போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16

This entry is part 13 of 33 in the series 14 ஏப்ரல் 2013

போதி மரம்

பாகம் ஒன்று – யசோதரா

அத்தியாயம் – 16

“என்னைப் பிடி பார்க்கலாம்” என்று ராகுலன் ஓட நந்தா துரத்திக் கொண்டு ஓடினான். உப்பரிகையிலிருந்த யசோதரா மற்றும் ராணி பஜாபதி கோதமி கண்ணில் இருவரும் மின்னலாகத் தோன்றி மறைந்தது தான். திடீரென மாடிப்படியில் தடதடவென இருவரும் ஓடி வரும் சத்தம் கேட்டது. “அண்ணி ராகுலனை நான் பிடித்து விட்டேன். அவன் தோற்று விட்டான். அதை ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள்” என்றான். “நேற்று மாலை என்ன நடந்தது என்று நானும் சொல்கிறேன். கீழே உப்பரிகைக்கு வரும் படிக்கட்டுக்கு அருகே, அடுத்தடுத்து இரு தூண்கள் இருக்கின்றன அம்மா. நேற்று இரண்டு தூண்களிடையே இருந்த இடைவெளியில் நான் நுழைந்து வெளியே வந்தேன். இவனால் இயலவில்லை” என்றான் ராகுலன். சில நொடிகளுக்குள் “இப்போது என்னைப் பிடி பார்க்கலாம்”

“ராகுலனுக்கு ஆறு வயதே முடியப் போகிறது இல்லையா?”

“ஆம் அத்தை. வரும் ஆவணியுடன் அவன் ஆறாம் வயதைப் பூர்த்தி செய்கிறான். நந்தாவின் தோளுக்கு சற்று கீழ்வரை உயர்ந்து விட்டான். அவரைப் போலவே நல்ல உயரமும் அழகுமாக வருவான்”

“சித்தார்த்தன் இன்னும் மகத நாட்டில் தான் இருக்கிறான். ஆனால் உதகராம புட்டரின் சீடனாக இல்லை. தெரியுமா?”

“கேள்விப்பட்டேன் அத்தை. நம் ராஜ்ஜியத்திலிருந்து பிராமணர் கௌடின்யரும் இன்னும் நால்வரும் ராகுலனின் அப்பாவின் சீடர்களாக அவரின் பின்னே செல்கிறார்களாமே?”

“கௌடின்யர் சித்தார்த்தனை விட வயதில் மூத்தவர். அவன் பிறந்த போது மகானாக வருவான் என்றும் மன்னாக ஆக மாட்டான் என்றும் ஜோதிடம் கூறி மன்னரின் கோபத்துக்கு ஆளானவர்”

“ஓரளவு மூத்தவர் தன்னை விட வயதில் இளையவராகவும் ஒரு ஷத்திரியராகவும் இருப்பவரிடம் சீடராகச் சேருவது வியப்பாக இருக்கிறது அத்தை”

“எனக்கு மற்றொரு வியப்பும் இருக்கிறது. ஷ்ரமண மார்க்கத்தால் பல வேறு குல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வைதீக மதத்தின் சம்பிரதாயங்களை ஒதுக்கி ஷ்ரமண வழியை ஏற்பதில் ஆச்சரியமில்லை. மிகுந்த பட்டினியும் கட்டுப்பாடுகளுமாக இருக்கும் இருக்கும் இவ்வழி பிராமணர்களுக்கு எவ்வளவு தூரம் ஒத்து வரும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

“அவர்கள் இளவரசர் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் இதுவே அடையாளம். அதேசமயம், மன்னரும், தாங்களும், நந்தாவும், நானும், ராகுலனும் நாம் எல்லோருமே அவரைத் தானே நம்பி இருக்கிறோம்?”

” சித்தார்த்தன் மீது அவர்கள் வைத்திருக்கும் பிடிமானமும் விசுவாசமும் குரு சிஷ்ய அடிப்படையிலானது. ஆனால் நம் எதிர்பார்ப்பு குடும்பப் பிணைப்பு காரணமானது. சித்தார்த்தன் குடும்பம், ராஜாங்கம் என்று மனம் மாறினால் மட்டுமே நமது நம்பிக்கை வீண் போகாது”

“சீடர்களாகப் பிறரை ஏற்குமளவு முழுமையாக ஆன்மீகத்திலேயே ஈடுபட்டு விட்ட அவர் மனம் மாறிக் குடும்பம் என்று திரும்புவார் என்பது ஐயமே”

“ீராகுலன் அவரின் வாரிசாகத் தான், அவரது வழிகாட்டுதலில் தான் செல்வான் என்று நீ அடிக்கடி கூறும் போதெல்லாம், எனக்கு ஒரு அச்சம் உண்டு. சித்தார்த்தன் தனது ஆன்மீக வழியிலேயே பெரிய மகானாக உயர்ந்து விட்டால் உன் எதிர்பார்ப்பு வீணாகுமே யசோதரா”

“உலகமே அவரை மகானாக ஏற்று வழி நடந்தால் சொந்த மகன் ராகுலனுக்கும் அதுவே தான் அத்தை”

“நீயும் நானும் அவ்வாறு சித்தார்த்தனின் வழியில் செல்லலாம். ராகுலன் சாக்கிய வம்சத்தின் அடுத்த மன்னராகும் வாரிசு இல்லையா? உணர்ச்சி வசப்படாமல் யோசி”

“இல்லை அத்தை. உலக நன்மைக்காக சாக்கிய வம்சத்து சித்தார்த்தர் என்னும் இளவரசர் தன் குடும்பத்தை மட்டுமா துறந்தார்? இல்லை. ராஜாங்கத்தையும் ராஜ போகத்தையும் சேர்த்தே தானே துறந்தார்? அந்த அளவு அது உயர்ந்தது உலக நன்மைக்கான உத்தமமான வழி என்றால் அவரின் அந்தப் பாதையில் செல்லுவது எனக்கும் ராகுலனுக்கும் கடமை தானே? எந்த அறையில் என்னை விட்டு நீங்கினாரோ அதே அறைக்கு நிச்சயம் அவர் வருவார். அப்போது அவர் மனமறிந்து எவ்வழியானாலும் அவர் வழியில்தான் செல்வேன்”

*********************

நேரஞ்சர நதிக்கரையில் கௌடின்யன், சித்தார்த்தன் இருவரும் அதிகாலையில் நீராட வந்து கொண்டிருந்தனர். சித்தார்த்தனது உடல் எலும்புக்கூட்டுக்குத் தோல் போர்த்தியது போல இருந்தது. ஒளி வீசும் இரு கண்களும் இரு குழிகளுக்குள் தெரிந்தன. பலகாலமாக மழிக்கப் படாத சிகை தலையுச்சியில் ஒரு கொண்டையாக முடி போடப் பட்டிருந்தது. உணவின்றியும் ஓய்வின்றியும் உடல் பலவீனமாக, கைகள் நடுங்கின.

“என் தேடலில் நீங்கள் இத்தனை நம்பிக்கை வைத்து, பசி பட்டினி அலைச்சல் என்று பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் கௌடின்யரே’

“இளவரசர் சித்தார்த்தரே! ஷ்ரமண வழி கடுமையான உபவாசம் கொண்டது என்பது நாங்கள் அறிந்ததே. ஒரு ராஜவசத்தினரான தாங்களே இத்தனை உபவாசமும் கட்டுப்பாடுகளுமான யோகியாகி விட்டீர்கள். யோக சாதனையில், ஞான சித்திக்கான தேடலில் உறுதியாய் நிற்கிறீர்கள். எங்களுக்கு அதுவே வழி காட்டுதல்”

“வைதீக மார்க்கத்தில் வருணப் பிரிவு மட்டுமல்ல. மிருக பலிகளும் போகங்களும் அதீதமாயிருக்கின்றன. அதே சமயம் ஷ்ரமண மார்க்கத்தில் உள்ள கடுமையான உபவாசமும் அதீதமென்றே தோன்றுகிறது. உங்களைப் பார்க்கும் போது எனக்குக் கவலையாயிருக்கிறது”

கௌடின்யரும் சித்தார்த்தனும் நதியை நெருங்கி விட்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து வந்த நான்கு சீடர்களும் நீராடத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

கோவணத்துடன் நதியில் இறங்கிய சித்தார்த்தன் களைப்பு மிகுதியில் மயங்கி விழுந்தான். “பஸ்பா, மஹாநாமா” எனக் குரலிட்டு கௌடின்யன் அழைக்க மூவரும் விரையும் நதி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட இருந்த சித்தார்த்தனை முதலில் பற்றிப் பிடித்தனர். கௌடின்யரை நகரச் சொல்லி விட்டு பஸ்பாவும், மஹாநாமாவும் ஒருவர் முதுகுப் பக்கமாக சித்தார்த்தனின் இரு கைகளின் கீழே தன் கைகளை விட்டும் , இன்னொருவர் இரு கால்களைப் பற்றியும் தூக்கினர். இதற்குள் பாஸிகாவும், அஸ்வஜித்தும் உள்ளங்கைகளிலேயே தண்ணீரை எடுத்து வந்து சித்தார்த்தனின் முகத்தில் தெளித்தனர். “ஊருக்குள் சென்று இடையர்களிடம் பால் கேட்டு வாங்கி வா” என்றதும் அஸ்வஜித் விரைந்தான். பரிவிராஜர்களாக அறுவரும் அலைந்து கொண்டிருந்ததால் குடில் ஏதும் இல்லை. ஒரு வேட்டியை விரித்து ஒரு துணி மூட்டையைத் தலையணையாய் வைத்து மறுபடியும் நீர் தெளிக்க சித்தார்த்தன் விழிகள் அசைந்தன. முழுமையாக மயக்கம் தெளியவில்லை. புத்திசாலித்தனமாக அஸ்வஜித் கிராமத்திலிருந்து ஒரு சிறிய மரக் கரண்டியைக் கொண்டு வந்திருந்தான். காய்ச்சி இருந்த பால் அவன் கொண்டு வருவதற்குள் சிறிதே ஆறி இருந்தது. மண் கலயத்தில் இருந்த பாலை மரக் கரண்டியில் எடுத்து கௌடின்யன் சித்தார்த்தன் வாயில் புகட்டினான். சிறிய அளவு பால் உள்ளே சென்றதும் சித்தார்த்தன் சுய நினைவுக்கு வந்தான்.

சேனானி கிராமத்தின் மிகப் பெரிய பண்ணையார் உதயபுத்திரனின் விசாலமான வீடும் தோட்டமும் காண்பவர் யாரையும் கவரும். நேரஞ்சர நதியின் பின்புலத்தில் அது ரம்மியமான தோட்டங்களுடன் இருந்தது.

அதிகாலையில் சுஜாதா தன் கணவனை எழுப்பினாள். “நான் ஆலமரத்திடம் ஒரு வேண்டுதல் செய்திருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா?”

உதயபுத்திரன் கண்களைக் கசக்கிய படியே “நினைவிருக்கிறது சுஜாதா. இன்று அதிகாலையில் அதற்கு என்ன வந்தது?”

“ஆலமரம் ஒரு கடவுள் வடிவில் நேரில் வந்து நான் படைக்கும் பால் பாயசத்தை அருந்துவதாக நேற்றிரவு கனவு கண்டேன்”

“ஒரு கனவை இவ்வளவு முக்கியப் படுத்தி விடியும் முன்னே என்னை எழுப்பிச் சொல்ல வேண்டுமா சுஜாதா? போய் நீ உன் வேலையைப் பார்”

அவனுக்குத் தன் வேண்டுதலின் அருமை தெரியவில்லை. அழகும் பணமும் இருந்தும் திருமணம் தள்ளிக் கொண்டே சென்றது. அப்போது “ஆலமரமே! உனக்குன் நான் உனக்குப் பாயசம் படைப்பேன். நேரஞ்சன நதியே நீயே சாட்சி” என்று வேண்டிக் கொண்டதால் தானே நல்ல கணவனும் ஒரு ஆண் பிள்ளையும் கிடைத்தார்கள். வேண்டுதல் பூர்த்தியாகும் வேளை வந்து விட்டது. இல்லையென்றால் கனவு ஏன் வர வேண்டும்?”

“இன்று முதல் நீங்கள் மட்டும் மாலை உணவு அருந்துங்கள்” என்றான் கௌடின்யன் சித்தார்த்தனிடம்.

வழக்கமாக பிட்சை என்பது காலை ஒரு முறைதான். அதில் எந்த மாற்றமுமில்லை. அந்த பிட்சையில் கிடைப்பது மதியம் உணவாகவும் அதாவது ஒரு நாளின் ஒரே வேளை உணவாவகவும் இருக்கும். ஆனால் அன்று மயங்கி விழுந்த பின் ஒரு மாற்றத்தைப் பரிந்துரைத்தது கௌடின்யன் தான். காலையில் பிட்சையில் வரும் கனிகளைப் பசுவுக்கு அளிப்பது வழக்கம். அதை மாற்றி மாலையில் சில கனிகளை உண்ணும் படி அவனும் ஏனைய சீடர்களும் வேண்டிக் கொண்டனர். சித்தார்த்தன் அதை அவர்கள் ஐவருக்கும் பொதுவான பழக்கமாக்கியது கௌடின்யனுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது.

“கௌடின்யரே. ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டன. கடுமையான உபவாசங்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டிருந்தேன். இப்போது நீங்களும் சேர்ந்து கொண்டீர்கள். ஷ்ரமணத்தின் கடுமை மிகுந்த உபவாசங்களுக்கும் மறுபக்கம் வைதீகத்தின் சடங்கு முறைகளுக்கும் இடைப்பட்ட ஒரு மார்க்கம் இருக்கலாம். அதை நான் பரிட்சித்துப் பார்த்து. ஞானம் சித்திப்பதில் தடை ஏதும் இல்லையென்றால் உலகுக்கும் சொல்வேன். ஆன்மீகம் தேடும் முனைப்பில் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்னுக்குத் தள்ளிய சுதந்திர சுவாசமே ஷ்ரமண மார்க்கம். அதே திசையில் மற்றுமொரு புதிய இடைப்பட்ட மார்க்கத்தைப் பற்றி சிந்திக்கிறேன். எதிர்காலம் மட்டுமே இதற்கு விடையளிக்க முடியும்”

மறுநாள் சீடர்கள் ஐவரும் விழித்தெழுந்த போது சித்தார்த்தன் தென்படவில்லை.

சுஜாதாவின் உள் மனம் நேற்று நிறைவேறாமற் போன ஆலமரக் கடவுளுக்கான படையல் இன்று கண்டிப்பாக நடந்தேறும் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் காலை எழுந்த உடனேயே பாலும் பாலில் வெந்த அரிசியுமான பாயசத்தைச் சுண்டச் சுண்டக் காய்ச்சி நெய் சேர்த்து வைத்திருந்தாள். முதல் நாள் பல முறை ஆலமரம் சென்று பார்த்து வந்தாள். இறைவன் வரவே இல்லை.

மாடுகளுக்கு ஒரு முறை காலையில் தானே தீவனம் கொடுத்து வணங்கி வருவது காலையில் அவள் ஏற்றுக் கொண்டிருந்த கடமைகளுள் ஒன்று. அதில் முனைந்தாள்.

திடீரென வேலைக்காரன் மூச்சு வாங்க ஓடோடி வந்து “ஆலமரத்துக்குக் கீழே நாம் இது வரையில் கிராமத்தில் கண்டிருக்காத முனிவர் ஒருவர் நிஷ்டையில் இருக்கிறார்” என்றான்.

அளவற்ற மகிழ்ச்சியுடன் ஒரு தங்க வட்டிலில் நிறைய பாயசத்தை நிரப்பி எடுத்துக் கொண்டு ஆலமரத்தை நெருங்கினாள். இவ்வளவு தேஜஸுடன் வீற்றிருக்கும் இந்த மகான் ஒரு மானுடராக இருக்க வாய்ப்பேயில்லை. ஆலமரம் மனித வடிவில் என் காணிக்கையை ஏற்க வந்த திருவிளையாடலே இது என்று முடிவு செய்தாள்.

சித்தார்த்தனின் முன் கிடந்து வணங்கி, எழுந்து அவனது நிஷ்டை கலைவதற்காகக் காத்திருந்தாள். பரவச் நிலையில் இருந்த அவளுக்கு, ஐந்து ஆண்கள் வந்து அவளைப் போலவே காத்திருப்பது கண்ணில் பட சற்றே நேரமானது. “தாங்கள்?” என வினவினாள்.

“நாங்கள் இவருடைய சீடர்கள்”

“நீங்கள் இவரை குரு என்று மட்டுமா நினைக்கிறீர்கள்? இவர் மானுடரே அல்லர். இந்த ஆலமரத்தில் உள்ள கடவுளின் மறுவடிவம். இந்த ஆலமரம் எங்கள் கிராமத்தினர் அனைவரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் கடவுள்” என்றாள். இந்தத் தங்க வட்டிலில் உள்ள பாயசததை அந்தக் கடவுளுக்கு அர்ப்பணிக்க என்று நான் கொண்டு வந்திருக்கிறேன்”

“எளிய உணவை மட்டுமே பிட்சை எடுத்து உண்பார். தங்க வட்டிலில் உண்பது முறையாகாது” என்றான் கௌடின்யன்.

சுஜாதா கண்களில் நீர் மல்கியது. இறைவன் ஏற்பாரா? மாட்டாரா? வெகு நேரம் கழித்து சித்தார்த்தனின் விழிகள் திறந்தன.

“தேவனே! இந்த ஏழையின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும். தாங்கள் இந்த இனிப்பான அன்ன பாயசத்தை அருந்தி அருள வேண்டும். ஆலமரம் தேவன் வடிவில் வந்து என் வேண்டுதலை நிறைவேற்றுவதாகக் கனவு கண்டேன்”

“நான் மனிதன் அம்மா. தேவன் அல்லேன்”

” கௌதம மகரிஷி தேவருக்கு நிகரான தேஜஸ் உடையவர் என்று என் அம்மா கூறுவார்கள். உங்கள் தேஜஸில் அந்த கௌதமரையே நான் பார்க்கிறேன். தாங்கள் ஆலமரத்தில் உள்ள கடவுளின் அவதாரமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் இதை ஏற்றால் அது தெய்வம் ஏற்றதற்கே ஒப்பாகும்”

“தங்க வட்டிலில் ஒரு துறவி உண்ணக் கூடாது. இருந்தாலும் உன் அன்பை ஏற்று இதை நாங்கள் அனைவரும் அருந்துவோம்” என்று பதிலளித்தான் சித்தார்த்தன்.

“அவ்வாறெனின் நான் வீட்டுக்குச் சென்று அனைவருக்கும் நிறைய பாயசம் கொண்டு வருகிறேன்”

கௌடின்யன் ” அம்மா இதை அருந்துவது ஷ்ரமண வழிக்கு உகந்ததல்ல” என்றான்.

இதைக் கேட்டதும் சுஜாதா குலுங்கிக் குலுங்கி அழுது இரு கரம் கூப்பி “கௌதமரே.. தாங்கள் இதை மறுத்து இந்த ஏழையை நிராகரித்து விடாதீர்கள்” என்று விம்மலுடன் கூறினாள்.

இரு கரங்களை நீட்டி சித்தார்த்தன் அதை வாங்கியபடி ” அன்பை நிராகரிப்பது அதர்மமாகும் அம்மா” என்றான். அதை விரல்களால் எடுத்து அவன் உண்ட போது கரங்களிலும் இதழ்களிலும் பால் வழிந்தது. ஆனந்தக் கண்ணீருடன் பலமுறை சுஜாதா அவனை வணங்கினாள். உணவை உண்டு முடித்த சித்தார்த்தன் தங்க வட்டிலைப் பின்புறமாக விட்டெறிய அது நதியில் விழுந்து மறைந்தது. சுஜாதாவிடம் சற்றும் அது குறித்த வருத்தமே இல்லை. வேலைக்காரன் கொண்டு வந்திருந்த மண் பானையிலிருந்து தண்ணீரை சிறு குடுவையில் எடுத்து சுஜாதா அவனது கைகள் கால்கள் முகம் அனைத்தையும் கழுவி விட்டு மீண்டும் தரையில் விழுந்து வணங்கினாள்.

“கயை செல்லும் வழி இந்த நதியை ஒட்டிச் செல்வதே. விசாரித்து மேற் சொல்வோம்” என்ற சித்தார்த்தனிடம் கௌடின்யன் “இல்லை சித்தார்த்தரே. நாங்கள் ஐவரும் வந்த வழியே சென்று ராஜகஹம் செல்கிறோம்” என்றான்.

“காரணமென்ன கௌடின்யரே?”

“போகமான பாதைக்கே தாங்கள் போய் விடுவீரோ என அச்சமாக இருக்கிறது. தாங்கள் தங்க வட்டிலில் உணவு அருந்தியதும், ஒரு பெண் தங்களைத் தொட்டுக் கழுவி விட்டதும் முறையல்ல’

“அன்புக்கு முன் எதுவுமே அசுத்தமில்லை கௌடின்யரே”

மறுமொழி பேசாமல் கௌடின்யரும் மற்ற நால்வரும் நடந்து சென்றனர்.

சித்தார்த்தன் தனி வழியே கயை நோக்கி நடந்தான்.

(பாகம் ஒன்று – யசோதரா முற்றும்)

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை
author

சத்யானந்தன்

Similar Posts

0 Comments

  1. Avatar
    sathyanandhan says:

    வணக்கம். தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் இந்த வாரம் வர வேண்டிய “போதி மரம்” நாவலின் பகுதியை அடுத்த வாரம் சமர்ப்பிக்கிறேன். தாமதத்துக்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து சமர்ப்பிப்பதை உறுதி செய்கிறேன். வாசகருக்கும் திண்ணை இணையத்தாருக்கும் நன்றிகள். அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *