சூறாவளியின் பாடல்

This entry is part 26 of 33 in the series 19 மே 2013

 

 

பலம் பொருந்திய

பாடலொன்றைச் சுமந்த காற்று

அங்குமிங்குமாக அலைகிறது

 

இறக்கி வைக்கச் சாத்தியமான

எதையும் காணவியலாமல்

மலைகளின் முதுகுகளிலும்

மேகங்களினிடையிலும்

வனங்களின் கூரைகளிலும்

நின்று நின்று தேடுகிறது

 

சமுத்திரவெளிகளிலும்

சந்தைத் தெருக்களிலும்

சுற்றித்திரிய நேரிடும்போது

இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்

பொத்திக்கொள்கிறது பாடலை

 

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்

காத்துக்கொள்ளப்படும்

இசை செறிந்த பாடல்

சலித்துக் கொள்கிறது

ஓய்வின்றிய அலைச்சலின்

எல்லை எதுவென்றறியாது

 

தனிமைப்பட்டதை

இறுதியிலுணர்ந்தது

தெளிந்த நீர் சலசலக்கும்

ஓரெழில் ஆற்றங்கரை

மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து

வெளிக்கசிந்து பிறந்த நாதம்

 

இருளுக்குள் விசித்தழும்

பாடலின் கண்கள் துடைக்கும் காற்று

அதைச் சில கணங்கள்

அந்தரத்தில் நின்று

பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி

ஆவேசத்தோடு கீழிறங்கும்

 

பின்னர் பாடலை அழ வைத்த

காரணம் வினவி

தான் காணும்

வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென

அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி

அடித்துச் சாய்க்கும்

 

இயலாமையோடு எல்லாம்

பார்த்திருக்கும் பாடல்

இறுதியில் கீழிறங்கி

எஞ்சிய உயிர்களின்

உதடுகளில் ஒப்பாரியாகி

கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

 

காலம்

இன்னுமோர் பாடலை

காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

 

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationபிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) 7.​தோல்விக​ளைக் கண்டு துவளாத ஏ​ழை………..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *