நீர்நிலையை யொத்த…

4
0 minutes, 3 seconds Read
This entry is part 17 of 33 in the series 14 ஏப்ரல் 2013

 

 

என்னை எடுத்துக்கொண்டு

யாராவது எனக்கொரு

அதிர்வுகளற்ற

ஆன்மாவைத் தாருங்களேன்

 

நீர்நிலையின் மேற்புறத்தின்

பரப்பு இழு விசையில்

சிறு

பொத்தல்கூட விழாமல் நடமாடும்

நீர்ப்பூச்சியை யொத்த

நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்

 

சர்வமும் சாந்தியான

சீவிதமே என் நாட்டம்

 

ஒரு

புள்ளியெனக்கூட வேதனை

செய்யாதிருப்பீர்

அது

வட்டமெழுப்பி

சடசடவென விட்டங்கள் கூட்டி

பெரும்

வாட்டமாக விரிந்துபோகிறது

 

வதனத்தில்

சலனங்களற்றுப் போனால்

சவமாகி விடமாட்டேன்

 

உள்ளே

உராய்வுகளின் உஷ்னமற்ற

நீச்சலுக்கும்

செவுள்வழி சுவாசித்துப் பிரித்தெடுக்க

பிராண வாயுவும்

ஆழத்தில்

வண்ணவண்ண நீர்த் தாவரங்களுமென

வளமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

 

கூழாங்கற்களைப் போன்றே

முத்தைச் சுமக்கும்

சிப்பிகளும் சிதறிக்கிடக்கும்

அடி மனத்தில்

ஆர்ப்பரிப்பில்லாத அமைதியை

அனுபவித்துப் பார்க்க வேண்டும் நீங்கள்

 

என்னோடு சேர்ந்தே

தன்னுயரம் நீட்டும்

தாமரை உயர

தண்ணீர் தரும் தயாளன் நான்

 

அதிர்வுகளின்றியே

என்னைக் கடந்து செல்லுங்கள்

ஏனெனில்

எனக்குள்ளும் இயக்கமற்றுக் கிடக்கின்றன

எத்தனையோ சுனாமிகள்.

 

Sabeer AbuShahruk

Series Navigationகுருஷேத்திர குடும்பங்கள் 6கவிதை
author

சபீர்

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    /கூழாங்கற்களைப் போன்றே
    முத்தைச் சுமக்கும்
    சிப்பிகளும் சிதறிக்கிடக்கும்
    அடி மனத்தில்
    ஆர்ப்பரிப்பில்லாத அமைதியை
    அனுபவித்துப் பார்க்க வேண்டும் நீங்கள்// ஆன்மீக தென்றல் வீசும் அழகிய வரிகள்.

    உங்கள் உள்ளேயும் (என் அத்தாட்சிகள் இருக்கின்றன) பார்ப்பதில்லையா? என்ற திருக்குர்ஆனின் வேதவரிகள் ஞாபகத்திற்கு வந்தது

    0 0 0

    “சுத்த பரிபூரண சுகவாரி தன்னிலோர்
    சொட்டாகிலும் தொட்டவர்கள் நல்லவர்கள் நல்லவர்கள் நல்லவர்கள்
    நானென்றைக்கு அந்த நல்லவன் ஆவேனோ” என பாடிய குணங்குடி அப்பா கண்ட ஆழ்மனதில் மூழ்கி முத்தெடுக்கும் பாக்கியம் நமக்கும் கிடைக்கட்டும்.

    “பாதுகாப்பு வேண்டுமென்றால் கரையில் நில்.
    பொக்கிசம் வேண்டுமென்றால் கடலுள் செல்” என்ற அறிஞர் சாஅதியின் கவிதை வரிகளின் அழைப்பு பல நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை அழைக்கிறது சபீர்!

  2. Avatar
    Ebrahim Ansari. says:

    கடலின் அலைகள் கூட தித்திக்கும் என்று புரிந்து கொண்டேன். கடல் நீரின் சுவையை இனி இனிப்பு என்று மாற்றிக்கொள்ளுங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தோரே!

  3. Avatar
    கவியன்பன் கலாம் says:

    அஸ்ஸலாமு அலைக்கும், கவிவேந்தரே!

    புதுக்கவிதை நதியிலிருந்து நவீனத்தின் சமுத்திரத்தில் நீந்திடத் துணிந்து விட்டீர்கள்! நீங்கள் இந்த நவீனத்தை முன்பே எனக்கு இட்டிருந்தால் “தடாகம் பேட்டியில்” உங்களைக் குறிப்பிடும் பொழுதுப் புதுக்கவிதைகளில் அதிரைக் கவிவேந்தர் அபுசாருக்ஹ் அவர்களின் புதுக்கவிதைகளைப் படிக்கிறேன் என்று குறிப்பிட்டுச் சொன்ன வேளையில், நவீனத்திலும் உங்கள் பெயர் இட்டிருப்பேன். வாழ்த்துகள்!

  4. Avatar
    shafeer says:

    நியுட்டனின் விதியோடு துவங்கி
    வட்ட விட்ட கணக்குகலும் சேர்ந்து
    உயிரியலும் கலந்து
    திருக்குறளையும் புகுத்தி
    சிறப்பாய் சுனாமியாய்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *