டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 3

This entry is part 32 of 0 in the series 21 ஏப்ரல் 2013

ஓ ……நீங்களா….இப்பத்தான் உங்கள நெனைச்சேன்…….உங்களுக்கு ஆயுசு நூறு கேட்டேளா..! என்னவாக்கும் விஷயம்? சித்ரா சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள்.

அதொண்ணுமில்லை….உங்கட குட்டி கௌரிக்கு வேறெங்கிலும் வரன் பார்த்து முடிச்சுக்கோங்கோ . எங்க கார்த்திக், நேக்கு இந்தப் பொண் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டான். அவனோட இஷ்டம் எதுவோ அது தான் எங்களோட இஷ்டமும்..நீங்க என்ன சொல்றேள்..? எதுவும் இப்போ நம்ம கையில இல்லையாக்கும்.இது எல்லாம் ஈஸ்வரன் கிருபை….நம்ம குட்டியள் இஷ்டம் தானே நமக்கு முக்கியம். அதான் நானே உங்க கிட்ட சொல்லிக்கறேன்னு சொல்லிட்டேன். கௌரி நல்ல பெண் குட்டி. எங்களுக்குப் பரம திருப்தி தான். என்ன செய்ய..வாழப் போறது அவா தானே? வேற நல்ல இடத்தில் வரன் அமையும்…எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கலை….தப்பா நினைக்கப் படாது….அப்போ நான் போனை வெச்சுடவா? என்று பதிலுக்குக் கூடக் காத்திராமல் ரிசீவரை வைத்து விட்டு “ஹப்பாடா…ஒரு வழியா சொல்லியாச்சு…அடங்காப் பிடாரி கௌரி கிட்ட இருந்து தப்பியாச்சு…..ஹப்பப்பப்பா இந்த மாதிரி மாட்டுப் பொண்கள் கிட்ட மாட்டிண்டு தவிக்க முடியாதுடா சாமி…இவா டௌரி தர மாட்டாளாம்…..கல்யாணம் மட்டும் நடக்கணுமாம் …..எப்டி? மந்திரத்துல மாங்காய் காய்க்குமா? கை நிறைய சம்பாதிக்கிறாளாம்….பெரிய சம்பாத்தியம்….அது முழுசும் அவளோட டிரஸ்,வித விதமா செருப்பு, ஹாண்ட்பாக், சென்ட் பாட்டிலுக்கே பத்தாதே….நேக்கு அதெல்லாம் தெரியாதா என்ன? இந்தக் காலத்துல சம்பாதிக்கறத விட ஹவுஸ் வொய்ஃப் தான் சேஃப் … வேலைக்குப் போறவா கதி எல்லாம் வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா ….தான். எனக்கே அந்தக் காலத்துல ஐயாயிரமாக்கும் தட்சிணை கொடுத்து குடித்தனம் பண்ண அனுப்பிச்சா …” என்று சொல்லிக்கொண்டே நிம்மதி பெருமூச்சு விட்டாள் கல்யாணி.

பேப்பர் படிக்கும் சாக்கில் முகத்தை மூடிக் கொண்டு தன் மனைவி பண்ணும் காரியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் அப்பா…பேப்பரை கீழே இறக்கி, ” ஏன் இப்படி செய்தே ? என்பது போல ஒரு பார்வை தான்…அதற்குள்…

இந்தாருங்கோ இதிலயெல்லாம் நீங்க தலையிடாதேங்கோ….நானாச்சு. நேக்கு அந்தப் பொண்ணைத் துளிக் கூடப் பிடிக்கலை. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் நம்ம முன்னாடியே எப்டிப் பேசித்து பார்த்தேளா..? வாயாடி..துளிக் கூட பயமே இல்லை. நம்மாத்து கார்த்திக் அப்பாவி….அவனைப் போயி இப்படி மாட்டி விடக் கூடாதுன்னு தான் அவனுக்கே பிடிக்கலைன்னு சொல்லிட்டேன். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சு..ஒத்துக்கறேன்…நான் தான் இந்த அலையன்சை கொண்டு வந்தேன். நன்னாப் படிச்சிருக்கா, கை நிறைய சம்பளம் வாங்கறான்னு…இதெல்லாம் ஆத்துக்குள்ள வந்தா ஆத்து நிம்மதியே காணாப் போயிடும்…என்ன சொல்றேள்..? நம்ம ஆனந்து பெரியப்பா கதை தான் வீட்டில் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு தெனம் ஒரு சண்டை மண்டை உடையும்….நீயா நானான்னு? யாருக்கு இங்க திராணி இருக்கு சண்டை போட…என்னன்னா நான் சொல்றது சரி தானே?

ம்ம்ம்ம்….நீ சொன்னாச் சரியாத்தான் இருக்கும். இப்ப நான் இல்லையா? ஆத்துக்கு ஒருத்தர் தான் அப்படி இருக்க முடியும்….நம்ம கார்த்திக்குக்கு இவளை விட ஏற்ற ஜோடி கிடைக்காதுன்னு சொன்னா நீ எங்க ஏத்துக்கவா போறே? அப்பறம் நான் கேட்ட நேரத்துக்கு காப்பி கிடைக்காது. அதுக்கு ஒரே வழி…உன் வழி தான் என் வழின்னு தலையை ஆட்டிட வேண்டியது தான். மனசுக்குள் நினைத்தது வெளியே தெரியாமல் தலையை ஆட்டினார்.

ஏண்டி ஒண்ணு கவனிச்சியோ…இந்த கார்த்திக் பயல், இப்பல்லாம் சீக்கிரமா எழுந்துக்கறதென்ன ……வாக்கிங் போறதென்ன …..நம்மகூட சிரிச்சுப் பேசறதென்ன….ன்னு நீ கவனிச்சியோ? நேக்கென்னமோ தோண்றது , இதெல்லாம் நாம அந்தப் பொண்ணைப் பார்த்ததுக்கு அப்பறமாத் தான் இப்படி ஒரு சேஞ் …சரி தானே?

மூஞ்சி….புத்தி போறதே உங்களுக்கு…..அவனுக்கா… தோணிருக்கும்… இதுக்கெல்லாம் அந்த வாயாடியை வம்புக்கு இழுத்து மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போடாதேங்கோ…அந்தப் பொண்ண நாம மறக்கறோம். கூடிய சீக்கிரம் வேற பெண்ணைப் பார்க்கறோம் கேட்டேளா.

நீ உன் புள்ளைக்கு பொண்டாட்டி தேடறியோ இல்லையோ நோக்கு ஆமாம் சாமி போடறா மாதிரி ஒரு அப்பாவி மாட்டுப் பொண்ணை சல்லடை போட்டுத் தேடிக்கறே….நீ தான் பிளவுஸ் எடுத்துண்டு போயி புடவை வாங்கற பார்டியாச்சே…நடத்து…நடத்து.. நான் உன் குறுக்கே வரலை.

அப்படிச் சொல்லுங்கோ. பின்னே…கொஞ்ச நஞ்சமாவா செலவு பண்ணி இவனை இஞ்சினீயர் படிக்க வெச்சோம். பத்து லக்ஷம் அட்மிஷனுக்கு .. ! ஃபீஸ் ஒரு லட்சம் வருசத்துக்கு .. ! இந்த மாப்பிள்ளையை சும்மா வாங்க வந்திருக்கா .. ! நாலு வருசமா எவ்வளவு செலவாச்சு.அதத் தவிர வேலை…காரு…பங்களா….சும்மா வருமோ சொர்க்க லோகம்? இந்த வீடு ஒண்ணே போதுமே….. இன்ன தேதிக்கு அம்பது லட்சம் போகும்… இத்தனை சொத்தும் அவளுக்குத் தான் போகப் போறது….ஒரே பிள்ளையோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திப் பார்க்க வேண்டாமா? அது கூட செய்ய முடியாதவா நம்ம சம்பந்தியா எப்படி ஏத்துக்க முடியும்….நான் பேசறதில் நியாயம் இருக்கு தானே? கல்யாணத்தை நன்னா நடத்திக் கொடுங்கோன்னு சொன்னதும் அவா மூஞ்சி போன போக்கைப் பார்த்தேளா? நான் என்னமோ கேட்கக் கூடாததை கேட்டா மாதிரி…இந்த லட்சணத்தில் அந்தப் பொண்ணுக்கு இவனோட தனியாப் பேசணுமாம்……? என்ன வேண்டியிருக்கு…. அதெல்லாம் நேக்குத் துளிக் கூடப் பிடிக்கலை..அதான்….நானே இந்த வரன் வேண்டாம்னு வெச்சேன்…நல்ல வேளையாக் கண்ணைத் தொறந்துண்டு படுகுழியில விழத் தெரிஞ்சோம். தப்பிச்சோம்.

சரி விடு…..சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதுன்னு சொல்வா….அது சரியாத் தான் இருக்கு….நம்ம கார்த்திக் விஷயத்துல.

அது சரி..நீங்க யாரை பூசாரிங்கறேள்? யாரை சாமி எங்கிறேள் ? சாமி நீங்களா ? நான் பூசாரியா ?

நிச்சயமா நான் உன்னைச் சொல்லலை…அவாளைச் சொன்னேன்…. என்று சொல்லிக் கொண்டே..ஒரு வாய் காப்பி கலந்து தாயேன்….நீ பேசினதைக் கேட்டே என் தொண்டை உலர்ந்து போயிடுத்து.

வேளா வேளைக்கு ஏழு தரம் காப்பி குடிச்சே நீங்க இந்த சொத்தை அழிச்சுடுவேள்….சொல்லிட்டேன்..காப்பிப் பொடி கிலோ நானூறு ரூபாயாக்கும்….இனிமேல் ரெண்டாவது மூணாவது காப்பி எல்லாம் கட்டுப்படி ஆகாது..இப்பவே சொல்லிட்டேன்…..வந்தவா போறவா ளுக்கெல்லாம் இனிமேல் என்னால காப்பி போட்டு கொடுத்திண்டு இருக்க முடியாது….போனாப் போறதுன்னா ஒரு வாய் டீ தான்….ஆமாம்…உங்களுக்கும் வெறும் டீ தான்…சொல்லிக் கொண்டே அடுக்களை பக்கம் போகிறாள் கல்யாணி.

ஃபோனை வைத்து விட்டுத் திரும்பிய சித்ரா, ஏன்னா இந்தக் கூத்தைக் கேட்டேளா? இப்ப அந்த கல்யாணி மாமியாக்கும் பேசினா….அவாத்து பிள்ளை கார்த்திக்குக்கு நம்ம கௌரியைப் பிடிக்கலையாம்…அதனால வேற வரன் பார்த்துக்கோங்கோன்னு சொல்லிட்டு வெச்சா. நீங்க என்னடான்னா வேற கதை சொன்னேள்…..மொத்தத்தில் நேக்கு தலையை சுத்தறது. இந்தப் பொண்ணோட ஜாதகம் எடுத்த நேரமே சரியில்லையோ என்னமோ? பேசாமல் சுபதாம்பூலம்.காம்ல பதிஞ்சு வெச்சுட்டு காத்துண்டு இருக்க வேண்டியது தான். தானே நடக்கும்போது நடக்கட்டும்னு.நம்ம கௌரிக்கு என்ன குறையாம்…..? கொஞ்சம் கூட நாக்குல நரம்பே இல்லாமல் “சரிபட்டு வரலைன்னு “சொல்லிட்டு ஃபோனை வெச்சுட்டா. அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாப்பல டெல்லி வரனையும் தூக்கி வீசீட்டேள் நீங்க….இப்ப மோட்டுவளையைப் பார்த்ததுண்டு உட்காருங்கோ.வரன் கூரையைப் பிச்சிண்டு குதிக்கப் போறது..இந்த ஒரு பொன்னைக் கரை ஏத்தறதுக்குள்ள இன்னம் என்னவெல்லாம் படணுமோ ? ஒருவிதத்துல அவா வேண்டாம்னு சொன்னதும் நல்லது தான்…நேக்கும் அந்த மாமியப் பிடிக்கவே இல்லை….நம்ம கௌரி பையனோட கொஞ்சம் தனியாப் பேசணும்னு சொன்னதும் அந்த மாமியோட முகம் அஷ்ட கோணலாச்சு …இப்ப என்னது ஊரில் நடக்காததை நம்ம கௌரி சொல்லிட்டாள். அந்த மாமிக்கு பையனைப் பெத்துட்டோம்னு ஒரே கர்வம்…அது அவா உட்கார்ந்த அந்த தோரணையிலயே தெரிஞ்சது.நான் மட்டும் என்ன இளப்பமா? கௌரிக்கு மட்டும் என்ன சும்மாத் தூக்கி கொடுத்தாளா கிராஜுவேட் பட்டம்..?அவன் பி ஈ ன்னா …..இவள் பி.டெக் …இதுல பிள்ளை என்ன உசத்தி பொண்ணு என்ன தாழ்த்தி…..ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணனுமாம்…..! ஏன் ரெண்டு பேரும் சேர்ந்து செலவு பண்ணி பண்ணலாம்னு ஒரு வார்த்தை சொல்றது…நாமளே தான் எல்லாச் செலவும் பண்ணணும் …..இங்க நம்ம கிட்ட மட்டும் பொண்ணோட சேர்ந்து அட்சய பாத்திரமும் , காமதேனுவும்,கற்பக விருஷமும் இருக்கறாபோல…அவாளுக்கு நெனப்பு…

நீங்க சொல்றாப்பல நம்ம கௌரி அவாத்து கார்த்திக்கை காதலிச்சுக் கல்யாணம் பன்னீண்டா…அவ்ளோதான் தொலைஞ்சா….அந்த கல்யாணி மாமி உண்டு இல்லைன்னு பண்ணிடுவா…நேக்கென்னமோ அந்த மாமியாத் தான் ஃபோன் பண்ணி பிள்ளை பிடிக்கலைன்னு சொல்றான்னு சாக்கு சொல்லிட்டு வெச்சுட்டாள்னு தோணறது…இல்லையா? சித்ரா தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறாள்.

அப்டிப் போடு அருவாள…! நான் நெனச்சேன்…..நீயே சொல்லிட்டே… இதெல்லாம் அந்த மாமியோட திருவிளயாடலாக்கும் .நீ பேசாமல் இரேன்…..இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் வெளில வரும். என்னோட கணிப்பு தப்பாப் போகாது கேட்டியா…! எது என்னவானாலும் சரி….நம்ம கௌரி கல்யாணம் ஒத்த ரூபா செலவில்லாமல் அந்த கார்த்திக்கோடத் தான் நடக்கும்கறேன்.

அது தான் நான் வேண்டாங்கறேன்…..! ஆசையா பாசமா வளர்த்த பொண்ணைக் கொண்டுபோய் அவாத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தா அந்த மாமி மாமியார் கோதாவில் நம்ம கௌரியை சக்கை சாறாக்கிடுவாளாக்கும். நீங்க ஆயிரம் தான் சொல்லுங்கோ, நிச்சயமா இவளை அந்தாத்துக்கு நான் மாட்டுப் பொண்ணா அனுப்பவே மாட்டேன். அதுக்கு அவளுக்கு கல்யாணமே ஆகாட்டாலும் பரவாயில்லைங்கறேன்…சித்ரா ஈஸ்வரனைப் பார்த்து சொல்கிறாள்.

வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்க இப்போ நீ தயாரா நிக்கறியாக்கும். அதெல்லாம் அந்த மாமி கல்யாணம் ஆயாச்சுன்னா சரியாய்டுவா. நீயே பாரேன்.

அப்பறமா என்னத்தப் பார்க்கறது….பொண்ணு தினம் கண்ணைக் கசக்கிண்டு நிக்கறதையா? நீங்க சும்மாருங்கோ…உங்களுக்கு ஒண்ணும் தெரியாதாக்கும். நல்லவேளையா அவாளே வேண்டாம்னு சொல்லி யாச்சு….பேசாம வேற வரன் பார்க்க இன்னைக்கே இன்டர்நெட்டில் பதிய வேண்டியது தான். உங்கள நம்பினால் ஒண்ணும் நடக்காது. நானே பார்த்துப் பண்ணிக்கறேன்…சொல்லிவிட்டு சித்ரா கணினியை ஆன் செய்துவிட்டு அதன் முன்னே உட்கார்ந்து கொள்கிறாள்.

கிளையன்ட் மீட்டிங் முடித்துவிட்டு ஆயாசமாக தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து லேசாக ஆடிக் கொள்கிறாள் கௌரி.அவளது முன்னே இருந்த கணினியில் மின்சார எழுத்துக்கள் மின்னி மின்னி நடந்து கொண்டிருந்தது. பியூன் வைத்து விட்டுப் போன டீயை எடுத்து ஒரு வாய் உறிஞ்சி விட்டு மீண்டும் டேபிள் மீது வைத்து விட்டுத் திரும்பும் போது அவளது அரை வாசலில் நிழலாடுகிறது.

நிமிர்ந்து பார்த்து, ஹூஸ் திஸ்…? என்று குரல் கொடுக்கிறாள்.

மே ஐ கமின் மாம்..? மிகவும் பரிச்சயப் பட்ட குரலில் பதில் வரவும்.

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டவள் , சுதாரித்து கொண்டு..அடுத்த நொடியே….ஹேய்…..வாட் எ சர்ப்ரைஸ் விசிட்…..? கம்…கம்….கம்…கம்…கம்….என்று எழுந்து நிற்கிறாள்.
ஒரு போன் கூட பண்ணாம நீ…?

ஆறு மிஸ்ட் கால் இருக்கும் பாரு….! பண்ணிப் பண்ணிப் பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி சரின்னு நேரா இங்கியே கிளம்பி வந்துட்டேன்….பரவால்ல தானே?

நோ ப்ராப்ஸ்….என்று சொல்லிக் கொண்டே தனது மொபைல் ஃபோனை ஆன் செய்து கொண்டே நிமிர்ந்து கார்த்திகைப் பார்க்கிறாள்..அந்தக் கண்களில் அன்பு பொங்கி வழிந்தது.

ஓ ..ஐம் சாரி…..இப்போ தான் கிளையன்ட் மீட்டிங் முடிஞ்சது….என் மொபைல் சுவிட்ச் ஆஃப் மோட் …..அப்றம் எங்க ரொம்ப தூரம் வந்த்ருக்கே கார்த்திக்…..கூலா என்ன சாப்பிடறேள் ?

இங்க ஒண்ணும் வேண்டாம்…முடிஞ்சா வெளில வா…..லெட்ஸ் ஹேவ் சம்திங்…..!

ஓ ….போலாமே…..ஜஸ்ட் டென் மின்ஸ் ப்ளீஸ்….என்றவள் குனிந்து நிமிர்ந்து ஏறக்கட்டி கணினியை மூடி…யாருக்கோ இண்டர்காமில் தகவல் சொல்லிவிட்டு எழுந்து நிற்கிறாள்…..அப்போ…… போலாமா கார்த்திக் ?

முதல் முதலா கார்த்திக்கோட தான் வெளியில் போகிறோம் என்று உள்ளுணர்வு சொன்னாலும் அது எதையும் வெளியில் காட்டிக்காமல்…. .நான் உன்னோட வரும்போது ரொம்ப கம்ஃபோர்ட்டா இருக்கேன்…ஐ டோன்ட் நோ வொய் ? ஆமா…..எப்டி நீ இங்க வந்து என்னை வெளில கூப்பிட்டே…? என்று புன்னகைக்கிறாள்.

எஸ்……ஐ டூ ஃ பீல் லைக்…ஜாய்ஃபுல் ! ..என்னமோ உன்னோட பேசணும்னு தோணிண்டே இருக்கு..அதான்…..யு நோ சம்திங்…….இப்போல்லாம் சீக்கரம் ஏந்துக்கறேன் …..வாக்கிங் போறேன்…..நிறைய மெலோ சாங்க்ஸ் கேட்கறேன்…..!

வாவ்…..நானும்தான்…!

இதுல ஒரு ப்ராப்ளம் இருக்கு கௌரி…!

சொல்லு கார்த்திக்…..இது நம்ம லைஃப். அதுக்கு முன்னாடி நான் உன்னை ஒண்ணு கேட்கலாமா?

ம்ம்…கேரி ஆன்….ப்ளீஸ்…!

நீ கமிட் ஆயிட்டியா..? என்கூட…… நான் ஆயிட்டேன்….லேசாக வெட்கப் பட்டவள்…..தலை குனிந்து கொண்டு….வெரி நைஸ்…என்று மெல்லப் புன்னகைக்கிறாள்.

யா……மீ டூ….கௌரி…பட் எங்காத்தில் இதற்கு பெரிய தடா இருக்கும்னு நம்பறேன். உங்காத்தில் ?

டௌரி மட்டும் தான் தடா …..! ஆனா…..கார்த்திக் ஒ கே…! என்று சிரிக்கிறாள்.

அது சரி…எங்காத்தில் கௌரிக்கே தடா தான்….வா.. அப்டியே ஒரு “காப்பிச்சோனா” வுக்குள் நுழைகிறார்கள்.

பெரியவாளுக்கு நம்ம மனசு ஒண்ணும் அத்தரைக்கு புரியாதாக்கும். வெரி டிஃபிகல்ட் டு மேக் தெம் அண்டர்ஸ்டான்ட்…யூ நோ …நாம பேசிப் பார்க்கலாம்….கொஞ்சம் டைம் தரலாம். எனக்கு ஒரு ப்ராப்ளமும் இருக்காது. அவா ஏற்கனவே பார்த்த வரன் தானே நீ…! இன்னைக்கே கூட அம்மாட்ட இதைப் பத்தி என்னால சொல்லிட முடியும்…உன்னால முடியுமா கார்த்திக்..? கேட்டுவிட்டு மெனுவைப் பார்க்கிறாள் கௌரி.

அஃப் கோர்ஸ் ஐ கேன் ஃபோர்ஸ் டு டேக் மை ஓன் டெஸிஷன்….ஆனா கௌரி…..அம்மா ரொம்ப கஷ்டப் படுவா..அதான்..கொஞ்சம் வெயிட் பண்ணி சொல்வேன் .

இட்ஸ் ஓகே…சொல்லும்போதே இரண்டு பெரிய கிளாஸ் டம்ப்ளரில் ஐஸ் கட்டிகள் மிதக்க லெமன் டீ மேஜையை நிறைத்தது .

கௌரி அந்த டீயை எடுத்து மெல்ல மெல்ல உறிஞ்சிக் குடிக்கிறாள்… கார்த்திக் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

ம்ம்ம்ம்….பார்த்தது போதும்….நீயும் டீயைக் குடி….என்று லேசாக கிளாசை அவன் பக்கம் நகர்த்தி விட்டு……வெரி ஸ்ட்ரேஞ் என்று முணுமுணுக்கிறாள்.

சந்தோஷத்தில் கார்த்திக், “ஹமே தும் ஸே ப்யார் கித்துனா ஏ ஹம் நஹி ஜானத்தே…..” என்று ஹம் செய்கிறான்.

ஹேய்….இப்பத் தான்பா….இப்பத் தான்பா….இதே பாட்ட நானும் நினைச்சேன்….ஹொவ் கம்….? என்று கண்கள் விரிய ஆச்சரியத்தில் மிதந்தபடி கௌரி கேட்கும்போது

அவள் பருகிய டீ புரையேறி அடுத்த நிமிடம்….”ஹச்……ஹச்……..ஹச்…..ஹச்…..என்று இருமத் தொடங்குகிறாள்….

கார்த்திக் அவசரமாக அவளது தலையை லேசாகத் தட்டி தட்டி கூல் …..கூல்……யாரோ உன்னை நினைக்கறா…..ஒருவேளை என் அம்மாவாக் கூட இருக்கும் என்று சிரித்தபடியே சொல்கிறான்.

சுதாரித்துக் கொண்டவள்…தேங்க்ஸ் கார்த்திக்….ஸோ ….கைண்ட்…..! என்றவள்…. அவா சம்மதிக்கவே இல்லைன்னா…..இப்படியே ஒரு நாள் மாலையும் கழுத்துமா போய் வாசல்லே நின்னா எப்படி இருக்கும்….! என்று யதார்த்தமாகக் கேட்கிறாள் கௌரி.

வாவ்…வாட் எ ப்ரில்லியன்ட் ஐடியா ….கௌரி .! இட் வில் பி திரில்லிங் ! என்று யதார்த்தமாகவே சொல்லிக் கொண்டு ஹைஃபை செய்கிறான் கார்த்திக்.

இருவரும் சேர்ந்து மனம்விட்டு சிரிக்கின்றனர். அருகில் இருப்பவர்கள் இவர்களைப் வித்தியாசமாகப் பார்ப்பதை உணர்ந்து சிரிப்பை அடக்கிக் கொண்டு “இனியும் தாங்காது..” நாம போகலாம் என்று எழுந்திருக்கின்றனர்.

(தொடரும்)

author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  ஜெயஸ்ரீ சங்கரின் ” டெளரி தராத கெளரி கல்யாணம் ” சுவையாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. கல்யாணியிடமிருந்து வந்த அதிர்ச்சியும் , அதைப் பற்றி சித்ரா கணவரிடம் விவரிப்பதும், அதுபோலவே அங்கு கல்யாணியும் கணவரிடம் தர்க்கம் பண்ணுவதும் நகைச்சுவை கலந்த யதார்த்தம்! இவை எல்லாவற்றுக்கும் மேல் கார்த்திக்கும் கெளரியும் சந்தித்து எதிர்காலம் பற்றி திட்டம் தீட்டுவது சித்ராவுக்கும் கல்யாணிக்கும் அதிர்ச்சி வைத்தியமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை இந்த தொடர் மூலம் வரதட்சணை வழக்கத்திற்கு பலத்த அடி விழும் என்று நம்பலாமா? வாழ்த்துகள். அன்புடன் டாக்டர் ஜி ஜான்சன்.

 2. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *