குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15

This entry is part 21 of 29 in the series 23 ஜூன் 2013

மறு நாள் காலை தயா தன் அலுவலகத்தை யடைந்த போது, சங்கரன் வந்திருக்கவில்லை. அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று அவள் சந்தேகப் பட்டாள். பத்து மணி தாண்டிய பின்னரும் அவன் வராமல் போகவே அவளுள் ஒரு கவலை தோன்றியது. ‘ என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை லீவ் போட்டுவிட்டுக் கொஞ்ச நாள் என்னைப் பார்க்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறாரா என்ன? பிரச்னையை விட்டு நழுவுகிற முயற்சியா இது?’

அவள் நினைத்தது தவறு என்பதை உணர்த்தும் வண்ணம்   பதினொரு மணிக்குச் சங்கரனின் அப்பா தொலைபேசினார்.

“என்னது! நர்சிங் ஹோம்ல  அட்மிட் ஆகி யிருக்காரா? என்ன ஆச்சு திடீர்னு? . . . என்ன! யாரோ அடிச்சுப் போட்டுட்டாங்களா?` .  .  .  தோள்ல ·ப்ராக்சரா? எந்த நர்சிங் ஹோம்னு சொன்னீங்க? .  .  .  சாரி, வெரி சாரி.  அடிச்சது யாருன்னு தெரியலியா? அடாடா.  அட்மிட் பண்ணிட்டு உங்களுக்குத் தகவல் குடுத்தாங்களா? . . . எவ்வளவு லீவ் வேணும்னாலும் எடுத்துக்கட்டும். . . “

பிரிவில் இருந்த எல்லாரும் தலைமை எழுத்தரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்று வராதவன் சங்கரன் மட்டுமே என்பதால், அது அவனைப் பற்றியது என்பது புரிய, எல்லார் பார்வைகளும் தயாவின் மீது பதிந்தன.

ஒலிவாங்கியைக் கிடத்திய பின்,  “மிஸ் தயா! சங்கரனுக்குத் தோள்ல ·ப்ராக்சராம், பஸ் ஸ்டாப்ல நேத்து ராத்திரி அவர் தனியா நின்னுண்டிருந்தப்ப எவனோ உருட்டுக் கட்டையால அவரோட தோள்ல அடிச்சிருக்கான். அவரு அலறிட்டுக் கீழே விழுந்திருக்காரு. அக்கம்பக்கத்தில இருந்த சிலர் ஓடி வந்து அவரை தேவி நர்சிங் ஹோம்ல சேத்திருக்காங்க. பலமான அடியாம். சரியாகுறதுக்கு ஒரு மாசமாவது ஆகுமாம். அவரோட அப்பா சொன்னாரு,”  என்று தலைமை எழுத்தர் பெருமூச்சு விட, தயாவின் கண்களில் உடனே கண்ணீர் சுரந்தது.

எதிர் இருக்கையில் இருந்த ரமா எழுந்து வந்து அவளுக்கு ஆதரவாக அவளெதிரே நின்றாள்:     “பெர்மிஷன் போட்டுட்டு ரெண்டு பேரும் போய்ப் பாக்கலாமா, தயா?”

தயா அனுமதி கேட்க வாயைத் திறப்பதற்கும் முன், தலைமை எழுத்தர், “போயிட்டு வாங்கம்மா ரெண்டு பேரும். போய்ப் பாத்துட்டு வந்து விவரம் சொல்லுங்க. நாங்க சாயந்தரம் போறோம்,” என்றார்.

அடுத்த நிமிடம் தயாவும் ரமாவும் தங்கள் கைப்பைகளுடன் எழுந்து வெளியேறினார்கள்.

.  .  .  மருத்துவ மனையின் கீழ்த்தளத்தில் சங்கரன் படுக்க வைக்கப  பட்டிருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க, தயாவின் உள்ளம் நொறுங்கியது. அவனது கட்டிலுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்பது அவளுக்குப் புரிந்தது. தோளில் மிகப் பெரிய கட்டுப் போட்டிருந்தார்கள். ஒரு வாரம் கழித்து அறுவைச் சிகிச்சை செய்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பார்கள் என்று அங்கிருந்த நர்ஸ் அவள் கேட்டதன் பேரில் தெரிவித்தாள். தங்கள் வாழ்க்கையின் ஒரு சிக்கலான கட்டத்தில் பிரக்ஞை இன்றி இப்படிப் படுத்துக்கொண்டாரே இந்த சங்கர் என்று எண்ணி தயா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவே இல்லை.

“நீங்க ரெண்டு பேரும் யாரு?”

“சங்கரோட ஆ·பீஸ்ல அவரோட செக்ஷன்ல வேலை பண்றவங்க.. இவ பேரு தயா, என் பேரு ரமா..”

ராமலட்சுமி விசாரித்த போது தரணிபதியின் பார்வை குறுகுறுவென்று தயாவின் மீது பதிந்திருந்தது.

“ராமலட்சுமி! கொஞ்சம் வெளியில வறியா?”

ராமலட்சுமி அவருக்குப் பின்னால் அந்த அறையைவிட்டு வெளியே போனாள். ஒதுப்புப்புறமான இடத்தை யடைந்ததும், “நான் சங்கரனோட பாத்தேன்னு சொன்னேனே அந்தப் பொண்ணுதான் தயாங்கிறது.”

“நீலப் புடவை கட்டிண்டு இருக்காளே அவளா?”

“ஆமா. அவளேதான். பொண்ணு செவப்புத்தோலோட அழகா வேற இருக்கால்ல? அதான் மயங்கிப் பல் இளிச்சிருக்கான் பய!”

“போறும், நிறுத்துங்கோ. இத்தனை வயசுக்கு அப்புறமும், வீட்டில வயசான பொண்ணுகளையும் பிள்ளையையும் வெச்சிண்டு, நீங்க இளிக்கிறதை விடவுமா! வயசுப் பிள்ளை அவன். ஞாபகம் இருக்கட்டும்!” என்று ராமலட்சுமி பற்களைக் கடித்தபடி அவருக்கு மட்டும் கேட்கிற குரலில் வெடுக்கென்று பதில் கூறினாள்.

தரணிபதிக்கு முகம் சிறுத்துப் போயிற்று.

“காலையில அவன் கணபதி ஸ்டோர்ஸ்னு ஆரம்பிச்சு ஏதோ சொல்ல வந்து நிறுத்திண்டுட்டான். அப்பவும் உங்க மூஞ்சி இப்படித்தான் சுண்டைக்காயா ஆயிடுத்து கணபதி ஸ்டோர்ஸ்ல என்ன நடந்துது?”

தரணிபதி சும்மா இருந்தார். சில நொடிகள் கழித்து, “அதைக் கேக்கிறதுக்கு நேரமும் எடமும் பாத்தியாக்கும் இங்கே?” என்றார் சுள்ளென்று.

தொடர்ந்து, “அந்தப் பொண்ணு கிட்ட நான் கண்டிஷ னாப் பேசப் போறேன்,” என்று அவர் சொல்லவும், “அந்தப் பொண்ணைப் பாத்தா ரொம்ப நல்லவளாத் தெரியறது. உங்க வாயை வெச்சுண்டு நீங்க கொஞ்சம் சும்மா இருங்கோ,” என்று பல்லைக் கடித்துக்கொண்டு ராமலட்சுமி அவரை அதட்டினாள்.

“நீ சும்மா இருடி. உனக்கொண்ணும் தெரியாது. இப்ப விட்டா வேற தோதான சமயம் வாய்க்காது.”

“கூடாதுன்னா, கூடாது. அது சரி, என்ன பேசப் போறேள், கண்டிஷனா அந்தப் பொண்ணு கிட்ட?”

“என்னோட ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணத்தைப் பன்ணி வெச்சதுக்கு அப்புறந்தான் அவன் கலியாணம்; அது வரைக்கும் அவனைத் தொந்தரவு பண்ணாதேன்னுதான்.  சம்பளப் பணம் பைசா விடாம நம்மளண்ட குடுத்துடணும்னும்தான். வேற என்ன?”

“இந்தக் காலத்துலே ஆம்பளைகளும் பொம்பளைகளும் செநேகிதங்களாக் கூடப் கறா. ரெண்டு பேரும் ஒரே ஆ·பீஸ் வேற. யதேச்சையா பஸ் ஸ்டாப்ல நின்னு பேசிண்டிருந்திருக்கக் கூடாதா? நீங்க பாட்டுக்கு அசட்டுத்தனமா என்னத்தையானும் கேட்டு வைக்காதங்கோ!”

“என்னடி ஒளர்றே? நீ கேட்டதுக்கு அவன் ஒத்துண்ட மாதிரிதானே பதில் சொன்னான்? நான் சமையல்கட்டை விட்டுப் போயிட்டாலும், நீ கேட்டது, அவன் பதில் சொன்னது எல்லாத்தையும் வெளியில நின்னு கேட்டுண்டுதான் இருந்தேனாக்கும்!  நான் அந்தப் பொண்ணு கிட்ட எதுவும் பேசிடக் கூடாதுன்றதுக்காகப் பொய் சொல்லாதே.”

“சரி.. அப்படியேதான் இருக்கட்டுமே! அதுக்கு இதுவா இடம்? இதுவா சமயம்?  அந்தப் பொண்ணு ஏற்கெனவே அழுதிருக்கு, போலிருக்கு.”

“அப்ப ஒத்துண்டியா, அவா உறவை?”

“சரி, சரி. ஆனா வாயைத் தொறக்கப்படாது நீங்க. தொறந்தேள்.  .  .? ஆஸ்பத்திரின்னு கூடப் பாக்காம நானும் ஏடாகூடமா ஏதாவது சொல்லிடுவேன்! ஆமா!”

இருவரும் சங்கரன் இருந்த அறைக்குத் திரும்பினார்கள். தயா தானும் ரமாவுமாய் வாங்கி வந்திருந்த சாத்துக்குடிப் பழங்களை ராமலட்சுமியிடம் கொடுத்தாள்.

“என்னத்துக்கும்மா இதெல்லாம்?” என்றபடி அவள் அவற்றைப் பெற்றுக்கொண்டாள்.

“நீ சித்த இப்படி வறியாம்மா?” என்று தரணிபதி தயாவின் அருகே வந்து கிசுகிசுப்பாய்ச் சொல்ல, அவள் திடுக்கிட்டு ரமாவைப் பார்த்தாள்.

ரமா, “நீ போயிட்டுவா. நான் இங்கேயே இருக்கேன்,” என்றாள்.

ராமலட்சுமி, “இப்படி வாங்க சொல்றேன்,” என்று தம்மை நோக்கி இடைமறித்ததைத் தரணிபதி கவனித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

தயா திகைப்புடனும், கூச்சத்துடனும் தரணிபதியுடன் சென்றாள். ஒதுக்கமாய் நகர்ந்த பின், “உன் பேரு தானே தயா?” என்று அவர் அவளை வினவினார்.

“ஆமா.”

“அந்தப் பேருக்கு ஏத்தபடி தயவு உள்ளவன்னு நினைக்கிறேன்..  .  .  அம்மா, தயா! உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு உங்கிட்ட ஒரு விஷயம் கெஞ்சிக் கேட்டுக்கறேன். எங்க சங்கரனை விட்றும்மா. அவனுக்கு இப்ப நாங்க கலியாணம் பண்றதா இல்லே. கல்யாண வயசுல அவனுக்கு ரெண்டு தங்கைகள் இருக்கான்ற விஷயம் உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். . .”

“சொல்லி யிருக்கார். ஆனா. . . அவரும் சரி, நானும் சரி, கலியாணத்துக்கு அவசரப்படல்லே. ஏன்னா, எனக்கும் கல்யாணத்துக்கு ஒரு அக்கா இருக்கா.”

“அப்படியா? சரிம்மா.  . . அப்படியே என்னிக்காவது உங்க கலியாணம் நடந்தாலும், உனக்கு வர்ற சம்பளப் பணம் மொத்தத்தையும் நீ எங்கிட்ட குடுத்துடணும்மா. ‘எங்கம்மா அப்பாவுக்குக் கொஞ்சம் அனுப்பறேன் பேர்வழி’ன்னு தகராறெல்லாம் பண்ணப் படாது. என்ன? தெரிஞ்சுதா?”

கேட்பதற்கே தயாவுக்கு நாராசமாக இருந்தது. அவள் முகம் சிவந்து கன்றிவிட்டது. எனினும் அவளால் பதிலே சொல்ல முடியாது போயிற்று. வெடித்துப் புறப்பட்ட ஆத்திரத்தை அவள் தன் கீழுதட்டைக் கடித்துக் கட்டுப் படுத்திக்கொண்டாள்.

“என்னம்மா, ஒண்ணும் சொல்லாம நின்னுண்டிருக்கே? நான் சொன்னது புரிஞ்சுதில்லே?”

“புரிஞ்சுது.”

“அப்படியே நடந்துக்கறேன்னு வாயில வர மாட்டேங்கறதே?”

“நீங்க இதையெல்லாம் அவருக்கு உடம்பு சரியானதும் அவர் கிட்டவே சொன்னா நன்னாருக்கும். ஆனா, நீங்க இப்ப சொன்னதை நான் கண்டிப்பா என் மனசில வெச்சுக்கிறேன்,” என்ற தயா நகரத் தொடங்கிவிட்டாள். ‘பேசியது போதும்’ என்று அவள் சொல்லாமல் சொல்லிவிட்டதாய் அவருக்குத் தோன்ற,  அவரது முகம் சிறுமையில் சுண்டிப் போயிற்று. அவளைப் பின்பற்றி, சங்கரனின் அறைக்குள் தாமும் நுழைந்தார்.

“உங்க ரெண்டு பேரையும் உக்காரச் சொல்லக் கூட முடியல்லே,” என்று ராமலட்சுமி அங்கலாய்த்தாள்.

“இதென்ன, நம்ப வீடா? உக்காரச் சொல்றதுக்கும், காப்பி உபசாரம் பண்றதுக்கும்? அவாளுக்குத் தெரியாதா என்ன?” என்று தரணிபதி சிரித்தார்.

சிறுத்துக் காணப்பட்ட தயாவின் முகத்தைப் பார்த்து ரமா வியப்படைந்தாள். தரணிபதியின் முன்னிலையில் சங்கரனைப் பார்ப்பதற்கே தயாவுக்குக் கூச்சமாக இருந்தது.

“அவர் கண் முழிச்சதும் தயாவும் ரமாவும் வந்துட்டுப் போனான்னு சொல்றேளா? அப்ப நாங்க வரட்டுமா?” என்ற தயா இருவரையும் மாறி மாறிப் பார்த்து விடை பெற்றாள். ரமா அவளைப் பின்தொடர்ந்து வெளியேறினாள்.

வழியில், “சங்கரனோட அப்பா சரியான பன்னாடை போலிருக்குடி, ரமா,” என்று சலிப்புடன் குறிப்பிட்ட தயா தன்னிடம் அவர் பேசியதை யெல்லாம் தெரிவித்தாள்.

”அந்தக் கெழம் என்ன வேணா பேசிட்டுப் போகட்டும்டி, தயா. என்னோட கவலை யெல்லாம் சமயம் பாத்து இப்படி சங்கர் நர்சிங் ஹோம்ல வந்து படுத்துண்டுட்டாரேன்றதுதான். அவரோட நீ விவரமாப் பேசி முடிவுக்கு வர வேண்டிய வாழ்க்கைப் பிரச்னை பூதாகாரமா வெடிச்சிருக்குற இந்த நேரம் பாத்துத்தானா அவர் இப்படிப் படுக்கையில விழுந்துக்கணும்?”

“அவரோட அப்பா பேசினதுல எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்துல சங்கருக்கு இப்படி ஆனது பத்தின விவரங்களை யெல்லாம் அவர் வாய் மூலம் ஒரு தரம் கேக்கத் தோணாம கிளம்பிட்டேனேடி, ரமா? ஆனா, அந்த மாமி கிட்ட நீ கேட்டுத் தெரிஞ்சுண்டே தானே?”

“நம்ம ஹெட் க்ளார்க்  சொன்ன அதே விஷயம்தான். வேற எதுவும் புதுசா அந்த மாமி சொல்லல்லே. அடிச்சது எவனோ முன்ன பின்ன தெரியாத ஆளாம். ஆனா அடிச்சுப் போட்ற அளவுக்கு அவருக்கு யாருடி தயா விரோதிகள் இருப்பா?”

“புதுசாச் சேர்ந்திருக்கிற பார்ட் டைம் ஜாப்ல இதுக்கு முந்தி இருந்த  ஆளு சரியா வேலை செய்யல்லேன்றதுனால அவனை நிறுத்திட்டு இவருக்கு அந்த வேலையை முதலாளி குடுத்திருக்கார். ஒருக்கா அந்த விரோதமா யிருக்குமோ என்னமோ?”

“கேவலம் ஒரு பார்ட் டைம் ஜாப் இன்னொருத்தருக்குப் போயிடுத்தேன்றதுக்காக ஒருத்தன் ஒரு ஆளை அடிச்சுப் போட்ற அளவுக்குப் போவான்றே?”

“ஏண்டி போக மாட்டான், ரமா? நம்ம நாட்டில நூறு ரூபாய்க்காகக் கூட கொலை பண்றவங்க இருக்காங்கடி  .  .  .இக்கட்டான நேரத்துல இப்படி படுத்துட்டாரே?  அவரை நான் தனியாப் பாத்துப் பேசுறதுங்கிறது இப்போதைக்கு நடக்கிற காரியமில்லே.  நான் என்னடி செய்யப் போறேன், ரமா?” என்ற தயாவின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அது தெரு என்றும் பாராமல் கண்ணீர் விட்டு அழுத தயாவின் தோள் மீது ஆதரவாய்த் தன் கையைப் பதித்த ராமா தானும் கண் கலங்கினாள்.

.  .  .  அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தலைமை எழுத்தர், “அம்மா, தயா! ·போன்மா!” என்று அவளை அழைத்த போது, அவளுக்கு வியப்பு ஏற்பட்டது.

அவள் எழுந்து சென்று தொலைபேசியினுள், “ஹல்லோ!” என்றாள்.

“ஹல்லோ! தயாதானே பேசறது?”

“ஆமா? நீங்க யாரு?”

“கீழே ரிசப்ஷனுக்கு வறியா? நேர்லயே பாத்துக்கலாமே?” என்று அந்த ஆண்குரல் கூறியது அவளது திகைப்பை அதிகமாக்கிற்று.

ரமா அப்போது பிரிவில் இல்லை.  அலுவலர் அறைக்குச் சென்றிருந்தாள். இருந்திருந்தால், அவளையும் உடனழைத்துப் போயிருப்பாள். இப்போது வேறு வழியற்று வரவேற்பறைக்குத் தனியாகவே போனாள்.

தொடரும்
jothigirija@live.com

Series Navigationவேர் மறந்த தளிர்கள் – 8,9,10உள்ளே ஒரு வெள்ள‌ம்.
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *