மதுரையில் ஆடிய குரவைக்கூத்து

This entry is part 16 of 24 in the series 9 ஜூன் 2013
முனைவர் மு.பழனியப்பன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிஙகம்அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
;கண்ணகி கணவன் பின் செல்லும் சாதாரண பெண்ணாக மதுரைக்குள் நுழைகிறாள். மன்னனை எதிர்த்து வழக்காடும்  போர்க்குணம் உடையவளாக ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு மாற்றம் பெற்றுவிடுகிறாள்.  இந்த மாற்றத்திற்குக் காரணம் எந்நிகழ்வுகளாக இருக்கமுடியும் என்று எண்ணிப் பார்க்கவேண்டிஇருக்கிறது. வேற்றிடத்திலிருந்து மதுரைக்கு வந்துள்ள பெண் கண்ணகி. அவள் கோவலனைப்போல் மதுரையைச் சுற்றிப் பார்க்கவம் இல்லை. ஊரார் நிலை பற்றி அறிந்தவளும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் நாடு அறிந்து நகர் அறிந்து, அரண்மனை வாயில் சென்று அவள் நியாயம் கேட்கத் துணிந்த நிலைக்கு ஏதாவதொரு காரணம் இருந்;திருக்கவேண்டும் என்பது உறுதி. பேரிலக்கியப் படைப்பாளியான இளங்கோவடிகள் அதற்கான சூழல்களைப் புனைந்தளித்துள்ளார்.
அடைக்கலப்படுத்தப் பட்ட கண்ணகி, கணவனான கோவலன் மதுரை நகர் நோக்கிச் சென்றதும் ஆய்ச்சியர் பெண்களுடன் கலந்து உறவாடுகிறாள். இந்நேரத்தில் பால் உறையாமல் இருந்தல், பசுவின் கண்களில் கண்ணீர் சுரத்தல் போன்ற தீ நிமித்தங்களைக் காண்கிறாள்   மாதரி அவள் தன் மகள் ஐயை அழைத்துக் கொண்டு, அந்நிமித்தங்களின் தீமை பெரிதும் சாராமல் இருக்க ஆய்ச்சியர் பெண்களைக் குரவைக் கூத்து ஆடச் செய்கிறாள். இப்பெண்கள் ஆடும் குரவை ஆட்டத்தைக் கண்ணகி கண்டுகளிக்கிறாள்.
மனமயங்காதே மண்ணின் மதர்க்கணிணாகிய கண்ணகியும்
தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வல்
நெடுங்கண்  பிஞ்ஞையோ டாடிய குரவை ஆடுதும் (  ஆய்ச்சியர் குரவை 10-13)
என்ற பாடலடிகளில் கண்ணகி இக்குரவைக் கூத்தினைக் கண்டாள் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். ஒரு செயலை நேரடியாகப் பிறருக்கு மொழிதல் என்பது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட நேரடியாக காணுதல் என்னும் நாடகப் பாங்கு பெருத்த விளைவை காண்பவர் நெஞ்சில் ஏற்படுத்தும். குரவைக் கூத்து என்னும் காட்சி விளைவால் கண்ணகி ஈர்க்கப்பட்டு அதன்வழி நியாயத்திற்குப் போராடும் குணத்தினைப் பெற்றவளாக இளங்கோவடிகள் கண்ணகியை வடித்துள்ளார்.
கண்ணகி  ஒருத்தியே ஆயர் அரங்கில் காண்கிற நோக்கர். அவள் இதுவரை இப்படி ஓர் ஆட்டத்தைக் கண்டதில்லை. பொதுமக்கள் அரங்கில் பொதுமக்கள் ஆடும் இக்கூத்து அவளுக்குப் புதிது. மற்ற பங்கேற்பளார்களான ஆயர் பெண்கள் இக்கூத்தினைப் பல முறை ஆடியுள்ளனர். கண்டும் உள்ளனர். இவர்களுக்கு ஏற்படாத எழுச்சி கண்ணகியின் மனதில் ஏற்பட்டிருக்கிறது.
அரக்கர்களைக் கண்ணன் அழித்த நிகழ்வுகளைப் பாடலாகவும், ஆடலாகவும் ஆயர் குல மகளிர் குரவை ஆடினர். அநியாயத்தை அழிக்கும் ஒற்றை மனிதனாக இங்குக் கண்ணன் காட்சிப்படுத்தப்;படுகிறான்.
1.    கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு, விளாங்கனியை உதிர்த்த மாயவன்தன்  நிகழ்ச்சி,
2. பாம்பினைக் கயிறாகக் கொண்டு கடல் கடைந்த மாயவன்தன் நிகழ்ச்சி,
3. குருந்த மரமாக நின்ற அரக்கனைக் கொன்ற நிகழ்ச்சி,
போன்ற பல நிகழ்ச்சிகள்  இசைநாடகமாக கண்ணகியின் கண்களில் படிகின்றன. நியாயத்தின் வலிமையையும், நியாயத்திற்காகப் போராடவேண்டிய சூழலையும் இவை கண்ணகிக்குத் தந்தன.
ஆயர் பெண்களால் அரச மரபினோர் மூவரும் கண்ணனாகவே கருதும் ஓர் ஆட்டப்பகுதி இதன் பின்னர் நிகழ்த்தப்படுகிறது. பாண்டியரும் சோழரும் சேரரும் கண்ணனின் சாயலர்,  மரபினர்; என்று குறிப்பிடும் இப்பகுதி கண்ணகி மனதில் கண்ணனைப்போல தமிழகத்து அரசர்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற  நிலையை ஏற்படுத்துகின்றது.
தேவர்கோன் பூண் ஆரம் பூண்டான் செழும் துவரைக்
கோகுலம்  மேய்ததுக் குருத்து ஒசித்தான் என்பரால்

                                                     ( ஆய்ச்சியர் குரவை 29)
மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்
பொன்அம் திகிரிப் பொருபடையான் என்பரால்

                             (ஆய்ச்சியர் குரவை 30)
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கல்நவில் கோல் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால்

(ஆய்ச்சியர் குரவை, 31)

 

என்ற இந்தப் பகுதிகள் நியாயத்தின் காப்பளர்களாகக் கண்ணனைப் போன்று மூவேந்தர்களும் விளங்கினர் என்பதைச் சுட்டுகின்றது. இதன் காரணமாக  மூவேந்தர்களுள் ஒருவர் தவறிழைத்தாலும் அவரின் நெறிபிறழ்வைச் சுட்டிக்காட்டவேண்டிய நிலை கண்ணகியின் உள்மனதில் பதிவாகின்றது.
இதனைத் தொடர்ந்து கண்ணனின் வரலாறு நாடகக் காட்சிகளாக விரிகின்றது.
அமுதம் கடைவதற்காக பாற்கடலைக் கடைந்த உன் கைகள் பெருமை உடையன என்றாலும்; யசோதையால் சிறு கயிற்றால் கட்டப்படும் அளவிற்கு அவை சிறியதும் ஆகும்.
உலகினையே உண்ட பெருமை உடைய உன்வாய், வெண்ணையைத் திருடி உண்ணும் எளிமையும் உடையது ஆகும். உலகு அளந்த உன் திருவடிகள் பாண்டவர்க்காக நியாயம் கேட்டு மண்ணில் தூது சென்;ற எளிமையை உடையன
என்று கண்ணனின் பெருமையைக் காட்டி அதே நேரத்தில் அவனின்; எளிமையை விளக்கும் இந்த பெரியது, சிறியது என்ற ஏற்ற இறக்கம் பெரியதும், சிறியதே எளியதே என்ற எண்ணத்தைக் கண்ணகியின் மனதிற்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. இதன் காரணமாகவே பெரிய இடத்தில் இருக்கும் மன்னனைச் சிறிய இடத்தில் இருந்துப் புறப்பட்ட கண்ணகி நேருக்கு நேராகச் சந்திக்க முடிகின்றது.
இவ்வாடலினைத் தொடர்ந்து கண்டு கொண்டிருக்கும் கண்ணகி இன்னமும் தன் கண், காது, நாக்கு போன்றவற்றால் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு செய்ய இயலும் என்ற அறிவைப் பெறுகின்றாள்.
கேளாத செவி என்ன செவியே,
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணோ,
நாராயணா என்னா நா என்ன நாவே
என்ற இந்த அடிகள் கண்களின் காதுகளின் நாக்கின் வலிமையைக் கண்ணகிக்கு எடுத்துரைப்பன. இவ்வகையில் நியாயத்திற்காக போராடுகின்ற மனநிலை, உடல்நிலை போன்றவற்றைக் கண்ணகி இக்குரவையாடல் வழியாக பெறுவகின்றாள் .
இதனைத் தொடர்ந்து ஆயர்பாடிக்குக் கோவலனின் இறப்புச் செய்தி வந்து சேருகின்றது. இச்செய்தி கேட்டுக் கண்ணகி கலங்குகின்றாள். நான் அழுது கைம்மை நோன்;பு நோற்பேனோ என்று கதறிய கண்ணகி – சூரியனிடம் நியாயம் கேட்கிறாள்.
‘‘காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்
கள்வனோ அல்லன்  கருங்கயல் மாதராய்|| ( துன்பமாலை 52-53)
என்ற சூரியனின் உரை கண்ணகிக்குப் போராடத் தூண்டும் முதல் அடி ஆகும். இதிலிருந்து நியாயத்தை நிலைநிறுத்தத்  தென்னவன் சபைக்குச் செல்லுகிறாள் கண்ணகி.
இவ்வாறு சிலப்பதிகாரத்தில் நிகழ்த்தப்பெற்ற குரவைக்கூத்தின் நேரடிக் காட்சி விளக்க ஆட்டத்தன்மை கண்ணகியின் மனதிற்குள் தனி மனிதனான தன் கணவனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமைக்கு எதிராக போராடக் களம் அமைத்துக்கொடுத்துள்ளது. கண்ணகியைப் போராடுபவளாக ஆக்கியதில் இக்குரவைக்கூத்திற்கும், இதனை ஆடிய ஆயர் குலப் பெண்களுக்கும் பங்கு உண்டு.

 

உடனே ஒரு கோபம் வெளிப்படுவதில்லை. பல சூழல்களின் வரியலாகவே அக்கோபம் வெளிப்படுத்தப்படும். இதன் சான்றாகவே கண்ணகியின் செயல் அமைந்துள்ளது. இளங்கோவடிகள் இவ்வாறு கண்ணகியைப் போராடும் பெண்ணாக ஆக்கிக் கொள்ள குரவையாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பதே இக்காப்பியத்தின் வலிமையாகும்.


M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Series Navigationநான் இப்போது நிற்கும் ஆறுNH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *