டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6

This entry is part 15 of 33 in the series 19 மே 2013

டாக்டர்……என் அம்மாவுக்கு என்னாச்சு? இன்னியோட நாலு நாட்கள் போயாச்சு…இன்னும் .ட்ரிப்ஸ்ல தான் இருக்காங்க..எம்.ஆர்.ஐ. ரிசுல்ட் கூட வந்தாச்சு…எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு டாக்டர்….ப்ளீஸ் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்திடுங்கோ  என்று  கண்களில் கண்ணீர்  ததும்ப சொல்கிறான்  பிரசாத்.

அவங்களுக்கு டைப் 2 டயாபடிஸ் , இரத்தக் கொதிப்பு, தைராயிட் எல்லாமே இருக்கறதா டெஸ்ட்ல தெரியுது. இப்போ ப்ளட் கிளாட் வேற…சுகர் லெவல் கொஞ்சம் கன்ட்ரோல் வந்து இப்போ தரும் இந்த ட்ரீட்மென்ட்ல அவங்களுக்கு  குணமாகலைன்னா ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்…எதுக்கும் இன்னும் 24 மணி நேரம் பார்க்கலாம்…நம்ம கையில எதுவும் இல்லை…கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்…கவலைப் படாதீங்க மிஸ்டர் பிரசாத், உங்கம்மா சீக்கிரமா குணமாகிடுவாங்க ..என்று சொல்லி விட்டுத் தன்னுடைய ஸ்டெதஸ் கோப்பை கழுத்தில் மாட்டிக் கொண்டே நடந்தார்  டாக்டர்.

ஆனால் விதி வேறு விதமாய் விளையாடியது  !

அவர் கொடுத்த கெடு தாண்டவில்லை…அதற்குள்ளாகவே அமைதியாக உறக்கத்திலேயே இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து பிரசாத்தை அனாதையாக்கி விட்டுப் போய்விட்டாள்….அவனது  அருமை அம்மா.

செய்வதறியாது திகைத்து நின்றவன் உயிரின் உத்தரவாதமில்லாத நிலைமையை நினைத்து வெடித்து விடும் போலிருந்த இதயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கதறினான். டாக்டர் எழுதிக் கொடுத்த “மூளைச்சாவு” என்ற ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு…. பிரசாத் நடை பிணமானான்.

நண்பர்கள், உறவுகள் என்று கூட இருந்தவர்களால் மனத்தைத் திடம் செய்து கொண்டு அம்மாவின் ஈமக் கிரியைகளை முடித்து வைத்தான். …அம்மா கடைசியாப் பேசின பேச்சு.., அம்மா கடைசியா தனக்குப் பரிமாறிய இட்டிலி  என்று அதையே சுற்றி சுற்றி நினைத்துக் கொண்டிருந்த பிரசாத்…ஆச்சு…என்னோட இருபத்தாறு வயசில் நான் முழுசா அனாதையா ஆயாச்சு…இப்போ எனக்கு யார் இருக்கா? நான் யாருக்காக வாழணும் ?இனிமேல் யார் என் வாழ்கையைப் பார்த்து சந்தோஷப் படப் போறா…..? விரக்தியின் உச்சத்தில் பசியோ உறக்கமோ தன்னை பாதிக்காமல் படுத்த படுக்கையில் வெறுமையில் கிடந்தான் பிரசாத். வீட்டு விளக்கு அணைந்து போய் இருட்டாகி வெறிச்சென்று கிடந்தது அவன் மனதைப் போலவே.
அம்மா….என்ற ஒரு ஜீவன் இல்லாதது அந்த வீட்டை ஒரு வெற்றிடமாக மாற்றி இருந்தது.

ஸார் ….போஸ்ட்….! போஸ்ட்மேனின் குரல் கனமாக அழைக்கவும்…

எழுந்திருக்க மனமில்லாமல் எழுந்து வந்து கதவருகில் சொருகி வைத்திருந்த அந்தக் கவரைப் பார்த்ததும்….விரக்தியில் வேதனைச் சிரிப்பு எழுந்தது.

‘ஈஸ்வரன், சென்னை.’..என்ற வரியைப் படித்த மாத்திரத்தில் கைகள் பர பரக்க கவரைப் பிரித்தான் பிரசாத்.

ஈஸ்வரன், அவர் எழுதிய இறுதிக் கடிதம் இது என்றோ..இதை போஸ்டில் சேர்த்த கையோடு அவரும் போய் சேர்ந்துவிட்டார் என்றோ அறிந்திராத பிரசாத்….அன்னிக்கே வந்திருக்கலாம் இந்தக் கடிதம்….காலம் தாழ்த்தி வந்திருக்கு…ஒரு விதத்தில் அம்மாவின் இறுதிக் குழப்பத்திற்கு இந்த பதில் கடிதமும் ஒரு காரணம் தான். அன்னிக்கு அம்மா வீடு தேடி வந்த போது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் வார்த்தையால் விரட்டி விட்டீர்கள்….அம்மா எவ்வளவு வருத்தப் பட்டா….இனிமேல் நீங்களே வருந்தி வருந்தி அழைச்சால் கூட அவங்க உங்க வீட்டுக்கு வர மாட்டாங்க. இதுக்காகத்தான்  அவங்க உயிரையே விட்டுட்டாங்களோ என்னவோ..மனதில் எண்ணியபடியே உள்ளிருந்த கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான் பிரசாத்.

அன்புள்ள பிரசாத்துக்கு,

உங்கள் அன்பான  கடிதம் படித்தேன். மகிழ்ச்சி. என்னால் தான் உடனே பதில் எழுத முடியவில்லை. தவறாக நினைக்காதீர்கள்.

அன்று நீங்கள் உங்கள் அம்மாவுடன் என் வீடு தேடி வந்திருந்த போது , என்னால் உங்களிடம் முகம் கொடுத்துச் சரியாகப் பேச முடியவில்லை. அதற்கான காரணமும் சூழ்நிலையும் உண்டு. அதனால் தான் வேண்டு மென்றே நான் அப்படிப் பேசி நடந்து கொண்டேன் உங்கள் மனம் புண்பட்டிருக்கும் என்று எனக்குத் தெரியும் இருந்தும்  வேறு வழியில்லை..நான் அப்படிப் பேசியும் நீங்கள் ஊருக்குச் சென்று எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறீர்கள்….அதைக் கண்டதும் என் மனம் மிகவும் வேதனைப் பட்டது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதம் முன்னாலேயே வந்திருந்தால் ஒரு வேளை நிலைமை மாறியிருக்கும். உங்கள் எண்ணத்தைச் சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டது ஆச்சரியம் தான்.

என் மகள் கௌரியை நாங்கள் மிகவும் செல்லமாக வளர்த்து விட்டோம். அவள் போகும் இடத்தில் அவளது அருமை, பெருமையைப் புரிந்து கொண்டு அவளை மகளாக ஏற்கும் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எங்கள் மனதில் இருந்தது.

இல்லறத் தராசில் கௌரிக்கு அன்பு மட்டும் தான் எடைக்கல். பணத்தாசை இருக்கும் இடத்தில் அன்பு விலைபோகாது. அதனால் தான் நான் கௌரிக்கு டௌரி தர மாட்டேன் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன்.

பணத்தைப் பிரதானமாக நினைப்பவர்களை எங்களால் எளிமையாக விலக்கி விட முடியும் என்ற எண்ணம் எங்களது இந்த முடிவில் ஒளிந்து கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம்.

சென்ற வாரம் தான் கார்த்திக் என்பவர் கௌரியை வந்து பெண் பார்த்து விட்டுப் போனார்கள். ஒருவருக்கொருவர் மனசுக்குப் பிடித்த நிலையில், கெளரிக்கும் பூரண சம்மதம் என்று அறிந்த பிறகு என்னால் உங்களிடம் சகஜமாக பேச முடியவில்லை.இந்த வர்ண உள்ளூர் என்பதில் எனக்கும் சித்ராவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி.

நீங்கள் வந்து பெண் பார்த்து விட்டு, பிடித்தது என்று சொன்னதும் உங்கள் அம்மா கேட்ட சீர் செனத்தி, வரதட்சணை என்று எழுந்த பேச்சில் எனது முழு நம்பிக்கையும் போய் விட்டது.

மேலும் உங்களிடம் இருந்தும் இந்த ஒரு வருடத்தில் ஒரு பதிலும் வரவில்லை. திடுமென்று மறுபடியும் வந்து நின்றால் யாருக்குத் தான் கோபம் வராது..? என் கோபத்தில் நியாயம் இருக்கிறது. என்ன தான் இருந்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்குத் தான் நடைமுறையில் அதிக ரோஷம் இருக்கும்.

ஒரு குடும்பத்துக்குள் பணம் அளவாகவும் பாசம் அளவுக்கதிகமாகவும் இருக்க வேண்டும்.பொறாமையும், சந்தேகமும் இருக்கவே கூடாது. அப்படிப் பரஸ்பர நம்பிக்கையில் உண்டாகும் இல்லறம் மட்டுமே இறுதி வரைக்கும் நிலைக்கும். உங்களை வேண்டாம் என்று நான் ஒதுக்க வில்லை. ஆனாலும் உங்களைப் பிடித்திருந்தும், எனது  மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். மன்னிக்கவும்.

தனக்கென்று இது வேண்டும் அது வேண்டும் என்று எதுவுமே கேட்காத என் மகள் ஆசைப்பட்டபடி சென்ற வாரம் பார்த்தவரையே பேசி முடித்து திருமணம் செய்து வைக்கும் முடிவில் நாங்கள் இப்போது இருக்கிறோம். இது தான் இறைவன் செயல்.நீங்கள் எழுதியது போல, எதுவுமே முடிவு இல்லை. ஆரம்பம் என்று என்னால் எழுத முடியாது.புரிந்து கொள்ளவும்.நீங்கள் செய்த தாமதம் தான் உங்களுக்கு இப்படி ஒரு முடிவைத் தேடி தந்திருக்கிறது. இனிமேலாவது அந்தந்த நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை தக்க சமயத்தில் எடுத்து செயல் படவும்.

யாருக்காகவும், எதற்காகவும் காலம் காத்திருக்காது.

இந்தக் கடிதத்திற்கு பதில் போட வேண்டாம். அப்படியே மரியாதை நிமித்தம் நீங்கள் பதில் போட்டாலும் இனிமேல் என்னிடமிருந்து உங்களுக்கு கடிதம் வராது.

நமக்குள் நடக்கும் இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் எதுவும் என் வீட்டில் கௌரிக்கோ , அவளது அம்மாவுக்கோ தெரியாது..(காரணமாகத்தான்).உங்களுக்கும் ஒரு நல்ல மனைவி அமைவாள்.

உங்களுக்கு எனது ஆசிகள்,

பிரியமுள்ள
ஈஸ்வரன்.

பி.கு:

உங்கள் புகைப்படத்தை திருப்பி அனுப்பியுள்ளேன்.

கடிதத்தைப் பொறுமையாகப் படித்த பிரசாத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏற்கனவே நைந்து போயிருந்த அவனது இதயத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழிந்து போனது போலிருந்தது.

மீண்டும் மீண்டும் படித்துவிட்டு கடிதத்தை பத்திரப் படுத்தினான். அழுகை முட்டிக் கொண்டு வந்தது…அதை மறைக்க வீட்டை விட்டு வெ ளியேறினான் . ஒரு விதத்தில் பதில் வந்ததே என்ற நிம்மதியும் இன்னொரு புறத்தில் இனி எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாரே என்றும் இருந்தது.

சரி, போகட்டும்….அம்மாவும் போயாச்சு….கௌரியும் கைவிட்டுப் போயாச்சு…இத்தனை எழுதிய பின்பு மீண்டும் அவர்களுக்கு கடிதம் எழுதி தொல்லை தரக் கூடாது. என்று தீர்மானித்தான்.

0  0  0  0  0  0  0  0  0

மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு வந்த சித்ராவும், கௌரியும்,அந்த வீட்டில் சோகத்தோடு  வளைய வந்து கொண்டிருந்தனர். அடிக்கடி பேச்சும் சிரிப்பும் களிப்புமாக இருந்த வீடு ஈஸ்வரன் போன பிறகு வீடே கனத்த மௌனத்தில் தியானம் செய்து கொண்டிருந்தது போலிருந்தது.

சரி…ஆனது ஆயாச்சு…..போனவர் போயாச்சு…..மாசம் ஓடறது…..நீயா சொல்லுவேன்னு பார்த்தேன்….சுபஷ்ய சீக்கிரம்னு சொல்லுவா…உன்னோட அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத் தான் நானும் இப்போ நினைச்சுப் பார்க்கணும். உன்னோட கல்யாணம் தான் இப்போ பிரதானம். இந்த வருஷத்துக்குள்ள செய்யலாம்னு  வாத்தியார் தான் சொன்னார். நல்ல விஷயத்தை ஒத்தி வைக்காதேங்கோன்ன்னும்  சொல்லிட்டுப் போனார். நல்லவேளையா அப்பாவோட பணம் கூட எல்லாம் கைல வந்தாச்சு. அதனால செலவுக்குக் கவலையில்லை.நீ அந்தக் கார்த்திக்கிடம் ஏதாவது பேசினியா? எனக்கு உன்னோட அப்பா சொல்லித் தான் விஷயம் தெரியும். என்கிட்டே நீ இப்ப எதையும் மறைக்காதே கௌரி.  மகளைப் பார்த்து அவளது கல்யாணப் பேச்சை எடுக்கிறாள் சித்ரா.ஆமா அன்னிக்கு அவரோட ஒரு பொண்ணு வந்தாளே…அவள் யாராக்கும்? அவளைப் பத்தி அவர் ஏதாவது சொன்னாரா? நீ கேட்டியோ…?

ம்ம்ம்…..அவள் லாவண்யா..அவரோட மாமா பெண்ணாம்….அவளுக்கு வேற இடத்தில் நிச்சயமாயாச்சாம்.சும்மாக் கூட வந்திருக்கா…நீ கேள்விப் பட்டது சரி தான். நேக்கு தான் நீயும் அப்பாவும் சேர்ந்துண்டு அந்த டெல்லிக் காரர் மறுபடியும் வந்துட்டுப் போன விஷயத்தை மறைச்சுட்டேள்ன்னு வருத்தமா இருக்கு.அவரோட லெட்டரைப்  படித்ததனால தெரிஞ்சது..இல்லாட்டி…அவராலத் தான் அன்னிக்கு அப்பா இப்படி கோரமா செத்துப் போனார்…இல்லையா..? அப்பறம் பாரேன் அவாட்ட இருந்து ஒருலெட்டரும் வரலை….எல்லாம் நடிப்பு. நீண்ட நாட்கள் கழித்து கௌரி எதார்த்தமாகப் பேசுவதைக் கேட்க சித்ராவுக்கு நிம்மதியாயிற்று.

சரிம்மா…நான் கார்திட்ட இன்னைக்கு பேசிடறேன்…..பேசிட்டு சொல்றேன்…சொல்லிவிட்டு தன அறைக்குள் நுழைந்து கொண்டாள் கௌரி.

கார்த்தி….நான் தான்..நீ இப்போ  ஃ ப்ரீயா இருக்கியா? உன்கிட்ட கொஞ்சம் நம்ம விஷயமா பேசணும்….!

ம்ம்ம்ம்… நான் உனக்காக எப்பவும் ஃ ப்ரீ தான்…நீ என்கிட்டே இந்தக் கேள்வியே கேட்க வேண்டாம்…கௌரி..கேரி ஆன்…!

என்னமோ…அம்மா இப்போ நம்ம கல்யாணம் பத்தி கேட்கிறா…..!  நான் என்ன சொல்ல ? நீ என்ன சொல்ற? உங்கம்மாட்ட பேசியாச்சா? கொஞ்சம் பேசிப் பாரேன்…ப்ளீஸ்…அப்பறம் நான் அன்னிக்கு சொன்னதெல்லாம் நினைவு இருக்குல்லியா? மை கண்டிஷன்ஸ்..

அந்த டென் கமாண்ட்மெண்ட்ஸ் தானே….டன் …டன் …கௌரி…!

இப்போ நான் அதிலேர்ந்து ஒண்ணு  கேட்டா சொல்லுவியா?  சும்மாத் தலையைத் தலையை ஆட்டிட்டு மறந்துட்டேன்னு சொல்லுவியா?

மறந்துட்டேன்னு சொன்னா நீ திரும்ப சொல்லித் தர மாட்டியா என்ன? அந்த தைரியம் தான்.

அதெல்லாம் மறுபடியும் சொல்ல மாட்டேன்..கோல்டன் கண்டிஷன்ஸ் ஆர் நாட் ரிபீட்டெட் …..என்று லேசாகச் சிரிக்கிறாள்.

நீயே வெச்சுக்கோ….! என்றவன்…நான் அம்மாட்ட இன்னைக்கு பேசறேன்..சம்மதிச்சா சரி…இல்லாட்டா நீ என்ன சொல்றியோ அப்படி…ஒ கேயா….? அதான்….ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா??ன்னு ராகம் பாடுகிறான்.

ஷட் அப்….சீரியஸா பேசும் போது காமெடி பண்ணாதே காரத்திக் …..பீ  அலர்ட் டா…கண்ணா..! சரிடா…குட் நைட்…நல்ல பதிலா சொல்லுடா…நைட் எத்தனை நேரமானாலும் பரவாயில்லை….ஐ வில் பி வெய்டிங் .

ம்ம்ம்ம்…சரிடி…..சாரிடி……கேட்டுட்டு சொல்றேன்….தூங்கிடாதே….கௌரி.

தூங்கமாட்டேன்……காத்துண்டு இருப்பேன்.,என்று சொல்லிவிட்டு கைபேசியை மூடுகிறாள் கௌரி.

அம்மாவிடம் இப்போ எதையும்  சொல்ல வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாள்…! மனம்,  அப்பா எனக்கு எது நல்லதோ அதை நீங்க தான் செய்து வைக்கணும் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டது.

0   0   0   0    0   0   0    0   0   0   0   0

டி வி சீரியலில் தன்னை மறந்து மூழ்கிப் போயிருந்த கல்யாணியின் அருகில் வந்து உட்கார்ந்தபடி……மா……அப்

படி என்ன தான்மா இருக்கு அந்த சீரியல்ல..”? என்று பீடிகை போட்டபடி கேட்கிறான் கார்த்திக்.நாளிதழில் “சொடுகு” போட்டுக் கொண்டிருந்த அவனது அப்பா நிமிர்ந்து பார்த்து வேறென்ன….புதுசா சொல்லிடப் போறா…? நான் சொல்லட்டுமா…? என்று கேட்கவும்.

ஆமா….கண்ணு அங்க காது இங்கயா? உங்களால் ஒரு வேலையைக்  கூட  உருப்படியாச் செய்ய முடியாதே…..எல்லாத்துலயும் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் தானா? எவ்வளவு நன்னா எடுத்திருக்கான் இந்த சீரியலை…சும்மாச் சொல்லக் கூடாது…நீங்க பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

இது மாதிரி கண்ட கண்ட சீரியலைப் பார்த்துட்டு தான் நீயும் இல்லாத்த வேஷமெல்லாம் காட்டறே…..இல்லாட்டா நோக்கெங்கே இவ்வளவு சாமர்த்தியம் வந்தது..இந்த சீரியல் இருக்கே இது ஆத்துப் பொம்மனாட்டிகளை கெடுக்கறதுக்குன்னே வந்துருக்கு..தெரியுமா?

உலக நடப்பையாக்கும் காட்டித் தரா . அவாள்ளாம் . இல்லாட்டா இந்தக் காலத்து பொண்கள் எப்படிப் பட்டவான்னு நமக்குத் தெரியாமல் போயிடுமாக்கும். கல்யாணமே ஆகலை அதுக்குள்ளே ரெண்டு பேரும் ஊர் ஊராச் சுத்தறா ….அம்மா அப்பாக்கு தெரியப் படுத்தாமலே தனியா ஃபிளாட் ஒண்ணு வாங்கிக்கறா , எல்லாம் வேலைக்குப் போயி சம்பாதிக்கிறத் திமிரு….அதுக்குன்னு பெரியவாளை மதிக்க வேண்டாமா? நிஜத்திலும் அப்படித் தானே இருக்கு.

அன்னிக்குப் பார்த்தோமே….அந்த கௌரியோட லட்சணத்தை. நிஜத்தைப் பார்த்துத் தான் சீரியலே எடுக்கறா..இந்த சீரியல் முழுக்க முழுக்க அந்த கௌரி மாதிரி இருக்கப் பட்ட பொண்ணோட கதையாக்கும் என்று தன கணவரைப் பார்த்து சொல்கிறாள் கல்யாணி.

இப்போ எதுக்கும்மா கௌரியை இங்கே இழுக்கறே….என்று சொன்ன கார்த்திக்…நான் பேச வந்த சமயமே  சரியில்லை என்று முனகிக் கொண்டே  ஏமாற்றத்தோடு லேசாக அங்கிருந்து நழுவுகிறான் கார்த்திக்.

டேய்…கார்த்தி “அம்மாட்ட ஏதோ சொல்ல வந்தியே….சொல்லேன்”..என்று அவனைச் சீண்டுகிறார் அவனோட அப்பா.

நோ…டாட்….நாட் நௌ ..! என்று திரும்புகிறான்.

கல்யாணி….லாவண்யாவோட  கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு…மதுரைக்குப் போக எல்லாம் ரெடி பண்ணியாச்சா நீ? இல்லாட்டா கடைசி நேரத்துல எனக்கு ஜாக்கெட் சின்னதாயிடுத்து போட்டால் பத்தலைன்னு ஒப்பாரி வெப்பியா? ம்ம்ம்..இல்ல..இல்ல …நீ அப்படிப் பாக்காதே…..வழக்கமா நம்மாத்துல இது நடக்கறது தானே..கொஞ்சம் முன்னாடியே ஞாபகப் படுத்தலாம்னு பார்த்தேன்.

அதெல்லாம் என்னோட டிபார்ட்மெண்ட்…நான் பார்த்துக்கறேன்…கல்யாணத்துக்கு மொய் எழுதறது மட்டும் தான் உங்க டிபார்ட்மெண்ட்…அதை பெர்ஃபெக்டாப்  பார்த்துக்கோங்கோ அது போதும் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனசுக்குள் ஏகத்துக்குக் கோபமும், பொறாமையும் முட்டிக் கொண்டு வந்தது.

எப்படியாவது நானும் இந்த கார்த்திக்கு சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணியாகணும்னு தலை கீழா நிக்கறேன்….ஒரு நல்ல அலையன்ஸ் கூட தகைய மாட்டேங்கறது. யாரைப் பாரு பிள்ள ஜாதகம் தான் இருக்கு..பெண்கள் ஜாதகமே இல்லைங்கறா . நானும் எத்தனை இடத்தில் பதிஞ்சுட்டு வந்தாச்சு. இவனுக்கு மேட்சா ஒண்ணு கூட அமையலை. இது இருந்தால் அது இல்லை…அது இருந்தால் இது இல்லைன்னு பல்லாங்குழியாட்டம் தான். திடம்,மணம் ,ருசி ன்னு த்ரீ ரோஸஸ் விளம்பரம் மாதிரியா கல்யாணம்?

போன வாரம் ஜானகி மாமியாத்துக்கு போயிருந்த போது  பேசிண்டு இருந்தேன்…என்ன சொன்னா தெரியுமா?  எதோ கிடைச்ச பொண் ணைப் பார்த்து தாலியை கட்டச் சொல்லுடி கல்யாணி…இனி வர காலத்தில் பெண்கள் எல்லாருமே என்ககேஜுடு தான்…பாதிக்கு மேலே காதல் கல்யாணம் தான். அதுலயும் கலப்பு கல்யாணம் வேற…பெத்தவா வாயே திறக்கப் படாது….சரி சரி ன்னு போயிட்டால் மரியாதை..இல்லாட்டா குடிக்க கஞ்சி கூடக் கிடையாது ஆமா…சொல்லிட்டேன்னு சொன்னாள் .

அந்த மாமி சொன்னா அது நிஜமாத் தான் இருக்கும்…உலகம் தெரிஞ்சவா….அதையும் விட நீயும் தான் பார்க்கறியே…உன் அனுபவம் என்ன சொல்றது..?

அந்த மாமி சொல்றது சரின்னு தான்  நேக்கும் மனசுக்குப் படறதுன்னா…நானும் இந்த ரெண்டு மாசத்துல எத்தனை வரன்கள் பார்த்தாச்சு, எத்தனை திருமணத் தகவல் நிலையத்தில் பதிஞ்சு பார்த்தாச்சு..எல்லாம் பணத்துக்கு பிடிச்ச கேடு…கண்துடைப்பு தான் எதுவுமே மனசுக்குப் பிடிக்கலைன்னா…..பேசாம வந்த வரனை நழுவ விடாமல் அந்த கௌரியை நம்ம கார்த்திக்கு கல்யாணம் பண்ணிடலாம்……அது தான் புத்திசாலித் தனம்….நான் தோத்துப் போயிட்டேன்..ஒத்துக்கறேன்…ஆனால் சுமதிக்கு முன்னாடி நான்  ஜெயிச்சுட்டேனாக்கும்.

அடி கல்யானை…..! இப்பத்தான் நீ ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கே..என்று கொஞ்சலாகச் சொன்ன கணவனைப் பார்த்து…

நேக்கு இதை விட்டா வேற வழியே தெரியலை…அதான்..என்று உதட்டை பிதுக்குகிறாள் கல்யாணி.

நீ சரவணன் மீனாட்சி பார்த்து பார்த்து ரொம்பக் கேட்டுப் போயிட்டே….எங்களை இந்த பவர்கட்டு தான் காப்பாத்தணம்…என்றவர்
இதற்காகவே காத்திருந்தார்ப் போல “டேய்…கார்த்தி…..ஓடி வா…ஓடி வா….உன் அம்மாவோட முடிவைக் கேளு…சந்தோஷப் படுவே…என்று சத்தமாக மகனை அழைக்கிறார் அப்பா.

வாட்….டாட்…….ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க….மழை தருமோ வெண்மேகம்…..மயங்குதம்மா உள்ளங்கள் யாவும்….என்று எஃப் எம் ரேடியோவோடு கூடவே  பாடிக் கொண்டு  வருகிறான் கார்த்திக்.

கடைசில உங்கம்மா உன் வழிக்கே வந்துட்டாடா…..அதான் அந்த கௌரியை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சுட்டாளாக்கும் …என்று சத்தமாகச் சொல்கிறார்.

போதுமே…பிள்ளையில்லாத வீட்டில் யாரோ துள்ளித்  துள்ளி விளையாடினாளாம்…..எதுக்கு இப்போ இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றேள்? கல்யாணி கோபத்தோடு தன் கணவனை முறைத்துப் பார்க்கிறாள்.

என்னம்மா சொல்றா….அப்பா…நிஜம்மாவா….நீ….நீ….அந்த கௌரியை எனக்குத் தலைல கட்ட சம்மதிச்சுட்டியா…? நீ மாட்டேன்னு சொல்ற தைரியத்துல தான் நான் இங்க நிம்மதியா இருக்கேன்…உனக்கு அவளைப் பிடிக்கலைன்னு தெரிஞ்சதுமே எனக்கும் அவளைப் பிடிக்காமல் போயிடுத்து….தெரியுமா? எனக்கு நீ ஒரு நல்ல பொண்ணாப்  பாரு…அவ பி.ஈ முடிச்சு டி சி எஸ் ல வேலை பார்க்கிறவளா , நல்ல சிகப்பா, த்ரிஷா மாதிரி ஸ்லிம்மா அழகா….ஸ்டைலா , நிறைய இங்க்லீஷ் பேசறவளா …..இன்னொண்ணு  அவளுக்கு ஹிந்தி கூட பேசத் தெரிஞ்சிருக்கணம்….எல்லாத்துக்கும் மேல உன்னோட சீர் செனத்தி டௌரி அப்பறம் கிராண்டா கல்யாணம் இதெல்லாம் பண்றா மாதிரி ஒரு பார்ட்டியைப் பிடி…எனக்கு இப்படி இருந்தால் டபுள் ஒகே. இந்த குண்டுச் சட்டி கௌரி எனக்கு வேண்டாம்மா…என்று சொல்லிவிட்டு அப்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்..அவன் மனது …”இப்பப் பார்க்கலாம் ஆட்டத்தை” என்று நாடகத்துக்கு தயாரானது.

என்னடா சொல்றே கார்த்தி நீ…..! நீ சொல்றாப்பல எல்லாம் என்னால பொண்ணு  தேட முடியாது..பெண் என்ன மோர் சூப்பர் மார்க்கெட்டுலயா  கிடைக்கிறா. திரிஷா மாதிரி பொண்ணு வேணுமாம்….நல்ல கதை தான் போ….என்னை என்ன அம்மான்னு நினைச்சியா….இல்லாட்டி….! எனக்கு வர ஆத்திரத்துல உனக்கு கௌரியே ஜாஸ்தி …..அதைப் புரிஞ்சுக்கோ . அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

அம்மா…எனக்கு இந்த ஜாதி கீதி எல்லாம் பார்க்கத் தேவையில்லையாக்கும்…..என் ஆபீஸ்ல நான் சொல்ற அதே மாதிரி பொண்ணு ரொம்ப நாளா என் கிட்ட ப்ரபோஸ் பண்ணீண்டு தான் இருக்கா….ஆனால் என்ன அவள்  மதம் வேற…பட்  நேக்கு ஒகே…..! கிளாரா கிளாடிஸ்..!பேரெல்லாம் நன்னாப் பொருந்தும்….என்று சொல்லிவிட்டு அப்பா சரியா என்பது போலத் தலையை ஆட்டுகிறான்….

அவரோ ..!

எனக்கும் டபுள் ஒகே….! என்று சொல்லிவிட்டு மெல்ல நழுவுகிறார்.

உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு என்ன இளகறது ? என்னைப் பார்த்தால் முட்டாள் பட்டண மகாராணியாட்டமா தோணறதா? பிச்சுப் புடுவேன் பிச்சு…! அவன் என்னடான்னா கிளாஸு டபராங்கரான் …..உங்களுக்கு டபுள் ஒகேயா…?   உன்னோட இந்த வாய்க்கு ஏத்தவள்…அந்தப் பொண்ணு கௌரி தாண்டா….நீ என்னைக் கூட ஏய்ச்சுடுவே…! நாளைக்கே நான் அவாத்தில் போயி துக்கம் விசாரிச்சுட்டு மேற்கொண்டு பேசிட்டு வரப் போறேன் பாரு என்று அதிகாரமாகச் சொல்கிறாள் கல்யாணி.

மனசுக்குள் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் எனக்கு இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம்மா…என்னை ஆளை விடும்மா .என்று சொல்கிறான் கார்த்திக்.

நீ சும்மாருடா…..நோக்கு ஒரு மண்ணும் தெரியாது. எல்லாம் நான் பார்த்துக்கறேன்….என்ற கல்யாணி “நான் ஸ்வாமிகிட்ட பூக் கட்டிப் போட்டு எடுத்துப் பார்த்தாச்சு…கௌரி தான் இந்தாத்து மருமாள்  …..அடுத்த மாசத்து முஹுர்த்தத்தில் கல்யாணம்…யாரும் மூச்சுக் காட்டப் படாது…..என்று விரலை வாயில் வைத்துக் காண்பித்து சொல்லிவிட்டு புடவைத் தலைப்பை உதறி  செருகிக் கொண்டு அறைக்குள் சென்று மறைகிறாள்.

(தொடரும்)

Series Navigationஎச‌க்கிய‌ம்ம‌ன்வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  பிரச்சாத் ஈஸ்வரனின் கடிதத்தைப் படித்தபின் அவனின் பெண்பார்க்கும் படலம் முடிந்ததா? அல்லது வேறு ஏதும் அதிர்ச்சி காத்துள்ளதா? இது முதல் கேள்வி. காரணம் இல்லாமல் அந்த கடிதம் இங்கு கொண்டு வரப் பட்டிருக்காது.

  ஒரு வகையாக கல்யாணியும் கார்த்தி,கெளரி திருமணம் செய்வதற்கு சம்மதித்து விட்டாள் . இனி வேறு குழப்பம் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ” இரு மனம் கலந்தால் திருமணம் ” என்ற பாடலுடன் கதை முடியுமா? வாழ்த்துகள் ஜெயஸ்ரீ ஷங்கர்…டாக்டர் ஜி.ஜான்சன்.

 2. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  தங்களின் தொடர்ந்த/தொடரும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

  கணினி வேலை செய்யவில்லை….அதனால் என்னால் பதில் எழுத இயலவில்லை.

  நீங்கள் சொன்னது போல இரு மனம் இணைந்தால் திருமணம்…இது இனிமையானது தான். ஆனால் ஒரு பெண்ணின் வாழ்வில் இதெல்லாம் அவ்வளவு எளிமையாகக் கிடைத்து விடாதே…! கதை நீளும்..தயவு செய்து பொறுத்துக் கொண்டு படியுங்கள்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *