நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1

author
2
0 minutes, 14 seconds Read
This entry is part 11 of 26 in the series 17 மார்ச் 2013

 

-தாரமங்கலம் வளவன்

“ குரு தட்சணை கொடுக்கிறதுக்கு பதிலா இந்த ஏழைப் பெண்ணை வர தட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்களா ”  கல்யாணி கேட்ட இந்த நேரிடையான கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தானம் தடுமாறினான்.

 

சந்தானம் பிரபல பிண்ணணி பாடகர் வெங்கட்டின் ஒரே மகன். சந்தானமும் பாடுவான். சில திரைப் பாடல்களை அவனும் பாடியுள்ளான். அவ்வளவு பிரபலம் என்று சொல்ல முடியாது. அதில் அவனுக்கு வருத்தம் தான். அப்பாவின் பெயரினால் தான் தனக்கு சான்ஸ் கிடைக்கிறது என்பதும் தன்னால் சொந்த காலில் நிற்க முடியவில்லை என்பதும் அவனுக்கு புரிந்து சில சமயம் சங்கடத்தை ஏற்படுத்தும். அப்பா அம்மா கல்யாணத்திற்காக வற்புறுத்தும் போது கூட இதே காரணத்திற்காக தான் கல்யாணம் வேண்டாம் என்று தள்ளிப் போடுவான். பெரிய பாடகனாக தன்னை நிரூபித்த பிறகு தான் கல்யாணம் என்று இதுவரை எடுத்திருந்த சபதம் கல்யாணியை பார்த்த பின் மாறி விட்டது.

 

போன வாரம் ஒரு மாலையில் வெங்கட் சோபாவில் உட்கார்ந்து டீ அருந்தி கொண்டு அன்று வந்த செய்தி தாளை படித்துகொண்டிருந்தார். உள்ளேயிருந்து பாடகரின் மனைவி லட்சுமி,

 

“ ஏங்க, அன்னிக்கி அந்த வாரப் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தீங்களே, அது வந்திருக்கு பாருங்க..” என்று காட்ட, அந்த செய்தியை படிப்பதற்காக வாங்கியவர், தன்னுடைய பேட்டியை விட முக்கியமான செய்தி அதே பக்கத்தில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானார்.

 

   அந்த  செய்தியோடு ஒரு போட்டோ ஒன்றும் பிரசுரமாகியிருந்தது. அதில் அப்பா, இரண்டு பெண்கள். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் இந்த கல்யாணி.

 

“ ஏங்க, அப்படியே மலைச்சி போயிட்டிங்க…. ஏதாவது தப்பா போட்டிருக்காங்களா உங்க பேட்டியில….” பாடகரின் மனைவி லட்சுமி,

 

“ என் பேட்டியை நான் இன்னும் படிக்கவே இல்ல…. இந்த செய்திய பாத்துதான் எனக்கு வருத்தமா இருக்கு….” அதை சுட்டி காண்பித்து விட்டு பேச ஆரம்பித்தார்.

 

 “ ஏற்கனவே ஒரு தடவை சொல்லியிருக்கேன்…  என் அப்பாவுக்கு மாறுதல் வந்து நாலு வருஷம் நாங்க திருவாரூர்ல இருந்திருக்கோம். ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ பிரபல கர்நாடக இசை மேதை சுப்பண்ணா திருவாரூர்ல  இருப்பதா தெரிஞ்சி, என் அப்பா, அதாவது உன்னோட மாமனார் அவருகிட்டே என்ன பாட்டு கத்துக்க சேத்தி விட்டார். அவருகிட்ட கத்துகிட்டதுதான் இப்ப நான் பாடகனா நிக்கிறதுக்கு உதவுது.  அவர் நா படிக்கற காலத்திலேயே இறந்துட்டாரு….அவரோட மகன் குடும்பம் இப்ப ரொம்ப சிரமத்தில இருக்கிறதா இதில போட்டிருக்கு… எனக்கு தெரிய அவருக்கு ரண்டு மகனுங்க…. இதில ஒரு மகனை பத்திதான் இதுல போட்டிருக்கு… அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவணும்…” கொஞ்சம் நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

 

“  சந்தானத்தை அனுப்பி பணம் கொடுத்துட்டு வரச்சொல்லணும்..”  வெங்கட்.

 

அதற்குள் குறுக்கிட்ட லட்சுமி “ அந்த இரண்டு பொண்ணுங்கள்ள ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்குங்க.. அதை நம்ம சந்தானத்துக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்ங்க.. கல்யாணம் வேணாம்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவன் இந்த பொண்ண போய் பாத்தா சம்மதிப்பான்னு தோணுது.  இதுதாங்க நாம அவங்களுக்கு செய்யற பெரிய உதவி…”. என்று பாடகரின் மனைவி சொன்னார்கள்.

 

“முதல்ல சந்தானத்துக்கிட்ட பணம்  கொடுத்திட்டு வான்னு சொல்லி அனுப்புவோம்.. எப்படியும் பொண்ண பாக்கத்தான் போறான்… அவனே முடிவு பண்ணட்டும்… நாம சொன்னா வேண்டாம்னு சொல்வான்..”  என்றார் வெங்கட்.

 

கார் திருவாரூரை அடையும் போது சந்தானம் களைத்துப் போயிருந்தான். நேராக அவர்கள் வீட்டிற்கு போகலாமா என்று யோசித்தான். சென்னையில் விடியலில் புறப்பட்டது. அந்த வீட்டில் இரண்டு இளம் பெண்கள் இருப்பது பற்றி நினைவுக்கு வர, அவர்களின் பார்வையில் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. ஹோட்டலில் ரூம் எடுத்து, பிரஷ் அப் செய்து கொண்டு போனால் பரவாயில்லை என்று முடிவு செய்த சந்தானம் ரூம் எடுத்து, குளித்து, பேண்ட்,சர்ட் மாற்றிக்கொண்டு அப்பா கொடுத்தனுப்பிய விலாசத்தை தேடினான்.

 

புறப்படும்போது அப்பா ஊரைப் பற்றி விவரித்திருந்தார். தியாகராஜர் கோயிலின் தேர் ஓடுவதற்கான அகன்ற நான்கு வீதிகள், மேற்கு வாசலை ஒட்டிய பெரிய தெப்பக்குளம்.

 

தனக்கும், அப்பாவிற்கும் பிடித்த – தங்கள் வாழ்வின் ஆதாரமான இசைக்கும் இந்த ஊர் பிரசித்தம் என்று அவர் சொன்னது ஞாபகம் வர, இறைவனும், இசையும் ஒருங்கே பெற்ற இந்த ஊரை நன்றாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். சங்கீத மும்மூர்த்திகள் இந்த ஊரில்தான் பிறந்தவர்கள் என்று படித்தது ஞாபகம் வந்தது.

 

அப்பா கொடுத்த விலாசத்தை ஒருவழியாக கண்டு பிடித்து, அந்த வீட்டுக் கதவைத் தட்டினான். பிரம்மாண்டமான பெரிய கதவு. அப்பா இந்த வீட்டிலிருந்துதான் தன் இசைப்பயணத்தை தொடங்கினார் என்பதும்,  அந்த மகான் இந்த வீட்டில்   வாழ்ந்தார் என்பதையும் நினைத்து பார்க்கும் போது சந்தானத்திற்கு அந்த வீட்டின் மீது ஒரு பக்தி ஏற்பட்டது.

 

ஒரு வயதான அம்மா கதைவைத் திறந்தது.

 

“ கர்நாடக இசை மேதை சுப்பண்ணா அவங்களோட மகனை பார்க்கணும். நான் சென்னையிலிருந்து வர்ரேன்.” சற்று உரக்கமாகவே சொன்னான் வயதான அம்மா என்பதை உத்தேசித்து.

 

“ அப்படி யாரும் இல்லியே” – அந்த அம்மா.

 

உள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார்.

 

சந்தானம் திரும்பவும் சொன்னான்.

 

“ ஓ…… நீங்க ஊருக்கு புதுசு போல இருக்கு. அவங்க மகனுங்க இந்த வீட்டை எங்களுக்கு வித்து பதினைந்து வருஷம் ஆயிடுச்சு.” பெரியவர்.

 

“ அவங்க, இப்ப எங்க குடியிருக்காங்கன்னு சொல்லமுடியுங்களா…….” சந்தானம்.

 

விலாசத்தை வாங்கி கொண்டு தேடும் போது, உண்மையிலேயே, சுப்பண்ணாவின் மகன் மிகுந்த ஏழ்மைக்கு வந்து விட்டதாக தெரிந்தது.

 

கார் போக முடியாத  குறுகிய சந்து.

 

காரை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தான்.

 

ஒண்டு குடித்தனம். கதவைத் தட்டினான்.

 

ஒரு பெண் கதவைத் திறந்தது. அது அந்த போட்டோவில் பார்த்த  இரண்டு பெண்களில் ஒன்று என்பது புரிந்தது. போட்டோவில் பார்த்ததை விட அழகு. அக்கம் பக்கம் உள்ள சாதாரணத்தன்மை, அந்த வீட்டின் ஏழ்மை, அந்த பெண் அணிந்துள்ள  உடையின் பழமை- எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் ஒரு கம்பீரமான அழகு. பிரமிக்க வைக்கும் அழகு.

 

“ அப்பா….இங்க வாங்க……….” என்றாள்.

 

அப்பா வருவதற்கு முன்பாகவே இன்னொரு பெண் வந்தாள். அது அந்த போட்டோவில் பார்த்த இரண்டாவது பெண் என்று அவனுக்கு புரிந்தது.

 

அந்த பெண்களின் அப்பாவிடம் சந்தானம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் அப்பா சொன்ன படி அவர்களுக்கு பண உதவி செய்ய வந்திருப்பதாகவும், விருப்ப பட்டால் பணம் கொடுப்பதாகவும் தயங்கி தயங்கி சொன்னான். குடியிருப்பதற்கு வீடு வாங்கி கொடுப்பதாகவும் சொன்னான்.

 

அந்த பெண்களின் அப்பா, தன் பெயர் பட்டாபி என்று அறிமுகப்படுத்தி கொண்டு  சந்தானம், மற்றும் சந்தானத்தின் அப்பாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பிறகு தான் சொன்ன உதவியை ஏற்று கொள்ளுவது போல அவர் பேச ஆரம்பிக்க, அவர் பதில் சொல்வதற்கு முன் உள்ளேயிருந்து,

 

“ அப்பா… கொஞ்சம் உள்ள வாங்க…” என்று குரல் கேட்க,

 

“ என்ன கல்யாணி….” என்று அவர் கேட்டு கொண்டே உள்ளே செல்ல, அந்த பெண்ணின் பெயர் கல்யாணி என்று தெரிந்து கொண்டான்.

 

வெளியே வந்தவர், “ சரிங்க தம்பி, யோசிச்சு சொல்றோம்” என்றார்.

 

“ ரூம் போட்டு தங்கியிருக்கேன்… நாளக்கி வர்ரேன்…” என்று சொல்லி விட்டு ரூமுக்கு வந்து சேர்ந்தான்.

 

கல்யாணி மனதை விட்டு அகலவில்லை….

 

படுத்தான். தூக்கம் வரவில்லை.

 

உடனே சென்னை கிளம்புவது இல்லை என்று முடிவு செய்து கொண்டான்.

 

இரவு பூராவும் யோசித்து பார்த்தான்.

 

காலையில் எழும் போது, ஒரு முடிவு எடுத்தான்.

 

கல்யாணியை மணந்து கொள்வதாக சொல்லி அவள் அப்பாவிடம் பெண் கேட்க வேண்டும் என்று.

 

அடுத்த நாள் காலை அவர்கள் வீட்டுக்கு வந்த சந்தானம், அவள் அப்பா- பட்டாபியிடம், சற்று பதட்டத்துடனும், சங்கோசத்துடனும், கல்யாணியை மணந்து கொள்ளும் தன் விருப்பத்தை சொல்லி விட, அதை உள்ளேயிருந்து கேட்ட கல்யாணி வந்து,

 

“ குரு தட்சணை கொடுக்கிறதுக்கு பதிலா இந்த ஏழைப் பெண்ணை வர தட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்களா…. பண உதவி செய்யறதா சொன்னதை விட, வீடு வாங்கி கொடுக்கிறதா சொன்னதை விட, இது கேவலமா இருக்கே ”  என்று கல்யாணி கேட்க, சந்தானம் என்ன பதில் சொல்வதென்று தடுமாறினான்.

                                              – தொடரும்

Series Navigationசுத்தம் தந்த சொத்து..!மெல்ல நடக்கும் இந்தியா
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் தாரமங்கலம் வளவன் அவர்களுக்கு,

  விறுவிறுப்பான ஆரம்பம். நல்ல நடை.திகைக்க வைக்கும் நிறுத்தம்…சங்கீதம்…..கேட்கும் ஆவலோடு இருக்கிறேன். நன்றி.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 2. Avatar
  தாரமங்கலம் வளவன் says:

  ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *