2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது.
இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.
வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசை மாறிய தீர்மானங்கள் (2003) என்ற பெயர்களில் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009) என்ற பெயரில் சமூக நாவல் ஒன்றினையும் வெளியிட்டு இருக்கிறார். இந்நாவல் 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர இதே அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகள், 2011 ஆம் ஆண்டு பாணந்துறையில் இயங்கும் ஜனசங்சதய அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டி, மலையக எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டி, அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டி, 1997 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளைக் குழு நடத்திய சிறுகதைப் போட்டி, 2006 அரசியல் அமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம் எனும் கருத்திட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டி, 2007 சப்ரகமுவ மாகாண சாகித்திய சுய நிர்மாணப் போட்டி, 2012 மாவட்ட மாகாண அரச சாஹித்திய சிறுகதைப் போட்டி என ஏராளமான போட்டிகளில் பங்குபற்றி முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் என்ற தோரணையில் பரிசில்களும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றுள்ளார். மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டும், மத்திய மாகாண கல்வி அமைச்சர் வீ. ராதாக்கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாஜோதி பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொது நியதி. ஆனால் இவரது வெற்றிக்குப் பின்னால் ஓர் ஆண் இருக்கிறார் என்றால் அவரைப் பற்றியும் எழுதத்தானே வேண்டும். ஆம், இவரது ஒவ்வொரு முன்னேற்றப் படிகளிலும் பின்னால் நின்று ஊக்குவித்து வருவது இவரது அன்புக் கணவர் அல்ஹாஜ் ஏ.சீ.எம். இக்பால் அவர்கள்தான். இவர் சிறந்த ஒரு மார்க்க அறிஞர், திறமை மிக்க பேச்சாளர். திருமணத்தின் பின் தனது மனைவியின் எழுத்துலக வாழ்க்கை அஸ்தமித்துப் போய்விடக் கூடாது என்பதற்காக சகல உதவிகளையும் செய்து வருவதோடு, அதற்கென்றே ஷஎக்மி பதிப்பகம்| என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றினையும் ஏற்படுத்தி அதனூடாக புத்தக வெளியீடுகளையும் செய்து வருகிறார். அதே நேரம் கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவிபாடும் என்பது போல இவரது மூத்த மகள் செல்வி இன்ஷிரா இக்பால் தாயைப் போலவே சிறுகதைத் துறையில் ஈடுபாடுகாட்டி வருகிறார். பல்கலைக்கழக மாணவியான இவர், ஏற்கனவே ஷபூ முகத்தில் புன்னகை| என்ற பெயரில் சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டுள்ளார். சமூக நாவல் ஒன்றை ஒரு போட்டிக்காக எழுதி அண்மையில் ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசையும், சான்றிதழையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் இவரது மற்றொரு மகளான இன்ஷிபா இக்பாலும் சிறுகதைகளை எழுதி வருகிறார். ஒரே மகனான அஷ்பாக் இக்பால் ஒரு சிறந்த ஓவியராகக் காணப்படுகிறார். இப்படியாக இவரது குடும்பம் ஒரு சிறந்த பல்கழைக் கழகமாக இருந்து வருகிறது.
இதழில் செலினா ஹுஸைன் (பங்களாதேஷ்) எழுதிய கௌரவம் என்ற சிறுகதையை அஷ்ரப் சிஹாப்தீன் தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். மருதமுனை றாபி எஸ். மப்றாஸின் காதல் செய்த மாயம், பூனாகலை நித்திய ஜோதியின் துருவங்கள், எஸ்.ஆர். பாலச்சந்திரனின் அவமானம் என்ற சிறுகதைகளும், நிந்தவூர் ஷிப்லியின் கைவிடப்பட்டவள், கலாநெஞ்சன் சாஜஹானின் கனவுக் கதவுகள், புத்தளம் ஜுமானா ஜுனைட்டின் இவை…, கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறு வண்ணாத்தி, கலைமகன் பைரூஸின் பணிவே தலை, மருதூர் ஜமால்தீனின் போதையினால் பேதையாவாய் போன்ற கவிதைகளும் இதழில் இடம்பெற்றுள்ளன.
மற்றும் சூசை எட்வேட்டின் முத்துச் சிதறல்கள் சில வார்த்தைத் தத்துவங்கள், இலட்சிய இல்லம் நாட்டின் செல்வமாவது எப்படி என்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) அவர்கள் சங்ககால நூல்களில் இருந்து ஆதாரங்களோடு அருமையான கட்டுரை ஒன்றினையும் தந்திருக்கிறார். கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் தொடர்கிறது. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய மதிப்பீட்டை நிலாக்குயில் முன்வைத்திருக்கிறார். நூலகப் பூங்காவில் இம்முறை இருபது நூல்களைப் பற்றிய விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் முன்னைய பூங்காவன இதழ்களைப் போலவே இம்முறையும் சகல விஷயங்களையும் உள்ளடக்கி பூங்காவனம் பூத்துக் குழுங்குகிறது!!!
சஞ்சிகை – பூங்காவனம்
பிரதம ஆசிரியர் – ரிம்ஸா முஹம்மத்
முகவரி – 21 ஈ, ஸ்ரீ தர்மபால வீதி, கல்கிசை.
தொலைபேசி – 0775009222
விலை – 100 ரூபாய்
—
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
- காவல் நாய்
- ரேபீஸ்
- ‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
- “சூது கவ்வும்” இசை விமர்சனம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக
- கந்தா ( தமிழ் )
- தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்
- பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?
- கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…
- கவிதைகள்
- நாகூர் புறா.
- நம்பிக்கை
- விவசாயிகள் போராட்டமா?
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா
- கேள்
- ஆத்தா…
- போதிகை (Bearing)
- பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!
- ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’
- ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”
- தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14
- புகழ் பெற்ற ஏழைகள் – ஷேக்ஸ்பியர்
- தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4
- அக்னிப்பிரவேசம்-28
- விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்
- குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….