எஸ் ஜெயலட்சுமி
கண்ணன் என்றாலே நம் நினை வுக்கு வருவது அவனுடைய கள்ளவிழிப் பார்வையும் அவனு டைய மாயச் செய்ல்களும் தான். ஆழ்வார்கள், தங்களுடைய பாசுரங்களிலே அவனுடைய பால லீலைகளைப் பலவிதங்க ளில் பாடி அனுபவித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் யசோதை யாகவே மாறி கண்ணனுடைய லீலைகளை யெல்லாம் பாடி அனுபவித்திருக்கிறார். பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழுக்கு இவரே முன்னோடி என்றும் சொல்லலாம்.
ஆண்பால் பிள்ளைத் தமிழ் என்றாலே அது கண்ணனுக்கும் முருகனுக்குமே உரியது என்றும் சொல்லலாம். ஆழ்வார்களைப் போலவே அருணகிரி நாதரும் மாயக் கண்ணனின் லீலைகளில் ஈடுபட்டு அவற் றையெல்லாம் தன் திருப்புகழில் அழகாகக் குறிப்பிட்டு விட்டு
மாயோன் மருகோனே என்றோ மாலோன் மருகோனே என்றோ முருகனைச் சொல்லி முடிப்பார்.
கண்ணனும் முருகனும் எங்கோ பிறந்து எங்கோ வளருகிறார்கள். சிறையில் பிறந்த கண்ணன் யமுனை ஆற்றைக் கடந்து ஆயர் பாடியில் நந்தகோபன்,
யசோதை மகனாக வளருகிறான்.சிவன்பெருமானின் ஐந்து முகத்தோடு அதோமுகமும் சேர்ந்து பொறியாகி அக்கினி, வாயுவால் கொண்டு வரப்பட்டு கங்கையில் விடப்பட்டது.
பின் கங்கை அதன் வெப்பம் தாங்காமல் சரவணப்பொய்கையில் கொண்டு போய் விட் டாள். கார்த்திகைப் பெண்கள் அறுவர் அக்குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டினார்கள். உமையம்மை ஆறு குழந்தை களையும் சேர்த்தணைக்க கந்தனானான் அக்குழந்தை.
கண்ணனும் கந்தனும் தங்கள் குழந்தைப் பருவத்திலேயே மாயங்கள் பலவும் செய்த அசுரர்களை அழித்தார்கள். விஷமக்காரக் கன்ணன் ஆயர் பாடியில் செய்த லீலைகள் மிகவும் பிரசித்தம் அவற்றை அருணகிரிநாதரின் திருப்புகழ் வழியாகப் பார்ப்போம்.
பூதனை வதம்
ஆயர்பாடியில் வளரும் கண்ண னால் தனக்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்த கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களையும் பூதனை
என்ற அரக்கியையும் அனுப்புகிறான். அழகானபெண் உருவத் தோடு வருகிறாள் பூதனை. கண்ணனுக்குப் பாலூட்டுகிறாள் பூதனை. மாயக் கண்ணன் அவள் பாலைக் குடிப்பது போல் அவள் உயிரையும் சேர்த்துக் குடிக்கிறான். பூதனை தன் சுய உருவத்தோடு அலறி வீழ்கிறாள். இதை
”எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன் விடும் அதிசய வினையுறும் அலகையை
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம்
செய்யும் அரி.
என்றும்
எத்திய பசாசின் முலைக் குடத்தைக் குடித்து
முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டுச் சிரித்த
என்றும்
அலகையின் உயிர் முலையமுது செய்தருளிய
அதுலன் இருபதம் அதுதனில் எழுபுவி
அடைய அளவிட நெடுகிய அரிதிரு மருகோனே
என்றும் பூதனையின் வதத்தைக் காட்டுகிறார்.
சகடு உதைத்தல்
பூதனை மாண்டதைக் கேள்விப் பட்ட கம்சன் வோறொரு அசுரனை அனுப்புகிறான். இவன் வண்டி உருவில் வருகிறான்.குழந்தை கன்ணன் தொட்டிலில் விளையாடிக் கோண்டிருக்கிறான். அசுரன் தன்னை நெருங்கு வதை அறிந்த கண்ணன் தன் பிஞ்சுக் கால்களால் அந்த வண்டியை உதைக்கிறான். வண்டி முறிந்து அசுரன் விழுந்து
மாண்டு போகிறான். இதை,
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று
எனவும்
முகுந்தன், வரும் சகடற மோதி
என்றும் பாடுகிறார்.
ததி சோரன்
கண்ணன் தளர் நடை பயில ஆரம்பிக்கிறான். மெதுவாக வந்து தயிர், மோர், பால். நெய் குடிக்க ஆரம்பிக்கிறான்.தயிர்க்குடத்தை உருட்டி விடுகிறான்.
யசோதைக்கு ஒரே கவலை. இந்தக் குழந்தை இப்படித் தயிர், மோர், பால், நெய் எல்லாவற்றையும் குடித்தால் வயிறு கெட்டுப் போகுமே, அஜீரணமாகுமே என்று கவலைப் படு கிறாள். வெண்ணைப் பானைக்குள் தோள் வரை கையை விட்டு வெண்ணை எடுத்துத் தின்கிறான் கண்ணன்
இது மட்டுமா கண்ணன் பக்கத்து வீடுகளுக்கும் சென்று அங்குள்ள ஆய்ச்சிமாரிடம் வெண்ணை வேண்டும் என்று கேட்கிறான்.அவர்கள் “கண்ணா நாட்டியம் ஆடு. வெண்ணை தருகிறோம்” என்கிறார்கள். கண்ணன் உடனே நடமாடுகிறன். கண்ணனின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்த ஆய்ச்சிமார்கள் கண்ண கேட்ட வெண்ணை தரு கிறார்கள். இதை
மத்தோசைப் போக்கில் தயிர், உறிநெய்
பாலுக்கு ஆய்ச்சிக்கு இருபதம்
வைத்தாடிக் காட்டிப் பரிகரி மருகோனே
என்றும்
தயிர்ச்சோரன் எனும் அவ்வுரை
வசைக்கோவ வனிதையர்கள் தர
ஆடல் புரியும் அரி மருகோனே
என்றும் கண்ணன் வெண்ணைக்காக ஆடியதைப் பதிவு செய்கிறார்.
பொத்த உரலைக் கவிழ்த்து
கண்ணன் வந்து வெண்ணை திருடுவான் என்பதால் ஆய்ச்சிகள் உயரேயுள்ள உறி மீது வெண்ணையை வைக்கிறார்கள்.. கண்ணனுக்கு உறி எட்டாது என்று நினைக்கிறார்கள். ஆனால் கண்ணன் விடுவானா? என்ன செய்கிறான்? அங்கிருந்த ஒரு பழைய பொத்த உர லைக் கவிழ்த்து அதன் மேலேறி வெண்ணையை எடுத்துச் சாப்பிடுகிறான்.
ஆயர் வாழ்பதி தோறும் உகந்து
உரலேறி உறிமீது அளையும்
களவாகவே கொடுபோது நுகர்ந்தவன்.
என்கிறார்.
கண்ணனுடைய விஷமங்கள்
அதிகரிக்க ஆரம்பித்தன.ஆயர்பாடியிலுள்ள எல்லா வீடுகளி லும் சென்று பால், தயிர், வெண்ணை எல்லாவற்றையும்
சாப்பிட ஆரம்பித்தான். கண்ணன் செய்த விஷமங்களை யெல்லாம் சொல்லி,’ யசோதை உன் மகனைக் கொஞ்சம் அடக்கி வை. அவன் செய்யும் துஷ்டத்தனங்களுக்கு அளவே யில்லை” என்று கொஞ்சம் கோபமாகவே பேசுகிறார்கள். இதைக் கேட்ட யசோதை பொறுமையிழந்து கண்ணனை உர லோடு கட்டிப் போடுகிறாள். இதை ஒரு அழகான காட்சி யாகக் காட்டுகிறார் அருணகிரியார்.
காயாத பால், நெய், தயிர்க் குடத்தினை
ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே
கார்போல் அசோதை பிடித்து அடித்திட
காதோடு காது கையிற் பிடித்து அழுது
இனிது ஊதும் வேயா
என்றும்
இடையர் மனைதோறும் நித்தம்
உறிதயிர், நெய், பால் குடிக்க
இருகையுறவே பிடித்து உரலோடே
இறுகிட அசோதை கட்ட அழுதிடு
கோபாலகிருஷ்ணன் இயல் மருகோனே
என்று கண்ணன் வெண்ணை திருடி அடிபட்டு உரலில் கட்டுண்டதை விவரிக்கிறார்.
மருது இறுத்தது
இப்படிப் பலநாள் கண்ணன் வெண்ணை, தயிர் திருடி பிடிபட்டதும் ஒரு நாள் யசோதை கண்ணனை உரலோடு கட்டிப் போட்டு விட்டு வேலை செய் யப் போய்விடுகிறாள். கண்ணன் பொறுமை போய் விடு
கிறது. மெதுவாக உரலோடு தவழ்ந்து செல்கிறான். முற்றத் திலே இரு மருத மரங்கள் இருப்பதைப் பார்த்த கண்ணன் உரலோடு அவற்றுக்கு நடுவே போகிறான். உரலால் இடிக்கப் பட்ட மருத மரங்கள் இரண்டும் முறிந்து விழுகின்றன.
சாபத்தால் மருத மரங்களாய் நின்ற கந்தர்வர்கள் இருவரும் சாபவிமோசனம் பெறுகிறார் கள். கண்ணனைத் துதிக்கிறார்கள்.சப்தம் கேட்டு ஓடிவந்த யசோதை திகைத்துப் போகிறாள்.கண்ணன் சிரித்து விளை யாடிக் கொண்டிருக்கிறான். இதை
மருது குலுங்கி, நலங்க முனிந்திடும் வரதன்
எனவும்
திடமுள முகுந்தன், கஞ்சன் வரவிடு
மெல் வஞ்சகங்கள் செறிவுடன்
அறிந்து வென்ற பொறியாளர்
பரிவோடு மகிழ்ந்து இறைஞ்சு
மருதிடை தவழ்ந்து நின்ற
பரமபத நண்பர் அன்பின் மருகோனே
என்றும் மருத மரங்களை முறித்ததைப் போற்றுகிறார்.
காளிய நர்த்தனம்
கோகுலத்தில் ஒரு மடுவில் காளிங்கன் என்ற நாகம் இருந்தது. அதன் வெப்பமான மூச்சுக் காற்றால் கரையிலிருந்த மரங்கள் எல்லாம் கரிந்து போயின. மடுவில் நீர் குடிக்கச் சென்ற கன்று காலிகள் எல்லாம் விஷத்தால் இறந்தன. இதைக் கண்ட கண்ணன் காளிங்கனின் கொட்டத்தை அடக்க எண்ணினான்.
ஒருநாள் மடுவின் கரையிலி ருந்த கடம்ப மரத்தின் மேலேறி மடுவில் குதித்தான். கோபத் தோடு மேலெழுந்து வந்த காளிங்கனின் வாலைப் பிடித்தான், காளியன் படமெடுக்க அதன் மீது நின்று நடனமாட ஆரம்பித் தான். கண்ண ஆட ஆட காளியன் களைத்துப் போனான். உயிர்ப் பிச்சை வேண்டினான். அந்த மடுவையே காலி செய்து விட்டுப் போவதாகவும் சொன்னான். காளியனுக்கு உயிர்ப் பிச்சை வழங்கினான் கண்ணன். கண்ணன் எப்படி ஆடினான் என்பதைப் பார்ப்போமா?
பாந்தண் முடிமீது தாந்த திமி தோதி
தஞ் செகண சேசே எனவோசை
பாங்கு பெறு தாளம் ஏங்க நடமாடும்
பாண்டவர் சகாய மருகோனே
இன்னொரு பாடலில்
விஷத்தை உடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை அடுபடை
நெடுமுகில்
என்று நடமிடுவதைப் பார்க்கிறோம்.
கோவர்த்தனம்
மழை வேண்டி இந்திரனுக்குப் பூஜை செய்கிறார்கள் ஆயர்பாடி இடையர்கள். கண்ணனோ, ’இந்த கோவர்த்தன மலைதான் நமக்கு மழை தருவதால் அதற்குத் தான் பூஜை செய்ய வேண்டும் என்கிறான். பூஜை யில் போடப்பட்ட படையல் முழுவதையும் கண்ணன் தானே சாப்பிடுகிறான். இதனால் கோபமும் அவமானமும் அடைந்த இந்திரன் ஏழு நாட்கள் விடாமல் கனமழை பெய்து வஞ்சம் தீர்க்கிறான்.
ஆனால் கண்ணனோ, அந்த கோவர்த்தன மலையையே குடையாக எடுத்து ஆயர்களை யும் ஆநிரைகளையும் காப்பாற்றுகிறான். இந்திரன் கண்ணன் பெருமையை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான்.
மந்தரங் குடையென நிரை உறு துயர்
சிந்த, அன்று அடைமழை தனில் உதவிய
மஞ்செனும் படி வடிவுறும் அரிபுகழ் மருகோனே
என்றும்
மாயமழை சொரிதல் நிலைகுலைய
மலை குடையதாகவே கொள்
கரகமலன் மருகோனே
என்றும் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததைப் படமாகக் காட்டுகிறார்,
வேணுகானம்
கொஞ்சம் பெரியவனானதும் கண்ணன் ஆநிரை மேய்க்கப் போகிறான். மாடு கன்றுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் போது கண்ணன் குழல் வாசிக் கிறான். குழலின் இனிமையில் இந்த உலகமே மயங்குகிற தாம். பூலோக மக்களோடு தேவலோகப் பெண்களையும் வேணுகானம் மயக்குகிறது.
மிருகங்களும் பறவைகளும் வேணுகானத்தில் தம்மை மறக்கின்றன.வாயிலிருந்த புல்லை யும் தின்ன மறந்து செவிகளை ஆட்டவும் மறந்து நிற்கின் றன.பட்டுப்போன மரங்கள் எல்லாம் துளிர்விட ஆரம்பிக்கின் றன. பெரியாழ்வார் மிகவும் ஈடுபட்ட இந்த வேணுகானத்தை
அருணகிரிநாதரும் மிகவும் ரசிக்கிறார். அவருடைய ரசனை யைப் பார்ப்போம்.
அடவிதனிலுள்ள உலவைகள் தளிர்விட
மருளமதமொடு களிறுகள் பிடியுடன் அகல
வெளியுயர் பறவைகள் நிலம் வர
விரல்சேர் ஏழ் தொளைகள்
விடுகழை விரல் முறை தடவிய
இசைகள் பலபல தொனி தரு கருமுகில்
சுருதியுடையவர் நெடியவர் மருகோனே
என்று கண்ணன் குழலூதும் காட்சியைக் காட்டுகிறார்.
கூறை ஒளித்தது
ஆநிரை மேய்க்கப் போன கண்ணன் கோபியர்களின் சேலைகளைக் குருந்த மரத்திலே கொண்டு போய் வைத்து அவர்களை அழவிட்டு வேடிக்கை பார்க்கி றான். அவர்கள கண்ணனிடம் வந்து கெஞ்சிக் கூத்தாடித் தங்கள் சேலைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.
மடவியர்கள் தம் கூறை கொடு
மரமிலது ஏறும் சிங்கார அரிமருக
என்ற வரிகளால் இதைக் காட்டுகிறார்.
பாரிஜாதம் கொணர்ந்தது
ஒருசமயம் கண்ணன் தன் மனைவி சத்யபாமாவுடன் இந்திரலோகம் சென்ற பொழுது அங்கிருந்த பாரிஜாத மலரின் அழகிலும் மணத்திலும் தன்னைப் பறி கொடுக்கிறாள் சத்யபாமா. பாரிஜாத மலர் வேண்டும் என்று கேட்கிறாள். ஆனால் இந்திரன் மறுத்து அலட்சியம் செய்து விடுகிறான். பாமாவின் விருப்பத்தை அறிந்த கண்ணன் இந்திரனுடன் போர் செய்து அந்தப் பாரி ஜாத மரத்தையே கொண்டு வந்து பாமாவின் முற்றத்தில் நட்டு விடுகிறான்.
இந்தர தாருவை ஞாலமீதினிற் கொணர்ந்த
சங்க பாணியன், ஆதிகேசவ ப்ரசங்கன்
என்று வாழ் மணிமார்பன் வீரவிக்ரமன் தன்
மருகோனே
என்று பாரிஜாதம் கொணர்ந்ததைக் காட்டுகிறார்.
பாண்டவ தூதன்
பாண்டவர்களுக்கும் கௌரவர்க ளுக்கும் இடையே இருந்த வேற்றுமை அதிகரிக்கிறது. பொறாமை கொண்ட துரியோதனன், பாண்டவர்களைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூதில் வெல்கிறான். சூதில் அனைத்தையும் இழந்த தருமன் 12
ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள வேண்டும். அதன் படி பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் விராட தேசத்தில் 12 வருடங்கள் மறைந்து வாழ்கிறார்கள்.
ஆநிரைகளைக் கவர வந்த துரியோதனனை வென்று ஆநிரைகளை மீட்கிறான் அர்சுனன்.
இதன் பின் தங்களுடைய நாட்டைத் திரும்பத் தருமாறு பாண்டவர்கள் கேட்க துரியோதனன் மறுத்து விடுகிறான்.
பாண்டவர்களுக்காக நாடு கேட்டுத் தூது போகிறான் கண்ணன். இதை
சூது பொரு தருமன் நாடு தோற்று
இரு ஆறு வருஷம் வனவாசமேற்று
இயல் தோகையுடனுமே
விராட ராச்சியம் உறை நாளில்
சூறை நிறைகொடு அவர் ஏக மீட்டு
எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு
ஒருதூது செல அடுவல்
என்று பாண்டவர் சகாயனாக தூது சென்றதைப் பாடுகிறார்.
தேரோட்டி
கண்ணன் தூது சென்று 5 ஊர் களாவது பாண்டவர்களுக்குக் கொடு என்று துரியோதன னிடம் கேட்கிறான். ஆனால் துரியோதனனோ ஊசி குத்தும்
இடம் கூடத் தரமுடியாது என்று மறுத்து விட்ட நிலையில் போர் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. போரிலே பார்த்த னுக்குத் தேரோட்டி பார்த்தசாரதி என்று பெயர் பெறுகிறான் கண்ணன். இதை
பஞ்சவர், கொடியவினை நூற்றுவர் வென்றிட
சகுனி கவரால் பொருள் பங்குடை அவனிபதி
தோற்றிட அயலே போய் பண்டைய விதியை
நினையாப்
பன்னிரண்டுடை வருஷ முறையால்
பண்புடன், மறைவின் முறையால்
திருவருளாலே, வஞ்சனை நழுவி
நிரை மீட்சியில் முந்து தம்முடைய
மனை வாழ்க்கையின் வந்த பின்னுரிமை
கேட்டிட, இசையா நாள் மண்கொள
விஜயன் தேர்ப்பரி உந்தினன் மருக
என்று கண்ண தேரோட்டியதைப் புகழ்கிறார்.
சூரியனை மறைத்தது
அர்சுனன் மகன் அபிமன்யு வைக் கௌரவர்கள் முறையற்ற வழியில் தாக்கிக் கொன்று விடுகிறார்கள். இதற்குப் பழி தீர்க்க, ஜயத்ரதனை சூரிய
அஸ்தமனத்திற்குள் கொல்வதாக அர்சுனன் சபதம் செய்
கிறான். சூரிய அஸ்தமனம் வரை ஜயத்ரதனை வெளியே வரவிடாமல் பாதுகாக்கிறார்கள் கௌரவர்கள். இதைக் கண்ட கண்ணன் தன் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து விடு கிறான். இதை அறியாத ஜயத்ரதன் வெளியே வருகிறான். அதே நேரம் கண்ணன் தன் சக்ராயுத்த்தைத் திரும்பப் பெறு கிறான். சூரியன் பளிச்சிடுகிறான். சபதப் படியே அர்சுனன் ஜயத்ரதனைக் கொன்று விடுகிறான். இந்த மாயச் செயலை,
திகிரி கொண்டு இருளாக்கியே
என்ற ஒரு வரியிலேயே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.
இப்படி கண்ணனின் மாயச் செயல்கள் பலவற்றையும் போற்றிப் பாராட்டி அம்மாயன் மருகோனே என்று முருகணையும் போற்றுகிறார் அருணகிரிநாதர்.
**************************************************************
- பாம்பே ட்ரீம்ஸ்
- வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
- கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது
- மாயக் கண்ணனின் மருகோன்
- நீங்காத நினைவுகள் – 9
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27
- கவிகங்கையின் ஞானஅனுபவம்
- குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
- பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10
- விட்டல் ராவின் கூடார நாட்கள்
- உ(ரு)ண்டை பூமியை நோக்கி
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9
- காவல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
- புகழ் பெற்ற ஏழைகள் – 14
- தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !
- மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
- ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
- மழையின் பாடல்.
- கவிஞன்
- அலையின் பாடல்