“என்ன, ராதிகா, அப்படிப் பாக்கறே? இதுக்கு முன்னாடி மிஸஸ் சிந்தியா தீனதயாளனை எங்கேயாச்சும் பாத்திருக்கியா?” என்று முதல்வர் தெரெஸ்ஸா வினவியதும், ஒரு திடுக்கீட்டுடன் அவள் தன் பார்வையை நீக்கிக்கொண்டதோடு, தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் தவழவிட்டுக்கொண்டாள்.
“இல்லே, மேடம்,. பாத்ததில்லே.”
“சரி…. இப்ப நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யணும்னா, இந்தக் காலேஜுக்குள்ளாறவே இவங்க குடுத்திருக்கிற டிக்கெட்ஸை வித்துத் தரணும். அதுக்குப் பெறகு, வெளியிடங்கள்லேயும் – பல பணக்காரப் பெரிய மனுசங்க வீடுகளுக்குப் போய் – முடிஞ்ச அளவுக்கு டிக்கெட்ஸை விக்கணும். ரொம்ப நல்ல காரியம் பண்றாங்க. அதனால நீங்க ஒத்துழைக்கணும்…”
“பண்றோம், மேடம்.”
“யெஸ், மேடம்.”
“ஆமா? இவங்க ரெண்டு பேருமே ஃபர்ஸ்ட் ரேங்க்னு சொன்னீங்காளே, அதெப்படி ரெண்டுபேருக்கும் ஃபர்ஸ்ட் ரேங்க் கிடைக்கும்? அதுலயும் ஒரே வகுப்பில?”
“ஒரு தரம் இவ வாங்குவா, அடுத்த தரம் அவ வாங்குவா. அதான் அப்படிச் சொன்னேன்.”
“ஓ!”
“டிக்கெட் புக்ஸை நீங்க இவங்களாண்ட தரலாம்.”
சிந்தியா 25, 50, 100 ரூபாய் டிக்கெட்டுகள் அடங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆளுக்கு ஒன்று வீதம் கொடுத்தாள்.
“ஒவ்வொண்ணிலேயும் 20 டிக்கெட்ஸ் இருக்கும்மா.”
ராதிகா தலையைக் கூட அசைக்காமல், மவுனமாயிருக்க, பத்மஜாதான், “சரிங்க,” என்று சிந்தியாவுக்குப் பதில் சொன்னாள்.
“இன்ன தேதிக்குள்ள வித்துத் தரணும்கிற கட்டாயமெல்லாம் கிடையாது. உங்க சவுகரியம். ஆனா, எந்த அளவுக்கு சீக்கிரம் முடியுமோ அந்த அளவுக்கு சீக்கிரமா வித்துக் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும். இந்த ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போடுங்கம்மா!”
சிந்தியா டிக்கெட்டுகளின் இலக்கங்களைப் பதிவேட்டில் எழுதிய பின் அவர்களிடம் அதை நீட்டினாள். கையொப்பமிடும் போது ராதிகாவுக்குத் திடீரென்று ஒரு யோசனை வந்தது. ‘ராதிகா தீனதயாளன்’ என்று கையொப்பமிட்டால் என்ன என்கிற எண்ணம்தான். ஆனால், பாடுபட்டு அதை அடக்கிக்கொண்டாள்.
கல்லூரியைப் பொறுத்த மட்டில் அவள் ‘டி. ராதிகா’ மட்டுமே யாதலால், அவ்வாறு மாற்றி எழுதுதல் முறையாக இருக்காது என்பதோடு, முதல்வரையும், பத்மஜாவையும் புருவம் உயர்த்தச் செய்யும் என்பதாலும், அப்படி எழுதிச் சிந்தியாவின் முகபாவம் பார்க்கும் குறுகுறுப்பை அவள் கைவிட்டாள். பின்னர் இருவரும் தங்கள் வகுப்பறை நோக்கி நடக்கலானார்கள். முந்திய வாரத்தில்தான் சிந்தியா எனும் பெயருள்ள ஒரு பெண்மணி தன் அப்பாவின் வாழ்க்கையில் பங்கேற்று வருகிறாள் எனும் உண்மை தனக்குத் தெரியவந்துள்ள போதிலும், அதற்கு அடுத்த சந்திப்பு இவ்வாறு சற்றும் எதிர்பாராத முறையில் மிக விரைவில் ஏற்பட்டுவிட்டது ராதிகாவை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.
‘என்னமோ நடக்கப் போகிறது – அல்லது வெடிக்கப் போகிறது! அப்பா நடத்திக்கொண்டிருக்கும் துரோக வாழ்க்கை அம்மாவுக்குத் தெரிந்துவிடப் போகிறதா? காரணம் இல்லாமல் இந்தச் சந்திப்பு நிகழாது! … விதி ஏதோ விளையாடப் போகிறது என்றுதான் தோன்றுகிறது. இல்லாவிட்டால், இத்தனை நாளும் நேராத வண்ணமக, இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவளை மூன்று முறை பார்க்க நேர்ந்திருக்காது. அதிலும் இப்போது நடந்துள்ளது நேரடியான சந்திப்பு! …இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’
‘என்னடி, ராதிகா, என்னவோ போல ஆயிட்டே திடீர்னு? அஞ்சாறு நாளா நீ ஒரு மாதிரியாத்தாண்டி இருக்கே. என்னிக்குத்தான் மனசு விட்டு ஏங்கிட்ட எல்லாத்தையும் சொல்லப் போறியோ! இப்படி அடிக்கடி மூட் அவ்ட்டானா எக்ஸாம் சரியா எழுத முடியாதுடி! ரேங்க் போயிடும்! அன்னைக்குத் திடீர்னு காலேஜுக்கு மட்டம் போட்டே. அது வீட்டுக்குத் தெரியாததுல உனக்கு ஒரு நிம்மதின்னு நீயே சொன்னதால, வீட்டுக்குக்கூடத் தெரியாம நீ என்னமோ செய்துக்கிட்டு இருக்கேன்னுதான் முடிவு பண்ணும்படி இருக்கு… சல்வார்-கமீஸ்-துப்பட்டாவில ஃபோட்டோ வேற எடுத்துக்கிட்டே. எல்லாம் ஒரே மூடு மந்திரமாவில்ல இருக்கு? ஏண்டி, நான் இவ்வளவு பேசறேன், நீ வாயவே தொறக்காம இருக்கியே! உம்?” என்ற பத்மஜா திகைப்புடன் அவளைப் பார்த்தாள்.
ராதிகாவின் கண்கள் சிவந்திருந்ததைக் கவனித்து அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. விழிகள் விரிந்தன. அவள் கையைப் பற்றி அழுத்தி, “என்ன பிரச்னைடி உனக்கு? சொல்லலாம்னா சொல்லு,” என்றாள் ஆதரவாக.
“ஒரு பிரச்னை இருக்குதான். ஆனா அது என்னோட பிரச்னை இல்லேடி, பத்மஜா. அது என்னோட பிரச்னையா இருந்திச்சுன்னா அதை உங்கிட்டேர்ந்து மறைக்க மாட்டேண்டி. அது வேற ஒருத்தரோட கவுரவப் பிரச்னை. இப்ப என்னை வேற எதுவும் பேச வைக்காதேடி, பத்மஜா. அன்னைக்கே சொன்னேனில்ல – சமயம் வந்து, அதை உங்கிட்ட சொல்லணும்கிற மூடும் வந்தா, நானே உங்கிட்ட சொல்லுவேண்டி. அது வரைக்கும் என்னை எதுவும் கேக்காதே… அப்புறம் இன்னொண்ணு. நீயா எத்தையாச்சும் கண்டபடி கற்பனை பண்ணிக்கிட்டு எங்க அம்மா கிட்டயோ அப்பா கிட்டயோ போய், எனக்கு நல்லது செய்யிறதா நினைச்சுக்கிட்டு, ‘ராதிகா இப்பல்லாம் ஒரு மாதிரி இருக்கா, அவளைக் கவனிங்க’ ன்னெல்லாம் பேசி ஒற்றன் வேலையெல்லாம் பண்ணாதே. தெரிஞ்சிச்சா? ஏற்கெனவே ரெண்டு பேரும் என்னைக் குடை குடைன்னு குடைஞ்சுக்கிட்டு இருக்காங்க!”
“சரிடி, ராதிகா. உன்னை இனிமேப்பட்டு நான் எதுவும் கேக்கல்லே. உன் கவலையை என்னோட பகிர்ந்துக்கிட்டா உன் மனச்சுமை குறையுமேன்னுதான் கேட்டேன்.”
“என்னோட சுமை தாங்க முடியாத பாரமா ஆச்சுன்னா அதை உன் தலையிலேயும் கொஞ்சம் இறக்கி வைக்கிறேண்டி, பத்மஜா! அது வரைக்கும் பொறுமையா யிரு!”
இருவரும் வகுப்பறைக்குப் போய் உட்கார்ந்தார்கள். விரிவுரையாளர் நடத்திக்கொண்டிருந்தது என்ன பாடம் என்பது கூட ராதிகாவின் மூளையில் பதிவாகவிலலை. அவள் எண்ணமெல்லாம் சிந்தியாவையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.
சற்று முன்னர் மிக அருகில் அவளைப் பார்த்திருந்த ராதிகாவுக்கு அவளது அழகுக்கு ஈடு இணை இருக்க முடியாது என்று தோன்றிக்கொண்டிருந்தது. அவள் கண்கள் காந்த சக்தியுடையவை என்று அவளுக்குத் தோன்றியது. அவற்றின் அழகோ அபாரம். எந்தப் பெண்ணையும் பொறாமை கொள்ள வைக்கும் ஈர்ப்பு அவற்றில் இருந்ததாய் அவள் நினைத்தாள். அவற்றில் ஒரு குறுகுறுப்பும், பேசும் தன்மையும் இருந்ததை அவளால் மறுக்க முடியவில்லை. அவள் முகத்தில் தவழ்ந்துகொண்டிருந்த புன்சிரிப்பு இயல்பானதே என்று அவள் மீது தனக்கிருந்த வெறுப்பையும் மீறி ராதிகா நினைக்கத் தலைப்பட்டாள்!
தன் அம்மா பற்றிய நினைப்பும் அந்தக் கணத்தில் அவளுக்கு வந்தது. ‘இவள் ஒரு தினுசான அழகி என்றால், என் அம்மா வேறு தினுசான அழகி! இருவருமே ஒருவரோடொருவர் போட்டிபோடும் அழகிகள்! ஆனால் சிந்தியா ஒப்பனை செய்துகொண்டிருந்தாள் என்பது பெரியவையாக இருந்தது மட்டுமே அவற்றின் அழகுக்குக் காரணம் என்று சொல்ல முடியாது அவளது அழகைக் கூட்டிக்காட்ட உதவியது. அம்மாவும் ஒப்பனை செய்து கொண்டால் தோற்றத்தில் அவளைத் தூக்கி அடிப்பாளோ!…. அப்பா! அப்பா! இந்த வயதில் உங்களுக்கு ஏன் புத்தி இப்படி மழுங்கிப் போயிற்று?….அழகான நல்ல மனைவி மணிமணியாய் இரண்டு குழந்தைகளைப் பெற்றுத் தந்ததற்குப் பிறகு, இன்னொரு பெண்ணின் மீது உங்களுக்கு நாட்டம் வருகிறது என்றால், உங்களை என்ன சொல்ல! கேட்டால், காதல் என்று சப்பைக்கட்டுக் கட்டுவீர்கள். இதற்குப் பெயர் காதலா, அப்பா? இது காமம். அப்பட்டமான காமம். இதுதான் காதல் என்றால், இதுகாறும் நீங்கள் அம்மாவின்மீது கொண்டிருந்தது வெறும் காமம் என்றல்லவா ஆகிறது! நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போது அம்மாவுக்கு நீங்கள் எழுதிய கடிதம் ஒன்று தற்செயலாக என் கையில் சிக்க, நான் ஓர் ஆர்வக்கோளாற்றில் அதைப் படித்தேன். அதில் உங்களுக்கு அம்மாவின் மீது கரைகாணாக் காதல் என்று எழுதியிருந்தீர்களே! அப்படியானால், அது பொய்யா, இது பொய்யா? …’
அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த பத்மஜா, “ஏய்! மிஸ் ‘நோட்ஸ் சொல்றேன், எழுதிக்குங்க’ன்றாங்கடி…தரையில என்னத்தைடி வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருக்குறே? நோட்டை எடுத்துப் பிரிடி…” என்று அவளைத் தொட்டுக் கிள்ளிய பிறகுதான் அவள் தன்னுணர்வு வரப்பெற்றவளாய் நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டாள்.
… கல்லூரி விட்டதும், ராதிகாவும் பத்மஜாவும் வெளியே வந்தார்கள்.
“டிக்கெட் விக்கிறதுக்கு எப்பப் போலாம்? நாளையிலேர்ந்து ஆரம்பிக்கலாமாடி?” என்றாள் பத்மஜா.
“போலாம்.”
“அந்த சிந்தியா தீனதயாளன் பயங்கரமான அழகு இல்லே, ராதிகா? அவங்க கண்ணை இன்னைக்கெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குடி. நடிகை ஸ்ரீவித்யாவோட கண்ணு மாதிரி!”
“ஆமாண்டி. சரியாச் சொன்னே!”
“அவங்களுக்கு நல்ல நிறமும் இருக்கு – மங்களூர்ப் பொண்ணுங்களாட்டமா!”
“ஆமா. ”
“சிரிச்ச முகம். சிலர் செயற்கையா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க – தனக்கு சிரிச்ச முகம்னு எல்லாரும் சொல்லணும்கிறதுக்காக. ஆனா அவங்க அப்படி இல்லே. மெய்யாலுமே அவங்களுக்கு சிரிச்ச முகம்தான்!”
“ஆமாமா.”
“ரொம்ப நல்லவங்களாவும் தெரியறாங்க. எனக்கு அவங்களை ரொம்பவே பிடிச்சுப் போயிறுச்சு.”
பத்மஜாவின் இந்தக் கருத்து வெளிப்பாட்டுக்கு ராதிகா பதில் சொல்லவில்லை. பத்மஜா சட்டென்று திரும்பி அவளைக் கவனித்தாள். அவளது முகம் இறுகி யிருந்ததாய் அவளுக்குத் தோன்றியதில் சற்றே வியப்படைந்தாள்.
“அவங்களை உனக்குப் பிடிக்கல்லையாடி?”
“அப்படின்னெல்லாம் ஒண்ணுமில்லே.”
“நான் அவங்களைப் பத்திச் சொன்ன எல்லாத்துக்கும் உம் கொட்டிக்கிடுட்டும், ஆமா ஆமான்னுக்கிட்டும் இருந்தே. ஆனா இதுக்கு மட்டும் நீ எதுவுமே சொல்லல்லியேடி?”
“நீ சொன்ன மத்ததெல்லாமே கண்கூடாத் தெரியற வெளிப்படையான விஷயங்கள். ஆனா, நல்லவங்கன்னு எதை வெச்சு மதிப்பிட முடியும்?”
“முகத்தைப் பாத்தாச் தெரியாதாடி? அதுலயும் ஒரு ஆளோட கண்ணைப் பாத்தா தெரிஞ்சு போயிடுமேடி, நல்ல ஆளா, கெட்ட ஆளான்னு?”
“கண்ணு அழாகாவும் கவர்ச்சியாவும் இருக்குறது வேற, அதுல நல்ல குணங்கள் தெரியறது வேற! அவங்க கண்ணோட அழகை மட்டும் வெச்சு அவங்க நல்லவங்கன்னு நீ முடிவு கட்றே! அதை நான் ஒத்துக்க முடியாது!”
“அதுக்கு ஏண்டி இப்படிக் கத்தறே? நாம எதுக்கோ சண்டை போட்டுக்கறோம்னு பாக்குறவங்க நினைக்கப் போறாங்கடி!”
“ஐம் சாரி. சத்தமாப் பேசினேனா, என்ன?” என்றாள் ராதிகா. தான் அளவுக்கு மீறிக் குரலை உயர்த்திப் பேசியது, பேசி முடித்த மறு கணமே அவளுக்குப் புரிந்து போயிற்று. ஆனாலும், தன்னையும் மீறி நடந்து விட்ட செயல் என்பது போல் அவள் இவ்வாறு கேட்டுச் சமாளிக்க முற்பட்டாள்.
ராதிகா சொன்னது பொய் என்பது பத்மஜாவுக்குப் புரிந்து போயிற்று. ஆனால் அதற்கான பின்னணிதான் அவளது ஊகிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ‘சிந்தியாவின் அபரிமித அழகைப் பார்த்து இவளுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது. மனத்துள் வைத்து அமுக்கப் பார்த்திருக்கிறாள். முடியவில்லை. அது வெடித்துப் புறப்பட்டுக் கடுஞ்சொற்களாகச் சிதறிவிட்டது!’
“அவளோட அழகைப் பாத்து எனக்கு ஏதோ பொறாமைன்னு நினச்சுடாதடி, பத்மஜா!” என்ற ராதிகா, தன் அம்மாவின் அழகையும் சிந்தியாவின் அழகையும் ஒப்பிடுதல் மூலம் தன் மனத்தில் எழும் கணிப்புத்தான் பத்மஜாவின் மனத்திலும் எழுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினாள். ‘ஒரு வேளை என் அம்மா என்பதால் அம்மாவின் அழகு எனக்குப் பெரிதாய்த் தோன்றுகிறதோ என்னவோ! இவள் சொல்லட்டும்!’
“எங்க அம்மாவைப் பத்தி என்ன நினைக்கிறே?”
இந்தக் கேள்வியின் பொருள் புரியாததால், “அப்படின்னா? நீ என்னடி கேக்கறே? தெளிவாச் சொல்லு,” என்றாள் பத்மஜா.
“இந்த ரெண்டு பேர்ல யாருடி அதிக அழகு?”
ராதிகாவின் எண்ணம் போன போக்கு பத்மஜாவை அயர்த்தியது. சிந்தியாவின் அழகு மீது அவளுக்கு நிச்சயமாய்ப் பொறாமைதான் ஏற்பட்டுவிட்டதென்றும், அதை மறைக்கத்தான் அவள் தேவையற்றுத் தன் அம்மாவைப் பேச்சில் இழுக்கிறாள் என்றும் அவளுக்குத் தோன்றியது.
“உங்கம்மா ஒரு வித அழகுன்னா, சிந்தியா வேற வித அழகு. ரெண்டு பேருமே ரொம்ப அழகுதான். ரெண்டு பேர்ல யார் அதிக அழகுன்னு சொல்றது ரொம்பவே கஷ்டம்! சர்க்கரை போட்ட மில்க் அல்வாவையும், வெல்லம் போட்டுப் பண்ணின திரட்டுப் பாலையும் கம்ப்பேர் பண்ணிக் கேள்வி கேக்குற மாதிரிடி!” என்று கூறி அவள் சிரித்த சிரிப்பில் ராதிகாவும் கலந்துகொண்டாள். அந்தச் சிரிப்புத் தேவைக்கு அதிகமான சுருதியில் இரைச்சலாக இருந்தது. அதில் அளவுகடந்த உற்சாகம் கரை புரண்டது.
பத்மஜா வியப்புடன் தலை திருப்பித்தன் தோழியை ஆராய்ந்தாள். ராதிகா சிரிப்பே வடிவமாக இருந்தாள். பற்கள இன்னமும் வெளியெ தெரிந்துகொண்டிருந்தன. ‘சிந்தியாவின் அழகு மீது இவளுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டதென்பது இப்போது உறுதிப்பட்டுவிட்டது! தன் அம்மாவும் பேரழகிதான் என்பதை என் வாயால் கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டு தன் பொறாமையின் பொருமலைக் குறைத்துக் கொள்ளுகிறாள் இவள்.’
“இன்னொண்ணும் சொல்லட்டுமாடி, ராதிகா?”
“சொல்லு.”
“நீ அச்சு உங்கம்மா. சிந்தியாவோட கண்ணு எக்ஸ்ப்ரெஸ்ஸிவா இருக்குன்னா உங்கம்மா கண்ணு அகலமா, ஆழமா, அமைதியான ஒரு கடலை ஞாபகப்படுத்துற மாதிரியான தெய்வீக அழகோட இருக்கு. உன்னோட கண்ணுக்கு நீ அச்சு அசல் உங்கம்மாவைத்தான் கொண்டிருக்கேடி, ராதிகா!”
“சரி, சரி, போதும். நீ ஒண்ணும் என்னோட கண்ணழகைப் புகழவேண்டாம். நான் எங்கம்மாவைப் பத்தித்தானே கேட்டேனாம்?”
பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் நின்றார்கள். முதலில் பத்மாஜாவுக்கான பேருந்து வந்து அவள் கிளம்பிப் போனபின், ராதிகா தனது பேருந்துக்குக் காத்திருக்க நேர்ந்த நேரத்தில் அவளது சிந்தனை சிந்தியாவைச் சுற்றத் தொடங்கிற்று. ‘அவளுக்கு எத்தனை வயது இருக்கும்? ஒரு முப்பது வயதுப் பெண் போல அவள் தெரிகிறாளே? ஒப்பனையின் விளைவாக அப்படித் தெரிகிறாளா? இல்லாவிட்டால் உண்மையிலேயே அவள் முப்பது – முப்பத்தைந்துக்குள் இருப்பவளா? இவளை எங்கே, எவ்வாறு பிடித்தார் இந்த அப்பா? எப்படி அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது இந்த அளவுக்குப் போயிற்று?…’
“ஏய், ராதிகா! உன்னோட பஸ்டி! என்ன யோசனை? காலியா யிருக்கு, பாரு. ஏறு, ஏறு!’ என்று அப்போதுதான் பேருந்து நிறுத்தத்துக்கு வந்த அவள் வகுப்புத் தோழி ஒருத்தி அவள் தோளைத் தொட்டு உசுப்ப, அவள் தன் சிந்தனை கலைந்து, அசட்டுப் புன்சிரிப்புடன் ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டு சாளரத்தோர இருக்கை பிடித்து உட்கார்ந்துகொண்டாள்.
தன் எண்ணங்கள் இதே பாணியில் தொடர்ந்தால், தன்னால் படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாமல் போகலாம் என்பதால், படிப்பு முடியும் வரை அவற்றை ஒரங்கட்ட வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள். ஆனால் அது சாத்தியப்படும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
தெறி கெட்டுப் பாயும் தன் எண்ணங்களுடன் கடைசியில் அவள் ஓர் உடன்பாட்டுக்கு வந்தாள். அதாவது, பேருந்தில் பயணிக்கும் போது, குளிக்கும் போது, சாப்பிடும்போது போன்ற நேரங்களில் மட்டுமே அப்பா-சிந்தியா பற்றி யோசிக்கவேண்டும், மற்ற நேரங்களில் அன்று என்கிற முடிவுதான் அது.
திடீரென்று அவளது மூளை நரம்பொன்று புரண்டது. அவள் சற்றே உற்சாகமானாள். ‘அப்பாவிடம் ஒரு டிக்கெட்டைக் கொடுத்து, சிந்தியா தீனதயாளன் பற்றியும் சொல்லவேண்டும். அப்போது அவர் முகம் மாறுகிறதா என்று உன்னிப்பாய்க் கவனிக்கவேண்டும். … இந்த அப்பாவைச் சும்மா விடக்கூடாது. இப்படித்தான் அடிக்கடி எதையாவது பேசி, அல்லது செய்து, அவரைக் குழப்பத்தில் ஆழ்த்த வேன்டும் – இவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டதோ என்னும் குழப்பத்தில்!
… அவள் வீட்டை யடைந்த போது, தீனதயாளன் வந்துவிட்டிருந்தார். காப்பி குடிக்க அவளுக்காகக் காத்துக் கொன்டிருந்தார். ‘இவ்வளவு பாசமுள்ள அப்பா ஒரு மோசக்காரராகவும் இருக்கிறாரே’ என்கிற வேதனைதான் அவளுக்கு ஏற்பட்டது. சிற்றுண்டி அருந்தும் முன் கை கழுவ அவர் கழுவுதொட்டியை நோக்கி நடந்துகொன்டிருந்த போது, “அப்பா! இன்னைக்கு சிந்தியா தீனதயாளன் எங்க காலேஜுக்கு வந்திருந்தாங்க!” என்றாள் உற்சாகமாக.
நடந்துகொன்டிருந்த தீனதயாளன் யாரோ அவரைப் பிடித்து நிறுத்தினார்ப்போல் ஒரு நொடி நின்றுவிட்டு, அதன் பின் தமது நடையைத் தொடர்ந்தார். “சிந்தியா? தீனதயாளன்? யாரது? யாராவது பிரபல எழுத்தாளர்ர, இல்லாட்டி எம்.எல்.ஏவா?” என்று தம் கையைக் கழுவியபடி அவர் அவள் புறம் திரும்பிப் பாராமலே வினவினார்.
“அவங்க பெரிய சோஷியல் வொர்க்கராமேப்பா? நீங்க கேள்விப்பட்டதில்லையா?”
“இல்லேம்மா. இப்ப நீ சொல்லித்தான் அந்தப் பேரையே கேக்கறேன். மதர் தெரஸ்ஸா மாதிரியான பெரிய சோஷியல் வொர்க்கர்ஸ் பத்தித்தான் கேள்விப்பட்டிருக்குறேன். இவங்க யாராச்சும் அதிகம் பிரபலமாகாதவங்களாய் இருக்கும்! அது சரி, என்ன விஷயம்?” – தீனதயாளன் கழுவுதொட்டியின் முன்னால் நின்றபடியே கேட்டார். அவர் கை கழுவத் தேவையற்று அதிக நேரம் எடுத்துக்கொன்டதாய் அவளுக்குத் தோன்றியது. தலை திருப்பி அவள் புறம் பாராமலே அவர் பேசிக்கொன்டிருந்தது பொருள் பொதிந்த செயலாக அவளுக்குப் பட்டது.
“ஏதோ அநாதை விடுதிக்கு செக்ரட்டரியாம்ப்பா. சில டொனேஷன் டிக்கெட் புக்ஸை அவங்க கிட்டேருந்து வாங்கி எங்க ப்ரின்சிபல் எங்கள்ள சிலர் கிட்ட குடுத்து விக்கச் சொல்லியிருக்காங்க.”
தலை குனிந்தவாறு சாப்பாட்டு மேசைக்கு வந்த தீனதயாளன் முதலில் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தார். தொடரும்
jothigirija@live.com
- பாம்பே ட்ரீம்ஸ்
- வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
- கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது
- மாயக் கண்ணனின் மருகோன்
- நீங்காத நினைவுகள் – 9
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27
- கவிகங்கையின் ஞானஅனுபவம்
- குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
- பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10
- விட்டல் ராவின் கூடார நாட்கள்
- உ(ரு)ண்டை பூமியை நோக்கி
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9
- காவல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
- புகழ் பெற்ற ஏழைகள் – 14
- தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !
- மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
- ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
- மழையின் பாடல்.
- கவிஞன்
- அலையின் பாடல்