வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக

This entry is part 6 of 31 in the series 31 மார்ச் 2013

வேதாளத்தின் மாணாக்கன்

(The Devil’s Disciple)

அங்கம் -2  பாகம் -3

மூன்று அங்க நாடகம்

 Cover image

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின்”வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence]சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒருகற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக்காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத்துரோகியாஇல்லை தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார். அவன் மெய்யாகவேதாளத்தின் மாணாக்கனா இல்லையாவென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோமுடிவு செய்து கொள்ளட்டும்.

Fig 1 I should be the best chtristian

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

Fig 2 I am not welcome

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது. இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது . பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில் எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர். அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான். இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

**********************

Fig 3 Please sit down

நாடக உறுப்பினர்

1. ரிச்செர்டு டச்சியான்   [35 வயது] (Richard Dudgeon)

2. கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன்   (Christy Dudgeon)

3. கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4. ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5. ஜெனெரல் பர்காயின்  [50 வயது] (British General Burgoyne)

6. பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன் [55 வயது] (Major Swindon)

7. ஸார்ஜன்ட்   (Sergeant)

8. வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9. மிஸிஸ். அன்னி டச்சியான் : [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10. சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11. சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா டைட்டஸ்  டச்சியான் & மனைவி (Uncle Titus Dudgeon & Wife)

13 இளம் மங்கை : எஸ்தர் [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -2 பாகம் -3

மூன்று அங்க நாடகம்

இடம்: அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர். [Websterbridge, New Hamshire, U.S.A]  பாதிரியார் இல்லம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது : ஒரு நாள் இலையுதிர் காலத்து இரவு நேரம்.

Fig 4 mother is ill

அரங்க அமைப்பு: வெஸ்டர்பிரிட்ஜ் நகர்ப் புறத்தின் முக்கிய வீதியில் உள்ள பாதிரியார் ஆண்டர்ஸனின் இல்லம். டச்சியான் வேளாண்மைக் குடில் வீட்டை விட எடுப்பாய் இருக்கும் நடுத்தரக் குடுப்பத்தினர் இல்லம்.   வீடு சற்று இருட்டாய் உள்ளது.   வெளியே மங்கலான தெரு விளக்குகள் ஜன்னல் திரை வழியே தெரிகின்றன. மழை பெய்து கொண்டிருக்கிறது வெளியே. ஜூலியா கையில் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏந்தி வந்து மேஜையில் வைக்கிறாள்.   அவள் முகத்தில் பயம் காணப் படுகிறது. ஜன்னல் வழியாக எட்டி நோக்கும் போது, அவளது கணவன் வழியில் நனைந்து, வீடு நோக்கி விரைந்து வருவது தெரிகிறது. பெரு மூச்செடுத்து கதவைத் திறக்கிறாள். மழை நீர் சொட்டச் சொட்டப் பாதிரியார் ஆண்டர்சன் உள்ளே நுழைகிறார்.   அடுத்து அழைப்பின் பேரில் ரிச்செர்டு டச்சியான் வருகிறான்.   ரிச்செர்டு உயிருக்கு ஆபத்து உள்ளதென்று ஆண்டர்சன் எச்சரிக்கை விடுக்கிறார்.   ரிச்செர்டு தனக்கில்லையென மறுத்து ஆண்டர்சனுக்குத்தான் ஆபத்து வரப் போகுதென்று எச்சரிக்கை செய்கிறான். அப்போது கிரிஸ்டியான் வந்து தன் தாயிக்கு உடல் நலமில்லை, பாதிரியாரைப் பார்க்க விரும்புவதாய்ச் சொல்கிறான். பாதிரியார் ரிச்செர்டை வீட்டில் இருக்கும்படிச் சொல்லி விட்டுப் போகிறார்.

*******************

ஜூலியா:   [ஒருமாதிரி முகத்தை வைத்துக் கொண்டு] என் கணவர் சார்பில் நான் உன்னை வரவேற்கிறேன். [டீ கெட்டிலை எடுத்து வருகிறாள்] நீ உன் வீட்டில் எங்களை அவமானம் செய்தாலும், எங்கள் வீட்டில் உனக்கு வரவேற்பும், மரியாதையும் உண்டு.

ரிச்செர்டு:   மகிழ்ச்சி மேடம். உங்கள் வரவேற்பு என்னை ஒரு சமூகப் பிறவியாக ஆக்கிவிடும்.

ஆண்டர்சன்:    ஜூலியா !   ரிச்செர்டு டீ  அருந்த இங்கிருப்பார். உட்கார் ரிச்செர்டு !   சிறிது நேரம் நீ கணப்பருகில் இருந்தால் நல்லது.   ஜூலியா உன்னைக் கண்டு அச்சம் கொள்கிறாள். வேறொன்றும் இல்லை.

[அப்போது யாரே கதவைத் தட்டுகிறார்]

ஜூலியா:    யார் அது ?

[கதவைத் திறந்து கொண்டு ரிச்செர்ட்டின் சகோதரன் கிரிஸ்டி வருகிறான்]

Fig 5 Will you keep him here

ரிச்செர்டு:   [கோபமாய்] இங்கு எதற்கு வந்தாய் கிரிஸ்டி ?   மிஸிஸ். ஆண்டர்சன் அடுத்தடுத்து டீ சூடாக்க முடியாது. வந்த வழியே திரும்பிப் போ !

கிரிஸ்டி:   தாயிக்கு உடல்நலம் மோசம் ! பாதிரியாரிடம் சொல்ல வந்தேன்.

ரிச்செர்டு:   என்னைப் பார்க்க அன்னை விரும்பினாளா ?

கிரிஸ்டி: இல்லை.

ரிச்செர்டு: எதிர்பார்த்தேன் அந்த பதிலை !

கிரிஸ்டி:   பாதிரியாரை உடனே பார்க்க வேண்டும் என்று அனுப்பினாள் என்னை.

ஜூலியா: [கணவனைப் பார்த்து] இந்த டீயைக் குடித்தபின் போகலாம்.

ஆண்டர்சன்:   ஜூலியட் கண்மணி ! இப்போது அவசர வேலை வந்துள்ளது. வந்த பிறகு குடித்தால் சுவையாக இருக்கும் .

கிரிஸ்டி: மழை நின்று விட்டது மேதகு. ஆண்டர்சன் !

ஆண்டர்சன்: உன் அன்னை எங்கிருக்கிறாளர் கிரிஸ்டி ?

கிரிஸ்டி: சித்தப்பா டைடஸ் டச்சியான் இல்லத்தில் .

ஆண்டர்சன்: ஒரு டாக்டரை அழைத்துப் போனாயா ?

கிரிஸ்டி: இல்லை என் தாய் அழைக்கச் சொல்ல வில்லை.

ஆண்டர்சன்:   உடனே நீ போய் டாக்டரை அழைத்து வா. அதற்குள் நான் அங்கு வந்து விடுவேன்.   [கிரிஸ்டி போகத் திரும்புகிறான்] சிறிது நேரம் பொறு.   உன் சகோதரன், ரிச்செர்டு விபரம் அறிய விரும்பலாம்.

ரிச்செர்டு:   வேண்டாம், நீ போ வீட்டுக்கு ! தாயைப் பற்றி ஒன்றும் தெரியாது  உனக்கு.   தாயைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு ! விரைவாய்ப் போடா மூடா ! [கிரிஸ்டி ஓடுகிறான்] நான் சீக்கிரம் அறிந்து கொள்வேன்.

ஆண்டர்சன்: ரிச்செர்டு ! நான் முதலில் உனக்குத் தகவல் கொண்டு வருவேன்.   நீ இங்கிரு நான் வரும் வரை.   ஜூலியட் ! நீ டீ கொடு ரிச்செர்டுக்கு.   அவரோடு பேசிக் கொண்டிரு நான் வரும் வரை.

ஜூலியட் : அவசியம் அப்படிச் செய்ய வேண்டுமா ?

ஆண்டர்சன்:   ஆம் ரிச்செர்டுக்கு நான் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்குத்தான் நான் அவனை அழைத்தேன்.   இன்னும் பேச வேண்டும் நான்.   [ரிச்செர்டைப் பார்த்து] இங்கிரு நான் மீண்டும் வருவேன்.

[ஆண்டர்சன் போகிறார். ஜூலியட் தனியே ரிச்சேர்டுடன் இருக்கப் பயப்படுகிறாள்]

 

Fig 6 Please do not go

 

ரிச்செர்டு: மிஸிஸ் ஆண்டர்சன் ! நீ என்மீது கொண்டுள்ள வெறுப்பை நான் நன்கு அறிவேன்.   நான் உனக்குத் தொல்லை தர மாட்டேன் !   எனக்கினி வேலை இல்லை, இங்கே ! இப்போதே நான் போகிறேன். [தன் கோட்டை எடுத்து அணிகிறான்]

ஜூலியட்:   [எதிரே நின்று]   போக வேண்டாம் ! தயவு செய்து போகாதே !

ரிச்செர்டு:   [கோபமாக] ஏன் தடுக்கிறாய் ? என்னால் உனக்கொன்றும் செய்ய முடியாது.

ஜூலியட்:   செய்ய முடியும். உண்மையைச் சொன்னால் நீ வேதனை அடைவாய் !

ரிச்செர்டு: [போபமாய்] நீ வேதனை கொடுத்த பிறகு நானிங்கு தங்குவேன் என்று நினைத்தாயா?

ஜூலியட்:   நீ இங்கு தங்குவதை நான் விரும்புகிறேன், நான் உன்னை வெறுத்தாலும்.

ரிச்செர்டு: எனக்குப் புரிய வில்லை ! நீ என்னை வெறுப்பது உண்மை ! நானிங்கு வந்ததில் வெறுப்பு உனக்கு இருந்ததும் உண்மை.

ஜூலியட்:   நான் உன்னை வெறுத்தது உண்மை.   நீயிங்கு இருப்பது எனக்கு அச்சம் ஊட்டுவது உண்மை.   ஆனால் இங்கு நீ தங்காது போய் விட்டால் நான் உன்னைத் துரத்தி விட்டதாய் என் கணவர் நினைப்பார். அவர் சொற்படி நான் செய்ய வில்லை என்று கடுங் கோபம் கொள்வார்.

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1. Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2. http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3. http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple” – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs [You Tube : The Devil’s Disciple Drama]

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 30, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்…!கந்தா ( தமிழ் )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *