” டாக்டர்! தூங்கி எழுந்து பார்த்தேன்! என் கால் விரல்களில் இரண்டைக் காணவில்லை! ” சண்முகம் அவ்வாறு கூறி அழுதான்.
இது போன்ற விநோதமும் மாயமும் கொஞ்ச நாட்களாகவே அங்கு நடந்தது.
அது செங்கல்பட்டு லேடி வில்லிங்டன் தொழுநோய் மறுவாழ்வு இல்லம்.
ஆனால் டாக்டர் காக்ரென் (.Dr. Cochrane ) அப்படியில்லை. அவரை அது பெரும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது.
சுமார் 300 தொழு நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் இதுபோன்று தூக்கத்தில் கால் விரல்கள் காணாமல் போவது நோயாளிகளிடையே பெரும் பீதியையே உண்டு பண்ணியது.
முழுதும் உள்ள கால் விரல் தூக்கத்தில் எப்படி காணாமல் போகும்?
தொழு நோய் சரித்திரத் துவக்க காலத்திலிருந்து உலகை உலுக்கியுள்ளது.இது பற்றிய குறிப்புகள் கி.மு.1550 ஆம் வருடத்தில் எகிப்திய பேப்பிரஸ் ( Egyptian papyrus ) எனும் எழுத்து படிவங்களில் உள்ளன.
கி.மு.600 ஆம் வருட இந்திய குறிப்புகளில் தொழுநோய் பற்றி கூறப்பட்டுள்ளது
மாவீரன் அலக்சாண்டரின் படைகள் இந்தியாவிலிருந்து திரும்பியதும் பண்டைய கிரேக்க நாட்டில் இது பரவியது.
கி.மு.62 ல் ஆசியாவிலிருந்து பாம்பேய் ( Pompeii ) துருப்புகள் திரும்பியதும் ரோமாபுரியில் தொழுநோய் தாக்கியது.
அப்போது தொழு நோயை ஒரு நோயாக யாரும் கருதவில்லை. அதை குஷ்டம் என்று அழைத்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களைப் பார்ப்பதே பாவம் என்று கருதினர். அது கடவுளின் சாபத்தால், அவர்கள் செய்த பாவத்தால் உண்டானது என்று நம்பினர். அவர்களின் அருகில் சென்றாலே தொற்றிக்கொள்ளும் என்றும் அஞ்சினர். ஐரோப்பிய நாடுகளில் தொழு நோயாளிகள் நடந்து வரும்போது மணி அடித்துக்கொண்டு வரவேண்டும். காற்று செல்லும் திசையில்தான் நடந்து செல்ல வேண்டும்.
தொழுநோய் பற்றிய இத்தகைய மூட எண்ணத்தை முதன் முதலாகத் தகர்த்தெறிந்தவர் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கெரால்ட் ஹென்றிக் அர்மாவுவர் ஹேன்சன் ( Dr. Gerhard Henrik Armauer Hansen ) என்பவர்.
இவர் சாதாரண நுண்ணோக்கியைப் ( microscope ) பயன்படுத்தி தொழுநோய் மைக்கோபேக்டீரியம் லெப்ரெ ( Mycobacterium Leprae ) எனும் நுண்கிருமியால் ( bacteria ) உண்டாகிறது என்பதை உலகுக்கு உணர்த்தினார்.அவரின் மாபெரும் கண்டுபிடிப்பை நினைவு கூறும் வகையில் இன்று தொழுநோய் ஆங்கிலத்தில் ஹேன்சன் நோய் ( Hansen’s Disease )என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் தமிழில் இன்னும் சிலர் இதை குஷ்டம் என்றும் பெருவியாதி என்றும் அழைத்து அவர்களைச் சிறுமைப் படுத்துவது வேதனைக்குரியது. தொழுநோயாளி என்றால் அவர் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் படவேண்டியாவர், அவர் பிச்சைஎடுக்க வேண்டியவர் என்ற எண்ணமும் நம்மிடையே நிலவிய இருண்ட காலமும் உண்டு;
டாக்டர் காக்ரேன் வங்காளம், இந்தியா , பர்மா, மலாயா, போர்னியோ , பிலிப்பின்ஸ் , ஜப்பான், கொரியா போன்ற கிழக்கிந்திய நாடுகளில் தொழுநோய் ஆய்விலும் சிகிச்சையிலும் பெரும் பங்கு வகித்தவர். இதற்குமுன் இவர் இங்கிலாந்தில் பல ஆண்டுகள் இந்நோய் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்.
இவர் நான் பயின்ற வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கதையின் சம்பவம் நடந்தபோது அவர் செங்கல்பட்டு லேடி வில்லிங்டன் தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தில் ( Lady Willington Leprosarium ) 1935 முதல் 1044 வரை பணி புரிந்த காலக்கட்டம்.
இத்தனை சிறப்புகளை விட அவருக்கு வேறொரு மகத்தான உலகின் சிறப்பும் உள்ளது.இவர்தான் முதன்முதலாக தொழுநோய்க்கு டேப்சோன் ( Dapsone ) என்ற மருந்தையும் கண்டுபிடித்து உலகத்தின் தொழுநோயாளிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமானார்!
கல் சுவர்களாலும் ஒட்டு கூரையாலும் கட்டப்பட்டிருந்த அவரின் அலுவலக கட்டிடத்தின் வெளியே தொங்கிய பெயர்ப் பலைகயில் , ” Dr .Robert Greenhill Cochrane CMG , MD , FRCS , D TM &H ” என்று போறிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயரின் வெள்ளை நிறம். நல்ல உயரம். திடகாத்திரதமான உடல். வெள்ளி நிறத்தில் அடர்ந்த நேர் கேசம் . அறிவொளி வீசும் ஆழ்ந்த பார்வையுடைய இள நீல விழிகள்.இவர்தான் டாக்டர் காக்ரென் .
அவரின் தொடையில் கணேசனின் வலது கால் இருந்தது.கையுறை போடாத கைகளால் அந்தக் காலின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு.விரல் இருந்த ( இழந்த ) பகுதியை உற்று நோக்கி பரிசோதித்தார்.
அந்தப் பகுதி அழகாக சீவப்பட்டிருந்தது.யார் இந்த கோர வேலையைச் செய்திருப்பார்கள் என்று யோசித்தார்.
அருகில் உதவியாளர் பழநி நின்று கொண்டிருந்தார்.
” மிஸ்டர் பழநி ., கணேசனுக்கு ஒரு எ டி டி ஊசி போட்டு விட்டு டிரெஸ்ஸிங் செய்யுங்கள் “..என்றார்.கணீர் என்று ஒலித்த அந்தக் குரலில் கண்டிப்பும் இருந்தது.
” சரிங்க டாக்டர். ” பழநி பணிவாக பதிலளித்தார்.
பழநி கட்டு போட்ட அந்த நேரத்தில் தபால்களைப் பார்த்தார்.
கட்டு போட்டு முடிந்தது.
” வாருங்கள். கணேசனின் அறையைப் போய்ப் பார்போம் ” என்றவாறு அறையை விட்டு வெளியேறினார்.
அவர்கள் இருவரும் அவரைப் பின் தொடர்ந்த்தனர்.
அப்போது காலை பத்து மணி . துப்புரவுப் பணியாளர்கள் வீதிகளையும் வாசல்களையும் கூட்டிப் பெருக்கிமுடித்து விட்டனர்.அவர்களும் அந்த இல்லத்தின் நோயாளிகள்தான்.
மறுவாழ்வு இல்லத்தில் நோயாளிகளே அன்றாட வேலைகளை அவர்களாகவே செய்துகொள்ள கற்றுத் தரப்பட்டனர். இது தவிர கூடை பின்னுதல், தச்சுத் தொழில், கைத்தறி ,காய்க்கறித் தோட்டம் போன்றவற்றிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
போகும் வழியில் பழநியைப் பார்த்து ,” நாம் ஒரு துப்பு துலக்கப் போகிறோம் ” என்று சிரித்தவண்ணம் கூறினார். அவரிடம் நகைச்சுவை உணர்வு நிறையவே இருந்தது.அதனால் நோயாளிகளிடமும் மிகவும் அன்புடனும் நெருங்கியும் பழகினார்.
கணேசனின் குடிசைக்குள் நுழைந்தார்.அவன் படுத்திருந்த இடத்தை ஆராய்ந்தார். அவனின் கால்மாட்டுப் பகுதியில் இலேசான இரத்தக் கறைப் படிந்திருந்தத்து.அவருக்கு அன்று கிடைத்த துப்பு அவ்வளவுதான்.
அறையின் சுவர்களைப் பார்த்தார்.
மேலே போடப்பட்டிருந்த வைக்கோல் கூரையைப் பார்த்தார். மூங்கில் கழிகளின் மேல் தென்னங்கீற்று நெய்ப்பட்டு அதன்மேல்தான் வைக்கோல் போடப்பட்டிருந்தது..
” சரி. நாளை மீண்டும் வருவோம் .” என்று கூறியவாறு கணேசனை அங்கேயே விட்டுவிட்டு பழநியுடன் மற்ற நோயாளிகளைக் காணப் புறப்பட்டார்.
போகும்போது பழநியை நோக்கி , ” நாம் இன்னும் காலையிலேயே இங்கு வந்திருக்க வேண்டும் ” என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அவர் எதைத் துப்பு துலக்கப் போகிறார் என்பது புரியாமல் பழனி விழித்தவாறு தலையை மட்டும் ஆட்டினார்.
மறுவாழ்வு இல்லத்தில் ஒரு சிற்றாலயம் இருந்தது.
அன்று மாலை ஆராதனையில் டாக்டர்தான் நற்செய்தி வழங்கினார்.அப்போது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இனிமேல் காலையில் கால்விரல் காணாமல் போனால் விடிந்ததுமே பழநியிடம் அதைத் தெரிவித்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எதிர்ப்பார்த்தபடியே மறுநாள் ராமசாமியின் கால் விரல் மாயமாய் காணாமல் போனது.அவன் உடன் அதை பழயிடம் தெரிவித்தான்.
பழநியுடன் ராமசாமியின் குடிசைக்கு விரைந்தார் டாக்டர் காக்ரேன் .
முதலில் அவன் அறைக்குள் நுழைந்து தரையை நோட்டமிட்டார்.அங்கு இரத்தக் கரை தென்பட்டது.
வெளியே வந்து குடிசையைச் சுற்றி இருந்த மண் தரையைக் குனிந்து நோக்கி எதையோ தேடினார்.
குடிசையின் முன்பக்க வாசலில் ஏதும் தென்படவில்லை. குடிசையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு பின்பக்கம் சென்றார்.
அங்கு எதையோ பார்த்து விட்டு பழநியைப பார்க்கச் சொன்னார். பழநி ஒன்றும் புரியாத நிலையில் அருகில் அமர்ந்து அவர் காட்டிய இடத்தை உற்று நோக்கினார்.
” குற்றவாளி மாட்டிக்கொண்டான் மிஸ்டர் பழ!நி ” என்றார் உரத்த குரலில்.
அங்கு மிகச் சிறிய அளவிலான கால் தடயங்கள் மணலில் பதிந்திருந்தன!
” சந்தேகமே இல்லை ! இவை எலியின் கால் தடயங்கள்தான்! ” என்றார் வெற்றிப் பெருக்குடன்.
அதன்பின் எலிகள் அறைக்குள் நுழைய முடியாதபடி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.கால் விரல்களில் புண் உள்ளவர்கள் கால் உறைகள் அணிந்துகொண்டு இரவில் தூங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பலரின் கால் விரல்கள் பாதுகாக்கப்பட்டது.
( தொழு நோயாளிகளின் கால்களில் உணர்ச்சி நரம்புகள் முற்றிலுமாக செயல் இழந்து போவதால் தொடு உணர்ச்சியும், வலி உணர்வும் இல்லாமல் பொய் விடுகிறது.இதனால்தான் கால் விரல்களில் புண் தோன்றி ஆறுவதில்லை.புண் எலும்பு வரையும் பாதிப்பை உண்டுபண்ணிவிடும். இரவில் நோயாளி நல்ல உறக்கத்தில் இருக்கும் வேளையில் எலி மிகச் சுலபமாக அந்த கால் விரலைக் கடித்து துண்டித்து எடுத்துக்கொண்டு ஓடிவிடும்! உணர்ச்சி இல்லாத காரணத்தால் நோயாளிக்கு எலி கடிப்பதும் தெரியாது! வலியும் இருக்காது! )
( முடிந்தது )
- சூறாவளி
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 11
- மாயமாய் மறையும் விரல்கள்
- தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -11 மூன்று அங்க நாடகம்
- மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி
- நீங்காத நினைவுகள் – 11
- புகழ் பெற்ற ஏழைகள் – 16
- தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்
- gÖdSe presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE) written & directed by Elangovan
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’
- மெய்கண்டார்
- தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு – நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..
- தாயம்மா
- வேர் மறந்த தளிர்கள் – 20-21-22
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 19
- நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது