சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்

This entry is part 7 of 29 in the series 28 ஏப்ரல் 2013

கடவுள் வந்திருந்தார் 01

சென்னை மியூசியம் தியேட்டருக்கு இம்மாதம் 23, 24 ஆகிய இரு தினங்களும் கடவுள் வந்திருந்தார். சுஜாதா வந்திருந்தார்… நிறைய மக்கள் வந்திருந்தார்கள். பாரதி மணியின் சென்னை அரங்கத்தார் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தை அங்கே சிறப்புற மேடையேற்றி இருந்தார்கள். இது அறிவியல் சிந்தனையுடன் நகைச்சுவை ரசத்தில் தோய்ந்த சமூக நாடகம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.

கடவுள் வந்திருந்தார் 02

உலகில் என்றுமே நிரந்தரமற்ற சமூக மரியாதையை ஓய்வு பெற்ற ஒரே நாளிலேயே இழக்கிறார் சீனிவாசன். சுஜாதாவின் எதிர்கால மனிதன் புத்தகத்தை படித்து உள்வாங்கிய போது உண்மையிலேயே எதிர்கால மனிதன் எங்கோ இருந்து வந்து அவர் வீட்டினுள் இறங்குகிறான். அவன் ‘ஜோ’ என பெயரிடப்படுகிறான். சீனிவாசனின் கண்ணிற்கு மட்டுமே அவன் தெரிகிறான். மற்றவர் கண்களுக்கு தெரியாத அவனது சேட்டையில் அவர் மனம் கொதித்து அவனை எதிர்க்கிறார். அந்த மின்சாரத்தை தின்று வாழ்கிற அந்த மின்சார மனிதனை கண்டு அஞ்சுகிறார். அவனிடம் அவர் செய்யும் சர்ச்சைகளை பார்த்த மற்றவர்கள் அவரை பைத்தியமாகவே தீர்மானித்து விடுகிறார்கள்.

சீனிவாசன் பேசும் ஒவ்வொரு உரையும் ஆழ்ந்த சிந்தனையும் அறிவார்ந்த நகைச்சுவையும் கொண்டவை. சீனிவாசனாக நடித்த பாரதி மணி அவர்களின் உரையின் ஏற்ற இறக்கங்களில் காட்சியின் உணர்வுகள் செறிவு பெறுகின்றன.

சுபத்தை முழங்கி கொண்டிருக்கும் வானொலி திடீரென துக்கத்தை இசையாக முழங்கும் போது அதன் செவிட்டில் இரண்டு தட்டு தட்டியதும் அது அழாமல் மீண்டும் சுபத்தை பாடுவதுமென தடுமாற்றத்துடன் இருக்கும் ஒரு வானொலிப் பெட்டி, ஓய்வு பெற்றதன் அடையாளமாய் தொங்கும் ஒரு சந்தனமாலை, ஓய்வெடுத்து கொண்டிருந்த ஒரு குடை, நாற்காலிகள், மாடிப்படி, வெறுமையாய் ஜன்னல் கம்பிகள், மாமி, வசுமதி, ஜோ, சுந்தர், மருத்துவர், இன்ஸ்பெக்டர், பூசாரி, ராமமூர்த்தி, மாமனார், சேஷகிரிராவென உயிரோட்டமான பாத்திரங்களுடன் ஓடியாடி வசனம் பேசி மணியடித்து கடவுளாய் கையுயர்த்தி காலத்தை வெல்லும் கலைஞனாய் பிரமிக்க வைத்தார் சீனிவாசனாய் நடித்த பாரதிமணி. அவ்வப்போது முகம் தொங்க முகத்திலிருந்து துடிப்பான வார்த்தைகளை கொட்டி பிரமிக்க வைத்தார் பாரதிமணி அவர்கள்.

ஓய்வு பெற்ற பின் குடும்பத்தினரின் பாசம், சுயநலம், அல்ப சந்தோஷம் இவற்றினிடையே படும் அவஸ்தையை ஒரு இசையின் ஆலாபனை போல் தன் குரலால் நடிப்பால் பாரதிமணி அவர்கள் உணர்வு பூர்வமாக அழகாக வழங்கி இருக்கிறார்கள்.

சுந்தரை ‘டா’ போட்டு மாமி பேசிய போது அவன் மிக கோபமாக ”என்ன ‘டா’ போட்டு பேசறீங்க” என்றதும், ”நான் அவரை சொன்னேங்க” என்று கணவனை மாமி கை காட்டிய போதும், குக்கர் சப்தம் வந்ததும் அப்பா இறக்கி வைத்து விடுவார் என்று மகளும் தாயும் சுமையை அப்பாவின் மேல் இறக்கி வைத்து விட்டு செல்வதும்… அற்புதமான நகைச்சுவை தருணங்கள்.

பிள்ளைப் பேறாக இங்கே கை குலுக்கி பத்து மாதம் ஆகும்.. தேவலையே… இடுப்பு வலி கிடுப்பு வலி ஒண்ணும் கிடையாதா… போன்றவை செறிவான நகைச்சுவை வசனங்கள்.

பெண் பார்க்கும் படலத்தில் எல்லா பாத்திரங்களும் கூடி நின்று காட்சிக்கு உயிரூட்டும் தருணத்தில் பாரதிமணிக்கு மட்டுமே தெரிகிற ஜோ உள்ளே நுழைய அவரவர் பாத்திரத்தில் அவரவர் நடித்த பாங்கு வெகு அருமை… மிகவும் பரபரப்பான அந்தக் காட்சியில் குழந்தை உட்பட எல்லா பாத்திரங்களுமே நாடகத்திற்கு நல்ல உயிரூட்டி இருக்கிறார்கள்.

வருடங்கள் பல கடந்த நாடகம் இன்றைய காலக் கட்டத்திற்கும் ஏற்புடையதாக இருக்கிறது. அதுதான் சுஜாதாவின் எழுத்து. நிகழ்ச்சி தொடர்பான எல்லா விஷயங்களிலும் பாரதிமணி என்ற பெருமைக்குரிய ஆளுமையின் ஸ்பரிச பதம் இருந்தது. சுஜாதாவின் கைவண்ணத்தில் உருவான இந்த படைப்பு மிகச் சிறந்த நாடகமாய் உலகம் அறிந்தது. ஆனாலும் அவரது படைப்பினுள் புகுந்து ஊடுருவி உள்ளார்ந்து பயணித்து விளையாடிய பாரதிமணி என்ற 76 வயது வாலிப கலைஞரின் மேடையாக்கம் உண்மையிலேயே கடவுள் வந்து தமிழ் சமூகத்திற்கு தந்த பரிசு. அவரோடு நடித்த எல்லா பாத்திரங்களுமே அந்த கதையின் குடும்ப கட்டுமானத்தின் கச்சிதமான உறுப்பினர்களாக பரிணமித்தார்கள். குறிப்பாக பூசாரி ஒரே காட்சியில் வந்தாலும் அவரது வயிறு குலுக்கலில் நமது வயிறும் சிரித்து குலுங்கியது. பைத்தியம் போக்க வந்த பூசாரியை பாரதிமணி ஓடி ஓடி துரத்தும் காட்சி மிக அருமை. இந்த நாடகத்தில் நடித்த எல்லா பாத்திரங்களுமே சுஜாதாவின் சிந்தனைகளுக்கு சிறந்த சித்திரங்களாய் மேடையை அலங்கரித்திருக்கிறார்கள்.

…நானும் மத்தியான சாம்பார் ஆய்ட்டேன் என ஆறிய சாம்பாராய் சீனிவாசன் பரிதாபமாய் சொல்வதும் அட்டகாசமான தருணங்கள்.

எல்லாவற்றையும் சீரியசா எடுத்துக்காதடா என்று சீனிவாசன் சொல்லும் தொனியில் சுந்தரின் காதல் முதலிலேயே சீரியசாக வலு பெறுகிறது.

சீனிவாசனிடம் ஜோ ”உங்க ஊரிலே எல்லாம் ஜோரா இருக்கு… உங்க ஊரிலே கரண்ட் சீப்பா இருக்கு” என்று சொல்கிற போது தற்போது மின்சாரம் இல்லாமலேயே நமது மனது பிரகாசமாய் எரிகிறது வயிற்றோடு சேர்ந்து..

காதல் என்பதற்கு விளக்கமாய் உனக்கும் எனக்கும் இருபத்தைந்து வருடங்களாய் இல்லாத உறவாய் சொல்வதென காட்சிக்கு காட்சி மனதை நாடகத்தை விட்டு அகல விடாத காட்சிகள். ஒப்பந்தத்தின் படி சீனிவாசன் ஒரு மணி அடித்த போது கால இயந்திர மனிதன் உள்ளே வருகிறான். இரண்டு மணி அடித்த போது வெளியே போகிறான். ஆனால் நாடகம் தொடங்குவதற்கு முதல் மணி அடித்ததிலிருந்தே நம் இதயத்துள் குடி புகுந்த பாரதி மணி மட்டும் நாடகம் முடிந்த பின்னும் இதயத்துள்ளிருந்து வெளி வர இயலாமல் எல்லோர் இதயத்துள்ளும் ஆழப் பதிந்து விட்டார்.

உண்மை சொன்ன போது அவரை ஒரு ஆரோக்கியமான மனிதனாக நம்ப மறுக்கும் சுற்றத்தார் அவர் பொய் சொன்ன போது கடவுளாக நம்பினார்கள். அதை பாரதிமணி தன் வசனத்தில் பரிதாபமாக சொல்லும போது சிரிப்பும் சிந்தனையும் நம்முள் சேர்ந்தே வரும். நாடகத்தில் எத்தனையோ திருப்பங்கள் வந்த போதும் சீனிவாசனுள் இருக்கும் அன்பு, உண்மை மட்டும் எந்த முரண்பாடுகளுமில்லாமல் நல்ல பிரகாசமாக தெரிகிறது பாரதிமணி அவர்களின் நடிப்பின் மூலமாக.

கால இயந்திரத்தால் மட்டுமே கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கண்முன் கொண்டு நிறுத்த முடியுமா என்ன எங்களாலும் எப்போதும் முடியுமென சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சென்னை அரங்கத்தார். பாரதி மணி அவர்களின் சென்னை அரங்க குழுவினரின் நாடகங்களை சென்னையில் இன்னும் நிறைய தொடர்ந்து காண ஆவலாய் இருக்கிறோம்.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationக.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *