தாயம்மா

This entry is part 17 of 20 in the series 21 ஜூலை 2013

ப.க.பொன்னுசாமி
——————————————————–
மார்கழி மாதத்தின் குலையை நடுங்க வைக்கும் குளிரிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு முன்வாயில் வாசற்படிப் பக்கம் வந்து சேர்ந்தார் தாயம்மாள். குட்டாக இருந்த அந்தக் கொஞ்சம் சாணத்தைப் பாத்திரத்து நீரில் கலக்கி வாசற்படியையும் முன்வாசலையும் துடைத்து மெழுகிவிட்டு, வெதுவாகக் கையை ஊன்றி எழுகிறார். எழுந்த வேகத்தாலும், குளிரின் நடுக்கத்தாலும் தள்ளாடி விழப்போய்ப் பக்கத்திலிருந்த திண்ணையின் ஓரக் கூச்சத்தை வலது கையில் சுற்றிப் பிடித்துக் கொண்டு நின்று விடுகிறார். அந்த நிலையிலும் கையிலிருந்த சாணத்துணி கூச்சத்தில் பட்டுவிடுவே, அதை மெதுவாகத் துடைத்துச் சரிசெய்துவிட்டுக் குளியலறைக்குப் போகிறார். சட்டென்று நான்கைந்து செம்பு நீரை அள்ளித் தலையோடு விட்டுக்கொண்டு, உடம்பைத் துவட்டியபிறகு சேலையைப் போர்த்துக்கொண்டு வெளியே வருகிறார். `எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியே’’ திருப்பள்ளியெழுச்சிப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே பூசையறைப்பக்கம் வந்து திருமாலின் பெரிய படத்துக்கு முன்னால் விளக்கை ஏற்றிவைத்து, `அச்சுதா அமரர் ஏறே’ பாட்டைப் பாடிமுடித்து ஆண்டவனுக்கும் பிறகு தனக்குமாகத் திருநாமத்தைச் சார்த்துக்கொண்டு அறைக்கு வெளிப்புறத்தில் தனது படுக்கைக்கு மேலாகச் சுவரில் மாட்டியிருக்கும் தன்னுடைய `தெய்வத்தின்’ படத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத் திரும்பி நாற்காலியில் வந்து உட்காரக் கையை ஊன்ற, நாற்காலி இடரத் `தொப்பென்று’ தரையில் விழுகிறார். நாளும் செய்துமுடிக்கின்ற செயல்கள்தான் இவையென்றாலும், இன்றைக்குமட்டும் இரண்டுமுறை இந்தச் சிறிது நேரத்துக்குள் தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார். ஆண்டவனின் திருப்பணியில் எந்தக் குறையையும் அவர் செய்துவிட்டதாகத் தெரியவில்லை. வரிதவறாமல் ஒப்புவித்த ஆண்டாள்—ஆழ்வார்கள் பாடல்களிலோ, சுப்ரபாதத்திலோ இம்மியும் முறை தவறாமல்தான் ஒப்புவித்தார். நேற்றும் முந்தாநாளுமாக இரவெல்லாம் ஏகாதசிக்காகக் கண் விழித்திருந்து, நேற்று மாலையில் தன்னுடைய கையாலேயே வேகவைத்த சுண்டலைப் பெருமாளுக்குப் படைத்துவிட்டு, பத்துப் பதினைந்து ஏழைகளுக்குப் பிரசாதம் கொடுத்தபிறகு, மெதுவாக வீட்டைநோக்கி வந்து கொண்டிருந்தார். என்றும் துணையாகக் கோவிலுக்கு வரும் சின்னச்சாமி நேற்று ஏனோ ஏகாதசியென்று தெரிந்தும், `வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிப்போயும் – பிரசாத விநியோகத்திற்கு வந்து சேரவில்லை. `வருவார், வருவார்’ என்று கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப் பிரசாதத்தை வழங்கிவிட்டுத் திரும்பும்போது தான் சின்னச்சாமி எதிரே வேகமாக வந்து கொண்டிருந்தார். “எம்ப்பா இவ்வளவு நேரம்,” கேட்டுக்கொண்டே தாயம்மாள் பிரசாதத்தை நீட்ட, சின்னச்சாமி அதை வாங்கிக்கொண்டு மெதுவாக அவர் பின்னால் நடந்து வந்தார்.
“என்ன சின்னச்சாமி! அவனப் பாத்தியா? கடுதாசியக் காட்டினயா? என்ன சொன்னா?” தாயம்மாவின் கேள்விகளுக்குப் பதிலேதும் சொல்லாமலே சின்னச்சாமி நடந்து கொண்டிருந்தார்.
“என்னதாஞ் சொன்னான்? என்ன சொன்னாத்தா என்ன? எல்லாம் பெருமாளின் சித்தம். அதுக்கா நா கவலைப்படப் போறேன்? என்னைவிட உனக்கல்லாவா இப்போ கவலை அதிகமாப் போச்சு! ஏதோ அத என்னோட கடமைன்னு நெனச்ச – கடுதாசியக் காட்டீட்டு வரச் சொன்ன.”
“ஆமாம்மா.”
“ நீ ஏப்பா வருத்தப்படற? என்ன சொன்னான்னு சொல்லுப்பா.”
“கடுதாசியப் பார்த்துட்டுச் சிரிச்சுக்கிட்டார். `நா என்னப்பா சொல்ல இருக்கு’ன்னு சொல்லீட்டு மௌனமா இருந்துக்கிட்டார்.”
“இத நா எதிர்பார்த்ததுதானப்பா. ஏதோ சிரிச்சுக் கிட்டானே! அந்த அளவுக்குச் சந்தோசம். பின்னே உங்கூடப் பொறப்புட்டா வந்திருவான்? அதெல்லாம் அத்துப்போயித் தாம் பல வருசங்க ஆகிப்போச்சே!”
“அம்மா!”
“நா எத்தன தரம் உங்கிட்டச் சொல்லியிருக்கேன், யாரும் எம்முன்னால எதுக்கும் வருத்தப்படக்குடாது, அழக்குடாதுன்னு? நா மண்டையப் போட்ட அன்னைக்குங் கூட, `நடக்கவேண்டியது நடந்து போச்சு’ன்னு `ஆரவாரமோ அழுகாச்சோ இல்லாம மண்ணுல கொண்டுபோயிப் போட்டுட்டு அவரவர் காரியத்துக்குப் போயிறோனும்’னு? அப்படிச் செய்யறதுனால உங்களுக்கெல்லாம் எங்கிட்ட அன்பில்லைன்னோ, நா உங்களையெல்லாம் வெறுக்கற தாவோ அர்த்தமில்லே. அப்படி நான் எடுத்துக்க மாட்டேன். இந்த ஒடம்பு வந்ததோ போனதோன்னு மதிப்புக் கொடுக்காம இருக்கத்தா அப்படிச் சொல்றேன். அத விட்டுட்டு ஒண்ணுமில்லாததுக்கு இப்படிக் கேவிக்கேவி அழுகற யேப்பா? ஜெயத்துகிட்ட சொல்லிச் சரிக்கட்ட ராத்திரி யெல்லாமாச்சு. இதுதா எனக்குப் பிடிக்கல. வயல்ல பச்சையிருக்கறது கண்ணுக்குத் தெரியுது. மனசில பச்சையிருக்கறது மனசுக்குத்தாந் தெரியும், அதைக் கண்ணுல காட்ட நெனைக்கறதுதா எனக்குப் பிடிக்கல.”
அழவேண்டாமென்று சின்னச்சாமியைக் கண்டித்து விட்டாலும், `அழாமலோ, வருத்தப்படாமலோ என்னதான் நடந்தாலும் தாங்கிக்கொண்டு நாட்களை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்ற உறுதி மனதில் இருந்தாலும், தன்னையும் அறியாமல் தாயம்மாவின் கண்கள் பனித்துக் கொண்டன. இமைகளில் கூடிநின்ற நீர்த்துளிகளை அவர் துடைத்துக் கொள்கிறார்.
“அப்போ, நான் நாளைக்குப் பொறப்படறேன்,” தாயம்மாவின் முடிவுக்கு மறுப்புச் சொல்ல சின்னச்சாமிக்கும் விருப்பமில்லை.
*

பெரிய வீடு! அந்தச்சிறிய சந்துமுகப்பில் `தணிகாசலம் தெரு’ என்ற பெயர்ப் பலகையைத் தாங்கிக்கொண்டு ஒரு குட்டிச்சுவர் நிற்கின்றது. அந்தப் பெயர்ப் பலகைக்காகத்தான் அந்தச் சுவரே இருக்கிறது. 40 அல்லது 50 அடிதூரம் அந்தக் குறுகிய சந்தில் போனால் ஒரு வேப்ப மரத்தைப் பார்க்கலாம். அந்த மரத்தின் நிழலை அனுபவிப்பதற்காகவோ அல்லது அந்த ஊரின் முக்கியச் செய்திகளை அலசிக்கட்டி ஒரு முடிவுக்கு – உண்மையானதாகவோ, இட்டுக்கட்டியதாகவோ – வருவதற்காக ஒரு சிலருக்காக அமைக்கப்பட்ட சாவடிக்கூடமாகவோ – நாள் தவறாமல் அந்த மரத்தடிக்கு வந்து உட்கார்ந்து பொழுதைக் கழிக்கும் ஏழெட்டு மூதாட்டிகளின் பள்ளிக்கூடமாகவோ வேப்பமரத்தடி இருக்கும். அங்குபோய்க் கேட்டால் `அதோ பெரிய வீடு’ என்று எப்படியும் ஒருவர் எழுந்துவந்து வழி காட்டுவார். வெய்யிலில் வெடித்துப்போய், நீருக்காகப் பிளந்து நிற்கும் பூமியைப்போலப் பல வாய்களைக் கொண்டு காற்றுக்கும் பலருடைய கண்களுக்கும் வேண்டிய வழியைக் கொடுத்துவிட்டு, நாதாங்கிச் சங்கிலியையும் பூட்டையும் தாங்கி நிற்கும் இரட்டைக் கதவுத் தலைவாசல். உள்ளே வாசலில் காய்ந்துபோன நாணற்தட்டைகளைத் தாங்கி நிற்கும் சட்டங்களைச் சுமக்கும் நான்கு கற்தூண்கள். சுவரின் ஓரத்தில் மூன்று வாழைமரக் குடும்பங்கள் – பட்டினிப்பட்ட நிலையில். ஒரு கற்தூணின் வழியாக மேலே ஏறி, நாணற்தட்டைகளில் சிறிது தூரம் பாவுபரவி நிற்கும் ஒரு மல்லிகைக் கொடி. `இந்த வீட்டுக்குள் எந்த மன்னர் வந்தாலும் தலையைச் சற்று தாழ்த்தியே வரவேண்டும்’ என்று கட்டுப்பாடு விதித்து நிற்கும் வீட்டின் நுழைவாயில். உள்ளே சின்னச்சின்ன அறைகள் நான்கு. அந்த அறைகளின் நான்கு கதவுகளும் வீட்டின்மத்தியில் சூரிய வெளிச்சத்துக்காக விதானமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சதுரத்தை நோக்கி நிற்கின்றன. அந்தச் சதுரம் திண்ணையைவிடத் தாழ்ந்து தொட்டி போன்ற அமைப்பு. அந்தத் தொட்டியில் ஓர் அண்டாவில் நீர், ஒரு சிறு செம்பு, கம்பியில் தொங்கும் ஒரு துணி – இத்தனையையும் உள்ளடக்கிக்கொண்டு நிற்பதுதான் அந்தப் பெரிய வீடு. `தொட்டிக்கட்டு வீடு’ என்றும் சொல்லுவார்கள்.
அதைவிடப் பெரிய வீடுகள் ஊரில் இருந்தாலும் நான்கு தூண்கள் இருப்பதாலும் – பல பெரிய பெரிய வீடுகள் கட்டப்படுவதற்கு முன்னமேயே கட்டப்பட்டதாலும் அதற்குப் `பெரிய வீடு’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இப்போதைக்குக் கேட்டால் `நல்ல இரண்டு பெரிய ஜீவன்கள் வாழ்ந்ததால் அதற்குப் பெரிய வீடு என்று பெயர் வந்தது’ என்று சொல்வார்கள். அதிலும் உண்மையுண்டு. வேப்ப மரத்தடியில்கூட இந்தக் கதை பேசப்படுகிறது.

மருமகளாக அந்த வீட்டில் முதல்முதலாக வலதுகாலை எடுத்துவைத்து நுழைந்தபோதே `இது பெரிய வீடு’ என்ற கவனம் தாயம்மாளுக்கு இருந்தது. அந்த வீட்டின் ஒரே பிள்ளைக்கு வந்த மனைவி என்றவிதத்திலும், பிறந்தவீட்டின் பெயரின் காரணமாகவும் அவளுக்கு அங்கே நல்ல செல்வாக்கு இருந்தது. கணவர் ஒரு பங்கென்றால், மாமனாரும் மாமியாரும் இரண்டுபங்கு நேசித்ததில் வியப்பில்லை – அப்படி அடக்கமாக, அன்பாக, அனுசரணை யாகக் காலத்தை ஓட்டினார். `தாயீ’ என்று கணவரோ, பெரியவர்களோ குரல் கொடுக்கும்போது கேட்டவர்களுக்குத் தான் தெரியும் – அந்த அருமையான சொல்லின் ஆழம், பொருள் அத்தனையும். குழந்தையாயிருக்கும்போது வேலைக் காரர்கள் அன்போடு `தாயி’ என்று அழைக்க, அதுவே வைத்த பெயரான `ரங்கநாயகி’யை மறைத்து நிலைத்துப்போய்விட, புகுந்த வீட்டிலிருந்தவர்களும் மதிப்பின் காரணமாகத் `தாயம்மா’ என்று அன்போடு அழைக்கப்போய்த் தாயம்மா வானவர். `தாயம்மா’தான் என்றாலும் பெயரளவில்தான் அது சரியாக இருந்ததே ஒழிய – `தாய்’ என்ற உண்மைப் பொறுப்புக் கிடைக்கவில்லை. மணமாகி ஐந்து வருடங்கள் அப்படியே ஓடிவிட்டன. ஓடிவிட்டனவா? நகர்ந்தன! ஒவ்வொருவருக்கும் அது கவலைதானென்றாலும் யாரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒருநாள் இந்தப் பேச்சு இப்படித் தலைகாட்டியது. “இனிமே எனக்கு நம்பிக்கையே இல்லீங்க. நான் உங்களுக்குத் துரோகம் செஞ்சிட்டேன்,” தாயம்மாள் கேவிக்கேவி அழுதுகொண்டே சொன்னார்.
“இதுல நீயோ, நானோ துரோகம் செய்யறதுக்கு என்ன இருக்குது தாயீ? ஆண்டவந்தான் நம்மைச் சோதிச்சிட்டான்,” கணவர் திருவேங்கடம் சமாதானப் படுத்தினார்.
“நா ஒண்ணு சொல்ற, கோவிச்சுக்க மாட்டீங்களே? சின்ன வயசுல எங்க பாட்டிகிட்டக் கதை கேட்டிருக்கேன். புருசன்பொண்டாட்டியாக் காசிக்குப் போயிக் கங்கையில குளிச்சு வந்தாக் கொழந்தை பெறக்குமாம். இப்ப உங்குளுக்கு வியாபார மும்முரம். அதோட அதுல நம்பிக்கை இருக்கோ இல்லையோ?”
“என்ன சொல்ற தாயி? காரியத்தைப் பொறுத்திருக் குது நம்பிக்கையெல்லாம். இந்த விசயத்தில நீ என்ன சொல்றயோ அத நான் கேட்டுக்குவேன். வியாபாரத்துக்கு வேண்டியதையெல்லாம் ஒரு வாரத்தில ஏற்பாடு செஞ்சிட றேன். அதுக்குள்ள பொறப்பட ஏற்பாடுகளை நீ செய்யி.”
தாயின் முகம் அப்போதே ஓர் உண்மைத் தாயின் முகப் பொலிவைப் பெற்றுப் பொங்கி நின்றது.

காசிக்குப் புறப்பட்டுச் சென்றதும், திரும்பி வந்தபோது வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்ததும், லாபம் கிடைத்த நல்ல செய்தியே குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அறிகுறியென்று எண்ணியதும், அந்த நம்பிக்கை ஓராண்டுக்குள்ளேயே உண்மையாகி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததுவும் – எல்லாமே பார்ப்பவர் களுக்கு வியப்பைக் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சிக ளெல்லாம் தாயம்மாவுக்கோ திருவேங்கடத்துக்கோ ஆண்டவனின் பிச்சைகள் என்ற நம்பிக்கையைத்தவிர வேறு எந்த வியப்பாகவும் தெரியவில்லை. காலம்தான் என்ன வேகத்தில் பாய்ந்து ஓடுகிறது?
வழக்கம்போல அல்லாமல் அன்றைக்குத் திருவேங்கடம் மிகவும் பதட்டத்துடன் ‘ஜிவ்’வென்ற சிவந்த கண்களோடு காணப்பட்டார். வாரிப் பின்னால் அமுக்கிவிட்ட முடியும், வில்லான கருத்த புருவங்களும், முறுக்கிவிட்டு நிறுத்திய இடத்தில் நிற்கும் பெரிய மீசையும், செவேலென்ற நிறமும் சேர்ந்து அவருடைய முகம்தான் சாந்தமாய் அவர் இருக்கும்போது என்னமாய்க் களை சொட்டும்! பார்க்கப் பார்க்க அந்தக் கம்பீரத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றுமே! அவருடைய அந்த முகமா இன்று அப்படி…? எப்படித்தான் அன்பைக் குழைத்துப் பேசுவார் வாடிக்கை யாகப் பருத்தி கொடுக்கும் குடியானவர்களிடம்! அவரா இப்படிச் சீறிக் கொட்டுகிறார்?
“என்னய்யா பருத்தியாம் பருத்தி? மனுசங்கிட்டே நாணயம் வேண்டாம்? மலகிலே கீழே கொஞ்சம் மட்டும் கண்ணைப் பறிக்கிற மாதிரி வெச்சிட்டு, உள்ளுக்குள்ளே சொத்தையும் சொள்ளையுமாச் சரியாக் காயாத சொளைகள்! யாரு எதைச் செய்யறதின்னே இல்லையா? இப்படி நீங்க பருத்திய வித்தீங்கண்ணா, புத்திசாலியான மில்லுக்காரனுங்க, இந்தப் பருத்திய நெஞ்சு, பாக்கறதுக்குப் பளபளங்கறதும், ஒடம்புல போட்ட நாலு நாள்ல பலபலத்துப் போறதுமான துணியைத்தாய்யா உங்குளுக்கே விப்பான். நீங்க விக்கறதும் அவுங்க வாங்கறதும் இருக்குட்டும். என்னோட நாணயம் என்னாகறது? நூறு மலகு பருத்தியையும் அந்தக் கிருஷ்ணா மில்லுக்காரங்க திருப்பி அனுப்பீட்டானுகளே! அதயெல்லாம் நான் உங்களுக்கே திருப்பிக் குடுத்தா ஏத்துக்குவீங்களா, இல்ல, ஏத்துக்குவீங்களான்னு கேக்கற?”
“நாங்க ஏங்க ஏத்துக்கோணும்? இதோ பக்கத்தில் இருந்தே எடைபோட்டாரே – சருகையும் காயையும் வெச்சுவெச்சு மூடுனாரே – உங்க தரகர், அவரு ஏத்துக்குவாரு!” ராமசாமிக்கவுண்டர் இரைந்தார்.
“சொக்கலிங்கம், இதெல்லாம் உன்னோட வேலை யாய்யா? இதென்ன பொழப்புய்யா? என்னை இந்த மில்லுக்காரங்ககிட்டே தலைகுனிய வெச்சிட்டயேய்யா? குனிஞ்ச தலை நிமிரமுடியாதுய்யா! ஆயிரம் மலகு பருத்திய சிலோனுக்கு ஏத்தி விட்டிருக்கிறமே, அதிலயும் இப்படித்தானா? என்னய்யா, சொல்லு? சொல்லய்யா உண்மய.” கத்திய திருவேங்கடம் `அப்பா’ என்ற ரங்கநாதனின் குரல் கேட்டுத் திரும்பினார்.
“சிலோன் ஈஜண்டுகள் நாம அனுப்பிவெச்ச பருத்தி லோடுகள எடுத்துக்க மாட்டாங்களாம். சேம்பிள் காட்டுனபடி சரக்கு இல்லியாம். தந்தி குடுத்திருக்காங்க,” தந்தியைக் கையில் வைத்துக்கொண்டு வருத்தத்துடன் சொன்னான் ரங்கநாதன்.
“என்ன?” என்று அலறிய திருவேங்கடம் அப்படியே தடுமாறிப்போய்ப் பேச நாக்குழறினார்.
“சொக்கலிங்கம், நான் நெனைச்சது சரியாப் போச்சு. என் குடியே முழுகிப்போச்சு. திருவேங்கடம் இனிமேத் தெருவோடதான். அய்யா சொக்கலிங்கம், கப்பல்ல பருத்தி யெல்லாம் மலகு மலகா அப்படியே வந்து இறங்கும். நெருப்புப்பொட்டி ஒண்ணத் தயாரா வெச்சுக்குங்க. இறக்குனதும் வெச்சிறு. நானும் வாரேன். என்னோட மதிப்பு, மானம், வியாபார நாணயம் எல்லாத்தையும் என்னோட இந்த ஒடம்புல சேர்த்துக் கட்டி அந்தப் பருத்தியோட போட்டுத் தீய வெச்சிறுய்யா! எப்பவோ நான் செத்து எம் மகன் கொள்ளி வைக்கிறதுக்கு முன்னாலயே நீயே எனக்கு உயிரோட வெச்சிருய்யா!”

கப்பல் சரக்கு திரும்பி வந்ததோ, அது வருவதற்கு முன்னமே திருவேங்கடம் மனம் பேதலித்துப்போய் உட்கார்ந்து போனதோ, வாடிக்கையாகப் பருத்தி வாங்கி வந்த நான்கைந்து நூற்பாலைக்காரர்கள் வியாபாரத்தை நிறுத்திக்கொண்டதோ, இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடன்களை நல்லபடி தீர்த்ததோ, நாலுக்கும் இரண்டுக்குமாக நாளொவ்வொன்றும் அவதிப்பட்டு வாழ்க்கையை நடத்தியதோ – ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஊர்ந்து ஊர்ந்துதான் நடந்ததென்றாலும் – எல்லாமே கண்மூடித் திறப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது போலப் பட்டது தாயம்மாவுக்கு. தேடிவந்த செல்வமும் வசதியும் மகிழ்ச்சியும், முகம்சுழித்த உபசரிப்பைக் கண்டு வேறுபக்கம் அவசர வேலையென்று சொல்லிவிட்டு உடனடியாக நழுவிய விருந்தினர்களைப்போலப் போய்விட்டன! காலவெள்ளத்தின் விளிம்பில்தான் எத்தனைவகை மடிப்புச் சுழிப்புகள் மூடிக்கிடக்கின்றன! ஒவ்வொன்றிலும் யாராவது சிக்கிக்கொண்டால் தாயம்மா போலத்தானோ?
சொல்லிவைத்தற்போல அன்றைக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுடைய `இந்த வருகைமட்டும் ஐந்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருக்குமானால் எப்படித் தான் இருந்திருக்கும்? ஊரிலிருக்கும் அத்தனை குடும்பங்களி லிருந்தும் எத்தனை பேர்கள்தான் கூடியிருப்பார்கள்! வரபேற்பும் விருந்தும் என்னமாய்த்தான் இருந்திருக்கும்! இன்றைக்கு? கூப்பிட்டிருந்தால் பலரும் வந்துதானிருப்பர்கள். வந்தபின்னால்…? எந்த வாழ்க்கை வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் – இந்தப் பிழைத்துக் கெட்டுப்போய்ச் சொந்த ஊரிலேயே வாழும் வாழ்க்கையைத் தவிர’ – இந்த நினைவுகளெல்லாம் தாயின் மனதில் எழாமலில்லை. ஆனால் அவற்றையெல்லாம் அழுத்திக் கொண்டு, அவருடைய நெஞ்சையே அமுக்கிக்கொண்டு வந்திருந்த சிலரையும் `வாருங்கள்’ என்று மலர்ச்சியுடன் சொல்லவும் திராணியற்றுப் போக வைக்குமாறு மற்றொரு நிகழ்ச்சியல்லவா அவரைப் பேயாகப் பற்றிக் கொண்டு விட்டது. `தன்னுடைய ஒரே அருமை மகளைப் பெண்பார்க்க வந்தவர்களை – வருவார்கள் என்று தெரிந்திருந்தும் – வரவேற்கத் தன்னுடைய கணவர் இருந்தும் இல்லாதவராக ஆகிவிட்டாரே’ என்று கண்களில் நீர் மல்க நிற்கவேண்டி வந்துவிட்டதே அவருக்கு. தன்னுடைய ஒரே தங்கையைப் பெண்பார்க்க வந்தவர்களிடம் கலகல வென்று பேசி, அன்பாக உபசரிக்க ரங்கநாதனும் இல்லையே! தெரிந்திருந்தும், தெரிவித்தும் வரவில்லையே!
“பெருமானே, என்ன ஏ இந்த நிலைக்கு ஆளாக்குனே? மகளோட திருமணத்தைவிட அப்பனுக்கும், தங்கச்சியோட தாலியேத்தத்தையும்விட அண்ணனுக்கும் வேற என்னதான் முக்கியமாப் போயிறும்? அவர் இருக்கற இடம் தெரியல. அவனுக்குச் சொல்லியனுப்பியும் வல்லே,” என்று குமுறிய தாயின் நெஞ்சைப் பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சி ஈட்டியாய்க் குத்தியது. ஒருகணம் பிரம்மை பிடித்தவரைப்போலக் காணப்படுகிறார். அடுத்த கணத்தில் கண்களைத் துடைத்துக்கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக `வாங்க வாங்க’ என்று வந்து கொண்டிருந்தவர் களை வரவேற்கிறார். வீட்டுக்குள் விரைந்து விரிப்பை எடுத்து திண்ணையில் விரித்து அமரச் சொல்கிறார். கூட்டத்தில் ஒருவராக வந்த சின்னச்சாமி `அம்மா’ என்று அழைக்கவும், தாயின் மனம் மீண்டும் அவருடய பிடியிலிருந்து நழுவித் துடிக்கிறது. “அவர் எங்கே? தம்பி எங்கே?’ என்று யாராவது கேட்டுவிட்டால்? `ரெண்டுபேரும் வீட்டில் இல்ல. வீட்டுக்கு வாரதுமில்ல’ இந்த உண்மைய எப்பிடிச் சொல்லுவேன்? சொல்லீறலாம். சொன்னதுக்கப்புறம் என்ன நடக்கும்?’ – மனத்துடிப்பையும் துயரத்தையும் அடக்கியடக்கிப் பழக்கப் பட்டுவிட்ட தாய், அப்போதைய நிலைமையைப் புரிந்து கொண்டு பேசினார்.
“மன்னிச்சுக்குங்க. இன்னைக்கி அவரும் வீட்டிலில்ல, தம்பியுமில்ல. எதுக்கு மறைக்கணும்? அவுங்க ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணத்தில விருப்பம் இருக்காதோன்னு நான் நெனைக்கிறேன். என்ன சின்னச்சாமி, எல்லாத்தியும் தெரிஞ்சுகிட்டு இவுங்ககிட்டே உண்மையைச் சொல்லாமயே அழைச்சுக்கிட்டு வந்திருக்கயே?”
“எல்லாத்தியும் சொல்லியிருக்கேன் தாயி. பெரிய மனசுல அப்பறமும் வந்திருக்காங்க. இந்தக் கடுதாசியப் படியுங்க, புரிஞ்சிறும்,” சொல்லிய சின்னச்சாமி ஒரு கடிதத்தைத் தாயிடம் கொடுத்தார்.
“அன்புள்ள தம்பி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு திருவேங்கடம் எழுதிக்கொள்ளும் கடிதம். உங்க படிப்புக்கும் வசதிக்கும் எங்களையும்விட நல்ல இடம் அமைய வாய்ப்பிருந்தும் எங்கள் ஜெயாவை மணக்க விரும்பிப் பெண்பார்க்க வர இருப்பது கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்களை மாப்பிள்ளையாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் நினைத்தபடி எது நடக்கிறது? நான்கு நாட்களுக்கு முன்னால் எங்கள் குடும்பத்தில் ஒரு சச்சரவு நடந்துவிட்டது. என் மகன் ரங்கநாதன் வீட்டுக்குத் திரும்பமாட்டேன் என்று போய்விட்டான். தங்கையின் கல்யாணம் நின்றுபோய்விடும் என்று மிரட்டியும் பயனில்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்குக் கல்யாணமே வேண்டாமென்று என் மகளும் கோபித்துக்கொண்டு என்னோடு பேசப் போவதில்லை என்று சொல்லிவிட்டது. பெண் பார்க்கவென்று எங்கள் வீட்டுக்கு வந்து நீங்கள் இந்த அதிர்ச்சிகளுக்கெல்லாம் ஆளாக வேண்டாமென்று முடிவுசெய்து கொண்டேன். ஆகவே அடுத்த வாரம் சொல்லியபடி நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவேண்டாம். பிராப்தம் இருந்தால் பின்னைப்பிறகு பார்ப்போம். நான் வெளியூர் போகிறேன். சிரமத்திற்கு மன்னிப்புக் கோருகிறேன்.”
அன்புமிக்க
திருவேங்கடம்
கடிதத்தைப் படித்ததும் அடைத்து மறத்துப் போயிருந்த துக்கம் பீரிட்டுக்கொண்டு வருகிறது தாயம்மாவுக்கு. பெருந்தன்மையோடு வந்திருக்கும் அவர்களுக்கு முன்னால் அழுவது சரியில்லையென்று புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். தன் கணவர் இப்படியெல்லாம் நடந்துகொண்டதில் அவருக்கு எதுவும் வியப்பாகத் தெரியவில்லை.
“இன்னொண்ணையும் கேளுங்கம்மா! உங்க மகன் ரங்கநாதன் எங்கிட்ட வந்தார். எப்படியும் தன் தங்கையை மணந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தத் திருமணத்துக்கு வருவதும் வராமலிருப்பதும் அவருடைய சொந்த விசயமென்றும், அதற்காகத் தன் தங்கையைத் தண்டித்துவிட வேண்டாமென்றும் கெஞ்சியபடி கேட்டுக் கொண்டார். உங்கள் வீட்டுக்காரரின் கடிதத்தைப் படித்தும், உங்கள் மகனின் பேச்சைக் கேட்டும் முதலில் நான் தயங்கித்தான் போனேன். உளவு பார்த்துப்போவது போலச் சின்னச்சாமி மாமா வந்தார். ஒளிவு மறைவு இல்லாமல் என்னிடம் உங்கள் குடும்ப நிலையைச் சொன்னார். `எது எப்படியோ, சொன்னபடி அந்த வீட்டுக்குப் போய் வரலாம்’ என்று என் அம்மா சொல்லிவிட்டார். வந்திருக்கிறோம். உங்களைப் பார்த்துப் பேசியபிறகு இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்,” பாலகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் சொன்னான்.
`பெருமாளே! இதெல்லாம் உன் செயலா?’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்ட தாயம்மாள், அந்த நினைவில் தன்னையும் மற்றவர்களையும் மறந்து பிரம்மித்து நின்றுவிட்டார். அடுத்த கணம் ஏதோ நினைத்துக் கொண்டவராய்ப் பதறியடித்துக் கொண்டு வரவேற்க ஆயத்தப்பட்டார்.
“இருங்க, இருங்க! கொஞ்ச நேரத்தில்…” சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார். மகள் ஜெயலட்சுமி இருந்த நிலையைக் கண்டு ஆதுரத்துடன் பக்கத்தில் போய், “ஏம்மா அழறே? `நாயனாவும் அண்ணனும் இல்லாம எனக்குக் கல்யாணமே வேண்டாம்’கற பிடிவாதம் வேண்டாம்மா. அவுங்க ரெண்டுபேருந்தாம்மா மாப்பிள்ளைய அனுப்பி வெச்சிருக்காங்க! காரியம் கூடுனா அவுங்க வந்திருவாக. சந்தோசமா வந்தவுகளுக்குக் காபி கொண்டுபோய்க் குடும்மா,” என்று அவள் தலையை அன்புடன் தடவுகிறார்.
“எனக்காக இல்லைன்னாலும் உனக்காக வார மாப்பிள்ளையைக் கட்டிக்கிறேன்” என்று ஜெயலட்சுமி தன் தாயிடம் வேண்டாவெறுப்பாகத்தான் இரவு ஒப்புதல் தெரிவித்திருந்தாள். இப்போது நடந்த உரையாடல் அவளைச் சமாதானப்படுத்தியதோடு `தனக்கு வாய்க்கப் போகிறவர் பெருந்தன்மையானவர்’ என்ற மகிழ்ச்சியும் சேர்ந்துகொள்ள, அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தயாராயிருந்த காபியைக் கோப்பைகளில் ஊற்றுகிறாள்.

`அந்த வீட்டுக்குள் இந்த நிலையில் அதற்குள்ளாகவே காலடி எடுத்து வைக்கவேண்டியது’ வருமென்று தாயம்மாவால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. நிலைமை என்னவோ அப்படி வந்துவிட்டது. அதற்காகப் பயந்து பிரச்சனைகளிலிருந்து ஓடி ஒழிந்து கொள்பவரா அவர்? வசதியுடன் இருந்த காலத்திலேயே யாரையும் விரோதியாக நினைக்காமல் வாழ்ந்தவர் அவர். இன்றைக்கு அப்படி நினைப்பாரா? ஆனாலும் மனம் கொஞ்சம் தடுமாறுகிறதே. `அந்த வீட்டுக்காரனாலதான் நாம் இந்த நெலமைக்கு வந்தோம்’னு அவர் பதறிக்கிட்டாரே! `விதி’யுண்ணு நான் அங்கலாய்ச்சுக்கிட்டேன். ஆனா அவரோ `சதி’யுண்ணு சத்தப் போட்டாறே! சதிகாரன் வீட்டில உன் மகன் – தவமிருந்து பெத்தெடுத்த ஒரே பிள்ளை – என் சொல்லை மீறிச் சரணடைஞ்சிட்டானே! அந்தச் சொக்கனின் மகளா நமக்கு மருமகள்? நாம அவனுக்குச் சம்பந்திகளா? சே! சே! இந்தக் கொடுமையைச் சகிச்சுகிட்டு நா இந்த ஊருல உயிர் வாழ்றதா? எங்காவது போய் விழுந்து நாணுக்கறேன்,’ என்று ஓலம் போட்டுக்கொண்டு வீட்டைவிட்டுப் போய் நாலு மாசமாகி விட்டதே. இந்த நெலையில நான் அந்தச் சொக்கலிங்கத்தின் வீட்டுக்குப் போவதா? ஆமா, நான் என் மகனைத்தாம் பாக்கப்போறேன். அவனுடைய அன்புத் தங்கச்சியின் கல்யாணத்துக்குக் கூப்பிடத்தாம் போறேன். ஜெயாகூடத்தான் வேண்டாமுண்ணாள். ஆனாக்கூட நான் ஒரு முடிவோட இருக்கேன். சொக்கலிங்கம் என் சம்பந்தியோ இல்லையோ, ரங்கநாதன் என் பிள்ளை. அவன் இப்போ சொக்கலிங்கன் வீட்டுல இருக்கான். கூப்பிட்டாலும் வருவானோ மாட்டானோ? அதுக்காகக் கூப்புடாமலே இருந்துக்கறதா? எனக்குன்னு நான் இதுவெரைக்கும் எந்தக் கவுரவத்தையும் வெச்சுக்கிட்டதில்ல. போய்த்தான் பார்க்குறனே. வரட்டும், வராமப் போகுட்டும்.’ இத்தனை எண்ணங்களையும் மனதில் அலைபாய விட்டுக்கொண்டே அந்த வீட்டின் வாயிற்படியில் காலைவைத்து, நிமிர்ந்து பார்க்கவும் கூசிப்போய்க் குனிந்த தலையுடன் நுழைகிறார். எதிர்பார்க்காமல் அங்கே தாயம்மாவைப் பார்த்துவிட்ட கமலம், “வாங்கம்மா, வாங்க, உக்காருங்க” என்கிறாள். கமலம் மகிழ்ச்சிகொண்டிருக்கிறாளா, இல்லை அச்சப்பட்டு நிற்கிறாளா என்று சொல்லமுடியாதபடி நிற்கிறாள்.
“உம்… வர்ரேன். ரங்கநாதங்கிட்ட வந்திருக்கேன்னு சொல்லு.”
“என்ன வேணும்னு நீயே கேளு கமலம்,” உள்ளிருந்து குரல் வருகிறது.
“ஒண்ணும் வாங்கீட்டுப்போக நான் வரலேப்பா. ஜெயாவோட கல்யாணத்தைப் பத்திச் சொல்ல வந்திருக்கேன்.”
“உனக்கு முந்தியே நெறையாப் பேரு சொல்லிட்டாங்க அதைப்பத்தி.”
`அதுதாங் கேட்டதும் ஒடியாந்துட்டயாக்கும்?”
தலையைக் காட்டிக்கொண்டு வெளியே வந்த ரங்கநாதன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “போதும், போதும். எதுக்கு இந்தக் கேள்வியெல்லாம்? நான் யாரு, நீங்க யாரு, ஒறவாட? ஊரு ஒலகத்தில எத்தனையோ நல்லது கெட்டதுங்க ஒறவுக்காரங்க இல்லாமயே, இருந்தும் வராமயே நடந்து போகுது.”
“உன்னோட கல்யாணத்துக்கு நான் வல்லீன்னு சொல்றயா? உங்கய்யாவுக்கு அந்தக் கல்யாணத்துல கொஞ்சமும் விருப்பமில்லே. நீ கமலத்தைத்தான் கட்டிக்குவேன்னு வந்திட்டே. `அந்தக்…. பாக்கவோ கேக்கவோ நான் ஊருல இருக்கமாட்டென்’னு ஊரவிட்டுப் பயித்தமாப் பொறுப்பில்லாம அவரு வெளியேறிப் போயிட்டாரு. இப்போ எங்கிருக்காரு, என்ன ஆனாருன்னு ஒண்ணும் தெரியல. சொத்து சொகமெல்லா இருந்தபோது எல்லாரும் பாசமா இருக்கறதாக் காட்டிக்கிட்டம். இப்ப எல்லாம் போச்சு. வக்கறச்சுக்கிட்டோம். தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் கவுரவம் வந்திருச்சு. பொண்டுபுள்ளை களைக் காப்பாத்த முடியாமப் போக, உன்னோட நடத்தையைச் சாக்கா வெச்சு ஓடிட்டாரு. எம்மேலயும் உனக்குக் கோபம், இங்க வந்திட்ட. என்னால எங்க போகமுடியும்? ஜெயாவோட தவிச்சிட்டிருக்கேன்.”
“ஊருக்கே தாயாச்சே! பேச்சுப் பவுத்திரமாத்தா இருக்குது. நம்ம சொத்தெல்லாம் போறதுக்குக் கமலத்தோட அப்பா மட்டும் எப்பிடிக் காரணமாவாரு? நமக்குச் செரியா வியாபாரம் செய்யத் தெரியில. அப்பிடியே அவருதா அதுக்குக் காரணம்னாலும், கமலம் காரணமில்லேன்னு நீ சொல்லீருக்கக் கூடாதா? நீயுந்தான எங்களப் பிரிக்கிறதுக்குத் தொணை போன? ஏ? ஜெயாகூடத்தான் `கமலாளா எனக்கு நங்கயா’ன்னு `ஓ’ன்னு கத்துச்சே! எல்லாருமாச் சேந்துதான கொட்டிச் சபிச்சீங்க?”
“டே, டே, போதும்டா, நாங்க சபிச்சதும் நீ கெட்டதும். `கமலத்தைத்தா நாங் கட்டிங்குவன்’னு நீ சொன்னபோது, அவரு போட்ட கூச்சல்ல, அப்போ அவரு இருந்த மன நெலைல, நான் என்னடா உம்பக்கம் பேசறமாதிரி இருந்துது? அவர் மனம் வெந்து, பைத்தியமா உக்காந்திருக்கறப்போ உனக்கு எதுக்குடா கல்யாணம்னு கேட்டேன். கமலம் வேண்டாம்னா சொன்னேன்? அன்னைக்கிருந்த நெலையில ஜெயா என்னமோ சொல்லியிருப்பா. அது சின்னப் புள்ளைடா. பொறுப்பில்லாம நீ இந்த வீட்டுக்கே வந்திட்டீங்கறதத் தாங்கமுடியாம எங்கெயோ போறம்னு ஓடிப் போறவருகிட்ட நானென்னடா உங்கல்யாணம்பத்திப் பேசறது? சரி, சரி, அதெல்லாம் இப்பப் பழசாகிப் போச்சு. பொறப்படு. நான் ஒருத்தி கையில காசில்லாம என்னடா செய்வேன்? ஜெயா உன்னோட கூடப் பொறந்தவ. அப்பனும் அண்ணனும் இருந்தும் வராம, என்னடா அவ ஜென்மம்?”
“நான் எல்லாத்தையும் போட்டுப் பொதச்சிட்டுத்தான் இருக்கேன். நான் கல்யாணத்துக்கு வாரது தெரிஞ்சா அப்பா வரமாட்டாரு. எங்கிருந்தாலும் அவர் வந்திருவாரு. எனக்கு இந்தக் கல்யாணத்தில சந்தோசம்தான். மாப்பிள்ளகிட்டவும் பேசியிருக்கறேன்.”
“அவரு வரட்டும், வராம இருக்கட்டும். நீ வரோணும். பொறப்புடு. கமலத்தோடவும், சொக்கலிங்கத்தோடவும் பொறப்படு.”
“அம்மா நான் சொல்லீட்டேன். ஜெயா கல்யாணத்தில எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அது நல்லபடியா நடக்கணும்னா நா இல்லாமத்தா இருக்கணும்,” சொல்லிக்கொண்டே வெளி யேறிப் போன ரங்கநாதனைத் தாயம்மாள் தடுத்து நிறுத்தவில்லை.
உறுதியான மனதுடன் அவர் வெளியே வந்து வேகமாக நடந்தார்.

நாளும் சென்று தாய் வழிபடும் அந்தச் சிறிய பெருமாள் கோவிலிலேயே ஜெயலட்சுமியின் திருமணம் ஆடம்பர மில்லாமல் சிறிய கூட்டத்துடன் தொடங்குகிறது. `கணவர் வந்துவிடுவார், மகன் வருவான்’ என்ற நம்பிக்கையே கொஞ்சமும் இல்லாமல் தாயம்மாள் செயலில் ஈடுபடுகிறார். மகளின் திருமணத்தை `ஏதோ ஒரு கடனைப்போலப் பொறுப்பு விட்டது’ என்ற நினைவில், `எப்படியோ முடிந்தால் சரி’ என்ற நிலையில் நடத்தி வைக்கிறோமோ என்ற அச்சம் சில வேளைகளில் அவருக்குத் தோன்றினாலும், மாப்பிள்ளையாக வந்தவரின் பொறுப்பையும் பெருந் தன்மையையும் மனதாரக் கண்ட நேரத்தில், `இதைவிட இந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்திருக்க முடியாது’ என்ற ஆத்ம திருப்தி அவருக்கு ஏற்படுகிறது.
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனவுடனேயே மாப்பிள்ளை ஜெயாவை அழைத்துக் கொண்டு பம்பாய்க்குப் போய் இரண்டு வருடங்கள் பஞ்சாலை பற்றிய பயிற்சி பெற்றுத் திரும்பியதும், கோயமுத்தூரிலேயே ஒரு பெரிய பஞ்சாலையில் நல்ல வேலை பார்த்து வருவதும் தாயம்மாவால் எண்ணிப்பார்க்க முடியாத விதத்தில் கிடைத்த பூர்வ புண்ணிய பலன்களாகவே பட்டன.
`வாழ்ந்து கெட்டுப்போனோம்’ என்ற நிலைமையே மாறிப்போய்ச் சொத்தும் செல்வாக்கும் மகளைத் தேடி வந்த நிலை. `தன்னாலே அவளுக்கு இதில் கோடியில் ஒரு பங்காவது கொடுக்க முடியாமப் போச்சே’ என்ற எண்ணம் அவ்வப்போது தலைதூக்கினாலும், எங்கோயோ, இருப்பிடம் தெரியாமல் போய், என்னவோ வழியில், எப்படியோ வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னுடைய கணவரின் ஆழ்ந்த தன்னலமற்ற பக்தியின் பரிசாகவே அதை எடுத்துக் கொண்டார். தன்னுடைய மகன் ரங்கநாதனும் `நிம்மதியான வாழ்க்கையே வாழ்கிறான்’ என்று கேள்விப்படும் போதெல்லாம் உள்ளூர மகிழ்ந்து கொண்டார்.

புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை – அந்த வேதனையை நினைவூட்டிக்கொள்ள அன்றும் வந்தது. பதினைந்துமுறை வந்து நினைவூட்டிவிட்டது. ஆமாம், அந்தப் புண்ணிய நாளில்தான் அவர் வீட்டைவிட்டுப் போனார். `எங்கேயிருக்கிறார்? – இருக்கிறாரோ இல்லையோ? – இனிமே அவரைப் பார்க்கக் கொடுத்து வெச்சிருக்கறேனோ, இல்லையோ? தெய்வமே, என்னோட மாங்கல்யம் எத்தனை நாளுக்குச் சுமங்கலியிண்ணு சொல்லித் தொங்கும்? அது என்னோட கழுத்தில இருக்கும்போதே என்னை அழைச்சுக்க மாட்டியா?’ என்ற அதே வேண்டுகோளைத்தான் அன்றும் தாயம்மாள் பெருமாளிடம் மனமுருகி முன்வைக்கிறார். `அவர் எங்கோ போய்த் தற்கொலை பண்ணிக்கிட்டார். புருசனைத் திண்ணுபோட்டுச் சுமங்கலி வேசம் போடரா’ண்ணு பேசற பேச்சையெல்லாம் கேக்கவா நான் வாழணும்? `அவர் அப்படிச் செஞ்சுக்கவே மாட்டார். எங்கிருந்தாலும் என்னைத் தேடி வந்து சேருவார் என்ற நம்பிக்கையை எங்கிட்டே எப்போதும் விட்டுவை பெருமாளே’ என்று இறைஞ்சுகின்ற ஒரே வேண்டுதலுக்குத்தானே ஆண்டவனின் நம்பிக்கையை அவர் பற்றிக் கொண்டிருக்கிறார்.
கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அன்று அவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகச் சொல்லி ஒரு உறையை வேலைக்காரன் கொடுத்தான். அதைக் கையில் வாங்கியதும் அவருடைய உடல் சிலிர்த்துப் படபடத்தது. முகவரியில் அந்தக் கொட்டையான எழுத்துக்கள்! ஆம்! அவை அவருடையவைதான்! தாயின் மனம் சொல்லமுடியாத சலனத்தோடு விக்கித்துப் போகிறது. படபடக்க உறையைப் பிரித்து உள்ளிருந்த தாளை எடுத்துப் படிக்கிறார்.
`பிரியத்தை இன்னும் விட்டுவிடாமல் வைத்திருக்கும் என்னுடைய தாயுக்கு வேங்கடம் எழுதிக் கொண்ட கடிதம். பொறுப்பில்லாமல் உங்களையெல்லாம் தவிக்கவிட்டு ஓடிப்போன எனக்கு இன்றைக்கு – இத்தனை வருசங்களுக்குப் பிறகு – ஏதோ எழுதித்தான் ஆகவேண்டுமென்ற துடிப்பில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் எல்லாரும் மன்னிக்க வேண்டும். ஜெயம், ரங்கநாதன் மற்றும் நீ அனைவரும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஜெயத்தின் கல்யாணம் பற்றிப் பேசியது இன்றைக்குப்போலத் தெரிகிறது. கல்யாணம் நடந்து புருசன் வீட்டிலேயே இப்போது குழந்தைகுட்டிகளோடு நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் பதினைந்து வருசமா நன் எங்கெல்லாமோ, எப்படியெல்லாமோ சுற்றிவிட்டேன். திருப்பதிக்குப் போய்ப் பெருமாளைத் தரிசித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளத்தான் நினைத்தேன். அங்கே பக்த கோடிகளைப் பார்த்தபோது – பெருமாளுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஜீவானுபாவர் களைக் கண்டபோது – `அப்படியே நாமும் இருந்து விட்டால் என்ன’ என்ற முடிவுக்கு வந்து, இத்தனை நாளும் எல்லாப் புண்ணியத் தலங்களுக்கும் போய் மனதார ஆண்டவனைத் தரிசித்து, அங்கங்கே, மாதக் கணக்கிலும், வருசக் கணக்கிலுமாகக் காலந்தள்ளி விட்டேன். அவ்வப்போது உங்கள் நினைவு வரும். புறப்படவும் மனம் சபலப்படும். குடும்பம், தொல்லை, பிள்ளை, வியாபாரம், தோல்வி, அவமானம், சண்டை எல்லாமே கூடவே வந்து வெறுப்பை மீண்டும் மூட்டி விடும். அத்தோடு நாம் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தால் – அன்பு, பாசம் எல்லாவற்றையும் மீறிக்கொண்டு – சொல்லுக்கும் சோற்றுக்கும் வழியற்றுப் போன வாழ்க்கையை நினைத்தால் எல்லாமே அத்துப் போய்விடுகிறது. இந்தப் போராட்ட மெல்லாம் இப்போது இல்லை. சந்தோசமாக ஆண்டவன் நினைவில் திளைத்திருக்கிறேன். இப்போது நான் காசியில் இருக்கிறேன். இங்கே வந்து இரண்டு வருசங்கள் ஆயிற்று. சலனமற்ற மனதோடு கங்கைக்கரையில் ஆண்டவனைத் தினம் தரிசித்து வாழ்கிறேன். நீயும்கூட விரும்பினால் இங்கே வந்து விடலாம். ஜெயலட்சுமியிடம் சொல்லிவிட்டுப் புறப் படவும். இங்கே ஜெயத்தையோ மற்றவர்களையோ கூட்டிவர வேண்டாம். நீ மட்டுமே வரவும். உன்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்கத் துடிக்கிறேன்.
உன்னுடைய
வெங்கி ’

`வாரணாசி… வாரணாசி… என்ற சொல் ஏதோ ஓர் ஒலியாகக் காதைத் துளைத்த பாதிப்பு தாயம்மாவைப் பழைய நினைவுகளிலிருந்து ஒருபுறத்தில் மீட்டாலும், மற்றொரு புறத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், மனதில் இனந்தெரியாத குதுகலத்துடன் அதே இடத்தில் கேட்டுமகிழ்ந்த அதே சொற்களாகக் காதுகளில் விழுவதாகத் தாயம்மாள் உணர்கிறார். இதுவரையும் மனதில் நிழலாடிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த அந்தக் கடிதத்தைக் கூட மறந்து இரயிலை விட்டுக் கிடுகிடுவென்று வேகமாக இறங்கி, அந்த இடத்தில் அன்றாடம் பழக்கப் பட்டவர்போல நடக்கிறார். கொஞ்சதூரம் போனவுடனேயே மீண்டும் அந்தக் கடிதத்தை நினைத்துக் கொண்டவராகக் கையிலிருந்த பெட்டியைக் கீழேவைத்து, ஓரத்திலே செருகி வைத்திருந்த அதை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு, அதிலிருந்த முகவரியைச் சொல்லி அங்கு போக வழி கேட்டுக்கொணடே ஒரு வாடகைக் காரில் ஏறிக்கொள்கிறார்.
`எப்படி இருக்கிறாரோ? ஏன் எம் மனசு இப்போ இப்படி அடிக்குது? கடுதாசியில் எழுதியபடி உண்மையாகவே நலமாகத்தான் இருக்கிறாரா, இல்லை…?’ அப்படியொரு நினைவு தலைதூக்கியபோது அவருடைய நெஞ்சே நின்று விட்டதுபோல் தெரிகிறது.
`இருக்கவே இருக்காது. பெருமாள் என்னை அப்படிச் சோதிக்கவே மாட்டான்,’ என்று மனதைத் திடப்படுத்திக் கொள்கிறார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் – ஏன், புதுப்பிறவியைப்போல – இந்தச் சந்திப்பு! அப்பப்பா! இத்தகைய சந்திப்பின் அருமையை – மகிழ்ச்சியையும் சோகத்தையும் காட்டுவதற்காகத்தான் ஆண்டவன் இந்தப் பிரிவையே கொடுத்தானோ? அவர் இருப்பதாகச் சொன்ன இடம் நெருங்கநெருங்க, பதினைந்து வருடப் பிரிவும், சோகமும் என்னமாய் நெருக்கி அமுக்கப்படுகின்றன!
“அம்மா, நீங்க சொன்ன இடம் வந்தாச்சு,” என்ற காரோட்டியின் சொற்களைக் கேட்டுத் திடுதிப்பென்று மீண்டும் நினைவுக்கு வந்தவராக வேகமாய் இறங்கிக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த மடத்திற்குள் விரைகிறார். சுற்றுமுற்றும் பார்த்த சிறிது நேரத்துக்குள் அவருடைய கண்களில் அந்த மூலையில் குறுகிப் படுத்திருக்கும் ஒரு ஜீவன் தென்படுகிறது. அருகில் போய், “அய்யா, இந்த மடத்தில்… இந்தப் பெயரில்… அய்யோ சாமீ, நீங்களா? என்னுடைய தெய்வத்தின் கோலமா இது?” பதறியடித்துப் போய் அந்த மெலிந்த நோயுடம்பைத் தூக்கி உட்காரவைக்க முயல்கிறார். அந்த ஜீவன் கொஞ்சநேரம் தாயின் முகத்தையே உற்றுப் பார்க்கிறது. கண்களில் நீர் கொட்டுகின்றது. “எதுக்காக அழறீங்க? நான்தான் வந்துட்டேனே,” என்று கூறிக்கொண்டே சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைக்கிறார். மெதுவாகத் தலையைத் தூக்கி மடிமீது வைத்துக் கொண்டு ஆதங்கத்தோடு தடவிக் கொடுக்கிறார்.
“தாயீ!” அந்த ஜீவன் உதடசைக்கிறது.
“நான்தா, சொல்லுங்க.”
“நீ எப்படியிருந்தாலும் வந்திருவீன்னு தெரியும். அந்த நம்பிக்கைதா உயிர இந்த ஒடம்பில பிடிச்சிருந்துது. இனிமே நான் சந்தோசமாச் சாவேன்.”
“அப்படி சொல்லாதீங்க. இனிமே உங்களுக்கு நல்லதே நடக்கும்.”
“ `ஒடம்புக்குச் செரியில்லே’ன்னு எழுதுனா அவ்வளவு தூரத்தில இருக்கிற உன்னால தாங்கிக்க முடியாதுன்னுதா `நல்லா இருக்கிறேன்’னு எழுதுன.”
“எதோ அப்படி நெனப்பு வந்து எழுதுனீங்களே! எழுதாமயே இருந்திருந்தா நான் என்ன செய்யமுடியும்? `நல்லா இருக்கேன்’னு நீங்க எழுதியிருந்தாலும் எப்படி இருப்பீங்கன்னு என்னால நெனைச்சுப் பார்க்க முடிஞ்சுது. அப்படியேதா இருக்குறீங்க.”
தாயின் மடியிலிருந்து மெதுவாகத் தலையைத் தூக்கி எழுந்து உட்காருகிறார். ஒடிந்துபோன குரலில் பேச்சைத் தொடர்கிறார்.
“ஜெயா விட்டுல, ரங்கநாதன் வீட்டுல, சின்னச்சாமி எல்லாரும் நல்ல இருக்காங்களா?”
“எல்லாருமே சவுக்கியமா இருக்காங்க. ஜெயத்துக்கு நாலாவது கொழந்தையாப் பையன் பொறந்திருக்கிறான். `அவன் பொறந்த ஜாதகம்தான் உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கறதுக்குக் காரணம்’னு ஜெயம் சந்தோசத்தில சொன்னா.”
“ரங்கநாதனுக்கு?”
“அவனுக்குக் கொழந்தை இல்லே.”
“உங்கிட்டே வருவானா? இல்ல…”
“ஜெயாவோட கல்யாணத்துக்கு நான் போய்க் கூப்பிட்டேன். வல்லேண்ணுட்டான். கொழந்தைங்க காதுகுத்துக்கு ஜெயா போயிக் கூப்பிட்டா. அதுக்கும் வல்லே. அதுக்குப் பின்னால போக்குவரத்து இல்ல. மனசு பொறுக்காம, இப்ப நான் பொறப்படறதுக்கு முன்னால உங்க கடுதாசியைச் சின்னச்சாமிகிட்டக் கொடுத்துக் காட்டச் சொன்னேன். சிரிச்சுக்கிட்டானாம்.”
“என்னமோ என்னோட வாழ்க்கை அப்படிச் சிரிப்பாப் போச்சு. சம்பாரிச்சேன், பொழச்சேன், தொலச்சேன். சண்டை போட்டேன், பரதேசியானேன். இன்னும் பாவம் தீரல. இழுத்துக்கிட்டுக் கெடக்கு. பரதேசியாப் போனாலும் `ஆண்டவனே’ன்னு ஒரு நிம்மதியாப் போகணும். இல்லைன்னா இப்படி என்னப் போலத்தான்.”
“எல்லாத்தியிம் மறந்திட்டு இருங்க. நான் இப்போ அப்படித்தான் இருக்கேன். நம்ம நெனப்புப்போல ஒண்ணும் நடக்காது. நான் இப்போ பணம் கொண்டாந்திருக்கிறேன். இங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொஞ்ச நாளைக்கு ஒடம்பைக் கவனிச்சிட்டுப் பெறகு ஊருக்குத் திரும்புவோம். அது உங்களுக்கு முடியாதுன்னா இங்கயே தங்கிக் காலத்தைக் கழிச்சு முடிச்சிறுவோம். ஆஸ்பத்திரி பத்தி விசாரிச்சிட்டு வாரேன்,” சொல்லியபடியே எழுந்த தாயின் கையைப் பிடித்து நிறுத்துகிறார்.
“தாயி, உக்காரு. அந்த முயற்சியெல்லாம் இனிமே எனக்குப் பயனளிக்காது. உன்னோட பேசீட்டிருக்கும்போதே உயிர் பிரிஞ்சிட்டுதுன்னாத் தேவலைன்னு இப்ப நான் நெனைக்கிறேன்.”
“உங்க மடியில உயிர விடத்தான் நான் இங்க வந்திருக்கிறேன். உங்குளுக்கு இனிமே நல்லாயிரும். அந்த நம்பிக்கை எனக்கிருக்குது. ஆனா, நீங்க நான் சொல்றதக் கேக்கோணும்.”
“தாயி, நமக்குள்ள ஒருத்தரு சொல்லி ஒருத்தரு கேக்குலீங்கறது என்னைக்குமே கெடையாது. நான் சொல்றதத் தப்பா எடுத்துக்காத. என்னோட ஒடம்பும் நோயும் இருக்கிற நெலையில் டாக்டரால ஒண்ணும் செய்ய முடியாது. ஆண்டவனேகூட தங்கிட்டே கூப்பிட்டுக்கிறது மூலமாத்தா என்னைக் குணப்படுத்த முடியும். என்னை நீ வற்புறுத்த மாட்டேன்னு நம்பறேன்.”
“உங்க இஷ்டம்.”
“உங்கிட்டே நான் என்னவெல்லாமோ பேசணும்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ ஒண்ணும் தோணவும் இல்லே, பேசவும் முடியலே.”
“நானுங்கூடத்தான் அப்படி மனசுல தேக்கி வெச்சுகிட்டு ஓடியாந்தேன். உங்களப் பார்த்தப்புறம் – பழசு பழசுதானேன்னு எல்லாத்தையும் மறந்திட்டேன். அதை யெல்லாம் பேசறதால என்ன பிரயோசனம்? ஒண்ணையும் நெனைக்காம அமைதியா இருங்க. ஒடம்பு கண்டிப்பாத் தேறும்.”
“இங்க வாரவரைக்கும் எல்லாத்தையும் மறந்துதான் சுத்தி அலைஞ்சேன். ஆனா, வந்தப்புறம் பழைய நெனைப்பெல்லாம் வந்து மொய்க்க அலைக்கழிஞ்சிட்டேன். ரயிலை விட்டு எறங்கின உடனேயே அந்தப் பெருஞ் சத்தமெல்லாம் நாம முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னால ரெண்டு பேருமா இங்க வந்து பதினைஞ்சு நாள் இருந்துட்டுப் போனமே – அதையெல்லாம் நெனப்புக்குக் கொண்டாந்து விட்டன. கங்கையிலே குளிச்சுக்குளிச்சு ஆண்டவனைத் தரிசிச்சதும்…, இங்க வந்த நாளிலிருந்து ஒடம்பு சரியா இருந்த நாள் வரைக்கும் தினம்தினம் அதேபோல, அதே எடத்தில குளிச்சிட்டும், சந்நிதிக்குப் போயித் தரிசித்துக் கிட்டும்தான் இருந்தேன். இந்த ஒரு மாசமாத்தான் அதெல்லாம் முடியல. கூட ஒரு சந்யாசி இருக்கார். அவர்தான் இப்பத் தினமும் கங்கைத் தீர்த்தமும், சந்நிதானத்துப் பிரசாதமும் கொடுத்துக் கவனிச்சுக்கிறாரு. அப்படி ஏதாச்சும் நடந்திருச்சுன்னா, குளிக்கற எடத்திலயே தூக்கிப்போயிப் போட்டறச் சொல்லியிருக்கறேன். கங்கை ஒடல இழுத்து கிட்டுப் போகையிலதா எல்லாப் பாவங்களும் நீங்கிப் போகும்.”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க இன்னும் ரொம்ப நாளைக்கு எப்போதும்போலக் குளிச்சுத் தரிசனம் செய்யப் போறீங்க.”
“தாயி, அப்படியெல்லாம் நடக்காது. ரெண்டு நாளோ மூணு நாளோ. கடைசியா எனக்கு ஒரு ஆசை. நீ வந்தப்புறம் அதை நெறைவேத்திட்டுத்தான் சாகறதுண்ணு இருந்தேன். நீயும் வந்திட்ட.”
“என்னண்ணு சொல்லுங்க. கண்டிப்பா நெறைவேத்தீறு வோம். அது நெறைவேறுச்சுன்னாலே உங்க ஒடம்பு நல்லாயீறும்.”
“அதுக்குப் பின்னால நான் உயிர வெச்சிருக்க விரும்புல. நான் போனதுக்கப்புறம் நீயும் அனாதையா விட்டுட்டுப் போயிட்டனேன்னு கவலைப்பட மாட்டே. ஏன்னா, இத்தனை நாளும் அப்படித்தான இருந்த?”
“இனிமேலும் அப்படியிருக்க நான் விரும்பல. உங்களோடயே நானும் வந்திருவேன். தயவு செஞ்சு என்னைத் தடுத்திறாதீங்க. பொழைக்கறதுக்குத்தாங் கொடுத்து வைக்கில, சாகறதுக்காவது….
“உன்னோட மனசு எனக்குப் புரியுது தாயி. நீ திரும்பிப் போயி என்ன வாழ்க்கை வாழ்ந்திருவே? ஆனா, ஒண்ணே ஒண்ணுக்காக நீ திரும்பிப் போயித்தான் ஆகணும். ஜெயாவோட நெலைமையை எண்ணிப் பார்த்தீன்னா அது புரியும். நீ என்னக் கூட்டியாறப் போயிருக்கீன்னு அது என்னமாச் சந்தோசப் பட்டுக்கிட்டிருக்கும்? நீயே திரும்பலீன்னா? இந்த நெலையில என்னை அது பார்க்க வேண்டாம். பாத்துதுன்னா அதால தாங்கிக்க முடியாதுன்னு தான் உன்னைமட்டும் வரச்சொன்னேன். நான் ஏன் திரும்பலைங்கறதுக்குக் காரணத்தை அதுக்கு உன்னால சொல்லமுடியும். நாம ரெண்டு பேருமே போகாம, அப்படியொரு சேதிய எழுதிப் போட்டா, அது என்னமாத் துடிச்சுப்போகும். என்னைத்தான் இன்னும் அதிகமாச் சபிக்கும் – உன்னை அதுகிட்டேயிருந்து பிரிச்சுக் கொன்னுட்டேன்னு. நீ திரும்பிப் போயித்தான் ஆகணும். என்னோட ஆசையை நீ நெறைவேத்தவேணும். இப்போ இருட்டிப் போச்சு. நாளைக்கு அதிகாலமே நாம ரெண்டு பேருமாக் கங்கைக்குப் போறோம். முப்பஞ்சு வருசத்துக்கு முன்னால ரெண்டுபேருமாப் பிள்ளை வேணும்னு வேண்டி முழுகினோமே, அந்த எடத்தில முழுகப் போறோம். `ஆண்டவனே, எங்களுக்கு இனிமேப் பிறவியைக் கொடுக்காதே. அப்படிக் கொடுத்தாலும் எத்தனை பிறவியானாலும் எந்தப் பிறவியானாலும் எங்க ரெண்டு பேரையும் இந்த உறவிலேயே சேர்த்து வாழவிடு. இந்தப் பிள்ளைகளையே கொடு. ஆனா, அந்தப் பிள்ளைகளுக்கு ஏத்தவங்களா எங்களையும், எங்களுக்கு ஏத்தவங்களா அவுங்களையும் மாத்திக் கொடு’ன்னு வேண்டிக்கிட்டே முழுகுவோம். என் உயிர்போகும் வரை முழுகுவோம். பிறகு என் ஒடம்பை அழுகையில்லாமல்…”

வெளியில் சென்றிருந்த சந்யாசி திரும்பி வந்து சேர்ந்தார். அவருக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார் தாயம்மாள்.

========================================================
ப.க பொன்னுசாமி, 3 ராமலிங்கம் லேஅவுட், தளி சாலை, ராமசாமி நகர் வழி, உடுமலைபேட்டை, திருப்பூர் மாவட்டம்

ப. க்.பொன்னுசாமி, சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராகப் பணியார்றியவர்,10க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியவர். படுகளம் இ வரது நாவல் ( குறிப்பு: சுப்ரபாரதிமணியன்)

Series Navigationஎளிய மனிதர்களின் தன் முனைப்பு – நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..வேர் மறந்த தளிர்கள் – 20-21-22
author

ப.க.பொன்னுசாமி

Similar Posts

10 Comments

 1. Avatar
  N Sivakumar, New Delhi says:

  நெஞ்சைப் பிழிந்து விட்டது… வேரொன்றும் எழுத இயலவில்லை…

 2. Avatar
  charusthri says:

  after a iong time,i read a good story.actually,i was tired of reading one page short stories.really i am thrilled.

 3. Avatar
  Dr.G.Johnson says:

  திரு ப.க. பொன்னுசாமியின் ” தாயம்மா ” சிறுகதை மிகவும் நீளமாக இருந்தாலும் சிறுகதையின் இலக்கணம் அனைத்தும் கொண்டுள்ள சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. 35 வருடங்கள் கழித்து ரங்கநாயகி என்ற தாயம்மாவும் மரணத்தின் எல்லையிலிருந்த திருவேங்கடமும் மீண்டும் வாரணாசியில் கங்கையில் ஒன்றாக மூழ்கி இனி பிறவிகள் எடுத்தால் மீண்டும் இருவரும் அதே உறவுடன் இருக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வதும், அதே பிள்ளைகள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு எற்ற பெற்றோராகவும், தங்களுக்கு எற்ற பிள்ளைகளாகவும் அமைய வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வது மனதை உருக்குவதாகும்.

  பருத்தி வியாபாரம் நொடித்து போய் , கடன் அடைக்க சொத்துக்களையெல்லாம் இழந்த நிலையில், தவமிருந்து பெற்ற மகனால் உண்டான அவமானம், அனைத்துமே திருவேங்கடத்தை அமைதியைத் தேடி ஆண்டவனிடம் சரனைடயச் செய்கிறது. குடும்பம், தொல்லை, பிள்ளை, வியாபாரம், தோல்வி , அவமானம், சண்டை ஆகிய அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவராக 15 வருடங்கள் தனிமையில் ஆண்டவனின் சன்னிதானங்களில் கழித்து விடுகிறார். ஆனாலும் தாயம்மையைக் கடைசியாகப் பார்த்து விடவேண்டும் என்ற அவா இருக்கவே செய்கிறது . தான் இறந்த பின்பும் தாயம்மா மகள் ஜெயாவுக்காக வாழவேண்டும் என்று அவர் வற்புறுத்துவது மிகவும் இயல்பாக மனதைத் தொடுகிறது.

  கணவன் மனைவிக்கிடையிலான உறவும், அன்பும், நம்பிக்கையும் , தியாகமும் கதையினூடே நன்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

  கதைப் பின்னலும், நடையும், மொழியும் அருமை! ஒரு நல்ல சிறுகதையைப் படித்த மனநிறைவு உண்டானது! பாராட்டுகள் திரு ப.க.பொன்னுசாமி அவர்களே! ……… ………………..

  டாக்டர் ஜி.ஜான்சன்.

 4. Avatar
  சிற்பிபாலசுப்பிரமணியம் says:

  தாயம்மாள் அனுபவப் பிழிவான அருமையான கதை.பொன்னுசாமி மிகுதியாக எழுதட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *