டாக்டர் ஜி.ஜான்சன்
நான் மருத்துவராகப் பணிபுரிந்த முதல் இடம் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை.
அது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது.
இது நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்கது. ஸ்வீடன் தேசத்து மருத்துவ இறைத்தூதர்களால் தொடங்கப்பட்டது.
தொடக்க காலங்களில் முழுக்க முழுக்க ஸ்வீடிஷ் மருத்துவர்களாலும், செவியர்களாலும் நடத்தப்பட்டு பேரும் புகழுடனும் விளங்கியது. இதை ஆரம்பித்தவர் டாக்டர் கூகல்பெர்க் எனும் கண் மருத்துவர். இதனால் இது கண் ஆஸ்பத்திரி என்றே பல காலமாக அழைக்கப்பட்டது.
வெளிநோயாளிப் பிரிவும், 300 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிப் பிரிவும் , மருத்துவம் அறுவை சிகிச்சை , பிரசவம், குழந்தை வைத்தியம், கண் , காது – மூக்கு -தொண்டை, தொழுநோய் சிகிச்சை என பொது மருத்துவமனையாக , இயங்கியது.
அதோடு செவிலியர் பயிற்சிப் பள்ளி ( School of Nursing ) , மருத்துவ ஆய்வகப் பயிற்சி ( Medical Laboratory Technicians Course ) , விழியிழந்தோர் பள்ளி ( School for the Blind )போன்றவையும் மருத்துவமனையுடன் இணைந்திருந்தது.
இலவச மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம் , தொழுநோய் ஒழிப்புத் திட்டம் என சுற்று வட்டார கிராம மக்களுக்கு பெருஞ் சேவை புரிந்து வந்தது.
இத்தகைய புகழ் மிக்க மருத்துவமனையில் நான் முதன் முதலாக பணியில் அமர்ந்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது .
நான் மருத்துவப் பிரிவில் டாக்டர் பார்த் எனும் ஸ்வீடிஷ் மருத்துவரின் கீழ் பணி புரிந்தேன் . அவரிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது. வார்டில் நம்பிக்கை இழந்துபோன நோயாளிகளை சிரத்தை எடுத்து போராடி காப்பாற்ற மாட்டார். ” Truely he will die .” ( உண்மையாக இவன் இறந்துவிடுவான் ) என்று கூறிவிட்டு அந்த நோயாளியை என்னிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். அது ஒரு வகையில் எனக்கு பயனுள்ளதாகவே அமைந்தது . நான் மருத்துவ நூல்களைப் புரட்டிப் பார்த்து புதுப் புது சிகிச்சை முறைகளைச் செய்து பார்த்து நல்ல அனுபவமும் பெறலானேன்.அவர்களில் பலர் காப்பாற்றப்பட்டும் உள்ளனர்.
வெளிநோயாளிப் பிரிவில் எனக்கு தரப்பட்ட அறையின் எண் 12. அங்குதான் காலையிலும் மாலையிலும் நோயாளிகளைப் பார்ப்பேன்.
அந்த அறை இரத்தப் பரிசோதனைக் கூடத்தை ஒட்டி இருந்தது.
என் இருக்கைக்குப் பின்புறம் ஒரு ஜன்னல் இருந்தது. அதன் வெளியே ஒரு சதுரமான இடம் காணப்பட்டது.அதைச் சுற்றிலும் கருங்கற்கள் தூண்கள் நடப்பட்டு முள் கம்பியால் மூடப்பட்டிருந்தது. நடுவில் இரண்டு கருங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.அவற்றில் குங்குமப் போட்டு இடப்பட்டிருந்தது.காய்ந்து உலர்ந்த மலர்கள் சிதறிக் கிடந்தன. பழைய பத்திகள் சில புதைக்கப் பட்டிருந்தன.
அது என்னவாக இருக்கும் என்று பணியாளர் ( attender ) மாணிக்கத்திடம் கேட்டேன். அவர் வயதில் மூத்தவர். மருத்துவமனையில் பல வருடங்கள் வேலை செய்பவர்.
” இதுதான் மருது பாண்டிய்ர்களைப் புதைத்த இடம் டாக்டர். ” என்று அவர் கூறியதைக் கேட்டு வியந்து போனேன்!
மருத்துவமனை இருந்த பகுதி முன்பு சிங்காரத் தோப்பு என்று அழைக்கப்பட்டது. அது அடர்ந்த காடு.ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைத் தூக்கில் இட்ட பிறகு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தலைகளைத் துண்டித்து காளையார்கோவில் கோவில் முன் கம்பத்தில் சொருகி வைக்கப் பட்டனவாம். உடல்கள் சிங்காரத்தோப்பில் புதைக்கப் பட்டதாம்.
மருத்துவ மனைக்கு இடம் தேடி டாக்டர் கூகல்பெர்க் அப்போதைய சிவகங்கை மன்னரிடம் சென்றபோது இந்த சிங்காரத் தோப்பை தானமாகத் தந்துவிட்டாராம். அப்போது ஒரு நிபந்த்தனை விதிக்கப் பட்டதாம்.
கிறிஸ்த்துவ ஸ்தாபனத்துக்கு இந்த இடம் தரப்பட்டாலும், மருது சகோதரர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தைப் பராமரித்து, அங்கே மரியாதை செலுத்த வரும் இந்துக்களுக்கு வழி விட வேண்டும் என்பது மன்னரின் ஆணை. அதுபோன்று அந்த இடத்தில கோவில் கட்டி அவர்களை வழி படக் கூடாது என்ற டாக்டரின்
வேண்டுகோளையும் மன்னர் ஏற்றுக்கொண்டாராம்.
அதன் பிறகு மருத்துவமனை கட்டப்பட்டு, சுற்றிலும் சுவர்கள் எழுப்பப் பட்டது. மருது பாண்டியர் சகோதரர்களைப் புதைத்த இடமும் வளாகத்தினுள் அமைந்த்து விட்டது.
இதெல்லாம் வாய்மொழியாக அங்குள்ள ஒரு சிலர் மூலமாகவே தெரிய வந்தது.
மருது பாண்டியர்கள் பற்றி ஓரளவுதான் எனக்கு அப்போது தெரியும். அவர்கள் சுதந்திர வீரர்கள் என்பதையும், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப் பட்டனர் என்பதும் தெரியும்.அதோடு ” சிவகங்கைச் சீமை ” திரைப்படமும் பார்த்துள்ளேன்.
இத்தகைய வீர சகோதரர்கள் புதைக்கப் பட்டுள்ள இடத்தின் அருகிலேயே நான் அமர்ந்துள்ளேன் என்பது எனக்கு பெருமை தந்தது.
இவர்களைப் பற்றி ஆதாரப் பூர்வமான சரித்திர உண்மைகளை அறிந்துகொள்ள விரும்பினேன். மதுரை செல்லும்போது மருது சகோதரர்கள் பற்றிய நூல்களை நான் தேடினேன். ஆனால் அப்போது ஏதும் கிடைக்கவில்லை
ஒரு முறை குன்னக்குடி முருகன் கோவில் மேல் ஏறியபோது அங்கு சன்னிதானத்தில் மருது பாண்டியர் சிலைகள் சிறு வடிவில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
பின்பு அது பற்றி நான் நான் அக்கறைக் கொள்ளவில்லை. என் அறையில் அமர்ந்து நான் பணியில் ஈடுபட்டேன். ஒவ்வொரு பொங்கல் தினத்திலும் ஒரு சிலர் கூட்டமாக வந்து அந்த இரு கற்களுக்கும் பொட்டிட்டு , மாலைகள் அணிவித்து, ஊது பத்திகளும், மேழுகுவர்த்திகளும் கொளுத்தி பூஜை செய்துவிட்டு, அங்கேயே பொங்கல் பொங்கி அனைவருக்கும் வழங்குவர் .அதில் முன்னோடியாக செயல் பட்டவர் திரு தங்கசாமி சேர்வை
என்பவர்.
அதுபோன்று பத்து ஆண்டுகளும் உருண்டோடின. டாக்டர் பார்த் ஓய்வு பெற்று ஸ்வீடன் திரும்பிவிட்டார்.
நான் தலைமை மருத்துவராக பதவி உயர்வு பெற்றேன் . அதன் மூலமாக மருத்துவ வளாகத்தின் பொறுப்பும் என்னிடம் இருந்தது. வளாகத்தினுள் ஊழியர்களின் குடியிருப்புகள் சுமார் இருநூறு இருந்தன . சுமார் முந்நூறு ஊழியர்கள் பணி புரிந்தனர்.
கிறிஸ்துவ வளாகமாகஅமைந்திருந்ததால்,,சிறு
ஒரு நாள் தங்கசாமி சேர்வை சுமார் பத்து பேர்களுடன் என்னைக் காண வந்தார். நல்ல உடல் கட்டும், நரைத்த முறுக்கு மீசையுடனும் காணப்பட்ட அவருக்கு அப்போது ஐம்பது வயது .அவர் கையில் ஒரு கட்டு தாள்கள் இருந்தன . அவற்றை என்னிடம் தந்தார். அவற்றைப் பிரித்துப் பார்த்தேன். அதில் மருது பாண்டியரின் வம்ச வரலாறு எழுதப் பட்டிருந்தது.. அதில் அவர் பெயரும் கடைசியாகக் குறிப்பிடப் பட்டிருந்தது கண்டு வியந்தேன்.
” டாக்டர். நாங்கள் எல்லாம் மருது பாண்டியரின் வம்ச வழி வந்தவர்கள். அவர்களின் சமாதி உங்கள் வளாகத்தில் உள்ளது. அது அனாதையாக கேட்பாரற்று கிடக்கிறது. அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பவேண்டும் என்பது எங்கள் முக்குலத்தோரின் முடிவாகும். இது குறித்து அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்வர் கலைஞரும் இதில் ஆர்வமாக உள்ளார். கூடிய விரைவில் அரசு சார்பாக மாவட்ட ஆணையர் உங்களை வந்து பார்ப்பார். . ” வந்ததற்கான காரணத்தைக் கச்சிதமாகக் கூறி முடித்தார்.
அவர் சொன்னதை கவனமாகக் கேட்டபின் , மருத்துவமனையின் நிர்வாகம் தற்போது என்னிடம் இருந்தாலும், இது நிலம் பொருத்த விஷயமாக இருப்பதால் நான் மேலிடத்தில் இது பற்றி கூறி ஒரு வாரத்தில் பதில் கூறுவதாகச் சொல்லி அனுப்பினேன்.
எங்கள் மருத்துவமனை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையால் நடத்தப் பட்டு வந்தது. அதன் தலைமையகம் திருச்சியில் இருந்தது. தமிழ் நாடு முழுதும் தேவாலயங்களும், பள்ளிகளும், இதர நிறுவனங்களையும் கொண்டது. இதை ஆலோசனைச் சங்கம் நிர்வாகம் செய்தது..அதற்கு பேராயர்தான் தலைவர்.
நான் திருச்சி சென்று ஆலோசனை சங்கத்தில் இது பற்றி நேரில் விவரித்தேன்.அவர்கள் சம்மதிப்பதில் தவறு இல்லை என்றனர். ஆனால் ஒரேயொரு நிபந்தனை இட்டனர். மருது பாண்டியர்களுக்கு நினைவுச் சின்னம் கட்ட மட்டுமே வளாகத்தினுள் அனுமதி தரலாம். ஆனால் அதைக் கோயிலாகக் கட்டி அவர்களை தெய்வமாக மாற்றி வழிபடக் கூடாது என்றனர்.அதன் அமைப்பின் வரைபடம் வேண்டும் என்றனர்.அதனால் மருத்துவமனையின் கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்றனர்.நான் அதற்கு ஒப்புதல் தந்துவிட்டு திரும்பினேன்.
சில நாட்களில் சவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு எஸ்.எஸ். தென்னரசு என்னைக் காண வந்தார் அவர் எனக்கு நல்ல நண்பர். கலைஞர் இந்த நினைவுச் சின்னம் எழுப்புவதில் ஆர்வம் காட்டுவதாகவும், இதை சுமுகமாக முடித்துத் தரவேண்டும் என்று கூறினார். இடத்தைத் தர மறுத்தால் வீணான இனக் கலவரம் எழலாம் என்றும் எச்சரித்தார்.
” அது என்ன இனக் கலவரம்? ? ” என்று வேண்டுமென்றே அவரிடம் கேட்டேன்.
” ஆமாம். சிறுபான்மையினராக உள்ள உங்களுக்கும் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தொருக்கும் இதுவே மதக் கலவரமாகவும் மாறலாம் அல்லவா ? ”
நண்பர் தென்னரசு நகைச்சுவையாகவே கூறலானார்.
நான் எனது மேலிடம் இட்டுள்ள நிபந்தனை பற்றி அவரிடம் கூறினேன்.
” இது பற்றி கவலை வேண்டாம் டாக்டர். மருது பாண்டியர்கள் வீரத் தமிழர்கள் . நாடு சுதந்திரத்திற்காக உயர் துறந்த தியாகச் செம்மல்கள்.அவர்கள் மனிதர்கள்தான். அவர்கள் கடவுள்கள் அல்ல. அவர்களுக்கு கோவில் கட்டுவதை கலைஞரும் விரும்ப மாட்டார். நிச்சயமாக இது ஒரு நினைவு மண்டபம்தான்.” உறுதியளித்தார்.
மருது பாண்டியகளின்மீது கலைஞர் உட்பட பலரும் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றது கண்டு அவர்களைப்பற்றிய நூல்கள் படிக்க விரும்பினேன். இறுதியில் ஒரு பழைய நூல் மதுரையில் கிடைத்தது.
சிவகங்கைச் சீமையை 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்டவர்கள் மருது பாண்டியர்கள். இவர்கள் பிறந்தது அருப்புக்கோட்டை அருகில் நரிக்குடி என்னும் ஊர். இவர்களின் தந்தை உடையார் சேர்வை இராமநாதபுரம் அரசின் படைத் தலைவராகப் பணியாற்றியவர். இளம் வயதிலேயே மருது சகோதரர்கள் போர்ப் பயிற்சி பெற்று பெரும் வீரர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் இருவருமே வளரி எனும் மர ஆயுதம் வீசுவதில் வல்லவர்கள். இவர்களின் வீரதீரச் செயல்களைக் கண்ட இராமநாதபுரம் அரசர்,இவர்களுக்கு ” பாண்டியர் ” எனும் பட்டம் சூட்டினார்.
மருது சகோதரரின் வீரத்தைக் கேள்விப்பட்ட சிவகங்கை மன்னர் முத்துவடுகநாததேவர் ,இராமநாதபுரம் மன்னரிடம் மருது சகோதர்களை சிவகங்கை இராணுவத்தில் பணியாற்ற அனுப்புமாறு வேண்டினார்.
மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமை இராணுவத்தில் தளபதிகளாக சிறந்து விளங்கினர்.
1772ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவம், லெப்டினென்ட் கலோனல் போன் ஜூர் ( Lt .Col . Bon Jour ) என்பவரின் தலைமையில் காளையார்கோவில் மாவட்டத்தைத் தாக்கியது. அந்த போரில் முத்துவடுகநாதர் வீர மரணமுற்றார் .மருது சகோதரர்கள் ராணி வேலு நாச்சியாருடன் திண்டுக்கல்லுக்கு தப்பி சென்றனர்.அப்போது திண்டுக்கல்லை அரசாண்ட மைசூர் சுல்தான் ஹைதர் அலி அவர்களுக்கு அடைக்கலம் தந்தார்.
இதற்கிடையே சிவகங்கைச் சீமையிலிருந்து 8 வருடங்களாக வரி வாங்க முடியாத ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு , வரிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரையே மீண்டும் சிவகங்கை அரசியாக ஏற்றுக்கொண்டார் .
ஆனால் மருது சகோதரர்கள் 12,000 ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் ஆற்காட்டு நவாபின் எல்லைக்குள் புகுந்து பல ஊர்களைக் கைப்பற்றினர். நவாபுக்கு உதவ வந்த ஆங்கிலேயர் படைகளை கொல்லங்குடியில் 24.4.1789 நாளன்று மருது சகோதரர் படைகள் தோற்கடித்தன..
ராணி வேலு நாச்சியார் மருது சகோதரர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன் மூலமாக பெரிய மருது சிவகங்கைச் சீமையை ஆண்டார்.சின்ன மருது திவானாகப் பணியாற்றினார். இவர்கள் இருவரும் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்ததுபோல் சிறந்த நிர்வாகத் திறமையும் கொண்டு சிவகங்கைச் சீமையை 1783 லிருந்து 1801 வரை ஆண்டனர். அப்போது வேளாண்மைச் சிறக்க ஊருணிகளும், ஏரிகளும், குளங்களும் அமைத்து தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கினர். காளையார்கோவில் , சிவகங்கை போன்ற பிரசித்திப் பெற்ற கோவில்களையும் கட்டினர்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த வீரபாண்டிய கட்டபொம்மனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
1799ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் நாளன்று கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததால் சிவகங்கைச் சீமை மீது போர் தொடுத்தார் அக்னியு. மேஜர் கிரே தலைமையில் படைகள் புகுந்தன.மருது பாண்டியர் காட்டுக்குள் புகலிடம் தேட வேண்டிய நிலை உருவானது.
1801ஆம் ஆண்டில் அக்டோபர் 19ஆம் நாளில் சின்ன மருதுவை சோழபுரம் காட்டில் காட்டிக்கொடுத்தான் கருத்தான் என்ற கயவன்.
அக்டோபர் 24ஆம் நாளில் ஒக்கூர் காட்டில் பெரிய மருதுவையும் காட்டிக்கொடுத்தான் அதே கயவன். அவன் வேறு யாருமல்ல – மருது சகோதரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவன்தான் அந்த துரோகி கருத்தான் !
அதன் முடிவு?
அக்டோபர் 24ஆம் நாளன்று பெரிய மருது , சின்ன மருது இருவரும் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலப்பட்டனர்!
அவர்களின் விருப்பத்திற்கிணங்க வெட்டப்பட்ட இருவர் தலைகளும் காளையார் கோயிலிலும் உடல்கள் சிங்காரத் தோப்பு என்ற காட்டிலும் புதைக்கப்பட்டன. அந்த சிங்காரத்
தோப்பில்தான் எங்கள் வளாகம் அமைந்துள்ளது.
மருது பாண்டியர்களின் சரித்திரம் படித்தபின்பு அவர்களின் இனப்பற்றும், தேசப்பற்றும் கண்டு வியந்தேன். அவர்களின் உடல்கள் புதையுண்டிருக்கும் இந்த இடம் வீரமும் புனிதமும் மிக்கது என்று நம்பினேன். நிச்சயமாக இந்த இடத்தில அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவேண்டும் என்பதில் நானும் ஆர்வம் கொண்டேன்.
பின்பு ஒருநாள் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களும் மாவட்ட ஆட்சியர் திரு கோபாலனும் வருகை புரிந்தனர். அவர்கள் சமாதி இருந்த இடத்தை பார்வை இட்டனர். அவர்களுடன் தங்கசாமி சேர்வையும் வேறு பலரும் உடன் வந்தனர். அப்போது ஒரு புது பிரச்னை எழுந்தது .
நினைவு மண்டபம் கட்டினாலும் அதை மருத்துவமனையின் நுழைவாயிலில் இருந்து பார்க்க முடியாத வகையில் எங்களுடைய இரத்தப் பரிசோதனைக் கூடம் மறைத்தது.
அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் அதை இடித்துவிடவேண்டும் என்றார்.அதை நான் மேலிடத்தில் தெரிவிப்பதாகக் கூறினேன்.அந்த கட்டிடம் இங்கு முன்பு பணிபுரிந்த டாக்டர் சென்டல் எனும் ஸ்வீடிஷ் மருத்துவரின் நினைவாகக் கட்டப்பட்டிருந்தது.இதுகூட சுமார் நூறு ஆண்டுகள் பழமைமிக்கது! அங்குதான் இரத்தப் பரிசோதனையும், பரிசோதனைகள் பயிற்சிப் பள்ளியும் அமைந்திருந்தது .
இது பற்றி நான் மேலிடத்தில் தெரிவித்தேன்.
இரத்தப் பரிசோதனைக் கூடத்தை இடித்தால் மருத்துவமனையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் முகப்பின் வடிவம் கெடும். அதோடு கட்டாயமாக புதிதாக பரிசோதனைக் கூடக் கட்டிடம் தேவைப் படும். அதற்கு நிறைய செலவாகும்.
அப்போது மருத்துவமனையின் நிதி நிலையும் சரியில்லை. ஸ்வீடனில் இருந்தும் ஜேர்மனியிலிருந்தும் பணம் வருவது குறைந்து போனது.
ஆகேவே புதிய பரிசோதனைக்கூடம் கட்ட அரசு உதவ வேண்டும் என்ற நிபந்தனையையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். அவரும் அதை அரசுக்குத் தெரிவித்து ஒப்புதல் வாங்குவதாகக் கூறினார்.
ஏறக்குறைய மருது பாண்டிய சகோதரர்களுக்கு ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனையின் வளாகத்தினுள் நினைவு மண்டபம் அமைப்பது உறுதியாகிவிட்டது. இதில் என்னுடைய பங்கும் நிறைய இருந்தது என்பதில் நான் மன நிறைவு கொண்டேன்.
அதன் பின்பு நான் வேலையை இராஜினாமா செய்துவிட்டு மலேசியா வந்துவிட்டேன்.
சில ஆண்டுகள் கழித்து நான் விடுமுறையில் திருப்பத்தூர் சென்றேன்.
அங்கு இரத்தப் பரிசோதனைக்கூடக் கட்டிடம் காணப்படவில்லை. அதற்கு நஷ்ட ஈடாக தமிழக அரசு 7,74,000 ரூபாய் தந்துள்ளது.
மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு மண்டபம் அழகுடன் கட்டப்பட்டிருந்தது. அதில் கண்ணாடிக் கூடத்தினுள் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் இடைகளில் வாட்களுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தனர்!
( முடிந்தது )
- மோட்டூர்க்காரி!
- “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
- சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
- நினைவு மண்டபம்
- மருத்துவக் கட்டுரை நிமோனியா
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- நீங்காத நினைவுகள் – 6
- வெற்றி மனப்பான்மை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
- திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
- அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
- நான் இப்போது நிற்கும் ஆறு
- மதுரையில் ஆடிய குரவைக்கூத்து
- NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 6,7
- அக்னிப்பிரவேசம்-37
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 10
- செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
- விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?