ஆத்மா
‘சார், நீங்க பொறுப்பெடுத்து மூணு மாசம் ஆகுது.. ஆனாலும் மாநகரத்துல நகைக் கொள்ளை, திருட்டு பயம் இன்னமும் குறையலை.. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?’ நிருபர் கூட்டத்தில் எங்கிருந்தோ கேள்வி வந்தது.
‘உங்களுக்கு மட்டுமல்ல. மாநகர மக்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக்க ஆசைப்படறேன். என்னிடமும் எழுபது பவுன் தங்க நகைகள் இருக்குது. உள் அறையில் இரும்புப் பெட்டியில் பூட்டி வைச்சிருக்கேன். இன்றிலிருந்து மூன்று நாட்கள் நான் என் வீட்டை பூட்டிட்டு வெளியூர் போறேன். தைரியமிருந்தால், துணிச்சலிருந்தால் கொள்ளையர்கள் முதலில் என் வீட்டை கொள்ளையடித்துப் பார்க்கட்டும்’
மாநகரின் அத்தனை செய்திச் சானல்களின் மைக்குகளுக்கு முன்பாக கர்ஜித்தார் டி.ஜி.பி திருவாசகம். கூடியிருந்த நிருபர் கூட்டம் ஒரு வினாடி ஸ்தம்பித்து மீண்டது.
‘இதன் மூலமா மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க சார்’ ஒரு பெண் நிருபர் துணிச்சலாய்க் கேட்டார்.
‘மக்களுக்கு இந்த என்னோட தன்னம்பிக்கை வேணும். கிட்டத்தட்ட எட்டு கோடி ஜனம் இருக்காங்க இந்த தமிழ் நாட்டுல. அத்தனை பேருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியாது. நான் ஒரு டி.ஜி.பி. ஆனாலும் என் வீட்டு சொத்தை காப்பாத்திக்க நான் போலீஸை கூப்பிடலை. நானே இரும்பு பெட்டி வச்சுக்கிட்டேன். அதை என்னால முடிஞ்ச வரை காவல் காப்பேன். இன்னிக்கு வரை எதுவும் காணாம போகலை. கொள்ளை போகலை. இந்த என்னோட தன்னம்பிக்கை தான் எல்லாருக்கும் வேணும். மக்கள் முதல்ல தங்களை தாங்களே பாத்துக்கணும்’
டி.ஜி.பி திருவாசகத்தின் கர்ஜனை தொடர, கூடியிருந்த நிருபர்கள் கூட்டத்தில் விசில் பறக்க, சட்டென டி.ஜி.பி, மைக்குகள், நிருபர்கள் எல்லாமும் இருளடைந்து தொலைக்காட்டிப் பெட்டியின் மத்தியில் ஒரு புள்ளியென சுருங்க, திவ்யாவும் ஆத்மாவும் விரிந்தார்கள்.
‘காலையிலேர்ந்து இதையே தான் திருப்பித் திருப்பி போட்டுக்கிட்டு இருக்கான்.. ச்சே’ சலித்தாள் திவ்யா.
‘மீடியா உலகத்துல இருக்கோம் திவ்யா.. இதுல எவ்ளோ பிஸினஸ் தெரியுமா?’
‘என்ன பெரிய பிஸினஸ்? நமக்கு நயா பைசாக்கு பிரயோஜனம் இல்லயே’
‘ஏன் இல்லை? எழுபது பவுன் தங்கம் ஒண்ணும் நயா பைசா கிடையாது திவ்யா?’
துணுக்குற்ற திவ்யா உள்ளர்த்தக் கேள்வியுடன் குமாரைப் பார்க்க, ஆமோதிப்பாய் தலையசைத்தான் ஆத்மா.
‘மை காட்!! ஆத்மா, இது வேணாம் ஆத்மா. நமக்கு இதெல்லாம் வேணாம்’
‘ஏன் திவ்யா? என் மேல நம்பிக்கை இல்லையா?’
‘அப்படி இல்லை ஆத்மா. உனக்கு இதெல்லாம் தூசுன்னு எனக்கு தெரியும். நீ கைவச்சா எந்த பூட்டும் திறந்திடும்ன்னு எனக்கு தெரியும். அதுல நீ கில்லாடிதான். சந்தேகமே இல்லை. நீ செய்யாததா? இருந்தாலும் இது…’
‘ஏன் இதுக்கு என்ன?’
‘ஆத்மா, இது மத்த வீடுங்க மாதிரி இல்லை.. போலீஸ்காரன் வீடு. இத்தனை நாளும் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் எந்த வீட்லயாவது திருடுவ. அதை வச்சு கொஞ்ச நாளை ஓட்டுவோம். அதெல்லாம் சாதாரண வீடுங்க… ஆனா இது அப்படி இல்லை.. அதுவுமில்லாம, நீ அப்போ தனியா இருந்த. இப்போ நீ தனி இல்லை. உன்னை நம்பி தான் நான் இருக்கேன். நமக்கு ஒரு வாரிசு வரப் போகுது.. போலீஸ்காரன் வீட்ல கை வச்சா ஜென்மத்துக்கும் நாம நிம்மதியா இருக்க முடியாது குமார். அந்த டி.ஜி.பி ஓபனா டிவில சவால் விடுறான்னா பின்னால ஏதோ ப்ளான் கண்டிப்பா இருக்கும் ஆத்மா. ஒரு வேளை, சவால் விடுற மாதிரி விட்டு, கொள்ளையடிக்க வரும்போது அமுக்குற டெக்னிக்கா கூட இருக்கலாம். யாரு கண்டா? இது ரிஸ்கு டா’
‘காட்டுல புலி இருக்குங்குறதுக்காக புள்ளிமான் எல்லாம் காட்டை விட்டு ஓடிட்டா இருக்கு? புலி இருக்குற இடத்துலதான் புள்ளிமானும் இருக்கும் திவ்யா. சக்தின்னு பாத்தா புலி தான். ஆனா, வேட்டைன்னு வந்துட்டா புலிகிட்டருந்து தப்பிக்கிற புள்ளிமானும் இருக்கு. வேட்டைன்னு ஒண்ணு இல்லைன்னா அப்படி தப்பிக்கிற புள்ளிமான்னு ஒண்ணு இருக்காது. சவால் விட அந்த டி.ஜி.பின்னா அதுக்கப்புறமும் அவனோட அந்த எழுபதை அடிச்சிட்டு வர நான் திவ்யா’
‘ஆனா, ஆத்மா… நமக்கு இதெல்லாம் வேணாம்மா’
‘நீ இன்னும் என்னை நம்பலைல.. ஓகே.. உன் பயம் என்ன? இதுல நான் மாட்டிக்குவேனோன்னு தானே!?’
திவ்யா மெளனம் காத்தாள்.
‘ஓகே.. லவட்டறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்லை. மாட்டிக்கனும்னா யார் கண்லயாச்சும் படணும்.
அந்த எழுபதை யாரு கண்லயும் படாம லவட்டிட்டு வரேன். யாரு கண்லயும் படலேன்னா உனக்கு பிரச்சனை இல்லை தானே?’
‘யார் கண்லயும் படாம எப்படி ஆத்மா? எப்படி உன்னால முடியும்ன்னு நினைக்கிற?’
‘திவ்யா, நீ சொல்றதை ஒரு வாதத்துக்குன்னு எடுத்துக்கிட்டாலும், விளைவுகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். இத்தனை அறிவிப்புகளும் கொள்ளையடிக்க வர்றவனுக்கு விரிக்கிற வலைன்னு வெச்சிக்கிட்டாலும், இன்னொரு விதத்தில் பார்த்தா, இத்தனை பப்ளிசிட்டி செய்த பின்னால எந்த மடையனும் கொள்ளைக்கு வர மாட்டான். அப்படி யோசிச்சுப் பாரு’
‘ஹ்ம்ம்.. ஓகே.. நீ சொல்றதுலயும் பாயின்ட் இருக்குதான் ஆத்மா. அதனால இப்போ என்ன பண்ண போற?’
‘அப்படி கேளு.. மூணு நாள் இருக்கு. முதல் ரெண்டு நாள், எதுவும் பண்ண வேணாம். கொள்ளையடிக்க எவனாவது வருவான்னு அவுங்களுக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மூணாவது நாள் போயிடும். மூணாவது நாள் பிற்பாதியில யாரும் எதிர்பார்க்காத நேரத்துல போய் அடிச்சிட்டு வந்துடலாம். இதான் ப்ளான். எப்படி என்னங்குறதெல்லாம் என்கிட்ட விட்டுடு. அது என்னால முடியும். யார் கண்லயும் படலேன்னா உனக்கு ஓகே தானே?’
‘இப்படி கேட்டா நான் என்ன சொல்றது ஆத்மா? எனக்கு நீ வேணும். எப்பவும் உன் பாதுகாப்பு வேணும். அவ்ளோதான். ‘
திவ்யாவிற்கு சமாதானம் சொல்லிவிட்டாலும், திவ்யாவின் கேள்வி, மூளையின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. ‘சவால் விடுற மாதிரி விட்டு, கொள்ளையடிக்க வரும்போது அமுக்குற டெக்னிக்கா கூட இருக்கலாம்’.
தொடர்ச்சியாக டி.ஜி.பி குடும்பத்துடன் மூன்று நாள் திருப்பதி செல்வதாக தொலைக்காட்சிகள் செய்தி வாசித்தன. முதல் நாள், கடந்து போகும் சாதாரண ஜனமாய் அந்த டி.ஜி.பி வீடு இருக்கும் தெருவை தூரத்திலிருந்து நோட்டம் விட்டதில் கடந்து போன சில மனிதர்களை உற்று நோக்கியதில், காவல்துறை மனிதர்களுக்கே உரித்தான உடல் மொழிகள் எவரிடமும் இருக்கவில்லை. அந்த வீடு கூட அத்தனை திடகாத்திரமாக இருக்கவில்லை. கிளை பரப்பிய ஒரு மாமரத்தின் நிழலில் வாகாக நின்றிருந்தது அந்த வீடு. பழங்காலத்து வீடாக இருந்தது. தரை தளம் மட்டுமே. குறுகலான, உயரம் குறைவான வாசல். சுவர் ஓரங்களில் பாசி படிந்திருந்தது. ஆங்காங்கே வீரல் விட்டிருந்தது. வீட்டின் மேல் மாடியில் ஒர் ஆள் இறங்கும் அளவிற்கு சிம்னி, குறுக்கும் நெடுக்குமாய் கட்டப்பட்ட கொடி கம்பிகள். ஜன்னல்களில் கூட அத்தனை ஆரோக்கியம் இருக்கவில்லை.
இரண்டாம் நாளும் நோட்டம் விட்டுவிட்டு, மூன்றாம் நாள் பிற்பாதியில் பொழுது சாய்ந்த பிற்பாடு டி.ஜி.பியின் வீட்டை பின்பக்கமாய் அண்டினான் குமார். பக்கத்துவீட்டின் மதில் சுவர் ஏறி, மாடியில் இறங்கியபோது எதிரால் அந்த சிம்னி தெரிந்தது. கிட்டத்தில் பார்க்கையில் முருங்கை மரத்தின் கிளைகளினூடே லேசாக சிக்குண்டு இருக்கும் சிம்னியை பார்த்ததும் அதுவரையில் கிடைத்திடாத அந்த உருப்படியான ஐடியா ஆத்மாவிற்கு அப்போது கிடைத்தது.
அணிந்திருந்த ஆடைகளை கழட்டி மடித்து முருங்கை மரத்தின் கைக்கெட்டிய கிளையில் திணித்துவிட்டு, சிம்னி உள்சுவற்றில் கைவிட்டு படிந்திருந்த கரியை உடல் முழுவதும் தடவிக்கொண்டான் ஆத்மா. கோதுமை நிறத்து உடல் எளிதில் இருளடைந்தது. இடுப்பில் அர்ணாகொடியோடு பிணைத்த கம்பிகளுடன் ஓசை படாமல் சிம்னியை மூடியிருந்த துருப்பிடித்த இரும்பு பாளத்தை நகர்த்தி லாவகமாக உள்ளிறங்கினான். சிம்னியினூடே இறங்குகையில் மேன்மேலும் கரி உடலில் பட்டு உடல் கருத்தது. சமீபத்தில் அடுப்பு எரிந்திருக்கவில்லையென்பதால் இறங்குவதில் சிரமம் இருக்கவில்லை. முதலில் எதிர்பட்டது சமையலறை. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. உடல் முழுவதும் கருப்பாக கரி தடவப்பட்டிருந்தமையால், ஆத்மாவிற்கு அந்த இருளில் தன் கைகால்களையே கண்டுகொள்ள சிரமமாக இருந்தது. பென்சில் டார்ச்சின் உதவியுடன் சமையலறை தாண்டி உள் நுழைந்து உள் அறையில் இரும்புப்பெட்டியை ஆத்மா தேடத்துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் வீட்டின் கதவருகில் அரவம் கேட்க பென்சில் டார்ச்சை அணைத்துவிட்டு இருளில் பதுங்கினான் ஆத்மா.
இருளில் இரண்டு ஆஜானுபாகு உருவங்கள் நுழைவதை உணர முடிந்தது. அதில் ஒரு உருவம் ஒரு டார்ச்சை சன்னமாக ஒளிர விட, அந்த ஒளி வீடு முழுவதும் மெல்ல அலைந்தது. அலையும் ஒளியை ஆத்மா, தலைக்கு மேல் இருந்த சிலாப்பில் பல்லி போல் ஈர்ப்பு விசைக்கு எதிரால் ஒட்டிக்கொண்டபடி பார்த்துக்கொண்டிருந்தான். ஹால் சுவர் ஓரங்களில், கட்டிலினடியில், டைனிங் டேபிள் கீழே என சற்று நேரம் அங்குமிங்கும் உலாவுகையில் அந்த உருவங்கள் சன்னமான குரலில் பேசுவது கேட்டது…
‘சார்.. இன்னும் வரலை போலருக்கு சார்’
‘ஹ்ம்ம்.. இன்னிக்கு மூணாவது நாள்.. டி.ஜி.பி காலையில வரதுக்குள்ள மாட்றானான்னு பாக்கலாம்.. வாய்யா’
அந்த ஒளி அணைந்துவிட, அந்த உருவங்கள் நிதானமாக வெளியேறியதை பார்த்துவிட்டு கீழிறங்கினான் ஆத்மா.
திவ்யா சொன்னது நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே கையும் களவுமாக பிடிக்கத்தான் வலை விரித்திருந்திருக்கிறார்கள். சிம்னியின் கரி உபாயத்தில் தப்பியாகிவிட்டது. வந்தது நிச்சயம் போலீஸாகத்தான் இருக்க வேண்டும். அடுத்த முறை அவர்கள் மீண்டும் வருவதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும். ஆத்மா உள்ளுக்குள்ளாக கருவியபடியே காரியத்தை தொடர்ந்தான்.
பென்சில் டார்ச்சின் உதவியுடன் உள் அறையில் தேடியதில் கோத்ரேஜ் பீரோவுக்கு பக்கவாட்டில் அகப்பட்டது அந்த இரும்புப் பெட்டி.
இந்தக் கதையின் வாசகர்களாகிய உங்களுடன் கதாசிரியனாகிய ஆத்மா என்கிற நான் இங்கே கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. இந்தக் கதையின் க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கலாம் என்கிற ஊகம் உங்களுக்கெல்லாம் ஒரே போன்று இருக்க வேண்டுமென்பதில்லை. ஒருவருக்கு, திடீரென்று தபதபவென போலீஸ் ஆசாமிகள் அங்கே வந்து ஆத்மாவை கைது செய்தார்கள் என்று தோன்றலாம். இன்னொருவருக்கு, அந்த இரும்புப் பெட்டிக்குள் எதுவுமே இருக்கவில்லை என்று தோன்றலாம். மற்றுமொருவருக்கு, திவ்யா ஆத்மாவைக் காட்டிக் கொடுத்துவிடுகிறாள் என்று தோன்றலாம். ஆனால் இந்தக் கதையில் அப்படி நடக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன்.
ஆத்மா சுருங்கிய புருவங்களுடன், தன்னிடமிருந்த கம்பிகளைக் கொண்டு வித்தை காட்ட, திறந்து கொண்ட இரும்புப் பெட்டியிலிருந்து ஒரு கம்மல் வெளியே வந்து விழ, உராய்ந்து பார்த்தான். தங்கம் தன்னை இருப்பை திடமாக அறிவித்தது. ‘தங்கம் தான்! தங்கமே தான்!’ சொக்கத்தங்கம். எழுபது பவுன் நிச்சயம் இருக்கும்.
ஆத்மா, இரும்புப் பெட்டியை எடுத்துக்கொண்டு, சமையலறை சிம்னி வழியே மேலே வந்து, நியாபகமாக மாமரக்கிளையில் செருகியிருந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு பக்கத்துவீட்டு மதில் சுவர் தாண்டி, நிர்வாணமாகவே யாருமற்ற இருள் கவிந்த சாலைகளில் ஊடுறுவி ஒரு வழியாக எவ்வித அலுப்புமின்றி திருடியே விட்டிருந்தான். ஆடைகளை அணிந்தபடி ஆத்மா இரும்புப் பெட்டியுடன், வீட்டினுள் நுழைகையில், திவ்யா உறக்கம் கலையாமல் படுத்திருந்தாள். இரும்புப் பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து கொஞ்சம் ஜில்லென தண்ணீர் குடித்துவிட்டு, வந்து நாற்காலியொன்றில் அமர்ந்தான் ஆத்மா. அவன் எதிரே அந்த இரும்புப் பெட்டி இருந்தது. வெளியே கிஞ்சித்தும் சத்தமில்லை. யாரும் தொடரவில்லை.யார் கண்ணிலும் படவில்லை. ஒருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திவ்யா உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளிடம் உறுதியளித்த வண்ணம் எழுபது பவுன் நகைகளை திருடியாகிவிட்டது.
அப்பாடா! எத்தனை சாகசம் நிறைந்த வாழ்க்கை! சொல்லிய வண்ணம் செய்தாகிவிட்டது. உபரியாக திவ்யாவின் கைகளிலும், கழுத்திலும் திருடிய நகைகளை அணிவித்து, அவள் கண் விழிக்கையில் அவளே பார்த்து ஆச்சர்யம் கொள்ளும் வகைக்கு செய்தால் எப்படி இருக்கும்!! என்று சிந்தனை போனது ஆத்மாவிற்கு. அதிலிருந்த சாகசம், ஹீரோயிசம் ஒருவித கிளர்ச்சி தந்தது.
வீட்டில் வைத்து மீண்டும் ஒரு முறை தன்னிடமிருந்த கம்பிகள் மூலம் ஆத்மா வித்தை காட்ட, கதவு திறந்து கொண்டது. ஆர்வமுடன் ஆத்மா உள்ளிருந்து ஒரு வைர அட்டிகையை எடுக்க முயல, சுருக்கென்று கையில் ஏதோ கடித்தது. சற்றைக்கெல்லாம் வலது கையில் ரத்தம் வர, மயங்கிச் சரிந்தான் ஆத்மா. இரும்புப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு தேள் விடுதலை பெற்றுவிட்ட ஆர்வமுடன் வெளியே வந்து கொஞ்சமாய் திணறிவிட்டு இருட்டில் மறைந்தது.
மறுநாள் காலை, ஆத்மாவின் வீட்டில் ஆத்மாவை சுற்றி மருத்துவர்கள் இயங்கிக் கொண்டிருக்க திவ்யா அழுது அரற்றிக்கொண்டிருக்க, வாசலில் சீருடை அணிந்த போலீஸ் பூட்ஸ்கள் தென்பட,
தொலைக்காட்சியில் டி.ஜி.பி திருவாசகம் நிதானமாக பின்வருமாறு பேசிக்கொண்டிருந்தார்.
‘இந்த மாதிரி தொடர்ச்சியா ரெண்டு மூணு நாள் வெளியில போறப்போ, ஒரு தேளை புடிச்சி இரும்பு பெட்டிக்குள்ள விட்டுடறது வழக்கம். திருடினவன், இந்த நேரம் ஏதாவது ஒரு டாக்டரை தேள் கடி விஷ முறிவுக்காக அணுகியிருக்கான். எல்லா ஹாஸ்பிடல்ஸ், க்ளினிக்ஸ்லையும் தகவல் தர சொல்லியிருந்தோம். திருடினவனை கண்டுபுடிச்சிட்டோம். என் எழுபது பவுன் எப்பவும் சேஃப்
தான். நான் முன்னமே சொன்னா மாதிரி, என் சொத்தை என்னால முடிஞ்ச வரை பாதுகாப்பேன். இந்த நம்பிக்கை மக்கள் எல்லாருக்கும் வேணும்’
– ஆத்மா (writeraathma@gmail.com)
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30
- கடவுள்களும் மரிக்கும் தேசம்
- அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]
- நீங்காத நினைவுகள் 12
- வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :
- விண்ணப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
- சிரட்டை !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா
- புகழ் பெற்ற ஏழைகள் 17
- டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12
- உயில்
- மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
- பொசலான்
- 65 மில்லியன் ஆண்டுகட்கு முன்னே மெக்ஸிக்கோவில் முரண்கோள் மோதிப் பிரளயம் விளைவித்தது
- திருட்டு
- காக்காய் பொன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20
- நேரத்தின் காட்சி…
- ’பிறர் தர வாரா..?’
- தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்
- இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்
- மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
- ஜென்
- குளம் பற்றிய குறிப்புகள்
- இருபது ரூபாய்
- மாஞ்சோலை மலைமேட்டில்…..
- காதலின் தற்கொலை