மாஞ்சோலை மலைமேட்டில்…..

This entry is part 29 of 30 in the series 28 ஜூலை 2013

ருத்ரா

தீக்கொளுந்து போல‌
தேயிலைக்கொளுந்து
துளிர் பிடிச்சு நிற்கையிலே
அங்கே ஓம் மனசுக்குள்ளே
துடுக்குத்தனமாய்
உடுக்கடிக்கும் என்
உள் மனசு கேக்கலையா
சொல்லு புள்ளே பூவாயி.

கேக்கத்தவங்கெடந்து என்
நெஞ்சுக்குள்ள தேடிக்கிட்டு
கெடக்கேனே தெரியலையா?
ஊர்க்காட்டு சாஸ்தாவும்
ஊமையாக நிக்கிறாரு.
தாம்ரவர்ணி ஆத்துக்குள்ளே
ஆவி நிழல் தேடுறேன்
அல விரிச்ச முந்தான‌
அமுக்கதடி என்னுயிரை.

அம்பாந்த்ர சாலயிலே
அண்ணாந்து கெடக்குறாக‌
வண்டி மறிச்ச அம்மன்களும்
கோடாங்கி அடிச்சி
நாளு குறிக்கப் போனேனே
கோடாங்கிக்காரன்
கோடாலிய தலமேல
போட்டாப்ல சொன்னானே.
முறப்பய்யன் உன்னத்தான்
மொய்ச்சுக்கிட்டு நிய்க்கானாம்.
மாமன தெனமும்
குவாட்டருல‌ குளுப்பாட்டி
கம்முட்டுக்குள்ள வச்சுருக்கான்
ஒங்கனவையும் சுருட்டி
அங்கன தான் வச்சருக்கான்னு
காடு கரை பேசுதடி.
கண்ணாலம் அவனோடுன்னு
ஊரெல்லாம் பேசுதே.
என்ன புள்ள ஓன் நெனப்பு.
உம்முண்ணு சொல்லிடு
மாஞ்சோலை மலையோட‌
பேத்திடுவேன்.
மனம் போல் தாலிகட்டி
மல்லாக்க படுத்துக்கலாம்.
நச்சத்திரங்க அச்சதையிலே
நல்லா நாம் வாழ்ந்திருவோம்.
முதுகு கோணியிலெ
தேயிலச் சுமப்பவளே
அந்த இலைக்குள்ளே
நரம்பிருக்கு என்
உயிரோட்டம் அதிலிருக்கு
சேதி அனுப்பு புள்ளெ
சீக்கிரமா வந்துருவேன்.
……………………………………
……………………………………….

சேதி வருமுன்னே
மணிமுத்தாறு ஆத்து
அலை ஒதுங்கி அலை ஒதுங்கி
வைராவி குளம் வருகையிலே
சாக்கு மூட்டை
அங்கு ஒண்ணு
மிதந்து மிதந்து வந்துது.
குடமுருட்டி கல் படுக்கையில்
வைரத்திவலைகள் பாய்ச்சி
சிவப்பாய்
சூரியன் மீதே எதிர்க்கிரணம்
கொப்பளித்து கிடக்குது.

செவ்வானம் விடிகிறது.
செவ்வானம் அடைகிறது.
கண்ணீரின்
செங்கடலுக்கு மட்டும்
கரையில்லை.
அணையில்லை.

காக்கா குருவிகள்
வழக்கம் போல்
பறந்து பறந்து
சிறகுகள் துடிக்கின்றன.
மாஞ்சோலையின்
வான முகட்டுக்கோ
வலியில்லை.
வதையில்லை.

======================================ருத்ரா

Series Navigationஇருபது ரூபாய்காதலின் தற்கொலை

3 Comments

  1. சோகம் ததும்பும் கவிதை. “காதலில் தோற்றால் காவியம் பிறக்கும், வென்றால் குழந்தை தான் பிறக்கும்” என்று சொன்னார் கண்ணதாசன்.

  2. Avatar ருத்ரா இ.பரமசிவன்

    கவிஞர் ராய.செல்ல‌ப்பா அவர்களே.

    உண்மைதான்.கருப்பு வெள்ளையில் வந்த “தேவதாஸ்” எனும் அந்த காவியத்தின் முன் இப்போதைய வண்ணப்படங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன.காதலுக்கு வில்லன் என்று ஒரு மீசையையும் முண்டாசையும் காட்டுவதை விட கண்ணுக்குத் தெரியாத சமுதாயத்தின் முட்டாள்தனமான மூர்க்கமே புலப்படவேண்டும்.உங்கள் வாசிப்புக்கு என் நன்றி.

    அன்புடன் ருத்ரா

  3. “அலை ஒதுங்கி அலை ஒதுங்கி
    வைராவி குளம் வருகையிலே
    சாக்கு மூட்டை
    அங்கு ஒண்ணு
    மிதந்து மிதந்து வந்துது.”

    பகீரெனும் வரிகள். மூழ்கிப்போன உறவொன்றை சித்தரித்த விதம் சிறப்பு.

    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *