‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…

author
1
0 minutes, 20 seconds Read
This entry is part 22 of 29 in the series 12 மே 2013

urumeen

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

    1977-ல் பிறந்த இசை (இயற்பெயர்: ஆ.சத்தியமூர்த்தி) கோவை மாவட்டத்துக்காரர். இவர் ஒரு மருந்தாளுநர். ‘உறுமீன்களற்ற நதி’ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 63 கவிதைகள் உள்ளன. எளிமை, நல்ல வாசிப்புத்தன்மை, கவனமீர்க்கும் தலைப்புகள், புதிய சிந்தனைகள் ஆகியவை இவர் கவிதை இயல்புகள். சக மனித விமர்சனம், யதார்த்தம், கனவுத்தன்மை, சொல் நேர்த்தி ஆகியவையும் ரசிக்கத் தக்கன.

 

    குழந்தைகள் பற்றிய பதிவு பெரும்பாலும் சோடை போவதில்லை. ‘சௌமி குட்டி சௌமியா ஆனது எப்போது?’ கவிதை இப்படித் தொடங்குகிறது:

 

        ஒருமுறை சௌமி குட்டிக்கு

        வேடிக்கை காண்பிப்பதற்காக

        அய்…பூ! என்றேன்

        அன்றிலிருந்து அய்…பூ அய்…பூ!

        என்றே அவள் விளிக்க

        மலர்ந்ததிலிருந்து மேலும் மலர்ந்தன

என்பதில் கடைசி வரியில் கவித்துவம் ததும்புகிறது.

 

‘மொட்டை மாடியில் வசிக்கும் கவிதைகள்’ பளிச்சிடுகிறது.

        அதன் முகங்களில்

        நிலவின் கற்றைகள் ஜொலிக்கின்றன

        அதன் பற்களில் விண்;மீன்கள் மின்னிடுகின்றன

        கேசமதில் நள்ளிரவு இறங்கி இருக்கிறது.

பெண்ணை வர்ணிப்பதில் கடைசி வரியில் புதுமையான பார்வை உள்ளது. பெண்ணைக் கவிதையோடு ஒப்பிடுவது எவ்வளவு பழமையோ அந்த அளவு எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய புதுமையுமாகும். ‘அழகு என்றால் கவிதை: கவிதை என்றால் அழகு’ என்று கருத்து சிலநேரங்களில் நடைமுறையில் நிரூபணமாகும். பெண் ரசனை மேலும் தொடர்கிறது.

 

        மாரிக் காலங்களில்

        அது ஒரு சக்கரவாகத்தின் திறந்த அழகு

 

என்கிறார் இசை. இந்த வெளிப்பாடு மிகவும் அழகாக இருக்கிறது. தொன்மக்கூறு தரும்; அழுத்தம் கவிதையை உயர்த்துகிறது. இக் கவிதையின் இரண்டாம் பத்தியில் அந்தப் பெண்களின் செயல்பாடுகளான தேனீர் அருந்துவது, துணிகள் உலர்த்துவது, புத்தகம் படிப்பது, ஓடி விளையாடுவது, திராட்சை ரசம் பருகுவது, காதலின்பம் கூட்டுவது, வெறுமனே நிற்பது போன்றவற்றின் பட்டியலில் ஆண் மனம் நின்று நின்று ரசிப்பது கவிதைக்கு நல்ல கட்டமைப்பை உருவாக்குகிறது.

    ‘குரல் முத்தம்’ ஒரு வித்தியாசமான கவிதை. காதலியின் குரலை முத்தமிட விரும்பும் ஒருவனின் விருப்பம் இதில் பேசப்படுகிறது.

        உங்கள் காதலி

        அவள் குரலிற்கு முத்தமிடச் சொல்லி

        உங்களை கேட்டால்

        நீங்கள் என்ன செய்வீர்கள்!

 

    ‘தனிமை’ நான்கு வரிக் கவிதை.

 

        அதி ஆழமான

        பாழ் கிணறு என் தனிமை

        ஒரு சொல்லிட்டு

        நீ அதை நிரப்பு

 

அந்தச் சொல் என்னவாக இருக்கும? இருவர் வாழ்க்கையை இணைக்கும் ‘சம்மதம்’ என்ற சொல்லாக இருக்குமோ? ‘பிடித்திருக்கிறது’ என்ற சொல்லாகவும் இருக்கலாம். தொனிப் பொருள் கொண்ட கவிதை ரசிக்கும் படியாக இருக்கிறது. இளஞ்சிவப்பு நிறத் தாவணியைக் காதலியாகவே நினைத்து மனத்தை கிளறிப்பார்ப்பதை அதிரசக் கலையின் இளஞ்சிவப்பு நிறத்தாவணி என்ற கவிதையில் கௌமாரப் பருவச் செயல்பாடுகளை விளக்குகிறார்.

 

    வாழ்க்கையில் சோதனைகள் கண்டு ‘ஏன்தான் பிறந்தோம்’ என்று பலரும் நினைப்பதுண்டு. இம்மன நிலையைக் கருப்பொருளாகக் கொண்டுதான் ‘பிதாவே’ என்ற கவிதை.

 

        ஒரு பந்தென இருக்கிறோம்

        கடவுளின் கைகளில்

        அவரதைத் தவறவிடுகிறார்

 

எனக் கவிதை தொடங்குகிறது.

 

        நான் உன்னை விட்டு

        விலகுவதில்லை: உன்னைக் கைவிடுவதுமில்லை

 

பிதாவே தயவுபண்ணி எம்மைக் கைவிடும் ஆத்திகம் பாதி நாத்திகம் பாதி கலந்து செய்த கவிதை முடிகிறது.

 

இத்தொகுப்பைப் படித்தால் பிளம் கேக் சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழலாம்.

 

        அதன் ஒவ்வொரு துண்டும்

        தொண்டைக்குள் இறங்க

        உடல் முழுக்க இனிப்பாகும்

 

என, அனுபவம் முழுமையாகத் தன்மயமானதைச் சொல்கிறார். பேரின்ப வகைப்பாட்டில் வரும் பிளம் கேக் சாப்பிடுதல் என்ற கவிதையில் இசை!

 

        ஏனைய நாட்களில் மேல்

        துடுப்பிட்டுத் துடுப்பிட்டு

        அந்த நாளை நான் அடைவேன்

 

என்ற வரிகளில் ‘துடுப்பிட்டு’ என்ற வெளிப்பாடு நயமானது. மொழி திரண்டுவர, மேல் நிற்கும் கவித்துவம் ரசிக்கத்தக்கது.

 

        பிளம் கேக் சாப்பிடுவதற்காக

        வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

 

என்கிறார். ரசித்துச் சாப்பிடும் இந்த செயல்பாடு வேறெந்த கவிதையிலும் பதிவானதாகத் தெரியவில்லை.

 

    ‘இரவு பதினோரு மணிக்கு மேல்’ – ஒரு புனைவுக் கவிதையாகும். தற்கொலை செய்து கொள்ளப் போன ஒருவனுக்குக் கடவுள் வேறு காதுகளை வரமாகக் கொடுக்கிறார். அவன் பல வருடங்கள் முன் செல்கிறான். அதில் கேதாதி பாதம் வரை ஓடை ஒன்றை ஓடப்பண்ணும் ஒரு குரலைக் கேட்கிறான்.

 

        குரலுக்கு ஒரு உடலுண்டு

        அதற்கு ஒரு மடியுண்டு

        அதில் கிடந்து விம்மினேன்

 

என்று சொல்பவன் ‘நான் மறுபடியும் கிணற்றில் விழப் போகிறேன்’ என்கிறான். கவிதையில் தெளிவில்லை.

 

    ‘ஆச.சஷ்டிக்கவசம்’ ஒருவரைப் படம் பிடித்துக் காட்டுகிறது. போதிய கவனம் செலுத்தாமல் ‘கவசம்’ படிப்பதை இடித்துரைக்கிறது.

 

    ‘குழந்தைகள், பைத்தியங்கள், கவிஞர்கள்’ என்ற கவிதையில் மழை, கவிதையின் முக்கிய பாடுபொருளாகிறது. மழையின் நோக்கில் இடம் பெறுபவர்கள் குழந்தைகள், பைத்தியங்கள், கவிஞர்கள். குழந்தைகள் சுலபமாகக் கப்பல் விடும்போது மழை மகிழ்கிறதாம். பைத்தியம் மழையில் தன் பைத்தியம் தவிர எல்லாவற்றையும் கழுவிக் கொள்ளும் பாவனையில் செயல்படுகிறது. கவிஞன், தன்னைப் பற்றி (மழையைப் பற்றி) என்ன எழுதுகிறான் என்று மழை ‘தாழ்வாரத்தில் ஒற்றை முத்தாய்த் தொங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறது.’ என நுட்பத்துடன் கவிதை முடிகிறது. மழையைப் பற்றி மழையின் கோணத்தில் இக் கவிதை சிந்திக்கப்பட்டுள்ளது.

 

    ‘ஒரு சுவாரஸ்யத்திற்காகத்தான்’ – ஒரு நக்கலை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. அது சாடலாகவும், விமர்சனமாகவும் முகங்காட்டுகிறது.

 

        சுவாரஸ்யம் கவ்விக் கொண்டு

        வருவதற்கென

        எத்தனை பிராணிகள் வளர்க்கப்படுகின்றன

        ஒரு பத்திரிகை அலுவலகத்தில்

 

என்ற வரிகள், வியாபாரத்தின் பொருட்டுப் பொய்யும் புரட்டும் காசாக்கப்படுவதைச் சாடுகின்றன. முத்தாய்ப்பான கவிதையின் கடைசிப் பத்தி…

 

        தொய்வுற நடந்த

        அந்த ஓவியக் கண்காட்சி முடிவுறும் நாளில்

        ஒரு சுவாரஸ்யத்திற்காகத்தான் தான்

        தன் கட்டை விரலை வெட்டி

        காட்சிக்கு வைத்திருந்தான்

        தூரிகையாளன்.

 

என்ற படிமம் குரூரம் காட்டி அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறாக இவரது கவிதைகளில் பல நயங்கள் ரசிக்கத்தக்கன.

Series Navigationகொக்குகள் பூக்கும் மரம்பேரழகி
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    //தொய்வுற நடந்த / அந்த ஓவியக் கண்காட்சி முடிவுறும் நாளில் / ஒரு சுவாரஸ்யத்திற்காகத்தான் தான் / தன் கட்டை விரலை வெட்டி / காட்சிக்கு வைத்திருந்தான் / தூரிகையாளன்.// என்ற வரிகள், என்றுமே கலைஞன் தன் உயிரைக் கொடுத்துத்தான் தொழில் செய்யவேண்டி யிருக்கிறது என்ற அவலத்தைச் சுட்டுகிறதோ? – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *