தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
நிர்மலாவின் மரணம் சாஹிதியிடம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் அது வெளியில் தெரியக் கூடியது இல்லை. தன் தாய் எப்படி இறந்தாள் என்று பாவனா சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமைதியாக கேட்டுக் கொண்டாள். அவளுடைய சலனமற்றத் தன்மையைப் பார்த்துப் பாவனாவுக்கு பயம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அவன்தான் கொன்றிருக்கிறான்” என்றாள்.
பாவனா பதில் பேசவில்லை.
“அவனைக் கொன்று விடுகிறேன்” என்றாள் சாஹித்தி திரும்பவும். பாவனா அவளை இரக்கம் ததும்பப் பார்த்தாள். சாஹிதியைப் போன்றவர்களால் ஒன்றுமே பண்ண முடியாது. பண்ணவும் மாட்டார்கள். எப்பொழுதும் ‘பண்ணி விடுவோம்” என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான்.
‘சொத்தை எல்லாம் உனக்கு வரப் போகிற கணவனுக்கு எழுதி வைத்திருக்கிறாள் உன் தாய். உன் மனநிலை சரியாக இல்லை என்றும், அதனால் பரமஹம்சாவை கார்டியனாய் நியமித்து இருப்பதாகவும் உயிலில் எழுதப் பட்டுள்ளது. உன் தாய் அந்தப் பேப்பர்களைப் படித்தும் இருக்க மாட்டாள். கேட்டதுமே கையெழுத்து போட்டிருப்பாள். தன் மீது எந்த சந்தேகமும் வராதபடி கவனமாய் வலையைப் பின்னி இருக்கிறான் பரமஹம்சா. கோர்ட்டுக்குப் போனால் நாம் ஜெயிக்கலாம். அப்படி ஜெயிக்க வேண்டும் என்றால் …” பாவனா சற்று நிறுத்தி மெதுவாய் சொன்னாள். “நீ இந்தப் போதைப் பொருள் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் சாஹித்தி.”
“அதுமட்டும் கஷ்டம். இந்த உலகத்தில் எனக்கு ஆனந்தத்தைத் தருகிற வழி, அது ஒன்றுதான்.” வேதனையுடன் சிரித்தபடி சொன்னாள். “ஆனாலும் அந்த சொத்து என்னுடையது இல்லை, சந்திரன் மகள் நீதான்.”
இரக்கம், கோபம், எரிச்சல் எல்லாம் நிரம்பிய உணர்வில் சாஹிதியைப் பார்த்தாள் பாவனா. அந்த சமயத்தில் அவளுடன் வாதம் புரிய விரும்பாமல் “நான் இரண்டு நாட்கள் கழித்து வந்து சந்திக்கிறேன். என்ன பண்ணலாம் என்பதைப் பற்றி அப்பொழுது பேசுவோம். நாளை மாலை டி.வி. யில் என் பேச்சு வரப் போகிறது. முடிந்தால் எனக்காக ஒரு முறை அதைக் கேளு” என்று அங்கிருந்து போய் விட்டாள்.
அவள் கீழே வந்து காரில் ஏறப்போன அதே சமயத்தில் பரமஹம்சாவின் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்தது. மிக விலையுயர்ந்த கார்.
“இங்கே ஏன் வந்தாய்?” கோபமாய்க் கத்தினாள்.
தனக்கே உரிய வெற்றிப் பெருமிதத்தோடு சிரித்தபடி “என்னம்மா இது? சாஹிக்கு நான் கார்டியன். அவள் நல்லது கெட்டதைப் பார்க்க வேண்டியது என் கடமை.” என்றான். அவன் பேச்சில் ‘நீதான் அனாவசியமாய் இங்கே வந்திருக்கிறாய்’ என்ற மிரட்டல் இருந்தது.
பாவனாவின் முகம் சிவந்துவ்ட்டது. அவள் தோல்வி அவளுக்கே தெரிந்து கொண்டிருந்தது. பரமஹம்சாவின் திட்டம் தெளிவாய்ப் புரிந்துவிட்டது. சாஹிதி மானசீகமாய் இறந்து போகும் வரையில் அவன் விட்டு வைக்க மாட்டான். இந்தப் போராட்டத்தைத் தாங்கமுடியாமல் அவள் அவனை மணந்து கொண்டாலும் ஆச்சரியமில்லை. ஒரு கொலைக்காரன் இவ்வளவு மதிப்போடு சமுதாயத்தில் நடமாடிக் கொண்டிருந்தாலும் யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை. அது போதாது என்று தம்முடைய பிரச்சனைகளை அவனிடம் சொல்லிக் கொள்வார்கள். அவனும் கையை உயர்த்தி அவர்களுக்கு அபயஹஸ்தம் காட்டுவான். அந்த விதமாய் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
ஏதோ ஒன்றைச் செய்தாக வேண்டும். என்ன செய்வது? ஆபீசுக்குப் போகும் போது வழியெல்லாம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
இது இங்கே இப்படி இருக்கும் போது அங்கே சாஹிதி தன் அறையில் சலனமின்றி உட்கார்ந்து இருந்தாள். பரமஹம்சா பத்து நிமிடங்கள் பேசிவிட்டுப் போய்விட்டான். அவளைத் தன் பேச்சால் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு போய் விட்டான். வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி இருப்பது அவனுடைய பேச்சைக் கேட்டால்தான் புரியும். அவை இதயத்தைப் பிளக்க வல்லவை. தேன் மழையை பொழிய வல்லவை. தீயாய்ச் சூழ்ந்துகொள்ளும் வல்லவை. அன்பு மழையைப் பொழிய வல்லவை.
அவன் போய்ச் சேர்ந்ததும் எப்போதையும் விட மூன்று மடங்கு அதிகமாய் கஞ்சாவை எடுத்துக் கொண்டாள் அவள்.
அதே சமயத்தில் போன் மணி அடித்தது. அவள் ரிசீவரைக் கையில் எடுத்துக் கொண்டு “ஹலோ!” என்றாள்.
“நான்தான் ராமநாதன்.”
அவள் இதழ்கள் பற்களுக்கு இடையே வெறுப்போடு அழுந்தியது. “என்ன?” என்றாள் சுருக்கமாய்.
“அம்மா போய் விட்டாளாமே? பேப்பரின் படித்தேன். எனக்கு எவ்வளவு துக்கம் வந்ததோ வார்த்தைகளில் சொல்ல முடியாது. நான்கு நாட்களாய் தூக்கமே இல்லை. கப்பல் போன்ற அந்த வீட்டில் நீ தன்னந்தனியாய் இருப்பதை ஊகித்துப் பார்த்தாலே வருத்தமாய் இருக்கு. இவ்வளவு நாளாய் நீ என்னை ஏன் சந்திக்கவில்லை என்றும் புரிந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இந்த பந்தங்களை எல்லாம் முறித்துக்கொண்டு வந்து உன்னுடன் தங்கி விடலாம் என்று இருக்கிறேன். எனக்கு நீ… உனக்கு நான்.”
அவள் இதயத்திலிருந்து துக்கம் பொங்கிக் கொண்டு வெளி வந்தது. “உண்மையாகவா?” என்றாள்.
“ஆமாம் சாஹித்தி.”
“என் சொத்தை எல்லாம் அம்மா வேறு யாருக்கோ எழுதி வைத்துவிட்டு, அவனை என் கார்டியனாய் நியமித்து இருக்கிறாள். இப்போ நான் சாதாரண சாஹிதிதான். அப்படியும் என்னைக் காதலிக்கிறீங்களா?”
“உன்னை உனக்காவே காதலிக்கும் காதலன் நான் என்ற சினிமா பாட்டை கேட்டது இல்லையா சாஹிதி?”
“அப்போ உங்கள் மனைவி?”
“மனம் ஒன்று சேராத இடத்தில் மனிதர்களால் ஒன்று சேர்ந்திருக்க முடியாது. அவளுக்கு விவாகரத்து தந்து விடுகிறேன்.”
“மாலையில் பார்க்கில் சந்திப்போம்.”
“நிஜமாகவா? என்மீது கோபம் போய்விட்டதா?”
சாஹிதி சிரித்தாள். “உங்கள் மீது கோபம் எதுக்கு? மாலையில் வாங்க.”
********
மறுநாள் காலையில் சாஹிதி ராமநாதனின் வீட்டிற்குப் போனாள். அவன் இல்லை. அவன் மனைவி லக்ஷ்மி இருந்தாள்.
தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு நேராய் விஷயத்திற்கு வந்தாள் சாஹிதி.
“இதையெல்லாம் உங்களுக்குச் சொல்றது உங்கள் குடும்பத்தைப் பிளப்பதற்காகவோ, உங்களுக்கு இடையில் சண்டையைக் கிளப்பி விடுவதற்காகவோ இல்லை. ஒரு ஆணை வாழ்க்கைத் துணைவி தவிர வேறு யாராலுமே திருத்த முடியாது. இதோ இந்த டேப்பை கேளுங்கள். நேற்று மாலையில் உங்கள் கணவர் பார்க்கில் என்னோடு பேசிய பேச்சுக்கள்.”
லக்ஷ்மி முகம் சுளித்து, “என்ன இது? இதெல்லாம் என்ன?” என்றாள்.
“உங்கள் கணவர் உங்களை விவாகரத்து பண்ணிவிட்டு என்னைப் பண்ணிக்கப் போகிறாராம்.”
“யாரடி நீ?”
நேராய் அம்பு போல் வந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு சாஹித்தி வெலவெலத்து விட்டாள். ஆனாலும் மெல்லச் சுதாரித்துக் கொண்டு சொன்னாள். “அவருடைய பேச்சைக் கேட்டு ஏமாந்து கடைசி தருணத்தில், அதிர்ஷ்டவசமாய் தப்பித்துக் கொண்டு விட்டவள். இந்த கேசட்டைக் கேளுங்கள். இதன் உதவியால் அவரைத் திருத்திக் கொள்ளுங்கள். அவருக்கு உங்களால் எந்த சுகமும் இல்லையாம். இந்த வார்த்தைகளைக் குறைந்த பட்சம் அப்பாவிகளான சின்னப் பெண்களிடம் சொல்லாமல் இருக்கச் சொல்லுங்கள். வேற்று மனுஷியிடம் தன் மனைவியைப் பற்றி இளப்பமாகப் பேசுபவன் கணவனாய் இருக்க யோக்கியதை இல்லை. அவருக்கு நயமாய் எடுத்துச் சொல்லுங்கள்.
நான் இதையெல்லாம் அவர் மீது கோபத்தாலோ வெறுப்பாலோ சொல்லவில்லை. என்னைப் போன்ற அப்பாவிகளை அவருடைய் பிடியிலிருந்து உங்கள் ஒருவரால்தான் தப்பிக்க வைக்க முடியும். அதனால்தான் சொல்கிறேன்.”
“முதலில் நீ வெளியில் நட.” ஆள்காட்டி விரலை நீட்டி கத்தினாள். “எங்க வீட்டுக்கே வந்து என் கணவரை ஏசுகிறாயா?”
“ஐயோ! நான் ஏசவில்லைங்க. கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றிக் கொண்டிருந்தால் இனி அந்தக் குடித்தனம்..”
“எங்க குடித்தனம் எப்படி இருக்கணும் என்று சொல்வதற்கு நீ யாரடி? கொழுப்புப் பிடித்து இப்படி வீதியில் அலைகிறாயா? என் கணவனை விட்டால் உனக்கு வேறு யாரும் கிடைக்க வில்லையா? ஆனாலும் ஆண்களுக்கு லட்சம் விவகாரங்கள் ஆயிரம் குறைகள் இருக்கத்தான் செய்யும். அவரவர்கள் ஜாக்கிரதையில் அவரவர்கள் இருக்க வேண்டும். அவ்வளவுதானே தவிர இப்படி வீடு வீடாய் போய் புகார் சொல்லுவதைத் தவிர உனக்கு வேறு வேலை இல்லையா? பணத்துக்காக வலை விரித்தாயா? சிவப்பாய் இருக்கிறானே என்று பின்னால் சுற்றுகிறாயா?”
சாஹிதி நடுநடுங்கி விட்டாள். ஆனால் அது ஆவேசத்தினால் வந்த நடுக்கம் இல்லை. துக்கத்தினால் வந்த நடுக்கம். அரும்பாடு பட்டு அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
‘இதையெல்லாம் சாட்சிய ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால் உங்கள் கணவரை அதட்டி மிரட்டி, பயமுறுத்தியோ அல்லது நல்லவிதமாய் எடுத்துச் சொல்லியோ திருந்த வழி பண்ணுவீங்க என்று நினைத்தேன். அதற்காக நான் இதையெல்லாம் சொன்னதுமே நீங்க என் கையைப் பற்றிக் கொண்டு ‘என் கண்களைத் திறந்து வைத்தாய் அம்மா’ என்று சொல்லுவீங்க என்று எதிர்பார்க்கவில்லையே தவிர, நான் போன பிறகாவது உங்கள் கணவருக்கு புத்திமதி சொல்வீங்க என்று நினைத்தேன்.
கொஞ்சம் பாதுகாப்புக்காக பெண் ஒருத்தி இவ்வளவு தூரம் மனசாட்சியை வசித்துக் கொண்டு மனதாலும் வாக்காலும் கணவனை சப்போர்ட் செய்வாள் என்று நினைக்கவில்லை.”
“இங்கிருந்து போகிறாயா? போலீசைக் கூப்பிடட்டுமா?”
முதல் முறையாய் சாஹிதி சிரித்தாள். “நான் யாரென்று தெரியாமல் இப்படிப் பேசுறீங்க. உங்கள் கணவரைப் போலீசாரைக் கொண்டு அரெஸ்ட் செய்ய வைக்கணும் என்றால் இந்த கேசட் ஒன்றே போதும்” என்று அங்கிருந்து போய்விட்டாள்.
*******
மறுபடியும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. காலையிலிருந்து இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. வெளியே இடியும் மின்னலும். மாலைக்குள் அது சீற்றமடைந்தது. சரியாய் அந்தச் சமயத்தில் தான் டி.வி.யில் பாவனாவின் பேட்டி தொடங்கியது.
“மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து மிகச் சிறுவயதிலேயே அமைச்சராகி விட்டீர்கள். இந்த வெற்றியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
விஸ்வத்தின் குடும்பத்தார் முழுவதும் டி.வி. யைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அக்காவை அந்தப் பதவியில் பார்த்த தம்பி தங்கைகள் உணர்ச்சி வசப்பட்டு கைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். விஸ்வத்தின் மனம் முழுவதும் இருவேறு வேறு உணர்வுகளால் தத்தளித்துக் கொண்டிருந்தது. டி.வி. யில் மகள் ‘பார்த்தாயா அப்பா! சாதித்துவிட்டேன்’ என்று தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.
தன் அபிப்ராயம்தான் தவறோ என்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு.
“ஒருவர் முன்னுக்கு வரவேண்டும் என்றால் தேவையானது உழைப்பும் உறுதியும்.” பாவனா சொன்னாள்.
“உழைப்பு மட்டுமே இருந்து விட்டால் போதுமா? படிப்பு, பணம், புத்தி சாதுரியம்.. இதெல்லாம் தேவையில்லை நினைக்கிறீங்களா?”
“ஒரு காலத்தில் எனக்கு அந்த மூன்றுமே இல்லை. ஏதோ சாதாரண படிப்பு, புத்தி சாதுரியம்தான் இருந்தன. கையில் சல்லிக்காசு இல்லாத நிலைமை! உழைப்பு இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்று எனக்கு சில குறிப்பட்ட சூழ்நிலையில் புரிந்தது. படிப்பும் பணமும் இருந்துவிட்டால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்று நினைப்பது தவறு. தேவையானது தன்னம்பிக்கை. அது இருந்துவிட்டால் எப்படியாவது சந்தோஷமாக வாழ்ந்து விட முடியும்.”
‘கரெக்ட்!’ என்று எண்ணிக கொண்டாள் டி.வி. யைப் பார்த்துக் கொண்டிருந்த சாஹிதி. ஒரு காலத்தில் அவள் படிப்பில் முதலிடத்தில் இருந்த மாணவி. கை நிறைய பணம். ஆனாலும் அவள் இதுபோல் கூனிக் குறுகிப் போய் நடைபிணமாய் மாறிவிட்டாளே? காரணம் என்ன?
சாஹிதியின் கேள்விக்கு பதில் பாவானாவின் பேட்டியிலேயே கிடைத்து விட்டது. பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் பாவனாவைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். “குறிப்பிட்ட சூழ்நிலையில் புரிந்தது என்று சொன்னீர்கள். அந்தச் சூழிநிலைகள் என்னவென்று விவரிக்க முடியுமா?”
“மனிதன்… முக்கியமாய் பெண் தன் மூன்று எதிர்கள் யார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.”
எதிரே இருந்த பெண்ணின் முகத்தில் ஆர்வம். “பெண்ணுக்கு மூன்று எதிரிகள் யார் மேடம்?”” என்று கேட்டாள் ஆர்வத்துடன்.
“”பாதுகாப்பு இல்லாத உணர்வு, தாழ்வு மனப்பான்மை உணர்வு, அன்பில்லாத உணர்வு.”
‘கொஞ்சம் விவரித்துச் சொல்ல முடியுமா?”
“இருட்டில் இருக்கிறோம் என்று திகிலடைந்து உட்கார்ந்துவிட்டால், வாழ்க்கையின் முடிவு வரையில் தீப்பெட்டி கூட்டிலேயே இருந்துவிடும். எவ்வளவு மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வர முடியாமல் போவதும், வெளியே வந்தால் என்னவாகுமோ என்று கூனிக் குறுகிப் போவதும்தான் பாதுகாப்பு இல்லாத உணர்வு. நான் எதற்குமே பயன்பட மாட்டேன் என்று நினைத்துக் கொள்வது தாழ்வு மனப்பான்மை உணர்வு! அடிக்கடி தன்னைப் பற்றியே யோசிப்பது, சிறிய பிரச்சனை வந்தால் கூட அளவுக்கு அதிகமாய் பயப்படுவது இதன் லட்சணம். இது நம்மிடம் இருப்பது தெரிந்துவிட்டால் எதற்கும் உதவாத சந்நியாசி கூட நம்மை பயமுறுத்த முயற்சி செய்வான். மூன்றாவது அன்பு இல்லாமை உணர்வு! தன்னை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று சந்கோஜத்துடன் ஒதுங்கி இருப்பது. பெண் என்பவள் கொஞ்சம் மிடுக்குடன் இல்லாவிட்டால், எதிர்த்த வீட்டு பெரிய மனுஷன் கூட ஜன்னல் வழியாய்க் கையை நீட்டுவான்.”
டி.வி. யைப் பார்த்துக் கொண்டிருந்த பரத்வாஜ் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு வாழ்க்கையில் திரில்லிங்கை ஏற்படுத்திய சந்தர்பங்கள் மிகவும் குறைவு. நள்ளிரவில் கிரோசினில் நனைந்த உடையோடு ஆதரவில்லாமல் நின்றிருந்த பாவனாவுக்கும் இந்த பாவானாவுக்கும்தான் எவ்வளவு வேறுபாடு! ஆனாலும் பரத்வாஜ் யோசித்துக் கொண்டிருப்பது அது இல்லை. எத்தனையோ எழுத்தாளர்கள், எத்தனையோ பக்கங்களில் எழுதிய கருத்துக்களை அவள் அழகாய் நான்கே வரிகளில் சொல்லிவிட்டாள்.
தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட மூன்று பேர்கள் – பிரமஹம்சா, ராமநாதன், ராமமூர்த்தி மூவரும் பெண்ணின் பலவீனத்தை எப்படி கேஷ் பண்ணிக் கொண்டார்கள் என்பதை மூன்று வாக்கியங்களில் சொல்லிவிட்டாள். அவள் சொன்னது முற்றிலும் உண்மை. எந்தப் பெண்ணுக்காக இருந்தாலும் இந்த மூன்று பிரச்சனைகளைத் தவிர வேறு என்ன இருக்கும்?
“கடைசிக் கேள்வி மேடம். இதையெல்லாம் நீங்க அதிர்ஷ்டமாய் நினைக்கிறீங்களா?”
“அதிர்ஷ்டம் என்றால்?”
அந்தப் பெண் தடுமாற்றமடைந்து “அதான்… ஜாதகம், அதிர்ஷ்டம், இவ்வாறு ஹோம் மினிஸ்டர் ஆனது” என்றாள்.
பாவனா சிரித்தாள். “ஹோம் மினிஸ்டர் வரைக்கும் வராமல் இருந்திருந்தாலும் நிச்சயமாய் இதைவிட சந்தோஷமாய் இருந்திருப்பேன். அதற்காக எல்லா மனைவிகளையும் குடும்பத்தை விட்டுவிடச் சொல்லவில்லை. தாங்க முடியாத கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்வதை விட, இருப்பதைக் கொண்டு இன்னும் ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று எப்போதும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். இனி ஜாதகம் என்கிறீர்களா? நான் பதிமூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பிறந்தேன். ஆங்கிலேயர்களுக்கு மிகவும் கெட்ட நாள் அது. அதே நேரத்தில் என் சிநேகிதி கூட அதே ஆஸ்பத்திரியில் பிறந்தாள். பிறந்த முகூர்த்த நேரத்திலேயே விதி என் ஜாதகத்தை மாற்றிவிட்டது. ஆனாலும் சந்தோஷமாய்த்தான் இருக்கிறேன். இருவரின் ஜாதகம் ஒன்றுதான் என்றாலும் நான் டிவி. யில் பேட்டி அளித்துக் கொண்டிருக்க்றேன். அந்தப் பெண் டி.வி. யைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அதுதான் வித்தியாசம்.”
சிரிப்பு அலைகள்.
நிகழ்ச்சி முடிவடைந்தது.
(தொடரும்)
- மோட்டூர்க்காரி!
- “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
- சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
- நினைவு மண்டபம்
- மருத்துவக் கட்டுரை நிமோனியா
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- நீங்காத நினைவுகள் – 6
- வெற்றி மனப்பான்மை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
- திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
- அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
- நான் இப்போது நிற்கும் ஆறு
- மதுரையில் ஆடிய குரவைக்கூத்து
- NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 6,7
- அக்னிப்பிரவேசம்-37
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 10
- செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
- விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?