பாம்பே ட்ரீம்ஸ்

This entry is part 1 of 25 in the series 7 ஜூலை 2013

 

வழக்கமாக பாம்பேயின் புறநகர் பகுதிகளில் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வின் சில சிறப்புப்பகுதிகள் கிடைப்பதேயில்லை. எனக்கென பேப்பர் போடும் ஒரு முதியவர் , அவரின் மனைவியுடன் ஸ்டேஷன் செல்லும் வழியில் கடை பரப்பி வைத்திருப்பார். சில சமயங்களில் நேரம் கடந்து விட்டால் நேரே சென்று பேப்பர் வாங்கிக்கொண்டே ட்ரெயினைப்பிடிப்பது வழக்கம். அங்க்கிள் ‘பாம்பே டைம்ஸ்’ என்று இழுப்பேன். போரிவில்லி’க்கபுறம் யாருக்குமே கொடுக்கிறதில்ல தம்பி, இருந்தாலும் இங்க எல்லாருமாச்சேர்ந்து கேட்டுக்கிட்டிருக்கோம். கிடைக்க ஆரம்பிச்சவுடனே உங்களுக்கு மட்டும் தனியா கொடுக்கிறேன் என்று

வழக்கமான பாணியில் பதில் கூறுவார்.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை , பேப்பர் வர தாமதமானதால் , நேரே போய் வாங்கி விடலாமென்று நினைத்து, அவர் கடைக்குச்சென்று பேப்பரை உருவி எடுத்து, சில பக்கங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். கூட்ட மிகுதியால் அவர் கையில் நான் திணித்த காசுகளை அவர் கவனியாது கல்லாவில் போட்டு விட்டு வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். நானும் வாசிக்கும் மும்முரத்தில் நடக்க மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து,தம்பி சில்லரை கொடுத்தீங்களா என்று கேட்டார். ‘கொடுத்திட்டேன் அங்கிள் ‘ என்றவனை அவரும் அவர் மனைவியும் ஒரு மாதிரி பார்த்தனர். அவர்களுக்கு முதுமை, எதையும் சட்டெனெ மறந்து விடுவது இயல்பு. எனக்கும் வாதாட மனமில்லை. இருப்பினும் போதுமான அளவு காசு கையில் இல்லை. (கண்டிப்பாக அந்த பேப்பருக்கான காசை நான் கொடுத்துவிட்டேன், யாதொரு ஐயமுமில்லை இது வரை ) ‘இல்ல அங்கிள் நீங்க வேலை மும்முரத்தில மறந்திருப்பீங்க , நல்லா கணக்குப்போட்டுப்பாருங்க’ என்று கூறியவாறு அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். அவர்களுக்கு சமாதானமாகவேயில்லை.ஏற்கனவே முதுமையினால் சுருங்கிய அவர்களின் முகம் வாடியே விட்டது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது. இருப்பினும் எனது பிடியில் தளராது நின்று சொல்லிவிட்டே நடந்தேன். அவர்களுக்கு கொஞ்சமும் சம்மதமில்லை என் பேச்சில்.

 

சில நாட்கள் கழிந்தது. தம்பி உங்களுக்காக மட்டுமே ‘பாம்பே டைம்ஸ்’ எடுத்து வெச்சிருக்கேன். யாருக்கும் தெரியாம கொண்டுபோங்க என்றார். இத்தனை நாட்கள் என்னை உறுத்திக்கொண்டிருந்தது சட்டெனெ விலகியது போல தோன்றியது. அவர் கண்களில் தெரிந்த அந்த குற்றவுணர்வு என்னை என்னவோ செய்தது. இருப்பினும் அவர் கடைசி வரை என்னைக் கேட்கவேயில்லை ‘அந்த’ நாளிதழுக்கான காசை கொடுத்தாயா என்று.!

 

கூடுதல் சீனி

பாம்பேயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு மராட்டி தேநீர்க்கடை வைத்து நடத்திக்கொண்டிருந்தார்.எப்போதும் அங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டே லோக்கல் ட்ரெயினைப் பிடிக்கச்செல்வது வழக்கம். எப்போதாவது எனது யாஷிகா கேமராவை (பழைய ஃபிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும்) எடுத்துக்கொண்டு சும்மா படம் எடுக்கவென்று அலைவது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு என்னிடம் தயங்கித்தயங்கி தம்பி, என்னை ஒரு படம் எடுங்களேன், டீ போடுவது போல, ஃபோட்டோக்ராஃபரைக் கூப்பிட்டால் நிறைய காசு கேட்கிறான் என்றார். சரி நில்லுங்க என்றபோது , கரண்டியை நன்கு பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தார். சாலையில் போய்க்கொண்டிருந்தவர்கள் ஃப்ரேமிற்குள்ளும் வந்து போய்க்கொண்டிருக்க, கொஞ்சம் பொறுங்க என்றேன்..இருப்பினும் சமாளித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

சரியான தருணத்தில் அவரும் கரண்டியும்,மட்டும் ஃப்ரேமிற்குள் வந்துவிட ஒரு க்ளிக். அதன் பிறகு ரோல் நிறைந்தவுடன் , டெவெலெப் செய்து பிரிண்ட் எடுத்து அவரிடம் ஒரு நாள் கொடுத்தேன். வாங்கிப்பார்த்தவர் முகத்தில் அன்றைய சாயா முழுதும் ஒரே மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது போல சந்தோஷம். அன்று எனக்கு ஒரு காப்பி கிடைத்தது கூடுதல் சீனியுடன் இலவசமாக…! பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பக்க சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டி வைத்தார். சாயா குடிக்க வருபவர்களிடம் பெருமையாக அதைக்காண்பிக்கவும் செய்வார்.

நானும் தொடர்ந்து படங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறேன் நேஷனல் ஜியோக்ரஃபி புகைப்பட போட்டிக்கு , ஒரு போதும் எனக்கு அத்தனை மகிழ்ச்சி கிடைத்ததில்லை, அந்த சாயாக்கடை நண்பரின் முகத்தில் இருந்ததை விட.! எனது பழைய ரோல்களை தேடிப்பார்த்ததில் ஒருபோதும் அந்த நெகட்டிவ் கிடைக்கவில்லை. அவரின் சிரிப்பும், அந்த காப்பியின் சுவையும் இன்றும் அழியாப்புகைப்படம் போல என்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கும்போது அசையாத புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?.

காலேஜ் யுவதி

 

அன்று என்னவோ தெரியவில்லை,ஒரு வண்டியையும் காணவில்லை. சரி கிடைத்த 333ல் மெஜெஸ்ட்டிக் செல்லலாமென்று ஏறிவிட்டேன்.காசு குறைந்த கட்டண வண்டி அது. உட்கார இடம் கிடைக்கவே இல்லை.நின்று கொண்டே பயணித்தேன். ஏறியதிலிருந்து அந்தப்பெண்ணைக் கவனித்துக் கொண்டே வந்தேன். காலேஜ் யுவதி தான், கையில் மொபைலைப் பிடித்துக்கொண்டு காதுகளில் இயர்ஃபோன்கள் மாட்டிக்கொண்டு வலது தோளில் ஒரு கைப்பையுமாக நின்று கொண்டிருந்தவள் , அருகிலிருக்கும் ஒருவரை எழுந்து நிற்கச்சொன்னார். அவர் தவறுதலாக லேடீஸ் சீட்டில் அமர்ந்துகொண்டிருந்தார். மெஜஸ்டிக் வரை செல்பவர் போலிருக்கிறது. அவர் கெஞ்சினார், ‘மேடம் எனக்கு மெஜஸ்ட்டிக் வரை போகணும்’ , கால்களுக்கிடையே நிறைய லக்கேஜை வைத்திருந்தார். ‘என்னால இதையெல்லாம் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்க இயலாதென்று’ கூறிக் கொண்டிருந்தார். அந்தப்பெண் அதை சட்டை செய்யவேயில்லை. பிறகும் சென்று நடத்துனரிடம் முறையிட்டாள். அவரும் ‘ஏகப்பட்ட லக்கேஜ் வெச்சிருக்கார்மா கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போங்க’ என்று சமாதானப்படுத்தி விட்டு,பிறருக்கு சீட்டு கொடுக்கச்சென்று விட்டார்.

 

பின்னரும் விடாது அரற்றிய அந்தப்பெண்மணி , அருகிலிருந்த முதியவரை ‘எழுந்து நில்லுங்க, இது லேடீஸ் சீட்’ என்று வாதம் செய்யத்தொடங்கினாள். ‘ஏம்மா இந்த வயசில நான் நின்னுதான் ஆகணுமா..? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா’ என்றார்.ஒவ்வொருத்தரையும் கிளப்பி விடுவதிலேயே குறியாயிருந்தார் அந்தப்பெண். பொறுத்துப் பொறுத்துப்பார்த்தவள் மீண்டும் நடத்துனரிடம் சென்று முறையிட்டாள். ‘சொல்ப்ப அட்ஜஸ்ட் மாடுக்கொளி’ என்று அவரும் சொல்லிப்பார்த்தார்.யாரையும் பொருட் படுத்தவேயில்லை, ‘எழுந்தாலே ஆயிற்று’ என்றவள் அந்த லக்கேஜ்காரரை எழுப்பி விட்டு அமர்ந்தே கொண்டாள்.

நானும் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன், என்னதான் ஆகிறது என்று. கால்களை அந்த லக்கேஜிற்குள் ஒருவாறு திணித்துக்கொண்டு அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டிருந்தாள்.அடுத்த நிறுத்தத்தில் டிக்கெட் செக்கிங் செய்வதற்கு பஸ்ஸுக்குள் ஏறி வந்தனர், அனைவரையும் பரிசோதித்துக் கொண்டே வந்தவர்கள் அந்த லக்கேஜ்காரரிடம், ‘ஏம்ம்பா இவ்ளவ் லக்கேஜ், இதுக்கு டிக்கெட் வாங்கலியா’ என்று கேட்டுக்கொண்டே அந்தப்பெண்ணிடம் டிக்கெட் என்று கேட்டபோது , பஸ் பாஸை எடுத்து நீட்டினாள். ‘ஏம்மா பாஸ் டேட் எக்ஸ்பைர்டும்மா , ஃபைன் கட்ட வேண்டிவரும்’ என்று கூறிய இன்ஸ்பெக்டர்கள் நடத்துனரைக் கடிந்துகொண்டு அவளை வலுக்கட்டாயமாக இறக்கிக்கூட்டிச்சென்றனர். பஸ்ஸுக்குள்ளிருந்து கீழிறங்கிச்சென்ற அவளையே சன்னல் வழியே அனைவரும் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

 

‘தொப்பிபாய்’

 

மல்லு பஜார் ஷாப்பிங் மாலில் , கல்லாவில் இருக்கும் ஒரு பாய் (முஸ்லீம்), ரம்ஜானுக்காக அன்னிக்கு ஒரு புது தொப்பி ஒண்ணு போட்டிருந்தார்.நிறைய வேலைப்பாடுகளும், எம்ப்ராய்ட்ரிகளுமா ஏகத்துக்கு நல்லாருந்தது.சில்க் துணியால தைத்தது போல,அந்த நினைப்பிலேயே அவர் அன்னிக்கு பில் போட்டுக்கிட்டு இருந்தார். கடைல எடுத்து வந்த சாமான்களை பில் போட வந்தவன்,அவர் தொப்பியை பார்த்து , ‘என்ன பாய் பிரமாதமா இருக்கே’ என்று சொன்னேன். சிரித்துக்கொண்டே ஹ்ம்,,என்றார் , நான் சொன்னதை ரசிக்கவில்லை போல. ஏதோ நினைப்பிலிருந்த நான்  என்னையும் அறியாமல் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டேன்.அவரது முகம் பார்க்கச்சகிக்காது போனதை என்னால் பார்க்க முடிந்தது. இருந்தாலும் அந்த நினைப்பு என்னை உள்ளூர அரித்துக்கொண்டுதானிருந்தது. பிறகு அதே கடைக்கு செல்லும்போதெல்லாம் என்னைப்பார்ப்பதை தவிர்க்கிறார் என்று தெரிந்தது. நானும் அதை உணர்ந்து கவனியாது விட்டது போலவே காட்டிக்கொண்டேன். எப்படியாவது இந்த இறுக்கத்தை தளர்த்திவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

 

வெகு நாட்கள் கழித்து சாலையோர கடையில் தேநீரருந்திக்கொண்டிருந்தார் அவர்.. என்ன பாய் “சாய் கிடைக்குமா” என்று போகிற வாக்கில் அவரிடம் கேட்டேன். ‘இந்தா குடி’ என்று தம்ளரை என்னை நோக்கி நீட்டி என்மேல் கவிழ்த்து விடுவது போல பாவனை காட்டினார். சரி ஏதோ என்னாலியன்ற அளவு நிலைமையை , இறுக்கத்தை தளர்த்தி விட்டேன் என்று நினைத்துக்கொண்டு , சிரித்தபடியே வீட்டிற்கு வந்து விட்டேன். இப்போது ஓரளவு அவரது மனம் ஆசுவாசப்பட்டிருக்கும் போல என்றெண்ணி எனக்குள் மகிழ்ச்சி.

 

மீண்டும் அதே கடைக்குத்தான் போயாக வேண்டும்,அருகிலிருக்கும் கொஞ்சம் பெரிய கடை , எல்லாம் கிடைக்கும் என்பதால்.எப்போது போனாலும் அந்த ‘தொப்பிபாய்’ இருக்கிறாரா என்றே கண்கள் தேடும். அன்று என் முன்னாலேயே வந்துவிட்டார். அவர் முகம் வழக்கத்தை விடவும் சுருங்கிப் போயிருந்தது. ‘என்ன பாய் என்னாச்சு’ என்றேன். “இல்ல அன்னிக்கு எல்லார் முன்னாலயும் டீக்ளாஸ உயர்த்திக்காமிச்சு, ஊத்த முயற்சிச்சது தப்பு தான், மன்னிக்கணும்’ என்றார்.

 

இந்த மன்னிப்பை நான் அன்னிக்கு அவரப்பார்த்து சிரிச்சப்பவே கேட்டிருந்தால், இவ்வளவு தூரம்,இத்தனை காலம் பிடித்திருக்காது,இறுக்கம் தளர்வதற்கு. ஹ்ம்…!

 

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

Series Navigationவரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *