விவசாயிகள் போராட்டமா?

This entry is part 14 of 31 in the series 31 மார்ச் 2013

“விவசாயிகள் போராட்டமா? வளர்ச்சிக்கு எதிரானதது”, என்றொரு கண்ணோட்டம் திறந்த வீட்டிற்குள் சுண்டெலி புகுதல் போல மெதுவாக நம் மனதுகளில் ஏற்படத் துவங்கியுள்ளது. அவ்வெண்ணம், ‘எது வளர்ச்சி?’ என்ற புரிதலுக்குள் நம் சிந்தனை செல்லாதிருப்பதன் விளைவாக ஏற்படுவது. நாகரிகம் உருவானதற்கு முன்பு உருவானது மனித இனம். அவ்வினம், வெற்றிகரமாக அடுத்த நூற்றாண்டிற்குள் ஆரோக்கியமாக காலடி எடுத்து வைக்க மிகவும் தேவையான ஒன்று விவசாயமும், உணவும். நாகரிகம் என்பது, மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தவே. ஒருவனுக்கு உணவே இல்லை என்ற நிலை வந்த பிறகு, அவன் நெறியுடன் வாழ்வதென்பது முடியாத காரியம்.

இதைச் சொல்லிவிட்ட நிலையில், தற்போது உயர நிற்கும் செய்திகளின் பின்பு மறைவாய் நின்று கொண்டு, அவ்வப்போது எட்டிப் பார்க்க முயன்று கொண்டிருக்கும் ஒரு விவசாயிகள் போராட்டம், GAIL India(Ltd)-ன் குழாய் திட்டத்திற்கு எதிராக தொடங்கியுள்ளது என்பதை அறிவிக்கிறேன்.

திட்டத்தை பற்றி முதலில் சில வரிகள்:

இக்குழாய் திட்டம், Re-gasified Liquid Natural Gas என்ற எறிவாயுவை கொண்டு செல்ல, கேராவிளிலிருந்து தமிழகம் வழியாக கர்நாடகம் வரை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு போடப்படவுள்ளது.

GAIL தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பு என்ன கூறுகிறது?

Petroleum and Minerals Pipelines Act, 1962 என்ற சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று, 5842 நபர்களிடம் 1491 ஏக்கர் நிலப்பரப்பை கையகப் படுத்தியுள்ளது GAIL நிறுவனம். இந்த திட்டத்தின் கீழ், நிலங்களை உரிமையாளர்களிடம் இருந்து அந்நிறுவனம் வாங்கப் போவதில்லை. அவர்களுக்கு மார்கெட் ரேட்டில் பத்து சதவீதம் என்ற அளவில் இழப்பீடு வழங்கி, குழாய்களை பதித்த பின்பு உரிமையாளர்களிடமே நிலங்களை ஒப்படைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேவையான நிலத்தின் அளவு, 66 அடி. குழாயின் அளவு, 30 இஞ்ச்கள். ஐந்து அடி ஆழத்தில் புதைக்கப்படும் இந்த குழாய்கள் உயர்தர ஸ்டீல்-ஆல் ஆனது என்பதால், தீ அபாயங்களின் போது எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், ஒவ்வொரு 25- ல் இருந்து 30 கி.மீ தொலைவிற்கும் ஒரு பாதுகாப்பு வால்வ் பொருத்தப்படும்.

இந்த திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்களின்(SEZ) போது கையகப் படுத்தப் படும் நில ஆக்கிரமிப்பை போல் இல்லை என்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது. குழிகளின் மேல் வீடு கட்டுவதும், மரம் நடுவதும், சாலை அமைப்பதும் கூடாது என்பதை தவிர வழக்கமான விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதில் எந்த தடையும் இருக்காது.

அறிவிப்பில் உள்ள குறைகள் என்ன?

போராட்டம் செய்யும் விவசாயிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இது, குழாய் திட்டத்திற்கு எதிரான போராட்டம் அல்லவென்று. அப்படியானால் எதற்குத் தான் போராட்டம்?

கேரள விவசாயிகளின் போராட்டத்தை அடுத்தும், கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்தும், GAIL நிறுவனம், குழாய்களை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் விளை நிலங்களை குறிவைப்பது ஏன் என்பது முதல் கேள்வி.

இரண்டாவது, GAIL நிறுவனம் கூறுவதைப் போலத் தான் விவசாயிகளிடம் MRPL (Mangalore Refinery and Petroleum Limited) என்ற நிறுவனம் கூறியது. ஆனால், குழாய் அமைத்த பிறகு தான் உண்மை தெரியவந்தது. குழாய் அமைக்கப்பட்ட இடம், அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகிவிட்டது! அவர்கள் பேரில் RTC கூட இருந்தது.

மூன்றாவது, இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு. அரசின் மார்கெட் மதிப்பு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்புக்குச் சமமாக இருக்கும் பட்சத்தில், பத்து சதவீத இழப்பீடு போதாது. மேலும், குழாய் செல்லும் வழியில் பாதிக்கப்பட்டவரின் வீடு இருப்பின், இந்த தொகையை வைத்து என்ன செய்ய முடியும்?

நான்கு, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகள் திடீர் என்று வருகின்றன. சில நேரங்களில், கிராம நிர்வாகிகளுக்கே கூடத் தெரியாமல் குழாய்கள் அமைக்கப் படுகின்றன. இந்த முறை விவசாயிகளின் மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு GAIL தரப்பில் கூறப்பட்ட பதில்களும் நம் கேள்விகளும்:

ஒன்று, இது 3,263 கோடி செலவில் நடைமுறை படுத்தப்படும் திட்டம். அவர்கள் சொல்வது போல நெடுஞ்சாலை வழியாக கொண்டு சென்றால், மேலும் நூறு கிலோமீட்டர் அளவிற்கு குழாய் பொறுத்த வேண்டியிருக்கும். இது தேவையற்ற செலவிற்கு வழிவகுக்கும். இந்த செலவை வாடிக்கையாளர்களின் முதுகில் சுமையாக ஏற்ற வேண்டியிருக்கும்.

கேள்வி: இது போன்ற திட்டங்களை நடைமுறை படுத்தும் போது முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது என்ன? வாழ்வாதாரமா? லாப-நஷ்டக் கணக்கா? வாடிக்கையாளர்களின் மேல் சுமையை ஏற்றுவதால், கூடுதல் செலவு மட்டுமே அவர்களுக்கு ஏற்படும். ஆனால், விவசாயிகளுக்கு முதலுக்கு மோசம் என்ற நிலை அல்லாவா ஏற்படும்?

இரண்டு, ஆயிரம் கோடி செலவு செய்து குழாய்களை வாங்கிவிட்ட பிறகு, இப்போது நெடுஞ்சாலைக்கு மாற்ற முடியாது. குழாய்களின் அளவுகள் மாறுபடும்.

கேள்வி: இது போன்ற பொதுப் பிரச்சனைகளில் அனைத்து தரப்புகளின் ஆதரவை உறுதி செய்துவிட்ட பிறகு தான் பணத்தை செலவிட்டிருக்க வேண்டும். இப்பொது ஏற்படவிருக்கும் நஷ்டத்திற்கு நிறுவனமே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

மூன்றும், செலவுகளை குறைக்கும் வழியை தேர்ந்தெடுப்பதே உலக வழக்கம்.

கேள்வி: உங்களுக்கு செலவு குறையும். விவசாயிகளுக்கு??

நான்காவது தான் மிகவும் முக்கியமான பதில். வீரப்ப மொயிலி,

“அமரிக்காவில், 5 லட்சம் கி.மீ தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப் பட்டுள்ளன. நம் நாட்டில் வெறும் 15,400 கி.மீ அளவிற்கே அமைக்கப் பட்டுள்ளன. ஒரு குழாயால் விவசாயம் பாதித்துவிடாது” என்று அலட்சியமாகக் கூறியிருக்கிறார்.

கேள்வி: அமரிக்காவின் விளை சக்தி, அந்நாட்டின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்? நம் நாட்டின் விளை நிலங்களின் அளவு, சீனாவைக் காட்டிலும் அதிகமா இல்லையா? எதற்கு எடுத்தாலும், அமரிக்கா, அமரிக்கா என்று கூறும் நம் நாட்டு அரசியல்வாதிகள், நம்முடைய பலம் எது, பலவீனம் எது என்று முதலில் அறிவார்களா?

இந்த திட்டத்தால், தமிழகத்தில் மட்டும் 136 கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகவிருக்கின்றன. ஒரு குழாயால் தான் இவ்வளவும்!

முடிவாக, இந்த திட்டத்தை உடனடியாக நெடுஞ்சாலையின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப் படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் கருத்து. தமிழக அரசின் துணை விவசாயிகளுக்கு இருக்கும் நிலையில், போராட்டம் வெற்றி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

 

கண்ணன் ராமசாமி 

Series Navigationநம்பிக்கைஅமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    கேரளா மற்றும் கர்நாடகா மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி உடையவர்கள்.இவர்களிடம் அதிகார வர்க்கத்தின் மிரட்டல் செல்லாது. இந்திய நாட்டு மாநிலங்களிலேயே இளிச்சவாய் மாநில மக்கள் தமிழன் மட்டுமே என்பது நாடறிந்த ரகசியம்.இதனால்தான் வயிற்று பசி போக்க மீன் பிடிக்க செல்லும் தமிழனின் உயிர் பறிக்கப்படுகிறது. குடிக்க தண்ணீர் தடுக்கப்படுகிறது,மறுக்கப்படுகிறது.கேரளா கடற்பகுதியில் சுடப்பட்ட மீனவர்களுக்காக சுப்ரீம் கோர்ட் பொங்கி எழுகிறது.தமிழர்களைக் காக்க எந்தக் கோர்ட்டும் வராது.ஆனால் வால்மார்ட் வரும் மேலும் சுரண்ட.மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்த அரசுகள்,தற்போது விவசாயிகளின் வயிற்றில் தற்போது குழாய் பதிக்கிறார்கள்.இனி விவசாயம் பண்ண தேவையில்லை.பாலும் தேனும் இனி குழாய் மூலமே அனுப்பி விடுவார்கள்.திரை கூத்தாடிகளை நம்பிய தமிழனை எவரும் மொட்டை அடிக்கலாம் என்பது இந்நாட்டில் எழுதப்படாத சட்டம். ஆகவே வாருங்கள் தமிழர்களே! கலை ஞானி கமலின் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை வெற்றி பெறச் செய்து விவசாயிகளின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வோம்!

    1. Avatar
      paandiyan says:

      //கேரளா மற்றும் கர்நாடகா மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி உடையவர்கள்.//
      இங்கு அங்கு எங்கும் — திராவிடம் ஏன் வலு இழந்தது ? என்ன மாயை அது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *