(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
21.உலகிலேயே அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஏழை…………..
என்ன…? நம்ம நண்பர் இன்னும் வராம இருக்காரு….ஒருவேளை அவருக்கு ஒடம்புக்கு எதுவும் முடியாமப் போச்சோ..சே..சே…அப்படியெ
ஒரு மனிதனின் பெருமையும் புகழும் அவன் தனக்குப் பின் இந்த உலகில் எதனை விட்டுச் சென்றிருக்கிறான் என்பதைப் பொருத்திருக்கிறது. இதைத்தான் வள்ளுவரும்,
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்”
என்று கூறியுள்ளார்.
ஒரு அறிவியலறிரூரின் பேரும் புகழும் அவர் தம் ஆய்வின் வாயிலாகக் கண்டுபிடித்த கருவியைப் பொறுத்துத்தான் அமையும். ஆனால் ஒரு அறிவியலாளர் தம் வாழ்நாளில் 1093 அறியில் விந்தைகளைக் கண்டுபிடித்திருக்கிறார் என்றால் அவரது பெருமையும் புகழும் எத்தகையது? அத்தகைய பெருமைக்கும் புகழுக்கும் உரியவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.
“புத்திசாலித்தனம் என்பது ஒரு பங்கு அகத் தூண்டுதலும் கடின உழைப்பும் 99 பங்கு” என்று கூறிய எடிசன் உண்மையில் தன்னுடைய கடினமான உழைப்பினால் உயர்வடைந்த அறிவியல் மேதைகளள் ஒருவராகத் திகழ்ந்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 – ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11 – ஆம் நாள் அமெரிக்காவின் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் அமெரிக்கரான சாமுவெல் எடிசனுக்கும் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா நாட்டுப் பெண்மணி நான்சி எடிசனுக்கும் ஏழைக் குடும்பத்தில் கடைசிப் புதல்வனாகப் பிறந்தார். எடிசன் ஏழைக் குடும்பத்தின் ஏழாவது குழந்தையாவார். தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது!
தாமஸ் ஆல்வா எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] துன்புற்றார். இதனால் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ஏன் என்று அவரின் தாயார் கேட்டதற்குத் தாமஸ் ஆல்வா எடிசன், ‘தன்னை ‘மூளைக் கோளாறு உள்ளவன்’ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார். அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியையான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார்.
கற்றலில் ஆர்வம்
ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனை ஆற்றல் விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கை ஆய்வுத் தத்துவம்’ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார்.படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும். பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் அவரை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11. எடிசன் தன்னுடைய குறையைப் பெரிதாகக் கருதவில்லை.
பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், பெருமுயற்சியுடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள்’ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த கற்றலறிவு அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது! …….. பாத்துக்கிட்டீங்களா…..படிப்பறி
“அறிவு அற்றம் காக்கும் கருவி”
என்று வள்ளுவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மையா விளங்குதுன்னு பாருங்க.. படிப்புத்தான் ஒருத்தரை வாழ்க்கையில முன்னேற்றும் என்பதற்கு எடிசனுடைய வாழ்க்கை உதாரணமா அமைஞ்சிருக்கு…
“கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்”
என்று நம்முடைய முன்னோர்கள் கூறிய பழமொழி எப்படி எடிசனுக்கு மிகச் சரியாகப் பொருந்தி வருது பார்த்தீங்களா…..!
செயல்முறைப் பயிற்சிகள் முறையில், ஆய்வுகளைச் செய்து புதியனவற்றைப் படைக்கும் திறனை எடிசனுக்கு அவர் கற்றவை அடிப்படையாக்கித் தந்தன. கணிதக் கல்வியில்லாத, அறிவியல் கல்வி [Theory] எதனையும் முறையாகக் கற்காத எடிசன், ஆய்வுகள் மூலமே மீண்டும் மீண்டும் முயன்று, தனது அறிவுக் கூர்மையால் பல அரிய புதிய வியத்தகு சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார். “முயற்சி திருவினையாக்கும்” என்பது எத்தனை பெரிய உண்மை. முயன்று உழைத்தால் முன்னேறலாம் என்பது உறுதி இதனை நம்புங்க… ஆமாங்க..
“முயற்சிகள் தவறலாம்
முயற்சிக்கத் தவறலாமா?”
தொடர் முயற்சி என்றைக்கும் வெற்றி தரும்.. தொடர்ந்து எடிசன் முயன்றதாலேயே பெரிய சாதனைகளை அவரால எட்ட முடிந்தது.
பணி
1859 –ஆம் ஆண்டில் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], புகைவண்டிப் பாதையில் செய்தித்தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், புகைவண்டிப் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு விண்ணப்பித்து, 1863 – ஆம் ஆண்டில் எடிசன் டெலகிராஃப் பயிற்சியில் சேர்ந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவித்திறன் கேட்கும் குறையானது அவரது வேலையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! பதிவான புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கிலத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு ஆண்டுகள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார்.
அப்போதுதான் வேலையை விரைவில் முடிப்பதற்காகத் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையை எடிசன் காட்டினார். 1869 – ஆம் ஆண்டில் தன் 22 – ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவதற்கும் கருவிகளைக் கண்டுபிடித்தார்.
ஆய்வுப் பணி
எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்காக தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். எடிசன் 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] தானாக இயங்கும் தந்திக் [Automatic Telegraph] கருவியைச் செப்பனிட்டார்.
ரசாயன இயக்கத்தில் இயங்கிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள்ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன அறிவைப் பெற முயன்று உழைத்தார். அந்த உழைப்பின் பயனாக, மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.
முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு
புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும்போது, வேறுபல அரிய துணைச்
அக்கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், புரியாத எழுத்துப்போல் கிறுக்கப்பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது! எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்தது இந்தப் புதிய கருவியாகிய, கிராமஃபோன் கருவியே ஆகும். இக்கருவியைக் கண்டுபிடித்த பிறகே எடிசனுக்கு “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் வழங்கப்படலாயிற்று.
அடுத்ததாக எடிசன் ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 – ஆம் ஆண்டு டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர மேலும் பத்தாண்டுகள் ஆயின.
மின்குழல் விளக்கு [Electric Bulb] மின்சக்தி மோட்டார் [Generator] கண்டுபிடிப்பு
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 – ஆம் நாள் சூரிய கிரகணத்தின்போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun ‘s Corona] எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கருவி தேவையாக இருந்தது. அப்போது எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி ‘நுண்ணுணர் மானி’ [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவியின் மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் ஏற்பட்டது.
எடிசனின் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியைத்’ [Edison Electric Light Company] தொடங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக எடிசனுக்கு 30,000 டாலர் தொகையைக் கொடுத்தார்கள். 1878-ஆம் ஆண்டு டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, வேதியியல் அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது.
மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பிச் சுருளைச் [Platinum Filament] வெற்றிடக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் பயன்படுத்திக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.
இதற்கு இடையில் 1879-ஆம் ஆண்டில் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார மோட்டாரை உண்டாக்க போதிய ஆய்வுகளைச் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலில் ஓட்டினால் மின்மோட்டாரில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்னாற்றல் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மோட்டாரின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் இயந்திர ஆற்றலைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் எடிசனது முதல் சாதனையே!
1881 –ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incadescent Electric Power System] வர்த்தகத்துறை அமைப்பு, நியூயார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சகக் கட்டிடத்தில் நிருவப்பட்டது. நியூயார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார அமைப்பு [Central Power System], எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது! அது 1882-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்பித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி விளக்குகள் ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் சுடர்விட்டுப் பரவியது.
விளக்கு எரியும்போது, வெற்றிடமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 –ஆம் ஆண்டில் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அதற்கு ‘எடிசன் விளைவு’ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998-ஆம் ஆண்டில் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள்’ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். அறியலறிஞர்கள் அதன் பிறகுதான் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். மூவிக் காமிராக் [Movie Camera] கண்டுபிடிப்பு
போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா ஆய்வில் ஈடுபட்டார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அதுபோல் ‘நகரும் படம்’ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா இயந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும்’ இத்தகைய கூர்ந்த அறிவுத்திறன் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 – ஆம் ஆண்டில் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனிடம் உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson] என்பவர் ஆவார். எடிசன் நகரும் படக் காமிராவை மேலும் சீர்திருத்தி அதனை மேம்படுத்தினார்.
1888 – ஆம் ஆண்டில் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 – ஆம் ஆண்டில் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன்படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை மேம்படுத்தி, ஐம்பது அடி நீளமுள்ள படச்சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டி மக்களை மகிழ்சியூட்டினார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 – ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பதிவு செய்தார்.
‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்’, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கையூட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த உறுப்பு முக்கியமானது? கண்களா? அன்றி காதுகளா?’ என்று ஒருவர் கேட்டபோது, எடிசன், ‘கண்கள்தான்! ஒலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளைவிடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது!’ என்று தம்மை வினவியவருக்குத் தகுந்த பதிலளித்தார்.
‘ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்’ என்பதை எடிசன் மிக அழகுற விளக்கியுள்ள பாங்கு பாராட்டுதற்குரியது. தான் கற்காதவற்றை எல்லாம் மற்ற மாணவர்கள் கற்க வேண்டும் என்ற எடிசனின் உயர்ந்த எண்ணத்தை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
அறிவியல் இதழ் தொடங்குதல்
எடிசன் 1880-ஆம் ஆண்டு அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கினார். இது1900 – ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழாக மாற்றம் பெற்று வளர்ந்தது. இவ்வாறு எடிசன் பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிச்சாலும் அவரைப் பத்தி சில நெருடலான கருத்துக்களும் நிலவுது.
இவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 1093-இல் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; அக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் முன்னர் கண்டுபிடித்து பிறர் பதிவு செய்த உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும் என்றும் கூறுகின்றனர். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டுபிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காததற்காக எடிசனைப் பலரும் பலவாறு விமர்சனம் செய்தனர்.
எது எப்படியோ மானுடத்தை உயர்த்திய பல கண்டுபிடிப்புகளை எடிசன் கண்டுபிடித்ததால் இவ்விமர்சனங்கள் எடுபடாது போய்விட்டன. எடிசன் தன்னுடைய கண்டுபிடிப்புகளை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு விடுவதற்காக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் தொழிலகங்களைத் தொடங்க உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான பேசும்பட உரிம நிறுவனம் (Motion Picture Patent Company) ஒன்றையும் தொடங்கினார். அமெரிக்காவும் உலகின் பல நாடுகளும் எடிசனைப் போற்றிப் புகழ்ந்தன.
ஒருமுறை எடிசனைப் பார்த்து ஒரு பத்திரிக்கை நிருபர், “உங்களுக்கு காது கேட்காது என்ற குறைக்காக நீங்கள் எப்போதேனும் வருந்தியதுண்டா?” என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு எடிசன் சிரித்துக் கொண்டே, “நான் அதற்கெல்லாம் ஒருபோதும் வருந்தியதில்லை. மாறாக மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் இத்தனை கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க அடிப்படைக் காரணமாக அமைந்ததே இந்தக் குறைதான். மற்றவர்கள் பேசுவதை நான் கேட்காமலிருந்ததால்தான் அறிவியல் ஆய்வுகளில் தீவிரமாகவும் முழுமையாகவும் நான் ஈடுபட முடிந்தது. அதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன்” அப்படீன்னு சொன்னார்.
பாருங்க … தன்னுடைய குறையை நிறையா மாத்திக்கிட்டு உலகத்துல உயர்ந்த புகழை எடிசன் அடைந்தார். தான் ஒரு மாற்றுத்திறனாளிங்கறதையே அவர் மறந்துட்டாரு. அதை அவரு ஒரு பொருட்டாவே கருதலை.தன்னுடைய ஏழ்மையையும், குறையையும் காரணங்காட்டி பிறரிடம் சலுகைகளை அவர் பெறுவதற்கு முயற்சி செய்யலை… கடுமையாக உழைத்தார்…விடாது முயன்றார்… புகழின் உச்சிக்குச் சென்றார்…
ஆமாங்க!…. நாம எதையும் குறையா நெனச்சா அது குறையாத்தான் நமக்குத் தென்படும். அதனையே உயர்ந்ததா நெனச்சா அது நமக்குப் பெரிசாத் தெரியாது. ஊனம் என்பது உடல்ல இருக்கலாம்…ஆனா உள்ளத்துல இருக்கக் கூடாதுங்க… அது வாழ்க்கையப் புரட்டிப் போட்டுரும்…. எல்லாம் நம்முடைய மனசுலதான் இருக்கு..மனம் ஊனப்படாம பாத்துக்கணுங்க..உடல் ஊனத்தைச் சரி செஞ்சுடலாம்…மன ஊனத்தை எதனாலும் சரி செய்ய முடியாதுங்க… எடிசனின் வாழ்க்கையை நெனைக்கும்போது,
“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா….ஆ..ஆ..ஆ..
குறையொன்றும் இல்லை கோவிந்தா…ஆ…ஆ..”
என்ற இசையரசி எம்.எஸ். அம்மையார் பாடுன பாடல்தான் நினைவுக்கு வருது…
உலகின் ஒளி விளக்கு அணைந்தது
இவ்வாறு மனித குலத்தின் ஆக்க மேதையாக விளங்கிய தாமஸ் ஆல்வா எடிசன், 1931 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 – ஆம் நாள் தனது 84 – ஆம் வயதில் நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். தமது அரிய கண்டுபிடிப்பால் உலகை ஒளியூட்டிய அமெரிக்காவின் ஒளிவிளக்கு அணைந்தது. மனித குல மேம்பாட்டிற்கு அயராது உழைத்த மாமேதை மறைந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டார். அக்டோபர் 21 – ஆம் நாள் மாலை 9:59 [EST] மணிக்கு அவரது பொன்னுடம்பு அடக்கம் செய்யப்பட்டது.
நியூயார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘சுதந்திரதேவி சிலையின்’ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்குவரத்து [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் அணைந்தன! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 மாலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் அணைந்து அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியை அணைத்துக் அறிவியல் மேதை எடிசனுக்கு அஞ்சலி செலுத்தினான். உலகம் இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசனின் அரிய கண்டுபிடிப்பான மின்விளக்கு இன்னும் ஒளிர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, உலகம் அனைத்திற்கும் தொடர்ந்து ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கின்றது! ஆம்……….! எடிசன் என்ற அந்த அணையா விளக்கு என்றும் உலக மக்களின் இதயத்தில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்…!
என்னங்க…கண்ணு கலங்கிருச்சா.. ஆமா…! கலங்கத்தானே செய்யும். எடிசனுடைய வாழ்க்கை நமக்கு மிகுந்த மன உந்துதலைத் தருதுல்ல… தனக்கு உள்ள உடற்குறையையே நிறையா மாற்றிய மாமேதையின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு உயர்ந்த படிப்பினைன்னுதான் சொல்லணும்..சரிசரி…இனிமேலும் இடிஞ்சுபோயி ஒக்காந்துடாதீங்க… ஒங்களோட இலக்கை நோக்கிப் பயணமாகுங்க…..அப்பறம் என்ன..வெற்றி தேவைதை உங்களுடைய முகவரிய விசாரிக்கத் தொடங்கிடுவாங்க……..
வீட்டில் பத்துக்குழந்தைகளுள் ஒருத்தரா பிறந்தாரு…வறுமை…தாங்க முடியாத வறுமை…வேறு வழி தெரியாதததுனாலே இளம் வயதிலேயே தன்னோட சகோதரர்களுடன் சேர்ந்து நாடகத்துல நடிக்கத் தொடங்கிட்டாரு… நடிக்கத் தொடங்கியபோது அவருக்கு வயது எட்டு……….. முதல் நாடகத்திலேயே தன்னோட நடிப்புத் திறமைக்காகத் தங்கப்பதக்கம் வாங்கினாரு….. நாட்டிற்காகச் சுதந்திரப் போராட்டத்திலேயும் ஈடுபட்டாரு…..அவரால நாடக நடிகர்களுக்குச் சமுதாயத்தில் மதிப்பு ஏற்பட்டது…….. நாடகத்துறையும் தலைநிமிர்ந்தது….நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தாரு……யாரு தெரியுதுங்களா……?…..என்ன மேலேயும் கீழேயும் பாக்குறீங்க….அவரு நம்ம தமிழகத்தைச் சேர்ந்தவருங்க……இன்னும் ஒங்களோட நினைவுக்கு வரலயா…ம்….ம்… யோசிச்சே பதிலச் சொல்லுங்க…அடுத்த வாரம் பார்ப்போம்……………..(
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……16
- மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
- நேர்முகத் தேர்வு
- நீங்காத நினைவுகள் 15
- பிரேதத்தை அலங்கரிப்பவள்
- ஜீவி கவிதைகள்
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
- புகழ் பெற்ற ஏழைகள் 21
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
- அயோத்தியின் பெருமை
- தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
- தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
- பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
- கூடு
- பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
- தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்
- தூங்காத கண்ணொன்று……
- சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக
- முக்கோணக் கிளிகள் [2]
- நாவற் பழம்
- திட்டமிட்டு ஒரு கொலை
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]
- காவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா
- எங்கள் தோட்டக்காடு