விண்மீனை தேடிய வானம்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 31 in the series 7 ஏப்ரல் 2013

இளங்கோ மெய்யப்பன்

சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள்.

அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக் காட்சி பார்க்கும் பொழுதுக்கூட சிவப்பு வண்டிகள், சிவப்பு ரயில்கள், சிவப்பு பேருந்துகள் வந்தால் சிரிப்பான். கைகளைத் தட்டிக்கொண்டே சிரிப்பான்.

“சொர்ணம், கிளம்பலாமா?”

வாழ்வதே வாரத்தில் வரும் இந்த ஒரு வியாழக்கிழமைக்காகத்தான் என்பது போல தாமோதரன் நடந்துகொள்வார் . புதன் இரவு நேரத்திற்கு உறங்கிவிடுவார். வியாழன் காலை அலாரம் இல்லாமல் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். சவரம் செய்வார். தலை குளிப்பார். எண்ணெய் தடவி, இருக்கும் கொஞ்ச முடியை அழகாக வாரி விடுவார். சட்டை, பான்ட் இரண்டையும் இஸ்த்ரி தேய்ப்பார். முருகனை வழிபாடு செய்து விபூதி குங்குமம் இட்டுக்கொள்வார். சொர்ணத்தை அவசரப்படுத்துவார்.

“ஒன்பது மணிக்கு தானே அங்கே இருக்கணும். 8.30க்கு கிளம்பினாலே போயிடலாம் . இப்படி எட்டுக்கே கிளம்பி ஒவ்வொரு வாரமும் கேட்டுக்கு வெளியே நிக்க வேண்டியதா இருக்கு.”

“சில சமயம் பஸ் லேட்டா வரான். டிராபிக் ரொம்ப மோசமா இருக்கு. வீட்டிலிருந்து என்ன பண்ணப் போறோம்? வா போகலாம்.”

அண்ணாநகர் சாந்தி காலனி குடியிருப்பிலிருந்து ப்ளூ ஸ்டார் பஸ் ஸ்டாப் வரை நடந்தார்கள். ஆபீஸ் போகும் நேரமானதால் சாலை ஓரத்தில் பார்த்து தான் நடக்க வேண்டியதாய் இருந்தது. அண்ணாநகர் மெயின் ரோடு கிராஸ் பண்ணுவது சிரமமாகி விட்டது. சொர்ணத்திற்கு முட்டி வலி இருப்பதால் அவளை இழுத்துக்கொண்டுதான் தாமோதரன் வேகமாக கிராஸ் பண்ணுவார்.

பஸ் எப்பொழுதும்போல் கூட்டமாக இருந்தது. “எக்ஸ்கியுஸ் மீ “ என்று சொல்லிக்கொண்டே எப்படியோ நிற்பதற்கு இடம் பிடித்தாயிற்று . முன்பெல்லாம் வயதானவர்கள் என்றால் சிலராவது எழுந்து நின்று தங்கள் இடத்தைத் தருவார்கள். இப்பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதுகூட இல்லை. தங்கள் செல் போனில் பேசிக்கொண்டோ, எதையாவது பார்த்துக்கொண்டோ, இரு காதுகளிலும் எதையோ மாட்டிக்கொண்டோ தனி உலகத்தில் இருக்கிறார்கள்.

பஸ் மைத்ரா வாசல் முன் நின்றது. “மைத்ரா – மன நோய் காப்பகம்” என்ற பலகையை பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார்.

“பாத்தீங்களா 8.40 தான் ஆகுது. 20 நிமிஷம் எப்பவும் போல வெளியேதான் நிக்கணும்”

“பரவாயில்லை சொர்ணம். சுத்தி முத்தி பாரு. ஊரு எப்படி இருக்குனு பாரு. முன்னாடி வந்தா என்ன? அவங்க பாக்க விடரதே இந்த ஒரு நாள் தான். முழுசா அவனோட இருக்கலாம்.”

அவன் அவர்களைப் பார்த்தவுடன் சிரித்தான். கள்ளம் கபடமில்லா ஒரு தூய்மையான சிரிப்பு. உண்மையான சிரிப்பு. பார்த்தவுடன் ஐந்து நிமிடத்திற்கு தொடர்ந்து சிரிப்பான். கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியை சிரிப்பின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்ததால் தொடர்ந்து சிரிப்பான். அவன் சிரிப்பு அடங்கும் வரை அவனை தாமோதரன் கட்டிப்பிடித்தே இருப்பார்.

“குட் மோர்னிங் ராஜன். நீ குட் மோர்னிங் சொல்லு “

அந்த மழலை தாமோதரனுக்கு மட்டும் நன்றாகப் புரியும்.

“அவனோட கப்போர்ட்ல போய் பாருங்க . நீங்க சொல்லிக்கொடுத்த மாதரியே அந்த ரயில கட்டி முடிச்சிட்டான்.” ராஜனின் வாத்தியார் கிருஷ்ணன் கூறினார்.

ராஜன் மறுபடியும் சிரித்தான். தனக்குக் கொடுத்த பாராட்டு புரிந்துவிட்டது. அவனுக்காக அவனாகவே கைகளைத் தட்டிக்கொண்டு கர ஓசை எழுப்பினான்.

“வெரி குட்.” தாமோதரனும் சொர்ணமும் சேர்ந்து கை தட்டினார்கள் .

கிருஷ்ணனின் உதவியோடு 12 பெட்டி உள்ள ஒரு சிவப்பு ரயிலை சேர்த்து வைத்திருந்தான். அதனை இழுத்து செல்வதற்கு ஒரு தண்டவாளத்தையும் கட்டி இருந்தான்.

“ராஜன், இது தாண்டா உலகத்திலேயே பெஸ்ட் ரயில். என்ன பேர் வைக்கலாம்? சூப்பர் பாஸ்ட் புல்லெட் ட்ரைன் அப்படின்னு வைக்கலாமா?” தாமோதரன் உற்சாகத்துடன் கேட்டார்.

கை தட்டி சிரித்தான்.

“உன் ரயில் ரொம்ப வேகமா போகுது. அதுக்கு இரண்டு ஸ்டேஷன் கட்டலாமா?”

அதற்கும் கை தட்டி சிரித்தான்.

தாமோதரனும் சொர்ணமும் இரண்டு ஸ்டேஷன்களைக் கட்டினார்கள். ரயிலை அங்கே நிறுத்த கற்றுக்கொடுத்தார்கள் .

அவனுக்கு மாம்பழச்சாறு பிடிக்கும். சொர்ணம் வாங்கிக் கொண்டுவந்த பாட்டிலைத் திறந்து அங்கு இருக்கும் பிற குழந்தைகளுக்கும் கொடுத்தாள் . மெதுவாக சப்பி சப்பி தான் குடிப்பான்.

“சார், இந்த வாரத்திலிருந்து துணிகளை மட்டும் எடுத்திட்டு போய் துவைத்து அடுத்த வாரம் கொண்டுவர முடியுமா? கிருஷ்ணன் கேட்டார்.

“கண்டிப்பா சார்”

“கரண்ட் கட் ரொம்ப இருக்கு. மோட்டார் போட முடியலை. ஜெனரேட்டர் கட்டுபடி ஆகல. தண்ணி கஷ்டம் வேற.”

“பரவால்லை சார். நாங்க நல்லா துவைத்து கொண்டு வரோம்.”

மதிய உணவை அவனுக்கு ஊட்டினார்கள் .

“அவனுக்கு இப்ப தானாகவே சாப்பிட தெரியும் சார். இப்ப தான் பழகிகிட்டான். இவ்வளவு நாள் ஆச்சு . நீங்க கெடுத்துவிட்டு போய்டாதீங்க சார்.” கிருஷ்ணன் நல்லவிதமாகத்தான் சொன்னார்.

“அவருக்கு ஊட்டி விட ரொம்ப பிடிக்கும். ஊட்டிவிட்டா நல்லா சாப் பிடுறான். எல்லா காயையும் வைச்சு கொடுக்க முடியுது.” சொர்ணம் ஆதரவுக்கு வந்தாள் .

சில சமயம் விரல்களை கடித்து விடுவான். சில சமயம் வாயிலிருந்து கசிந்து விழும். எதற்குமே பொறுமை இல்லாத தாமோதரனுக்கு அவனிடம் மட்டும் அதீத பொறுமை.

மதியம் சிறிது நேரம் சொர்ணத்தின் மடியில் தூங்கினான். அவன் தூங்குவதையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாலையில் அவனைக் குளிப்பாட்டி , பவுடர் போட்டு, தலை சீவி, ஒரு கோப்பை பால் கொடுத்தார்கள். மணி ஐந்தாகிவிட்டது .கிளம்பும் நேரம். தாமோதரன் அவசரப் படுத்தவில்லை.

“குட் பை ராஜன் . டாட்டா . அப்பா திரும்பி வருவேன். ஒகே? ரயிலை பத்திரமா பாத்துக்கோ.”

அதற்கும் சிரித்தான். கை தட்டவில்லை.

மெதுவாக வெளியே நடந்துவந்தார்கள். கிருஷ்ணனைப் பார்த்து, “சார், பாத்துக்கோங்க சார். ஏதாவது பண்ணா, கோபப் படாதீங்க சார். அவனுக்கு புரியும் சார். எடுத்து சொல்லுங்க சார். பாத்துக்கோங்க சார்.”

“அதுக்கு தானே சார் இருக்கோம்”

பஸ்ஸில் அமைதியாக இருந்தார். ரவுண்டாணா ஸ்டாப்பில் பஸ் நின்றது. “சாந்தி கிளப்” என்ற பலகையை பார்த்தார். “வயின் ஷோப்பா ஆரம்பிச்சான். இப்ப பாரு, கிளப் வச்சு எவ்வளவு பெரிசா வந்துட்டான்”.

“ஏங்க, இன்னிக்கு வேணும்னா ஏதாவது வாங்கிக்கோங்க.”

“வேணாம் சொர்ணம். அந்த பழக்கத்திலிருந்து மீள ரொம்ப சிரமப்பட்டேன். அப்ப குடிச்சதாவது நான் சம்பாரிச்ச காசுல. இப்ப மகன் காசுல இருக்கும் போது , அவன் காசை குடிக்கக்கூடாது . “

“இன்னிக்கு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கீங்க . அதுக்காக தான் சொன்னேன். ஒரு நாள் தானே.”

“வேணாம் சொர்ணம். ஒரு வேளை நான் ரொம்ப குடிச்சதாலதான் இரண்டாவது பையன் இப்படி பொறந்துட்டானோனு ரொம்பத் தோணுது. அவன் உயிரோட இருக்கிற வரைக்குமாவது நான் நல்லா இருக்கணும் “

பஸ்ஸில் இருந்து இறங்கியதும், “ஏங்க , நீங்க வீட்டுக்கு போங்க. நான் மீன் வாங்கிக்கிட்டு வரேன். மீன் குழம்பு வச்சு தரேன்.” ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று சொர்ணத்திற்கு தோன்றியது.

“மீன் எல்லாம் இப்ப ரொம்ப விலை சொல்றான். வஞ்சிரம் கிலோ 400 ரூபாய் சொல்றான். வேணா சங்கரா வாங்கிக்கிட்டு வா. கிலோ 180 ரூபாய் தான். கூட கொடுத்து ஏமாறாத.“

இரவு சாப்பிட்டார்கள். “அவனுக்கு மீன் ரொம்ப பிடிக்கும் இல்லை.? ஏன் சொர்ணம், அங்கே மீன் கொடுக்கச் சொல்லி கேப்போமா ?”

“இல்லைங்க. கட்டுப்படி ஆவாதுங்க அவங்களுக்கு. அவங்களே கஷ்டப்பட்டு நடத்துறாங்க. நாம அப்படி எல்லாம் கேட்கக்கூடாது “

தாமோதரன் படுக்க சென்றார். தூக்கம் வரவில்லை.

“நாளைக்கு முருகன் டெக்ஸ்டைல் போய் அவனுக்கு ரெண்டு புது சட்டை எடுப்போமா? அவங்க துவைக்கறது இல்லை இப்போ. எதுக்கும் ரெண்டு சட்டை எக்ஸ்ட்ரா இருக்கட்டும்.”

“சரீங்க, நாளைக்கு பாக்கலாம். இப்ப படுங்க”

இரவு இரண்டு மணிக்கு சமையல் அறையிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு எழுந்தாள் . படுக்கையில் அவர் இல்லை. சமையல் அறைக்குச் சென்றாள் .

“என்னங்க, இப்ப என்ன இங்கே உருட்டிக்கிட்டு இருக்கீங்க?”

“டீ போட்டு தரியா? இஞ்சி போட்டு ப்ளாக் டீ. தூக்கம் வரலை. வயிறு என்னமோ பண்ணுது. மனசு கனமா இருக்கு.”

டீ போட்டு கொண்டு வந்தாள் .

“ஏன் சொர்ணம், நாளைக்கு அவனை வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்திடலாமா ?”

“முடியுமா நமக்கு? முடியாதுனு தானே கொண்டு போய் சேத்தோம் .”

“அவன் கண்ணால என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கனு சொன்ன மாதிரி இருந்திச்சு. அவன் நம்மள மிஸ் பண்றான் சொர்ணம். கண்ணுல தெரியுது. கிளம்பும் போது என்னைக்கும் இல்லாம இன்னிக்கு கையை ரொம்ப நேரம் இறுக்கமா பிடிச்சிக்கிட்டு இருந்தான். விடவே இல்லை.”

“32 வருஷம் அவனை சுத்தியே வாழ்க்கை இருந்திச்சு. பெரிய பையனா ஆயிட்டான். தூக்க முடியல. பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டு போக முடியல. சங்கோஜமா இருக்கு. இனிமேலாவது வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கலாமுனு தானே போய் சேத்தோம் “

“மகிழ்ச்சியின் தேடலா வாழ்க்கை இருக்கக்கூடாது சொர்ணம். அர்த்தத்தின் தேடலா இருக்கணும். அவனை பாத்துக்கறது அர்த்தம் உள்ளதா தெரியுது .”

“சரிங்க, கூட்டிக்கிட்டு வருவோம்”

அதற்கு பிறகுதான் தாமோதரன் நிம்மதியாக உறங்கினார் .

தொலைபேசி மணி ஒலித்தது.

இரவு மூன்று மணிக்கு யார் கூப்பிடுகிறார்கள் என்று யோசித்தவாறே தொலைபேசியை எடுத்தாள் .

“நாங்க மைத்ராவில் இருந்து பேசுறோம் ………”

Series Navigationதங்கமே தங்கம்தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  kumar says:

  very thoughtful- மகிழ்ச்சியின் தேடலா வாழ்க்கை இருக்கக்கூடாது சொர்ணம். அர்த்தத்தின் தேடலா இருக்கணும்

 2. Avatar
  தேமொழி says:

  கதையின் முடிவினைப் படிப்பவர் சிந்தனைக்கு விட்டுவிட்டது கதையினைச் சிறப்பாக்குகிறது.

  ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *