ஐயனார் கோயில் குதிரை வீரன்

This entry is part 4 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

-தாரமங்கலம் வளவன்

நெடுஞ்சாலைத் துறை அலுவலகம்.

சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது.

காண்டிராக்டர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மருதமுத்தும் அதில் ஒருவர். முகத்தை அடிக்கடி தோளில் இருந்த துண்டை எடுத்து துடைத்து கொண்டார்.

ஒவ்வொரு காண்டிராக்டரும் தன்னால் எவ்வளவு தொகையில் அந்த வேலையை செய்து முடிக்க முடியும் என்று டெண்டர் கூப்பிட்டிருந்த தொகை ஒவ்வொன்றாகப் படிக்கப் பட்டது.

கையிலிருந்த ஒரு காகிதத்தில் மற்றவர்களின் தொகைகளை குறித்துக் கொண்டிருந்தார் மருதமுத்து. இப்படி அவர் முந்தைய டெண்டர்களில் செய்தது கிடையாதே என்று அவரிடம் சம்பளத்திற்கு இருக்கும் இன்ஜீனியர் சண்முகத்திற்கு வியப்பு.

ஏன் தன் முதலாளி இந்த வேலைக்கு குறைவான தொகையை டெண்டரில் எழுதச் சொன்னார் என்பதையும் நினைத்து யோசித்துக்கொண்டிருந்தார் இன்ஜீனியர் சண்முகம்.

மருதமுத்துவின் தொகை படிக்கப்பட்ட போது மற்ற காண்டிராக்டர்கள் தொகை குறைவு என்று பேசிக்கொண்டார்கள்.

அதைப் பற்றி கவலைப்டாமல், மற்றவர்கள் தன் தொகையை விட குறைவான தொகை கூப்பிட்டு இருக்கிறார்களா என்பதிலேயே கவனமாக இருந்தார் மருதமுத்து.

கடைசியில் மருதமுத்துக்கு தான் காண்டிராக்ட் என்று முடிவானது.

“ போகும் போது வேலை செய்யப்போற எடத்தை ஒரு தடைவை பாத்திடலாங்களா சார் ” இன்ஜீனியர் சண்முகம் கேட்க,

மருதமுத்துக்கு திக் என்று ஆகி விட்டது.

ஐயனார் கோயிலை தாண்டி தானே போகணும்.

குதிரை மேல இருந்து, சுப்ரமணி, ” டே, மருதமுத்து ” என்று கூப்பிடுவானே…….

இன்ஜீனியருக்கிட்ட என்ன சொல்லி தவிர்ப்பது……

யோசித்தார்..

குதிரை வீரன் சுப்ரமணியிடம் இருந்து நிரந்தர விடுதலைக்காகத் தானே நஷ்டமானாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரை எடுத்திருக்கிறேன்.

எப்படி இருந்தாலும் வேலை முடியும் வரை ஐயனார் கோயிலுக்கு போய் வருவதை தவிர்க்க முடியாதே……

மனதை சமாதானப்படுத்தி கொண்டு இன்ஜினியருடன் புறப்பட்டார், காண்டிராக்ட் எடுத்த இடத்தை பார்ப்பதற்கு…

ஐயனார் கோயிலை கார் நெருங்கும் போதே, இன்ஜீனியர்,

“ இந்த ரோடு வேலையில, ஐயனார் கோயில் அடிபடும் போல இருக்கே சார் . கிராமத்து ஜனங்க ஒத்துப்பாங்களா….”

மருதமுத்துக்கு மனதில் சந்தோஷம். தன்னுடைய கணக்கும் இன்ஜீனியரின் கணக்கும் சரியாக இருப்பதற்காக.

“ அதெல்லாம் சரி கட்டிடலாம். நா சொன்னா கிராமத்து ஜனங்க ஒத்துப்பாங்க…”

காரை நிறுத்திய இன்ஜீனியர், ஐயனார் கோயிலை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார்.

மருதமுத்து பயத்துடன் நின்று கொண்டிருந்தார்.

எதிர்பார்த்த படியே, குதிரை மேல இருந்து, சுப்ரமணி, ” டே, மருதமுத்து ” என்று கூப்பிட்டான்…

மருதமுத்துக்கு உடம்பு நடுங்கியது.

சுப்ரமணி வகுப்பறையில் வாத்தியாருக்கு பிடித்த மாணவன்.

முன் வரிசையில் உட்கார்ந்து வாத்தியாரின் பாடம் தொடங்குவதற்காக காத்துக்கொண்டிருந்தான்.

“ தங்கப் புதையல் அரசாங்கத்துக்கு தான் சொந்தம் ” வாத்தியார் விளக்க ஆரம்பித்தார்.

“ நீங்க கிணறு வெட்டும் போதோ, ஏர் உழும் போதோ, கட்டிட வேலைக்காக குழி வெட்டும் போதோ, தங்கப் புதையல் கிடைத்தால், அதை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது. அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அது தான் சட்டம்.”

வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த சுப்ரமணி, “ எப்படி சார் அது……….” விளக்கம் கேட்டான்.

மறுபடியும் விளக்கப்பட்டது.

பள்ளி விட்டு, வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தான் சுப்ரமணி.

ஆடி மாதம். மழை பிடித்துக் கொண்டது.

ஒதுங்குவதற்காக ஓடினான். வழியில்தான் ஐயனார் கோயில்.

ஐயனாரின் பரிவாரங்களுக்கு மத்தியில் அங்குமிங்கும் ஓடினான் மழையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள..

சரியான இடம் கிடைக்கவில்லை…

கடைசியில் குதிரை வீரன் சிலை மேடையின் மேல் ஏறி சிலைக்கு அடியில் ஒளிந்து கொண்டான்.

மழை வழுத்துக் கொண்டேபோனது. குதிரை வீரனால் சுப்ரமணியை நனையாமல் காப்பாற்ற முடியவில்லை.

பாதிக்கு மேல் நனைந்து விட்டான். உடம்பு வெடவெடத்தது.

அப்போது தான் கவனித்தான். மேடைக்கு அடியில், மழை அரித்ததில், மண் விலகி உள்ளேயிருந்து ஏதோ மின்னுவதாக…..

ஆர்வத்தில், மழை கொட்டிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து குதித்து, மண்ணை விலக்கி பார்த்தான்.

மண் சட்டி. உள்ளே தங்க காசுகள்.

ஆமாம் அது தங்கப் புதையல்.

சுப்ரமணிக்கு உதறல் எடுத்தது.

உடனே வாத்தியார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“ தங்கப் புதையல் கிடைத்தால், அதை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது. அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்..”

அரசாங்கம் என்றால் யார்….. வாத்தியாரிடம் போய் கேட்கலாம் என்றால் வாத்தியார் வெளியூர்காரர்……

பள்ளிக்கூடம் முடிந்ததும் பஸ் ஏறி போய் இருப்பார்…..

அப்புறம்தான் ஞாபகம் வந்தது.

தலையாரி மருதமுத்து…….

ஊருக்கு அரசாங்க அதிகாரிகள் யார் வந்தாலும், தலையாரி மருதமுத்துதான் கூட போய்க் கொண்டிருப்பான்.

மருதமுத்துவின் வீட்டுக்கு ஓடிப்போய் சொன்னான்.

மருதமுத்துக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

திடீரென்று ஒரு கேள்வி கேட்டான் மருதமுத்து “ வேற யார் கிட்டியாவது சொன்னியா….”

இல்லை என்று தலையாட்டினான் சுப்ரமணி.

ஒரு மண்வெட்டி, ஒரு சிறிய கடப்பாரையை எடுத்த மருதமுத்து, தன்னுடைய சைக்கிளையும் வெளியே எடுத்தான்….

மழை தூறிக்கொண்டுதான் இருந்தது.

“ இதைப் புடிச்சிக்கிட்டு பின்னாடி உட்காரு….”

சுப்ரமணி காண்பித்த இடத்தில் மருதமுத்து வெட்ட ஆரம்பித்தான்..

ஐயனாரும், குதிரை வீரனும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்கள்…

மழை தூறிக்கொண்டுதான் இருந்தது தொடர்ந்து…..

சுப்ரமணியும் கூட உதவி செய்து கொண்டிருந்தான்…..

பெரிய குழி தோண்டியாகிவிட்டது.. குதிரை வீரன் மேடைக்கு கீழே….

மருதமுத்து சீக்கிரமாகவே தங்கப் புதையலை எடுத்து விட்டான்…….

“ குனிஞ்சி பாரு…..ஏதாவது காசு விழுந்து கெடக்கான்னு…..”

சுப்ரமணி குனிந்தான்.

உடனே மருதமுத்து, கடப்பாரையில் சுப்ரமணியின் பின்-மண்டையில் அடித்தான்…..

“ அம்மா…..” என்ற அலறலோடு சுப்ரமணி குழிக்குள் விழுந்தான்……

அடி பலமாக இருந்திருக்க வேண்டும்..

சுப்ரமணியின் உயிர் உடனே போய் விட்டது..

மழை வேகம் பிடித்தது….

பக்கத்தில் வெட்டி போட்ட மண், மழை நீரோடு சேர்ந்து குழிக்குள் சரிந்து ஓடியது……..

சுப்ரமணியின் ரத்தத்துடன் சேர்ந்து, மழை நீர் சற்று சிவப்பானது.

மருதமுத்து வேகமாக மண் வெட்டியினால் மண்ணை தள்ள ஆரம்பிக்க… குழி நிரம்பியது…….

காண்டிராக்ட் வேலை ஆரம்பிக்கப்பட்டது.

ஐயனார் கோயில் இடிக்கப்படுவதற்கு கிராம மக்களிமிருந்து எதிர்ப்பு வராமல் காண்டிராக்டர் மருதமுத்து பார்த்துக் கொள்ள….. காண்டிராக்ட் வேலை வேகமாக நடந்தது….

இன்ஜீனியர் சொன்னார், “ சார், பாருங்க….. ஐயனார் கோயில் இடிக்கறது சென்சிட்டிவ் மேட்டர், …. உடனுக்குடன் ரோடு வேலைய முடிச்சிடலாம்….நான் புல்டோசரு, ரோடு ரோலர் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்…… ஒரு பக்கம் இடிக்க இடிக்க, இன்னொரு பக்கம் ரோடு வேலையை முடிச்சிடலாம்……”

மருதமுத்துக்கும் சீக்கிரமாக வேலையை முடிக்க வேண்டும் என்று இருந்ததால், இன்ஜினியர் சொன்னதற்கு தலையாட்டினார்..

ஆனால் பயத்தினால் மருதமுத்து, வேலையை பார்வையிட அடிக்கடி வருவதில்லை. இன்ஜினியர் பொறுப்பிலே விட்டுவிட்டார்.

ஆனால் வந்த போதெல்லாம் தவறாமல் குதிரை மேல இருந்து, சுப்ரமணி, “ டே, மருதமுத்து ” என்று கூப்பிட மறப்பதில்லை…..

அன்று மேலதிகாரிகள் யாராவது பார்வையிட வரலாம் என்று தகவல் வரவே, மருதமுத்து காரோடு போய் அங்கு காத்திருந்தார்.

இன்ஜீனியர் வேலையாட்களை அதிகரித்து, அதிகாரிகளின் பாராட்டுக்கு காத்திருந்தார்.

ஒரு புறம், புல்டோசர் ஐயனார் கோயிலின் பரிவாரங்களை ஒவ்வொன்றாக இடிக்க ஆரம்பிக்க, மறு புறம் ரோடு ரோலர் ஓட ஆரம்பித்தது.

மருதமுத்து ரோடு ஓரமாய் நின்று மேலதிகாரிகள் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு தருணத்தில் புல்டோசர், குதிரை வீரனை இடிக்க ஆரம்பிக்க, ” டே, மருதமுத்து ” என்று பெரும் ஓலம் மருதமுத்துக்கு கேட்டது.

அது இது வரையில் கேட்டதையெல்லாம் விட உக்கிரமாய் இருந்தது.

இன்னும் சொல்லப்போனால், சுப்ரமணியை மருதமுத்து கடப்பாரையில் பின்-மண்டையில் அடித்து, அவன் இறப்பதற்கு முன் போட்ட அலறலை விட பயங்கரமாய் இருந்தது.

நிலை குலைந்த மருதமுத்து தடுமாற, அவர் நின்று கொண்டு இருந்த ஜல்லி குவியல் சருக்கி விட, மருதமுத்து ரோடு ரோலருக்கு முன்னால் விழுந்தார்.

ஓடிக்கொண்டிருந்த ரோடு ரோலரை அதன் டிரைவர் நிறுத்த முயன்றும், நிறுத்த முடியாமல் போகவே, மருதமுத்து மேல் ரோடு ரோலர் ஏறியது.

ரோடு ரோலர் ஏறியதால் மண்டை ஓடு உடையும் சத்தமும் கேட்டது.

“ ஐயோ…..முதலாளி “ என்று ரோடு ரோலர் டிரைவர் கத்தினான்.

ஐயனார் கோயிலை இடித்ததற்காக, தெய்வ குற்றம் ஏற்பட்டு ஐயனார் காவு வாங்கி விட்டதாக ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

– தாரமங்கலம் வளவன்
————————————————————————————————————————

vtvalavan61@rediffmail.com

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ -18மெங்கின் பயணம்
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *