் பிடித்து தார்பாயை எடுத்துவந்து, கீழே விழுந்தால் பிடிப்பதற்கு தயாராக இருந்தார்கள்…. அதற்குள் கனகலட்சுமி அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டு மெதுவாக கணவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அப்படியே முன்னேறி நெருங்கும் போது, கால் இடறி விழப்பார்த்த கணவனை தாங்கிப் பிடித்தவள், கனம் தாங்காமல் இருவரும்  உள்புறமாக சரிந்து விழுந்தார்கள். நல்லவேளையாக உயரம் குறைவானதால் பெரிய அடியெல்லாம் ஒன்றுமில்லாமல் தப்பித்துக் கொண்டார்கள்.

 

சூழ்நிலையின் ஆபத்து புரிய இனிமேல் வீட்டிற்குள் வைத்துக்கொண்டு வைத்தியம் பார்ப்பது சரியல்ல என்று ஊரிலேயே பெரிய மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்து மளமளவென காரியத்திலும் இறங்கினாள்..

 

பலவிதமான பரிசோதனைகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மனைவியிடமும், மகளிடமும், பணியாட்களிடமும் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சிறு புள்ளியில் புத்தி தடுமாறியிருக்கிறது. அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்து விட்டால் வெகு எளிதாக குணப்படுத்தும் சாத்தியம் அதிகம். அம்மா உயிர் விட்ட நேரம் தாயும், மகளும் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். தியாகராஜனின் அலறல் கேட்டே வேலையாட்கள் வந்து பார்த்திருக்கிறார்கள் . அப்போது பெரியம்மா சுருண்டு கீழே விழுந்து கிடந்ததையும் தியாகராஜன் அப்படியே நிலையற்று வெறித்துப் பார்த்து அருகில் உட்கார்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறார்கள்.  ஏற்கனவே அம்மாவிற்கு இருதய வியாதி இருந்ததால் மாரடைப்பு வந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.. திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அம்மாவின் இழப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கலாம், போகப்போக சரியாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தார்கள்.

 

ஊரிலேயே பெரிய மனநல மருத்துவர் டாக்டர் மதன். கவுன்சிலிங், சைக்கோதெரபி என பலவிதமான வழிகளில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று ஏதோ பொறிதட்டியது. தாய் இறக்கும் போது ஏதோ அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று . யாரும் உடன் இல்லாதலால், தியாகராஜனும் சொல்லும் நிலையில் இல்லாதலால், என்ன செய்வது என்று குழப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு செக்யூரிட்டி சிஸ்டம் நினைவிற்கு வர குறிப்பிட்ட அந்த நாளில் என்ன நடந்திருக்கும் என்று போட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்….

 

குறிப்பிட்ட அந்த நாளில் காலை 8 மணி இருக்கும். கோவிலில் குருபெயர்ச்சிக்கான விசேச பூஜை. திருமணம் ஆகப்போகும் மகளுக்காக அதில் கலந்து கொள்ளலாம் என்று அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்புகிறாள் கனகலட்சுமி. அவர்கள் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் தியாகராஜனும் கம்பெனிக்கு கிளம்புகிறார். அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. போனில் பேசியபடி நடந்து கொண்டிருக்கிறார்….

 

”அப்படியா…..  என்னப்பா சொல்லறே.. உண்மையாவா .. நீ சொல்றதை அப்படியே நம்பலாமா..?”

 

“நான் ஏனப்பா பொய் சொல்லப்போறேன். நான் உன்கிட்ட சொல்லிப்போடுவேன்னு தெரிஞ்சுதானே உங்கம்மா என்கிட்ட அப்படிச் சொன்னாங்க.. “

 

“அதான் ஏன்னு எனக்குப் புரியல..”  தன் பேத்தியின் கல்யாணத்தைத் தானே கெடுக்கக்கூடிய அத்துனை கல்மனம் கொண்டவளா தம் தாய் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை அவனால்.. முகத்தில் அந்த உணர்வு அப்பட்டமாகத் தெரிகிறது.

 

நேரே அம்மாவின் அறைக்குச் சென்றவன், அம்மா கழிவறையிலிருந்து வரும்வரை காத்திருக்கப் பிடிக்காமல் வெளியில் வந்தவன், திருமணம் பேசி முடித்த இன்னொரு நண்பனுக்கு போன் செய்து பேசுகிறான்.. மறு முனையில் பேசிய நண்பன் சொன்ன விசயம் நல்லதாக இல்லை என்பது தியாகராஜன் முகம் போன போக்கில் நன்கு புரிந்தது.

 

“என்னப்பா.. நான் ஏன் அப்படி சொல்லப் போறேன். எங்கள் எல்லாருக்கும் ரொம்பவும் பிடிச்சுப்போனதால்தான் திருமண ஏற்பாடுகள் செய்யத் துணிந்தேன். அம்மா ஏன் அப்படிச் சொன்னாங்கன்னு தெரியலியே.. இருப்பா. அம்மாகிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்”

 

”அம்மா.. அம்மா..”

 

‘சொல்லுப்பா ..அம்மா ரூமுக்கு வர்றதுக்கு இப்பதான் வழி தெரிஞ்சுதா.. அம்மாவைப் பாத்து அன்பா, ஆசையா நாலு வார்த்தை பேசலாம்னு வந்தியா.. இல்ல உன் பொண்ணுக்காகத்தான் வந்தியா..?”

 

“அம்மா.. ஏம்மா.. இப்படீல்லாம் பன்றே நீ.. உனக்கு என்னதான் பிரச்சனை. சொந்த பேத்தி கல்யாணத்தை நிறுத்தப் பாக்கிறயே.. நியாயமா உனக்கு? அவதான் உனக்கு என்ன துரோகம் செய்தாள்?”

 

“ஏண்டாப்பா.. அப்படி கேளு. இன்னைக்கு உன் பொண்ணு கல்யாணத்துல பிரச்சனை வரும்னு தெரிஞ்சதும் ஓடியாந்து நிக்கறியே.. எப்பவாச்சும் என்கிட்ட உக்காந்து 10 நிமிசமாச்சும் பேச மனசு இருக்கா உனக்கு..”

 

“அம்மா, என் பிசினஸ் அப்படி. நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். இதுல உக்கார்ந்து ஊர் நியாயம் பேசவெல்லாம் ஏது நேரம். உனக்கு வேணுங்கற வசதி எல்லாம் செய்து குடுத்திருக்கேனே. பெல் அடிச்சா ஓடிவர வேலையாள் தயாரா இருக்காங்க. உன்னோட ரூமுக்குள்ள சகல வசதியும் செய்து குடுத்திருக்கேனே..  இதோட என்ன வேணும் உனக்கு”

 

“ஆமாண்டா, எவ்ளோ நேரந்தான் இந்த மிசினையெல்லாம் பாத்துக்கிட்டு கிடக்கிறது. பைத்தியம் புடிக்கிறா மாதிரி இருக்கு. அதான் பொழுது போவலைன்னு உன் சிநேகிதனை வரச்சொல்லி ஆளை அனுப்பினேன். “

 

“வரச்சொன்னதெல்லாம் சரிதான், உன் பேத்திக்கு கல்யாணத்துல இஷ்டமில்லேன்னு ஏன் சொன்னே.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க காதுக்குப் போனா என்ன ஆவுறது.. அவளைப்பத்தி தப்பான அபிப்ராயம் வந்துடாதா?”

 

“வரட்டும், நல்லா வரட்டும். எனக்கு என்னா வந்துது. எல்லாத்துக்கும் அவங்கவங்க வேலை பெரிசாப் போச்சு. இங்கன ஒரு கிழவி தனியா கிடந்து அல்லாடுறது யாருக்கு தெரியுது. இப்ப தெரியுதா நான் நினைச்சா என்னா வேணா செய்ய முடியும்னு”

 

“ஏம்மா இப்படி பைத்தியக்காரத்தனமா பேசிட்டிருக்கே.. நிம்மதியா ஓய்வெடுக்காம இப்படி தேவையில்லாத வேலையெல்லாம் பண்ணிட்டிருக்கியே, உனக்கே இது நல்லாயிருக்கா..”

 

“இதுக்கே இப்புடி சொல்றியே, மாபிள்ளை வீட்டுக்கே போன் பண்ணி பேசப்போறேனே.. அப்ப என்ன செய்வே.. இதோ பாரு நம்பரெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்..”

 

“அம்மா.. இங்க கொண்டாம்மா .. அந்த நம்பரை என் பொண்ணு வாழ்க்கையையே நாசம் பண்ணிப்புடாதே… இதுக்கும் மேல ஏதாவது பேசினாயான்னா எனக்கு கோபம்தான் வரும் பாத்துக்க”

 

“என்னடா பண்ணுவே.. தர மாட்டேன். அவங்ககிட்ட பேசத்தான் போறேன்.. உன்னால என்னா பண்ண முடியுமோ பண்ணு போடா..”

 

தியாகராஜனுக்கு கோபம் தலைக்கேற வேகமாக கட்டில் நுனியில் உட்கார்ந்திருந்த அம்மாவின் கையிலிருந்த சீட்டை பிடுங்க எத்தனிக்க, அவர் அதைத் தர மறுக்க, அந்தப் போராட்டத்தில் நொடியில் அம்மா அப்படியே தலை குப்புற கீழே விழ.. அம்மா.. அம்மா.. என்று கத்திக்கொண்டே தியாகராஜன் அவரை உலுக்க, தலை அப்படியே சரிய, அந்த நொடியில் அப்படியே கிலி பிடித்தவன் போல தியாகராஜன் தொம்மென்று உட்கார்ந்து கண்கள் நிலைகுத்திப் போனவன்தான் இந்த நிமிடம் வரை அந்த மனநிலை தெளியவே இல்லை.

 

அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து நின்றாலும், பாவம் அந்த மூதாட்டி, அன்பிற்காக எவ்வளவு ஏங்கியிருக்கிறார் என்று புரிந்தபோது குற்ற உணர்ச்சியே மேலிட்டது தாய்க்கும், மகளுக்கும்.

 

விவரம் அறிந்தவுடன் டாக்டர் மதனுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஹிப்னாடிச முறையில் அவனை ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்தி, தாய் இறந்தது தன்னால் அல்ல, அவருடைய இறுதிக்காலம் என்பதால் ஏதோ ஒரு சாக்கில் உயிர் பிரிந்துவிட்டது. இதற்கு தியாகராஜன் எந்த வகையிலும் பொறுப்பில்லை என்பதால் குற்ற உணர்ச்சி தேவையில்லை என்று புரிய வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக தியாகராஜனின் நிலையில் மாற்றம் தெரிந்தது.

 

கனகலட்சுமியின், விரதமும், வேண்டுதலும் பலித்துவிட்டது என்ற நிம்மதியில் அவளும், தந்தை குணமாகிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் மகளும் இருந்தபோதுதான் யாரும் எதிர்பார்க்காத அது நடந்துவிட்டது.

 

ஆம், பூரணமாக குணமாகிவிட்டது என்று மருத்துவர் மகிழ்ச்சியாகச் சொல்லி, மருந்து, மாத்திரைகளெல்லாம் நிறுத்திவிடலாம் என்று சொல்லி அனுப்பிய அன்று இரவு, மனைவி, மகளுடன் கலகலப்பாகப் பேசிவிட்டுப் படுத்தவன் தான். காலையில் எழுந்திருக்கவே இல்லை. இரவு என்ன நடந்திருக்கும் என்று இன்றுவரை யாருக்கும் புரியவே இல்லை!

 

Series Navigationசமாதானத்திற்க்கான பரிசுவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
author

பவள சங்கரி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பவள சங்கரியின் ” பாவச்சுமைகள் ” சிறுகதை சோகமாகவே முடிந்துள்ளது.குற்ற உணர்வினால் உண்டான DEPRESSION எனும் மனநோயால் பாதிக்கப்பட்டுவிட்ட தியாகராஜனுக்கு மனோவியல் முறையில் சிகிச்சை தந்த டாக்டர் மதனைப்போல் நாமும் அவர் பூரண குணமாகிவிட்டார் என்று நினைத்த மறுநிமிடம் அவர் இறந்துபோனது அதிர்ச்சியையே உண்டுபண்ணுகிறது.

    வயதானவர்கள் அன்புக்கு ஏங்கும்போது அவர்கள் எத்தகைய விபரீத முடிவுக்கும் போகலாம் என்ற உண்மையை இக்கதை சொல்லாமல் சொல்கிறது

    மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனநிலை பாதிக்கப்படின் உடல்நலமும் கெடும் என்பது முற்றிலும் உண்மையே அவ்வகையில் தியாகராஜனும் மாரடைப்பால் காலமாகியிருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது….வாழ்த்துகள் பவள சங்கரி….டாக்டர் ஜி. ஜான்சன்

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு டா.ஜான்சன்,

    மிக்க நன்றி. தங்கள் மூலம் பெற்ற வாழ்த்து மிக முக்கியமானது. கதை சரியான கோணத்தில் பயணித்திருக்கிறது என்ற நம்பிக்கை ஊக்கமளிக்கிறது.

    பி.கு. ஐயா, கதையின் தலைப்பு, பாசச்சுமைகள். பாவச் சுமைகள் சரிவரும் என்று தோன்றவில்லை.. எல்லாம் பாசத்தினால் வந்த வினை. தாய் மகன் மீதும், மகன் மகள் மீதும், மகன் தாய் மீதும், இப்படி பாசம் அதிக வைத்ததுதான் இந்த சோகமான முடிவிற்கு காரணமாகிவிட்டது இல்லையா? மகன் ஒரு வேளை மனநிலை தெளியாமல் இருந்திருந்தால் உயிருடனாவது இருந்திருப்பாரோ?

    அன்புடன்
    பவள சங்கரி

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, வணக்கம்.

    ஆமாம் நான்தான் தவறாக பாவச்சுமைகள் என்று எழுதிவிட்டேன். பாசச்சுமைகள் நல்ல தலைப்பே. உண்மைதான். பலவேளைகளில் பாச மிகுதியால் பல சுமைகளை நாம் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்படுகிறோம்.

    நாம் அதிகமாக பாசம் கொண்டவர்களைப் பிரிய நேர்ந்தால் மிகுந்த துக்கம் கொள்கிறோம்

    இந்த கதையில் மனநிலை பாதிக்கப்பட்ட தியாகராஜன் மனோவியல் ரீதியில் குணமானபின்பு சுய உணர்வு பெற்ற நிலையில் குடும்பத்தினருடன் மகிழ்ந்திருந்தபோதும், இரவில் தாயின் இறப்பு மீண்டும் தோன்றி உடலை குறிப்பாக இருதயத்தைப் பாதித்து மாரடைப்பு வந்ததோ என்றே எண்ணத் தோன்றுகிறது. காரணம் வேறு எதிலும் திடீர் மரணம் நிகழும் வாய்ப்பில்லை. அதோடு இறந்துபோன தாய்க்கும் முன்பே இருதய நோய் இருந்துள்ளது. அது பரம்பரை வழியாக வர வாய்ப்பும் உள்ளது. முன்பே மனநோய் காரணமாக அதிகமான மன உளைச்சல் கொண்டிருந்ததால், அவரது இருதயமும் பாதிக்கப்படும் சாத்தியமும் அதிகமே எனலாம்

    நீங்கள் கூறியுள்ளபடி ஒருவேளை அவர் குணப்படாவிடின், அதே நிலையில் நீண்ட நாட்கள்கூட வாழ்ந்திருக்கலாம்.

    என்னுடன் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *