தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை மட்டுமல்லாது, ஆசைகாட்டியோ கட்டாயப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்யும் பிறமதத்தினர் மீதுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டியும் “குற்றவாளிகள் யார்?” எனும் தலைப்பில், எனது கட்டுரை யொன்று “திண்ணை”யில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அக்கட்டுரையில், மதமாற்றம் என்பது – தானாக விரும்பியே ஒருவர் பிற மதத்துக்கு மாறினாலும் – தேவையே அற்ற ஒன்று என்பதை விளக்கி ‘மகா பெரியவர்’ என்று கொண்டாடப்பட்ட அமரர் காஞ்சி சங்கராசாரியர் அருள்மிகு சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பல நாள் முன்னர் வெளியிட்ட கருத்து ஒன்று எடுத்தாளப்பட்டிருந்தது. மேல் நாட்டுக் கிறிஸ்தவர் ஒருவர் இந்துமதக் கோட்பாடுகளால் தாம் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்து மதத்தைத் தழுவத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் மகா பெரியவரிடம் கூறிய போது, “எல்லா மதங்களுமே மனிதர்க்கு நற்போதனைகளையே செய்கின்றன. நல்லவர்களாக இருங்கள் என்றே அறிவுரை கூறுகின்றன. அவ்வாறு வாழ்வதற்கு ஒருவர் மதம் மாற வேண்டிய தேவையே இல்லை. நீ எந்த மதத்தில் பிறந்தாயோ அதிலேயே இருந்து அம்மதக் கோட்பாடுகளின்படி வாழ முயற்சி செய்!” என்னும் பொருளில் அவர் பதிலளித்து அந்த அமெரிக்கரின் மதமாற்றத்தைத் தடுத்து விட்டாராம். அவரது இடத்தில் பிற மதத் தலைவர் எவரேனும் இருந்திருப்பின், எப்படியெல்லாம் துள்ளிக் குதித்துக் கொண்டாடி யிருந்திருப்பார்கள் என்பது நம் ஊகத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றன்று.
“இந்துத்துவம்” என்பதன் சாரமே மகா பெரியவரின் இந்தக் கூற்றில் அடங்கியுள்ளதென்று தோன்றுகிறது. இந்தப் பொருளின் அடிப்படையில்தான் இந்திய உச்சநீதி மன்றம் சில ஆண்டுகளுக்கு முன் ‘இந்துத்துவம்’ என்பதை ஆதரித்துச் சில சொற்களைத் தன் தீர்ப்பில் இணைத்திருந்திருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது. இந்துத்துவத்தைச் சரியாக இன்றளவும் புரிந்துகொள்ளாமல் தங்களை அத்துடன் இணைத்துக் கொண்டிருப்பவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாய்ப் பொருள் செய்துகொண்டதும், இந்துத்துவம் பிடிக்காதவர்கள் அதனின்று வேறுபடும் விதமாய்ப் பொருள் செய்துகொண்டு உச்ச நீதிமன்றத்தின் மீது அதிருப்தி கொண்டதும் – ஆக மொத்தம் எதிர்மாறான இரு வேறு கருத்துகள் அதனால் விளைந்ததும் – நமக்குத் தெரியும்.
சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறிய பெருந்தன்மையான கருத்தை இங்கே நினைவு கூர்ந்தமைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. (பெரியவருக்கும் முன்னதாய், நான் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் என் தந்தையாரும் இதே கருத்தை மதம் மாற விரும்பிய தம் மாணவர் ஒருவர்க்கு எடுத்துச் சொல்லி அவர் கிறிஸ்தவராக மாற இருந்ததைத் தடுத்துவிட்டார்.)
மதம் அல்லது ஜாதியைத் தன் உடலோடு ஒட்டிய உறுப்பாகவே மனிதன் கருதி வந்திருக்கிறான். தகாததும், தேவையற்றதுமான இக் கருத்திலிருந்து அவன் (இந்தியாவில்) இன்றளவும் விடுபடவே இல்லை என்பதைத்தான் இப்போதும் நடந்து வரும் ஜாதிக் கலவரங்களும், காதல் தோல்விச் சாவுகளும் மெய்ப்பித்து வருகின்றன. சாதிகளை அறவே ஒழிப்பதென்பது இப்போதைக்கு இயலாத ஒன்றுதான். ஆனால், இடைவிடாத பிரசாரங்களாலும், அறிவுரைகளாலும், நம் கல்வித்திட்டத்திலிருந்து நீக்கிவிட்ட நீதி போதனை வகுப்புகளை (மதங்கள் சாராத முறையில் – secular) மீண்டும் அமல்படுத்தி முறையாக நடத்துவதன் வாயிலாகவும் சிறுகச் சிறுகவேனும் சுயஜாதிப் பற்றும், வெறியும் இல்லாத புதிய தலைமுறையை உருவாக்க முடியும். சாதிகளை ஒழிப்பதற்குப் பல நூற்றாண்டுகள் ஆனாலும், ஜாதி உணர்வை – தான் இன்ன ஜாதி என்னும் நினைப்பையும் அதன்பாற்பட்ட பற்றையும், வெறியையும் – மக்களின் மனங்களிலிருந்து சில ஆண்டுகளிலேயே நீக்கி விட இயலும். இதைச் செய்யாமல், அவற்றை மேலும் மேலும் சீண்டி உசுப்பிவிட்டு நம் அரசியல்வாதிகளும், நாட்டை யாள்வோரும் ஆதாயம் தேடி வருகிறார்கள் என்பதே கசப்பான உண்மையாகும். இது எல்லாருக்குமே தெரிந்ததுதான். ஜாதி அரசியல் செய்து கொண்டிருப்பவர்களால்தான் இந்தியாவில் சாதிக்கலவரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மெத்தப்படித்தவர்களே தாங்கள் இன்ன சாதி என்கிற உணர்விலிருந்து விடுபட முயலவும் செய்யாமல் இருக்கையில், இரத்தத்தில் ஊறிப் போன மூடத்தனங்களுடன் வாழும் படிக்காதவர்கள் பற்றி என்ன சொல்ல!
“குற்றவாளிகள் யார்?” என்கிற அக் கட்டுரையில் இந்துக்கள் பலர் மதம் மாறுவதற்குக் காரணம் தீண்டாமை என்பதோடு, ‘உயர்ச்சாதி’ இந்துக்களைத் திருத்துவதற்கு இந்துமதாசாரியர்கள் எந்த நடவடிக்கையையும் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளவே யில்லை என்பதும் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது.
நம் நாடு விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி காஞ்சி சங்கராசாரிய சுவாமிகளைச் சந்தித்து அவருடன் உரையாடினார். இந்துமத (original) நூல்களில் – அதாவது சாத்திரங்களில் – தீண்டாமை என்பது அங்கீகரிக்கப்படவில்லை என்பது காந்தியடிகளின் வாதம். நியாயத்துக்குப் புறம்பான விதிகள் யாவும் தன்னலவாதிகள் செய்த இடைச்செருகல்களே என்பதும் அவரது துணிபு. ஆனால், காஞ்சி சுவாமிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களின் விவாதம் இழுபறியில் முடிந்தது. இது பற்றி அப்போது ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த அமரர் கல்கி அவர்கள் தமது கட்டுரையில் அஞ்சாமையோடும் நேர்மையோடும் தம் கருத்தை வெளியிட்டார். (சில ஆண்டுகளுக்கு முன்னால் அதைத் தமிழ் வார இதழ் ஒன்று எடுத்து வெளியிட்டிருந்தது.) முப்பது அல்லது நாற்பதுகளில் அப்படி ஒரு கருத்தை வெளியிட அபாரமான நெஞ்சுரம் வேண்டும். சொல்லுக்குச் சொல் அது சரியாக இல்லாதிருக்கலாம். ஆனால் அதன் சாரம் இதுதான்…
“காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் இந்து மதத்தின் தலைவர் அல்லர். அவர் சங்கர மடத்தின் தலைவர் பதவி வகிக்கும் வெறும் மடாதிபதி மட்டுமே.” – தாம் ஓர் அந்தணர் எனும் உணர்வை வெற்றிகொண்ட ஒரு நேர்மையாளரால் தான் இப்படி ஒரு துணிச்சலான கருத்தை வெளியிட முடியும்!
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை எல்லா இனத்தவரிலும் பெருகினால் இந்தியாவில் சாதிச் சண்டைகளும், அவற்றின் விளைவான இரத்தக்களரியும் ஒருகாலும் ஏற்படா. தீண்டாமைக்கு எதிரான இப்படி ஒரு நிலையை உருவாக்க இந்து மதத் தலைவர்கள் தவறியதன் விளைவாகவே இந்தியாவில் கிறிஸ்துவம் தழைக்கலாயிற்று என்பதில் ஐயமே இல்லை. இப்போது குய்யோ முறையோ என்று அடித்துக்கொண்டு என்ன லாபம்? இந்துக்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து விடுமே என்று சிலர் ஆயாசப்படுகிறார்கள். அப்படியே குறைந்தாலும் அதனால் யாருக்கு, என்ன இழப்பு? அது இழப்பேயானாலும், அது நேராதிருக்கத் தேவையான நடவடிக்கைகளை அப்படி அங்கலாய்க்கிறவர்கள் மேற்கொள்ளட்டுமே! யார் இவர்களைத் தடுத்தார்களாம்! இதுகாறும் மேற்கொள்ளாததற்கு என்ன காரணம் வைத்திருக்கிறார்கள் இவர்கள்?
ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர், திரு அக்னிவேஷ், தீண்டாமையை ஆதரிக்கும் புரி சங்கராசாரியரின் வாதத்தை ஏற்க மறுத்து, இந்து மத நூல்கள் தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை என்று ஆணித்தரமாய் அறிவித்து அவரை வாதுக்கு அழைத்தார். ஆனால் இன்றளவும் புரி சங்கராச்சாரியர் அவரது சவாலை ஏற்கவில்லை. பிராமணர்கள் பெருமளவு மாறிவிட்டார்கள் (ஒதுங்கியும் ஒடுங்கியும் விட்டார்கள்) என்பது உண்மைதான். ஆனால், தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள் புரிந்து வரும் ஜாதி இந்துக்களை இம்மதாசாரியர்கள் திருத்த வேண்டாமா? அவர்களைக் கண்டிக்க வேண்டாமா? (எப்படிக் கண்டிப்பார்களாம்! மதாசாரியர்களே இன்னும் திருந்தவில்லையே!)
தலித்துகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கும் பிராமணர்களுக்கும் இந்நாளில் கடுகளவும் சம்பந்தம் இல்லைதான். ஆனால் அவர்கள் தொடங்கி வைத்த அநீதிதான் இது என்று சொல்லப்படுகிறதே? இது சரியான தகவலா அல்லது தவறான ஒன்றா? விவரமானவர்களில் எவரேனும் விளக்குவார்களா? தெரிந்துகொள்ள ஆசை. எனினும் ஒருவர் ஓர் அநீதியைத் தொடங்கிவைத்தே இருந்திருந்தாலும் இன்னமும் அதைப் பிடித்துக்கொண்டு தொங்கும் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் சாதி இந்துக்கள்தானே?
படிப்புக்கும் சுயசாதிப்பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைச் சொல்லுவதன் பொருட்டும் “குற்றவாளிகள் யார்?” எனும் திண்ணைக் கட்டுரையைப் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டது.
அக்கட்டுரையைப் படித்ததும், என்னுடன் பணிபுரிந்த என் அலுவலக நண்பர் (எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்) என்னோடு அது பற்றித் தொலைபேசிய போது, நம்ப முடியாத ஒரு சேதியைச் சொன்னார். தமிழகம் முழுவதும் போற்றிப் புகழ்ந்த – இன்றளவும் போற்றிக் கொண்டிருக்கும் – புகழ் பெற்ற ஒருவர் தம் குடும்பத்தில் எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி அவர்கள் வீட்டுப் பிள்ளை ஒரு தலித் பெண்ணை மணந்துகொண்டு விட்டதைச் சட்டப்படி செல்லாத திருமணமாக ஆக்க அன்றைய அமைச்சர் ஒருவரின் உதவியை நாடினாராம். அந்த அமைச்சரோ காதல் திருமணங்கள் சிலவற்றைக் காதலர்களின் பெற்றோர் விருப்பத்துக்கு எதிராக நடத்திவைத்தவராம்! எனவே திரைப்படத் துறையோடு சம்பந்தப்பட்ட அந்தப் புகழ் பெற்றவரின் வேண்டுகோளை அவ்வமைச்சர் நிராகரித்து விட்டாராம். இச் சேதியைச சொன்னதோடு, “இது உண்மையான செய்தி. நானே ஒரு சாட்சியும் கூட!” என்று அந்த நண்பர் தெரிவித்தார். காதல் பற்றி நிறையவே கதைத்துள்ள அந்தப் புகழ் பெற்ற மனிதர் மீது அதுகாறும் கொன்டிருந்த வியப்பும் மதிப்பும் மடமட வென்று சரிந்தன.
பிராமணர்களோ, சாதி இந்துக்களோ, இந்த நாட்டு மக்களின் இரத்த நாளங்களில் பரம்பரைத்தனமான சாதி உணர்வும், சாதிப்பற்றும் – சமயங்களில் சாதி வெறியும் கூடத்தான் – இரண்டறக் கலந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றினின்று விடுபட அவர்கள் விரும்பவோ, முயலவோ இல்லை என்பதோடு, அது பற்றிய வெட்கமே அவர்களுக்கு இல்லை என்பதும் மட்டும் உண்மையோ உண்மை!
“தீண்டாமை” எனும் அருவருக்கத்தக்க நிலையை யார் உண்டாக்கினார்களோ அவர்களுக்கு அதை நீக்கும் பொறுப்பு உணர்வு தேவை. நம் முன்னோர்கள் செய்த மோசடியான பாவம் இப்போது நம் தலைகளில் வந்து விழுந்திருக்கிறது. அவ்வளவுதான். முற்பகலில் செய்யும் பாவத்துக்குப் பிற்பகலில் தண்டனை உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றனவே! இந்த ஞானம் நமக்கு இருப்பின், நாமே அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்படுவோம்.
ஆசாரத்தின் பெயரால் அபத்தமாய்ப் பிறர் புண்படும் வகையில் நடந்துகொள்ளும் அவலங்கள் வேண்டுமானால் பெரிய அளவில் குறைந்து – சில இடங்களில் மறைந்தும் – போயிருக்கலாம். ஆனால், சாதி அபிமானம் போனதாய்த் தெரியவில்லை. திரைப்படத் துறையைச் சேர்ந்த மெத்தப்படித்த – ‘உயர்ந்த சாதி’யைச் சேர்ந்த – ஒருவர் முறைப்படி தம் சாதிப் பெண்ணை முதலில் மணந்தாலும், பின்னர் வேற்று சாதிப் பெண்களோடு வாழ்ந்து அவர்கள் மூலம் குழந்தைகளையும் பெற்றவர். ஆனால், அவருடைய மகள் வேற்று சாதி இளைஞனை மணக்க விரும்பிய போது சாதி, சம்பிரதாயம் ஆகியவற்றின் பெயரால் அவளது காதலை மறுதலித்தவர். இதனால் அந்த மகள் அவரது ஒப்புதல் இன்றியே அதே அமைச்சரின் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் தந்தையும் மகளும் இணைந்தார்கள் என்பது வேறு கதை. இது ஒன்றும் எந்த நூற்றாண்டிலோ நிகழ்ந்த ஒன்றன்று. இது ஒரே ஓர் எடுத்துக்காட்டு. அவ்வளவே. இது போல் இலட்சக்கணக்கில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஆசாரத்தின் பெயரால் அக்கிரமங்கள் புரிந்துகொண்டிருந்த – இன்னமும் பெரிய அளவில் மாறாதிருக்கும் – நம்பூதிரிகள் வாழ் கேரள மாநிலத்தை விவேகானந்தர் ‘இந்தியாவின் பயித்தியக்கார விடுதி’ – the lunatic asylum of India – என்று குறிப்பிட்டது நம்மில் பலருக்குத் தெரியாதோ என்று தோன்றுகிறது. பிராமணர்களை விவேகானந்தரும் அறிஞர் அண்ணாதுரை அவர்களைப் போன்றே கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மைக்காலம் வரை, தலையை மழித்துக்கொள்ளாத கைம்பெண்களுக்குச் சங்கரமடத்துள் அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. (இப்போது எப்படியோ, தெரியவில்லை.) இந்திராகாந்தி அம்மையாருக்கு மகா பெரியவரின் தரிசனம் கிடைத்தது. இந்தியாவின் பிரதமர் என்பதால் அந்த மன்னிப்பும் சலுகையும் போலும்! அதிலும் கூட, ஒரு கிணற்றின் ஒரு புறத்தில் மகா பெரியவர் அமர்ந்துகொண்டு அதன் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த இந்திரா காந்தியுடன் பேசினார் என்று சொல்லப்பட்டது. இடையே கிணறு இருந்ததால் அது பாவப் பரிகாரமாம். இதே விதியைப் பிற கைம்பெண்கள் விஷயத்திலும் கடைப்பிடித்திருக்க வேண்டியதுதானே! அந்த மடத்துக்கு வந்து மகா பெரியவரைச் தரிசித்து அவர் கால்களில் விழுந்து வணங்கிக்கொண்டிருந்த ஆண்கள் யாவரும் மகா யோக்கியர்கள்தானா! அவரைக் காண வருகிற போது மட்டுமே இவர்களில் பலரும் பூணூலை மாட்டிக்கொண்டவர்கள் அல்லவா! கிராப்புத் தலையையும் மழித்துக்கொண்டவர்கள் அன்றோ! பெண்கள் சாத்திர விதிகளின்படி வாழவில்லை என்பதற்காக மடத்துள் அனுமதிக்கப்படாதது சரி யென்றே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், அங்கு அனுமதிக்கப்பட்ட ஆண்கள் எல்லாரும் சாத்திரவிதிகளின்படி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்தானாமா!
மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு மதாசாரியர் இப்படி ஓரவஞ்சனை செய்யலாகுமா?
1970 களில் கும்பகோணத்திலிருந்து இரண்டு இளம் கைம்பெண்கள் – பள்ளி ஆசிரியைகள் – சங்கர மடத்துள் தாங்கள் அனுமதிக்கப்படாமல் துரத்தியடிக்கப்பட்டது பற்றி மனக் குமுறலுடனும் வேதனையுடனும் ஹிந்து ஆங்கில நாளிதழில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் கடிதம் எழுதியிருந்தார்கள். அது பற்றிய என் கடிதமும், என் கடிதத்தைக் கண்டித்து வந்த கடிதங்களும், மீண்டும் அவற்றுக்குப் பதிலாக நான் எழுதிய கடிதமும் மாற்றி மாற்றிச் சில நாள்களுக்குத் தொடர்ந்து ஹிந்துவில் வெளிவந்தன. கைதவறி எங்கோ வைக்கப்பட்டுள்ள அவை கிடைத்ததும் நீங்காத நினைவுகள் பகுதிக்கு அவற்றின் மொழிபெயர்ப்பைப் பின்னர் ஒரு நாள் தேவைப் பட்டால் மட்டும் அனுப்ப எண்ணம்.
பிராமணர்கள் நிறையவே மாறி விட்டது மெய்தான். அதை மறுக்கவில்லை. எனினும் அண்மைக் காலத்து நிகழ்ச்சி ஒன்றைப் பற்றிக் கூறத் தோன்றுகிறது. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர், திரைப்படப் பாடகர் ஜேசுதாஸ் அவர்களை – அவர் கிறிஸ்தவர் என்கிற காரணம் பற்றி – குருவாயூர்க் கண்ணன் கோவிலுக்குள் அனுமதிக்க வேதியர்கள் மறுத்ததால், மகா பெரியவர் சொன்னது போல் இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்த செம்பை வைத்தியநாத பாகவதர் (ஒரு பிராமணர்) ஜேசுதாசுக்காகக் குருக்களுடன் வாதாடித் தோற்ற பின், ‘என் சிஷ்யனை உள்ளே விடாத கோவிலுக்குள் நானும் வரவில்லை. கோவிலுக்கு வெளியே அமர்ந்து அவனுடன் கச்சேரி செய்கிறேன்!’ என்று சினத்துடன் அறிவித்து விட்டு, தெருவில் அமர்ந்து தம் சீடர் ஜேசுதாசுடன் இணைந்து கச்சேரி செய்தார். அதே காலத்தில் வாழ்ந்த மற்றொரு பிராமண இசை விற்பன்னரோ ஜேசுதாசைத் தம் வீட்டுக்குள் கூட அனுமதிக்காமல் கார்க்கொட்டிலில் (garage) உட்காரவைத்து அங்கிருந்தபடியே தாம் உள்ளே மற்ற மாணாக்கர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுகளைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளுமாறு பணித்தாராம். இசையைப் பயிலும் ஆர்வத்தால், ஜேசுதாஸ் அதுபற்றிச் சிறுமைப்படவில்லை. “அது அவரது ஆசாரம். அதனால் எனக்கொன்றும் வருத்தமில்லை. எனினும், வேளா வேளைக்கு எனக்கு டிஃபன் காஃபி கார்ஷெட்டுக்கு வந்துவிடும்!” என்று ஒரு பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்லி யிருக்கிறார்.
செம்பை வைத்தியநாத பாகவதர் எங்கே, இந்தப் பாகவதர் எங்கே! இருவருமே சமகாலத்தவர்கள். சமீபத்தியவர்கள்! ஆனால், அவரைக் கார்க்கொட்டிலில் உட்காரவைத்துப் பாட்டைக் கேட்டுக் கற்றுக்கொள்ளச் சொன்ன அதே பாகவதரின் கைகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு ஜேசுதாஸ் கவுரவிக்கப்பட்ட விழாவும் ஒரு நாள் நடந்தது! ஜேசுதாஸ் மிகவும் குனிந்து பணிவுடன் அதை ஏற்றுகொண்டது சார்ந்த புகைப்படம் நன்றாக நினைவிருக்கிறது. (அரசு விழாவா இல்லாவிட்டால் ஏதேனும் மியூசிக் அகாடமி போன்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவா என்பது தெரியவில்லை.)
எது எப்படியானாலும், யாரையும் இழிவுபடுத்துவதற்காக ஆசாரம் பற்றிய கட்டுரையை எழுதவில்லை. எனது நினைவில் பதிந்து போயிருந்த ஒரு நிகழ்வை மற்றவருடன் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். (என் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மூதாட்டி மீது எங்கள் குடும்பத்தினர்க்கு எந்தக் காழ்ப்பும் இல்லை. இருந்திருப்பின் அவருக்கு அடிக்கடி பலகாரம் கொடுத்து அனுப்பி யிருந்திருப்போமா!)
jothigirija@live.com
- பாம்பே ட்ரீம்ஸ்
- வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
- கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது
- மாயக் கண்ணனின் மருகோன்
- நீங்காத நினைவுகள் – 9
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27
- கவிகங்கையின் ஞானஅனுபவம்
- குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
- பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10
- விட்டல் ராவின் கூடார நாட்கள்
- உ(ரு)ண்டை பூமியை நோக்கி
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9
- காவல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
- புகழ் பெற்ற ஏழைகள் – 14
- தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !
- மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
- ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
- மழையின் பாடல்.
- கவிஞன்
- அலையின் பாடல்