போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22

This entry is part 1 of 21 in the series 2 ஜூன் 2013

குளிர்காலம் என்பதால் கதிரவன் விடிந்து வெகு நேரம் கழித்தே தென்பட்டான். அன்று புகை-பனி மூட்டம் இல்லை. கம்பளி சால்வைகளைப் போர்த்தியபடி மன்னர் சுத்தோதனர், ராணி பஜாபதி கோதமி, நந்தா, ஆன்ந்தன், தேவதத்தன், அனிருத்தன், பல்லியன் பாண்டு அனைவரும் புத்தரின் குடிலின் வாயிலில் காத்திருந்தனர். புத்தர் தியானத்தில் இருந்தார். ராகுலன் மாங்காய்களைப் பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். சேவகர்களும் பொது மக்களும் நல்ல இடைவெளி விட்டுத் தோப்பெங்கும் நிறைந்திருந்தார்கள். புத்தர் குடிலை விட்டு சாந்தம் பூரணமாக வியாபித்திருந்த நிறைமுகத்துடன் வெளியே வந்தார். “வாருங்கள் மாமன்னரே” என்று இரு கரம் கூப்பிப் புன்னகையுடன் வரவேற்றார். மன்னர் மகாராணி, இளவரசர்கள் யாவரும் எழுந்து நின்றனர். மன்னரின் சகோதரர்களும் யசோதராவும் வராததை புத்தர் கவனித்ததாகத் தெரியவில்லை. காவிநிறக் கம்பளியும், காவி நிற வேட்டியும் எனக் கருணையே வடிவாகத் தென்பட்ட அவர் பாதங்களில் முதலில் மகாராணி, பின்னர் மகாராஜா என ஒவ்வொருவராக விழுந்து பணிந்தனர். மகாராணியின் மேலங்கியைப் பற்றிய படியே ராகுலன் அவரை ஆர்வத்துடன் பார்த்தான். தேவதத்தன் சமிக்ஞை செய்ய, புத்தர் அமர்வதற்கு, தந்த வேலைப்பாடுகளுடன் ஒரு ஆசனம் வந்தது. அதில் அவர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். சுத்தோதனர் மிகவும் போராடிக் கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.

மௌனம் பல நிமிடங்கள் நீடித்தது. மாங்குயில்கள், மயில்கள், பசுக்களின் சத்தம் மட்டும் கேட்டது. “நான் விளையாடுகிறேன்” என்னும் ராகுலன் குரலே நிசப்தத்தைக் கலைத்தது. அவன் ராணியின் மடியில் இருந்து எழுந்து ஓடினான். சேவகர்கள் அவன் மீது கவனமாயிருந்தாலும் யாரும் அவனைத் தடுக்கவில்லை. சுத்தோதனர் உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும்வரை புத்தர் காத்திருப்பதாகத் தோன்றியது.

முதலில் ராணி மௌனத்தைக் கலைத்தார் “புத்தரே. மகத நாடே தங்களை வணங்குகிறது. பிற தேசங்கள் தங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன. எல்லா தேசங்களிலும் பௌத்தத்தைத் தழுவ மக்கள் உங்கள் சீடர்கள் முன் கூடுகின்றனர். இருந்தாலும் தாங்கள் பிறந்த மண்ணான கபிலவாஸ்துவிலேயே தாங்கள் ராஜரிஷியாக இருக்கக் கருணை செய்ய வேண்டும். மாமன்னரின் விருப்பமும் அதுவே”

“சாக்கிய முனி என்றே தாங்கள் முதலில் அறியப் பட்டீர்கள். இங்கே தர்மம் தழைக்க எந்தத் தடையுமில்லை. பௌத்தம் என்னும் தர்மமும் கபிலவாஸ்துவின் ஆட்சியும் இரண்டுமே உங்கள் ராஜாங்கமாகவே நடக்கட்டும். இதில் எந்த ஆட்சேபணையும் தங்களுக்கு வேண்டாம். மாளிகையும் விருந்தும் நேற்றே தங்களுக்காகவும் சீடர்களுக்காகவும் தயாராயிருந்தன. தாங்கள் வந்து இறங்கியவுடன் சிரம பரிகாராத்துக்கெனவே இக்குடில்கள் அமைக்கப் பட்டன. உங்களை அழைத்துச் செல்ல ராஜ குடும்பமே இங்கே வந்துள்ளது. எனது தம்பிகளும் அவர்களது ராணிகளும் தங்களை வரவேற்க மாளிகை வாயிலில் காத்திருக்கின்றனர். ” என்றார் சுத்தோதனர்.

“அன்பை நிராகரிப்பது பௌத்தமில்லை” என்று தொடங்கினார் புத்தர் , “சீடர்களும் நானும் அவசியம் ஒரு நாள் அங்கேயே தங்குகிறோம். பிறகு தர்மம் தழைக்கும் முயற்சியில் மேற்கொண்டு பயணிப்போம்”

“புத்தரே. கபிலவாஸ்து உங்கள் நாடு” என்றார் சுத்தோதனர்.

புத்தர் எழுந்து ராகுலன் விளையாட்டாய்க் கொண்டு வந்து போட்டிருந்த மாங்காய்களுள் ஒன்றைக் கையில் எடுத்தார். “மாமன்னரே! இந்த மாங்காய்க்கும் மகதத்திலோ, கோசலத்திலோ, மல்ல தேசத்திலோ, காந்தாரத்திலோ விளையும் காய்களுக்கும் ருசியில் வேறுபாடு உண்டா?”

“இல்லை”

“மகாராணியாரே. நந்தாவுக்கும் சித்தார்த்தனுக்கும் தாங்கள் காட்டிய பாசத்தில் வேறுபாடு உண்டா?”

ராணி பஜாபதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன கேள்வி இது புத்தரே? இருவரும் என் இரு கண்கள். என்னைப் பொறுத்தவரை இருவரும் ஒருவரே”

“உண்மை தாயே. முற்றிலும் உண்மை. நீங்களும் மகாராஜாவும் நந்தா, சித்தார்த்தன் இவர்களோடு இணையாக ஆனந்தன், தேவதத்தன், அனிருத்தன், பல்லியன், பாண்டு அனைவரையும் நேசித்தீர்கள் தானே?”

“இதில் ஐயத்துக்கு இடமே இல்லை. என் பிள்ளைகள் , தம்பி பிள்ளைகள் என்னும் பேதமின்றி எல்லோரையும் நாங்கள் சொந்தப் பிள்ளைகளாகவே கருதுகிறோம்”

“உண்மை மகாராஜா. எதிரி நாடு படையெடுத்து வந்தால் கபிலவாஸ்துவில் உங்கள் குடிமக்களில் யாரைக் காப்பாற்றுவீர்கள்? உங்கள் குடும்பத்தையா? மந்திரிகளையா? அந்தணர்களையா? வைசியர் மற்ற குடிமக்கள் என யாரைக் காப்பாற்றுவீர்கள்?”

“சாக்கிய வம்சத்தைப் பற்றித் தாங்கள் அறியாதவை எது புத்தரே? அனைத்து மக்கள், பசுக்கள், எருதுகள், விளை நிலங்கள், கோயில்கள், விதைகள், தானியக் களஞ்சியங்கள், கலப்பைகள் இவை எதையுமே எதிரி அணுகாமல் முதலில் என் உயிரைப் பணயம் வைத்து வீரப் போரிட்டு என் முன்னோரின் புகழை நிலை நிறுத்துவேன்”

“இதையே தான் இந்த புத்தனும் செய்கிறான் மாமன்னரே. தன்னலமும், போகமும், ஆசையும் தாக்கித் தாக்குப் பிடிக்க இயலாமல் இடையறாத் துன்புறும் மனித குலம் முழுவதையும் பௌத்தம் காத்து நிற்க ஒரு கருவியாக செயற்படுகிறான் இந்த புத்தன். மகதமோ, கபிலவாஸ்துவோ நான்கு வருணத்தில் எந்தப் பிரிவோ, ஆணோ பெண்ணோ, குழந்தையோ அத்தனை பேருக்கும் தர்மம் என்னும் பாதையும் அதில் நிலை நிற்கும் சக்தியும் கட்டாயம் உண்டு என்னும் செய்தியை எல்லா திசைகளிலும் சொல்ல யத்தனிக்கிறான் இந்த புத்தன். அனைத்து உயிரும் நலமாய் வாழ நதியும் நிலமும் சூரியனும் தம் கடமையைச் செய்கின்றனர். ஆனால் இன்னொரு மனிதனின் நலம் பேணும் தனது தலையாய கடமையைச் செய்ய விடாது மற்றொருவனுக்குத் தீங்கு செய்யுமளவு மனிதனைப் பிணைத்துச் சிக்க வைக்கும் ஆசையை, பற்றை எதிர் கொள்ள பௌத்தம் துணை நிற்கும். தனிமனிதனாக ஒவ்வொருவராக தர்ம வழியில் நிற்காமல் பிசகி விடும் போது தர்மமே தோற்கிறது. அது வெல்ல வேண்டும். அதுவே வெல்லும். இந்தச் செய்தியை எட்டு திக்குகளிலும் சொல்ல இந்த புத்தனுக்குக் கடமையில்லையா மகாராஜா? ”

ராணி பஜாபதியின் அந்தப்புரத்தில் அவருடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள் யசோதரா. “நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தாயா யசோதரா?” என்றார் ராணி. கடுமையான குளிர் என்பதால் பகலிலேயே தீபங்கள் ஏற்றப் பட்டிருந்தன. பகலும் இரவும் கிட்டத்தட்ட ஒன்றான போது தனது வாழ்க்கையையே அது உருவகிப்பது போல இருந்தது யசோதராவுக்கு. “மனம் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலோ அல்லது துக்கத்திலோ இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நீ ஏன் இன்னொரு முறை யோசிக்கக் கூடாது?”

ராணியிடம் இருந்து மறுபடியும் அதே கேள்வி. கடந்த இரண்டு மாதங்களில் எவ்வளவு கேள்விகள்.

மன்னரின் அரண்மனையில் ராஜ குடும்பமும் மந்திரிகளும் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து புத்தருக்கு உணவு அளித்து வணங்கிய போது “நீ ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். என் மனமோ ” என்னை நள்ளிரவில் விட்டுச் சென்ற இடத்தில் என்னைக் காண ஏன் வரவில்லை?” என்று எதிர்க்கேள்வி கேட்டது. “அவர் வராமலேயே போய் விட்டால்?” என்று மற்றவர்தான் கேட்டார்கள். “வந்தால் என்ன வரம் கேட்பாய்?” என்று மனதினுள் இருந்த மனைவி கேட்டாள்.

வந்தார். எதையும் கேட்க நா எழவில்லை. பாதம் பணிந்து கண்ணீர் உகுத்தது மட்டுமே ஆறுதல். அவர் தமது ஞான வழியிலேயே உலகை உய்விக்கச் சென்று விட்டார். கேள்விகள் எப்போதும் ஒரு பெண்ணைப் பார்த்து மட்டும் தான் கேட்கப் படுகின்றன. ஆனந்தன், தேவதத்தன், அனிருத்தன், பல்லியன் இவர்களோடு நாவிதனான உபாலியும் பௌத்தத்தில் இணைந்தார்கள். ஏன் நந்தா பௌத்தம் தழுவி பிட்சுவாக தீட்சை கேட்டான். யாருமே வாய் திறக்கவில்லை. கேள்விகளுக்கு பயந்தே ஒரு பெண் எதையும் சிந்திக்கத் துணிவதில்லை.

மகாராணிக்கு யசோதராவின் மௌனங்கள் பழகியிருந்தன. ஆனால் யசோதரா இப்போது தன்னிடமாவது மனம் விட்டுப் பேசியே தீர வேண்டும். நேரம் கடந்து கொண்டே இருந்தது. குளிர் நாளில் மாலைக்குப் பிறகு புத்தர் தரிசனம் தருவதில்லை. திறந்தவெளியில் மக்கள் குளிரில் வாடியபடி தனது சொற்களைக் கேட்க சிரமப் படுவதை புத்தர் விரும்புவதில்லை.

ரதத்தில் ஏறிய பின்னும் யசோதரா மௌனமாகவே இருந்தாள். “மன்னரிடம் சொல்ல வேண்டாமா யசோதரா இதை?” என்றார் ராணி பஜாபதி கோதமி. “முதலில் புத்தர் என்ன விரும்புகிறார் என்று அவர் மனதை அறிவோம் அத்தை” என்றாள் யசோதரா. கோதமிக்கு மிகவும் நடுக்கமாக இருந்தது. தொண்ணுறையும் கடந்த மன்னருக்கு இதைக் கேட்கும் போது எவ்வளவு துன்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்?

புத்தரின் எதிரே ஒரு மூதாட்டி கைகூப்பி நின்றிருந்தார்.

“தாயே! தாங்கள் தமது மகனை உயிர்ப்பிக்கும் படி என்னைப் பணித்திருந்தீர்கள். மரணமே நிகழாத வீட்டிலிருந்து ஒரு கை எள் வாங்கி வரும்படி வேண்டினேன். தாங்கள் முயன்றீர்களா?”

“புத்தரே. எவ்வளவோ அலைந்தேன். அப்படி ஒரு வீடும் இருக்கவில்லை. என் மகனை தகனம் செய்து விட்டோம். இப்போது உங்களைத் தேடி வந்தது உயிர்ப்பிக்கும் வேண்டுகோளோடு அல்ல. தாளவே முடியாத இந்த துக்கத்துக்குத் தீர்வு என்ன? தாளமுடியவில்லை புத்தரே.” அந்தத்தாய் தரையில் அமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.

அவர் சற்றே நிதானத்துக்கு வந்த பின் புத்தர் “மரணம் நம் யாவர்க்கும் பொதுவென்று உணர்ந்தீர்களா தாயே?” அன்பான குரலில் வினவினார்.

“உணர்ந்தேன் புத்தரே. ஆனால் ஒரு தாயின் சோகம் அதனால் நீங்காது. ஞானத்தின் வடிவமான நீங்கள் ஏன் என் வேதனைக்கு மருந்து தரவில்லை?”

ஒரு இளைஞன் அருகில் சென்று புத்தர் நின்றார். “தாயே. இந்த இளைஞரைப் பார்த்தால் தங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?”

“என் மகன் போலவே இருக்கிறான்”

“மகன் போலத்தானா? மகனாகவே நினைக்க இயலாதா?”

“அது எப்படி இயலும் புத்தரே? இன்னொருவரின் மகனை என் மகனாக எப்படி நினைப்பது?”

“இந்த இளைஞனிடமும் இன்னும் சிறுவயதான பலரிடமும் உங்கள் மகனைக் காண உங்களால் இயலும். அவர்களது நலம் பேணும் தாயன்பைத் தாங்கள் அவர்கள் மீது பொழிய இயலும்”

“இந்த ஏழைக்குப் புரியும் படி சொல்லக்கூடாதா புத்தரே?”

‘உங்கள் மகன் உங்களை மட்டும்தான் நேசித்தாரா? தம் தந்தையை, சித்தியை, சித்தப்பாவை, சகோதர சகோதரி என்னும் உறவுகளையும் நேசித்தார் இல்லையா?”

“அவன் இனியவன் புத்தரே. நட்பு உறவு அனைவரிடமும் அன்பு காட்டியவன்”

“அவ்வாறெனின் அந்த மித்திர பந்துக்களுக்காக அவன் மனதில் கனவுகள் இருந்திருக்கும் இல்லையா?”

“கனவுகள் என்றால் என்ன பொருள் புத்தரே?”

“அவர்களின் வருங்காலம் சிறப்பாக அமையும் ஆசை. தன்னால் இயன்றதைச் செய்யும் கற்பனை. அதற்கான ஒரு முயற்சி இருந்திருக்கும் இல்லையா?”

“அவசியம் இருந்திருக்கும்”

“அந்த இளைஞனின் உடல் தான் அழிந்தது. அவனின் அன்பும் கனவுகளும் இன்னும் இருக்கின்றன. நீங்கள் அந்தக் கனவுகளின் பிரதிநிதியாக, அன்பைத் தருபவராக இருங்கள். துக்கத்தைச் சுமப்பவராக இல்லை”

“எவ்வாறு அது நிகழும் புத்தரே?”

“பிறர் நலம் பேணத் தங்க நாணயம், செல்வம் எதுவும் தேவையில்லை. அவர்களின் மீது உங்கள் மகன் வைத்த அன்பை அக்கறையை நீங்கள் அவனின் சார்பாக வெளிப்படுத்துங்கள் அது போதும்”

“புத்தரே சாதாரணமான ஒரு ஜீவன் நான். எனக்கும் அது சாத்தியமா?’

“ஒரு தாய் சக்தி வடிவம். ஒரு தாய்க்கு சாத்தியமாகாதது எதுவுமில்லை. உங்களின் அன்பு அதுவும் தாயன்பு என்றும் அழியாதது. அன்பை விரும்பாத – அன்பால் ஆறுதலடையாத உயிரோ மனிதரோ யாரும் இல்லை தாயே”

“என் துக்கம் ஆறவில்லையே புத்தரே” என்றார் விம்மும் குரலில்.

“நாளை காலை விழித்தெழும் போது எல்லா உயிரிலும் மனிதரிலும் என் அன்பு மகனைக் காண்பேன் என்று எண்ணி உறங்கச் செல்லுங்கள். துக்கத்துடன் அல்லாமல் அன்புமயமான – அன்பின் ஆனந்த சுருதி எங்கும் ஒலிக்கும் – உலகில் விழித்து எழுவீர்கள்”

அந்தத் தாய் விடை பெற்றார்.

ராணியும் யசோதராவும் புத்தர் பாதம் பணிந்தனர்.

“தங்களிடம் எனக்கு ஒரு பிரார்த்தனை புத்தரே” என்றாள் யசோதரா.

“கூறலாம். தடையில்லை”

“ராகுலனைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

“அவசியம் ஏற்கிறேன். பௌத்தம் அனைவரையும் அரவணைக்கும்”

Series Navigationசீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *