செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட எண்ணம் இல்லை.
தருமு சிவராமு ஒருவர் தவிர. எழுத்து பத்திரிகையில் வெளிவந்த தம் கவிதைகளைப் பார்த்துத்தான் தான் சி.சு. செல்லப்பாவுக்கு புதுக்கவிதை பற்றிய ஞானமே செல்லப்பாவுக்கு சித்தித்தது என்று பேச எழுத ஆரம்பித்தார். அன்றைய சிற்றிதழ் சூழலின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் தம் பின்னால் ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கத் தொடங்கியதாக அவர் நம்பினார். தருமு சிவராமூ என்ற ஒரு இலக்கிய வியக்தி பிறந்ததே எழுத்து பத்திரிகையில் தான். அவர் கண்டு கொள்ளப்பட வேண்டிய ஒரு இலக்கிய வியக்தியாக ஆனது தமிழ் நாட்டில் தான். அதன் பிறகு தான் இலங்கைத் தமிழகம் அவரைக் கண்டு கொண்டது. கேலி செய் வதற்கோ, திட்டுவதற்கோ எதற்கானால் என்ன, இலங்கைத் தமிழகத்தில் அவர் ஒரு பொருட்டே இல்லை. தமிழகம் போய் எழுத்து பத்திரிகையில் எழுதும் திரிகோணமலைக் காரர் என்று தான் அவர் அங்கு பேசப்பட்டார் என்றாலும், அப்படியாவது ஒரு பெயர் பெற்றாரே அங்கு. காரணம், அவர் முற்போக்கு கூடாரத்திற்குப் போய் கலாநிதி கைலாசபதிக்கு முன் நின்று, “லால் சலாம், உள்ளேன் ஐயா” சொல்லவில்லை. தினம் சென்று அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்து போடவில்லை. இப்படி இன்னும் ஒன்றிரண்டு பேர் உண்டு. அங்கு. எஸ் பொன்னுதுரை, மு. தளையசிங்கம் போன்றோர். கலாநிதி கைலாசபதி M.A. Ph.D யை விட அதிகம் தமிழ் பாண்டித்யமும் மார்க்ஸீய கொள்கைகளை புத்திசாலித் தனமாக கையாள்பவரும், கைலாசபதியிடம் காணப் படாத இலக்கிய உணர்வும் கொண்ட கா.சிவத்தம்பி ஏனோ கைலாசபதியின் அடியொற்றியே தன் விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்திருக்கிறது. 1982-ல் கலாநிதி கைலாசபதி M.A.Ph.Dயின் மரணத்திற்குப் பிறகு தான், தான் முன்னர் கொடி பிடித்த முற்போக்கு கோஷங்களுக்கு புதிய விளக்கங்கள் தரத் தொடங்கினார். அவர் தவிப்பைக் காண பாவமாகத் தான் இருந்தது. சுரணையுள்ள மனிதன் எவ்வளவு காலம் தான் தன் சுய புத்தியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு தரப்பட்ட கோஷங்களை இரைச்சலிட தெருவில் இறங்குவது? எந்த அணியிலும் சேராது தனித்து தன் மரபார்ந்த பாட்டையிலேயே சென்ற மகாகவியைக் கூட கைலாசபதி கோஷ்டியினர் அங்கீகரிக்க மறுத்தனர். அந்தக் காலத்தில் சர்வ தேச அரசியலில் Neutrality is immoral என்ற கோஷம் வலுத்திருந்தது. ஆக இலங்கைத் தமிழ் பேசும் உலகம் தருமு சிவராமூவைக் கண்டு கொள்ளவில்லை யென்றால், அப்போது அங்கு பரவியிருந்த முற்போக்குக் காய்ச்சலும் கலாநிதி கைலாசபதியின் இலக்கிய சர்வாதிகாரமுமே காரணங்கள். எப்படியானால் என்ன, தருமூ சிவராமுவால், தான் பிறந்த இடத்தில் கால் பாவமுடியவில்லை. அவருக்கு செல்லப்பா கிடைத்தது அதிர்ஷ்டவசம் தான்.
ஆனால் சிவராமூவுக்கோ தகப்பன் சாமியாக வேண்டும் என்ற கனவுகள் இருந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு செல்லப்பாவை அவர் மதிக்கவே இல்லை. செல்லப்பா சொல்வார், ”பாரேன் இவன் பண்ற கூத்தை. மல்லாக்கப் படுத்திண்டே ஆகாசத்திலே எச்சத் துப்பறதை அது அவன் மேலேயே விழறதுன்னு தெரிய வேண்டாமோ!” என்று. அவர் சொன்னது சரி. செல்லப்பாவை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு தாக்கியதெல்லாம் சிவராமுவைத் தான் இழிவு படுத்தியது. இருப்பினும், என் புத்தகங்களை வெளியிட செல்லப்பாவின் உதவியை நாடி அவர் வீட்டுக்கு வந்த ராஜபாளையம்(1974) அன்பர்களிடம், “சிவராமூவின் கவிதைகளையும் போடுங்களேன்” என்று அவர் சிபாரிசு செய்தார். விளக்கு பரிசு கொடுக்கப்பட்டபோது சிவராமூ எழுந்திருக்க முடியாது நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த போது பரிசை தன் கையால் கொடுத்து ஒரு சிறந்த கவிஞன் இப்படிக் கிடப்பதைக் கண்டு தான் மிகவும் மன வேதனைப் படுவதாக ஒரு சின்ன பாராட்டுரையும் நிகழ்த்தினார் என்று சொல்லக் கேள்விப்பட்டேன். யார் அச்சில் யார் வார்க்கப்பட்டார்கள்? இது கடைசிக் கட்டம் இதற்கு முன் சிவராமூவின் எழுத்தும் மன நிலையும் சிந்தனைப் போக்கும் வெகுவாக மாறத் தொடங்கி அவையெல்லாம் ஒரு ஸ்திரமான உச்ச நிலையை எழுபதுக்களின் இடையிலேயே அடைந்து விட்டன. திரிகோணமலையில் பெற்றிராத, பெற சமூக சூழல் இல்லாத, சாதி உணர்வுகளும், பிராமண துவேஷமும் சென்னையில் வாழ்ந்த காலத்தில் அவர் பெற்றுக்கொண்டார். இது பார்வை வழிப்பட்டதோ சிந்தனை வழிப்பட்டதோ மட்டும் அல்ல. நோய்க்கூறான ஒரு மனநிலையை இங்கு வந்து வளர்த்துக் கொண்டது சிந்தனையிலும், எழுத்திலும், கலைப் படைப்புகளிலும் தான் ஈடு இணையற்ற அவதார புருஷன் என்று எண்ணம் அவரிடம் மேலோங்கி அதற்கான வாதங்களைத் தேடி முன் வைப்பதில் தீவிரம் கொண்டிருந்தார். இது செல்லப்பா அச்சில் வார்க்கப்பட்ட ஆளுமை என்று யார் சொல்ல முடியும்?, அவர் அச்சு திராவிட கழக தலைமை அச்சில், யாராக இருந்தாலும் சரி அவர்கள் எல்லாம் ஒரே அச்சுதான், தன்னைத் தானே வார்த்துக் கொண்ட சமாசாரம் இது. சாகித்ய அகாடமியின் இலக்கிய கர்த்தாக்கள் வரிசையில் அண்ணாதுரையை மட்டுமோ அல்லது இன்னும் அவர் போன்ற சிலரையுமோ சேர்க்க யோசனை வந்ததும், அப்போது ஆசோசகர்களாக இருந்த சா.கந்தசாமி, தமிழவன் போன்றோர் மறுக்க, சிவராமு தன் ஆக்ரோஷத்தையெல்லாம் இவர்களைத் திட்டிக் கொட்டித் தீர்த்தார். இது எழுத்து ஆரம்ப இதழ்களில் தெரிய வந்த சிவராமூ இல்லை. அந்த சிவராமூ எழுபதுகளிலேயே முற்றிலுமாக மறைந்து தானே உருவாக்கிக்கொண்ட தனி ப்ராண்ட் திராவிட கழக சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தாயிற்று. சிவராமூவின் கவித்வமும் சிந்தனையும், இலக்கியப் பார்வைகளும் க்ஷீணமடைந்தது வெளிப்படை. அவர் கவிதைகளைப் படித்தறியாதவர்களே அவரது அத்யந்த சிஷ்யர்கள் ஆனார்கள். அவர் தன்னைப் பற்றி எழுதிக்கொடுத்து தன் சிஷ்யர்கள் பெயரில் வெளியிடுவது அவர் வழக்கமாயிற்று. சிஷ்யர்களுக்கும் அதில் பெருமிதம் தான் தானே தன்னைப் பற்றி எழுதி சிஷ்யர்கள் பெயரிட்டு தன் புகழ் உலகளாவியது என்று பிரமையைப் பரப்ப ஆசை. இதெல்லாம் தெரியும். ஆனாலும் செல்லப்பாவுக்கு சிவராமூவின் பெருகி வரும் மனப் பிறழ்ச்சி யையும் மீறி, தன் கண்டுபிடிப்பு அவர் என்ற எண்ணத்தில் ஒரு ஒட்டுதல் எப்போதும் இருந்தது. கடைசி வரை. விளக்கு பரிசு கிடைத்து சிவராமூ அதிக நாள் ஜீவிக்கவில்லை. 56 ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு சிறந்த கவியாக இளம் வயதிலேயே மறைந்தவர் தான். தன் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுபவராகவே நீண்ட காலம் கழிந்தது. அது ஒரு சோகம்.
ந.முத்துசாமி, சி.மணி, கி.அ.சச்சிதானந்தம் எல்லாம் நடை என்று தனிவழி பிரிந்தாலும், அது பின்னர் செல்லப்பாவின் பிடிவாத குணம் இல்லாத காரணத்தால்,தோல்வியை ஒப்புக்கொண்டு கடை மூடிய பிறகும் எழுத்து பத்திரிகையில் எங்களுக்கு இடம் இருந்தது. குறிப்பாக, சி.மணி செல்வம் என்ற பெயரில் நிறைய எழுதினார். செல்வம் எழுத்துக்கென்றே தனி இதழ் என்று சொல்லும் அளவுக்கு நிறைய எழுதினார் தன் கருத்துக்களோடு ஒத்துப் போகாது பிரிந்தவர்கள் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. ஞானக் கூத்தன் செல்லப்பாவுக்கு தன் கவிதைகள் பிடிக்கவில்லை என்ற ஒரு பேச்சு இருந்தாலும், நடையில் அவர் ஞானக் கூத்தனின் கவிதைகளைப் பாராட்டியே தன் பத்திரிகையில் செல்லப்பா எழுதினார். ராஜ மார்த்தாண்டனின் கொல்லிப் பாவை சில வருஷங்கள் தொடர்ந்து வெளிவந்தது. பத்திரிகையின் பக்கங்கள் அனைத்தும் காரசாரமான விவாதங்கள் தான். அதிகம் எழுதியது, சுந்தர ராமசாமி, தருமு சிவராமு பின் நான்.
செல்லப்பாவுக்கு எங்கள் விவாதங்கள் கட்டோடு பிடிக்கவில்லை. ராஜமார்த்தாண்டனிடம் அவர் சொன்னார்: “ நான் வளர்த்தவர்களை, நன்றாக வளர்ந்தவர்களை சண்டைக் கோழியாக்கி இருக்கிறீர்கள்” என்று கடிந்து கொண்டாராம், அதை ராஜமார்த்தாண்டனும், ஒரு வேளை சச்சிதானந்தமும் கூட எழுதியுமிருக்கிறார்கள்..
எழுத்து நின்ற பிறகு, பார்வை என்று ஒன்று தொடங்கினார். இன்னுமொன்று கூட, அது நினைவில் இல்லை. அவை எதுவும் நிற்கவில்லை. எழுத்து பத்திரிகை எழுந்த, எழுப்பிய சூழல் வேறு. இப்போது ஒரு வேளை எல்லாம் மாறிவிட்டன போலும். ஆயினும் அவருக்குச் சொல்ல நிறைய இருந்தது. அவர் கிளப்பிவிட்ட விமர்சனம், விவாதம் என்ற பூதம் எல்லா இடங்களிலும் பரவி இரைச்சலைப் பெருக்கியது. செல்லப்பாவுக்கு எழுப்பப்படும் விவாதங்களுக்கு தன் பதில் என்று சொல்ல நிறையவே இருந்திருக்க வேண்டும். ஆனால் சொல்ல இடம் இருக்கவில்லை. பின் நாட்களில் அவரைச் சந்திக்கச் சென்ற போது கட்டுக்கட்டாக நிறைய கைப்பிரதிகளைக் காட்டுவார். ”இது சிவராமுவுக்கு பதில், இது உங்களுக்கு பதில்”, என்று கத்தை கத்தையாக நிறைய கட்டுக்கள் அடுக்கி வைத்திருந்தார் எனக்கு அவை எதுவும் படிக்கக் கிடைத்ததில்லை. விடுமுறைக்கு இடையில் சந்திக்கும் நேரங்களில் அது சாத்தியம் இல்லை தான். ஆனால் செல்லப்பாவுடனேயே அருகில் எப்போதும் இருந்த சச்சிதானந்தம் அவற்றில் சிலவற்றைப் படித்தும் இருக்கிறார் என்று எண்ணுகிறேன். ”இவையெல்லாம் வெளியிடப்பட வேண்டியது மிக அவசியம்” என்று எழுதியும் இருக்கிறார். இந்த அபிப்ராயத்தை அவர் சொன்னது செல்லப்பாவின் மறைவுக்குப் பிறகு. செல்லப்பாவின் மரணத்திற்கு சில வருஷங்கள் முன் இருவரிடையே உறவுகள் கசந்திருந்தன. ஆனால் வேறு சிலரைப் போல அக் கடைசிக்கால கசப்புகளைப் பற்றி சச்சிதானந்தம் பேசுவதில்லை. 86 வருடங்கள் நீளும் ஒரு இலக்கிய வியக்தியின் போராட்ட வாழ்வை, குரு சிஷ்ய பந்தங்களை மறந்து அதன் மரண காலத்தின் முதுமை தந்த கசப்பையும் வேதனை களையும் மாத்திரம் சொல்வது நேர்மையும் இல்லை. உண்மையும் இல்லை. சிலர் பார்த்துப் பேசி பதிவு செய்துள்ள செல்லப்பா அந்த அந்திம கால இருட்டில் பார்த்த செல்லப்பா தான்.
என் அனுபவத்தில் எத்தனையோ வேறுபட்ட செல்லப்பாக்களைப் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக தன் நேர்ப்பார்வையிலும் சிக்கனமாகவும் அதோடு எந்த வித ஆடம்பர அருவருப்புகளும் அற்ற எளிமையும் நல்ல கட்டமைப்பும் கொண்ட புத்தகங்களை எழுத்து பிரசுரமாக அறிமுகப்படுத்தியது. அந்த நாட்களில் எழுத்து பிரசுர புத்தகங்கள் எளிமைக்கு நேர்த்திக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
தன் பத்திரிகைக்கு எழுத்து என்று பெயரிட்டதும் அதை கையெழுத்து வடிவில் வடிவமைத்ததும் அன்று தமிழ் பத்திரிகை உலகில் வேறு எங்கும் காணாதது. முதல் அடி வைப்பு செல்லப்பாவினது தான். பின் தான், க்ரியா அதை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றது. இன்று புத்தக பிரசுரத்தில் காணும் பெரும் மாற்றத்திற்கு பாதை திருப்பியது செல்லப்பாதான்.
அந்தக் காலத்தில் இப்பொழுதுள்ள வசதிகளோ உபகரணங்களோ கிடையாது என்று தான் நினைக்கிறேன். எழுத்து பிரசுரங்களை விற்றாக வேண்டுமே. துணிப்பையில் எடுத்துக்கொண்டு காலேஜ் காலேஜா அலைவது அப்புறம். முதலில் இவற்றை மதுரைக்கோ, திருநெல்வேலிக்கோ மொத்தமாக எடுத்துச் செல்லவேண்டுமே. நான் அவர் பாக் செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். கார்போட் பாக்ஸில் அடுக்கப்பட்டிருக்கும். செல்லோ டேப்பெல்லாம் அப்போது கிடையாது. மூடிய காகிதப் பெட்டிகளை கயிற்றால் சுற்றிக் கட்டுவார். சுற்றப்பட்ட கயிறு வலைப் பின்னல் மாதிரி இருக்கும். அதை நான் வியந்து பார்த்துக்கொண்டிருப்பேன். எங்கு கற்றார், எங்கு இந்த பயிற்சி இவ்வளவு நேர்த்தி அடைந்தது என்று. எந்த வேலையையும் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு அந்தத் தலைமுறையில் பலரிடம் இருந்தது போலத் தோன்றுகிறது. பள்ளிக்கூடம் சென்றிராத, வேத பாடசாலையிலேயே கிரந்தத்தில் படித்த என் அப்பா, மின்சார இணைப்பை ஒரு வீட்டில் பார்த்தது என் தம்பியுடன் ஆவடி வீட்டில் பார்த்தது தான். ஆனால் வெகு விரைவில் ஃப்யூஸ் போடுவது போன்ற சின்ன சின்ன வீட்டு மின் இணைப்பு வேலைகளை யெல்லாம் அவரே பார்த்துகொள்வார். வீட்டுத் தோட்டத்தில் இருந்த வாழைக் குலைகளையெல்லாம் இறக்கி ஒரு தகர டின்னில் வைக்கல் அடைத்து தீ மூட்டி ezum புகை வெளியே போய் விடாது இறுக்கி அடைத்து மூடி பழுக்க வைப்பார். இந்த செயல்முறையை அவர் செய்ய வேடிக்கை பார்த்துகொண்டிருந்ததில் தான் நான் அறிந்து கொண்டேன்.
அது போல செல்லப்பா கற்றுக்கொள்ளாத விஷயமே இல்லை போலத் தோன்றும். வாடிவாசல் புத்தகத்துக்கு காளை அணையும் புகைப்படங்கள் அவர் தன் பாக்ஸ் காமிராவில் எடுத்தது தான். பாக்ஸ் காமிராவை வைத்துக்கொண்டு, சிரிங்க பார்க்கலாம் என்று அரைமணி நேரம் ஆகும் ஒரு ஷாட் எடுக்க. அதற்கும் சிரிப்பெல்லாம் விநோக வடிவம் எடுக்கும். காளை அணையும் காட்சியை பாக்ஸ் காமிராவில் எடுக்க முடியுமா?, எடுத்திருக்கிறார் செல்லப்பா. புகைப்பட தொழில் வல்லுனர்கள் தான் இதைப் பற்றி அபிப்ராயம் சொல்ல வேண்டும்.
பஞ்சிலும் காகிதத்திலும் பட்சி பொம்மைகள் செய்து கூடையில் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒரு தொழில்காரனின் செய் நேர்த்தி இருக்கும். ”நம்மை மதியாதவன் வீட்டு வாசற்படியில் எதுக்கு கால் வைக்கறது” என்ற பிடிவாதம் கொண்ட எழுத்தாளன் தன் வயிற்றுப் பிழைப்பிற்கு கண்ட வழி தான் காகித பொம்மைகள். இன்றைய தர்மங்கள் வேறு. இன்னும் சில லட்சங்கள் தன் மாத வருமானத்தில் சேர்க்க சோரம் போகும் நம் காலத்திய எழுத்தாளன் ஒவ்வொருவனும் தயாராக வைத்திருக்கும் வாக்குமூலம், அல்லது பிரமாணபத்திரம், “நானும் பிழைக்க வேண்டாமா?” இந்த லட்சங்கள் சான்ஸ் கிடைப்பதற்கு முன் எத்தனை நாள் இந்த பெருந்தகைகள் பட்டினி கிடந்தனவோ தெரியாது.
இனி சென்னையில் இருந்து பலனில்லை என்று தோன்றிய ஒரு கட்டம் வந்தது, போலும். அது எனக்கு பின்னர் தான் தெரிந்தது. நான் போன சமயம் ஒன்றில் அவர் நான்கு தடித்த சுமார் 15 அடி நீள முங்கில்களை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். “என்ன இது? என்று கேட்டேன். வத்தலக் குண்டு போறதா தீர்மானம். இங்கு சமாளிக்க முடியாது அங்கே வீடு இருக்கும். அதைக் கொஞ்சம் சீர் பண்ணினா போதும்,’ என்றார். எத்தனையோ வருஷங்கள் இருந்து விட்ட அந்த திருவல்லிக்கேணி வீட்டை விட்டுப் பிரிவது அவ்வளவு சுலபம் இல்லை. எழுத்தாளனாகத் தான் வாழ்வது என்று தீர்மானித்து காலத்தைக் கடத்தியாயிற்று. அந்த வாழ்க்கை முப்பதுகளில் ஆரம்பித்தது இப்போது வரை எப்படியோ சமாளித்தாயிற்று. வத்தலக்குண்டுவில் எப்படி எழுத்தாளனாக வாழ்வது.? யார் பேச, சர்ச்சைகள் செய்ய இருக்கிறார்கள் அங்கு?.
”கொஞ்சம் இருங்கோ வந்துட்டேன்” என்று சொல்லி வெளியே போனார் திரும்பி ஒரு பார வண்டியோடு வந்தார். அதில் கட்டி வைத்த இந்த மூங்கில் கழிகளை ஏற்றினார். நான்கு முற்றித் தடித்த மூங்கில் கழிகளை எடுத்துச் செல்லும் வசதிக்கு ஒன்றாகக் கட்டுவது என்பது எளிதல்ல. பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். ஆனாலும் இப்போது அதை எப்படிச் செய்தார் என்று நினைவில்லை. பாரவண்டியோடு நடந்தோம் அங்கிருந்து அவர் வீட்டிலிருந்து டிவிஎஸ் புக்கிங் ஆஃபீஸுக்கு. இதையெல்லாம் கூட இப்படி பார்ஸல் செய்து லாரியில் அனுப்ப முடியும் என்று அன்று தெரிந்து கொண்டேன். சரி, விஷயம் தெரிந்தாயிற்று. செய்யத் தெரியணுமே. “நானும் பிழைக்கணுமே” என்ற பதில் தயாராக வைத்துக்கொள்ளாத ஒரு அழுக்கு கதர் சட்டையும் வேட்டியும் அணிந்த ஒரு எழுத்தாளன் தெரிந்து கொண்டிருப்பான். மாப்பிள்ளையும் பெண்ணும் வசதியாக தில்லியில் இருந்த போதும் தன் குடும்பத்தைத் தானே காப்பாற்றவேண்டும் என்று கண் பார்வை அற்ற நிலையிலும் சென்னை தெருக்களில் நடந்தும் விழுந்தும் திரிந்த க.நா.சு. என்ன பொருள் ஆசை காட்டிய போதிலும் தகுதி இல்லாத ஒரு அதிகார பீடத்தைப் புகழ விரும்பவில்லை. “நிதி சால சுகமா?” என்று கேட்கும் மனமும் தைரியமும் வெகு சிலருக்குத் தான் வாய்க்கிறது. எவ்வளவு வசதியும் பொருளும் குவிந்திருந்த போதிலும். இன்று, இன்றைய தலைமுறையின் தர்மங்களும் மாறிவிட்டன. க.நா.சு. வும் செல்லப்பாவும் பேணிக்காத்த தர்மங்கள் உலகுக்கு அறிவிக்க அல்ல. தம்மைத் தம் பார்வையிலேயே இழந்து விடாதிருக்கத் தான். “நானும் பிழைக்கவேணுமில்லையா? என்ற கேள்வி உலகுக்கு அறிவிக்கப்பட்ட ஒன்று.
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013
- ஒட்டுப்பொறுக்கி
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13
- தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!
- காணிக்கை
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49
- ‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்
- தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு
- ஒற்றைச் சுவடு
- ஐந்து கவிதைகள்
- தீராத சாபங்கள்
- அக்னிப்பிரவேசம்-28
- எம் ஆழ்மனப் புதையல்!
- குறும்படப்போட்டி
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது
- தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து
- பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்
- பொதுவில் வைப்போம்
- அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7
- குரல்வளை
- முறுக்கு மீசை
- வெளுத்ததெல்லாம் பால்தான்!
- ஒரு தாயின் கீதா உபதேசம் ..!
- காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை