காக்காய் பொன்

This entry is part 17 of 30 in the series 28 ஜூலை 2013

 

பவள சங்கரி

 

அந்தி மாலைப் பொழுது. இருண்ட மேகக்கூட்டத்தின் இடையே அவ்வப்போது மெல்ல முகம் காட்டி மறையும்  நிலவுப் பெண்.  அசைந்து, அசைந்து அன்னை மடியாய் தாலாட்டும் இரயில் பயணம்.  சன்னலோர இருக்கையாய் அமைந்ததால் இயற்கை காட்சிகளுடன் ஒன்றிய பயணமாக அமைந்தது. ஆம்பூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் பாதை . தென்னை மரக்கூட்டங்களின் அணிவகுப்பு.  இடையே சுகமாய் நித்திரை கொள்ள ஏங்க வைக்கும் சுத்தமான மண் தரை. சிலுசிலுவென தென்னங்காற்றின் சுகத்தினுடன் இரண்டு அணில் பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மூக்கோடு மூக்கை வைத்து உரசி எதோ கேலி பேசி நகைத்துக் கொண்டிருந்தன.. வாக்மேனிலிருந்து மெலிதாக மொழி படப்பாடல் இனிமையாக இதயத்தை ஊடுறுவிக்கொண்டிருக்கிறது.

 

காற்றின் மொழி ஒலியா இசையா

பூவின் மொழி நிறமா மணமா

கடலின் ஒலி அலையா நுரையா

காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடின்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

 

வைரமுத்துவின் அற்புதமான கவிதை வரிகளும், வித்யாசாகரின் இசையும், பலராம் மற்றும் சுஜாதாவின் மயக்கும் குரலும்  அனைத்தும் சேர்த்து வேறு ஒரு உலகத்திற்கே இழுத்துச் சென்று கொண்டிருக்கும்போது அதையும் மீறி எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் சலிப்பான முனகல் சத்தம். இடையில் இந்தத் தடை மூன்றாவது முறை.  அப்படி என்னதான் பிரச்சனையாக இருக்கும். மயக்கத்தில் மூடிக்கிடந்த விழிகளை வலுக்கட்டாயமாகத் திறந்து பார்த்தேன். 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இடையில் அமர்ந்திருக்க, இரு புறமும் 16 அல்லது 17 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். இடையில் இருந்த அந்தப் பெண் ஏகத்திற்கு நெளிந்து கொண்டிருந்தார். சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த பையனின் முழங்கை அந்தப் பெண்ணின் வயிற்றில் முட்டிக் கொண்டும் தலையை அவர் தோளில் சாய்ந்தது போலவும் உட்கார்ந்திருந்தான். இன்னொரு புறம் இருந்தவன் துளியும் இடைவெளி இல்லாமல் அவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்திருந்தான்.  அவர்களின் நடவடிக்கை பெரும் அசூசையை ஏற்படுத்தியது என் முகம் போன போக்கு அவர்களுக்கு காட்டிக் கொடுத்திருக்கும் போல. இருவரும் சற்று விலகி உட்கார முயற்சி எடுப்பது போலத் தோன்றியது. மிகவும் அப்பிராணியாகக் காட்சியளித்த அந்தப்பெண் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டது போல இருந்தது. மீண்டும் பாடல் உள்ளே இழுக்க கண்கள் மெல்ல செருக ஆரம்பித்தது.

 

‘போளி. போளி.. ஸ்வீட் போளி.. பஜ்ஜி.. மொளகா பஜ்ஜி. வாழைக்காய் பஜ்ஜி’ என்ற தொடர்ந்த கூச்சல் கேட்டு இசை வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு தடை.  பின் இருக்கையில்  தன் தாயின் மடியில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை கையைக்காட்டி வேண்டும் என்றது. பெற்றோர் வாங்கிக் கொடுக்கலாமா என்று யோசிக்கும்போதே,  அந்த விற்பனையாளர் அருகில் வந்து ஒரு பேப்பர் தட்டையும் எடுத்து எத்தனை போளி வேண்டும் என்று கேட்க அந்தக் குழந்தை சட்டென்று அம்மாவுக்கும், எனக்கும் வேணும் என்றது மழலையில். ‘ஒண்ணு கொடுங்க போதும்’ என்றார் அந்த அம்மா வேறு வழியில்லாமல்.  அதற்குள் எதிர் இருக்கையில் அந்தப் பெண்மணியின் வலதுபுறம் உட்கார்ந்திருந்த அந்தப் பையன் எழுந்து கதவின் பக்கம் நின்றுகொண்டு போனில் பேசிக்கொண்டிருந்தான்.  ஸ்ஸ்ஸ்…. அப்பாடி என்றவாரு அந்தப் பெண் சற்றே விலகி உட்கார்ந்தார். முகத்தில் அத்துனை வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. பாவம் இந்த நிம்மதியும் மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. எழுந்து போன அந்தப் பையன் மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டான். சன்னலோரத்தில் அமர்ந்திருந்த அந்த விடலைப் பையன் மெல்ல இடது கரத்தை எடுத்து பின் புறமாக அந்தப் பெண்ணின் இடுப்பை அணைத்தாற்போல வைத்துக் கொண்டு, வலது கையை வெகு லாவகமாக அவர் மடியில் அழுத்தமாக வைத்துக் கொண்டதோடு தலையை மெல்ல தோளில் சாய்க்க முயற்சித்தான். இன்னொருவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பும் சிரித்துக்கொண்டான். இதற்கு மேலும் இந்தக் கொடுமையைச் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் அந்தப் பெண் கொஞ்சம் சத்தமாகவே “தம்பி என்னப்பா இது.. கொஞ்சம் தள்ளி உட்காருப்பா” என்றார். ஆனால் அவன் அதை சட்டை செய்ததாகவேத் தெரியவில்லை. செய்வதறியாது நெளிந்து கொண்டே உட்கார்ந்திருந்தார் அந்தப் பெண். அந்தப் பையனை முறைத்துக் கொண்டே ஏதாவது கேட்கலாம் என்று நினைத்து காதில் இருந்த ஹெட்போனை கழட்டிய அதே நேரம், என் அலைபேசி இனிமையாகப் பாடி என்னை உலுக்கியது.

 

சந்திராவின் எண்ணைப் பார்த்தவுடன், சற்றும் தாமதியாமல் எடுத்தேன். அவள் அனாவசியமாக பேச மாட்டாள். போனை எடுத்து நலம் விசாரித்துவிட்டு, நானே அழைப்பதாகக் கூறி லைனை துண்டித்துவிட்டேன். சந்திரா பள்ளியிறுதியாண்டு வரை என்னுடனே தொடர்ந்து 7 ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருந்தவள். கல்லூரிக்குச் செல்லும் நேரம் வந்தவுடன் அவள் குடும்பத்தில் வசதி இல்லாதலால் படிப்பை நிறுத்திவிட்டு, கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். தனக்குக் கீழே இருக்கும் இரு தங்கைகளைப் படிக்க வைக்க இவள் சம்பளமும் அவசியமாக இருந்தது. நான் கல்லூரியில் சேர்ந்த பிறகும் விடுமுறை நாட்களில் அவளுடன் தொடர்பில் இருந்தேன். திருமணத்திற்குப் பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டுதானிருந்தது. சந்திராவிற்கும் திருமணம் ஆகி ஒரே பையனுடன், வசதி குறைவாக இருந்தாலும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் விதியின் விளையாட்டு, கணவனை திடீரென்று நோய் கொண்டுபோக, பள்ளியிறுதியாண்டு படிக்கும் ஒரே மகனுடன் தனித்து விடப்பட்டாள். தான் சம்பாதிக்கும் பணம் இருவரின் வயிற்றுப் பாட்டிற்கும், வீட்டு வாடகைக்கும் மட்டுமே சரியாக இருந்தது. பையனை எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தவள் அதற்காக அதிகப்படியாக வேலை பார்த்தும் தேவைக்கேற்ப முழுமையாக சம்பாதிக்க முடியவில்லை. எனக்கு விசயம் தெரியவர, எனக்குத் தெரிந்த ஒரு டிரஸ்ட் மூலமாக அவளுடைய மகனின் படிப்பிற்கான உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்ததோடு அவ்வப்போது என்னால் ஆன சிறு தொகைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். கொஞ்ச காலமாக இருவரும் கடிதம் அல்லது தொலைபேசித் தொடர்பு மட்டுமே கொள்ள முடிந்தது. யோசனையில் ஆழ்ந்து போனதில் சந்திராவிற்கு போன் செய்ய மறந்து போனது புரிய சட்டென்று போனைச் சுழற்றிப் பேசினேன். தன் அம்மாவிற்கு திடீரென்று உடல் நலம் மோசமாகிவிட்டது என்பதையும், அவசரமாக கைமாற்றாக கொஞ்சம் பணம் தேவையென்றும் கேட்டாள். நானும் அடுத்த நாள் அவள் வங்கிக் கணக்கில் கட்டுவதாகச் சொல்லி சற்று நேரம் பேசிவிட்டு இணைப்பைத் துண்டிக்கும் போது, அடுத்த முறை நான் கோவை வரும்போது தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று  கூறினாள்.நான் கோயம்புத்தூர் வேறு ஒரு காரியமாக வந்து கொண்டிருப்பதையும் இந்த முறை எப்படியும் அவளை சந்திப்பது என்று உறுதியாகத் திட்டமிட்டிருப்பதை அவளிடம் சொல்லாததற்கு காரணம் திடீரென்று போய் நின்று இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்குத்தான்.

 

போன் பேசி முடித்தவுடன் தன்னிச்சையாக கண்கள் எதிர் இருக்கையின் அந்தப் பையன் பக்கம் திரும்பியது. அவன் கொஞ்சமும் விலகாமல் அந்த அளவிற்கு நெருங்கி உட்கார்ந்திருப்பதும் அந்தப் பெண் பல முறை சொல்லி சலித்துப்போய் நெண்டிக் கொண்டேயிருப்பதையும் கவனித்த நான் கோபமாகப் பேச ஆரம்பிக்கும் போதே வலதுபுறம் உட்கார்ந்திருந்த அந்தப் பையன், சட்டென்று, அந்தப் பையனைக் காட்டி, இந்த பாபுவின் அம்மா இப்பத்தான் சமீபத்தில் செத்துப் போயிட்டாங்க பாவம்… அந்த துக்கத்தில்தான் அவங்க நினைவா இப்படி இவங்ககிட்ட இருக்கான்  என்று ஏதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தான். அந்தப் பையனும் அதை மறுக்காமல் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டான். ஏனோ அதில் அதிகமாக நம்பிக்கை வராவிட்டாலும், கோபம் சற்று குறைய இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்று அமைதியாக இருந்தேன். கோவை ஸ்டேசனுக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருந்தது.. ஆனாலும் அவன் உட்கார்ந்திருந்த விதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சகஜமாக உட்கார்ந்திருந்தான்.. அதைப் பார்க்கவும் பிடிக்காமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்.

 

கோவை இரயில் நிலையம் வந்தவுடன் ஒன்றுமே நடக்காததுபோல இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு பையுடன் இறங்கினான். அவன் பின்னாலேயே நானும் இறங்கினேன். கூட்ட நெரிசல். எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள். மீண்டும் ஒரு பேருந்தைப் பிடிப்பது போல முண்டியடித்து அவசரமாய்ச் செல்லும் மக்கள். அவ்வளவு கூட்டத்திலும் பளிச்சென்று சந்திராவின் முகம் என் கண்ணில் பட்டது. அவள்தானா இல்லை அதே நினைவில் இருப்பதால் ஏற்பட்ட தோற்றப் பிழையோ என்று மீண்டும் உற்று நோக்கினேன். அவளேதான்! சந்திராவை அங்கு பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம். நான் வந்தது தெரிந்துதான் வந்திருப்பாளோ என்று நினைப்பதற்குள், அவள் என்னைப் பார்த்ததாகவேத் தெரியவில்லை. “பாபு.. கண்ணா.. பாபு” என்றாள். சட்டென்று திரும்பினால் என் எதிர் இருக்கையில் சிலுமிசம் செய்து கொண்டிருந்த அதே பையன் “அம்மா” என்றபடி சந்திராவின் அருகில் சென்றான். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனாலும் மறு நிமிடம், கோபம் மண்டைக்கு ஏற என்ன செய்கிறோம் என்று புரியாமலே சட்டென்று அவனருகில் சென்று பளார் என்று நான்கு அறை விட்டேன். என்னைப் பார்த்த இன்ப அதிர்ச்சி ஒரு புறம், மகனை கண்மூடித்தனமாக அடிக்கும் காரணம் புரியாத அதிர்ச்சி ஒரு புறமும் சேர்ந்து கண் சிமிட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அந்தப் பேதை!

Series Navigationதிருட்டுவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
author

பவள சங்கரி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பவள சங்கரியின் ” காக்காய் பொன் ” சிறுகதை சுவையாக உள்ளது. இரயில் பிரயாணத்தின் போது தன கண் எதிரே நடந்த தகாத செயலைக் கண்டு முகம் சுழிப்பதும், அவனின் தாயின் எதிரிலேயே அவனை தண்டிப்பதும் சாலச் சிறந்தது.சிறு சிறு சம்பவங்களும் நல்ல சிறுகதையாக உருப்பெறலாம் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு! வாழ்த்துகள் பவள சங்கரி……டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *